மகாலட்சுமி தாயார்
- Anbezhil
- Feb 10, 2021
- 7 min read
Updated: Aug 20, 2021
பெண்களுக்கு ஏற்றம் பிறப்பினாலே, அவர்கள் குடிபுகுந்த வீட்டினாலே, மேலும் அவர்களுக்கே இயல்பாக இருக்கக் கூடிய குணங்களாலே. மகாலட்சுமி தாயார் ஒரு பெண். அந்தத் தாயாரின் பிறப்பின் பெருமை அதாவது அவர் தோற்றம், அவதாரப் பெருமை, மகிமை என்ன தெரியுமா? பாற்கடலில் அவதாரம் செய்தார் மகாலட்சுமி. அம்ருதத்தை பெறுவதற்காக பெருமாள் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வதை விட மகாலட்சுமியை பெறவே அவர் பாற்கடலை கடைந்தார் என்று சொல்வது தான் சரி. அம்ருதம் சக்கை மாதிரி. தாயார் தான் சாரம். தாயார் தோன்றினார், எல்லாரும் பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவர் பெருமாளின் திருமார்பில் போய் நிலையாக தங்கிவிட்டார். தாயாரின் பிறப்பின் பெருமை அத்தகையது! ஜனகர் யாகத்துக்காக நிலத்தை உழும்போது நிலத்தில் கிடைத்தவள் தாயார் சீதாப்பிராட்டி. பெருமாளுடைய அவதாரத்தைக் காட்டிலும் தாயாருடைய அவதாரம் மிகச் சிறந்ததாகும். பெருமாளாவது சில சமயம் தேவகி கௌசல்யா இவர்களின் பிரார்த்தனைக்கு இணங்க அவர்களின் கர்ப்பத்தில் வாசம் செய்தார். ஆனால் தாயார் அப்படி இல்லை. அயோனிஜையாகப் பிறந்தாள். அது தான் தாயாரின் மிகப் பெரிய ஏற்றம். பிருகு மகரிஷி பிரார்த்தித்தார் என்று குடந்தையில் பொற்றாமரை குளத்தில் அவதரித்தார். அதே மாதிரி பிருகு மகரிஷி பிரார்த்தனைக்கு இணங்க காஞ்சியில் பொற்றாமரை குளத்தில் பெருந்தேவி தாயாராக அவதரித்தார். திருத்தங்கா என்ற தூப்பிலிலும் லக்ஷ்மி சரஸ் என்ற குளத்தில் தான் அவதாரம் செய்தார். பாற்கடலில் இருந்தும் குளங்களிலும் இருந்தும் யாக பூமியில் இருந்தும் தான் தாயார் அவதாரம் செய்துள்ளார்.

ராவணன் மாரரீசனிடம் சீதையை களவாட உதவி புரிய வேண்டும் என்று கேட்கிறான். அப்பொழுது மாரீசன் சொல்கிறான். நீ ராமனை குறைவாக எடை போடாதே அவனுடன் கூட சீதை இருக்கிறாள். அவளின் சக்தி கணக்கில் அடங்காது அவர்களுக்கு நடுவில் வந்தால் நீ பொசுங்கி போய் விடுவாய் என்று கூறுகிறான். அப்பேற்பட்ட பெருமை தாயாருக்கு. எந்த இடத்தில் துளசி காடுகள், தாமரை காடுகள, வைஷ்ணவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பெருமாள் வசிக்கிறார். தாயாரோ பெருமாளின் திருமார்பில் வசிக்கிறார். தன்னுடைய நிரந்தர வாசஸ்தலமாக எம்பெருமானின் திருமார்பை ஏற்றுக் கொண்டார் மகாலட்சுமி. தாயாரின் மனத்தில் பெருமாள் என்றும் இருந்து கொண்டிருக்கிறார். அதனால் இருவரும் என்றும் பிரியாமல் இருக்கிறார்கள்.
