top of page
Writer's pictureAnbezhil

கஜேந்திர மோக்ஷம்

Updated: Mar 30, 2021

கடவுள் நமக்கு மிகவும் நெருங்கியவரும், எல்லோரையும் விட நம்மிடம் அதிக அன்பு கொண்டவரும் எப்போதும் பக்தர்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புபவரும் ஆவார். நாம் அவரைத் தொட ஒரு கையை நீட்டினால் இரு கரங்களையும் நீட்டி நம்மை நோக்கி மிகுந்த கருணையோடும் அன்போடும் வருகிறார். கஜேந்திரன் என்னும் யானைக்கு மகாவிஷ்ணு பறந்து வந்து உதவியது இதற்கான எடுத்துக்காட்டாகும். கஜேந்திர மோட்சம் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் வருகிறது. 8 ஆவது ஸ்கந்தத்தில் 3ஆவது அத்தியாயமாக வருகிறது. இதை பரீட்ஷித் மன்னருக்கு ஸ்ரீசுகர் அருளினார். இது குழந்தைகளுக்கும் சொல்லக்கூடிய எளிமையான கதை, ஆனால் இதில் பல ஆழ்ந்த வேத வேதாந்த கருத்துகளும் ஒளிந்துள்ளன.

வருணபகவான் திரிகூடமலை என்னும் இடத்தில் உருவாக்கிய துமதா என்னும் வனத்தில் கஜேந்திரன் என்ற யானை தனது யானை கூட்டத்துடன் அதன் தலைவனாகவும் வாழ்ந்து வந்தது. (இந்த யானைக்கு ஒரு முன்கதை உண்டு. விஷ்ணுவின் அதி பக்தனான பாண்டிய மன்னன் இந்த்ரதுயும்ணன் ஒரு முறை விஷ்ணு பூஜையில் தீவிரமாக இருக்கையில், அகஸ்த்திய மாமுனி தனது அடிகளார்களுடன் அங்கு வந்தார். அப்போது பூஜையில் இருந்த மன்னன் பூஜையை விட்டு எழ முடியாமல் அவனது தலையை அசைத்து வரவேண்டும் சுவாமி என்றிருக்கிறான். மேற்கொண்டு அவரை முறையான வகையில் உபசரிக்கவில்லை எனக் கோபம் கொண்ட மாமுனி அவனை ஒரு யானையாக போகக் கடவது என சபித்தார். பாண்டிய மன்னன் இந்த்ரதுயும்ணன் கண்ணீர் மல்கி மன்னிப்புக் கேட்டதால், அவர் மனமிரங்கி அவனுக்கு மகாவிஷ்ணுவினால் பாவ விமோசனம் வழங்கப்படும் என்றார்.

அவனும் ஒரு யானையாக இப்புவியில் பிறந்தான்.)


