நாம ஜபம் - இறை நாமம் சொல்லுவோம்
- Anbezhil
- May 28, 2021
- 13 min read
Updated: May 30, 2021
நேற்றை விட இன்று நாம் நன்றாக இருக்க வேண்டும், நாளை இதைவிட நன்றாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் எண்ணமும் நோக்கமும். நன்றாக இருக்க வேண்டும் என்பது பணத்திலா, மகிழ்ச்சியிலா, வாழ்க்கை தரத்திலா, குணத்திலா, ஞானத்திலா, பக்தியிலா, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதிலையா? நேற்றை விட இன்று நம் ஆயுளில் ஒரு நாள் குறைகிறது, நாளை இன்னொரு நாள் குறைகிறது. அதை நாம் எப்பொழுதாவது நினைக்கிறோமா? நம் பிறவியின் நோக்கம் என்ன? அதைப் பற்றி நாம் சிந்தித்தால் நம் ஆத்மா, பரமாத்மாவைப் பற்றி தெரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் இறைவனை அடையும் வழியில் உன்னத நிலையை அடைய அந்த முயற்சியில் ஈடுபடுவோம். உலக இன்பங்களில் கவனம் செலுத்தும் நம் அவயங்கள் இறைவன் பால் திருப்ப அவர் கதையை பேசுவதும் கேட்பதும் ஒரு வழி ஆனால் எல்லாராலும் எப்பொழுதும் அதைச் செய்ய முடியாது. அதனால் எளிய வழி பகவான் பெயரைச் சொல்லி வருவது. அதுவே நாம ஸ்மரணை அல்லது நாம ஜபம். இதை சித்தர்களும் பலவித ஆன்மீகப் பெரியவர்களும் சிறந்த வழியாக கூறி உள்ளனர்.
காலச்சக்கரத்தில் மொத்தம் 4 யுகங்கள் உண்டு - சத்ய யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், மற்றும் கலி யுகம். நாம் இப்பொழுது கலி யுகத்தில் இருக்கிறோம். கலி யுகத்தில் மனத் தூய்மையும் கிடையாது, புறத் தூய்மையும் கிடையாது. கலி யுகத்தின் ஒவ்வொரு விஷயமும் பல்வேறு கேடுகள் நிறைந்தன. இருப்பினும் கலி யுகத்திற்கென்று இருக்கும் ஒரு மாபெரும் சிறந்த குணம், பகவானின் திருநாமத்தைச் சொல்வதாலேயே நாம் எளிதில் முக்தி பெற முடியும். நாம ஸங்கீர்த்தனத்தால் மட்டுமே ரஜோ, தாமச, சாத்விக குணங்களின் சங்கத்திலிருந்து விடுபட்டு, உயர்ந்த இடமான கிருஷ்ண உலகத்தை அடைய முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் (12.3.51) கூறுகிறது.
கலேர் தோஷ நிதே ராஜன் அஸ்தி ஹ்யேகோ மஹான் குண: கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய முக்த ஸங்க: பரம் வ்ரஜேத்
"சத்திய யுகத்தில் விஷ்ணுவை தவம் செய்து என்ன பலன் கிடைத்ததோ, திரேதா யுகத்தில் யாகம் செய்து என்ன பலன் கிடைத்ததோ, த்வாபர யுகத்தில் கோயில் கடவுள் வழிபாட்டில் என்ன பலன் கிடைத்ததோ, அதே பலனை கலியுகத்தில் ஹரி நாமம் ஒன்றை மட்டுமே ஜெபித்து முழுமையாகப் பெறமுடியும்." ஸ்ரீமத் பாகவதம் 12.3.52
கரிதே யாத் த்யாயதோ விஷ்ணும்
த்ரேதயம் யஜதோ மகை
த்வாபரே பரிசார்யாயம்
கலௌ தத் ஹரி கிர்டனாத்
இறை நாமம் இறைவனைவிட வலிமை மிகுந்தது. அனுமன் சீதையை கண்டுபிடித்ததும், இலங்கைக்குப் பாலம் கட்டியதும் இராம நாம மகிமையால் தான். ராமனை விட ராம நாமத்துக்கு வலிமை அதிகம். நாமாவில் இறைவனின் குணம், சக்தி, மகிமை, தத்துவம் அனைத்தும் அடங்கியுள்ளன. அதோடு கூட சொல்லின் சக்தியும் அதனுள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு பெயரிலும் உள்ள அட்சரங்களின் கோர்வையால் தோன்றும் ஒலி அற்புதமான தேவதா சைதன்யத்தை விழித்தெழச் செய்கிறது. நினைத்த உடனே பகவான் நம் பாவனையில் தோன்றி மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதனால் நாமத்தை உச்சரிக்கும்போது நம் பாவங்கள் அகன்று உள்ளத் தூய்மை ஏற்படுத்தி பக்தியையும் ஞானத்தையும் வளர்க்கிறது. முக்தியை அடைவதற்கு இதை விட எளிய வழி கிடையாது. இதில் எத்தனை முறை ஜபிக்கிறோம் என்ற எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதைவிட எவ்வளவு ஆழ்ந்து தியானிக்கிறோம் என்பதே முக்கியம்.
ஸ்ரீ சைதன்ய மகா பிரபு, ஸ்ரீ புரந்தரதாசர், ஸ்ரீ துக்காராம், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஆகியோர் பகவத் நாமத்தின் மகிமையை உணர்ந்தவர்கள், உலகுக்கு எடுத்துக் காட்டியவர்கள்.
