top of page
  • Writer's pictureAnbezhil

கண்ணிநுண் சிறுத்தாம்பு

#நாலாயிர_திவ்ய_பிரபந்தம் என்ற தொகுப்பில் உள்ள பாடல்கள் திருமாலின் சிறப்புகள் மற்றும் அவருடைய அவதாரங்களின் பெருமைகளையும் எடுத்து சொல்கின்றன. மேலான கருத்துகள் மற்றும் இனிமையான சொற்களால் திருமாலைப் பற்றி பாடப்பட்ட பாடல்கள் என்பதால் திவ்ய பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்கள் நூத்தி எட்டு திவ்ய தேசப் பெருமாள்களை போற்றி பாடியிருப்பதால் (மங்களாசாசனம் செய்திருப்பதால்) ஆழ்வார்கள் அருளிச் செயல் என்பது இதற்கு இன்னொரு பெயர் ஆகும். ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு வந்த திருவரங்கத்தமுதனார் இயற்றிய இராமானுசர் நூற்றந்தாதியில் மொத்தம் 108 பாசுரங்கள் உள்ளன. இவையும் நாலாயிரத்துள் அடங்கும். ஆழ்வார்கள் அருளிச் செய்த இந்தப் பாடல்கள் திராவிட வேதமாகப் போற்றப்படுகிறது. பெரும்பாலானவை பண்ணுடன் பாடப் படும் இசைப் பாடல்கள் ஆகும்.

இந்த நாலாயிரத்தில், ஒரு பதினோரு பாடல் தொகுப்பின் பெயர் #கண்ணிநுண்சிறுதாம்பு. இதை இயற்றியவர் #மதுரகவியாழ்வார். அவர் பாடிய பிரபந்தம் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று தொடங்குவதால், அதே பெயரால் அழைக்கப்படுகிறது. எல்லா திவ்ய தேசங்களிலும் ஸ்ரீவைஷ்ணவர்கள் வீடுகளில் நடக்கும் வழிபாடுகளிலும், நம்மாழ்வாரின் திருவாய்மொழி சேவிப்பதற்கு முன் #மதுரகவியாழ்வார் பாசுரங்களை பாடியே தொடங்குவார்கள். இப்பாடலில் உள்ள விசேஷம் என்னவென்றால் இந்தப் பதினோரு பாடல்களும் பெருமாளை நோக்கிப் பாடப்படவில்லை. தன் ஆச்சார்யரான #நம்மாழ்வார் மேல் அவர் பாடியவை. மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச் சொல்ல அவதரித்தவர். பேருக்கு ஓரிருமுறை பகவானைப் பற்றி குறிப்புகள் வரும். மற்றவை எல்லாம் அவருடைய ஆச்சார்யரான நம்மாழ்வார் எப்படி தன்னை தடுத்தாட் கொண்டார் என்று மதுரகவியாழ்வார் பாடியதுதான். ஆழ்வாரே ஆழ்வாரைப் பற்றிப் பாடிய பாடல்கள் இவை. ஆனால் ஆச்சாரிய பக்தியைச் சொல்லி அவர் மூலம் பகவானை அடைவதைப் பற்றி சொல்லியபடியால் இதுவும் நாலாயிரத்தில் பதினொன்று. இவரும் பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவர் ஆனார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அறிந்து கொள்ள வாசல் போல கண்ணிநுண் சிறுத்தாம்பு அமைந்துள்ளது. இவர் ஏன் நம்மாழ்வாரை பற்றி மட்டும் பாடி, ஆழ்வார் என்கிற உயர் நிலை அடைந்தார் என்பதை அறிய, அவர் வாழ்க்கையை நாம் அறிய வேண்டும். இவர் இயற்றிய பிரபந்தம் மட்டும் இல்லாவிடில் நமக்கு ஒரு காலத்தில் தொலைந்து போன அந்த 4000 கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!