முன் ஜென்ம வாசனையால் தனது விஷ்ணு பக்தி குறையாமல் தினமும் அங்கிருந்த ஒரு தாமரை குளத்தில் பூக்களை கொய்து பூஜை செய்து வந்தது கஜேந்திரன். அப்போது ஒரு நாள் குளத்தில் இறங்கி பூப் பறிக்கையில், அங்கிருந்த ஒரு பெரிய முதலை அதன் காலைக் கவ்விக் கொண்டது. (முதலைக்கும் முன் கதை உண்டு. ஹுஹு எனும் காந்தர்வன் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் தேவாலா முனிகளின் கால்களை இழுத்ததால், அவர் சினமடைந்து நீ ஒரு முதலையாக உருவாகக் கடவது என சாபமிட்டார். அவன் மன்னிப்பு கேட்ட பின் சாப விமோசனமாக விஷ்ணு அவனை தனது சக்கரத்தால் கொன்று முக்தி கொடுப்பார் என்று அருளினார்.) யானை எவ்வளவோ முயற்சி செய்தும் அதனிடமிருந்து விடுபடமுடியவில்லை. அதனால் முடியாமல் போன பிறகு யானையின் உறவுகள் அதனின் மற்ற மூன்று கால்களை ஒருபக்கம் பிடித்து இழுக்க முதலை தண்ணீரிலிருந்து ஒரு காலை இழுக்க பெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டம் தேவர்கள் வருட கணக்கில் 1000 ஆண்டுகள் நடந்தன என்று தெரிகிறது. அதாவது நம் கணக்கில் 1 வருடம் = தேவர்களின் 1 நாள். அதனால் ஆயிரம் நாட்கள் சண்டை தொடர்ந்தது என்று வைத்துக் கொள்ளலாம். உடல் களைத்து போன யானை இனி முயற்சி செய்து பயனில்லை, பகவான் விஷ்ணுவிடம் சரணடைந்து அபயம் கேட்க வேண்டியதுதான் என முடிவு செய்தது. ஆதி மூலமே என அபயக் குரல் கொடுத்து. நமோஸ்துதே அகில காரணாய, அத்புத காரணாய, நிஷ்காரணாய என்று இறைவனை உதவி கேட்டு யானை கூப்பிட்டது கஜேந்திர ஸ்துதி என்று பாகவதத்தில் தனியாக ஒரு அத்தியாயம் வருகிறது.

வைகுண்டத்தில் மகாலட்சுமியும் நாராயணனும் உட்கார்ந்து கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இருவருள் தோற்றுப் போகிறவர் எழுந்து போய்விடக் கூடாது என்பதற்காக பகவானுடைய மேல் அங்கவஸ்திரத்தையும் மகாலட்சுமியினுடைய புடைவை நுனியையும் முடித்து வைக்கப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் யானை கூக்குரலிடுகிறது! திடீரென்று எழுந்தார் பரமாத்மா. போட்ட முடிச்சை அவிழ்க்காததால் மகாலட்சுமியும் கூடவே ஓடி வந்தார். எதிரே கருடன் வர, அவர் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டார் பகவான். அந்த வேகத்தில் மகாலட்சுமி தொங்கலாடுகிறார். சங்கு சக்கரம் தாமாகவே வந்து கைகளில் ஒட்டிக் கொண்டன. யானையை காக்க அவ்வளவு உத்வேகம்! அதனால் தான் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் பராசரபட்டர் இப்படிப் பாடுகிறார்.

'ஹே ரங்கநாதா! நீ அந்த யானையை ரக்ஷித்ததற்காக உன்னை, நமஸ்கரிக்கவில்லை. இந்த அஞ்சலி எதற்கு என்றால் நீ ஓடிவந்த வேகத்துக்காக!

கருடாழ்வார் வாகனத்தில் விரைந்து வந்து தனது விஷ்ணு சக்கரத்தை ஏவி முதலையின் கழுத்தை துண்டாடி முதலில் ஹு ஹுவை சுவர்க்கம் கொண்டு சென்றார். சாப விமோசனம் பெற்ற மன்னன் மோட்சம் அடைந்தான். அப்பொழுது கஜேந்திரன் சொல்கிறது நான் உன்னை கூவி அழைத்தது என் இந்த உடலில் இருக்கும் உயிரை காப்பாற்ற இல்லை, அது இன்றில்லாவிட்டால் ஒரு நாள் போகத் தான் போகிறது. நான் பறித்த இந்தத் தங்கத் தாமரையை உன்னிடம் சமர்ப்பிக்கவே அழைத்தேன் என்கிறது. அத்தனை அன்பு. அந்த மலரை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் பரந்தாமன்.

கதை என்று பார்த்தால் சின்னக் கதை தான். ஆனால் அற்புதமான உள்ளர்த்தங்கள் பொதிந்துள்ளன.

