ஸ்ரீ ஹயக்ரீவர் - ஞானக் கடவுள்
- Anbezhil
- May 10, 2021
- 9 min read
Updated: May 13, 2021
கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே. ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ எனும் ஔவையார் வாக்கு (நமக்கு ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதைத் தெரிந்தவரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடியாவது படிக்க வேண்டும் என்பது பொருள்) கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த உலகில் அழியாத ஒரு செல்வம் இருக்கிறது என்றால் அது கல்விச் செல்வமே. எவர் ஒருவராலும் ஒருவரிடமிருந்து தட்டிப்பறிக்கவோ, திருடவோ முடியாதது கல்விச் செல்வமமும், அதன் உதவியால் உண்டாகும் ஞானமுமே ஆகும்.
நாம் கற்பது கல்வி. கற்றதை உள்ளத்தில் வைத்து நன்றாக உணர்ந்து, அதன்படி நடந்து, அனுபவத்தில் உண்மையைக் காண்பது ஞானம். இந்த ஞானம், கல்வி இரண்டும் இல்லாதவர்கள் அறியாமை என்னும் இருளை மட்டுமே பார்க்கிறார்கள். பெருமை வாய்ந்த ஞானத்துக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது ஆய கலைகள் அறுபத்தி நான்கிற்கும் தலைவியாக விளங்கும் சரஸ்வதியை தேவியை தான். சரஸ்வதி தேவிக்கே ஒரு குரு இருக்கிறார். அவர் ஞானமே உருவானவர். அவர் தான் ஞானக் கடவுளான குதிரை முகமுடைய ஸ்ரீ ஹயக்ரீவர்.
இவர் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். தசாவதாரத்தில் ஒருவராக வருவது கிடையாது. நம்மை உய்விக்கும் பொருட்டு அவர் புரிந்த பல லீலைகளில் ஹயக்ரீவ அவதாரமும் ஒன்று. பரிமுகக் கடவுள் என்றும் குறிப்பிடப் படுகிறார். க்ரீவ என்றால் கழுத்துப் பகுதி. நான்கு வேதங்களை குதிரை ரூபத்தில் வந்து களவாடி ஒளித்து வைத்த மது கைடபர் என்ற அசுரர்களை வீழ்த்தி வேதங்களை திரும்ப எடுத்து வந்த கழுத்துக்கு மேலே குதிரை முகத்துடனான திருமாலின் அவதாரமே ஹயக்ரீவ அவதாரம் ஆகும். நரசிம்ம அவதாரத்தில் சிங்க முகத்துடன் வந்தவர் இந்த அவதாரத்தில் வெண் குதிரை முகத்துடன் வந்தார். இவரை ஹயமுகன் என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது.
நான்கு வேதங்களின் துணைகொண்டு நான்முகனான பிரம்மன் தனது படைத்தல் தொழிலை செய்து வந்தார். மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் பேராசையின் காரணமாக பிரம்மாவிடம் இருந்த வேதங்களை குதிரை வடிவில் வந்து திருடி சென்றனர். இதன் காரணமாக உலகம் இருளில் மூழ்கியது. எனவே பிரம்மா, மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார். இதையடுத்து மகாவிஷ்ணு ஆவணி மாதம் பௌர்ணமி திதியில் திருவோண நட்சத்திரத்தில் குதிரை முகம், மனித உடல், நான்கு கரங்களுடன் அழகிய நீண்ட நாசியுடன், ஆகாயமும் பாதாளமும் இரண்டு கர்ணங்களாக, சூரிய கிரணங்கள் பிடரி கேசமாகவும், சூரியனை விஞ்சக்கூடிய ஒளி, கண்களாக சூரிய சந்திரர்கள், கண் இமைகளாக கங்கை மற்றும் சரஸ்வதி, தெய்வ ஒளி வீசும் வடிவம் ஆகியவற்றுடன் திருவடிவம் கொண்டு ஸ்ரீ ஹயக்ரீவராக அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்க சென்றார்.

அந்த அரக்கர்களிடம் இருந்து வேதங்களை மீட்கவே உலகம் இருள் அகன்று ஒளி உண்டாகியது. அசுரர்கள் கை பட்டதால் பெருமை குன்றியதாக வேதங்கள் நினைத்தன. எனவே தங்களை புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரை முகத்துடன் இருந்த பெருமாள் உச்சி முகர்ந்தார். இதனால் அவரது மூச்சுக்காற்றால் வேதங்கள் புனிதமடைந்தன. அசுரர்களிடம் போரிட்டதன் காரணமாக ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்ததால் அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம். ஞானம் உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால் லட்சுமியை இடது பக்கம் அமர்த்தியிருக்கிறார்.
