top of page
  • Writer's pictureAnbezhil

சபரி

Updated: Apr 21, 2021

ஸ்ரீமத் பாகவதத்தில் பிரகலாதன் தன் தந்தை ஹிரன்யகசிபுவிற்கு எடுத்துரைத்த நவ வித பக்தி இந்த ஸ்லோகத்தில் உள்ளது.

ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ:

ஸ்மரணம் பாத-ஸேவனம்

அர்சனம் வந்தனம் தாஸ்யம்

ஸக்யம் ஆத்ம-நிவேதனம் (ஸ்ரீமத் பாகவதம் 7.5 23-24)

பகவானிடம் செய்யப்படவேண்டிய பக்தி ஒன்பது விதமானது. இறைவனின் மகிமையை சிரத்தையுடன் கேட்பது; அதை வாயாரச் சொல்வது; அவரை மனதில் நன்கு நினைப்பது; அவரது திருவடிகளில் சேவை செய்வது; அவரை அர்ச்சிப்பது; எட்டு அங்கங்களும் பூமியில் தொடுமாறு விழுந்து வணங்குவது; செய்யும் கர்மாக்களை அவருக்கே அர்ப்பணம் செய்வது; அவரிடம் நட்புகொண்டாடுவது; தன்னையே அர்ப்பணிப்பது. இப்படி பக்தியுள்ள ஒருவரை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு இராமாயணத்தில் வரும் பெண் துறவி சபரி தான். பக்திக்கு இலக்கணம் அவர். அவரின் தன்னலமற்ற பக்தியும் குரு சேவையும் அவருக்கு ராம லக்ஷ்மணர்கள் தரிசனத்தை பெற்று தந்தது, முக்தியையும் கொடுத்தது.


சபரி பிறந்தது ஒரு வேடுவ குடும்பத்தில். ஆனால் வேதம் படித்து, கர்ம, பக்தி, ஞான மார்கத்தில் போய் மகான்கள் அடையக் கூடிய நிலைமையை அவர் அவை எதையும் கற்காமல் அடைந்தார். அதற்குக் காரணம் பக்தி. பிறக்கும்போதே சிலருக்கு தெய்வ கடாக்ஷம் கிடைக்கிறது. இவரும் அப்படிப்பட்டவர் தான். ஐந்து வயது சிறுமியாக இருந்தபோதே வேடுவ குலத்தில் அனைவரும் மிருகங்களை வதைத்து வாழ்வது அவருக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. வேடுவ பெண்கள் எல்லாரும் திருமணம் செய்து கொள்கிறார்கள், பிள்ளை பெற்றுக் கொள்கிறார்கள் அக்குழந்தைகளும் பின்னர் வேடர்களாக அதே பாவத் தொழிலை செய்கிறார்கள், அதனால் இந்த மாதிரி வாழ்க்கையை தானும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று முடிவெடுக்கிறார். சாது மார்க்கத்தில் இருந்து பகவானை அடையவேண்டும் என்று அந்த சின்ன வயதிலேயே தோன்றி, அது அக்குழுமத்தில் இருந்தால் நடக்காது என்று உணர்ந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து விலகி வெளியேறுகிறார். அவர் வெகு தூரம் பயணித்து அடைந்த இடம் மதங்க முனிவரின் ஆசிரமம். அவர் அங்கு சென்றடைந்த நேரம் விடியற்காலை. அப்பொழுது மதங்க முனிவரும் அவர் சிஷ்யர்களும் கற்களும் முட்களும் நிறைந்த ஒரு காட்டுப் பாதையில் நடந்து பம்பை நதிக்கரைக்கு சென்று அங்கு நீராடி திரும்ப ஆசிரமத்துக்கு வந்ததை கவனித்தார். அவரை பார்த்தவுடன் அவர் கடாக்ஷத்தால் சபரியின் மனத்தில் பெரிய மாற்றம் உண்டாகிறது. உடனே அவருக்கு இந்த முனிவருக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணம் பிறக்கிறது. புனித நதிகளில் நீராடுவதோ அல்லது ஒரு கோவிலில் தெய்வங்களை வணங்குவதோ ஒரு சாதுவின் தரிசனம் தரும் பலனுக்கு ஈடாவதில்லை, அவரின் பார்வை ஒருவரை உடனடியாக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கிறது. இதைச் சொல்லும் ஸ்ரீமத் பாகவததின் ஸ்லோகம்