1. எப்பொழுது தனக்கு, தான் உரியவன் இல்லை என்பதை உணர்ந்து, தன்னைச் சேர்ந்தவர்களும் தன்னை காப்பாற்ற மாட்டார்கள் என ஒருவன் உணர்ந்து இறைவனை சரண் அடைகிறானோ அப்பொழுது பரமாத்மா ஓடோடி வந்து காப்பாற்றுகிறான். முதல் ஐநூறு வருஷமும் நான் எனக்கு உரியன என்கிற நிலையில் கஜேந்திரனுக்கும் முதலைக்கும் சண்டை நடந்தது. அது தான் அகங்காரம். எல்லாம் எனக்குத் தெரியும், நான் சாதிப்பேன் என்கிற நினைவு. இந்த முதலையை இருக்கிற இடம் தெரியாமல் அழித்துவிடுவோம் என்கிற அகங்காரம்! அதன் பின் கால் அழுகின நிலையில் தன்னால் இயலாது என்பதை உணர்கிறது.

2. இறைவன் திருவடி சரணம் எனப்பற்றியவர்கள் இவ்வுலக துன்பங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் அடைவார்கள் என்பது உறுதி.

3. இறைவன் ஒரு யானை கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து, நமக்கு எல்லாம் வேண்டினால் வருவான் என்கிற நம்பிக்கையை அளித்திருக்கிறார். இது அவர் நமக்கு செய்திருக்கும் மிகப் பெரிய உபகாரம்.

4. இக்கதையில் கஜேந்திரன் ஜீவாத்மாவை குறிக்கிறது. அது காலை விட்ட அந்தக் குளம் நாம் இருக்கும் சம்சார சாகரம். அதில் மோகம், லோபம், மதம், மாத்சர்யம் ஆகிய குணங்களின் உருவகம் தான் அந்தக் குளத்தில் உள்ள முதலை.

5. சம்சாரத்தில் இருந்து விடுபட இறைவனிடம் சரணாகதி அடைவது ஒன்றே வழி. முதலில் 500 ஆண்டுகள் தானே முயன்றது என்பது நாம் இந்த சம்சார சாகரத்தில் இருந்து நம் முயற்சியால் விடுபட பிறவிகள் தோறும் பாடுபடுவதை குறிக்கிறது. அதற்கு பிறகு உற்றார் உறவினர் உதவுகின்றனர், அது வெளியில் இருந்து இறைவனை அடைய நமக்கு உதவும் சாதனங்கள் ஆகும். அதுவும் நம்மை இலக்கிற்கு அழைத்துச் செல்லவில்லை. இறுதியில் ஆதி மூலமே என்கிற சரணாகதி கூவலே யானைக்கு விடுதலையை வாங்கிக் கொடுக்கிறது-முக்திப் பெறுகிறது யானை. காலை கவ்விய முதலைக்கும் முக்தி கிடைக்கிறது. (கஜேந்திரன் முக்தி பெறும்போது ஸ்ரீமன் நாராயணனிடம் தன்னை போல் யார் உன் உதவியை கேட்டாலும் முக்தி அளிக்குமாறு வேண்டி கொண்டது.)

6. உண்மையில் நாம் மண்ணில் உதிக்கையில் பிறப்பதில்லை. எப்பொழுது ஞானம் பிறக்கிறதோ அப்பொழுது தான் பிறக்கிறோம். அந்த ஞானம் பிறக்க பல துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. கஜேந்திராழ்வாருக்கு அந்த ஞானம் வர ஆயிரம் ஆண்டுகள் ஆயிற்று. நமக்கு எத்தனை வருடம் பிடிக்குமோ?

