top of page

ஸ்ரீ கூரத்தாழ்வான்

  • Writer: Anbezhil
    Anbezhil
  • Apr 11, 2022
  • 13 min read

ree

படத்தில் இருப்பது ஸ்ரீ கூரத்தாழ்வான் மற்றும் அவர் திருக் குமாரர்கள் ஸ்ரீ பராசர பட்டர் மற்றும் ஸ்ரீ வேத வியாச பட்டர்.


ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய குரு பரம்பரை என்பது பெரிய பெருமாள், பிராட்டியுடன் ஆரம்பித்து வழிவழியாக நாதமுனிகள், ஆளவந்தார், ராமானுஜர் என்று வளர்ந்து மணவாள மாமுனிகளுடன் நிறைவுபெறுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ குரு பரம்பரைக்கு ஏற்றம், பெருமானிடம் ஆரம்பித்து பெருமானிடமே முடிகிறது. அவனே முதல் ஆசார்யன், அவனே இறுதியில் சிஷ்யன் மாமுனிக்கு.

ree

மேற்படி குரு பரம்பரையில் பகவத் ராமானுஜரின் முதல் சீடர் ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆவார். காஞ்சிபுரம் அருகில் அமைந்துள்ள கூரம் என்ற சிறு கிராமத்தில், ஹரீத கோத்ரம், வடமான் குலத்தைச் சேர்ந்த அனந்தர், பெருந்தேவி நாயகி தம்பதியருக்குப் பிறந்தார். இவர் இராமானுஜர் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கலி யுகம் 4111 சௌம்ய ஆண்டு (1010ஆம் ஆண்டு) தைத் திங்கள், அஸ்த நட்சத்திரம், தேய்பிறை, பஞ்சமி திதி, வியாழனன்று அவதரித்தார். ஆழ்வானுக்கு பெருமானை போல் மார்பில் மரு இருந்ததால், பெற்றோர்கள் இட்ட திருநாமம் ஸ்ரீ வத்ஸ சின்னர் (திரு மரு மார்பன்.) (இராமாவதாரத்தில் ஆதி சேஷன் தம்பியாக இலக்குவணாக அவதரித்து சேவை செய்ததற்காக, கிருஷ்ணாவதாரத்தில் பெருமாள் கிருஷ்ணராகவும் சேஷன் பலராமராகவும் அவதாரம் எடுத்தனர். பின்னர் #கலியுகத்தில் பெருமாள் கூரத்தாழ்வானாகவும், ஆதி சேஷன் இளையாழ்வாராகவும், பின்னர் ஹஸ்திகிரி நாதரன்னா ஆகவும் மணவாள மாமுனியாகவும் அவதரித்து நம்மை உய்வித்தனர் என்பது ஐதீகம். பெருமாளின் அம்சமாக பிறந்த கூரேசர் பெருமாளின் மார்பில் உள்ளது போலவே மறு பெற்றிருந்ததால் ஸ்ரீவத்சாங்கமிச்ரர் , ஸ்ரீவத்சசின்னர் என்று வடமொழியிலும், திருமறுமார்பினர் என்று தமிழிலும் திருநாமம் பெற்றார்.) இவர் கூரேசர், கூராதிபர், கூராதிபதி, கூரநாதர், என்ற திருநாமங்களாலும் அழைக்கப் பெறுவார். பெரிய பணக்கார குடும்பம் இவருடையது. கூரம் என்னும் ஊருக்கு சிற்றரசர் போல் இருந்தார் இவர் திருத்தந்தை. அவரை கூரத்தாழ்வார் என்று அழைப்பர். இவரின் முன்னோர்கள்,கூரத்தில் குடியேறுவதற்கு முன்பு, திருமாலிருஞ்சோலை அடிவாரத்தில், சுந்தரத்தோளுடையானுக்குக் கைங்கர்யங்கள் செய்துவந்தனர் என்று சொல்வர்.


தேசத்தின் பிறப்பகுதிகளில் இருந்து காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்குத் தினமும் அன்னதானம் செய்வதையே பெரும் பேறாய்ச் செய்துவந்தார்கள் குரேசரும் அவரின் திருத்தந்தையும். இவருடைய திருத்தாயார் சிறு வயதிலேயே ஆசார்யன் திருவடியை அடைந்து விட்டார். இவருடைய திருத்தகப்பனார் மறுபடியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. “நான் திருமணம் செய்து கொண்டால், வரும் புது மனைவி கூரேசனை நன்றாகப் பார்த்துக் கொள்ளவில்லை என்றால், அது மிகப் பெரிய பாகவத அபச்சாரம்” என்று இருந்துவிட்டார். கூரேசனுக்கும் இத்தகைய உயர்ந்த பண்புகள் சிறு வயதிலேயே இருந்தது. தகுந்த சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இவருக்குத் திருமணம் செய்துவைக்க தந்தை முயன்றபோது, தான் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கப் போகிறேன் என்று மறுத்தார். காஞ்சிப் பேரருளாளனுக்கு ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கரியம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பிகளின் அபிமானத்தை கூரேசர் பெற்று, வைணவத்தில் ஈடுபட்டு வாழ்ந்திருந்தார். ஒரு காலத்தில், கூரெசரின் தந்தையும் கூரம் நாட்டுப் பதவியை கூரேசரிடம் ஒப்படைத்துவிட்டு, திருப்பதி சென்று வாழத் தொடங்கினார்.


ஒரு நாள் இவர் நள்ளிரவில் நகர சோதனைக்குச் சென்றபோது, ஓர் அந்தணர் வீட்டில் சிலர் உரக்க வாதாடிக் கொண்டிருப்பதைக் கண்டு, அவ்வீட்டருகில் நின்று கேட்டு விஷயங்களை அறிந்தார். அதன்படி அவ்வீட்டில் வாழும் அந்தணர் குடும்பத்துக்கு ஒரு மகள் இருந்ததையும், அவள் மணமுடிக்கும் வயதில் இருப்பதையும், ஆனால் ஜோஸ்யர்களின் கருத்துப்படி அவளுக்குத் திருமணம் செய்து வைத்தால், மணமகனுக்கு உடன் மரணம் சம்பவித்து இவளும் விதவை ஆவிவிடுவாள் என்பதால் துக்கமுற்ற பெற்றோர்கள் அவளை, ஊர்ப்பழிக்கு அஞ்சி, கொன்றுவிட உத்தேசித்து அதற்கான நாளையும் குறித்துள்ளனர் என்றறிந்தார். மறுநாள் அந்தக் குடும்பத்தினரை தன் அவைக்கு அழைத்து அவர்களின் மகளைத் தானே மணமுடிக்கச் சித்தமாய் இருப்பதாகவும், இருந்தபோதிலும் தங்களுக்குள் தாம்பத்ய உறவு இருக்காது என்றும் கூறி, அவர்களின் மகளான ‘ஆண்டாளை’ மணந்து, தன் பிரம்மச்சரியத்தைத் தொடர்ந்தார். ஆண்டாளும் ஆழ்வானை மணந்து, அவரின் விருப்பப்படியே வாழ்க்கைத் துணைவியாய் இருந்தார். அரசு பதவியும், உயர்ந்த செல்வமும் நிறைந்து விளங்கிய போதிலும், ஒரு துறவியாகவே வாழ்ந்து தன் செல்வங்களை எல்லாம் ஏழை எளியோர்களுக்கு வழங்கி வந்தார்.


