top of page

இந்து? ஹிந்து? சனாதன தர்மம்? அல்லது பெயரில்லா மதமா?

  • Writer: Anbezhil
    Anbezhil
  • Jan 13, 2021
  • 8 min read

Updated: Jan 28, 2025

வருகிறவன் போகிறவன் எல்லாம் நீ இந்து இல்லை, தமிழன் இந்து இல்லை. இந்து தமிழன் இல்லை. இந்து என்றால் திருடன், சனாதன தர்மத்தை வேரறுப்போம், இந்து பண்டிகையை கொண்டாடக் கூடாது என்று சொல்லிக் கொண்டு திரிகிறான். இப்படி இந்து மதத்தைப் பழிப்பவர்களை, நம்மை பிரித்து ஆள்பவர்களை நாம் இனம் கண்டுகொண்டு அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க முதலில் யார் இந்து, இந்து மதம் என்பது என்ன என்பதைப் பற்றிய தெளிவான அறிவு நமக்கு தேவை.

இந்தியா என்கிற பாரதத்தை பரத சக்கரவர்த்தி, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஸிந்து நதியிலிருந்து பிரம்மபுத்ரா நதி வரை உள்ள எல்லா பிரதேசங்களையும் ஒரு குடையின் கீழ் ஆண்டார். அதனால் இந்த பிரதேசம் ‘பாரதம்’ என்றும் ‘பாரத்வர்ஷ்’ என்றும் கூறப்படுகிறது. இந்த பாரத பூமி புண்ணிய பூமி, கர்ம பூமி. கடவுள்கள் அவதரித்ததுடன் இல்லாமல் தொடர்ந்து மகான்களும் சித்தர்களும் அவதரித்து வரும் பூமி இது.


இப்பூமியில் தோன்றிய சமயங்கள் அனைத்துமே இந்து மதத் தொடர்பில் உருவானவை. அவை புத்தம், சமணம், சீக்கியம் போன்றவை. இவை தவிர ஐரோப்பிய மத்திய ஆசிய பாலைவனங்களில் தோன்றிய சில மதங்கள் ஜூடாயிசம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகியவை. உலகில் தோன்றிய அனைத்து மதங்களுக்கும் தோன்றிய நாள் தெரியும், யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்கிற ஸ்தாபகர் பெயர் தெரியும். ஆனால் ஆதிமூலம் தெரியாமல் காலம் காலமாக இருந்து வருவது நம் சனாதன தர்மம் என்கிற வாழ்வியல் நெறி முறை ஆகும். ஒன்றே ஒன்றாக முதலில் இருந்த அந்த தெய்வ வழிபாட்டு/வாழ்வியல் முறைக்கு எந்தப் பெயரும் தேவையில்லாமல் இருந்தது. மற்ற மதங்கள் தோன்றிய பின் முதலில் இருந்த மதத்திற்குப் பெயர் சூட்ட தேவை ஏற்பட்டது. அதற்கு இந்து மதம் என்று பெயரிடப்பட்டது. "இப்போது ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற நமது மதம் ஒன்றே ஆதியில் லோகம் முழுதும் பரவியிருந்தது! அந்த ஒரே மதம் இருந்தால்தான் அதற்குத் தனியாகப் பெயர் வைக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதனால்தான் நம் ஆதார நூல்களில் ஹிந்து மதத்துக்குப் பெயரே இல்லை" என்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார் மகா பெரியவா.


யுகங்களுக்கு அப்பால் நின்று நிலைத்திருப்பது, வேதங்கள், உபநிஷத்துகள் சொல்லும் தர்ம முறை இது. பிற சமயங்கள் போல் இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பும் கிடையாது. வேதமே இதற்கு ஆதாரம். பல்வேறு சடங்குகள், நம்பிக்கைகள், சமய நூல்களை உள்ளடக்கியது இந்து மதம். இந்து நடைமுறைகளில் பூஜை (வழிபாடு) மற்றும் பாராயணம், ஜப, தியானம், குடும்பம் சார்ந்த சடங்குகள், வருடாந்திர திருவிழாக்கள் மற்றும் அவ்வப்போது யாத்திரை போன்றவையும் அடங்கும்.