சூர்யோதயத்திற்கு முன் கிழக்கில் காணப்படுகின்ற அருணோதயம் போல, நம்மாழ்வார் உதிப்பதற்கு முன் தென் தேசத்தில் தோன்றியவர் மதுரகவியாழ்வார். பாண்டிநாட்டில் திருக்கோளூர் என்னும் ஊரில் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த அந்தணர் மரபில், ஸ்ரீவைகுண்டத்தில் நித்ய சூரியாக எம்பெருமானுக்கு ஒழிவில் காலமெல்லாம் கைங்கர்யம் செய்து வரும் குமுதருடைய அம்சமும், ஸ்ரீ கருடாழ்வார் அம்சமுமாகவும் தோன்றினார் மதுரகவிகள். அவர் பிறந்த மாதம் சித்திரை. பிறந்த வருஷம் ஈஸ்வர வருஷம். நட்சத்திரம் சித்திரை. இவரது காலம் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். ஆழ்வார்கள் வரிசையில் ஆறாவதாக வருபவர். இவர் வேதங்கள், வேதாந்தங்கள் என்று மரபுக்கே உரிய கல்வியைக் கற்று இளம் வயதிலேயே பெரிய பண்டிதர் ஆனார். தமிழில் இனிமையான (மதுரமான) கவிகளைப் பாடுபவர் என்ற பொருளில், மதுரகவியார் என்றே அன்புடன் அழைக்கப்பட்டார். வயது வந்ததும், பல்வேறு திருத்தலங்களில் உள்ள எம்பெருமான்களை தரிசிப்பதற்காகப் புறப்பட்டார்.


வடமதுரை, காசி, கயை, நைமிசாரண்யம், சாளக்கிராமம், பதரி காஸ்ரமம் என்று அத்தனை தலங்களையும் தரிசித்தவர் ஸரயூ நதிக் கரையில் அமைந்திருக்கும் அயோத்தி மாநகரத்தை அடைந்தார். அங்கே அர்ச்சாவதார அழகனாக எழுந்தருளியிருக்கும் ராம பிரானைச் சேவித்துக்கொண்டே பலநாட்கள் தங்கியிருந்தார். எங்கே இருந்தாலும் தான் பிறந்த ஊரான திருக்கோளூரின் திசைநோக்கித் தொழுவதை வழக்கமாகக் கொண்டிருந்த மதுரகவிகள், ஓர் நாள் இரவு தென்திசை நோக்கி தியான ரூபமாகத் தொழுது நின்றபோது, வானத்தில் அதிசயிக்கத்தக்க ஓர் ஜோதியைக் கண்டார். எங்கே இருந்து இந்த ஜோதி வருகிறது என்பதை ஊகித்துப் பார்த்தார். சரி, ஏதோ ஓர் அதிசயம் இந்த பூலோகத்தில் நடைபெற்றிருக்கிறது. அதனை அறிந்து வருவோம் என்று நினைத்து உடனே தென்திசை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பகலில் ஓய்வெடுத்துக் கொண்டு இரவில் ஜோதி தெரியும் திசையையே ஆதாரமாகக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.


நாட்கள் சென்றன. பல நாட்கள் நடந்து திருக்குருகூர் அடைந்தார். திருக்குருகூரை அடைந்த அவர், வானத்தைப் பார்த்தபோது அந்த ஜோதி மறைந்துபோனது தெரிந்தது. உடனே அருகில் நின்றவர்களை இந்த ஊரில் ஏதேனும் அதிசயம் நடக்கிறதா என்று விசாரித்தார். ஆமாம் என்று கூறிய அவர்கள், காரியார், உடையநங்கை தம்பதியினரைப் பற்றியும், அவர்கள் புதல்வராக ஓர் மகாநுபாவர் பிறந்திருப்பதையும், பதினாறு வருடங்கள் உண்ணாமலும் உறங்காமலும் அவர் யோக நிலையில் திருக்குருகூர் சந்நதி புளிய மரத்தடியில் எழுந்தருளியிருப்பதையும் கூறினார்கள். (பெற்றோர்கள் குழந்தை பிறந்தவுடன் அழாமலும் உண்ணாமலும் இருந்ததைக் கண்டனர். ஆனால் குழந்தை தெய்வாம்சம் பொருந்தியது என்று உணர்ந்து மாறன் என்ற திருநாமத்தைச் சூட்டி, அந்தக் குழந்தையை ஆதிநாதப் பெருமாள் ஸந்நிதிக்கு வெளியே இருந்த புளியமரத்துக்கு அடியில் விட்டுவிட்டு, அந்தக் குழந்தையை அடிக்கடி வந்து தரிசித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் பரமபதநாதனான எம்பெருமான், தன்னுடைய தளபதியான விச்வக்ஸேனரை அழைத்து, கீழே சென்று, நம்மாழ்வாருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரம் முதலியவற்றைச் செய்துவைத்து, திராவிட வேதங்களை உபதேசித்துவிட்டு வாரும் என்று பணித்து அருளி, விஷ்வக்ஸேனரும் எம்பெருமான் திருவுள்ளப்படி ஆழ்வாருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து, ரஹஸ்ய மந்த்ரங்களை அதன் அர்த்தங்களுடன் ஓதி, திராவிட வேதங்களையும் உபதேசித்து அருளினார்.)