தினமும் இவருடைய அரண்மனை வாயிற்கதவுகள் வரதராஜப் பெருமாளின் ராக்கால பூஜை முடிந்தவுடன் சாத்தப்படும். கதவை சாத்தும்போது, கதவில் கட்டப்பட்டிருந்த விலை உயர்ந்த மணிகளின் ஒலி கோயில் வரை கேட்கும். ஒரு நாள் வரதராஜப் பெருமாள் கோவில் நடை சாத்தும் முன்பே ஏதோ காரணத்துக்காக சாத்தப்பட்டு விட்டது. கூரத்தாழ்வார் வீட்டு கதவின் மணியொலி வரஜராஜப்பெருமாள் சன்னதி வரை கேட்கவும் #பெருந்தேவித் தாயார், சுவாமியிடம் "என்ன! அதற்குள் கோயில் அடைக்கும் சத்தம். நடை சாத்த நேரமாகிவிட்டதா?" என்று வினவினாள். சுவாமிக்கும் ஒன்றும் புரியாமல் போகவே, தனக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் ‘‘அது என்ன ஓசை?’’ என்று கேட்க, நம்பிகளும் கூரத்தாழ்வானின் அரண்மனை வாயிற்கதவுகள் மூடப்பட்ட சத்தம் (ஆழ்வானின் வாயிற் கதவுகளில் வெங்கல மணிகள் கட்டப்பட்டிருக்கும்) என்று கூறி, கூரேசரைப் பற்றிக் கூற, #வரதராஜப்பெருமானும் ஆழ்வானின் செல்வமோ நம்மை வியக்க வைத்தது என்றார். தாயாரும் நம்பியிடம் உத்தம ஆத்மாவான கூரேசனை தான் தான் காண விரும்புவதாய் கூறினாள். “நான் நாயினும் கடையேன் எனக்குத் தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை, தகுதியும் இல்லை. என் வீட்டுக் கதவுகளை அப்படிச் சத்தம் வருவது போல் சாத்தி, என் செல்வத் திமிரைக் காட்டி விட்டேனோ?” எனக்கூரேசர் மிக வருந்தினார். அதிக செல்வம் உள்ளதால் தனக்கு அகங்காரம் உண்டாகி விடுமோ என அஞ்சித் தன்னுடைய பெருஞ்செல்வம் அனைத்தையும் அறச்செயல்களுக்குத் தானமாக வழங்கி ஒரு நல்லாசிரியரை குருவாகப் பற்ற வேண்டும் , நல்ல முறையில் வாழ வேண்டும் என்று முடிவு செய்து தன மனைவியுடன் காஞ்சி நோக்கி நடைபயணமாகப் புறப்பட்டார். இரவான பிறகு அவர் மனைவி சிறிது அச்சத்துடன் வழியில் கள்ளர் பயம் உள்ளதோ என்று கேட்டார். ஏன் கேட்கிறாய் என்று ஆழ்வான் வினவ, ஆண்டாள், நீங்கள் பயன்படுத்த என்று ‘தங்க வட்டில்’ ஒன்றை எடுத்து வந்துள்ளேன் என்று கூறினார். அவர் அந்த வட்டிலை வாங்கித் தூர வீசியெறிந்து, மனைவியிடம், ‘மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்’ என்று கூறி, பயணத்தைத் தொடர்ந்து காஞ்சியை வந்தடைந்தார்.


பின், அங்கிருந்த ராமானுஜரைச் சரணடைந்தார். அவரிடம் பஞ்ச சம்ஸ்காரத்தையும் பெற்றுக்கொண்டார். அவரும் இவரை ஏற்று, அன்று வரை கூரேசனாக இருந்த அவரை கூரத்து ஆழ்வான் என்று நாமகரணம் சூட்டி, தம் சீடராக ஏற்றுக்கொண்டார். (கூரத்தாழ்வான் பெயர் காரணம் - திருவாய்மொழி காலஷேபம் அருளும் போதெல்லாம் மோஹித்து மூர்ச்சையாகிவிடுவாராம். எம்பெருமானார் இதனை கண்டு நம்மாழ்வாரை நாம் கண்டதில்லை இவர் தானோ அவர் என ஆழ்வான் ஆழ்வான் ஆழ்வான் என்று கூப்பிட்டு மூர்ச்சையாகி கிடக்கும் ஆழ்வானை எழுப்புவாராம். எம்பெருமானார் ஸ்ரீ வத்ஸ சின்னரின் பக்தியை கண்டு ஆழ்ந்ததினால் இட்ட திருநாமமே ஆழ்வான். அன்றிலிருந்து இவரின் ஊருடன் சேர்ந்து திருநாமம் கூர்த்தாழ்வான் என்று ஆனது.) அதனால் சம்பிரதாயத்தில் ஆழ்வான் என்றால் அது கூரத்தாழ்வான். ஆழ்வார் என்றால் அது நம்மாழ்வார். இதே காலத்தில் ஸ்ரீ முதலியாண்டான் என்பவரும் ராமானுஜரிடம் சரணடைந்து சீடரானார்.

ree

ஒரு சீடன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் கூரத்தாழ்வான். இவர் உயர்ந்த குலத்தில் பிறந்தவர், சிறந்த படிப்புப் படித்தவர், இராமானுஜருக்கே போதாயன விருத்தி கிரந்தத்தை பார்க்காமல் திரும்ப சொல்லும் மேதமை அவரிடம் இருந்தது. அவர் தினம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் அளவு பணமும் இருந்தது. ஆனால் இந்த மூன்றினாலும் (#வஞ்ச_முக்குறும்பு) அவர் ஒரு கணமும் செருக்குக் கொள்ளவில்லை.


இராமனுஜ நூற்றந்தாதியில், திருவரங்கத்தமுதனார் ஏழாவது பாசுரத்தில் கூரத்தாழ்வானைப் பற்றி இப்படி குறிப்பிடுகிறார்.

மொழியைக் கடக்கும் பெரும் புகழான்,* வஞ்ச முக்குறும்பாம்-

குழியைக் கடக்கும்* நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்*

பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி* அல்லா-

வழியைக் கடத்தல்* எனக்கு இனி யாதும் வருத்தம‌ன்றே.

முதல் வரிக்கு இரண்டு விதமாகப் பாடங்கள் உண்டு குழியைக் கடக்கும் குழியைக் கடத்தும் குழியைக் கடக்கும் - இந்த மூன்று கவர்வங்களாகிய படு குழியை கடந்தவர் என்று பொருள்.

குழியைக் கடத்தும் - இந்த மூன்று கவர்வங்கள் ஆகிய படுகுழியை தான் கடந்தது மட்டும் அல்லாமல், தன் சீடர்களையும் கடக்க வைத்தார் என்று பொருள். அடுத்து. “நம் கூரத்தாழ்வான்” என்கிறார் அமுதனார். ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று தெரிந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் பெரிய நம்பிகளிடம் கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் பிராத்திக்கிறார்கள். பெரிய நம்பிகள் ”சரி செய்கிறேன் ஆனால் என்னுடைய நிழல் போல பாரதந்த்ரியத்தை முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னைப் பின் தொடர வேண்டும்” என்று சொல்கிறார். ”அப்படிப்பட்டவர் யார்" என்று ஸ்ரீராமானுஜர் கேட்க “நம் கூரத்தாழ்வான்” என்றார் பெரிய நம்பி. இங்கே “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார் என்று கொள்ளலாம். மேலும், இந்தப் பாசுரத்தில் மட்டும் தான் இராமானுஜருக்குப் பின்னால் வந்தவரைக் குறித்துக் கூறி இராமானுஜர் பெருமையை புகழ்கிறார் அமுதனார். இராமானுஜ நூற்றந்தாதியின் மற்ற அனைத்துப் பாசுரங்களிலும் இவருக்கு முன் தோன்றிய பெரியோர்களுடன் இராமானுஜருக்கு உள்ள சம்பந்தத்தைச் சொல்லி உடையவரை போற்றுகிறார். கூரத்தாழ்வான் சம்பந்தம் கொண்ட இராமானுஜனை சரண் புகுவோம் என்றே சாதித்துள்ளார். அத்தனை ஏற்றம் கூரத்தாழ்வானுக்கு. நம்பெருமாள் மற்றும் எம்பெருமானாரின் பெருமையை பேச முடிந்தாலும் முடியும் ஆனால் கூரத்தாழ்வானின் பெருமையை பேச வார்த்தைகள் போதாது என்பது பூர்வாசார்யர்களின் கருத்து “மொழியை கடக்கும் பெரும்புகழான் – வாக்கிற்கு அப்பாற்பட்டவர் கூரத்தாழ்வான்“.