சபரி கொடுத்து வைத்தவர். குருவருள் கிடைத்துவிட்டது. அதனால் இயல்பாக முனிவருக்கு சேவை செய்யத் தொடங்கினார். சபரி சுள்ளிகளை எல்லாம் பொறுக்கி, கொஞ்சம் தென்னங்குச்சி எடுத்து ஒரு துடைப்பம் செய்து மதங்க முனிவரும் அவருடைய சிஷ்யர்களும் தினமும் நீராட போகிற வழியை பெருக்கி, முட்செடிகளை வெட்டி அவர்கள் நடக்கும் போது காலில் முள், கல் குத்தாமல் பாதை அமைத்துத் தருகிறார். சமையலுக்கு விறகு கொண்டு வந்து போடுகிறார். ஆசிரமத்தை நன்கு பெருக்கி நீரிட்டு கோலம் போட்டு குளிர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைக்கிறார். சாஸ்திர தொடர்பான சேவைகளை செய்கிறார்.


மதங்க முனிவர் யார் இம்மாதிரி தினம் செய்வது என்று கேட்க சிஷ்யர்களும் ஆராய்ந்து ஒரு சின்ன குழந்தை வந்திருப்பதாகவும் அவள் இந்த மாதிரி செய்கிறாள் என்று கூறுகின்றனர். நீங்கள் சாப்பிட்ட உடனே அவளுக்கும் சாப்பாடு போடுங்கள் என்று முனிவரும் சிஷ்யர்களிடம் கூறுகிறார். மதங்க முனிவரின் அருள் கிடைத்ததால் தினம் முனிவரை தள்ளி நின்று தரிசனம் செய்வது தேவையான சேவைகள் செய்வது என்று திருப்தியுடன் கைங்கர்யம் செய்து வருகிறார். ஆனால் எந்த நல்ல கூட்டத்திலும் ஒரு போக்கிரி இருப்பது போல மதங்க முனிவர் இருக்கும் இடத்திலும் நல்லெண்ணம் இல்லாத ஒருவர் இருந்திருக்கிறார். இந்த வயதான காலத்தில் முனிவருக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை யாரோ ஒரு பெண் பக்கத்தில் இருக்கிறாள் என்று சொல்லிக் கொண்டே பம்பையில் அவர் நீராடுகிறார். அப்படி பேசினவர் பம்பையில் இறங்கிய உடனே அது துர்நாற்றம் அடிக்கும் சாக்கடையாக மாறிவிடுகிறது. எல்லாரும் பயந்து போய் முனிவரிடம் சொல்கிறார்கள். முனிவர் “நான் சொன்னேன் என்று சபரியை போய் அதில் ஸ்னானம் பண்ண சொல்லு” என்கிறார். சபரி பம்பையில் இறங்குகிறார். இறங்கின உடனே தண்ணீர் முன்பிருந்தது போல தெளிவான, தூய்மையான, ஸ்படிக நீர் போல் ஆகிவிடுகிறது. சபரியின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்கின்றனர். மதங்க முனிவரின் காலம் முடியும் போது அவர் சபரியை கூப்பிட்டு, “நீ இங்கயே இரு, இன்னும் கொஞ்ச காலம் கழித்து ராமலக்ஷ்மணர் என்று இரண்டு பேர் வருவார்கள், அவர்களை தரிசனம் செய்து, பூஜித்து, உபசாரம் செய்து பிறகு நீயும் மேலுலகத்துக்கு வரலாம்” என்று கூறுகிறார். இதனை திடமாக மனத்தில் கொள்கிறார் சபரி. இவ்வாறு அவருக்கு மதங்க முனிவர் மூலமே ராம நாம உபதேசம் கிடைக்கறது. மதங்க முனிவர் வைகுண்டத்திற்குப் போன பிறகு விடாமல் ராமநாம ஜபத்தை செய்து வருகிறார் சபரி. மதங்கரின் சிஷ்யர்களிடம் ராமர் எப்படி இருப்பார் லக்ஷ்மணர் எப்படி இருப்பார் என்று கேட்டுக்கொண்டு ராமலக்ஷ்மண ரூபத்தையே தியானம் செய்து கொண்டு ராம நாமத்தையே இடையறாது ஜபித்துக் கொண்டு இருந்தார். மதங்க முனிவர்களின் சிஷ்யர்கள் காலமும் முடிகிறது.