அடுத்து அவர் பெருமை - மூன்று லோகங்களுக்கும் அதிபதி தாயார். ஸ்ரீவைகுண்டமும் தாயாரின் ஐஸ்வர்யம் தான். அத்தனை கல்யாண குணங்களும் கொண்டு திகழ்பவர் மகாலக்ஷ்மி தாயார். அவளின் கண்கள் கருணையே உருவெனக் கொண்டவை. அவளின் திருமுகம், எப்போதும் சாந்தமாகவே இருக்கிறது. அகில உலகத்துக்கும் அன்னையான அவள் நல்லுள்ளம் கொண்டவர்களின் இல்லங்களுக்குச் செல்வதையே விரும்புகின்றாள். எந்த வீட்டில், கெட்ட வார்த்தைகள் பேசப்படுகிறதோ அங்கே மகாலக்ஷ்மி வருவதே இல்லை என்கிறது சாஸ்திரம். ‘பொண்ணு மகாலக்ஷ்மி மாதிரி இருக்காப்பா’ என்று சொல்லுவார்கள். இதற்கு அர்த்தம், மகாலக்ஷ்மி போல் அழகுற அமைந்திருக்கிறாள் என்பது மட்டுமல்ல மகாலக்ஷ்மியிடம் இருக்கிற நற்குணங்கள் யாவும் அப்பெண்ணிடம் பொதிந்திருக்கின்றன என்று பொருள்.
மகாலட்சுமி தாயார் பத்மாசனத்தில் அமர்ந்து சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவர். மகாலட்சுமியின் உருவம், சின்னங்கள் மற்றும் சிற்பங்கள் குறியீட்டுடன் குறிப்பிடப்படுகின்றன. குறிக்கோளை அறிந்து கொள்வதற்கும், குறிக்கோளைப் புரிந்துகொள்வதற்கும் சமஸ்கிருத மூல சொற்களிலிருந்து அவரது பெயர் உருவானது. இந்து மதத்தில் நல்லதாகக் கருதப்படும் மனிதகுலத்தின் நான்கு குறிக்கோள்களின் அடையாளமாக அவரது நான்கு கரங்களும் உள்ளன: தர்மம் (தார்மீக, தார்மீக வாழ்க்கையைப் பின்தொடர்வது), அர்த்த (செல்வத்தைப் பின்தொடர்வது, வாழ்க்கை முறைகள்), காமா (அன்பைப் பின்தொடர்வது, உணர்ச்சிபூர்வமான பூர்த்தி), மற்றும் மோட்சம் (சுய அறிவின் நாட்டம், விடுதலை. கருடவாகனத்தில் ஆரோகணித்து பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவர். பரமேஸ்வரி என விளங்குபவர். பெரும் பாவங்களைத் தொலைப்பவர். யோக நிலையில் தோன்றி யோக வடிவாகத் திகழ்பவர். அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவர். மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவர், மந்திரங்களின் வடிவாகத் திகழ்ந்து உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவர். அனைத்து வரங்களையும் அளிப்பவர். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்கி எல்லா துக்கங்களையும் தீர்ப்பவர். அதனால் அவருக்கு பிறப்பினால் பெருமை, இருப்பினால் பெருமை, இயல்பினால் பெருமை!
கோவில்களில் முதலில் தாயாரை வழிப்பட்ட பிறகு பெருமாளை சேவிக்க வேண்டும் என்பது ஐதீகம். ஏனென்றால் நம் பிரார்த்தனை மனுவை அவரிடம் சமர்ப்பித்து விட்டால் அவர் பெருமாளான நம் தகப்பனாரிடம் சரியான சமயத்தில் அப்பிரார்த்தனையை காதில் போட்டு அதை நிறைவேற்றித் தருவார். அன்னை ஸ்ரீயின் அருள் இல்லாமல் கடவுளிடம் நம் வேண்டுதல் செல்லாது. இன்றும் நாம் நம் அம்மாவிடம் தானே எந்த விஷயத்தையும் முதலில் சொல்கிறோம்?