ஸ்ரீ சைதன்ய மகா பிரபு ஸ்ரீமத் பாகவதத்தையும் பகவத் கீதையையும் பிரச்சாரம் செய்தார். இவர் குழந்தையாக இருக்கும்போது அழுதால் யாராவது கையைத் தட்டிக் கொண்டு இறைவனின் நாமங்களை சொன்னால் உடனே குழந்தை அழுகையை நிறுத்தி விடுமாம். அதனால் சில சமயம் இந்த அதிசயத்தைக் காண வேண்டுமென்றே குழந்தையை அழவைத்து பின் நாம சங்கீர்த்தனம் செய்து குழந்தை அழுகையை நிறுத்துவதைப் பார்த்து ஆவ்வூர் மக்கள் மகிழ்வார்களாம். இவர் விஷ்ணுவின் ஓர் அவதாரமாக கொண்டாடப் படுகிறார். இவரது அன்னை தன் மகனை நித்யானந்த சொரூபமாகவும் பலராமராகவும், ஸ்ரீ கிருஷ்ணராகவும் கண்டதாக கூறப்படுகிறது. ஏராளமான குணப்படுத்த முடியாத நோய்களால் பீடிக்கப்பட்டவர்களை இவர் குணப்படுத்தியதாக இவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களில் கூறப்பட்டுள்ளது. இவருடைய போதனைகள் ‘ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருத்’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
"ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே"
- கலி சந்தரன உபநிஷதம்(5;6)
உலகம் முழுதும் பிரபலமாக இருக்கும் 16 வார்த்தைகள் கொண்ட கீர்த்தனை இவர் வழங்கியதுதான். இந்த மந்திரத்தை யார் வேண்டுமானாலும் எப்பேர்பட்ட காலகட்டத்திலும் சொல்லலாம். இதற்கென்று எந்த ஒரு விதிமுறையும் கிடையாது. எல்லா நாட்டவரும், எல்லா இனத்தவரும், எல்லா வயதினரும், இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். கிருஷ்ணருடைய நாமத்தையும் புகழையும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் கிருஷ்ண உணர்வில் நிலைபெற்று, யோகத்தில் பூரணத்துவம் அடைவதால், அவர்களுக்கு பிறப்பு இறப்பென்னும் துன்பம் அகன்று விடுகிறது என்று ப்ருஹன்-நாரதீய புராணத்தில் கூறப்பட்டுள்ளது, கலி யுகத்தில் மக்கள் குறைந்த ஆயுளை உடையவர்கள், ஆன்மீகத்தில் மந்தம் இருக்கும், எப்பொழுதும் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டு துன்புறுபவர்களாக இருப்பார்கள். அதனால் இவற்றிற்கு நிவாரணம், ஹரியின் திருநாமத்தைச் சொல்வதுதான்.

ஸ்ரீ பக்த துக்காராம் மராத்திய கவிஞர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் இடைவிடா இறைநாம சந்கீர்த்தத்தினால் இறைவனே அவரை மோக்ஷத்துக்கு அவரை பூத உடலுடன் அழைத்துச் செல்ல கருட வாகனத்தை அனுப்பினார். கிராமத்து மக்கள் பார்த்து நிற்க அவர் வைகுண்டம் சென்றார். அவர் எப்பொழுதும் நாம ஸ்மரணையில் திளைத்து இருந்ததால் அவர் முகம் மிகவும் ஒளியுடன் விளங்கி அவரை பார்த்த அனைவருக்கும் அவர் போலவே இருக்க வேண்டும் என்று தோன்றி அவர் போலவே நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டனர். அபங்கம் என்ற ஒரு வகை நாம சந்கீர்த்தனத்தை பாடியவர் ஸ்ரீ பக்த துக்காராம். அபங்கம் என்றால் குற்றமில்லாதது. பங்கம் இல்லாதது. குற்றமில்லாதது ஆனந்தம். சிறு சிறு பாடல்கள் மூலம் இறைவனுடன் பேசுதல் என்றும் இதற்கு பொருள் சொல்லலாம். அபங்கங்களை பாடுவதற்கு மிகுந்த சங்கீத ஞானம் தேவை இல்லை. மஹாராஷ்டிர மாநிலத்தில் எளிய தொழிலாளிகளும், இந்தப் பாடல்களை பாடித் திளைக்கின்றனர். இதற்கு வேதமோ சாஸ்திரமோ ஏன் சிறிய ஸ்லோகங்களோ கூட தெரியவேண்டாம்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் குரு ஸ்ரீ ராமதாசர், உங்கள் பகுதியில் விட்டல் பக்தர் பக்த துக்காராம் இருக்கிறார். அவரைத் தரிசித்தாலே போதுமானது என்னை தேடி வந்து தரிசிக்க வேண்டாம் என்று ஒரு முறை சிவாஜியிடம் கூறியுள்ளார். ஸ்ரீ பக்த துக்காராம் ஒரு வேளை உணவுக்கே கஷ்டப்படுவதாகத் தெரிந்து பெரிய பெரிய தட்டுகளில் நவமணிகளையும், பொன்னையும் பொருளையும், 18 கிராமங்களை அவர் பெயருக்கு எழுதிய சாசனங்களையும் எடுத்துக் கொண்டு அவரை காணச் சென்றார் சிவாஜி. அப்போது தனது ஊர்த் திடலில், ஊர் மக்கள் பெரும் திரளாய் அமர்ந்திருக்க, தன்னை மறந்து ‘அபங்’ பாடிக்கொண்டு இருந்தார் பக்த துக்காராம். மன்னர் பரிவாரங்களுடன் வருவதைக் கண்ட மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் எழுந்து வழிவிட்டார்கள். ஆனால், பீடத்தில் அமர்ந்திருந்த துக்காராம் எழுந்திருக்கவும் இல்லை; வணக்கம் தெரிவிக்கவும் இல்லை. தொடர்ந்து பஜனை செய்துகொண்டே இருந்தார். சத்ரபதி சிவாஜியும் மக்களோடு மக்களாக அமர்ந்து பஜனையில் கலந்துகொண்டார். விட்டல் பஜனை முடிந்த பின் துக்காராம் கீழே வந்து மன்னரை வணங்கினார். இறை நாமங்களைக் கொண்ட ‘அபங்’ பாட அமர்ந்துவிட்டால், அது வியாஸ பீடமாகிவிடும். வியாஸ பீடத்தில் இருப்பவரே உயர்ந்தவர். அப்பீடத்தில் அமர்ந்திருக்கும்பொழுது வரன்முறைப்படி மன்னரே ஆனாலும், மரியாதை செலுத்த முடியாது. எனவே, தற்போது தான் வணக்கம் தெரிவிப்பதாக கூறினார். பொன், பொருள், தனம், சாசனங்கள் தனக்குத் தேவையில்லை என்றும் அன்றன்றைய உணவைத் தனக்கு அளிப்பவர் விட்டல்தான் என்றும் கூறி துக்காராம் சிவாஜி கொண்டு வந்ததை பெற மறுத்துவிட்டார். சிவாஜியிடம் ஏகாதசி விரதமிருக்குமாறும், துளசி மணிமாலை அணியுமாறும் கூறி, அதுவே தனக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும் என்றார்.