.

வரதராஜப் பெருமாள் திருவரங்கப் பெருமாளுக்கு இராமானுசரைத் தந்த போது, எதிராசருடன் கூரத்தாழ்வானும் அவரது தேவியாரான ஆண்டாளும் திருவரங்கம் வந்து சேர்ந்தனர். எப்போதும் இராமானுஜரை விட்டுப் பிரியாமல் அவருடனே எங்கும் எப்போதும் இருந்தார் கூரத்தாழ்வான். இராமானுஜரும் கூரத்தாழ்வானைப் பற்றிய நினைவினை எப்போதும் கொண்டிருந்தார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உட்பொருளைக் கேட்கும் போது கூரத்தாழ்வானையும் முதலியாண்டனையும் கூட அழைத்துச் சென்றார். இன்னொரு முறை திருக்கோட்டியூர் நம்பிகளிடம் சரம சுலோக உட்பொருளைக் கேட்கும் போது அவர் 'இதனை யாருக்கும் சொல்லக்கூடாது' என்று நிபந்தனை இட்ட போது, கூரத்தாழ்வானுக்கு மட்டும் சொல்ல அனுமதி பெற்றார். இப்படி ஒருவருக்கொருவர் மிகவும் அன்யோன்யமாக, அனந்தாழ்வானும் எம்பெருமானும் போல், லக்ஷ்மணனும் ராமரும் போல், இராமானுஜரும் கூரத்தாழ்வானும் இருந்தார்கள்.


சிறந்த ஸ்ரீ வைஷ்ணவர் திருவரங்கத்து அமுதனார், ஆனால் ஏனோ அவரின் கோவில் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. இதை அறிந்த ஆழ்வான் திருவரங்கத்து அமுதனாரை திருத்திப் பணிகொண்டு எம்பெருமானார் திருவடிகளில் உய்யச் செய்தார். அமுதனார் ஒரு ஸ்ராத்தம் செய்யும் நேரத்தில் இறந்தவர் இடத்தில் அமர்ந்து உண்ண அமுதனாருக்கு யாரும் கிடைக்கவில்லை. கூரத்தாழ்வான் அவ்விடத்தில் அமர்ந்து உண்டார். உண்டு முடிந்ததும் சிராத்தம் செய்பவர் அவர்களுக்கு திருப்தியா என்று கேட்கவேண்டும். உண்டவரும் திருப்தி என்று சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் எதனால் திருப்தி இல்லை என்று அறிந்து அதை பூர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுத்து தான் யாருக்காக சிராத்தம் செய்யப்படுகிறதோ அந்த ஆத்மா சாந்தி அடைந்தது என்று நம்பிக்கை. கூரத்தாழ்வான் திருப்தி இல்லை என்று சொல்லி, கோவில் நிர்வாகத்தை ராமாநுஜரிடம் ஒப்படைத்தால் தான் தனக்கு திருப்தி ஏற்படும் என்று அவரிடமிருந்து கோயில் பொறுப்பு மற்றும் சாவியை பெற்று எம்பெருமானாரிடம் ஒப்படைத்தார். எம்பெருமானர் திருவரங்கம் கோயிலில் இவருக்கு பௌராணிக கைங்கர்யத்தை (பெருமாளுக்கு புராணங்கள் வாசிப்பது) நியமித்தார். இதன் பின் கோவில் நடைமுறையில் பல நிர்வாக மாற்றங்களை செவ்வனே செய்தார் ஸ்ரீ ராமானுஜர். தினப்படி சேவைகள், பிரசாதங்கள், அபிஷேகங்கள், மாதாந்திர வருடாந்திர உத்சவங்கள் அனைத்தையும் நெறி படுத்தினார். அவை தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

ree

அமுதனார் – ஆழ்வான் – எம்பெருமானார்

ஸ்வாமி ஆளவந்தாரின் ஆசையை நிறைவேற்ற எண்ணி, எம்பெருமானார் பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானம் எழுதுவதற்காக போதாயன விருத்தி க்ரந்தத்தை தேடி ஆழ்வானுடன் காஷ்மீரம் பயணப்பட்டார். காஷ்மீரத்து அடியார்கள் (அத்வைத சித்தாந்தத்தை சார்ந்தவர்கள்) க்ரந்தத்தை எம்பெருமானாருக்கு கொடுத்து, பின் எம்பெருமானார் விசிஷ்டாத்வைத கோட்பாடை கொண்டு வியாக்கியானம் எழுதுகிறார் என்பதை அறிந்து ஒரே இரவில் க்ரந்தத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதைக் கண்டு எம்பெருமானார் எப்படி வியாக்கியானம் எழுதுவது என்று வேதனையுடன் யோசிக்கையில், ஆழ்வான் தான் ஒரே இரவில் க்ரந்தத்தை சேவித்து அர்த்தங்களை அறிந்து கொண்டதாகவும், எம்பெருமானார் திருவுள்ளப்படி “இங்கனமே விண்ணப்பிக்கவோ அல்லது இரண்டாற்றங்கரையிலே (திருவரங்கம்) விண்ணப்பிக்கவோ” என வேண்டினார். ஆழ்வானின் அபார ஞானத்தையும் மற்றும் ஏக சந்த கிரகிப்பு (ஒரு முறை பார்த்தாலே அதை முழுதுமாக உள் வாங்கிக் கொள்ளும் திறன்) தன்மையையும் நினைத்து க்ரமம் மாறி போய்விட்டது என்ற எம்பெருமானார், “நீர் எனக்கு ஆசார்யனாக இருத்தல் வேண்டும், மாறி நீர் என்னை ஆச்ரயித்து கொண்டீர்“ என்றாராம். போதாயன விருத்தி க்ரந்தத்தை சேவித்ததால், கூரத்தாழ்வானையே பிரம்ம சூத்திரத்திற்கு பாஷ்யம் எழுத பணித்தார் எம்பெருமானார். ஆனால் ஆழ்வானோ ஆசார்யன் இருக்க அடியேன் அதை செய்ய மாட்டேன் என மறுத்துவிட்டார். எம்பெருமானார் க்ரந்தத்தை சேவிக்கவில்லை, ஆழ்வானோ எழுத மறுக்கிறார். ஆகையால் எம்பெருமானார் பிரம்ம சூத்திரத்திற்கு தானே பாஷ்யம் சாதிப்பதாகவும், போதாயன விருத்தி க்ரந்தத்திற்கு விரோதமாக ஏதேனும் அவர் பொருள் எழுதினால் சுட்டி காட்டும்படியும், அவர் அதை திருத்தி எழுதுவதாக ஆணையிட்டார் ஆழ்வானுக்கு. ஆழ்வானோ ஆசார்யன் சாதித்ததை தவறு என்று கூறும் யோகியதை அடியேனுக்கு இல்லை என மீண்டும் மறுத்துவிட்டார். இதற்கு தீர்வாக எம்பெருமானார் ஓர் யுக்தியை கையாண்டார், க்ரந்தத்திற்கு விரோதமாக பாஷ்யம் அமைந்தால் நீர் எழுதுவதை நிறுத்திக்கொள்ளும், அடியேன் புரிந்துகொண்டு அர்த்தத்தை மாற்றி உரைக்கிறேன் என்றார். ஆழ்வான் அவ்வாணைக்கு அரைமனதாக சம்மதித்தார். இப்படியாக ஸ்வாமி ஆளவந்தார் கிருபையுடன், எம்பெருமானார் உபதேசித்து ஆழ்வானால் எழுதப்பட்ட பிரம்ம சூத்திரத்தின் வியாக்கியானமே ஸ்ரீ பாஷ்யம். அதில் ஆழ்வானின் பங்கோ அளப்பரியது.