பல்வேறு யோகங்களின் நடைமுறையுடன், சில இந்துக்கள் தங்கள் சமூக உலகத்தையும், பொருள் உடைமைகளையும் விட்டுவிட்டு, மோட்சத்தை அடைவதற்காக வாழ்நாள் முழுவதும் சன்யாசத்தில் (துறவறத்தில்) ஈடுபடுகிறார்கள். வாழ்க்கையைக் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று பிரித்தது இந்து மதம்தான். கர்ம காண்டத்தின் தொழில்கள் காரணமாக ஜாதி உண்டு. ஞான காண் டத்தில் ஜாதி இல்லை; யாவரும் சந்நியாசி ஆகலாம். லௌகிக வாழ்க்கையையும், தெய்வ நம்பிக்கையையும் ஒன்றாக இணைத்தது இந்து மதம். இது இந்துகள் எங்கு வாழ்ந்தாலும் எந்த மொழி பேசினாலும் கடைபிடிக்கும் வாழ்க்கை முறை.


இந்து மதத்தை மதம் என்ற கட்டத்திற்குள் அடைக்காமல் சனாதன தர்மம் என்ற பறந்து விரிந்து இருக்கும் வாழ்வியல் தர்மத்தில் வைப்பது சிறந்தது. ஸ்ருதி(கேட்டது) ஸ்ம்ரிதி (நினைவில் இருப்பது) என்று இருவகையில் இந்த நெறிமுறை தொடர்ந்து தலை முறை தலைமுறையாக வந்து கொண்டிருக்கிறது. இந்து மதத்தில் உள்ளவர்கள் செங்கல்லையும் கருங்கல்லையும் கடவுளாக நட்டு வணங்க முடியும். மண்ணைப் பிடித்து, வைத்து, மஞ்சளை பிடித்து வைத்து கடவுளாக வணங்க முடியும். உருவமற்ற அருவத்தையும் வணங்கமுடியும். கடவுள் என்று ஒருவர் இல்லை என்று சொல்லிக் கொண்டும் இந்து மதத்தில் இருக்கமுடியும். (1) சைவம் (பரம சிவன்), (2)வைணவம் (விஷ்ணு), (3) கௌமாரம் (சுப்பிரமணியன், முருகன்), (4) காணபத்தியம் (விநாயகர்), (5)சௌரம் (சூரியன்), (6) சாக்தம் ( சக்தி, துர்கை) இவர்களை வணகுபவர்களாக இருப்பவர்கள் அனைவருமே இந்துகள் தான்.


காவல் தெய்வங்களான, மனிதர்களாக பிறந்து அவர்தம் கிராம நலனுக்காக தங்களை ஈடுபடுத்தி உயிரை விட்டவர்களை கடவுளின் அவதாரங்களாகவே பார்க்கப்படுகிறார்கள். அய்யனார், கருப்பண்ணசாமி, போன்ற நூற்றுக்கணக்கான காவல் தெய்வங்களை வணங்குபவர்களும் இந்துகள் தாம். இதைத் தவிர குல தெய்வ வழிபாடு செய்பவர்களும் இந்துக்களே. ஒவ்வொரு பரம்பரையையும் தொன்றுதொட்டுக் காத்து வருவது குலதெய்வம். ஒரு குலம் தழைக்க உதவுவது பெண்கள்தான். அதாவது குடும்பத் தலைவிதான். எனவேதான் குலதெய்வம் என்றாலே, பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். அதே சமயம் சில குடும்பங்களுக்கு ஐயனார், முனீஸ்வரர், முருகப் பெருமான் என்று சில ஆண் கடவுள்களும் குலதெய்வங்களாக இருந்து வருவது வழக்கம். முன்னோர்களை வழிபடுபவர்கள் என்று இவ்வகையில் அனைத்து வழிபாட்டு முறைகளும் இந்து மதத்தின் கீழ் வருகின்றன.