தாயார் மகாலட்சுமிக்கு தமிழ்நாட்டில் ஆலயங்கள் நிறைய இல்லை. சென்னையில் கடலோரம் அஷ்டலக்ஷ்மி கோவில் உள்ளது. இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தரைத்தளம் சக்கரமாகவும், மொத்த அமைப்பும் மேருவாகவும், இறை தரிசனத்திற்காக மேல் பகுதிக்குச் சென்று கீழே இறங்கி வரும் பாதை ஓம் வடிவிலும் இருப்பதைக் காணலாம். கருவறையின் முன்புறம் இருபத்து நான்கு தூண்களுடன் கூடிய காயத்ரி மண்டபம் உள்ளது. மகாலட்சுமி சன்னிதியை வணங்கி விட்டு வரும் பொழுது, 18 படிகளை காணலாம். இந்த படிகள் 18 தத்துவங்களின் உருவாய் அமைக்கப்பட்டுள்ளன. சிற்ப ஆகம விதிப்படி படிகள் குறுகலாக 28 அங்குல அளவில் கட்டப்பட்டுள்ளன.
பிருகு மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அமிர்தவல்லி என்ற பெயரில் மகாலட்சுமி அங்குள்ள தீர்த்ததில்/புஷ்கரணியில் மாசி மாகத்தன்று அவதரித்த தலம் சென்னை மயிலாப்பூர். அடுத்து திருச்சி மாநகரில் மன்னார்புரத்தில்தான் மகாலட்சுமி தாயாருக்கு ஓர் ஆலயம் அமைந்துள்ளது.
தென்னிந்தியாவில் ஸ்ரீதேவி பூதேவி என்று இரண்டு வடிவங்களில் லக்ஷ்மி காணப்படுகிறார். மேலும் நீளாதேவியும் லக்ஷ்மியின் ஒரு அம்சம் தான். ஸ்ரீதேவி என்பது ஆன்மீக உலகம் அல்லது பிரகிருதி என்று அழைக்கப்படும் ஆற்றல். பூதேவி என்பது அபரா பிரகிருதி அல்லது தாய் பூமி என்று அழைக்கப்படும் பொருள் உலகம் அல்லது ஆற்றலின் பிரதிநிதித்துவம் மற்றும் மொத்தம்; திருமால், வராஹமாக அவதரித்து இந்தப் புவியை அசுரனிடம் இருந்து விடுவித்து நீரிலிருந்து வெளியே எடுத்து, பூமகளை மணந்து கொண்டார். மண்மகளும் திருமகளே. லட்சுமி தந்திரத்தின் படி, நீளா தேவி, லட்சுமியின் வெளிப்பாடுகள் அல்லது அவதாரங்களில் ஒன்றாவர். விஷ்ணுவின் மூன்றாவது மனைவி. நப்பின்னை என்னும் நீளா தேவியும் அவருடனேயே இருக்கின்றாள். “நப்பின்னை நங்காய் திருவே’ என்று ஆண்டாள் கூறுவதும் நீளா தேவியும் திருமகள் என்பதை உறுதிபடுத்துகிறது.
இலக்குமி என்னும் தமிழ்ச் சொல்லும், லக்ஷ்மி என்னும் வடமொழிச் சொல்லும் ‘ இலக்கு இவனே’ என்று திருமாலையே நம் இலக்காக, இலட்சியமாகக் கொள்ள வேண்டும் என்றுதான் காட்டுகின்றன. விஷ்ணுவைக் குறித்த வேத சூக்தங்கள் ஐந்து. (சூக்தம் என்றால் சிறப்பாகச் சொல்லப்பட்டது என்று பொருள்.) அவற்றுள் மூன்று, விஷ்ணு பத்தினிகளைப் பற்றியது. இவர்கள், ஸ்ரீதேவி, பூதேவி. நீளாதேவி ஆவர். நீளா சூக்தம் எனப்படும் நீளா தேவியைப் பற்றிய எட்டு வரிகள் தைத்திரிய சம்ஹிதையிலும், யஜூர் வேதத்திலும் காணப்படுகின்றன. வடமொழி இலக்கியங்களிலோ, கதை வழியாகவோ நீளாதேவியைப் பற்றி ஒரு குறிப்பும் கிடையாது. ஆனால் தமிழ் மரபில் மட்டும்தான் இவரைப் பற்றி செய்திகள் உள்ளன என்பது, தமிழர்கள் வேதக் கருத்துகளில் எந்த அளவு ஆழ்ந்திருந்தனர் என்று காட்டுகிறது. வேத மரபையும், வேதக் கருத்துக்களையும் தமிழர் ஐயம் திரிபுறக் கற்றுக் கொண்டது மட்டுமல்லாது, கற்றபடி நடக்கவும், நிலை நிறுத்தவும் செய்துள்ளனர்.
“குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்”
( திருவிருத்தம் – 3 ) என்கிறார் நம்மாழ்வார். இங்கு கோவலர் மடப் பாவை என்று நப்பின்னையை மற்ற இருவரோடு (திருமகள் , மண் மகள்) காட்டுவதால், அவள் நீளா தேவி என்பதும் புலனாகிறது. இம்மூவரும், திருமாலின் நிழல் போல்வனர் என்பதால் இம்மூவருமே ஒருவர்தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும். அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும் தெரிகிறது. மகாலக்ஷ்மியின் இந்த மூன்று அம்சங்களையும் ஆந்திராவின் துவாரகா, திருமலைக்கு அருகிலுள்ள ஸ்ரீ பூ நீளா சாஹிதா கோயிலிலும், தமிழ்நாட்டின் ஆதினாத் சுவாமி கோவிலிலும் காணலாம். ஸ்ரீ ஆண்டாளும் லட்சுமியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட மகாலட்சுமி முதலில் பெருமாளின் அழகிய திருமுகத்தை கண்டாள். அதை உள்ளத்தில் நிறுத்தி அவரையே திருமணம் செய்ய வேண்டுமென்று திருக்கண்ணமங்கையில் வந்து தவமியற்றினாள். இத்தலம் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்று. மூலவர், பக்தவத்சலப் பெருமாள். இத்தலத்தில் திருமாலுக்கும் திருமகளான மகாலட்சுமிக்கும் நடந்த திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டேயிருந்தார்கள். நெரிசல் அதிகரித்ததால் அவர்கள் தேனீக்களாக மாறி, மேலும் பல லட்சம் தேவர்களுக்கு இடம் கொடுத்தனர். திருமணம் கண்ட பிறகும் கூடு கட்டிக்கொண்டு இன்றளவும் தாயாரையும் பெருமாளையும் தரிசித்தபடி இருக்கிறார்கள்!
மகாவிஷ்ணுவிடம் கோபித்துக் கொண்டு வைகுண்டத்தை விட்டு திரு என்கிற மகாலட்சுமி வந்து நின்ற தலம் திருநின்றவூர் என்றானது. சமுத்திர ராஜனே சமாதானமாக ‘என்னைப் பெற்ற தாயே’ என்று இறைஞ்சி வேண்டிக் கொண்டதாலேயே இவளுக்கு இத்தலத்தில் என்னைப் பெற்ற தாயார் எனும் திருப்பெயர். குபேரன் தன் நிதியை இழந்து இத்தலத்திற்கு வந்து வேண்டிக் கொண்டதாலேயே மீண்டும் பெரும் நிதியை அடைந்தான். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் தெய்வத் தாயின் கருணையை அமானுஷ்யமாக உணரலாம்.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீவெங்கடாஜலபதி திருமலையிலும், கீழ்த் திருப்பதியில்-திருச்சானூரில் பத்மாவதி தாயாரும் பேரருள் பெருக்கி அமர்ந்திருக்கின்றனர். வைகுண்டத்தில் நாராயணனின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவி! தன் மார்பை எட்டி உதைத்த பிருகு முனிவரை மன்னித்த திருமால் மீது கோபம் கொண்ட திருமகள் அவரை விட்டு நீங்கி பூவுலகம் வர, அவளை சமாதானப்படுத்தி அழைத்து வர நாராயணனும் புறப்பட்டு வந்தார். மகாலட்சுமி சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஆகாசராஜன் எனும் மன்னன் செய்த புத்திரகாமேஷ்டி யாகத்தில் பெண் மகவாகத் தோன்றி, பத்மாவதி எனும் பெயருடன் வளர்ந்து திருமாலை மணமுடித்தாள்.