ree

(படத்தில்: எம்பெருமானார், ஆழ்வான், முதலியாண்டான் & ஸ்வாமி ஆளவந்தார்)


திவ்யப்ரபந்த பாசுரங்களுக்குக் குறிப்பாக நம்மாழ்வார் திருவாய்மொழிக்கு எளிமையான விளக்கங்களைச் சொல்லி புரியவைப்பதில் வல்லவர் கூரத்தாழ்வான். ஒரு முறை பெரும் பண்டிதர் ஒருவர் ஆழ்வானை சந்தித்து சில க்ரந்தத்தின் அர்த்தங்களை தனக்கு சொல்லி புரிய வேண்டும் என்றும் ஆனால் பிறர் அறியாவண்ணம் நடக்க விண்ணப்பித்தார். மற்றோருக்கு இது தெரிந்தால் தன் பாண்டித்யத்துக்கு ஓர் மாசு என கருதினார் பண்டிதர். ஆழ்வானும் ஒப்பு கொண்டு ஏகாந்தமாய் பண்டிதருக்கு அர்த்தங்களை உரைக்க, வேறு இருவர் வருவதை கண்டதும், தான் பண்டிதரிடம் அர்த்தங்களை கேட்பது போல் மாறி நின்றாராம், தன்னை தாழ்த்திக்கொண்டு. எம்பெருமானார் ஸ்ரீ பாஷ்யம் எழுத உறுதுணையாக இருந்த ஆழ்வான், பார்த்தனுக்கு சாரதியாய் தன் பெருமைகளை மறைத்து தாழ்த்தி நின்ற கிருஷ்ண பரமாத்மாவை போல் நின்றார் ஆழ்வான் என்கிறது ஒரு குறிப்பு. வித்யா கர்வம் துளியும் இல்லாதவர் ஆழ்வான்.


மிகுந்த காருண்யம் கொண்டவர் அவர். ஒரு சமயம் இரவு அவர் எங்கோ சென்றுகொண்டு இருந்த போது வயலில் தவளை கத்தும் சத்தம் கேட்டது. அருகே சென்று பார்த்த போது நல்ல பாம்பின் வாயில் சிக்கிய நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை பார்த்து, அந்தத் தவளை பாம்பின் வாயிலிருந்து விடுதலையாக யாரிடம் உதவிக் கேட்கும் என்று எண்ணி மயக்கமுற்றார். இன்னொரு சமயம் ததீயாராதனத்திற்காக வாழையிலையை ஒருவர் மரத்திலிருந்து வெட்ட, வெட்டிய பகுதியில் ஒழுகிய சாற்றினைக் கண்டார். ஒரு உயிரை வெட்டி அதிலிருந்து ஒழுகும் ரத்தம் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்து மயக்கமுற்றார். ஒரு முறை பெண் ஒருத்தி தண்ணீர் குடத்தைச் சுமக்க முடியாமல் கஷ்டப்படுவதைக் கண்ட ஆழ்வான், வெகு தூரத்தில் இருந்த அவள் இல்லத்துக்கு அவரே அதைத் தலையில் வைத்துச் சுமந்து சென்று சேர்ப்பித்தார். சமணர்களோடும் பௌத்தர்களோடும் சேர்ந்து ஓர் அந்தணச் சிறுவன் சிகை நூல் அனைத்தும் அறுத்து எறிந்துவிட்டு தர்க்கம் பேசித் திரிந்தான். பெற்ற தகப்பன் தலைவிதி என்றான். சுற்றம் அனைத்தும் கலியின் கோலம் என்றனர். ஒரு நாள் பையன் சிகை நூல் அணிந்து ஊர்த்வபுண்ட்ரம் துலங்க வீட்டில் நுழைந்தான். பார்த்தார் தகப்பனார். ஒன்றும் சொல்லவில்லை. ஒரே கேள்வி தான் கேட்டார். ஏனப்பா, கூரத்தாழ்வானைச் சந்தித்தாயோ? என்று. அந்த அளவிற்கு பெரியோர் சிறியோர் என்ற பேதமற அனைவரது பிரச்சனைகளையும் அனுதாபத்தோடு பார்க்கும் பெற்றி வாய்ந்தவர் கூரத்தாழ்வான். சுடுசொல் அறியா சுருதி அந்தணன்.


திருக்கோட்டியூர் நம்பி திருவரங்கம் எழுந்தருளி சரம ஸ்லோகத்தில் உள்ள ஏக ஷப்த அர்த்தத்தை எம்பெருமானாருக்கு ஏகாந்தமாய் உபதேசித்து, இதனை அவா உள்ளோருக்கு கூட போதிக்காதே என்று ஆணையிட்டார். ஆனால், இவர் அதையும் மீறி நம்பிகளிடம், என் முதல் சீடரான ஆழ்வானுக்கு இதைத் தெரிவிக்காமல் இருப்பது தன்னால் இயலாதே என்று கேட்க, நம்பிகள் அதற்கு "சரி! நீர் இப்படி நினைத்தீரானால் இந்த அர்த்த விஷயத்தைக் கேட்கும் தகுதி ஆழ்வானுக்குப் பல விதங்களிலும் இருக்கிறதா என்று ஒரு வருட காலத்திற்கு சோதித்து, பின்னர் ஆழ்வான் கைங்கர்யத்தில் இருந்து அதற்குத் தகுதி பெற்றவர் எனில் கொடுக்கலாம்" என்று கூறினார். பின்னர் நம்பிகள் தனக்கு இட்ட கட்டளையைப் பற்றி ஆழ்வானிடம் தெரிவித்தார். ஆழ்வான் அதற்கு, சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தைப் பெற ஒரு வருடம் காத்திருக்கலாம். ஆனால், அதுவரை இந்த உயிர் நிலைக்குமோ என்று அச்சப்பட்டு, அர்த்தத்தைக் காலம் தாழ்த்தாமல் பெற்றுக்கொள்ளும் வண்ணம் ஸ்ரீராமாநுஜரிடம், ஒரு மாத காலம் ஆசாரியனின் திருமாளிகை வாசலில் பட்டினியாய்க் கிடப்பது, ஒரு வருடம் காத்திருந்து அதற்குண்டான தகுதியைப் பெறுவதற்கு ஈடாகுமே என்ற சாஸ்திரத்தைத் தெரிவிக்க, இராமானுசரும் அதை ஏற்றுக்கொள்ள, ஒரு மாத காலம் இராமானுசரின் இல்லத்து வாசலில் பட்டினியாய் கிடந்து, சரம ஸ்லோக அர்த்தத்தை உபதேசமாகப் பெற்றுக்கொண்டார். ஞானம் பெரும் விஷயங்களில் மிகுந்த வைராக்கியம் பெற்றிருந்தவர் ஆழ்வான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஆழ்வான் இல்லாமல் எம்பெருமானார் இல்லை, எம்பெருமானார் இல்லாமல் ஆழ்வான் இல்லை. ஒரு சமயம் மடத்தில் இருந்த வாய் பேச வராத ஒரு சிப்பந்திக்குக் அறைக் கதவை மூடிக் கொண்டு அவர் வேண்டுதலுக்கு இசைந்து எம்பெருமானார் அவரின் திருவடியை அவனது சிரசில் வைத்தாராம். இதை ஜன்னல் வழியாக கண்ட ஆழ்வான் அடியேனுக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே, எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகளை சிரசில் பெறுவதை ஒப்பிடும்போது வேதாந்தங்களை கற்றுத் தேர்ந்து என்ன பயன்? என மிகவும் வருந்தி அழுதாராம்.

