எம்பெருமானார், உடையவர், எதிராஜர், ஸ்ரீ பாஷ்யகாரர், இராமானுஜர் - பகுதி 2
- Anbezhil
- Apr 18, 2021
- 10 min read
Updated: Apr 25, 2023

எதிராஜரின் திருவரங்கப் பிரவேசம்- இராமானுஜர் துறவு பூண்ட விஷயம் கேள்விப்பட்டு பெரிய நம்பிகள் திருவரங்கத்தில் இருந்தபடி உள்ளம் பூரித்தார். அவதார புருஷர் என்று ஆளவந்தாராலேயே மதிக்கப்பட்ட எதிராஜரை திருவரங்கத்துக்கு அழைத்து வர மடத்தில் உள்ள அனைவரும் ஒரு மனதாக முடிவெடுத்தனர். அந்தப் பொறுப்பும் பெரிய நம்பியிடமே ஒப்படைக்கப் பட்டது. போன முறை மனைவிகளின் பிணக்கினால் இராமானுஜரை திருவரங்கம் அழைத்து வர முடியாமல் போனது. அதனால் இந்த முறை தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றி பெற அரங்கனின் அருளை வேண்டினார் பெரிய நம்பி. உள்ளம் உருகி வேண்டி நின்ற பெரிய நம்பியின் செவியில் படுமாறு ஒரு யோசனையைக் கூறினார் அரங்கன். “தெய்வீக இசையில் வல்லவர் உன் மகன் திருவரங்கப் பெருமாள் அரையர். அவரை காஞ்சிக்கு அனுப்பி வைப்பாயாக. கச்சிப் பெருமான் முன் நின்று இச்சையுடன் அரையரைப் பாடச் சொல். அப்பாட்டுக்கு மயங்கி வரதன் அவனிடம் உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன் என்பார், எதிராஜரே வேண்டும் என்று உறுதியுடன் கேட்கச் சொல். பெருமாள் அருளாணையின்றி இராமானுஜர் திருவரங்கம் வரமாட்டார்” என்று அருளினார்.

அவ்வாறே நிகழ்ந்தது. மனமுருகிப் பாடியதும் என்ன வேண்டும் கேள் என வரதன் சொல்ல, எதிராஜரைப் பரிசாகத் தரவேண்டும் என்று திருவரங்கப் பெருமாள் அரையர் பிரார்த்தித்தார். அருளிச் செயல்களில் பித்தரான வரதரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எதிராஜரை திருவரங்கத்துக்கு அனுப்ப உடன்பட்டார். எதிராஜரும் வரதனைப் பிரிய மனமின்றி ஆனால் தன் பொறுப்புகளை நிறைவேற்றும் பொருட்டுத் திருவரங்கம் கிளம்பினார்.
முதலியாண்டானும் கூரத்தாழ்வாரும் பின் தொடர எதிராஜர் திருவரங்கம் வந்தடைந்தார். திருவரங்கமே இவரை வரவேற்க விழாக் கோலம் பூண்டிருந்தது. பெரிய நம்பிகளின் தலைமையில் எதிராஜருக்கு பெரிய வரவேற்பு அளிக்கப் பட்டது. எதிராஜர் திருவரங்கப் பெருமாள் சன்னதிக்குள் சென்று அரங்கனை கண் குளிரக் கண்டு வணங்கினார். “வாரீர் எம் உடையவரே” என்று வாழ்த்தி வரவேற்றார் திருவரங்கப் பெருமான். அன்று முதல் இராமானுஜருக்கு உடையவர் என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.
பெரிய நம்பிகள் இவரைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் உகுத்தார். இராமானுஜரும் அவரின் தொடர்பினால் தான் தனக்கு அரங்கனுக்கு சேவை செய்யும் பேறு கிடைத்தது என்று நன்றி நவின்றார்.

அன்று முதல், ”தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே!” என்னும் வாழ்த்துரை உறுதியாகும் வண்ணம் உடையவர் தாம் ஆற்ற வேண்டிய திருப்பணிகளை ஆராய்ந்தார். தின விழா, பருவ விழா, மாத விழா, ஆண்டு விழா முதலான அனைத்து விழாக்களும் குறையின்றி நடைபெற, வேண்டிய பாதுகாப்புக்களை எல்லாம் சரிவர செய்யலானார். திருவரங்கர் கோவில் திறவுகோலும் கூரத்தாழ்வார் முயற்சியால் ஆறு மாத காலத்திற்குள் இராமானுஜர் பொறுப்புக்கு வந்தது. அப்பொழுதிலிருந்து திருவரங்கர் சந்நிதியின் கைங்கர்யங்களையும் அவர் முழுதுமாக ஏற்று நடத்தலானார். அது வரை திருவரங்க அமுதனார் என்பவர் பொறுப்பில் அக்கோவில் திறவுகோல் இருந்தது. அமுதனார் அந்தாதி பாடுவதில் வல்லவர். இராமானுச நூற்றந்தாதி பாடி இராமானுஜர் புகழை உச்சத்தில் வைத்தார் திருவரங்க அமுதனார். அவ்வந்தாதி இன்றளவும் புகழ் மங்காமல் ஒலித்து வருகிறது.