7. பகவான் தான் நம் முதலாளி, நாம் அவன் சொத்து என்று இருந்துவிட்டால் நம்மைக் காக்கும் பொறுப்பும் அவருக்கு தானே? அதை நாம் உணர்ந்து ஒத்துக் கொள்ளவேண்டும். அப்பொழுது தான் பகவான் நம் உதவிக்கு வருவார். லக்ஷ்மி தேவி 900 ஆண்டுகளாக யானைக்கும் முதலைக்கும் சண்டை நடைபெறுவதைப் பார்த்து மகாவிஷ்ணுவிடம் எப்படி இருந்தாலும் யானையை காப்பாற்றிக் கொள்ள யானையால் முடியாது, நீங்கள் போய் உதவலாமே என்று கூறுகிறார். அதற்கு பகவான், அழைக்காமல் நான் செல்லமாட்டேன் என்கிறார். அவர் காத்துக் கொண்டிருக்கிறார் நமக்கு உதவி செய்ய, ஆனால் நாம் நமஹ என்று அவரிடம் சரணாகதி அடைந்து என்னால் எதுவும் இயலாது நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லாவிட்டால் அவர் வரப்போவதில்லை. அவராக உதவ வந்தால் நாம் நம் இறுமாப்பில் ஏற்றுக் கொள்ளாமல் கூட அனுப்பிவைத்துவிடுவோம் என்பதால் அவர் நாம் உதவி கேட்கும் வரை வருவதில்லை.

8. ஒரு யானையை காப்பாற்ற சக்கராயுதத்துடன் விரைந்து வருகிறார் ஸ்ரீமன் நாராயணன். முதலையிடம் மாட்டிக் கொண்டிருப்பது சீதையோ ருக்மிணியோ இல்லை. முதலையும் பெரிய அசுரன் இல்லை,ஆனால் ஏன் ஓடோடி வந்து சக்கராயுதத்தைப் பயன்படுத்தி முதலையின் தலையைக் கொய்கிறார்? ஏனென்றால் பக்தன் படும் வேதனையை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பக்தன் துன்பப்பட்டால் அவரால் தாங்க முடியாது. அந்த அளப்பறியா அன்புக்குப் பெயர் என்ன? நாம் அவர் சொத்து என்று ஒத்துக் கொண்டதால் வந்த கருணை!

9. தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்னப்பன் நாராயணன் என்ற ஆணித்தரமாக நம்பி சொன்ன பிரஹலாதனுக்கு கண் முன் தோன்றி அந்த அசுரனின் குழந்தைக்கு அவன் அப்பாவின் கொடுமையில் இருந்து விடுதலை வாங்கித் தருகிறார். அதுவும் சரணாகதி அவர் கொடுத்த மதிப்பே ஆகும்.

10. அதே போல திரௌபதி மாதவிடாய் காலம் என்பதால் ஒரே ஒரு துணி அணிந்து அந்தப்புரத்தில் இருந்தவளை துச்சாததன் சபைக்கு இழுத்து வந்த போது முதலில் அவள் தன் முயற்சியால் வர மறுக்கிறாள். அவளை ரத்தம் வழிய வழிய துச்சாதனன் இழுத்து வந்தான். அவள் கூடியிருந்த பெரியோர்களை- பீஷ்மர், துரோணர் முதல் திருதிராஷ்டிரன் வரை இது நியாயமா என்று கேட்டு கதறுகிறாள். ஒன்றும் நடக்கவில்லை. வஸ்திராபரணம் தொடங்குகிறது. இறுதியில் தன் மானத்தைக் காத்துக் கொள்ள துவாரகையில் இருக்கும் கிருஷ்ணனை நினைத்து கோவிந்தா என இரு கைத் தூக்கி அபயக் குரல் கொடுக்கிறாள், அந்தக் கிருஷ்ண நாமமே அவளை காப்பாற்றுகிறது. எடுக்க எடுக்க துணி வந்து கொண்டே இருக்கிறது. அவள் கேட்ட உதவி கிடைக்கிறது. இது தான் சரணாகதி நடத்தும் உன்னதம்.