ree

அவர் அனைத்து சொத்தையும் கைவிட்டதோடு மட்டுமல்லாமல், அவர் ஸ்ரீரங்கத்தில் உஞ்சவ்ருத்தி (பிக்ஷை) செய்து தான் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் சோதனை போல அவருக்கு அன்று பிக்ஷை எதுவும் கிடைக்கவில்லை. நல்ல மழை அன்று. அதனால் அவர் ஒன்றும் கவலைப்படவில்லை. இருந்தாலும் அவர் மனைவி ஆண்டாள் கவலைப்பட்டு வருந்தி, ஸ்ரீ ரங்கனை மனமுருக வேண்டி, உன் தொண்டன் பசியோடு இருக்கும்போது நீர் அருள் செய்யாமல் இருப்பது ஏன் என்று மனத்துள் நினைத்தாள். அந்தச் சமயம் அரங்கனுக்கு இரவு பூஜை மணி அடித்தது. ஆண்டாளின் வருத்தத்தை அறிந்த அரங்கன், தன் அர்ச்சகர்கள் மூலம் தான் அமுது செய்த பிரசாதங்களை ஆழ்வானின் இல்லத்துக்கு அனுப்பிவைத்தார். பிரசாதங்களை எடுத்து வந்த அர்ச்சகர்களைக் கண்டு ஆழ்வான் ஆண்டாளிடம், ‘நீ அரங்கனிடம் குறைபட்டு கொண்டாயா?’’ என்று கோபித்துக் கொண்டார். இதுவும் அரங்கனின் லீலை தான். முன்பு தசரதருக்கு புத்திர காமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயசத்தின் மூலமாக, இராமர், இலட்சுமணர், பரதர், சத்ருக்னர் ஆகிய நால்வரும் எவ்வாறு அவதரித்தனரோ, அவ்வாறே ஆண்டாள் அமுது செய்த அவ்விரு பகுதி அரவணை பிரசாதத்தினால் ஐய்யிரு திங்களில் இரண்டு திருக்குமாரர்கள் அவதரித்தனர். செய்தியறிந்து குதூகலப்பட்ட இராமானுஜர் குழந்தைகளைக் கண்குளிர நோக்கி, மிகுந்த மகிழ்ச்சியுடன் தமது திருக்கரங்களால் அவர்களைத் தூக்கிக் கொஞ்சினார். அக்குழந்தைகளுக்கு ‘பராஸர பட்டர்,’ ‘வேத வியாஸ பட்டர்’ என்று பெயரிட்டார். அதன் மூலம், அவர் ஆளவந்தாரின் விருப்பத்தை பூர்த்தி செய்தார். விஷ்ணு புராணம் அருளிய பராசரர், மஹாபாரதம் அருளிய வேத வியாஸர் ஆகிய இருவரின் பெயர்களை தகுதியுள்ளோருக்குச் சூட்டி பெருமை சேர்க்க வேண்டும் என்பதே ஆளவந்தாரின் அந்த விருப்பம். மேலும் ஆழ்வானின் திருக்குமாரர்கள் (பராசர பட்டர் & வேதவியாசர்/ ஸ்ரீராம பிள்ளை) அவதரித்த பொழுது எம்பார் த்வய ப்ரகரணம் செய்து, எம்பெருமானார் குழந்தைகளின் தேஜஸை கண்டு அகமகிழ்ந்து எம்பார் ஆசார்யனாக இருந்து குழந்தைகளை ரக்ஷிக்கட்டும் என்று ஆசீர்வதித்தார். இரு குமாரர்களும் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம் தழைத்தோங்க காரணமாயிருந்தார்கள்.


தீவிர சைவ பக்தனான குலோத்துங்க சோழன் வைணவத்தை அறவே வெறுத்தான். வைணவ மதத்திற்கு தலைவராக இருக்கும், ராமானுஜரை அழைத்து, அவரிடம் சிவமே சிறந்தது என்று கையெழுத்து வாங்கினால், வைணவத்தை வேரோடு அழித்து விடலாம் என்று கூரத்தாழ்வானின், சிஷ்யனாக இருந்த நாலூரான் என்பவன் அரசனிடம் கூறினான். அரசனும் சேவகர்களை அனுப்பி, ராமானுஜரை அழைத்துவரப் பணித்தார். இதனைக் கேள்வியுற்ற கூரத்தாழ்வான், எம்பெருமானார் அரசனிடம் சென்றால், அவருக்கு தீங்கு ஏற்படும் என்று அஞ்சி குருவை காப்பாற்ற வேண்டியது, சிஷ்யனின் கடமை என்று அவரே, ராமானுஜர் வேடத்தில் அரசனை சந்திக்க தான் செல்வதாக உடையவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டு அவரை அவ்விடத்தை விட்டு விரைவில் அகலுமாறு விண்ணப்பித்தார். கூரத்தாழ்வானுடன் அரசனைக் காண பெரிய நம்பிகளும் உடன் சென்றார். உடையவா் நம்பிக்கைக்கு உாியவா்களோடு அங்கிருந்து புறப்படத் தயாரானாா். அடையாளம் காணமுடியாதபடி தாம் அணிந்திருந்த வெள்ளை உடைகளை உடையவா் அணிந்து கொள்ளச் செய்து அவரது காஷாய வஸ்திரத்தைத் தாம் அணிந்து கொண்டாா் கூரத்தாழ்வான். உடையவா் மனம் கலங்க திருவரங்கத்தை விட்டு வெளியேறி சத்தியமங்கலம் வழியாக திருநாராயணபுரம் சென்றாா். அன்று உடையவா் அணிந்த வெள்ளை வஸ்திரத்தை நினைவூட்டும் வண்ணம் இன்றும் #வெள்ளைச்_சாத்து நிகழ்ச்சி எம்பெருமானாா் திருஅவதாரம் செய்த ஶ்ரீபெரும்புதூாில் சிறப்பாகக் கொண்டாடப்படு கிறது.