உடையவரும் கோவில் திருப்பணிகளில் கவனம் செலுத்தி சோழ சிற்றரசன் அகளங்கனின் உதவியோடு மண்டபங்கள், நந்தவனம் மட்டும் அல்லாமல் மருத்துவ சாலைகளையும் நூல் நிலையங்களையும் நிறுவி பராமரித்தார்.
இவ்வாறு திருவரங்கத்தில் இருந்து கொண்டு திருக்கோயில் திருப்பணிகளை திருத்தமாக செய்து கொண்டும் பெரிய நம்பியிடம் மறை பொருளுக்கு விளக்கங்கள் கேட்டுக் கற்றுக் கொண்டும் இருந்தார் இராமானுஜர். ஒரு நாள் பெரிய நம்பி திருக்கோட்டியூர் நம்பி என்பவரைப் பற்றி அவரிடம் கூறினார். ஆளவந்தாரின் அருளுக்குப் பாத்திரமான அவரிடம் ஆளவந்தார் சில இரகசியமான உபதேசங்களை அருளிச் செய்துள்ளார். அதனால் அவரைப் போய் சந்தித்து அவரிடம் பொதிந்து கிடக்கும் உபதேசச் செல்வங்களைப் பெற்று வருமாறு இராமானுஜரிடம் பெரிய நம்பி கூறினார்.
இதைக் கேட்ட உடையவர் பெரிய நம்பியிடம் விடைபெற்றுக் கொண்டு திருக்கோட்டியூருக்குப் பயணமானார். நம்பியின் திருமாளிகை சென்று கூப்பிய கரங்களுடன் காலில் விழுந்து வணங்கி தான் வந்த காரியத்தை எடுத்துச் சொன்னார். ஆளவந்தார் ஒரு விக்கிரகத்தைத் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் அளித்து, “இதற்கு பவிஷ்யத் அசார்ய விக்கிரகம் (வருங்கால குருவின் வடிவம்) என்று பெயர். இந்த விக்கிரகத்தில் இருப்பவர், பின்னாளில் மிகப்பெரிய ஆச்சாரிய வள்ளலாக விளங்கி, வைணவ நெறியை வளர்க்கப் போகிறார். அவர் உங்களைத் தேடி வரும்போது, கீதையில் கண்ணன் கூறிய “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய…” என்னும் சரம சுலோகத்தின் பொருளை அவருக்கு நீங்கள் உபதேசிக்க வேண்டும்!” என்று கூறியிருந்தார். ஆளவந்தார் தந்த விக்கிரகம் ராமாநுஜருடைய விக்கிரகமே. அவர் சொன்னபடியே சரம சுலோகத்தின் பொருளை அறிவதற்காகத் திருக்கோஷ்டியூர் நம்பியைத் தேடி வந்தார் ராமாநுஜர்.
ஆனால் திருக்கோஷ்டியூர் நம்பியோ, “உலகியல் விஷயங்களில் உள்ள பற்றையெல்லாம் விட்டுவிட்டு வாருங்கள், பின் உபதேசிக்கிறேன்!” என்று சொல்லி ராமாநுஜரைத் திரும்ப அனுப்பினார். இம்மாதிரி 17 முறை பல அறிவுரைகளை கூறி ஸ்ரீ ராமானுஜரை சரம ஸ்லோகத்தின் பொருளைப் பெற ஏற்றவராக்கி பின் அருளினார். இரண்டாம் முறை திருக்கோஷ்டியூர் நம்பியிடம் சென்றார்.“அகங்கார - மமகாரம் (நான், எனது என்னும் எண்ணங்கள்) தவிர்த்து வாருங்கள் என்றார். மூன்றாம் முறை சென்றார் ராமாநுஜர். “ஆத்மஞானம் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. நான்காம் முறை “உடல் வேறு, ஆத்மா வேறு என்ற எண்ணம் வந்தபின் வாரும்!” என்றார் நம்பி. ஐந்தாம் முறை நம்பியிடம் சென்றார் ராமாநுஜர். “இறைவனுக்கு உரியவனான ஜீவாத்மா, இறைவனை அநுபவிப்பதில் தான் நாட்டம் கொள்ளவேண்டும். ஜீவாத்மா தன்னைத் தானே அநுபவித்து இன்புறுதல் கூடாது. எனவே ஆத்மாநுபவத்தில் உள்ள ஆசையை விட்டு விட்டு வாருங்கள்!” என்றார் நம்பி. ஆறாம் முறை சென்றார் ராமாநுஜர்.“இறைவனைத் தவிர்த்த இதர விஷயங்களில் உள்ள பற்றை விட்டுவிட்டு வாரும்!” என்றார் நம்பி. ஏழாம் முறை நம்பியிடம் சென்றார் ராமாநுஜர்.“இறைவனின் விஷயத்தில் அன்பை வளர்த்துக் கொண்டு வாரும்!” என்றார் நம்பி. எட்டாம் முறையாகத் திருக்கோட்டியூருக்கு எழுந்தருளினார் ராமாநுஜர்.“விருப்பு - வெறுப்புகளைத் தொலைத்து வாரும்!” என்றார் நம்பி. ஒன்பதாம் முறையாக ராமாநுஜர் போனபோது “இறைவனின் எண்ணப்படி நான் இருப்பேன் என்னும் உணர்வு பெற்று வாரும்!” என்றார் நம்பி. பத்தாம் முறையாக நம்பியை நாடிச் சென்றார் ராமாநுஜர்.“வைணவனுக்குரிய பண்புகளோடு வாரும்!” என்று சொல்லி ராமாநுஜரைத் திரும்ப அனுப்பினார் நம்பி.