சங்கீத பிதாமகர், கர்னாடக இசையின் தந்தை, ஆதி குரு என்று அழைக்கப்படும் ஸ்ரீ புரந்தரதாசர், நாராயண நாராயண என்று சதா உச்சரித்துக் கொண்டு சஞ்சாரம் செய்யும் நாம ஸ்மரணைக்கு உதாரண புருஷராக இருக்கும் ஸ்ரீ நாரத பகவானின் அவதாரம். தனது பாடல்கள் மூலம் பக்தி மார்க்கத்தை பரவச் செய்தவர். இவ்வுலகில் அனைவரும் இறையின் ரூபம்தான் என்பதை சிந்தையில் கொண்டு வாழ்ந்து, அதை அனைவரும் அறியும் வண்ணம் பாடல்கள் புனைந்தவர். இவர் 475,000 கிருதிகளை செய்துள்ளதாக வாசுதேவ நாமாவளிய என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது 8000 தான் எஞ்சியுள்ளன. இவரின் பாடல்கள் தேவர் நாமாக்கள் என்று சொல்வர். இலகுவான மொழியில் உள்ள இவரின் பாடல்களின் நடை மிக எளிது. இவர் கீர்த்தனைகளில் வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம். இவர் பாடல்கள் கன்னடத்திலும் சமஸ்கிரதத்திலும் உள்ளன. ஒவ்வொரு பாடலும் புரந்தரவிடல என்று முடியும்.
தியாக பிரம்மம் என்று போற்றப்படும் இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் திருவாரூரில் பிறந்தவர். மிகச் சிறந்த ராம பக்தர். காஞ்சீபுரத்தில் இருந்து ஸ்ரீ இராமகிருஷ்ண யதீந்திரர் என்னும் மகான் வந்து இராம நாமத்தை 96 கோடி முறை ஜெபிக்கும் படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். இவர் அதனைத் தெய்வ வாக்காக எடுத்து அப்புனிதச் செயலை 21 ஆண்டுகளிற் செய்து முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 125,000 முறை இராமநாமத்தைச் ஜெபித்து வந்தார். இதனால் பல தடவைகள் இராம தரிசனத்தைப் பெறும் பாக்கியம் இவருக்குக் கிடைத்தது. ஸ்ரீ நாரத பகவான் ஒரு சந்நியாசி வேடத்தில் இவருக்குத் தரிசனமளித்து ஸ்வரார்ணம் என்ற சங்கீதக் கிரந்தத்தை கொடுத்து விட்டுப் போனார். தமக்குக் கிடைத்த அந்தக் கிரந்தத்தை ஆதாரமாகக் கொண்டு தியாகராஜர் சங்கீத இலக்கணங்கள் அமைந்த பல கிருதிகளை இயற்றினார். இவர் பல தலங்களுக்கும் யாத்திரைகள் சென்று அங்கங்கே பல கீர்த்திகளை இயற்றி வந்தார். வழியில் ஒரு தடவை இவர் திருடர்களிடம் அகப்பட்டுக்கொள்ள நேரிட்ட போது, இராம லக்ஷ்மணர்களே சேவகர்கள் வடிவில் வந்து திருடர்களை விரட்டி விட்டார்கள். இது போன்ற பல அற்புத நிகழ்ச்சிகள் இவர் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.
அனைத்து நாம ஜபங்களிலும் மிகவும் சக்தி வாய்ந்த நாமம், ‘ராம’ நாமம் ஆகும் என்கின்றனர் சான்றோர்கள். காஞ்சி மகா பெரியவாளும் ராம நாம மகிமையை பலமுறை எடுத்துரைத்திருக்கிறார். ஒருமுறை அவர் சொல்லிய ராம நாம மகிமை கதை வடிவாக:- பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை அலட்சியம் செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர், ‘இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார். அவனும் அப்படியே செய்தான். அவனும் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர். அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ’ஒரே ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய், அதற்காக, என்ன வேண்டுமோ கேள் என்றார். ராம நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே’ என்று கூறியிருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அதனால் அதற்கு விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ அதைத் தாருங்கள் என்றான். திகைத்த யமதர்ம ராஜா, ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம் என்றார். 'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா’ என்றான். இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.
இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது. பிரம்மதேவரிடம் கேட்போம் என்றார். யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர். அவரும் ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது, வைகுண்டம் போய் அந்த பரம்பொருளையே கேட்கலாம் என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று. அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, 'இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை’ என்றனர்.
'இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா’ என்று சொல்லி, பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான். 'தினமும் காலை, நாராயண நாமத்தையும், இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்’ என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள். அலட்சியமின்றி ஆண்டவன் நாமம் சொல்லி அவனருளாலே அல்லல்களை வெல்வோம்!
ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதி ஆவார். ராம நாம மகிமையை விளக்கும் நூல்களை உலகுக்குத் தந்தவர் அவர். தன் வாழ்நாளை ராமநாம ஜபத்திலும் ராம நாமத்தின் மகிமையை பரப்புவதிலும் செலவழித்தார். இவர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று:- அவரின் தீர்த்த யாத்திரயில் காசியிலிருந்து திரும்பும் வழியில் ஜகந்நாதர் கோவில் உள்ள புரியை அடைந்தபோது இருட்டிவிட்டது. ஸ்வாமிகள் தம் குருவான கவிஞர் லட்சுமிதரரின் வீட்டுக்குச் சென்றார். இரவில் எவரையும் தொந்தரவு செய்ய விரும்பாத ஸ்ரீபோதேந்திரர், அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டார். அப்போது அந்தணர் ஒருவர் பதற்றமாக வந்து லட்சுமிதரரது வீட்டுக் கதவைத் தட்டினார். லட்சுமிதரரின் மகன் லட்சுமிகாந்தன் கதவைத் திறந்து, அந்த அந்தணரை உள்ளே அழைத்து பாய் விரித்து அமரச் செய்தார். இரவில் தொந்தரவு செய்வதற்கு மன்னியுங்கள். எனக்கு ஒரு பிரச்னை!'' என்ற அந்தணர் தொடர்ந்து பேசினார்: ‘‘பல மாதங்களுக்கு முன் என் மனைவியுடன் காசி யாத்திரை போனேன். காசிக்குப் பக்கத்தில் ஓர் ஊரில் விடுதி ஒன்றில் தங்கினோம். காலையில் எழுந்து பார்த்தால் மனைவியைக் காணவில்லை. அவள் இல்லாமலேயே காசி யாத்திரையை முடித்துக் கொண்டு, அதே விடுதியில் வந்து தங்கினேன். அவள் நினைவு என்னை வாட்டி எடுத்தது. மறு நாள் நதியில் குளிக்கும்போது ‘ஸ்வாமி’ என்று என் மனைவியின் குரல். நிமிர்ந்து பார்த்தால், பயங்கரத் தோற்றத்துடன் ஒரு கரிய உருவம். அந்த உருவம், ‘ஸ்வாமி! விடுதியில் சில கயவர்கள் என்னைக் கடத்திச் சென்று நாசம் செய்து விட்டனர். உண்ணாமல், உறங்காமல் உடல் நலம் கெட்டு இந்த உருவில் வாழ்ந்து வருகிறேன். இன்று தங்களைக் காணும் பாக்கியம் பெற்றேன். என்னை அழைத்துச் செல்லுங்கள். இனி, தங்கள் அருகிலேயே இருந்து தாங்கள் இடும் பணிகளை செய்ய ஆசைப்படுகிறேன்!' என்றாள். (பயங்கர உருவம் என்பதுஒரு உவமை என்றே கொள்ள வேண்டும், அவள் அந்நியர்களால் மானப் பங்கப் படுத்தப்பட்டு அவர்களிடம் இருந்து தப்பித்து வந்திருந்தாள் என்பது என் தனிப்பட்ட கருத்து.) அவள் மீது தவறு இல்லை என்று அழைத்து வந்து விட்டேன். இதற்குப் பரிகாரம் சொல்லுங்கள்!'' என்றார். லட்சுமிகாந்தன், ‘‘அந்தணரே ராமா என்று மூன்று முறை தங்கள் மனைவியைச் சொல்லச் சொல்லுங்கள். சரியாகிவிடும்!'' என்றார். லட்சுமிகாந்தன் சொன்னதைக் கேட்டு அறைக்குள் இருந்த அவர் தாயார், ‘‘ராம நாமத்தை பக்தியுடன் ஒரு முறை சொன்னாலே குறை நீங்கிவிடும் என்று உன் தகப்பனார் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீ ஏன் மூன்று முறை கூறச் சொல்கிறாய்?'' என்றார்.
இந்த உரையாடலைச் செவிமடுத்தவாறே ஸ்ரீபோதேந்திரர் அந்த வீட்டுக்குள் நுழைந்தார். அவரை அடையாளம் கண்டுகொண்ட லட்சுமிகாந்தன் அவர் காலில் விழுந்து வணங்கினார். ஸ்வாமிகள் லட்சுமிகாந்தனிடம், ‘‘அந்தணருக்குத் தாங்கள் கூறிய பரிகாரத்துக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?'' என்று கேட்டார். உடனே லட்சுமிகாந்தன் தன் தகப்பனாரால் எழுதப்பட்ட, நாம கௌமுதி என்ற நூலை ஸ்வாமிகளிடம் தந்தார். ஸ்வாமிகள் அதைப் படித்துப் பரவசம் அடைந்தார். ‘‘இந்த நூலில் ராம நாம மகிமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட இந்தப் பரிகாரம் ஒரு சோதனையாக இருக்கட்டும். இந்த அந்தணரின் மனைவி இங்குள்ள புஷ்கரணியில் மூழ்கி, ராம நாமத்தைக் கூறி பழைய உருவத்தை அடையட்டும்!'' என்றார். அதன்படி மறு நாள் காலையில் அந்தப் பெண் புஷ்கரணியில் மூழ்கி எழுந்து, ‘‘ராமா’’ என்று ஒரு முறை கூறியதும், பழைய உருவம் பெற்றாள். அவள் முகத்தில் மங்களகரமான குங்குமப் பொட்டு பிரகாசித்தது. அனைவரும் இந்த அதிசயம் கண்டு மகிழ்ந்தனர். ஸ்ரீபோதேந்திர ஸ்வாமிகள் அந்தப் பெண்ணின் கையால் பிட்சை பெற்று, தம்பதியை ஆசீர்வதித்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
கும்பகோணம், மயிலாடுதுறை சாலையில், ஆடுதுறைக்கும் திருவிடைமருதூருக்கும் இடையே கோவிந்தபுரம் கிராமத்தில் ஸ்ரீபோதேந்திரரின் பிருந்தாவனம் இருக்கிறது. இன்றளவும் ஸ்ரீ போதேந்திராள் சுவாமிகள் பிருந்தாவனத்தில் ராம என்கிற நாம் ஜபம் காதில் விழுவதாக நிறைய ஜபம் செய்தவர்கள் அனுபவமாக உள்ளது.
ராம நாமம் ஒன்றுக்கே தாரக மந்திரம் என்கிற சிறப்புப் பெயர் உண்டு. தாரக என்ற சொல்லுக்கு படகு அல்லது மோட்சம் அளிக்க வல்லது என்று பொருள். ராம நாமத்தால் மட்டுமே இந்த சம்சார கடலிலிருந்து நம்மை கரை சேர்க்க முடியும் என்பதால், இது தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. ராம நாமத்தை ஜெபிப்பதாலேயே கடவுளின் ஆயிரம் நாமங்களை ஜெபிப்பதின் புண்ணியம் கிடைக்கிறது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் இந்த உண்மையை விளக்கி இருக்கிறார். (“சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே“) வழிப்பறியில் ஈடுபட்ட ரத்னாகரன், ரிஷி நாரதரின் உபதேசத்தின் மூலம் வால்மீகி முனிவராக மாறி ஆதிகாவியமான இராமாயணத்தை எழுதினார். தன் பாபச்சுமையால் ராம நாமத்தை சொல்ல முடியாததால் நாரதர் அவருக்கு (‘மரா மரா’) என்று உபதேசித்து அதனைச் தொடர்ந்து சொல்லுமாறு கட்டளை இட்டார். ராம நாமத்தைத் தவறாக உச்சரித்தும் கூட ரத்னாகரன் வால்மீகி முனிவராக மாற முடிந்தது.