இந்து மதத்தைப் பின்பற்றுபவன் மறுபிறவியை நம்புபவன், வினைப் பயன்களை நம்புபவன். முற்பிறவிகளில் நாம் செய்த நல்வினை தீவினைகளை வைத்தே இப்பறவியில் நம் வாழ்க்கை அமைகிறது, நமக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு அதுவே காரணம் என்பது இந்து மத நம்பிக்கை.

அடுத்ததாக ஆத்மா பற்றிய புரிதல். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் ஆத்மா உள்ளது. உடல் வேறு ஆத்மா வேறு. உடலுக்கு அழிவுண்டு ஆத்மாவுக்கு அழிவில்லை. பரமாத்மா என்கிற உயர்சக்தியின் ஒரு பகுதி தான் இந்த ஜீவாத்மா. பிறப்பு இறப்பு என்கிற சுழற்சியில் இருந்து விடுபட்டு இறுதியில் நம்மைப் படைத்த அந்தப் பரம்பொருளில், உயர்ந்த ஆத்மாவில் ஐக்கியமாவதே இந்த வாழ்கையின் குறிக்கோள் என்கிறது இந்து மதம்.

எல்லா ஜீவராசிகளுக்கும், தாவரம் மற்றும் விலங்குகளுக்கு உரிய மரியாதையை கொடுக்கிறது இந்துமதம், குறிப்பாக பசுவை தெய்வமாக வழிபடுகிறது. கஜ பூஜை, துளசி, பூஜை, கோபூஜை, நாக பூஜை இன்றும் முக்கிய பூஜைகளாக கருதப்படுகின்றன. அரச மரம், வேப்பமரம் ஆகியவை தொழுதற்குரிய மரங்களாக போற்றப்படுகின்றன.


வேதத்தில் சொல்லப்பட்டவை பாமரனுக்கும் புரிவதற்காக புராணங்கள் இதிகாசங்கள் தோன்றின. இராமாயணம், மகாபாரதம் இரண்டும் முக்கிய இதிகாசங்கள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்களை நூல்களாக தொகுத்தவர் வேத வியாசர். பெரிய புராணம் எனப்படும் சேக்கிழார் பெருமான் எழுதிய திருத்தொண்டர் புராணம் ஈசனது அடியார்களான 63 நாயன்மார்களின் அற்புதமான வாழ்க்கைப் பதிவு. நான்கு வேதங்கள் (எழுத்தில்), பதினெண் புராணங்கள், மஹாபாரத இதிஹாசம் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றை உலகிற்கு வழங்கியவர் மஹரிஷி வேத வியாசர். கச்சியப்ப சிவாச்சாரியாரின் மிகச் சிறந்த படைப்பான கந்த புராணம், வியாசரின் பதினெண் புராணங்களில் ஒன்றான ஸ்காந்த புராணத்தின் தமிழ் வடிவமாகும். மகாபுராணங்கள் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. அவைகள் மற்றவர்களுக்கு கூறப்பட்டு இறுதியாக வேதவியாசரை அடைந்து எழுத்துவடிவம் பெற்றுள்ளன என்பது இந்து மத நம்பிக்கை. புராணங்களின் தொடக்கத்தில் இந்த புராணங்கள் எவருக்காக மறுபடியும் கூறப்பட்டன, யாரால் கூறப்பட்டன என்பதையும் சொல்கின்றன.


நமது மதத்தின் உயிர்நாடியான வேதங்களையும், இதிகாசங்களையும், உபநிஷத்துகளையும் மூலாதாரமாக கொண்டு இறைவன் ஒருவனே என்ற மாபெரும் தத்துவத்தை இந்து மதம் உணர்த்துகிறது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஆப்கானிஸ்தானில் இருந்து கம்போடியா வரை மாமன்னர்கள் தாங்கள் வாழும் அரண்மனையை விட மிகப் பெரியதாக அற்புத கலைநயத்துடன், ஆன்மிக உறைவிடங்களாக இந்து தெய்வங்களுக்கு கோவில்கள் கட்டி மக்களுக்கு சமர்ப்பித்துள்ளனர். அக்கோவில்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்தும் இன்றும் நின்று நம் இந்து மதத்தின் பெருமையையும் அதை உருவாக்கிய அரசர்களின் பக்தியையும் பறைசாற்றுகின்றன.