பரம்பொருளின் இந்தச் செயலை நாலாயிர திவ்யப் பிரபந்தம் அற்புதமாக வர்ணிக்கிறது.
முன் இவ்வுலகேழும் இருள் மண்டி யுண்ண
முனிவரொடு தானவர்கள் திசைப்ப, வந்து
பன்னுகலை நால் வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய எம் பரமன் காண்மின் ,
செந்நெல்மலி கதிர் கவரி வீச சங்கம்
அவை முரலச் செங்கமல மலரை ஏறி
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து
அணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே!
( நாலாயிர திவ்யப் பிரபந்தம் - இரண்டாயிரத்தில் ஏழாம் பத்து - எட்டாம் திருமொழி)
வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிவை
பயந்தவனே! எனக்கருள் புரியே!
உயர்கொள் மாதவிப்போதொடுலாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும்
பொழில் சூழ் திருவெள்ளறை நின்றானே.
(நாலாயிர திவ்யப் பிரபந்தம் - இரண்டாயிரத்தில் ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி)ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி
கடலூர் மாவட்டம் திருவஹீந்தபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். திருவஹீந்தபுரத்தில் வைணவ ஆச்சார்யர் ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகன் கருடமந்திரத்தை ஆவ்ருத்தி செய்ததால் கருட பகவான் மகிழ்ந்து இவருக்கு ஹய்க்ரீவ மந்திரத்தை உபதேசித்து ஹய்க்ரீவ விக்ரகத்தையும் கொடுத்து மறைந்தார். ஔஷதகிரி என்ற மலையின் மேல் ஹயக்ரீவ மந்திரத்தையே இவர் தொடர்ந்து ஜபிக்க ஹயக்ரீவர் நேரில் எழுந்தருளி இவருக்குக் காட்சி கொடுத்து அருள் புரிந்தார். அதன் பின் சுவாமி தேசிகன் பற்பல சமஸ்க்ருத ஸ்லோகங்களும், தமிழில் மும்மணிக்கோவை நவமணி மாலை போன்றவைகளையும் எழுதினார். ஸ்ரீ வேதாந்த தேசிகன் அப்பொழுது இயற்றிய ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தின் 33 ஸ்லோகங்களில் முதல் ஸ்லோகம் இது.
“ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே”
நன்றி உ.வே. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள்
சின்னக் குழந்தைகளுக்கு இந்த ஸ்லோகத்தை சொல்லிக் கொடுத்து விட்டால் அவர்கள் இளம் வயதில் இருந்தே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். ஹயக்ரீவரின் திருமேனி ஞான ஆனந்த மயம் தேவம். அவருக்குக் கல்வியே ஒரு விளையாட்டு. தேவம் என்பதற்கு ஒரு பொருள் விளையாட்டு, இன்னொன்று ஒளி பொருந்தியது. அவருடைய தேகம் ஞானம் என்னும் ஒளியினால் ஆக்கப்பட்டது. அதனால் அவருக்கு ஞானம் மிக எளிமையானது, எனவே அதை அவரிடம் வேண்டினால் விளையாட்டாக கொடுத்துவிடுவார். முதலில் படிப்பறிவு வேண்டும், பின் அதன் மூலம் வரும் ஞானத்தால் ஆனந்தம் வரும். ஞானம் இருந்தால் தான் அதைக் கொண்டு ஆனந்தத்தைப் பெற முடியும், அனுபவிக்க முடியும். தெளிவு பிறக்கும் எப்படிப்பட்ட தெளிவு என்றால் ஸ்படிகம் போன்ற தெளிவு. இவை அனைத்துக்கும் ஆதாரம் பெருமாள் தான். மொத்த அறிவுக்கும், கல்விக்கும், கலைக்கும் இருப்பிடம் அவர் தான். அதனால் அவரை தொழுவோம் என்கிறது ஸ்லோகம். ஞானமும் ஆனந்தமயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன். என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
அவர் மேலுள்ள தியான ஸ்லோகம் :
வ்யாக்யா முத்ராம் கரஸரஸிஜை புஸ்தகம் சங்கசக்ரே
பிப்ரத் பிந்ந ஸ்படிக ருசிரே புண்டரீகே நிஷண்ண: |
அம்லாந ஸ்ரீ: அம்ருத விசதை: அம்சுபி: ப்லாவயந்மாம்
ஆவிர்பூயா தநகமஹிமா மாநஸே வாகதீச: ||
‘ஞானமுத்திரை, சுவடி, சங்கு, சக்கரம் ஆகிய வற்றை நான்கு திருக்கரங்களிலும் தாங்கி, ஸ்படிகம் போன்ற திருமேனி துலங்க, செந்தாமரை மீது வீற்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்ற வாக்கின் அதிபதியான ஹயக்ரீவர், என்னுடைய மனத்திலும் எழுந்தருளி என்னை ரட்சிக்கட்டும்’ என்பது இதன் பொருள். ஸ்ரீ ஹயக்ரீவர் தன் கையில் காட்டும் ஞானமுத் திரையின் மகிமை அளவிடற்கரியது. இந்தத் துதியை தினமும் 12 முறை சொல்லி வந்தால், அந்த ஹயக்ரீவர் நம் மனத் தடாகத்தில் எழுந்தருள்வார்; நம்மை வெற்றியை நோக்கிச் செலுத்துவார். இது நிச்சயம்.

ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் காயத்திரி:
'ஓம் தத் வாகீச்வராய வித்மஹே ஹய்க்ரீவாய தீமஹி தந்நோ ஹம்ஸ ப்ரஸோதயாத்'
`காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்ரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் உண்டு. ஆனால் நாம் பிரபலமாக காயத்திரி மந்திரம் என்று சொல்வது விஸ்வாமித்திரர் இயற்றிய சவிதா காயத்ரி மந்திரத்தை தான்.
ஹயக்ரீவர் கவசம் என்னும் ஸ்தோத்திரம் அதிக ஆற்றல் கொண்டது. சமஸ்கிரதத்தில் உள்ளது இந்த ஸ்லோகம். இந்த ஸ்லோகம் பார்வதி தேவி பரமேஸ்வரனிடம் கேட்டுப் பெற்றது இந்தக் கவச ஸ்லோகம். முதல் ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது: தேவர்களுக்கெல்லாம் தேவனாக, மகாதேவனாக விளங்கும் கருணா மூர்த்தியே, சங்கரா! எல்லோருக்கும், எப்போதும் நன்மைகள் அருள்வதையே தங்கள் அருங்குணமாகக் கொண்டவரே, மஹாலக்ஷ்மி நாயகனான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பல அவதாரங்களைப் பற்றியும், அந்த அவதாரங்களுக்குரிய பல கவசங்களைப் பற்றியும் இயம்பிய இமையோனே, இப்போது ஹயக்ரீவ கவசத்தை உலகோர் நன்மை பொருட்டு அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,’’ என்று சிவபெருமானிடம் விண்ணப்பிக்கிறார் பார்வதி தேவி. அதற்கு சிவபெருமான் "எனக்கு ப்ரியமாக உள்ள தேவியே, எப்போதும் அன்பானவற்றை மட்டுமே பேசுபவளே, பாற்கடலிலிருந்து எடுத்த அமிர்தம் போன்ற, மிகவும் ரகசியமான மந்திரமாகக் கருதப்படும் ஹயக்ரீவ கவசத்தை உனக்காகவும், உலகோர் நன்மைக்காகவும் வழங்குகிறேன்.’ என்கிறார். இந்தக் கவசத்தை குருமுகமாக கற்றுக் கொள்ளலாம். இணையத்திலும் உள்ளது.
ஸ்ரீ லலிதா சஹாஸ்ரநாமத்தை இயற்றியவர்கள் வாக்தேவதைகள். அதை வெளிப்படுத்தியவர் ஸ்ரீ ஹயக்ரீவர் தான். ஹயக்ரீவரின் முதல் சிஷ்யர் அகஸ்தியர். ஆனால் வெகு நாட்களாக தனக்கு ஏன் அதை உபதேசிக்கவில்லை என்று அகஸ்தியர் ஒரு நாள் உணர்ந்து ஹயக்ரீவரிடம் அதைப் பற்றி கண்ணீர் விட்டு கேட்கிறார். அதற்கு ஹயக்ரீவர் இதைத் தான் உன் மனைவி லோபமுத்திரையும் விரும்பினாள், எப்பொழுது வந்து நீ என்னை கேட்பாய் என்று. அவளது பக்தியினால் தான் உனக்கு இந்த எண்ணம் வந்து கேட்க தோன்றியது. லலிதா சஹஸ்ரநாமத்தை யாரும் கேட்டால் மட்டும் சொல்லமுடியும், கேட்காதவர்கள், உதாசீனப் படுத்துபவர்கள் காதில் கூட இது ஒலிக்கக் கூடாது என்று கூறினார். காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியரும் ஹயக்ரிவரும் காமாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரத்தில் தரிசனம் தருகின்றனர்.