இலங்கை செல்ல வானர சேனை பாலம் அமைத்த போது, இராமன் என்று பெயர் எழுதிய பாறைகள் கடலில் மிதந்தன. அதைக் கண்ட ராமன் தானே ஒரு பாறையை கடலில் எறிய அது மூழ்கியது. எனவே ராமனை விட ராம நாமம் மிகச் சிறந்தது. இந்த காரணத்தால் தான் ராமபக்த ஹனுமான் ராமன் வைகுண்டம் சென்ற பிறகு அவனைப் பின்தொடர்ந்து செல்லாமல் இப்பூவுலகில் தங்கி அவன் நாமத்தைப் பாடிக் கொண்டு இங்கேயே வசிக்கிறார். மற்ற நாமங்களை காட்டிலும் ராம நாமம் சொல்லவும் எழுதவும் மிக எளிது. பக்தர்களில் சிலர், ஜெபிப்பதை விட நாமத்தை எழுத விரும்புவார்கள். அவர்களுக்கு ராம நாமம் அனைத்து மொழிகளிலும் எழுத லகுவாக இருக்கிறது. காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது ) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
இன்ன நாமம் தான் என்றில்லை. நம் இஷ்ட தெய்வத்தின் நாமத்தை இடைவிடாது ஜெபித்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். எப்படி வால்மீகிக்கு மரா மரா என்று சொல்லியே இறைவனின் அருள் கிட்டியதோ அது போல நாம் ஒரு முகச் சிந்தனையோடு நல்ல மனத்துடன் எந்த நாமத்தை சொன்னாலும் அது நன்றே. பூந்தானம் என்பவர் ஓர் ஏழைப் பாமரர். அவர் குருவாயுரப்பன் மேல் இயற்றிய ஞானப்பானை என்ற மலையாள தத்துவ பக்திக் கவிதைகளை ஸ்ரீமத் நாராயணீயம் என்ற உன்னத காவியத்தை இயற்றிய நாராயண பட்டத்திரியிடம் எடுத்து சென்று, பிழைகளை திருத்தித் தரச் சொன்னார். தெய்வீக மொழியான சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட சுலோகங்களையே பகவான் விரும்புவார் என்றும் நாட்டு மொழியான மலையாளக் கவிதைக்கு செவி சாய்க்க மாட்டாரென்றும் சொல்லி மறுத்து விட்டார் பட்டத்திரி. நாராயண பட்டத்திரி பூந்தானத்தை, பாமரர் என்று அலட்சியப்படுத்த மனம் வருந்திய பூந்தானம் குருவாயூரப்பனிடம் முறையிட்டார். எப்பொழுதும் பட்டதிரி ஒரு சுலோகம் இயற்றியதும் அதைக் கேட்டு பகவான் காட்சி தருவதும் வழக்கம். அன்று இயற்றிய சுலோகத்தைப் பாடிய பின்னும் பகவான் பிரத்யட்சமாகாமற் போகவே வேதனைப்பட்டார் பட்டதிரி. மனமுருகி வேண்டிய பிறகு குருவாயூரப்பன் காட்சியளித்தாராம். பூந்தானம் என்று ஒரு பக்தன் மலையாளத்தில் இயற்றிய கவிதை கேட்டு மயங்கி நின்றதில் பட்டதிரிக்கு காட்சியளிக்க தாமதமாகி விட்டது என்று விளக்கினாராம் கண்ணன். இவ்வளவு நடந்தும் தானே பக்தியில் கவிதை புனைவதில் பெரியவன் எனும் எண்ணம் பட்டத்திரியிடம் மிகுதியாக இருந்தது.
பூந்தானம் பட்டத்திரியை குருவாகவே பார்த்தார். பூந்தானம், கிருஷ்ணரை எப்படி மனதால் எந்த உரு கொண்டு வணங்க வேண்டும் கண்ணனின் முழு வடிவத்தை தியானிக்க முடியாமல் சிரமப்படுகிறேன். நல்லதொரு வழியை காட்டுங்கள் என பணிவோடு ஒரு சமயம் கேட்டார். பட்டத்திரி எந்த வேடத்திலும் நீங்களும் வணங்கலாம். ஏன் கருமையான எருமை உரு கொண்டும் வணங்கலாம் என கூற பூந்தானம். அன்றிலிருந்து தினந்தோறும் கண்ணனை எருமைமாடு வடிவத்தில் மனதுள் இருத்தி தியானிக்க ஆரம்பித்தார். அவருடைய தீவிரமான தியானத்தால், அவருக்கு, எருமை மாடு வடிவத்திலேயே காட்சி கொடுத்தார், கண்ணன்.
ஒரு நாள் குருவாயூரில் திருவிழாக் காலம். கண்ணக் கடவுள் உற்சவ மூர்த்தியாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். பக்தர்களோடு பக்தர்களாக நாராயண பட்டதிரியும் பூந்தானமும் முன்வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். உற்சவ மூர்த்தியைத் தோளில் சுமந்திருந்த அன்பர்கள் பல்லக்கை வெளியே கொண்டுவர முனைந்தார்கள். கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ ஏதோ இடித்தது. எங்கே எது இடித்துத் தடுக்கிறது என்று பல்லக்குத் தூக்கியவர்கள் ஆராய்ந்தார்கள். அவர்கள் கண்ணுக்கு ஒன்றும் புலப்படவில்லை. அப்போது பட்டதிரியின் அருகே நின்றிருந்த பூந்தானம் பரபரப்படைந்தார். கொஞ்சம் சாய்த்துப் பல்லக்கை எடுங்கள். மேலே எருமை மாட்டின் வாலாலோ, உடலாலோ எந்தப் பிரச்னையுமில்லை. கொம்புதான் முட்டுகிறது என்றார். அப்போது மூல விக்ரகத்துக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் ஓடோடி வந்தார். உற்சவ விக்கிரகத்தைப் பார்த்துப் படபடவெனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். பிறகு சொல்லலானார்.