பதினொன்றாம் முறை நம்பியைச் சென்று பற்றினார்.“நன்மக்களின் அபிமானம் பெற்று வாரும்!” என்றார் நம்பி. பன்னிரண்டாம் முறையாகத்
திருக்கோட்டியூருக்கு எழுந்தருளினார். “இறையடியார்களின் அபிமானம் பெற்று வாரும்!” என்று நம்பி சொன்னார். பின் பதின்மூன்றாம் முறையாக நம்பியை நாடினார் நம் ராமாநுஜர். “இறைவனின் அங்கீகாரம் பெற்று வாரும்!” என்றார் நம்பி. திருவரங்கநாதனே, “நம் இராமாநுசன்” என்று கூறி ராமாநுஜரை ஏற்கெனவே அங்கீகரித்துள்ளமையால், அந்தத் தகுதியும் தமக்கிருப்பதை உணர்ந்து, பதினான்காம் முறை தம் நடைபயணத்தை மேற்கொண்டார் ராமாநுஜர். “இறைவன் ஒருவனுக்கே நாம் ஆட்பட்டவர் என்னும் எண்ணம் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. பதினைந்தாம் முறை “இறைவனை அடைவதே ஒரே குறிக்கோள் என்னும் உறுதி கைவந்த பின் வாரும்!” என்றார் நம்பி. மீண்டும் சுயபரிசோதனை செய்த ராமாநுஜர், இந்த உறுதியும் தமக்கு இருப்பதை உணர்ந்தபின் பதினாறாம் முறையாக நம்பியிடம் சென்றார்.“இறைவனை அனுபவிப்பதே ஆனந்தம் என்னும் எண்ணம் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. பதினேழாம் முறையாக நம்பியை நாடினார்.“குரு அருள் கிடைத்தபின் வாரும்!” என்றார் நம்பி. குருவான திருக்கோட்டியூர் நம்பியின் அருளும், அவருக்கும் குருவான ஆளவந்தாரின் அருளும் தமக்குண்டு என்பதை உணர்ந்து, பதினெட்டாம் முறை நம்பியின் திருவடிகளைப் பற்றினார் ராமாநுஜர்.

இம்முறை, “அதிகாரி புருஷரே வாரும்!” என்று கூறி ராமாநுஜரை வரவேற்றார் திருக்கோட்டியூர் நம்பி. சுலோகத்தின் பொருளை உபதேசமாகப் பெறுகின்ற தகுதி ராமாநுஜருக்குக் கிடைத்து விட்டது என்பதால், அதிகாரி புருஷர் என்று அவரை அழைத்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. உடையவர் கூரத்தாழ்வாரையும் முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றார். தனித்துத் தானே வரச் சொன்னோம், இவர்களையும் அழைத்து வந்திருக்கிறாயே என்று திருக்கோட்டியூர் நம்பிகள் வினவ உடையவர் ஆண்டானைத் தண்டாகவும், ஆழ்வாரை பவித்திரமாகவும் காட்டி உங்கள் ஆணைப்படியே வந்துள்ளேன் என்று கூறினார். அவரின் சாதுர்யமான பதிலினால் மனமகிழ்ந்த திருக்கோட்டியூர் நம்பி அம்மூவருக்கும் திரு மந்திர ரகசியங்களை உபதேசித்தார், ஆனால் இதை வெளியில் யாருக்கும் சொல்லக் கூடாது என்று சத்தியத்தினுடன்.
பின் திருக்கோட்டியூர் நம்பிகள் சரம ஸ்லோகப் பொருளையும் இராமானுஜருக்கு உபதேசித்தார். சரம ஸ்லோகம் என்பது பகவத் கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தில் உள்ள 66வது ஸ்லோகம்.
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாப்பேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுசா
(எல்லா தர்மங்களையும் அறவே விட்டு, என்னை மட்டும் சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே – கண்ணன்)
என்பதாகும்.
மந்திரத்தின் உட்பொருளை அறிந்து கொண்ட உடையவரின் முகம் ஞானத்தால் பல மடங்கு ஒளி வீசியது. உபதேசம் பெற்ற அடுத்த நாளே விலை உயர்ந்த ஒரு இரத்தினத்தைத் தரப் போவதாகச் சொல்லி ஊரில் உள்ளோரை கோவிலுக்கு வருமாறு அழைத்தார் உடையவர். அனைவரும் தங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு திருக்கோட்டியூர் கோவில் முன் திரண்டனர். இராமானுஜர் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேல் ஏறி, நீங்கள் அனைவரும் பிறவிப் பெருங்கடலைத் தாண்டுவதற்குரிய மகா மந்திரத்தை அறிவிக்கப் போகிறேன் என்று சொல்லி, “ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தை உரக்கக் கூவி அங்கிருந்தவர்களை மும்முறை திரும்பத் திரும்பச் சொல்ல வைத்தார்.