காஞ்சி மகா பெரியவா "விஷ்ணுவும் ஹம்ஸாவதாரம், தத்தாத்ரேயர், ஹயக்ரீவர் என்ற ரூபங்களில் நிவ்ருத்தி தர்மத்தை உபதேசித்தார். ஆனாலும் இவற்றில் தசாவதாரம் மாதிரி அவ்வளவு சக்தியைக் காட்டவில்லை. தக்ஷிணாமூர்த்தி, ஹம்ஸர், ஹயக்ரீவர் ஆகியோர் லோகத்தில் ஸஞ்சாரம் பண்ணி ஞானோபதேசம் செய்யவில்லை. ஸநகாதியர், ப்ரம்மா போன்றவர்கள் அவர்களைத் தேடிப்போய் உபதேசம் பெற்றனர். தக்ஷிணாமூர்த்தி வார்த்தையால் உபதேசிக்காமல், அநுபவமாகவே அநுக்ரஹித்துவிடுவார். இப்போது நாம் தெய்வங்களை வேண்டிக் கொள்ளும்போது நம்முடைய வேண்டுதல்களில் பல நிறைவேறுகின்றன. ஆனால் அந்த தெய்வமே ப்ரத்யக்ஷமாகி அப்படிப் பண்ணுவதில்லை. ஸூக்ஷ்மமாகவே பண்ணுகின்றன அல்லவா? அப்படி தக்ஷிணாமூர்த்தி, ஹயக்ரீவர் ஆகியவர்களிடம் ஞானத்துக்காக வேண்டிக்கொண்டு அந்த அநுக்ரஹத்தை ஸூக்ஷ்மமாகப் பெற்றவர்கள், பெறுபவர்கள் உண்டு." என்று கூறியுள்ளார்.
பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார். அங்கு சரஸ்வதி பண்டாரம் என்ற ஸ்தாபனத்தில் இருக்கும் விருத்தி கிரந்தத்தைக் கொண்டு ஸ்ரீ பாஷ்யம் எழுத முற்பட்டார். அதற்கு தமது சீடரான கூரத்தாழ்வானுடன் சென்றார். எனினும் பிற சமயவாதிகளின் எதிர்ப்பால் அவரால் விருத்தி கிரந்தத்தை சில நாட்கள் கூட, தன் பொறுப்பில் வைத்திருக்க முடியவில்லை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். இதனால் மிக வருத்தமடைந்த ராமானுஜர், கூரத்தாழ்வாரிடம் அது பற்றி தமது கவலையை தெரிவித்தார். ஆனால் அந்தக் கிரந்தத்தை தாம் இரவு முழுவதும் கண் விழித்து படித்துவிட்டதாகவும் அதை இப்போழுதே தெரிவிக்கவா அல்லது இரண்டு ஆறுகளின் கரைகளின் நடுவில் சொல்லவா என்று பதில் அளித்தாராம். இரண்டாற்றுக்கு நடுவில் என்பது காவிரி கொள்ளிடம் நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஸ்ரீ ரங்கம். ஸ்ரீ ராமானுஜருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. உடன் ஆழ்வானின் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை எழுதி முடித்தார். இதையறிந்த சரஸ்வதி மாதா ராமானுஜரை மிகவும் பாராட்டி அவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்று திருநாமமிட்டு தனது ஆராதனைத் தெய்வமான லஷ்மி ஹயக்ரிவரின் விக்ரஹ மூர்த்தியையும் அவருக்குப் பரிசளித்தார். அதே ஹயக்ரிவ மூர்த்தி தான் வழிவழியாக ஆராதிக்கப்பட்டு ஸ்வாமி தேசிகனை அடைந்து பின்னர் மைசூர் பரகால மடத்தில் உள்ளது. அந்த லஷ்மி ஹயக்ரிவ மூர்த்தியை மைசூர் பரகால மடத்தில் இன்றும் தரிசிக்கலாம்.