“”நான் அர்ச்சனை செய்துகொண்டே இருந்தபோது குருவாயூரப்பனின் மூல விக்ரகம் திடீரென ஒரு மகிஷமாக (எருமை) மாறியது. தன் எருமைக் குரலில் “”என் பக்தன் பூந்தானம் என்னை, நாராயண பட்டத்திரி சொன்ன அறிவுரைப்படி, எருமை வடிவில் தியானம் செய்கிறான். அதனால் தான் உனக்கு இந்தக் காட்சி கிட்டியிருக்கிறது. உற்சவ மூர்த்தியைச் சுமந்து செல்பவர்களிடம் இதைத் தெரிவி என எனக்கு உத்தரவிட்டார்!
என்றார். பூந்தானம் சாதாரண பக்தரல்ல. அவர் கடவுளைக் கண்ட மகான்!” என்று கூறி அர்ச்சகர் பூந்தானத்தின் கால்களில் கண்ணீர் பெருக விழுந்து வணங்கினார்.
இதையெல்லாம் கவனியாத பூந்தானம், ஒரே ஒரு கொம்புதான் மேலே இடிக்கிறது. இன்னொரு கொம்பு இடிக்கவில்லை. விரைவில் உற்சவ மூர்த்தியை வெளியே கொண்டு வாருங்கள்!” என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்! அவர் சொன்னபடியே சாய்த்து எடுத்துவந்தவுடன் பல்லக்கு எளிதாக வெளியே வந்துவிட்டது. மறுகணம் தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. எல்லோரும் கேட்கும் வகையில் உற்சவ விக்கிரகத்திலிருந்து “ம்மா!’ என்ற எருமை மாட்டின் கம்பீரக் குரல் எழுந்து அந்தப் பகுதியெங்கும் எதிரொலித்தது! எருமை மாட்டு வடிவில் கண்ணனைக் காணாவிட்டாலும் அந்த சப்தத்தைக் கேட்ட பட்டத்திரி மெய்சிலிர்த்தார். கண்களில் கண்ணீருடன் உற்சவ மூர்த்தியை வணங்கியவர், தான் சொன்னதை மனப்பூர்வமாக ஏற்று எருமை வடிவில் கண்ணனைக் கண்ட மகான் பூந்தானத்தின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.“”படிப்பால் என்ன பயன்! பக்தியல்லவா முக்கியம்! ஏராளமான விஷயங்களைத் தெரிந்துகொண்டதற்காக பகவான் காட்சி கிடைத்துவிடுமா என்ன! உள்ளார்ந்த பக்திக்கல்லவோ என் கண்ணன் உருகுவான்!
என்றார் பட்டத்தரி. பகவான் கருணையின் இருப்பிடம். 'யத் பாவம் தத் பவதி'. நாம் நினைக்கும்படி நமக்குக் காட்சி தருவான்.
பஜனை என்பது பகிர்வு எனப் பொருள்படும். நாம சந்கீர்த்தனத்தின் ஓர் அங்கம். ஒரே இறை நாமத்தை பல முறை வெவ்வேறு ராகத்தில் ஏற்ற இறக்கத்தோடு பாடுவது, சமய கருத்துகள் அல்லது ஆன்மீக சிந்தனையுடன் பாடும் பாடல்களை இது குறிக்கிறது. பஜனை என்பது இசை மற்றும் கலைகளின் ஒரு வகையாகும். இதனைப் பாடுவதற்கு எவ்விதமான விதிமுறைகளும் இல்லை. இந்து சமயத்தில் பக்தியை வளர்ப்பதற்காகப் பாடும் இசை வகை இது. நாம ஸ்மரணையின் ஓர் அங்கம். இது ஒரு விதமான கூட்டுப் பிரார்த்தனை முறை. தனித்து இறைவன் பெயரை சொல்ல நமக்கு முடியவில்லை என்று நினைப்பவர்களுக்கு அல்லது பிறரோடு சேர்ந்து பாடுவதில் மகிழ்ச்சி கிடைப்போருக்கு இந்த பஜனை முறை கைகொடுக்கும். குழுவோடு சேர்ந்து இறைவன் பெயர்களை திரும்பத் திரும்ப இசையுடன் சேர்ந்து பாடுவது மனத்துக்கும் இனிமை ஆன்மாவுக்கும் உணவு.
சதம் விஹாய போக்தவ்யம் சஹஸ்ரம் ஸ்நானமாசரேத் |
லக்ஷம் விஹாய தாதவ்யம் கோடி த்யக்த்வா ஹரி பஜேத் ||
நூறு விஷயங்களை விட்டு விட்டு ஒருவன் தன் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயிரம் விஷயங்களை விட்டு விட்டு ஒருவன் குளிக்க வேண்டும். லக்ஷம் விஷயங்களை விட்டு விட்டு தானம் கொடுக்கச் செல்ல வேண்டும். ஒரு கோடி விஷயங்களை விட்டு விட்டு ஹரி பஜனைக்குச் செல்ல வேண்டும் என்கிறது ரிக் வேதம்.