உடனே, திருக்கோயிலுக்குப் புறப்பட்டார் மதுரகவிகள். அங்கே அழகே வடிவாய், சின்முத்திரையோடு, ஆடாது அசையாது, அன்றலர்ந்த தாமரை போலே, அமாவாசை நாளிலும் ஒளி தரக் கூடியவனான பாலகனின் எழில் தோற்றத்தைக் கண்டார். சற்றுநேரம் இவரும் அவர் எதிரே தியானத்தில் இருந்தனர். பிறகு சுயஉணர்வு வந்து பாலகனைக் கைதட்டி அழைத்தார். இவர் அழைப்பிற்கு அவரிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அவருடைய பார்வை உணர்வையும், செவிப்புலன் உணர்வையும் சோதிக்க எண்ணிய மதுரகவியார், ஓர் சிறிய கல்லை எடுத்து, அவர் முன் போட்டார். சட்டென்று ஆழ்வார் கண் மலர்ந்தார். ஆயிரம் தாமரைப் பூக்கள் ஒன்றாக மலர்ந்த மலர்ச்சியும் குளுமையும், சூரிய ஒளியை விட அதிக வீட்சண்யம் உடைய ஒளியையும் தரிசித்த மதுரகவியார், “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?” என்று மெதுவாகக் கேட்டார். அடுத்த நொடி அந்த இனிமையான குரலினை முதல் முறை உலகம் கேட்டது. வகுளாபரணரான ஆழ்வார், “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்றார். கூட இருந்தவர்களுக்கு எதுவும் விளங்கவில்லை.

செத்தது என்றால் அசேதனமான சரீரம்-உடம்பு. சிறியது என்றால் உள்ளே இருக்கும் ஆத்மா. பிறந்து இறக்கும்படியானது சரீரம், இதிலே அழியாத உயிர்- ஆத்மா. ஜீவாத்மா மறுபடி மறுபடி சரீரத்தை அடைந்து கர்மவினைகளை-பாவ புண்ணியங்களை அநுபவித்துக் கொண்டே இருக்கிறது. இந்த ஆத்மா, வாழ்க்கையில் நிறைவடைவதேயில்லை. எத்தனைதான் இருந்தாலும், மண்ணுலக சுக துக்கங்களைத் திரும்பத் திரும்ப அநுபவித்தும் சலிக்காமல் மறுபடியும் கர்மவினையில் சிக்கி சரீரத்தில் புகுந்து கிடப்பதிலேயே காலம் கழிக்கிறது. உயிரற்றதாகிய பஞ்சபூதங்களால் ஆன உடம்பில், உயிர் புகுந்து கொண்டு, அந்த உடம்பால் உள்ள உணர்வுகளை (சுவை, ஒளி, ஊறு, ஓசை , நாற்றம்) அநுபவித்துக் கொண்டு அந்த உடம்பு சாயும் வரை அதிலேயே இருக்கிறது.


மெய்ஞ்ஞான உணர்வு நினைவு பெற்ற ஜீவாத்மாவாக இருந்தால், அத்தை (பரமாத்மாவை) தின்று (அனுபவித்துக் கொண்டு) அங்கே (பரமாத்விலேயே) கிடக்கும். அப்படிப்பட்ட ஞானத்தைப் பெறாத ஆத்மாவாக இருந்தால், அத்தைத் தின்று, அதாவது, உடலின் தொடர்பால் உருவாகும் ஐம்புலன் இச்சைகளின் நல்வினை தீவினைகளை அனுபவித்துக் கொண்டு அங்கேயே கிடக்கும். இதனால், அந்த ஆத்மாவானது பிறவிச் சுழலிலேயே கட்டுண்டு கிடக்கும் என்று விடை கொடுத்தார். சரீர ஆத்ம சம்பந்தத்தை இத்தனை அழகாகவும், அது உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அற்புதமாக இந்த கேள்வி பதிலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் கேள்வி கேட்டவர் ஞானத்தையும், பதில் சொன்னவரின் ஞானத்தையும் ஒன்றாக அறியமுடிகிறது.