ஒரு சமயம் நிகமாந்த மகாதேசிகன், காஞ்சீபுரம் செல்லும் வழியில் களத்தூரில் ஒருநாள் தங்கினார். அவர் தன்னுடன் எப்போதும் ஹயக்ரீவர் விக்ரஹத்தையும் கொண்டு வருவார். அதற்கு இருவேளையும் பூஜை செய்வார். அன்றைய தினம், மாலை பூஜையின்போது நிவேதனத்திற்குப் பிரசாதம் எதுவும் கிடைக்காததால் துளசி தீர்த்தத்தையே ஹயக்ரீவருக்கு நைவேத்தியம் செய்து, அதையே தானும் பருகி உறங்கப் போனார். அந்த ஊரில் ஏழை விவசாயி ஒருவன் இருந்தான். சிறந்த பக்திமான். அவனுக்குக் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் நெல்லை விளைவித்து அந்த வருமானத்தில் அவன் வாழ்ந்து வந்தான். மறுநாள் அவன் களத்தில் நெல் அறுக்கவேண்டிய நாள். யாராவது திருடர்கள் கதிரை அறுத்துவிடுவார்களோ அல்லது காட்டு மிருகங்களால் பயிருக்கு ஏதாவது சேதம் வந்துவிடுமோ என்பதால் அன்றிரவு தன் நிலத்தைக் காவல் காக்கச் சென்றான். அப்பொழுது பளபளவென ஒரு பெரிய வெள்ளைக் குதிரை, குடியானவனின் நிலத்தில் திருப்தியாக மேய்ந்து கொண்டிருந்தது. கோபம் கொண்ட அவன் குதிரையைத் துரத்த, அது நாலுகால் பாய்ச்சலில் விரைந்து ஓடியது. இவன் பின்னால் துரத்தியபடியே சென்றான். கடைசியில் அந்த அபூர்வ வெள்ளைக்குதிரை நிகமாந்த மகாதேசிகன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்து மறைந்தது. சப்தம் கேட்டு எழுந்த தேசிகனிடம் அவன் விஷயத்தைச் சொல்ல, சுவாமி தேசிகனுக்கு உடல் சிலிர்த்தது. மேய்ந்தது சாதாரண குதிரையல்ல துளசிதீர்த்தம் போதாத, குதிரைமுகக் கடவுளான ஹயக்ரீவனின் லீலை அது என்று புரிந்தது. ``பகவானின் காட்சி கண்ட புண்ணியப் பிறவியப்பா நீ'' என்று அவனிடம் சொல்லி, அவனையும் அழைத்துக்கொண்டு களத்துக்கு விரைந்தார். அங்கே அந்த அற்புதம் நிகழ்ந்திருந்தது. வெள்ளைக்குதிரை நெல்லை மேய்ந்த இடங்களில் எல்லாம் காணாமல் போன நெல் மணிகளுக்கு பதிலாகப் பொன்மணிகள் நிலத்திலே விளைந்திருந்தன. அதனை அடித்துத் தூற்ற அதன் பொன் துகள்கள் பக்கத்து ஊரில் பொன் பதர்களாக விழுந்தது. அன்று முதல் அவ்வூர் பொன்விழுந்த களத்தூர் என்றும் பதர் விழுந்த கிராமம் பொன்பதர்கூடம் எனவும் வழங்கப்படலாயிற்று. (http://www.indiatempletour.com/sri-koothandaramar-temple-pon-vilaintha-kalathur/)
ஹயக்ரீவர் எழுப்பும் "ஹலஹல'' என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாக சொல்லப்படுகிறது. உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய வியாச முனிவருக்கு, ஸ்ரீ ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணம். தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார். ஸ்ரீ ஹயக்ரீவர் ஓம் எனும் பிரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருகிறார். பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஸ்ரீ ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது.
ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் மகன் தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9ஆம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும்,ஞாபக சக்தி அதிகரிக்கும். ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபட்டால் பெரும் சபைகளில் சாதூர்யமாக பேசக்கூடிய தன்மை கிடைக்கும். ஆன்மீக பேச்சாளர்கள், ஜோதிடர்கள், கவிஞர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு ஸ்ரீ ஹயக்ரீவரின் அருள் அவசியம் தேவை.