சோழ மன்னனின் வீரா்கள் காவியுடை, திரிதண்டத்துடன் அவைக்கு வந்த கூரத்தாழ்வானை இராமானுஜர் எனக் கருதிய சோழ மன்னன், அவரிடம், #ஷிவாத்_பரதரம்_நாஸ்தி என்று எழுதிய ஓலையில் கையொப்பமிடச் சொன்னான். அப்போது நாலூரான், “இவர் இராமானுஜர் இல்லை. இருப்பினும், இராமானுஜரின் இன்னொரு உரு என்பதால், இவர் கையொப்பம் இட்டாலே இராமானுஜர் கையொப்பமிட்டதற்கு சமம்” என்றான். கூரத்தாழ்வார் அரசனிடம், பரம்பொருளை நாமாக நிர்ணயம் செய்ய இயலாது. இவ்வுலகைக் காண கண்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோல் பரம்பொருளைக் காண சாஸ்திரங்கள் முக்கியம். சாஸ்திரங்களை அறிந்த அவைச் சான்றோர்களை எம்முடன் வாதிடச் சொல்லுங்கள். சாஸ்திர பிரமாணங்களைக் காட்டி வாதிட்டால், அவை யாரை பரம்பொருளாகக் கூறுகின்றன என்பதைத் தெளிவுபடத் தெரிந்து கொள்ளலாம் என்றார். அதன் பின்னர், கூரத்தாழ்வார் ஒரு வார காலம் அச்சபையில் ஸ்ரீமந் நாராயணரே பரம்பொருள் என வாதிட்டார். அங்கிருந்த பெரியநம்பிகளும் பல பிரமாணங்களைக் காட்டி விஷ்ணுவே பரம்பொருள் என்பதை நிலைநாட்டினார். சோழனின் அரசவைப் புலவர்கள் எதிர்வாதம் செய்ய இயலாது தலைகுனிந்தனர். அதைக் கண்ட அரசனின் கோபம் எல்லை கடந்தது. “இந்த அந்தணர்களின் கண்களைப் பிடுங்கி குருடர்களாக்கி அனுப்பி விடுங்கள்,” என்று அரசன் தனது ஆட்களுக்கு உத்தரவிட்டான். ஆனால் கூரத்தாழ்வானோ, ‘உன்னைப் போன்ற பாவிகளைக் காணாமல் இருப்பதே மேல்’ என்று கூறி, தன் கண்களைத் தாமே பிடுங்கிக்கொண்டார். நம்பிகளின் கண்களை சேவகர்கள் பிடுங்க அதனால் கண்கள் சீழ் பிடித்து அவர் விரைவில் பரமபதம் எய்தினார்.


பிறகு கூரத்தாழ்வான் திருமாலிருஞ்சோலை சென்றடைந்து , அங்கே சில காலம் வசித்தார். முன்னதாக, கூரத்தாழ்வான் சொல்படி ராமானுஜர், மேலக்கோட்டைக்குச் சென்று 12 ஆண்டுக் காலம் வசித்து, அங்கு திருநாராயணனுக்குக் கோயில் கட்டி வைணவத்தை வளர்த்தார். சுமார் 12 வருடங்கள் கழித்து சோழ அரசன் இறந்த பிறகு, ராமானுஜர் ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பி வந்தார். ராமானுஜரும் கூரத்தாழ்வானும் காஞ்சியில் சந்தித்துக் கொண்டார்கள். ஸ்ரீராமானுஜர் மிகவும் வேதனையுடன், ஆழ்வானை வாரி அனைத்துக் கொண்டு “விசிஷ்டாத்வைத தர்சனத்துக்காக ,உமது கண்ணை இழந்தீரே. உமக்கா இந்த நிலமை என்று அழுதார். அதற்கு ஆழ்வான், ”ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் திருமண் கோணியது என்று அபசாரப்பட்டிருப்பேனோ ” என்றாராம் பாகவத அபச்சாரம் என்பது எந்த ரூபத்திலும் இருக்கக் கூடாது என்று பார்த்துக் கொண்டவர். ஸ்ரீராமானுஜரையும், சம்பிரதாயத்தின் கௌரவத்தையும் காக்க தன் கண்களைத் தியாகம் செய்தார். ஆழ்வானும் எம்பெருமானாரும் காஞ்சிபுரத்துக்கு வந்த சமயம் உடையவர் ஆழ்வானை #வரதாராஜஸ்தவத்தை பேரருளாளன் முன்பு விண்ணப்பம் செய்து, பதிலுக்குக் கண்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று நியமித்தார். கூரத்தாழ்வானும் ஆசாரியர் கட்டளையை மறுக்க விரும்பாமல் அப்படியே செய்ய ஆரம்பித்தார். அப்போது ஸ்ரீராமானுஜர் கோயிலை பிரதக்‌ஷணம் செய்யப் போக ஆழ்வான் முடிக்கும் சமயம் பேரருளாளர் “என்ன வேண்டும் என்று கேட்க ” அதற்குக் கூரத்தாழ்வான் “நான் பெரும்பேறு நாலூரானும் பெற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். (அதாவது ஸ்ரீராமானுஜ சம்பந்தத்தால் தான் மோட்சம் அடைவது மாதிரி நாலூரானும் பெற வேண்டும் என்று கொள்ள வேண்டும்.)

ree

எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தை விட்டு மேல் கோட்டை எழுந்தருள்வதற்கும், ஆழ்வான் தன் திருக்கண்களை இழப்பதற்கும், பெரிய நம்பி பரமபதம் அடைவதற்கும் காரணமாக இருந்த நாலூரானும் உய்ய வேண்டும் என ஆழ்வான் நினைத்தது அவரின் ஆத்ம குணத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. பிராட்டி தனக்கு தீங்கு இழைத்த 700 ராட்சசிகளையும் எப்படி ரட்சித்தாரோ, அதே போல் நாலூரானை ரட்சித்து அடியேன் பெரும் பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வரதராஜனிடம் வேண்டினார் ஆழ்வான். ஆழ்வான் கண்கள் இல்லாமல் திரும்பி வந்ததை கண்டு எம்பெருமானார் நடந்ததை கேட்டறிந்து, அவரை ஆரதழுவி கொண்டார். தீங்கு செய்தோருக்கும் நன்மை செய்யும் குணம் தான் வைஷ்ணவம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஆழ்வான் நின்றிருந்தார். மீண்டும் எம்பெருமானாரின் அதீத வற்புறுத்தலின் காரணமாக பெருமாள் கோவில் சென்று ஸ்தோத்திரங்கள் பாடினார். வரதன் என்ன வேண்டும் என கேட்க “அடியேனின் ஆசார்யன் தனக்கு கண்களை வேண்டும்படி அனுப்பியதாகவும், ஆனால் தனக்கு துளியும் விருப்பம் இல்லை” என்று ஆழ்வான் கூறினார். உடன் வரதன் உன் ஆசார்யன் கோரிக்கையை செவிமடுத்து உனக்கு கண்களை தந்தோம், இந்த கண்களை கொண்டு உன் ஆசார்யனையும், என்னையும் மட்டுமே காண முடியும் என்று அருளினார். ஆழ்வான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை..