கூடியிருந்த மக்களும் நன்றியில் அவரை விழுந்து வணங்கி தங்கள் இல்லம் திரும்பினர். நன்றி தெரிவிக்க திருக்கோட்டியூர் நம்பியின் திரு மாளிகைக்குத் உடையவர் சென்றார். அங்கு அவரோ இவர் செய்த செயலால் இவரைப் பார்த்ததும் மிகுந்த சீற்றம் கொண்டு, உம் போன்ற குருத் துரோகிகளுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது என்று கடும் சொற்களை உதிர்த்தார். ஆனால் உடையவரோ அவரிடம் சாந்தமாக, குருவின் ஆணையை மீறினால் நரகமே கிட்டும் என்று தெரியும், ஆனால் நீங்கள் உபதேசித்தத் திருமந்திரத்தால் பல்லாயிரக் கணக்கானோர் பிறவிப் பயன் அடைவர். அதற்குப் பதில் நானொருவன் நரகம் செல்லுதல் நன்றே என்று கூறினார். இந்த பதிலைக் கேட்டவுடன் நம்பிகளின் கோபம் தணிந்தது. தன்னுடைய குறுகிய மனப்பான்மையையும் தன் சீடரின் உயரிய உதார குணத்தையும் நினைத்து உருகிப் போனார். பரம கருணாமூர்த்தியான இராமானுஜர் இனி “எம்பெருமானார்” எனப் போற்றப் படுவார் என்று நம்பிகள் அவருக்கு விருதினைக் கொடுத்து கௌரவித்தார்.

ஒரு முறை திருவரங்கத்தில் வசந்தோத்ஸவத்தில் மேல தாளத்துடனும் சர்வ அலங்காரத்துடனும் பெருமாள் வீதி உலா வரும்போது ஒருவன் தெரு என்பதையும் பொருட்படுத்தாமல் மனைவிக்குக் கூச்சமின்றி பிறர் முன் பணிவிடை செய்து, வெய்யில் படாமல் குடைப் பிடித்தும், அவள் வியர்வையை துடைத்தும் கொண்டிருந்தான். அப்பொழுது காவிரியில் நீராடிவிட்டு இராமானுஜர் ஸ்ரீ முதலியாண்டானுடன் வரும் போது இதைக் கண்டு, அவர்களை அழைத்து வருமாறு ஆள் அனுப்பினார். தன் மனைவியை அழைத்துக் கொண்டு அவர்களுடன் இராமானுஜரை தரிசிக்கச் சென்றான். இராமானுஜர் அவனிடம், நீ இவ்வாறு பொது இடத்தில் நடந்து கொள்ளலாமா? அவளிடம் என்ன அமுதத்தையா பருகிக் கொண்டிருந்தாய்” என்று கேட்டார். அவனோ கொஞ்சமும் சலனமில்லாமல், “ஆம் அவள் கண்களை விட அழகியது வேறு எதுவும் இல்லை. அதைக் கண்டால் என் சித்தம் கலங்கி விடுகிறது” என்றான். அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார் உடையவர். அவன் பெயர் தனுர்த்தாசன் என்றும், மற்போர் வீரன் அவன் எனத் தெரிந்து கொண்டார். அவனிடம், “உன் மனைவியின் கண்களை விட அழகான கண்களை நான் உனக்குக் காட்டுகிறேன்” என்று கூறி திருவரங்கர் சந்நிதிக்கு அழைத்துச் சென்று கற்பூர ஆரத்தியின் போது அரங்கனைக் காண வைத்தார். அரங்கனைக் கண்ட கண்கள் மற்றொன்றை காணாவே என்று அவருக்குத் தெரியுமே! அழகிய தீப ஒளியில் கரிய மாணிக்கமாகக் காட்சி தந்த அரங்கனின் செந்தாமரைக் கண்களை கண்ட தனுர்த்தாசன் வைத்தக் கண் வாங்காமல் அரங்கனை தரிசித்தான். அவன் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் உருண்டோடியது. சுய நினைவுக்கு வந்த பிறகு இராமானுஜரின் பொற்பாதங்களில் தன் மனைவி பொண்ணாச்சியாருடன் விழுந்து வணங்கினான்.

இராமானுஜர் அருளால் ஞான ஒளி பெற்ற தனுர்த்தாசன் பிள்ளையுறங்காவில்லி என்று சிறப்புடன் அழைக்கப் பெற்றார். பின் கணவனும் மனைவியும் திருவரங்கத்திலேயே தங்கி விட்டனர். தினமும் நீராடப் போகும்போது முதலியாண்டான் கையைப் பிடித்துச் சென்ற இராமானுஜர் நீராடியபின் தனுர்த்தாசரின் கையைப் பற்றிய வண்ணம் திரும்பி வருவார். தனுர்த்தாசன் பிராமணர் இல்லையாகிலும் இராமானுஜர் அவனுடன் அன்னியோன்னியமாக இருக்கிறாரே என்று பலருக்கும் பொறாமை ஏற்பட்டது. இதை அறிந்தும் இராமானுஜர் அமைதியாக இருந்தார்.
ஒரு நாள் அனைவரும் உறங்கியபின் எல்லா சீடர்களின் கௌபீனங்களையும் (கோமணங்களையும்) இராமானுஜர் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டார். பொழுது விடிந்ததும் கிழிந்த கௌபீனங்களைப் பார்த்துச் சீடர்கள் ஒருவரை ஒருவர் தரக் குறைவாகத் தாக்கிப் பேசிக் கொண்டனர்.