அனுமன் தூக்கிக் கொண்டு போன சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த ஒரு சிறுபகுதி மலைதான் தற்போது ஹயக்ரீவர் வசிக்கும் திருவஹீந்திபுரம் என்று கூறப்படுகிறது. சுவாமி தேசிகனுக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை, நங்கநல்லூர் ஆகியவை ஹயக்ரீவருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. தாடிக்கொம்பில் உள்ள சுந்தராராஜா பெருமாள் கோவிலில் சரஸ்வதி தேவியும் ஹயக்ரீவரும் அடுத்தடுத்த சன்னதிகளில் இஅருள் பாலிக்கிறார்கள். வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வணங்கலாம். அவர் ஆவதார நன்னாளில் குழந்தைகளுக்கு ஹயக்ரீவர் கோவிலில் அக்ஷராப்யாசம் செய்வது வழக்கம்.
மாத்வ சம்பிரதாய சோதே மடத்தின் ஆசார்யரான ஸ்ரீமத் வாதிராஜ தீர்த்தருக்குப் பிரத்யட்ச மூர்த்தியாக ஸ்ரீ ஹயக்ரீவர் இருந்தார்.(c.1480 – c.1600) அவரின் இஷ்ட தெய்வம் ஹயக்ரீவர். இவருக்கு ஆசார்யர் சமர்ப்பித்த ‘ஹயக்ரீவ மட்டி’ பிரசித்தமான நிவேதனம். ஸ்ரீ ஹயக்ரீவரை துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரங்களில் ஒன்று ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம். ஸ்ரீ ஹயக்ரீவர் துதிகளில் ஸ்ரீமத்வாதிராஜ சுவாமிகள் இயற்றிய துதியே புகழ் பெற்றது
ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம் நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத் தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹீகன்யாப்ரவாஹவத் ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி விசோபதே ஸ வைகுண்ட கவாடோத்காடனக்ஷம ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம் வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்
‘ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவ என்று சொல்லும் பக்தர்களைவிட்டு பாவம் பட்டென்று விலகும்; கங்கை பிரவாகம் போல் வாக்கு வன்மை உண்டாகும்; வைகுண்டத்தின் கதவைத் திறக்கும் சக்தியும் உண்டாகும்’ என்கிறார் இந்த ஸ்லோகத்தை அருளிய ஸ்ரீ வாதி ராஜ ஸ்வாமிகள்.
ஒரு முறை சிற்பி ஒருவர் விநாயகர் விக்ரகம் பஞ்சலோகத்தில் செய்ய முற்பட்டார். அச்சில் வார்த்து எடுத்து பார்த்த பொழுது அந்த சிலை குதிரை முகமும், நான்கு கைகளில் ஒரு கையில் புத்தகம், ஒரு கையில் ஜபமாலை, ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன் அமைந்தது. அதை எத்தனை முறை அழித்து செய்தாலும் விநாயக்ருக்கு பதில் ஹய்க்ரீவ விக்ரகம் தான் வந்தது. அவர் இந்த விக்ரகத்தை என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கையில் இந்த விக்ரகத்தை ஸ்ரீவாதிராஜரிடம் ஒப்படைக்கச் சொல்லி அன்றிரவு அவருக்குக் கனவு வந்தது. அந்த ஹயக்ரீவ விக்ரகத்தை வாதிராஜர் ஆராதித்து வந்தார். ஹ்யக்கீரவருக்கு ஹய்க்ரீவ மட்டி எனும் பிரசாதம் செய்து நிவேதனம் செய்வார். பூஜை முடிந்ததும் கதவுகளை மூடிக்கொண்டு பிரசாத பாத்திரத்தை தன் தலையில் வைத்துக்கொள்வார். ஸ்ரீ ஹயக்ரீவர் வெள்ளைக் குதிரை உரு கொண்டு வந்து தனது முன்னாங்கால்களை வாதிராஜர் தோளில் வைத்து கொஞ்சமே கொஞ்சம் பிரசாதமாக வைத்துவிட்டு மிச்சத்தை சாப்பிட்டு போகும் அதிசயம் நடந்துவந்தது. இப்படி எல்லாம் நடக்க சாத்தியமா என சந்தேகப்பட்டனர் சிலர். ஒரு நாள் பிரசாதத்தில் விஷம் கலந்து வைத்து விட்டனர். அன்றைய தினம் குதிரை உருவில் வந்த ஹயக்ரீவர் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் பிரசாதம் முழுவதையும் தின்றுவிட்டார். அவரது உடல் முழுதும் பச்சை வண்ணமாயிற்று. அதன்பிறகு விசேஷமான ஒரு வகை கத்திரிக்காயை ஒரு சமைத்து படைக்க அதை உண்டதும் பச்சை வண்ணம் நீங்கியது.