நம்மாழ்வார்

அடுத்த கணம், வயதில் மூத்தவரான மதுரகவிகள், ஞானத்தில் மூத்தவரான நம்மாழ்வாரின் திருவடிகளில் வீழ்ந்தார். அடியேனை ஏற்றருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். இப்படிப்பட்ட சீடருக்காகத் தான் வேறு யார் தொடர்பும் இல்லாமல், இத்தனை காலம் காத்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஆழ்வார் செந்தமிழால் எம்பெருமானைப் பாட ஆரம்பித்தார். அவற்றை மதுரகவியாழ்வார் ஓலைப்படுத்திக் கொண்டே வந்தார். வேதம், தமிழில் ஆழ்வாரின் வாய்மொழியாக வெளிப்பட்டது. அதை மதுரகவியாழ்வார் எழுதிக்கொண்டே வந்தார். செயற்கரிய இந்த செயலுக்காகவும், ஆழ்வாரின் அபிமானம் பெற்று, ஆசாரியரையே தெய்வமாக எண்ணியதாலும் மதுரகவியாழ்வார், ஆழ்வார்களின் வரிசையிலே வைக்கப்பட்டார். மாறன் சடகோபனைத் தவிர, வேறொன்றும் நானறியேன் என்று இறுதிவரை இருந்தார் மதுரகவியாழ்வார். அறம் பொருள் இன்பம் வீடு ஏதும் வேண்டாம், கடவுளும் வேண்டாம். உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனுக்கே என்ற நம்மாழ்வாரே என் தெய்வம் என்று குரு பக்தியைப் பறை சாற்றும் விதமாக “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்று தொடங்கும் பதினோரு பாக்களைத் தந்தருளினார். அதில் இரண்டாவது பாடலில்

நாவினால் நவிற்று இன்பமெய்தினேன்

மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

தேவுமற்றறியேன் குருகூர் நம்பி

பாவின் இன்னிசை பாடித் திரிவனே

'தேவு மற்று அறியேன்' -ஆசிரியர் அல்லாது வேறு தெய்வம் அறியேன் என்று சொல்கிறார். குருபக்தியின் உச்சம் இது. நம்மாழ்வாரின் பெருமையை

மதுரகவியாழ்வார்


கண்ணிநுண் சிறுத்தாம்பு


936 கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்

பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்

நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்

அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (1)


நுட்பமான கண்ணிகளால் ஆன சிறிய கயிற்றினாலே கட்டப்பட்ட தானே விரும்பிக் கட்டுப்பட்ட கண்ணபிரானைக் காட்டிலும், குருகூர் நம்பி என்னும் சட-கோபன் என்கிறபோது என் நாவில் தித்திக்கும் அமுது ஊறும். அவனே என் குரு, தாய் தந்தை எல்லாம் என்கிறார்.


937 நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்

மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே

தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி

பாவின் இன்னிசை பாடித் திரிவனே (2)


என் நாவினால் நம்மாழ்வார் புகழ் பாடி இன்பம் அடைந்தேன். அந்தத் திருக்குருகூரில் வாழும் நம்பியை தவிர வேறு தெய்வத்தை நான் வேண்டேன். அவர் பாடிய திருவாய்மொழியைப் பாடிக்கொண்டே திரிவேன். சடகோபனைத் தவிர தனக்கு வேறு கடவுள் கிடையாது என்கிறார் மதுரகவியாழ்வார்.


938 திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்

கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்

பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்-

உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே (3)


நம்மாழ்வார் சொன்னதனால் அங்கு எழுந்தருளியிருக்கும் கரிய, அழகான திருவுருவம் கொண்ட பெருமாளை சேவித்தேன். மதுரகவி தானாகச் சென்று பெருமாளை சேவிக்கும் மனம் இல்லாவிடினும் நம்மாழ்வார் சொன்னதன் பேரில் சென்று பெருமாளைச் சேவிக்கிறார்.