மறு நாள் இரவு தம் சீடர்களை இராமானுஜர் தன்னிடம் அழைத்தார். இரவு முழுவதும் தனுர்த்தாசரை இங்கேயே வைத்துக் கொள்கிறேன், நீங்கள் போய் அவர் மனைவியின் நகைகளைக் களவாடிக் கொண்டு வாருங்கள் என்று கட்டளை இட்டார். அவ்வாறே சீடர்கள் செய்தனர். தனுர்த்தாசர் மனைவி படுத்திருந்தும் உறங்காமல் கணவருக்காகக் காத்திருந்ததால் இவர்கள் வந்து தன் நகைகளை திருடுவது நன்கு தெரிந்தது. ஒரு பக்க நகைகளைக் கழட்டிய பின் மறு பக்க நகையையும் திருட வசதியாகத் திரும்பிப் படுத்தார். அதைக் கண்ட சீடர்கள் எங்கே இவர் முழித்துக் கொண்டு விட்டாரோ என்று பயந்து அது வரை திருடிய நகைகளுடன் ஓடிவிட்டனர்.
சீடர்கள் வந்தவுடன் தனுர்த்தாசரை வீட்டிற்கு அனுப்பினார். பின்னோடே சீடர்களையும் போகச் சொன்னார். தனுர்த்தாசர் தன் இல்லத்தை அடைந்ததும் அவர் மனைவி நடந்ததைக் கூறினார். அதற்கு அவரோ “நீ திரும்பிப் படுத்திருக்கக் கூடாது. நகைகளை நன்கொடையாக அளிக்கிறோம் என்கிற அகம்பாவம் உன்னிடம் இருந்திருக்கிறது. ஆண்டவனை நினைத்த வண்ணம் ஏதும் அறியாமல் நீ இருந்திருப்பாயானால் வந்த வறியவர்கள் அனைத்தையும் கழட்டிச் சென்றிருப்பார்கள். நான் என்ற எண்ணம் இன்னும் உன்னை விட்டு அகலவில்லை” என்றார். அதற்கு அவர் மனைவி “என் மனத்தில் நான் என்ற அகம்பாவம் தோன்றாமல் இருக்க நீங்கள் தான் ஆசீர்வதிக்க வேண்டும்” என்று உருகி வேண்டினாள். இதை மறைந்திருந்து கேட்ட சீடர்கள் மடத்துக்குச் சென்று இராமானுஜரிடம் நடந்ததைச் சொன்னர்.
விடிந்ததும் பிராமண சீடர்கள் அனைவரையும் அழைத்த இராமானுஜர் அரியதொரு அறிவுரையைச் சொல்லத் தொடங்கினார். “குலமதம், கல்விமதம், தனமதம் ஆகிய மும்மதங்களால் மனிதன் சீரழிகிறான். கல்விமதம் மிக்க நீங்கள் நேற்றிரவு கௌபீனம் கிழிந்துவிட்டது என்று ஒருவரை ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகத் தாக்கிக் கொண்டீர்கள்! நகைகளை எல்லாம் பறி கொடுத்த பின்பும் தனுர்த்தாசரும், அவர் துணைவியாரும் எவ்வளவு மன அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள்! எனவே அகந்தை கொண்டவனை பிராமணன் என்பதா? அடக்கம் மிக்கவனை பிராமணன் என்பதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.” அவர்களுக்குத் தங்கள் தவறு புரிந்தது. வெட்கத்துடன் தலை குனிந்து நின்றனர்.
“சீடர்களே இனம் பற்றிய கருவத்தை விட்டொழியுங்கள். நல்லொழுக்கத்தை கடைபிடிக்க முயலுங்கள். பிறப்பில் அனைவரும் சமமே. பிறப்பினால் உயர்ந்தவன் என்று கூறிக் கொள்பவன் மனித குலத்துக்கே வைரியாவான். ஆன்மா என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள். ஆன்ம லாபத்துக்காக பாடுபடுங்கள். கல்வி, செல்வம், பிறப்பு ஆகிய அனைத்தையும் விடக் குணமே சிறந்தது. எனவே நலந்தரும் நற்குணத்தால் நாளும் உயரப் பாடு படுங்கள்!” என்று இராமானுஜர் கூறிய அறிவுரையால் சீடர்களின் அஞ்ஞான இருள் அகன்று ஞான ஒளி பெருகிற்று.
இராமானுஜரால் அநேகர் ஆட்கொள்ளப்படக் காரணம் அவரது எளிமை, சின்னஞ்சிறியவர்களிடம் அன்பு பாராட்டும் அவர் இதயம். ஒரு நாள் அவர் திருவீதி வழியாக வருகையில் நண்டும் சிண்டுமாக நாலைந்து பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். குறுக்கும் நெடுக்குமாகப் புழுதியில் கோடுகள் போட்டு இது கோவில், இது கோபுரம், இது பிராகாரம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட இராமானுஜர் சற்றே நின்று ரசிக்க, ஓரு சிறுவன் இதோ உங்கள் பெருமாள் என்று தரையில் ஒரு கோட்டைக் காட்ட உடனே உடையவர் உள்ளத்தில் உவகைப் பொங்க, “தமர் உகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே” என்று சொல்லிக் கொண்டே கீழே விழுந்து சேவித்தார். குழந்தைகள் கொடுத்தக் கொட்டாங்குச்சி மண் பிராசதத்தையும் மகிழ்ச்சியுடன் தான் மடியில் வாங்கிக் கொண்டார். குழந்தைகள் குதூகலித்தனர். பிள்ளைகளோ பெரியவர்களோ, கற்றவரோ கல்லாதவரோ, கீழ்வகுப்போ மேல்வகுப்போ, எல்லா பிறவிகளையும் ஒரே நோக்கில் பார்த்தவர் எதிராஜர்.