பெருமாளின் திருமார்பில் உறையும் லட்சுமிக்கு யோக லட்சுமி என்று பெயர். இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி மற்றும் வீரலட்சுமி என்று பெயர். ஆந்திர மாநிலத்திலுள்ள மங்களகிரி எனும் தலத்தில் ஸ்ரீலட்சுமி என்று போற்றப்பட்டும் இந்த மகாலட்சுமி, எளிமையான தவக் கோலத்தில் அருள்பாலித்தாலும், தன் பக்தர்களின் வளமான வாழ்க்கைக்கு அச்சாரம் தருகிறாள். ஸ்ரீ சுவாமி தேசிகர் அருளிய தயா சதகத்தில் வெங்கடேச பெருமாளைப் பாற்றி எழுத நினைத்து ஆனால் அவரின் குணங்களில் தலையாய குணமான தயையை பற்றி நூறு பாடல்கள் எழுதியுள்ளார். அதில் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரும் தயையும் வேறு வேறல்ல என்று குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட கருணையுள்ளம் கொண்டவர் தாயார், பக்தர்களை என்றும் அரவணைத்துத் தாயாக காக்கிறார்.
கோலாபூரில் ரொம்ப பிரபலமான மகாலட்சுமி கோவில் உள்ளது. ஸ்ரீ சர்வ ஆத்யா மகாலட்சுமி. இக்கோயில் 634 சி.இ.சாலுக்யா ஆட்சியில் கர்தேவாவால் கட்டப்பட்டது. இந்த கோயில் கட்டடக்கலை ரீதியாக சாளுக்கிய சாம்ராஜ்யத்திற்கு சொந்தமானது மற்றும் இது 7 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் கட்டப்பட்டது. இந்த கோயில் பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொங்கன் மன்னர் காமடியோ, சாளுக்கியர்கள், ஷிலஹாரா, தேவகிரி வம்சங்களைச் சேர்ந்த யாதவர்கள் இந்த நகரத்திற்கு வருகை தந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆதி சங்கராச்சாரியாரும் இங்கு வந்திருக்கிறார். சிவாஜி மகாராஜ் மற்றும் சம்பாஜி மகாராஜ் வணங்கிய தாயார் இவள். மகாலட்சுமியின் மூர்த்தி 3 அடி உயரமுள்ள கருப்பு நிற கல்லில் செதுக்கப்பட்டு 40 கிலோ எடையுள்ள இரத்தினக் கல்லால் ஆனது. கோயிலின் சுவர்களில் ஒன்றில் ஸ்ரீ யந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. மூர்த்தியின் பின் மகாலட்சுமியின் வாகனமான ஒரு கல் சிங்கம் நிற்கிறது. கிரீடத்தில் விஷ்ணுவின் ஆதிசேஷன் உருவம் அமைந்துள்ளது. சூரியன் மறையும்போது கதிர்கள் ஜன்னல் வழியாக வந்து தாயாரின் பாதத்தை தொட்டு செல்லும்.
நிர்குண பிரம்மம் ஸ்ருஷ்டி செய்ய இச்சை கொண்டு முதன் முதலில் எடுத்த சகுண பிரம்மம் ரூபம் இந்த மகாலட்சுமி சொரூபமாகும் . கையில் மாதுளம்பழம் அக்ஷய பாத்திரம் கதை கேடயம் கொண்டும் சிரசில் சிவலிங்கமும் நாகாபரணம் தரித்தும் சிம்மவாகனம் கொண்டும் சர்வாலங்கார பூஷிதையாக தங்க நிறத்தவளாக மஞ்சள் வஸ்திரம் தரித்தவளாக தோன்றிய தேவி ஸ்ருஷ்டியை தொடங்கினாள்.