கூட்டுப் பிரார்த்தனை செய்வது உடலுக்கு நல்லது. சுவீடனிலுள்ள கோதன்பர்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியின்படி எல்லோரும் கூட்டாக சேர்ந்து உரத்த குரலில் பாடுவது இருதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் ஒழுங்குபடுத்துகிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். இத்தகவல் லண்டன் மெட்ரோ பத்திரிக்கையில் 2013 ஜூலை 9ஆம் தேதி செய்தியாக வந்திருந்தது. பாடுவதே நல்லது. அதிலும் கூட்டாகப் பாடுவது இன்னும் நல்லது என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். விஞ்ஞானிகள் ஒரு தொண்டர் குழுவை அமைத்து மூன்று வகையான வெவ்வேறு பாடும் பணியைக் கொடுத்தனர். முதலில் தனித் தனியே வாயை மூடிக்கொண்டு குரல் எழுப்பச் சொன்னார்கள் (ஹம் செய்வது அல்லது ரீங்காரம் செய்வது). இதற்கு அடுத்த படியாக ஒரு துதிப் பாடலைப் பாடச் சொன்னார்கள். கடைசியாக ஒரு மந்திரத்தை மெதுவாகச் ஜெபிக்கச் சொன்னார்கள். ஒவ்வொரு முறையும் குழுவின் நாடித் துடிப்பும் இருதயத் துடிப்பும் கணக்கெடுக்கப்பட்டது. அப்போது இருதயத்தின் செயல் பாட்டுக்கும் பாடும் முறைக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை நேரம். இறைவன் விழித்தெழும் சமயம் என்பதால் தேவர்கள் முன்கூட்டியே எழுந்து இறைவனை திருப்பள்ளி எழுச்சி செய்யத் தயாராகும் காலம் அது. அந்த சமயத்தில் சுவாமியை புகழ்ந்து பாடி வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம் நோய் நீக்கி குடும்பத்தில் செல்வத்தை பெருக வைப்பர் என்பது ஐதிகம். அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கடவுள் திருநாமங்களைச் சொல்லி பஜனை செய்திடும் பழக்கத்தை ஏற்படுத்தப்பட்டது. திருப்பாவை திருவெம்பாவை இரண்டும் மார்கழி மாத விடியலில் கோஷ்டியாக சொல்லப்படும் பாசுரங்கள் ஆகும்.
மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ரஹம் கி³ராமஸ்ம்யேகமக்ஷரம் |
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தா²வராணாம் ஹிமாலய: ||
பகவத் கீதை 10- 25||
மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் இமாலயம். என்கிறார் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில். அத்தனை பெருமை மிக்கது நாம ஜபம். பிறவி சுழற்சியிலிருந்து விடுபட விஷ்ணு சகஸ்ரநாமத்தை ஜெபித்தால் நல்லது என பீஷ்மர் கூறுகிறார். ஆதிசங்கரர் இயற்றிய பஜகோவிந்தம் பாடலில் 27வது ஸ்லோகத்தில் பகவத் கீதை மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமத்தை அன்றாடம் படிப்பவர்களுக்கு லக்ஷ்மி நாராயணர் அருள் கிடைக்கும் என்கிறார். பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் தனது திருப்பெயர்களையும் கல்யாண குணங்களையும் சிந்தித்தவர்கள் மனதில் நிறைவதாக கூறுகிறார்.
ஒவ்வொரு யுகத்திலும் நம்முடைய ஆன்மாவிற்கு உணவளிக்கும் முறை சற்று வேறுபடும். துக்காராம் ஒரு அநுபூதிமான். அவர் பகவானுக்கும் மக்களுக்கும் சேவை செய்து வந்தார். பகவானின் திவ்ய நாமப் பெருமையை அவர் பலமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். ஒரு முறை அவர் பக்கத்து வீட்டில் வசித்தப் பெண்களுக்கிடையே பெரிய சண்டை மூண்டது. அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் ஒன்றாக வறட்டி தட்டினார்கள். அவை உலர்ந்த பின்பு எல்லாம் ஒன்றாக கலந்து விட்டன. யாருடையது எவ்வளவு என்று தெரிந்து கொள்ள முடியாமல் சண்டை வந்து விட்டது. இதைப் பார்த்த துக்காரம் தான் அதை பிரித்துக் கொடுப்பதாகக் கூறினார். குவிக்கப்பட்ட வறட்டிகளை காதின் அருகே வைத்துக் கேட்டபின் இரண்டு பிரிவாகப் பிரித்தார். பின் அவர்களைப் பார்த்து அம்மா, நீங்கள் இருவரும் வறட்டி தட்டும்போது விட்டல விட்டல என்று கூறி தட்டியது யார் என்று கேட்டார். நாமம் சொல்லி வறட்டி தட்டிய அப்பெண் முன் வந்து தான் தட்டியதாகக் கூறினால். இடப் பக்கம் குவியல் அவளுடையது, வலப் பக்கக் குவியல் இன்னொரு பெண் உடையது என்று தீர்ப்பு வழங்கினார். இது எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்ட கூடியிருந்தோரிடம் நாம் இறைவனின் திருநாமம் சொல்லும்போது நாம அலைகள் சுற்றுப்புறம் முழுவதும் பரவும், நாம அதிர்வுகள் இந்த வறட்டியில் உள்ளன. அதை வைத்துக் கண்டுபிடித்தேன் என்று கூறினார். நாம ஜபம் செய்ய இடம் பார்க்க வேண்டியதில்லை, நேரம் பார்க்க வேண்டியதில்லை. அது நம்மையும் தூய்மைப் படுத்தி நம்மை சுற்றியுள்ள இடத்தையும் தூய்மைப் படுத்துகிறது.

துருவன், பிரஹ்லாதன் அனைவரும் நாம ஸ்மரணை செய்த பக்தர்கள். ஸ்ரீ ரமண மஹர்ஷி 16 வயதில் மௌனமான சாதனை ஆரம்பித்தவர்.
ஸ்ரீ துளசிதாசர் ராம நாம ஜெபத்தின் மகிமை கூறும்போது"ரா" என்ற எழுத்து சொல்லும் போது பாபங்கள் வெளி ஏறி விடும். "ம் " சொல்லும் போது மீண்டும் பாபங்கள் வராது, ராம்,ராம் என்றாலே இறைவனருள் கிட்டும் என்கிறார். இறைவனின் நாம ஜபம் உள்ளும் புறமும் ஒளி தரும் என்பார் துளசிதாசர்.