939 நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்

புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்

அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்

தன்மையான் சடகோபன் என் நம்பியே (4)


நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்தவர் என்னை இழிவாகக் கருதுவர்; ஆனால் சடகோபன் அன்னையாகவும் தந்தையாகவும் இருந்து என்னை காப்பார்.


940 நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்

நம்பினேன் மடவாரையும் முன் எலாம்

செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு

அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே (5)


முன்பு பிறர் பொருட்களின் மேல் ஆசை பட்டேன்; பிற பெண்களையும் விரும்பினேன். ஆனால் இன்றோ ஆழ்வாருக்கு அடியவனாக இருக்கும் சாமர்த்தியம் வரப் பெற்றேன்.


941 இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்

நின்று தன் புகழ் ஏத்த அருளினான்

குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி

என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே (6)


இன்றிலிருந்து ஏழேழ் பிறவிகளிலும் ஆழ்வாரின் புகழைப் பாட எனக்கு அருள்செய்தார். ஆகவே அவர் என்னை இகழ்வது என்பது எக்காலத்திலும் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


942 கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்

பண்டை வல் வினை பாற்றி அருளினான்

எண் திசையும் அறிய இயம்புகேன்

ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே (7)


என் பழைய பாவங்களில் இருந்து காப்பாற்றிய ஆழ்வாரின் அருளை எட்டுத் திக்குகளிலும் பரவும்படி செய்வேன்.


943 அருள் கொண்டாடும் அடியவர் இன்புற

அருளினான் அவ் அரு மறையின் பொருள்

அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்

அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே (8)


திருவாய்மொழி சாம வேதத்தை தமிழில் சொல்லுவது; ஆயிரம் பாடல்களால் ஆனது. இவ்வாறு வேதத்தைத் தமிழில் அருளிச்செய்த ஆழ்வாரின் பெருமை மிகப்பெரியது.


944 மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்

நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்

தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்-

புக்க காதல் அடிமைப் பயன் அன்றே (9)


வேதவிற்பன்னர்கள் பயிலும் வடமொழி வேதத்தை ஆழ்வார் தமிழில் பாடினார். அவர் திருவடியில் அடிமையாகத் தொண்டு செய்வதே என் வாழ்க்கைப் பயனாகும்.


945 பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்

செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்

குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி

முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே (10)


பிறர் திருந்துவதில் தனக்கு ஒரு பயனும் இல்லாவிடினும் அவர்களைத் திருத்துகிறார் ஆழ்வார். அப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் தஞ்சமடைந்து அன்பு உண்டாவதற்கு முயல்கிறேன்.


946 அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்

அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு

அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்

நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே (11)


பகவான் பக்தர்களிடம் அன்பு காட்டுகிறான். ஆழ்வாரோ அந்தப் பக்தர்களிடம் பக்தி கொண்டார். மதுரகவி, பகவானிடம் பக்தி கொண்ட பக்தர்களிடம் பக்தி கொண்ட ஆழ்வாரிடம் பக்தி கொண்டார். அவர் சொல்லுவதை நம்புபவர்களுக்கு வைகுந்தம் நிச்சயம்.