நான்கு யுகங்கள் என்று காலத்தை இந்து மதம் பிரித்திருக்கிறது. கிருத, திரேதா, துவாபரம், கலி. கிருத யுகத்தில் ஞானம் பெற்றால் முக்தி கிடைக்கும். திரோத யுகத்தில் யாகம் செய்தால் முக்தி கிடைக்கும். துவாபர யுகத்தில் தான, தருமங்கள் செய்தால் முக்தியைப் பெறலாம். கலி யுகத்தில் பக்தி செய்தாலே முக்தியை அடைய முடியும் என்கிறது கந்தபுராணம். நாம் இப்போ வாழ்வது கலி யுகத்தில். நாம ஜெபமே இறைவனை அடைய எளிய வழியாகிறது.


இந்துக்கள் வணங்கும் எந்த ஒரு தெய்வமும், நீ என்னை வணங்காவிட்டால் உன்னை தண்டிப்பேன் என்றோ, என்னை விட்டு வேறு கடவுளை வழிபட்டால் உன்னை நரகத்தில் தள்ளுவேன் என்றோ, நீ எனக்கு அடிமை என்றோ சொன்னதாக எந்த வேதத்திலும் இல்லை.


இந்து மதம் எந்த மதத்திலும் குற்றம் குறைகளை கண்டுபிடித்து கேலி பேசுவது கிடையாது. விண்ணிலிருந்து விழுகின்ற ஒவ்வொரு மழைதுளியும் எப்படி தூய்மையானதோ, நதிகள் எல்லாம் பல இடங்களில் தோன்றினாலும் எப்படி அனைத்தும் கடலில் போய் சங்கமிக்கிறதோ அதே போலவே எல்லா மதங்களும் புனிதமானவைகள், அனைத்து மதங்களும் இறைவனிடம் மனிதனைக் கொண்டு சேர்ப்பவைகள் தான் என்று உயரிய கோட்பாடுகளை கொண்டது இந்து மதம்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் பேசும்போது, தான் ஒரு இனத்தை மட்டுமே முன்னுரிமை குடுத்து வாழ வைப்பேன் என்று எந்த இந்துக் கடவுளாவது சொன்னதாக இருக்கிறதா, எந்த இந்து மத நூல்களிலாவது அப்படிக் காட்ட முடியுமா என்று சொல்லி இருக்கிறார்.


ஒரே கடவுள்தான் உருவமற்ற நிலையிலும், உருவமுள்ள நிலையிலும் இருப்பதாகவும், அதே கடவுள் பல அவதாரங்களை உருவங்களை எடுப்பதாகவும் இந்து மதம் சொல்கிறது.

பல உட்பிரிவுகளையும், அவரவர்க்கு தனித் தனியே கடவுள்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகளை கொண்டிருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதம் இந்து மதம். ஒரே பரமாத்மாவின் பல நிலைகளே பல கடவுளாக இருக்கிறது. இப்படி பல வடிவங்களில் யாரை வணங்கினாலும் நாம் அந்த ஒரே பரமாத்மாவையே வழி படுகிறோம்.


எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். அதைதான் இந்து மதமும் சொல்கிறது.

மனிதனின் உயிர், கடவுள் என்கிற நிலைக்கு உயர முடியும், அடைய முடியும் என்பதை வேதமும் அதை அடைவதற்கான வழியை யோக நூல்களும் சொல்லுகின்றன.