அந்த நிகழ்வுக்கு சான்றாக கழுத்தில் மட்டும் பச்சை வண்ணத்தை தாங்கி அருள் பாலிக்கிறார்.

இன்னொரு மாத்வ மகான் ஸ்ரீபாதராஜர். (c.1422 - c.1480) அவர் புகழ் திசையெங்கும் பரவியபோது பலரின் உள்ளங்களில் பொறாமை வந்தது. ஒரு முறை ஸ்ரீ பாதராஜர் காசிக்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட காசி நகரப் பண்டிதர்கள் ஸ்ரீபாதராஜரை வாதத்துக்கு அழைத்தார்கள். ஸ்ரீபாதராஜர் அதற்கு ஒப்புக் கொண்டார். ‘‘இந்த வாத-பிரதிவாதம் அரசரின் முன்னால் நடந்தால் நன்றாக இருக்கும்!’’ என்று தன் எண்ணத்தையும் வெளியிட்டார். பண்டிதர்கள் அதை ஏற்கவில்லை. ‘‘அதற்கு அவசியம் இல்லை. நமக்குள்ளாகவே ஒரு நிபந்தனையின் பேரில் வாதம் செய்யலாம். அதாவது, வாதத்தில் நீங்கள் தோற்றுவிட்டால், எல்லோர் முன்னிலையிலும் கங்கையில் விழுந்து உயிரைவிட வேண்டும். நீங்கள் ஜெயித்து நாங்கள் தோற்று விட்டால், நாங்கள் சந்நியாசிகளாகி விடுகிறோம்!’’ என்றார்கள். நிபந்தனை என்றால், இரு பக்கமும் சரிசமமாக அல்லவா இருக்க வேண்டும்? அப்படியும் பண்டிதர்களின் இந்த நிபந்தனைக்கு ஸ்ரீபாதராஜர் ஒப்புக் கொண்டார். தகவல் அரசனையும் எட்டியது. வாதப் போர் தொடங்கியது. கடைசியில் காசி நகரப் பண்டிதர்கள் எல்லோரும் ஸ்ரீபாதராஜரிடம் தோற்றுப் போனார்கள். அந்தப் பண்டிதர்களின் உள்ளங்களில் பயம் பிடித்துக்கொண்டது. ‘வாதப் போர் பற்றிய நிபந்தனைகள் எல்லாம் அரசனுக்குத் தெரியும். வேறு வழியில்லை. சந்நியாசம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், மன்னன் தண்டிப்பான்!’ என்ற எண்ணத்தில் அனைவரும் துறவு பூண்டார்கள். எனினும், அவர்களால் ஸ்ரீபாதராஜரின் மீதுள்ள கோபத்தைத் துறக்க முடியவில்லை. இனி ஸ்ரீபாதராஜர் எங்கும் வாதம் செய்யக் கூடாது என்று தீர்மானித்து, மந்திரத்தின் மூலம் ஸ்ரீபாதராஜரை வாக்பந்தனம் எனப் படும் வாய்க்கட்டு (வாயிலிருந்து வார்த்தைகள் வெளி வராதபடி) செய்து விட்டனர்.
நடந்ததை உணர்ந்த ஸ்ரீபாதராஜர் இந்த இன்னல் நீங்க ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரம் ஜபித்து அவரிடம் மனதார வேண்டினார். அதிசயம் நிகழ்ந்தது. அந்த இடத்தில் விக்கிரக வடிவமாக ஸ்ரீஹயக்ரீவர் எழுந்தருளி அங்கும் இங்குமாக நடை போட்டார். பின்பு ஸ்ரீபாதராஜரை வாக் பந்தனத்தில் இருந்து விடுவித்தார். இதனால் நெகிழ்ந்த ஸ்ரீபாதராஜர், ஹயக்ரீவரை ஓர் இடத்தில் நிலை நிறுத்தி, தோத்திரம் சொல்லித் துதித்தார். இந்த விக்கிரகம் இன்றும் ஸ்ரீபாதராஜ மடத்து பூஜையில் இருப்பதைக் காணலாம். ஸ்ரீபாதராஜர், பெங்களூருக்கு அருகில் உள்ள முளுபாகல் க்ஷேத்திரத்தில் நரசிம்ம தீர்த்தக் கரையில் கி.பி.1486-ல் தன் பூத உடலைத் துறந்தார். அங்கு ஸ்ரீபாத ராஜரின் பிருந்தாவனமும் நரசிம்ம தீர்த்தமும் உள்ளன. வாழ்நாளில் ஒரு முறையாவது அனைவரும் தரிசிக்க வேண்டிய இடங்கள் அவை.