இவ்வுலகில் உள்ள பெரிய ஆட்கள் பின் போவது கஷ்ட காலத்தில் அவர்கள் உதவி கிடைக்கும் என்கிற எண்ணத்தில் தான். ஆனால் அதெல்லாம் உதவாது. நான் எதற்கும் பயனில்லை என்றாலும் நீ யானைக்கு எல்லாம் அருள் செய்து காப்பாற்றியதால் தைரியத்துடன் உன்னை வந்தடைந்தேன். கடைசி காலத்தில் உடல் நலிவால் நினைவற்று இருக்கும்போது உன்னை நினைக்க என்னால் இயலாது, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்துக் கொள்கிறேன், அரங்கத்தில் பாம்பணையில் பள்ளிக் கொடிருப்பவனே என்கிறார் பெரியாழ்வார்.


துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்து துணை ஆவர் என்றே!

ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்! ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!

எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத்து அரவணைப் பள்ளியானே!

கஜேந்திர மோக்ஷம் தொடர்பான சமீப காலத்தில் நடந்த ஓர் அரிய சம்பவத்தை இங்கே பகிர்கிறேன். ஆலங்குடி பெரியவா என்ற மஹாத்மா தென் தமிழகத்திலும் தஞ்சை, கும்பகோணம் ஆகிய இடங்களைச் சுற்றித் திரிந்து வந்தார். ஸ்ரீமத் பாகவதமே அவரது உயிர்‌மூச்சு. யார் அழைத்தாலும் அங்கு சென்று ஸ்ரீமத் பாகவதம்‌ சொல்ல ஆரம்பித்துவிடுவார். திகம்பரராக சுற்றித் திரிந்த அவரிடமிருந்து எப்பொழுதும் ஸ்ரீமத்பாகவத ஸ்லோகங்கள் வந்துகொண்டே இருக்கும். அவரது உபன்யாசத்தைக் கேட்ட சிலர், அவரிடம், நீங்கள் ரொம்ப அழகாக பாகவதம்‌ சொல்கிறீர்கள், ஆனால் திகம்பரராக இருந்து கொண்டு சொல்வதால் பொது மக்களும்‌, பெண்களும் வந்து கேட்க வேண்டும் என்று ஆசையிருந்தாலும் சங்கடப் படுகிறார்கள் என்று கூறினர்.

உடனே அவர் அப்படி என்றால் நான் சந்நியாசம் வாங்கிக் கொள்கிறேன், எல்லாரும் பாகவதம்‌ கேட்கணும்‌, அது தான் முக்கியம் என்று சொல்லி ஸந்நியாசம்‌ வாங்கிக்கொண்டுவிட்டார். ஒரு சமயம்‌ ஒரு கிராமத்தில், கஜேந்திர மோக்ஷம்‌ சொல்லிக் கொண்டிருந்தார். அதைக்கேட்ட நாத்திகனான ஒருவன், முதலை காலைப் பிடிக்குமாம், ஸ்லோகம் சொன்னால்‌ விட்டுவிடுமாம், என்ன கதை விடுகிறார் இவர் என்று நினைத்தான்.

ஆலங்குடி பெரியவா ஊர்க்குளத்தில் அதிகாலை நீராடப் போவார். மறுநாள் அவரை சோதனை செய்ய வேண்டி, அந்த கெட்டவன், ஊர்க்குளத்தில் ஒரு குட்டி முதலையைக் கொண்டு வந்து விட்டுவிட்டான். சரியாக பெரியவா ஸ்நானம்‌ செய்யும் படித்துறையில் அவன்‌ முதலையை விடவும், அவர் நீராட வரவும்‌ சரியாக இருந்தது. பெரியவா பிரார்த்தனை செய்து, நீரில் காலை வைத்ததும் முதலை அவர் அவரது காலைக் கவ்வியது. குருதியாறு ஓட ஆரம்பித்தது. யார் காலையோ முதலை கவ்வியதுபோல் பெரியவா, பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க அந்த கெட்டவன் அவரருகில் வந்தான். பெரியவரே, நேத்து உபன்யாசத்தில் சொன்னீங்களே. ஸ்லோகம்‌ சொன்னா முதலை விட்டுவிடும் என்று, சொல்வதுதானே? மறந்துபோச்சா என்று கேலி செய்தான். காலை‌ முதலை கல்விக் கொண்டிருக்கும் போதும் கதறாமல் அவர் வேடிக்கை பார்ப்பது அவன் புத்திக்கு எட்டவில்லை. அப்போதுதான் பெரியவருக்குப் புரிந்தது, அவன் சோதனை செய்ய வந்தவன்‌ என்று. ஓ, சொல்கிறேனே என்று கூறி,