தொல்காப்பியம் காட்டும் முதல் தெய்வம் மாயோன் கிருஷ்ணன் தான் முல்லை நிலத் தெய்வமாவார். கண்ணன் நப்பின்னை எனும் தன் ஆயர்குல மாமன் மகளை ஏழு காளைகளை அடக்கியே மணந்தான் இச்செய்தியை நம்மாழ்வார் தன் பெரிய திருவந்தாதியில் 'மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே’ என்று குறிப்பிடுகிறார். பொங்கல் என்ற சொல்லைக் குறிப்படும் முதல் கல்வெட்டு எது? கங்கைகொண்ட இராஜேந்திர சோழனின் காளகஸ்தி கல்வெட்டில் “மகர சங்கரமணப் பெரும் பொங்கல்” என்ற குறிப்பு உள்ளது.சங்க இலக்கியங்கள் தமிழகத்தின்பண்டை வரலாற்றை உணர்த்தும் கருத்துப் பேழை. ஏறத்தாழ 3000 ஆண்டுகள் தொன்மை மிக்க தொல்காப்பியர் இயற்றிய "தொல்காப்பியம்" சங்ககால இலக்கண நூலாகும். தூய ஆன்மிக நெறியோடும், பக்தி உணர்வோடும் கடவுள் வழிபாட்டு வழியை, நாட்டின் நிலப்பகுப்போடு இணைத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியரையே சாரும். மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்பது தொல்காப்பியம். தொல்காப்பியர் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்று நான்கு கடவுளரைப் பற்றி முதலில் கூறி அக்கடவுளர் நெறியைப் போற்றி வணங்கிய நிலங்களைக் குறிப்பிடுகிறார். அதனால் இப்பொழுது வட இந்திய கடவுள் தென் இந்திய கடவுள் என்ற பேதம் ஒன்றுமில்லை. எல்லாம் ஒரே மதம் சார்ந்தவை தான். அரசியலாக்கி சர்ச்சை செய்ய மட்டுமே இந்த பேதம் ஏற்படுத்திப் ஏசப்படுகிறது.


இந்து மதத்தைப் பின்பற்றுவருக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளது.

இந்த நேரத்தில் தான் இறைவனை தொழ வேண்டும் இப்படி தான் வழிபட வேண்டும் என்று பிறர் கருத்துகளை நம் மீது திணிப்பதில்லை.

அவரவர் எண்ணங்களுக்கேற்ப இறைவனை வழிபடலாம் என்கிறது. இது எந்த மதத்திலும் இல்லாத கருத்து. அதே சமயம் 1) கீதாசார்யனின் வாக்யம் :

श्रुतिस्मृति ममेवाज्ञा यस्तु उल्लंध्य वर्तते ।

आज्ञाच्छेदी ममद्रोही मद्भक्तोपि न मे प्रियः ।।

இதனால் ஸ்ருதி ஸ்ம்ருதிகள் பகவானுடைய ஆஞ்யை

ஸ்ம்ருதிகளிலும் ( ஸ்ருதியிலேயும்) திலகம் அணிய வேண்டும் என்ற நிர்தேஸம் உள்ளது.

2) மேலும் அனுஷ்டானங்களும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதை தானே அனுஷ்டித்து காட்டியவர் ராம பிரான்.

3) ஆதிபகவன் முதற்றே உககு என்கிறது இந்து மதம். ப்ரஹ்மமாகிய பரமாத்மாவாகிய நாராயணன் என்னும் பகவானை வேதம் கூறும்.

தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.

காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம். இந்து மதத்தின் புனித நூலின் படி வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.


யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம். மற்ற மதங்களும் ஹிந்து மதத்துக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம். ஹிந்து மதம் ஒன்று தான். “இது ஒன்றே மோட்ச மார்க்கம்” என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடையாது. ஏனென்றால் ஒரு பரமாத்மாவை அடைவதற்கான பல மார்கங்களே பல மதங்களும் என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த விசால மனப்பான்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும் என்கிறார் காஞ்சி மகா பெரியவர்.


எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து "கொல்லாமை "புலால் மறுத்தல்", ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற

வரையறையை கொடுத்த மதம். சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம். சுருக்கமாக அன்பே சிவம் அதுவே நலம் என்னும் மதம் இது.


இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம் இது. வழிபாட்டு முறை எதுவானாலும் பக்தி என்கிற பாவம் பொதுவானது. எந்த நிலையிலும் ஆண் - பெண் சரிநிகர் சமம் என்பதை இந்து மதம் காலம், காலமாக உணர்த்தியபடி உள்ளது. இந்த அடிப்படையில் தான் இந்து ஆலயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் மையங்களாக உருவாக்கப்பட்டன.


இந்து மதத்தில் பாவ மன்னிப்பை ஒரு பாதிரியார் வணங்குவதில்லை. ஆனால் “என்னை மட்டும் சரணடைந்துவிடு! நான் உன்னை எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்—ஸர்வ பாபேப்யோ மோக்க்ஷயிஷ்யாமி மாசுச: —பயப்படாதே” என்று தீர்மானமாக அபய வாக்குத் தருகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.

நாம் சம்பாதிப்பதில் தசம பாகம் கோவிலுக்குத் தர வேண்டாம். ஒரு பூ, இலை, தண்ணீர் அன்புடன் கொடுத்தால் போதும் ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணன் கீதையில்.


"மிக மிகப் பழங்காலப் புதைப்பொருள் ஆராய்ச்சிகளைப் பார்த்தால் எல்லா அந்நிய தேசங்களிலுமே நமது வேத சமய சம்பந்தமான அம்சங்களை நிறையப் பார்க்கிறோம். உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 1300 வருஷங்களுக்கு முன்னால் எகிப்து தேசத்தில் இரண்டு அரசர்கள் செய்து கொண்ட உடன்படிக்கை சாஸனம் பூமிக்கடியிலிருந்து கிடைத்திருக்கிறது. அதில் ‘மித்ரா வருண’ சாட்சியாக இந்த உடன்படிக்கை செய்யப்படுவதாகச் சொல்லியிருக்கிறது. மித்ரா-வருணங்கள் நமது வேதத்தில் சொல்லப்பட்ட தேவதைகள். மடகாஸ்கரில் உள்ள ஊர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் ஸம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்ததாகத் தெரிகிறது. ராமேஸஸ் என்ற ராஜப் பெயருக்கும் நம் ராமனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.


சரித்திர காலத்துக்கு முற்பட்டவர்கள் என்று வைக்கப்பட்ட பழங்குடிகளின் மதங்களில்கூட நம் சமய சின்னங்கள் இருக்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அத்தனை காலத்துக்கு முந்தி, நாகரீக வாழ்க்கையே உருவாகாத தூர தூர தேசங்களுக்கு இந்தியாவிலிருந்து படையெடுத்தோ வியாபாரத்துக்காகவோ போய் நம் நாகரீகத்தைப் பரப்பினார்கள் என்றால், அது பொருத்தமாகவே இல்லையே! அதனால்தான் ‘இங்கிருந்து கொண்டுபோய் அங்கே புகுத்தவில்லை; ஆதியில் லோகம் முழுக்கவே வேத மதம்தான் இருந்திருக்க வேண்டும்’ என்று எனக்குத் தோன்றுகிறது. அப்புறம் அவை திரிந்து திரிந்து இப்போது அந்தந்த தேசத்து ‘ஒரிஜினல்’ மதங்களாக நினைக்கப்படுபவையாக ஆகி, பிற்பாடு அங்கும் சரித்திர காலத்துக்கு உட்பட்ட கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம் ஆகியன பரவியிருக்க வேண்டும்." காஞ்சி சங்கராச்சாரியார் மகா பெரியவா


அதனால் ஆதியில் இருந்து பூமியில் இருந்து வந்திருப்பவன் இந்து மட்டுமே. அதனால் வெறு மதத்தை தழுவாத வரையில் ஒருவன் இந்து தர்மத்தைத் தழுவியே வாழ்கிறான் என்பது தெளிவாகிறது. அதனால் தமிழன் இந்து இல்லை, வடநாட்டில் இருந்து வந்த கடவுள் தென்னாட்டில் வணங்கக் கூடாது என்கிற பேதங்களுக்கு இங்கு இடமே இல்லை. இவை அரசியல்வாதிகள் இன்றைய காலகட்டத்தில் நடத்தும் இந்து மதத்திற்கு எதிரான சதி.