மதுரகவி ஆழ்வார் பகவானுடைய கைங்கர்யத்தைக் காட்டிலும், பாகவத கைங்கர்யமே உயர்ந்தது என்றும், ஆசார்யனே உயர்ந்த புருஷார்த்தம் ஆவார் என்றும் கொண்டு, நம்மாழ்வாரின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றி, ஆச்சார்யன் திருவடிகளே உய்யும் வழி என்பதை ஸ்தாபித்து அருளினார். தனக்குச்செய்யும் தொண்டைக் காட்டிலும், தன் அடியவர்களுக்குச் செய்யும் தொண்டே உயர்ந்தது என்ற அவரின் கோட்பாட்டை எம்பெருமானும் ஏற்றுக்கொள்கிறான். இராமாயணத்தில் லக்ஷ்மணன் சேஷத்வத்திலும்,(இராமனே கதி என்று இருத்தல்) பரதாழ்வான் பாரதந்த்ரியத்திலும் சிறந்து நிற்க, சத்ருக்நாழ்வான்(சத்ருக்னன்) ஆத்மாவின் உயர்ந்த நிலையான பாகவத சேஷத்வத்தைக் காட்டி அருளினார். அதாவது, பகவானுக்கு அடியவராக இருப்பவருக்கு அடியவராக இருக்கும் நிலை. பரதனையே தனக்கு ஸ்வாமியாகக் கொண்டு, அவருக்குத் தொண்டாற்றுவதையே தனக்குப் பேறாகக் கொண்டு, வேறு எதிலும் விருப்பமற்றவராய் இருந்தவர் சத்ருக்னன். “பகவானுக்கு அடியவர்களாக இருந்த இளையபெருமாளைக் காட்டிலும், பரதாழ்வானைக் காட்டிலும், இராமன் உகந்தது சத்ருக்நாழ்வானையே என்று ஸ்ரீ ராமானுஜர் அருளிச் செய்துள்ளதை நம்பிள்ளை ஈட்டில், மேற்கோள் காட்டியுள்ளார். சத்ருக்நாழ்வான் எப்படி பரதனிடத்தில் அடிமைப் பட்டிருந்தாரோ, அதேபோன்று, நம்மாழ்வாரிடத்தில் அடிமைப்பட்டிருந்தவர் மதுரகவி ஆழ்வார். தனக்கு ஸ்வாமியான நம்மாழ்வாரையே உபாயமாகவும், உபேயமாகவும் கொண்டு, அவருக்கு அடிமைப்பட்டிருந்தவர் மதுரகவிகள். அப்படி அவர் கடைபிடித்துக் காட்டியதைத் தான் தன் திவ்யப் பிரபந்தத்தில் (கண்ணிநுண் சிறுத்தாம்பு) அருளிச்செய்தார்.


மேலும் எம்பெருமான் ஸ்வாதந்த்ரியம் (சுதந்திரம்) உடையவன் என்பதால் அவன் நம்மை ஏற்பானோ அல்லது புறந்தள்ளுவானோ என்ற சந்தேகம் ஏற்படும். அதாவது ஒருவர் கர்மாவைக் கொண்டு அவரைப் புறம் தள்ளக்கூடிய உரிமையும், தன்னுடைய அருளால் ஒருவர் எப்படிப்பட்டவரானாலும் அவரை ஏற்பதும் அவன் சுய விருப்பம் ஆகும். ஸ்ரீ மணவாள மாமுனிகள், நாம் பரதந்திரனான (பரதந்திரன் – பகவானையே சார்ந்து இருப்பவன்) ஆசாரியனைத் தஞ்சமாகப் பற்றினால் கருணைக்கு இருப்பிடமாகத் திகழும் அவர் தன் கருணையால் எம்பெருமானிடத்தில் நம்மை சேர்த்து வைத்து நம்மை உயர்ந்த கதிக்கு ஆளாக்கி, அந்த ஜீவனின் முக்திக்கு வழிகாட்டிவிடுவார் என்று கூறியுள்ளார். மேலும் மதுரகவி ஆழ்வாரே மற்ற பத்து ஆழ்வார்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று கூறுகிறார். அவர் பெருமைகளை பேசும் வண்ணம் இரண்டு பாசுரங்களை மாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச்செய்துள்ளார் :

பாசுரம் 25ல்,

"ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த,

சீராரும் சித்திரையில்சித்திரை நாள்-பாருலகில்

மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்,

உற்றது எமெக்கென்றுநெஞ்சே ஓர்"

மதுரகவி ஆழ்வார் திருவவதரித்த “சித்திரையில் சித்திரையானது,” சரணாகதர்கள் லக்ஷணத்தை உணர்த்தும் மகத்தான நாளாகும் என்றும், அதனால் இந்த நாளுக்குரிய ஏற்றம் என்னவென்றால் மற்ற ஆழ்வார்கள் அவதரித்த நாட்களை விடஇந்நாள் உயர்ந்தது என்று அருளிச்செய்துள்ளார்.

பாசுரம் 26ல் மதுரகவியாழ்வார் அருளிச்செய்துள்ள பிரபந்தத்தின் பெருமையை உரைக்கிறார்.