பெருமாள் கோயில்களில் காணப்படும் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால் கல்வி அறிவு ஏற்படும். நூற்றியெட்டு மணி ஏலக்காய்களைக் கொண்ட மாலையைக் கோத்து, நாற்பத்து எட்டு வாரங்கள் லஷ்மி ஹயக்ரீவருக்குச் சாற்றி வர, கல்வி கேள்விகளில் மிகச் சிறந்த முறையில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. ஏலக்காய் மாலையை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஏலக்காய்கள் மூழ்கும் வண்ணம் தூய்மையான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடம் ஊறினாலே போதுமானது.
நீரை நீக்கிவிட்டு ஊசி நூலினாலோ அல்லது ஊசி நாரினாலோ கோர்த்து அந்த மாலையை சிறிய டப்பாவில் போட்டு இறுக மூடி எடுத்துச் செல்ல வேண்டும். கோயிலில் அந்த டப்பாவைத் திறந்தவுடன் வரும் ஏலக்காய் வாசனையே லஷ்மி ஹயக்கிரீவருக்கான வாசனை திரவிய நிவேதனம். நல்ல கல்வி, ஞானம், உயரிய வருவாய், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகிய அனைத்தும் உரிய காலத்தில் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஹயக்ரீவருக்குப் பிடித்த பிரசாதம் ஹயக்ரீவ பண்டி- இதன் செய்முறை நன்கு வேகவைத்த கடலைபருப்பு, துருவிய தேங்காய், வெல்லம், நெய் சேர்த்துக் கிளறி ஏலக்காய் தூவி எடுத்து வைக்க வேண்டும். இதை அவருக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அவர்களுக்கு நல்ல படிப்பறிவு கிடைக்கும். வியாழக்கிழமைகளில் செய்து கண்டருளப் பண்ணுதல் நலம். முடியாவிட்டால் அவர் திருவவதார தினமான ஆவணி திருவோண நட்சித்தரத்தன்றாவது செய்து வழிபடலாம். பழங்காலத்தில் இருந்தே நமது நாட்டில் ஹயக்ரீவ வழிபாடு இருந்து வருகிறது என்பதையும் அவரின் மகிமையையும் ஹயக்ரீவ உபநிடதம், தலபுராணங்கள், மகான்களது வரலாறு, சிற்ப ஆகம நூல்கள் போன்றவை வெளிப்படுத்துகின்றன. மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள். குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளது
கேட்டவற்றை உடனே அளிக்கும் தெய்வம் ஸ்ரீ ஹயக்ரீவர். அவருடைய அருளால் கஷ்டங்கள் யாவும் நீங்கி, விரும்பியது எல்லாம் கிடைக்கும். பிரம்மாவுக்கு வந்த கஷ்டத்தை நீக்கி வேதனைகளை காப்பாற்றியவருக்கு நம் துன்பத்தைத் தீர்ப்பது எம்மாத்திரம்! ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை கைவரப் பெறுவார்கள். பக்தர்கள் நல்வழிப் பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார். ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச் செய்து நம் மனத்தில் உள்ள அழுக்கை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் தரக்கூடியது. ஹயக்ரீவர் பக்தர்களை எதிரிகளால் வெல்ல இயலாது. ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார். வெறு என்ன வேண்டும் நமக்கு? அதனால் அவரை தினமும் தொழுவோம், சரியான பாதையில் செல்வோம்.
உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய! போதய!
ஓம் ஸ்ரீ ஹயக்ரீவாய நமஹ
Sri Lakshmi Hayagreeva Stotram https://www.youtube.com/watch?v=URLFjODqAoc&ab_channel=AmuthamMusicl
ஹயக்ரீவ கவசம் தமிழ் எழுத்துகளில் https://www.penmai.com/community/threads/sri-hayagriva-kavacham-lyrics-mp3.84468/
https://www.amazon.in/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B9%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-Lord-Hayagriva-Tamil-ebook/dp/B07WS96KKK
Comments