மும்பையில் இருக்கும் மகாலட்சுமி மிகவும் பழமையான கோவில். அக்கோவிலின் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. மும்பையின் 7 தீவுகளை இணைத்து ஒன்றாக்கி, ஒரு நல்ல துறைமுகத்தைக் கட்ட கிழக்கிந்திய கம்பெனி முனைந்தபோது ஹார்ன்பி வெல்லார்ட் சுவர் இரண்டு முறை இடிந்து விழுந்து மேலே தொடர முடியாமல் இடர் ஏற்பட்டது. அப்பொழுது பொறியாளர் ராம்ஜி சிவாஜி பிரபுவிற்கு லக்ஷ்மி தேவி கனவில் வந்தார். அவருக்கு கனவில் தோன்றிய இடத்தில் கடலுக்கு அடியில் லட்சுமி தேவியின் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் 1784 ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின் எந்த இடையூறும் இல்லாமல் வேலை நடந்து முடிந்தது.
கோரவனஹள்ளி மகாலட்சுமி கோயில் கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட மிகவும் பிரபலமான மகாலட்சுமி கோயில் ஆகும். மகாலட்சுமியின் சிலை சுயம்பு அதாவது தானாகவே உருவானது என்று நம்பப்படுகிறது. ஹசனில் டோடகடவள்ளியில் உள்ள லட்சுமி கோவில் கர்நாடகாவில் ஹொய்சாலர்களின் காலத்தை விவரிக்கிறது. இது ஹொய்சாலா பாணியின் ஆரம்ப கட்டடக்கலை கோயில்களில் ஒன்றாகும். மிகவும் அழகாக் அமைந்துள்ளது இந்த லக்ஷ்மி கோவில். கைலா தேவி மகாலட்சுமியின் அவதாரமாக கருதப்படுகிறார். ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயில்.
மகாலட்சுமியால் தான் தீபாவளி ஏற்பட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் ஸ்ரீ மகாலட்சுமியின் அம்சமான சத்யபாமாவால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டான். நரகாசுரனும், ‘‘நான் இறந்த இந்த நாளை எல்லோரும் தீபாவளித் திருநாளாக கொண்டாட வேண்டுமென’’ வேண்டிக் கொண்டான். இதனால், அசுரன் வதம் செய்யப்பட்டான் என்பதைவிட, பெரிய வரம் பெற்றான் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், இத்தனை நாளும் நரகாசுரனை அகங்காரம் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. அதை மகாலட்சுமித் தாயார் கருணையோடு வெட்டி எறிந்தாள். அந்தக் கணமே தான் இந்த உடம்பல்ல என்கிற தேகாபிமானத்தையும், அகங்காரத்தையும் நரகாசுரன் இழந்து பரமாத்ம சொரூபத்தோடு ஒன்றினான். தான் எய்திய இந்த பிரம்மானந் தத்தை உலகமே கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.