காலம் சென்றது. ஸ்ரீரங்கத்தில் கூரத்தாழ்வானின் மனம் கொஞ்சம் தளர்ந்திருந்தது. எப்படி வரதராஜ பெருமாள் காஞ்சியில் திருக்கச்சி நம்பிகளுடன் உரையாடுவாரோ அதே போல ஸ்ரீரங்கத்தில் அரங்கன் இவருடன் உரையாடுவார். பெரிய பெருமாள் அவரிடம் உமக்கு என்ன கலக்கம், என்ன வேண்டும் என்று கேட்க, அதற்கு ஆழ்வான், “உடல் மிகவும் தளர்ந்து பகவானை முழுமையாக அனுபவிக்க, கைங்கரியம் செய்ய முடியவில்லை, அதனால் என்னை விடுவித்து பரமபதத்தில் ஆத்மாவை நிலைக்க வைக்க வேண்டும் என்று வேண்டினார். பெருமாள் அவருக்கு மட்டும் அல்லாமல் அவரைச் சார்ந்த எல்லோருக்கும் பரமபதத்தை அளித்தார். இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீஇராமானுஜர் சந்தோஷமும் அதே சமயம் வருத்தமும் அடைந்தார். (சந்தோஷம் எதனால் என்றால் அவர் தன் குருவான திருக்கோட்டியூர் நம்பிகளிடம் வேறு யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்து பெற்ற மந்திரத்தை அனைவரும் உய்ய வேண்டும் என்று மதில் மேல் ஏறி ஊர் மக்களுக்கு உரைத்ததால் தனக்கு நரகமே கிட்டும் என்று நினைத்திருந்தார். இப்போது அவருக்கும் கூரத்தாழ்வான் சம்பந்தத்தால் முக்தி நிச்சயம் என்று அறிந்து சந்தோசம்.) ஆனாலும் அவர் பிரிவை எண்ணி ஆற்றாமை எழுந்தது. “எனக்கு முன் நீர் முந்திக்கொண்டீரே ? உம் பிரிவை எப்படித் தாங்கிக்கொள்வேன் ” என்ற போது ஆழ்வான், திருவாய்மொழி #சூழ்விசும்பு என்று தொடங்கும் பாசுரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் புகுகின்ற புதியவர்களுக்கு (ஜீவாத்மாவிற்கு) வரவேற்பு பற்றி கூறப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டி, தாம் முன்னே சென்றால் தான் பரமபதத்துக்கு பின்னே வருபவர்களுக்கு (ஸ்ரீராமானுஜர்) எதிர்கொண்டு மரியாதையுடன் வரவேற்க முடியும். சீடரான தாம் முறைப்படி வரவேற்பு அளிப்பது தானே சரியாக இருக்கும் என்று கூறினார். இதைக் கேட்ட ராமானுஜர் ஆழ்வானை தன் மார்புடன் அணைத்துக்கொண்டார். கூரத்தாழ்வான் பரமபதம் புறப்படும் சமயம், ஸ்ரீஇராமானுஜர் ஆழ்வானின் காதுகளில் திருமந்திரத்தை ஓதினார். பிறகு மீண்டும் ஓதினார். பக்கத்தில் இருந்த சீடர்கள் ஏன் மறுபடியும் ஓதினீர்கள் என்று கேட்க அதற்கு உடையவர் ஓர் அரசிளங்குமாரன் வாயில் கற்பூரத்தைப் போட்டு கொள்ளாமல் இருந்தால் அவன் நாக்கு உலர்ந்து போய்விடும். அதே போல ஆழ்வானுக்குத் திருமந்திரம் தான் கற்பூரம், கூரேசர் நாக்கு உலர்ந்து போகாமல் இருக்க மீண்டும் திருமந்திரத்தை ஓதினேன் என்றார். என்ன மாதிரி ஆசாரியன், என்ன மாதிரி சிஷ்யன்!

ree

ஆழ்வானிடம் ஆசார்யன் மற்றும் சிஷ்ய லக்ஷணம் இரண்டுமே பூரணமாக இருந்தது. சிஷ்யர்களுக்கு உபதேசிக்கும் பொழுது கூட எம்பெருமானாரின் கையாக இருந்து செயல்படுகிறேன் என்பாராம் ஆழ்வான். பிள்ளைப் பிள்ளையாழ்வான், திருவரங்கத்தமுதனார், நாலூரான், வடுகநம்பி ஆகியோர் இவருடைய சீடர்கள். அனுஷ்டானத்தில் பலரைத் நிறுத்தியவர் அவர். தனது மகன்களான பராசர பட்டர், வேதவியாச பட்டர் உட்பட தன்னிடம் சீடர்களாக இருந்தவர்களுக்கு ஸ்ரீபாஷ்யத்தின் உட்பொருளை மிக நன்றாகப் போதித்தார் கூரத்தாழ்வான். அனைத்தும் ஸ்ரீமந் நாரயணணுக்கே அடிமை என ஆழ்வான் எப்பொழுதும் மெய் தத்துவத்தையே உபதேசித்து இருந்தார். அப்பன் என்ற தனவந்தர் கூரத்தாழ்வான் திருமாளிகைக்கு பக்கம் வசித்து வந்தார். ஆழ்வானைப் பற்றி அறிந்து அவரின் சீடராக வேண்டும் என்று விரும்பி ஆழ்வான் இல்லத்துக்கு வந்தார். துரதிஷ்டவசமாக அப்போது ஆழ்வான் உயிர் பிரியும் சமயமாக இருந்தது. அதனால் அப்பன் ஆழ்வானைப் பார்க்க முடியவில்லை. மிகவும் மனம் வருந்தினார். அருகிலிருந்த பட்டரிடம் என்ன செய்யலாம் என்று கேட்க அதற்குப் பட்டர் “எப்பொழுது அப்பன் ஆழ்வானை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாரோ அப்போதே ஆழ்வானின் சீடராகிறார்” என்றார். அவர் ஆச்சார்யனாக அனைவரையும் அரவணைக்கிறார்.


திரிதண்டி காஷாயம் அணிந்து எம்பெருமானாரை காக்க சோழ அரசவை சென்று ஆழ்வான் தன் திருக்கண்களை இழந்தது ஆசார்ய பக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு. ஒரு சமயம் சோழ அரசன் எம்பெருமானாரை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்ல தடை விதித்து “தனக்கும் எம்பெருமானாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கையோப்பம் இடுபவர்கள் மட்டுமே அரங்கனை சேவிக்கலாம் என்று கட்டளையிட்டான். எம்பெருமானார் சம்பந்தம் இல்லாமல் போனால் இந்த ஆழ்வான் இல்லை என்று கையோப்பமிட மறுத்து அரங்கனை துறந்தார் என்கிறது ஆழ்வானின் சரித்திரம். ஆளவந்தாரின் இறுதி ஆசைகளான - 1. வேதங்களைத் தொகுத்த வேதவியாசரின் பெயர் விளங்கச் செய்வது, 2. பராசர ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் இயற்றிய பராசரரின் பெயர் விளங்கச் செய்வது, 3. பிரம்மசூத்திரத்திற்கு உரை நூல் செய்வது என்ற மூன்று விருப்பங்களையும் இராமானுசர் நிறைவேற்ற கூரத்தாழ்வான் உறுதுணையாக இருந்ததை அவரது திருக்குமாரர்களின் திருப்பெயர்களிலிருந்தும் ஸ்ரீபாஷ்யம் இயற்றுவதிலும் பரப்புவதிலும் அவர் செய்த அருந்துணையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

ree

ஆழ்வான் திவ்ய பிரபந்தத்திற்கு வியாக்கியானமாக பஞ்ச ஸ்தவம் அருளியுள்ளார். இதனை நம் பூர்வாசார்யார்கள், பெண்ணிற்கு எப்படி எத்தனை ஆபரணம் இருந்தாலும் திருமாங்கல்யத்திற்கு ஒப்பாகாதோ, அதற்கு ஈடு இந்த பஞ்ச ஸ்தவம் என்று சாதித்துள்ளனர்.

  1. வைகுண்ட ஸ்தவம்

  2. அதிமாநுஷ ஸ்தவம்

  3. சுந்தரபாஹு ஸ்தவம்

  4. வரதராஜ ஸ்தவம்

  5. ஸ்ரீ ஸ்தவம்

  6. ஸ்ரீவைகுண்டஸ்தவம்

  7. யமகரத்நாகரம்

  8. கத்தியத் திரய வியாக்கியானம்

முதலிய நூல்களைச் செய்தவர் ஆழ்வான். எம்பெருமானார் மேல் கோட்டை எழுந்தருளி, ஆசார்யர் பெரிய நம்பி பரமபதித்து, அவருக்குக் கண்களும் போய் கோவிலுக்குள் செல்லவும் கிருமி கண்ட சோழனின் கெடுபிடியால் அரங்கனை சேவிக்க வழியில்லாத அந்த சமயத்தில் பாண்டிய நாடான திருமாலிருஞ்சோலைக்கு மிகுந்த மன துயருடன் போகும் போது வழியில் அவர் சாதித்த ஸ்தோத்திரங்கள் தான் வைகுண்ட ஸ்தவம் – பர & வைகுண்டத்தை பற்றிய அருளிச்செயல் & அதிமாநுஷ ஸ்தவம் விபவ அவதாரங்களை பற்றிய அருளிச்செயல். திருமாலிருஞ்சோலையில் இருக்கையில் சுந்தரத் தோளுடையானை பற்றிய அருளிச்செயலே சுந்தரபாஹு ஸ்தவம். ஆழ்வான் இறுதியாக ரங்க நாச்சியார் (தாயார்) மேல் கொண்ட பக்தியினால் சாதித்த ஸ்தோத்திரங்களே ஸ்ரீ ஸ்தவம். விவாஹம் முதலிய சுப முஹூர்த்தங்களில் பாடப்படும் லக்ஷ்மி கல்யாணமே வைபோகமே, மடியிலெடுத்துப் பாலகனை, ஸ்ரீராம், ஜய ஜய , லாலி, ஊஞ்சல் இவை போன்றவைகளும் கூரத்தாழ்வான் அருளியதாகவும் விவாஹ காலத்தில், ஆண்டாள் நாச்சியாரின் வாரணமாயிரம் அநுஸந்திக்கும்படியான

ஏற்பாடுகளைச் செய்தவரும் இவரே என்பர்.