ஆளவந்தாரின் சீடர்களில் ஒருவரான மாறநேரி நம்பி தன்னுடைய ஆசிரியருக்கு இருந்த ராஜபிளவை நோயை தான் வாங்கிக் கொண்டார். அதனால் இறுதி காலத்தில் யாருமற்று குடிசையில் மடிந்தார். அவர் தாழ்ந்த குலத்தவர் என்பதால் யாரும் இறுதிக்கடன்களை செய்ய வரவில்லை. பெரிய நம்பி முன்வந்து மாறநேரி நம்பிக்கு இறுதிக் கடன்களை வைணவ முறைப்படி செய்தார். இதற்காக திருவரங்க வைணவர்கள் அவரை சாதியிலிருந்து தள்ளி வைத்தனர். இதைக் கேட்ட இராமானுஜர் அவர் இல்லம் சென்றார். அங்கு பெரிய நம்பிகளின் மகள் அத்துழாய் தன் மாமனார் வீட்டில் இருந்து வந்து அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். இராமானுஜரின் வருத்தத்தைக் கண்ட பெரிய நம்பி “சாத்திரத்தில் கூறியபடி பிராமணன் ஒருவன், பிராமணன் அல்லாதவனுக்கு ஈமக் கடன்கள் செய்வது என்பது பொருத்தமற்ற செயல் தான். அதனை அற நூல்கள் ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அறம் என்பது என்ன என்று தெரியுமா? சான்றோர்கள் உலகியலில் எவ்வாறு நடை முறைக்கு ஏற்ப ஒழுகினார்களோ அதுவேதான் அறம் எனப்படும். பறவை குலத்தில் பிறந்த ஜடாயுவுக்கு இராமன் இறுதிச் சடங்கினைச் செய்தான். ஷத்ரிய குலத்தில் பிறந்த தருமர் நான்காம் வருணத்தில் பிறந்த விதுரரைப் போற்றி வழிபட்டார். உண்மை பக்தனுக்கு சாதி ஏது? மதம் ஏது? என்னால் தீயில் இடப்பட்டவன் என்னை விட பக்தியில் பல மடங்கு சிறந்தவன். அவனுக்கு இறுதிக் கடன் செய்து, நான் பெரிய பேற்றினை பெற்றுள்ளேன்” என்றார். இதை மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தான் ஸ்ரீ இராமானுஜர் அவர் இல்லம் சென்று அவரிடம் இதைப் பற்றி கேட்டார். (திருவரங்க உற்சவரான நம்பெருமாளிடம் பெரிய நம்பியின் மகள் அத்துழாய் முறையிட்டாள். நம்பெருமாள் பெரிய நம்பியின் மீது தவறில்லை எனக் கூறியமையால் அங்கிருந்த வைணவர்கள் அதனை ஏற்றனர் என்றும் சொல்வார்.)
ஒரு நாள் இவரின் இன்னொரு குருவான திருக்கோட்டியூர் நம்பி வெகு நேரம் கதவை மூடிக் கொண்டு அறைக்குள் இருந்தபடி ஜபித்துக் கொண்டிருந்தார். அவர் வெளியே வந்ததும் இராமானுஜர் அவரிடம், “நீங்கள் ஜெபிக்கும் மந்திரம் என்ன? யாரை தியானிக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர் “நான் என் குருவான ஆளவந்தாரின் திருப் பாதங்களையே நினைத்துத் தியானிக்கிறேன். அவரது திருப் பெயரே நான் ஓதும் மந்திரம்” என்று கூறினார். அது முதல் இவரும் தன் குருநாதரான பெரிய நம்பிகளையே தெய்வமாக வழிபடலானார்.
உடையவர் ஐந்து குருக்களிடம் பாடம் கற்றுக் கொண்டுள்ளார். அவர்கள்,
1.பெரிய நம்பிகள். 2.திருக்கோட்டியூர் நம்பிகள். 3.திருமலையாண்டான். 4.ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர். 5.திருமலை நம்பிகள்.
இவ்வாறு ஐந்து பெரியவர்களிடம் இவர் பாடங்கள் கற்றுக் கொண்டதால் மற்றொரு ஆளவந்தாராகவே எம்பெருமானார் காட்சி அளித்தார். எம்பெருமானார் கற்றலலிலும் கற்பிப்பதிலும் நிகரற்று விளங்கி உலகினரை முக்தி நெறிக்கு அழைத்துச் சென்றார்.
திருவரங்கர் கோவிலை மிகவும் செம்மையாக நிர்வாகம் செய்து வந்ததினால் அதை முன்பு நிர்வாகம் செய்த ஸ்தானிகர் என்னும் பதவியில் இருந்தவரின் பெருமையும் தலைமையும் நாளடைவில் குறைந்து போயிற்று. இராமானுஜர் உயிரோடு இருக்கும் வரை தன் புகழ் ஒங்காது என்று தீர்மானித்து எம்பெருமானாரை விஷம் வைத்துக் கொல்ல தீர்மானித்தார்.