'ஏவம் வ்யவஸிதா புத்த்யா ஸமாதாய மனோஹ்ருதி|

ஜஜாப பரமம் ஜாப்யம் ப்ராக்ஜன்மனி அனுஸிக்ஷிதம் ||'


என்று ஸ்ரீ மத்பாகவதத்தில் அஷ்டமஸ்கந்தம், மூன்றாவது அத்யாயத்தில் வரும் கஜேந்திர ஸ்துதியை கானம் செய்ய ஆரம்பித்தார். சரியாக


சந்தோமயேன கருடேன ஸமுஹ்யமான:

சக்ராயுதோப்யகமதாசு யதோ கஜேந்த்ர|


அதாவது, பகவானான ஹரி கருடன் மீதேறி விரைந்து வந்து, முதலையின் மீது சக்கரத்தை ஏவி கஜேந்திரனைக் காத்தான் என்ற வரியை பெரியவா சொல்லும்போது அவரது காலைப் பிடித்திருந்த முதலை திடீரென வெட்டுப் பட்டது போல் துடிதுடித்து இறந்தது. பார்த்துக்கொண்டேயிருந்த அந்த நாத்திகனுக்கு பயம் வந்துவிட்டது. அவரது காலைப் பிடித்துக்கொண்டான். மன்னித்து விடுங்க ஸ்வாமி, தெரியாமல் தப்பு பண்ணிவிட்டேன். பெரியவர்களை சோதிக்கக்கூடாதுன்னு எனக்குத் தெரியலை என்று கதறி அழுதான். தன்னைச் சோதனை செய்வதற்காகக் குளத்தில் முதலையைக் கொண்டு விட்டுவிட்டு இப்போது கதறியழும் அந்த மனிதனைக் கருணையோடு பார்த்தார் ஆலங்குடி பெரியவா. நீ ஒன்னும் தப்பு பண்ணலப்பா. அழாத. நான் சொன்னது நிஜம்தானா என்று சரிபார்க்கறது ஒரு தப்பா என்றார். ஸாதுக்களால் மட்டுமே இப்படி கருணையோடு இருக்க முடியும். அவன் நீங்க உடனே வாங்க. இதுக்கு மருந்து போடலாம். உங்களுக்கு வேணும்னா முதலை கடிச்சாக்கூட வலிக்காம இருக்கலாம். ஆனா இதுக்குக் காரணமான என்னால் உங்க காலில் ரத்தம் வருவதைத் தாங்கமுடியாது என்று அழுதுகொண்டே சொன்னான்.

பெரியவா சொன்னார், நான் கஜேந்திர மோக்ஷம் மட்டுமா சொன்னேன்? அதுக்கு முன்னாடி ஜடபரதர் சரித்ரமும் சொன்னேனே. ஆத்மா வேற சரீரம் வேற ன்னு உபதேசம் பண்ணினேனே. அதுவும் நிஜம்தானே. அதனால், உடம்பில் இருக்கும் காயம் என் ஆனந்தத்தை பாதிக்காது. கவலைப் படாதே என்றார். நீங்க அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நான் உங்களை இந்த உடலின் வழியாத்தானே பாக்கறேன். என்னை நீங்க மன்னிச்சுட்டது நிஜம்தான்னா, என்னுடைய சமாதானத்துக்காகவது வைத்தியம் பண்ணிக்கணும் என்று அவன் கேட்டுக் கொண்டதால் அவர் வைத்தியத்துக்கு ஒத்துக் கொண்டார். ஆனால் அவர் சொல்லும் மருந்தை தான் போட்டுக் கொள்வேன் என்றார். பெரியவா சில மூலிகைகளின் பேரைச் சொல்லி, அதையெல்லாம் எடுத்துக் கொண்டு வரச்சொன்னார் . அவரே எண்ணெயிலிட்டுக் காய்ச்சி பின் மற்றவர்கள் பதபதைத்துப் பார்க்க அதைக் கொதிக்க கொதிக்க தன் காலில் இருந்த புண்ணில் சிரித்த முகத்துடன் தானே விட்டுக்கொண்டார். அவரது காலில் புண்ணும் வெகு சீக்கிரமாக குணமாகிவிட்டது.