ஸ்ரீ கபீர்தாஸ் ராமநாமத்தை உச்சரிப்பதை மேன்மையாக கருதுபவர். அவர் ராமர் என்றாலே கடவுள் என்ற பொருள் கொண்டவர். ராம நாமத்தின் மகிமை பற்றி குரு ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் கூறி இருக்கிறார். ஸ்ரீ ராம நாமம் முக்திக்கு வழி. பலகோடி மந்திரங்களின் பலனை இந்த ராம நாமம் அளிக்கும். மனதை தூய்மை செய்யும் மந்திரம் ராம மந்திரம் என்று கூறியிருக்கிறார். ஏகாதசி அன்று விரதம் இருந்து நாள் முழுக்க ராம நாமம் ஜெபம் செய்வார் குரு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள். அதனால் இன்றும் ஏகாதசி அன்று குரு ராகவேந்திர சுவாமிகளுக்கு ஆராதனை மற்றும் அலங்காரம் கிடையாது. தனது மனதில் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு இடம் அளித்திருந்தார் குரு ராகவேந்திர ஸ்வாமிகள். அதை நிரூபிக்கும் விதமாக அவரது படங்களில் ஸ்ரீராமர் உருவம் குரு ராகவேந்திர சுவாமிகளின் மார்பில் இருப்பதை காணலாம்.
ஸ்ரீ அருணகிரிநாதர் இறைவனால் தடுத்தாட் கொண்டு 'சும்மா இரு சொல் அற' என்ற உபதேசம் பெற்று ஐம்புலன்கள் அடக்கி தவம் செய்து திருப்புகழ் அம்ருதம் படைத்தவர்.நந்தனாரின் பக்தி, மீரா, ஆண்டாள், கண்ணப்பர் போன்றோர் பக்திமட்டும் தெரிந்தவர்கள் . எனவே நாம ஜபம் கலியுகத்தில் இன்னல் களைந்து நன்மைதரும் என்பதற்கு இவர்கள் அனைவரின் செயல்பாடுகளில் இருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.

இறைவனுடைய திருப்புகழைப் பாடுவதுகுறித்து வள்ளுவர் பின்வருமாறு கூறுகிறார்:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவனுடைய மெய்மை சேர்ந்த புகழைச் சொல்லிக் கொண்டிருப்பவனிடத்து, அறியாமையாகிய இருளைச் சேர்க்கின்ற இருவகை வினையும் சேராது.” (திருக்குறள் 5) ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் நாம் ஈடுபட்டால், நல்வினை, தீவினை என்னும் இரு வினைகளிலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த இருவகையான வினைகளே அறியாமை என்னும் ஜட வாழ்வினை நமக்குக் கொடுக்கின்றன.
ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ
நாஸ்த்யேவ கதிர் அன்யதா
சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்த கலி யுகத்தில் முக்தியைப் பெற ஒரே வழி பகவான் ஹரியின் நாமத்தை உச்சரிப்பது மட்டுமே. இதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை, வேறு வழியில்லை.”
இந்த கரோனா காலத்தில் நாம் எந்தக் கோவிலுக்கு செல்ல முடியும்? எந்த உத்சவத்தை நேரில் காண முடியும்? வீட்டில் உள்ளவாறு நாம ஜபம் செய்வது இந்த இழப்பை ஈடு கட்டும். அது மட்டுமல்லாமல் கோவில் சென்று உத்சவத்தில் இறைவனை தரிசித்து மகிழும் புண்ணியத்தை அதற்கு இணையாகவும் அதற்கு மேலும் நமக்கு அளிக்கும். நம் மனமே ஆலயம். அந்த இறைவனை உள்ளத்தில் இருத்தி இடைவிடாது நாம ஜபம் செய்து வணங்கலாம். ஜப மாலை கூட அவசியம் இல்லை. அதே போல நோய்வாய் பட்டிருப்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள் இறைவனை இருந்த இடத்தில் இருந்து தொழ மிக எளிய வழி நாம ஜபம். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான். பள்ளி படிப்பின் பளு அதிகமுள்ள இக்காலத்தில் குழந்தைகளும் நாம ஸ்மரணை செய்து மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். சின்ன வயது முதலே இந்தப் பழக்கத்தை நாம் ஏற்படுத்தினால் பின்னாளில் அவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும். நம் வீட்டு பூஜை அறையின் முன் விளக்கேற்றி நாம ஜபம் செய்யலாம். படுத்தபடி கூட நாம் ஜெப செய்யலாம். எந்தத் தவறும் இல்லை. நமது அகங்கார, மமகாரங்களை, அதாவது, நம்மிடமுள்ள எல்லா வகை ஆணவங்களையும், பற்றுகளையும் இந்த நாம ஜபம் விரட்டி விடும். கடவுளிடத்தில் நமக்கு உண்மையான அன்பு உதிக்கச் செய்யும்.
காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய நாமம் ஹரி. ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி வாசுதேவ ஹரி என்று சொல்லி நாம் கண் விழித்தால் அந்த நாள் இனிய ஆசீர்வதிக்கப்பட்ட நாள். வெளியே செல்லும்போது சொல்ல வேண்டிய நாமம் கேசவ. கேசவா கேசவா கேசவா என்று மும்முறை சொல்லிவிட்டு கிளம்பினால் வெற்றி நிச்சயம். உண்ணும் முன் சொல்ல வேண்டிய நாமம் கோவிந்தா. உறங்கும் முன் சொல்ல வேண்டிய நாமம் மாதவா.
தினம் பத்து நிமிடம் என்று ஆரம்பித்து நாம ஜபம் செய்யும் நேரத்தை அதிகரிக்கலாம். மற்ற செயல்கள் செய்யும்போதும் மனம் நாமத்தை ஜெபித்துக்கொண்டே இருக்க நாம் பழகிக் கொள்ளலாம். (அந்த வறட்டி தட்டிய பெண் போல) நமது வாழ்க்கையில் பலன்கள் மீது பற்று வைக்காமல் செயல்களை மட்டும் கவனமாக செய்ய இந்தப் பயிற்சி மிக உதவியாக இருக்கும். இநதப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால் ஆனந்தமும் மன நிம்மதியும் உருவாகுவதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.

ஹீரா ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
*லண்டன் சுவாமிநாதன் அவர்களின் பிளாக் பதிவில் இருந்து.
https://www.facebook.com/Sriragavendrar/photos/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/2015792372080132/
Comments