உடையவர் தினம் பிக்ஷை எடுத்தே உண்பவர். அவர் தினம் ஏழு வீடுகளுக்குச் சென்று அன்னப் பிச்சை எடுப்பார். ஸ்தானிகர் அதில் ஒரு வீட்டு சொந்தக்காரனை பொருளாசையில் மயக்கி அவன் மனைவியை விஷம் கலந்த உணவை பாத்திரத்தில் போடச்சொன்னார். மனைவிக்கு இந்த மகா பாவச் செயலை செய்ய விருப்பம் இல்லை. அதனால் தந்திரமாக விஷம் கலந்த உணவை அவர் வந்து பிச்சைக் கேட்கும்போது அவர் பாத்திரத்தில் இடாமல் அருகில் திண்ணையில் வைத்து அவர் காலில் விழுந்து வணங்கினாள். இச்செயலின் உட்பொருளை உடனே புரிந்து கொண்ட உடையவர் அந்த உணவில் விஷம் கலந்திருப்பதை உணர்ந்து, அவ்வுணவை தன் பாத்திரத்தில் போட்டுக் காவிரிக் கரைக்குச் சென்று காவிரி ஆற்றில் கலந்து விட்டு அன்று முழுவதும் பட்டினியாக இருந்தார். சில நாட்கள் பட்டினியாக இருந்தார்.
இந்த விஷயம் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பிகள் உடனே கிளம்பி திருவரங்கம் வந்தார். அவர் வருவது தெரிந்தவுடன் உடையவர் அவரை எதிர்கொண்டு அழைக்கக் காவிரி கரைக்குச் சென்றார். அங்கு அவரைப் பார்த்தவுடன் கொதிக்கும் மணலிலேயே சாஷ்டாங்கமாக விழுந்து தன் குருவை வணங்கினார். அவரை எழுந்திரு என்று சொல்லாமல் சிறிது நேரம் திருக்கோட்டியூர் நம்பிகள் பேசாமல் இருந்தார். இதைக் கண்டு மனம் பதைபதைத்து கிடாம்பியாச்சான் என்பவர் இப்படித்தான் அவரை மணலில் போட்டு வருத்துவதா என்று திருக்கோட்டியூர் நம்பிகளையே கடிந்து கொண்டு, தானே கொதிக்கும் மணலில் விழுந்து தன் மேல் உடையவரை சாற்றிக் கொண்டார்.
உடனே நம்பிகள், உன்னை மாதிரி ஒருவருக்காகத் தான் இங்கே வந்தேன். இனி நீரே இவருக்கு தினம் உணவு சமைத்துத் தர வேண்டும், உடையவர் பிக்ஷை எடுக்கப் போக வேண்டாம் என்று கட்டளை இட்டார். ஆனாலும் ஸ்தானிகர் வேறு எப்படியாவது அவரை விஷம் வைத்துக் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டு அவர் தினம் அருந்தும் பெருமாள் தீர்த்தத்தில் விஷம் கலந்து விட்டான் . ஆயினும் அதை அருந்தி அவருக்கு ஒன்றும் ஆகாதது கண்டு தன் தவறை உணர்ந்து தன் கொடிய செயலுக்கு மன்னிப்புக் கோரி எம்பெருமானார் திருவடிகளில் விழுந்து வணங்கினான். நஞ்சிட்டவனுக்கும் தனது நல்ல உள்ளத்தைப் புலப் படுத்திக் கருணை புரிந்தார் உடையவர்.
யஜ்ஞமூர்த்தி என்ற மாயாவாதக் கொள்கையுடையவர் எம்பெருமானால் வைணவம் தழைத்தோங்குவது கண்டு பொறாமை கொண்டு காசியில் இருந்து வாதம் புரிய திருவரங்கம் வந்தார். மிகவும் மேதா விலாசம் நிறைந்தவர். ஆதாலால் அவரிடம் 17 நாட்கள் இராமானுஜர் தர்க்க வாதம் செய்து கடைசியில் அரங்கன் அருளால் எதிராளியின் கர்வத்தை ஒழித்து அவரையும் வைணவம் தழுவ வைத்தார். வித்யா கர்வத்தால் ஆடம்பரமாக வாழ்ந்த யஜ்ஞமூர்த்தியின் நெஞ்சில் எளிமையும் அடக்கமும் ஏற்படலாயிற்று. அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்னும் பெயர் உடையவரால் சாற்றப்பெற்றார். அவர் புலமை வீணாகாமல் இருக்க அவரை நூல்கள் எழுதச் சொன்னார் உடையவர். அதன் படி அவர் தீந்தமிழில் “ஞான சாரம்”, ‘பிரமேய சாரம்” ஆகிய நூல்களை இயற்றி அருளினார். குருவுக்கும் பெருமானுக்கும் சேவை செய்து அவர் தன் காலத்தைக் கழித்தார்.