சற்றேறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்த ஆலங்குடி பெரியவரின் சமாதி முடிகொண்டானில் உள்ளது. இவர் முடிகொண்டான் ஸ்வாமிகள் என்றும் அழைக்கப்படுகிறார்.


பாகவதத்தில் வரும் கஜேந்திர மோட்ச ஸ்லோகங்களை, ஸ்ரீராவேந்திரர் தினம் காலையில் பாராயணம் செய்தார் என்று அவர் வரலாறு சொல்கிறது. இந்த வைபவத்தின் முக்கியத்துவத்தை இப்படி பல பகவத் அம்சங்கள் போற்றியதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

கஜேந்திரன் பெருமாளை கூப்பிட்ட போது அவர் வராமல் வைகுண்டத்தில் இருந்தே ரட்சித்து இருக்கலாம். ஆனால் சேஷ சேஷி (முதலாளி-சொத்து)பாவத்தை விளக்கியிருக்க முடியாது. கஜேந்திரன் அவருக்காக பறித்தப் பூவை வாங்கிக் கொள்ள வந்தார். அந்த ஒரு உதாரணத்தாலே நமக்கு எல்லாம் அவர் நீ ஆசையோடு எதை சமர்ப்பிக்கிறாயோ அதை ஏற்றுக் கொள்ள நான் எப்பவும் வருவேன் என்பதை அறுதியிட்டு உறுதி செய்கிறார். நம்மைக் காப்பாற்றிக் கொள்ள நம்மால் முடியாது, இறைவன் ஒருவனால் தான் முடியும் என்பதை உணர வைக்கிறது கஜேந்திரனின் அனுபவப் பாடம். இறுதியில் சரணாகதி ஒன்றே நாம் உய்ய வழி என்கிறார் பகவான் கஜேந்திர மோட்சம் மூலமாக. ஸர்வேஸ்வரனான கண்ணன், அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசிக்கும் போது, 18ம் அத்யாயம் 66 வது ஸ்லோகத்தில் -


‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ. அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயஇஷ்யாமி மாஷுச:’

அதாவது,

‘மோக்ஷ ஸாதனமான அனைத்து நிவ்ருத்தி தர்மங்களையும் (பக்தி யோகமும் அதற்கு அங்கங்களான கர்ம யோகம் மற்றும் ஞான யோகங்களையும்) விட்டு என் ஒருவனையே சரணமாக பற்று. நான் உன்னை மோக்ஷத்திற்கு விரோதியான பாபங்களிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கிறேன். சோகப் படாதே’ என்கிறார். அதனால் மோக்ஷத்தை பெற முக்கிய காரணம் ஸர்வேஸ்வரனான கண்ணனின் கருணையே; நாம் செய்யும் சரணாகதி அனுஷ்டானம் ஒரு சாமான்ய காரணம் என்பதை உணர வேண்டும். இறைவன் கையில் இருக்கும் கருவி நாம் என்பதை உணர்ந்து செயல்பட்டால் துன்பம் இன்றி இன்பமயமாக இருக்கும் நம் வாழ்க்கை.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய

ஓம் நமோ நாராயணாய




https://www.facebook.com/theentamil.library/posts/580595098708549/

870 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page