அதற்குப் பிறகும் சபரி ராம லக்ஷ்மணர்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார். தினமும், அவர்கள் வந்தால் அவர்களுக்கு கொடுக்க பழங்கள் எடுத்து வைப்பதை வழக்கமாக கொள்கிறார். சபரி கடித்துப் பார்த்து சுவையாக இனிப்பாக உள்ளதை ராமருக்கு வைத்தார் என்பது வால்மீகி ராமாயணத்தில் இல்லை. ரொம்ப ஆச்சார அனுஷ்டானத்துடன் ரம்யமானது அவர் குடில் என்று தான் உள்ளது. தூங்கும் பொழுது ராமலக்ஷ்மணர்கள் வந்து விட்டு போய்விட்டால் என்ன செய்வது என்று தூக்கத்தைத் துறந்தார். பிறகு சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது வந்துவிட்டு போய்விட்டால் என்ன செய்வது என்று உண்பதையும் விட்டார். இப்படி சாப்பாடு, தூக்கத்தை விட்டு, ராம நாமத்தை சொல்லிக் கொண்டு, ராம ரூபத்தையே தியானம் செய்து கொண்டு இருந்ததினால் அவர் ஜீவன் முக்தியாக ஆகிவிட்டார். அப்படிப்பட்ட உயர்ந்த சபரியை ராமலக்ஷ்மணர்கள் தரிசனம் செய்கிறார்கள். சபரி அவர்களுக்கு பூஜை செய்கிறார். வால்மீகி ராமாயணத்தில், சபரி பழங்களை கொடுத்தார் என்பது வரை தான் உள்ளது. அதை சாப்பிட்டாரா என்பது பற்றி விவரணை இல்லை. அதற்கு, நைவேத்தியத்தின் போது வால்மீகி திரை போட்டுட்டார் என்று வேடிக்கையாக சொல்வார்கள். வால்மீகி ராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தின் முடிவில் எழுபத்தி நாலாவது சர்க்கத்துல ஒரு ஸ்லோகம்,

தௌ ச திருஷ்ட்வா ததா ஸித்தா சமுத்தாய க்ருதாஞ்ஜலி: |

ராமஸ்ய பாதௌ ஜக்ராஹ லக்ஷ்மணஸ்ய ச தீமத: ||

சபரி ராமலக்ஷ்மணரகளை பார்த்த உடனே எழுந்து வந்து கைக்கூப்பி, அவர்களுடைய பாதங்களை பற்றினார் என்று வருகிறது. அதில் அவரை குறிப்பிடும்போது “சித்தா’ என்று கூறுகிறார் வால்மீகி. சபரி சித்தபுருஷர்களை போல் உள்ளார். மேலும் “சபர்யா பூஜித: ஸம்யக்” என்கிறார் வால்மீகி. சபரி ராமருடைய அடியவர்களுக்கு பூஜை செய்தார். மதங்கருக்கும், மதங்க சிஷ்யர்களுக்கும் சேவை செய்தார். அது தான் உயர்ந்த பூஜை என்று குறிப்பிடுகிறார் வால்மீகி. அப்படி என்றால் மற்ற ரிஷிகளெல்லாம், அரசர்களெல்லாம் செய்ததை விட சபரி என்ன செய்தார் என்றால் அவர் ராமருடைய அடியவர்களுக்கு பூஜை செய்தார். குஹன் போன்ற படகோட்டியும், ஜடாயு போன்ற பக்ஷிகளும், ஜாம்பவான் போன்ற கரடிகளும், ஹனுமார் சுக்ரீவன் போன்ற வானரர்களும், சபரி போன்ற வேடுவ பெண்ணும், யாராக இருந்தாலும் பக்தி தான் முக்கியம் என்பதை இராமாயணம் காட்டுகிறது.