மகாலட்சுமி ஒரே தெய்வமாக இருந்தாலும் பல சொரூபங்களாக அருள்புரிகிறாள். அஷ்ட லட்சுமிகளாக ஆதி லட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தனலட்சுமி என்று அஷ்ட சக்திகளாக இருத்தி அருள்பாலிக்கிறாள். தாயாரின் மேல் ஆதிசங்கரர் அருளிச் செய்த கனகதாரா ஸ்தோத்திரம் மிகவும் பெருமை வாய்ந்தது. ஒரு நாள் சிறுவனாக, அவர் பிக்ஷை வாங்க ஒரு வீட்டு வாசலுக்கு சென்றார். அது மிக வறுமையில் வாடும் ஒரு பிராமணப் பெண்ணின் வீடு. வீட்டில் எதுவுமே இல்லாத நிலையில் அவர் தன் வீடு முழுவதும் ஏதாவது கொடுக்க இருக்குமா என்று தேடினார். ஒரே ஒரு காய்ந்த நெல்லிக்காய் மட்டுமே அவருக்கு கிடைத்தது. அதை அவர் சங்கரருக்கு தயக்கத்துடன் வழங்கினார். இந்த பெண்ணின் அளப்பறியா கருணை மற்றும் தன்னலமற்ற செய்கையால் மனம் நெகிழ்ந்து அந்தப் பெண்ணிற்காக மகாலட்சுமி தாயாரின் கருணை வேண்டி தாயாரைப் போற்றி 21 ஸ்லோகங்களை இயற்றி பாடினர். ஸ்தோத்திரத்தின் அழகையும் சக்தியையும் கண்டு மகிழ்ந்த தாயார் அவர் முன் தோன்றி தன்னை கூப்பிட்ட காரணத்தை ஆதிசங்கரரிடம் கேட்டார். இந்த பெண்ணின் குடும்பத்தின் ஏழ்மை நிலையை தலைகீழாக மாற்றி அவளை பெரும் செல்வந்தராக ஆக்க தாயாரிடம் இறைஞ்சினார். முதலில் லட்சுமி தேவி அவ்வாறு செய்ய மறுத்தார். கர்ம வினையினால் அவள் ஏழ்மை நிலையில் வருந்தி வாழ்கிறாள் என்று கூறினார். அதற்கு ஆதி சங்கரர் அந்த பெண்ணின் முழுமையான தன்னலமற்ற செயலானது, அவள் கடந்த கால பாவங்களிலிருந்து விடுபட வைத்துவிட்டது, அவளின் தலைவிதியை மாற்றும் வல்லமை தாயாருக்கு உண்டு என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். தாயாரும் மனம் மகிழ்ந்து உடனடியாக அந்த பெண்ணின் வீட்டின் கூரையில் தூய தங்கத்தால் ஆன நெல்லிக்காய்களை மழையாக கொட்ட வைத்தார். கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் நல்லருள் கிடைக்கும். நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால் நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும் எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.

லக்ஷ்மி நாத சமாரம்பாம் நாதயாமுன மத்யமம்
அஸ்மாதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்!
இந்த ஸ்லோகம் எல்லா வைணவர்கள் கோவிலிலும் இல்லங்களிலும் சொல்லப்படும் ஒன்று. ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் லக்ஷ்மிநாதசமாரம்பாம் என குருபரம்பரையின் முதல் ஆச்சார்யரான நம்பெரியபெருமாளுக்குப் பிறகு திருமாமகள் தாயாரே அடுத்த இடம் வகிக்கிறார். சேனைமுதலியார், நம்மாழ்வார், அடுத்து 'நாலாயிரதிவ்யப்ரபந்தத்தை' தொகுத்து, ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் அனுசந்தானம் பண்ணும்படியான அரிய செயலை செய்த மஹான் நாதமுனிகளை நடுவாகக் கொள்ளப்படுகிறது. ஸ்ரீ வைணவ சம்பிரதாய குரு பரம்பரை பெரிய பெருமாள், பிராட்டியுடன் ஆரம்பித்து வழிவழியாக நாதமுனிகள், ஆளவந்தார், ராமானுஜர் என்று வளர்ந்து மணவாள மாமுனிகளுடன் நிறைவுபெறுகிறது .
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே
கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம;
என்கிற மகாலட்சுமி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதனை உச்சாடனம் செய்து மகாலட்சுமியின் அருளை பெறலாம். தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜை வெகு விமர்சையாக வட இந்தியாவில் கொண்டாடப்படும். வரலட்சுமி விரதம் தென் இந்தியாவில் பிரசித்தம். அதே போல நவராத்திரி தேவியரை போற்றும் பண்டிகை. தயாநிதியான, கருணை உள்ளம் கொண்ட தாயான மகாலக்ஷ்மியை தினம் தொழுது இவ்வுலகிற்காக பொருளும் அவ்வுலகுக்காக அருளும் பெற்று மகிழ்வோம்.
Comments