இவருடைய மாணாக்கர்களில் ஒருவரான அனந்தாழ்வான் என்பவரை திருமலைக்குப் புஷ்பக் கைங்கர்யம் செய்ய அனுப்பினார். அங்கு அதை அவர் மிகச் சிறப்புடன் செய்து வருவதாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க ஆசைக் கொண்டு திருமலைக்குத் தன் சீடர்களுடன் திருவரங்கத்தில் இருந்து பயணமானார் இராமானுஜர். வழிப் பயணத்தில் இரண்டாம் இரவு அஷ்டசகஸ்ரம் என்ற ஊரில் தங்குவதாக ஏற்பாடு. முன்னமே தன் சீடர் யாகநேசர் என்னும் செல்வந்தர் வீட்டில் தங்கப் போவதாக இராமானுஜர் இரு சீடர்கள் மூலம் தகவல் அனுப்பினார். அந்தத் தகவலைப் பெற்றுக் கொண்டவர்கள் அச்சீடர்களை உபசரிக்கத் தவறிவிட்டனர். அதை அறிந்த உடையவர் இன்னொரு சீடரான வரதாச்சாரியார் என்பவர் வீட்டுக்குச் சென்று தங்க முடிவு செய்தார். இவர் போன சமயம் அவர் பிட்சைக்குப் போயிருந்தார். வீட்டில் மனைவி இலட்சுமி அம்மாள் மட்டுமே இருந்தார். இவர்கள் உணவருந்தித் தங்க வந்திருப்பதை அறிந்து அவர்களை வரவேற்று உபசரித்து, உணவு சமைக்கும் வரை குளக்கரையில் தங்கி இளைப்பாறுமாறு கேட்டுக் கொண்டார்.
அவர்களோ பரம ஏழை. கணவர் பிட்சை எடுத்து வந்தால் தான் இருவருக்குமே உணவு. இவ்வளவு பேருக்கு எப்படி அமுது படைப்பது? அவ்வூரில் வணிகர் ஒருவர் இலட்சுமி அம்மாளின் அழகில் மயங்கி இருப்பது அவருக்குத் தெரியும். அவரிடம் போய் அவர் இச்சைக்கு இணங்குவதாகச் சொல்லி அமுது படைக்க வேண்டிய பண்டங்களை வாங்கி வந்தார். அன்புடன் அமுது சமைத்து வந்தவர்களுக்குப் பரிமாறினார். எம்பெருமானார் இலட்சுமி அம்மாளை ஆசிர்வதிக்கும்போது பிட்சை எடுக்கப் போன வரதாச்சாரியார் திரும்பி வந்தார். வீட்டுக்கு வந்தவர்களை மனைவி இவ்வளவு நன்றாக உபசரித்தது இருப்பதைக் கண்டு அவருக்குப் மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் எப்படி செய்ய முடிந்தது என்று ஆச்சரியப்பட்டார். மனைவி அவரிடம் அனைத்தையும் சொன்னார். கோபம் கொள்ளாமல் பெரு மகிழ்ச்சியே அடைந்தார் அவர். “குரு வடிவில் வருபவர் இறைவனே. அவர் பொருட்டு அழியும் இவ்வுடலைக் கொண்டு அழியாப் பேரின்பத்தை நீ தேடிக் கொண்டாய், உன்னை மனைவியாய் பெற்ற நான் பாக்கியவான்” என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டு இருவரும் உடையவர் காலில் விழுந்தனர்.
வரதாச்சாரியார் வாயிலாக அனைத்தையும் கேள்விப்பட்டார் எதிராஜர். சற்றே துணுக்குற்றார். அவர்களை உணவு உண்ணச் சொல்லி மீதமிருந்த உணவை வணிகன் வீட்டுக்கு எடுத்துச் சொல்லச் சொன்னார்.
அந்தப் பிராசதத்தை உண்ட வணிகன் பசியாறியவுடன் தன் குணம் மாறுவதை உணர்ந்தான். இலட்சுமி அம்மாளிடம், “நான் நெடுங்காலமாக மிகப் பெரியப் பாவச் செயலை செய்ய இருந்தேன், விலங்காக இருந்த நான் இப்போது மனிதனாக மாறிவிட்டேன். உங்கள் குருவை தரிசிக்க அழைத்துச் செல்வீர்கள் என்றால் என் பிறப்புக் கடைத்தேறி விடும்” என்றான். இலட்சுமி அம்மாள் தன் கணவனிடம் இதைக் கூற மனமகிழ்ந்த அவர் அவ்வணிகனை உடையவரிடம் அழைத்துச் சென்றார். மூவரையும் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்த எம்பெருமானார் அம்மூவரின் மனக் கலக்கத்தையும் போக்கினார்.
வணிகன் தன்னையும் சீடனாக்கிக் கொள்ள விண்ணப்பித்தான். அவ்விருப்பத்தை நிறைவேற்றினார் உடையவர். தன் சொத்து அனைத்தையும் உடையவரின் திருவடிக்கே காணிக்கை ஆக்கினான் அவ்வணிகன். அதை இராமானுஜர் ஏழை வரதாச்சாரியாரிடம் அளிக்க, அவரோ குருவின் பலத்தால் எளிமையான வாழ்வு இன்ப மயமாகவும், அமைதியாகவும் நடப்பதாகக் கூறி அதை மறுத்துவிட்டார். பணப் பற்றும், மன மாசும் இல்லாத அந்த அடியவரின் சீலத்தைக் கண்டு மனம் மகிழ்ந்தார் எதிராஜர். அனைவராலும் பின்பற்றத் தக்கது அவர் நடத்தை என்று உரைத்தார்.
தொடரும்
மூன்றாம் பாகம்
முதல் பாகம் https://anbezhil.wixsite.com/blog/post/%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%8E%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%B7-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%9C%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4-1
Comments