பாரத பூமி சித்தர்கள் மகான்கள் பிறந்த பூமி. எப்பொழுதெல்லாம் கேடும் அநாகரீகமும் தழைத்து ஓங்குகிறதோ அப்பொழுதெல்லாம் இறைவன் அம்சம் இந்த பூமியில் மகான்களாக, ஆழ்வார்களாக, நாயன்மார்களாக, பரமஹம்சர்களாக, சத் குருக்களாக நம்மை காக்க அவதரிக்கிறார்கள். நம் மதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் பரம உத்தமமான மகான்கள் தோன்றிக்கொண்டே வந்திருக்கிறார்கள்.

தர்ம-அர்த்த-காம-மோக்ஷங்களுக்கு ஸாதனமாக இருப்பது இந்து மதம். இந்த நான்கையும் புருஷார்த்தங்கள் என்பார்கள். 'தர்மம்’ என்பதே தமிழில் ‘அறம்’. ‘அர்த்தம்’ என்பது ‘பொருள். ‘காமம்’, ‘மோக்ஷம்’ என்பவைகள் முறையே ‘இன்பம்’, ‘வீடு’. இவற்றை பற்றி தான் திருவள்ளுவர் திருக்குறளில் எழுதியுள்ளார். இறுதியில் வீடு பேற்றை அடைவது தான் நம் குறிக்கோள். அதுவே நிலையான் மகிழ்ச்சியைத் தரும் என்பது ஆன்றோர் வாக்கு.


எந்தக் காரியம் செய்தால் நல்லதோ அது தர்மம். ‘அறம் செய விரும்பு’ என்று தமிழ் மூதாட்டி ஔவையார் கூறினார். நல்லதாக செய்வதெல்லாமே தர்மம் என்றாலும், பொதுவிலே தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. ஆனால் இப்படிக் கொடுப்பதற்கு வேண்டிய பொருள் நமக்கு எப்படிக் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் நாம் அர்த்தத்தை (பொருளை) மற்றவருக்குக் கொடுத்து தர்மம் செய்திருந்தால் தான் அது மறு ஜென்மத்தில் குட்டி போட்டுக் கொண்டு நமக்குக் கிடைக்கும். தர்மத்தினுடைய பிரயோஜனமே பொருள். இன்பத்துக்குப் பொருள் ஸாதனமாக இருப்பதுபோல் பொருளுக்குத் தர்மம் சாதகமாக இருக்கிறது. ஈகை மட்டுமல்ல! எவ்விதமான தர்மம் செய்தாலும், அதாவது பிறருக்கு என்ன நல்லது செய்தாலும் பலனாகப் பொருள் கிடைக்கும். ‘தர்ம்ம் தலைகாக்கும்’ என்பது பழமொழி. ஆகவே பாவம் செய்யாமல், புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத் தியானித்தால் நம் வாழ்நாளிலேயே நன்மை கிடைக்கும். இதை நாம் அனுபவத்தில் காண்கிறோம். இந்துமதத்தின் ஒவ்வொரு அணுவையும் நாம் உணர்வில், அனுபவத்தில் புரிந்து கொள்கிறோம்.


நம் கண்ணுக்குத் தெரியும் உலகத்தைவிட, கண்ணுக்குத் தெரியாத சூட்சும உலகம் பல மடங்கு பெரிதாக இருக்கிறது. அவை அனைத்தையும் இயக்கும் மூலப் பொருளை, அனுபவம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வரும். விஞ்ஞானிகள் கூட விளக்கம் சொல்ல முடியாத ரகசியம் இறைவனின் சிருஷ்டியில் இருக்கிறது. ஒருவரின் கைரேகை போல் இன்னொருவரின் ரேகை இருக்காது. இருநூறு கோடி கைகளுக்கும் தனித்தனி ‘டிஸைன்’ போட்டிருக்கிறார் இறைவன். ஒவ்வொரு பிறவிக்கும் ஒவ்வொரு ரேகையை மாற்றுகிறார் இறைவன். வியக்கத்தக்க அவரது சிருஷ்டியிலேயே அவரைக் கண்டுகொள்ள முடிகிறது. அப்படியும் கண்டு கொள்ளாதவர்கள், தங்கள் பலவீனத்தால் ஏற்பட்ட துன்ப அனுபவங்களில் கண்டு கொள்கிறார்கள். விஞ்ஞான ரீதியாக இன்று சொல்லப்படும் உண்மைகளை இந்து மதம் எப்போதோ சொல்லி விட்டது! இந்து மதத்தின் தனிச் சிறப்பு அதுதான். இது வெறும் மதம் மட்டுமல்ல பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியாக உள்ளது.