சபரியிடம் ராமர் கேட்கிறார் “நீ செய்த தபஸுக்குக்கு பலன் கிடைத்ததா, உன்னுடைய காமம், கோபமெல்லாம் அடங்கிவிட்டதா, நீ உன் குருவுக்கு செய்த பணிவிடைக்கு உனக்கு பலன் கிடைதத்தா, திருப்தியாக இருக்காயா?" அதற்கு சபரி, “அவர்களுக்கு செய்ததற்கு அற்புத பலன் கிடைத்தது. இன்று உங்கள் தரிசனம் கிடைத்ததால் நான் புனிதம் அடைந்தேன், பூரணமாக திருப்தியாகி விட்டேன்" என்று கூருகிறார். அதற்குப் பிறகு, "இங்கு மதங்க முனிவரின் சிஷ்யர்கள் இருந்தார்களே அவர்களோட மஹிமையை பற்றி தனு என்ற கந்தர்வன் கூறினான், அவற்றை எங்களுக்கு காட்டு" என்று இராமர் கேட்கிறார். “குரும் ப்ரகாஷயேத் தீமான்” - ஒரு புத்திமானாக இருக்கிறவன், தன்னுடைய குருவினுடைய பெருமையை பிரகாசப் படுத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம். சபரிக்கு குரு மதங்கர், மதங்க சிஷ்யர்கள் தானே, அவர்களுடைய பெருமையை அவர் மூலமாகவே உலகத்துக்கு தெரியப் படுத்தவேண்டும் என்பதால் ராமர் அவ்வாறு கேட்கிறார். சபரியும் அழைத்துச் சென்று காண்பிக்கிறார். மதங்க சிஷ்யர்கள் தினமும் ஏழு சமுத்திரத்தில் போய் நீராடிவிட்டு வருவார்கள். வயதான காலத்தில் போக முடியாததால் அந்த ஏழு சமுத்திரத்தையும் ஏழு கிணறுகளாக பக்கத்துலேயே வரவழைத்துக் கொண்டார்கள், ஒன்றில் பால் ஒன்றில் நெய் ஒன்றில் கரும்பு சாறு. ஒன்றில் தூய நீர் என்று ஏழு கிணறுகள் என்று காட்டினார். அதில் நீராடிவிட்டு அவர்கள் பகவானுக்குப் பூஜை செய்த போது போட்ட பூக்கள் இன்னும் வாடாமல் உள்ளன. அவர்கள் ஹோமம் பண்ணின அக்னி இன்னும் அணையாமல் இருக்கு” என்று தனு என்கிற கந்தர்வன் சொன்னது அனைத்தையும் சபரி நேரே காண்பிக்கறார். பிறகு அவர்களுக்கு சுக்ரீவன் இருக்கும் ரிஷ்யமுகப் பர்வதத்துக்கு வழியும் சொல்கிறார்.


அதுக்குப் பிறகு இராமரிடம் “ஹே ராமா! என் உடல் மிகவும் தளர்ந்து போய் விட்டது. நீ பார்க்க நான் என் குருநாதர் இருக்கற லோகத்துக்கு போகிறேன்.” என்றவுடன் ராமர் சரி என்று சொல்கிறார். சபரி ஒரு நெருப்பை மூட்டி அதில் தன் உடலைக் கொடுத்துவிட்டு ஒரு திவ்ய தேகம் எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் செல்கிறார். ஆரண்ய காண்டத்தின் முதலில் சரபங்க முனிவர் ராமரிடம் தன்னுடைய புண்யத்தை எல்லாம் அர்ப்பணம் பண்ணிவிட்டு ராமரிடம்உத்தரவு வாங்கிக் கொண்டு, உடலை நெருப்பில் கொடுத்துவிட்டு திவ்ய தேகம் எடுத்துக் கொண்டு பிரம்ம லோகம் போனார் என்று வருகிறது. அவர் வேதம் படித்தவர். முனிவர். அதே போன்ற ஒரு பாக்கியத்தை, அதே ராம தர்சனத்தோடு இந்த உடலை விட்டுவிட்டு திவ்ய தேகத்துடன் தன் குருமார்களான மதங்க முனிவரும் மதங்க சிஷ்யர்களும் எங்கு போனார்களோ அந்த வைகுண்டத்துக்கு அவரும் போனார். மோக்ஷம் அடைந்தார். இங்கே சபரிக்கு இராமன் மோக்ஷம் தரவில்லை. அவருக்கு அவர் செய்த சேவையால் தானாகவே கிட்டியது. அதற்கு சாட்சியாக இராமபிரான் இருந்தார். “தாயே” என்று ராமனால் அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் சபரி. ஜாதியால் உயர்வு இல்லை என்று ராமனால் போற்றப்பட்டவர். தூய்மையான, எதிர்பார்ப்பு இல்லாத பக்திக்கு உதாரணம் சபரி. சபரி கதையை நினைக்கும் போதும் படிக்கும் போதும் நாமும் அடியார்க்கடியனாக இருக்க வேண்டும் என்று புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் பகவான் விரைவில் திருப்தி அடைந்து நமக்கு நிச்சயம் முக்தி குடுப்பார்.


ஜெய் ஸ்ரீ ராம்! ஹரே கிருஷ்ணா!


references from Wiki and https://valmikiramayanam.in/?p=2197

161 views0 comments

Recent Posts

See All
bottom of page