மிகப் பிரபலமான குருபரம்பரையை விளக்கும் தனியன் இவர் இயற்றியது தாம்.

ஸ்ரீ லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாதயா முநிமத்யமாம் |

அஸ்மதார்சாய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||

இந்தத் தனியனில் ஸ்ரீ கூரத்தாழ்வான் குரு பரம்பரையைக் கூறுகிறார். லக்ஷ்மீ நாதன் என்று ஆரம்பித்து, பரம்பரை மத்தியில் ஸ்ரீமந் நாதமுநிகளைச் சொல்லி, அஸ்மதார்சாய பர்யந்தாம் என்று பகவத் ராமாநுஜர் வரையில் சொல்கிறார். லக்ஷ்மியின் நாதன், மகாலட்சுமிக்கு நாதன், பெரியபிராட்டியாரின் நாதன், ஸ்ரீமந் நாராயணன். இவர் முதலாக,

ஸ்ரீமந் நாதமுனிகள் நடுவாக, அடியேனுடைய ஆசார்யன் இறுதிவரை

அடியேனுடைய ஆசார்ய பரம்பரையை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.


ஸ்ரீரங்கம் கோவிலில் பிரதான வாயில் வழியாக அதாவது ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலடி எடுத்து வைத்ததுமே வலப் புறத்தில் இருக்கும் முதல் சந்நிதி மூலையில் ஒடுங்கின மாதிரி இருக்கும். அது தான் கூரத்தாழ்வான் சன்னதி. ஶ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், இரண்டு திவ்யதேசங்களிலும் உடையவர் சன்னதியின் இரண்டு பக்கமும் சித்தர ரூபத்தில் வலது புறத்தில் கூரத்தாழ்வானையும், இடது புறத்தில் முதலியாண்டானையும் சேவிக்கலாம். காஞ்சிபுரம் அருகே உள்ள கூரம் கிராமத்தில் பங்கஜவல்லி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கூரத்தாழ்வானுக்குத் தனி சன்னதி உள்ளது. இத்தலத்தில் ஆழ்வான் பூஜித்து வந்த ஸ்ரீ ராம, லட்சுமண, சீதாதேவி விக்ரகங்கள் இன்றும் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சன்னதியில் காணலாம். இத்திருத்தலம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது என்றும், முதன் முதலாக பல்லவர்கள் கருங்கற்களைக் கொண்டு கோயில் எழுப்பும் கலையை இக் கோயிலிலிருந்துதான் ஆரம்பித்தார்கள் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் தரிசனம் கண்டவர்கள் இத்தலத்துக்கு வந்து கூரத்தாழ்வானையும் தரிசித்துச் செல்வது ஐதீகமாக பக்தர்கள் மத்தியில் நிலவுகிறது. இதை கூரத்தாழ்வான் மாளிகை என்கிறார்கள். இங்கே தான் அவர் பிறந்த இடம் என்றும், அவருக்கு சந்நிதி அதே இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. (அங்கே போய் பார்த்தால் எல்லா கல்வெட்டுகள் மேலும் பெயின்ட் அடிக்கப் பட்டு படிக்கவே முடியாத அளவு உள்ளது.) கண் குறைபாடு உள்ளவர்கள் இன்றளவும் கூரத்தாழ்வானை சேவித்து வேண்டிக் கொண்டு குறைபாடுகள் நீங்கப் பெறுகின்றனர். மாணவா்கள் கல்வி ஞானம் பெற இத்தலத்தில் வழிபாடு செய்கின்றனா்.

ree

ree

இவருக்கு 2010ல் #ஆயிரமாவது ஆண்டு கொண்டாடப்பட்டது. இவர் பெருமாளைப் பற்றியும், அவரின் சிறப்புகள் பற்றியும் உலகம் முழுவதும் எடுத்துரைக்கும், நல்ல பல நூல்களை எழுதினார். அவர் காட்டிய வழியில் நாமும் செல்வதே, அவருக்கு நாம் செய்யும் தொண்டாகும். கூரத்தாழ்வானோடு ஒப்பிட்டுச் சொல்ல முன்னும் பின்னும் பக்தர்கள் யாரும் இல்லை. பகவத் பக்தி, பாகவத பக்தி, ஆசார்ய அபிமானம், பௌதிகப் பொருட்களிலும், இல்வாழ்விலும் பற்றின்மை, புலமை, ஒப்பற்ற நினைவாற்றல், அன்பு, அடக்கம், கருணை போன்ற பல நல்ல குணங்கள் அவருக்கு அழகூட்டும் அணிகலன்களாக இருந்தன. அவரின் உயர்ந்த குணங்களை பார்த்து நாமும் நம்மை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வோம். அவரை நினைத்த வண்ணம் இருந்தால் அவரின் அருளால் நாம் அக்குணங்களை பெறுவோம்.

ree

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், கூரத்தாழ்வான்

ஆழ்வானுடைய தனியன்

ஸ்ரீவத்ஸ சிந்ந மிஸ்ரேப்யோ நம உக்திம தீமஹே: யதுக்தயஸ் த்ரயி கண்டே யாந்தி மங்கள ஸூத்ரதாம்:

கூரத்தாழ்வான் அருளிய பஞ்சஸ்தவம் வேதத்திற்கு மங்கள சூத்திரமாக (திருமாங்கல்யம்) உள்ளது (அதாவது இது இல்லாமல் பரதேவதை யார் என்ற தெளிவு நமக்கு கிடைத்திருக்காது), அவரை நான் வணங்குகிறேன்.

ree

கூரத்தாழ்வான் வாழி திருநாமம்:


சீராரும் திருப்பதிகள் சிறக்க வந்தோன் வாழியே!

தென்னரங்கர் சீர் அருளைச் சேருமவன் வாழியே!

பாராரும் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே!

பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே!

நாராயணன் சமயம் நாட்டினான் வாழியே!

நாலூரான் தனக்கு முத்தி நல்கினான் வாழியே!

ஏராரும் தையில் அத்ததிங்கு வந்தான் வாழியே!

எழில் கூரத்தாழ்வான் தன் இணையடிகள் வாழியே!!


இவருடைய திருமாளிகையை, ஸ்ரீரங்கம் கிழக்குச் சித்திரை வீதியில் இன்றும் சேவிக்கலாம்


ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் -

நம் இராமானுஜன் திருவடிகளே சரணம்.

கூரத்தாழ்வான் ~ ஆசார்யர் திருவடிகளே சரணம்

ஸ்ரீ தேசிகன் திருவடிகளே சரணம்


சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்



வேளுக்குடி ஸ்ரீ உ வே கிருஷ்ணன் சுவாமி உபன்யாசம்

https://munnurramesh.wordpress.com/2018/01/15/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D/

 
 
 

Comments


Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Anbezhil's musings. Proudly created with Wix.com

bottom of page