ஆனால் மிக வேதனையான ஒரு விஷயத்தை நாம் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். இந்துக்கள் என்று கூறிக்கொள்ளும் எத்தனை பேருக்கு தங்களது மதத்தைப் பற்றிய அறிவும் தெளிவும் இருக்கிறது. நம்மில் நூற்றுக்கு பத்து பேருக்கு கூட நம் மதத்தைப் பற்றி துளி அளவும் ஞானமில்லை. நம்மவர்கள் ஞானம் இல்லாமல் போனதற்கு அவர்கள் மட்டும் காரணமில்லை, சமயத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டிய ஆச்சாயர்களே தங்களது பணிகளை திறம்பட செய்யாததால் ஏற்பட்ட நிலை இது. ஹிந்து தர்மத்தின் பண்பாட்டுக்கூறுகளை வாழையடி வாழையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்வதில் சமுதாயத்தின் அனைத்து மக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இந்து மதத்தைப் பற்றி கற்றுக் கொள்வோம், தெரியாதனவற்றை தெரிந்து கொள்வோ, அந்த ஞானத்தை சரியான முறையில் பயன்படுத்துவோம்.

“ எங்கே போயின ஒரு காலத்தின் பாபிலோனிய, எகிப்திய, அஸ்டெக், மாயான், சிவப்பிந்திய அல்லது ஹவாயியின் பிராதன சமயங்கள்?” என ஹவாயில் இருக்கும் சைவ சித்தாந்த மடத்தின் வெள்ளைக்கார சத்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி அவர்கள் வேடிக்கையாகக் கேட்பதுண்டு. அவற்றின் மிகக் குறைவானதே எஞ்சியுள்ளது. ஒரு பில்லியன் மக்கள் கொண்டாடும் இந்து சமயத்திற்கும் இதே கதிதான் என சிலரால் அஞ்சப்பட்டும், பலரால் எதிர்ப்பார்க்கவும் படுகிறது. மத ரீதி ஆக்கிரமிப்பு மற்றும் முழுஅழிப்பு வரலாறு பழமையான பல மதங்களை துடைத்து ஒழித்த போதிலும் இந்து மதம் மட்டும் அதை எதிர்கொண்டு இன்னும் வாழ்ந்துக் கொண்டு இருப்பது தனித்துவமானது. இந்து மதத்தை யாராலும் அழிக்க முடியாது.

மாயை எனப்படும் இந்த உலகம் இல்லையேல், அனுபவத்தின் மூலமாக ஆத்மா வளர்ச்சி அடைய முடியாது. உலகில் இருந்து நாம் அறியாமையிலிருந்து ஞானத்திற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், சாவு உணர்விலிருந்து இறப்பிறப்பற்ற தன்மைக்கு வளர்கின்றோம். உலகம் யாவும் ஓர் ஆசிரமம், நாம் அனைவரும் அதில் ஆன்மீக வளர்ச்சி அடைகின்றோம். இந்துக்களாகிய நாம் இவ்வளவு பெரிய ஞான பொக்கிஷத்துக்கான அதிபதியாக இருக்கிறோம்! அதை சரியாக பயன்படுத்தி நாமும் வளர்ந்து நம்மை சுற்றியுள்ள சமூகத்துக்கும் நன்மை செய்வோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்


 
 
 

Comments


Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Anbezhil's musings. Proudly created with Wix.com

bottom of page