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல்

சீர்த்த மதுரகவி செய் கலையை

ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிசெயல் நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து

பிள்ளைலோகம் ஜீயர் இந்தப் பாசுரத்திற்கு விளக்கம் அருளிச்செய்கையில், கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தத்தை, அஷ்டாக்ஷர மந்திரத்தின் மத்திய பதமாக அமைந்துள்ள “நம:” சப்தத்திற்கு ஈடாகக் காட்டியுள்ளார். திருமந்திரமானது, இந்த ஜீவாத்மாவிற்குப் பேறானது “ஆத்மாவால்” என்று உபதேசிக்கின்றது. ஆத்மாவை பகவானுக்கு உரியதாகக் கொண்டு, அவனுக்கு அடிமைப்பட்டிருப்பதே ஆத்மாவிற்கு உண்டான குணமாகும் என்பதே திருமந்திரத்தால் உணரப்படவேண்டிய ஞானமாகும். இதில் “நம:” பதமே முக்கியமானதாகும் – இது ஜீவாத்மாவுக்கு தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை கிடையாது, நம்மை கக்கும் பொறுப்பு எம்பெருமான் ஒருவனுக்கே உள்ளது என்று தெளிவிக்கிறது . ஆனால், இதற்கு சற்றே மாறாக, இந்த ஆத்மாவானது, எம்பெருமானுக்கு ஆட்பட்டு இருப்பதைக் காட்டிலும், ஆசார்யனுக்கு உரியது என்று கொண்டு, அவருக்கு ஆட்பட்டு, அதோடு, அவரே ரக்ஷகர் ஆவார் என்று உரைக்கும் பிரபந்தமாகும் மதுரகவிகள் அருளியுள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு. ஆகையாலேயே, சாஸ்திரங்களில் ரஸமாக இருக்கும் ஆசார்ய நிஷ்டையை உரைக்கும் இவரது பிரபந்தத்தை, மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்துள்ள நாலாயிர திவ்யப்பிரபந்தங்களில் ஒன்றாகச் சேர்த்து, மதுரகவி ஆழ்வாருக்கு ஏற்றத்தை அளித்துள்ளார்கள் நம் பெரியோர்கள். இவ்வாழ்வார் திரு அவதரித்த நட்சத்திரமான சித்திரையும் 27 நட்சத்திரங்களில் மத்யமாக அமைந்தது போல இவர் அருளிச்செய்துள்ள கண்ணிநுண் சிறுத்தாம்பு திவ்யப் பிரபந்தமானது 4000 திவ்வியபிரபந்த ரத்தின ஹாரத்தின் நடு நாயகக் கல்லாக இவர் அருளிச்செய்துள்ள பிரபந்தமும் அமைந்துள்ளது என்பது இவருடைய பிரபந்தத்திற்கும் உள்ள பெருமை ஆகும்.


மகானுபாவர்களான ஸ்ரீ ராமானுஜர், நம்பிள்ளை, பிள்ளை லோகாசார்யர், மணவாள மாமுனிகள் மற்றும் பிள்ளை லோகம் ஜீயர் ஆகியோர் ஆசார்ய நிஷ்டையின் மகிமையை மதுரகவி ஆழ்வாரைக் கொண்டே விதம் விதமாக விவரித்து அருளியுள்ளார்கள் என்பதை இதில் இருந்து அறிகிறோம்.


நம்மாழ்வார் திருவைகுண்டத்திற்கு சென்ற பிறகு தங்கத்தால் ஆன நம்மாழ்வாரின் விக்ரகம் அவருக்குக் கிடைத்தது. நம்மாழ்வாரின் அர்ச்சா திருவுருவத்தை கோயிலினுள்ளே எழுந்தருளச் செய்து, அதற்கான திருமண்டபத்தையும், மதிள்களையும், விமானத்தையும் தோற்றுவித்தார். நாள்தோறும், பலவகை மலர்களைக் கொண்டு மாலை தொடுத்து, சூட்டி மகிழ்ந்தார். நம்மாழ்வார் பாடிய பாசுரங்களையெல்லாம் உலகெங்கும் பரவுமாறு பக்தியுடன் பாடினார். நம்மாழ்வாரின் விக்கிரஹத்திற்கு மாலைகள் சூட்டி வழிபாடுகள் செய்து, திருவிழாக்களையும் ஏற்படுத்திக் கொண்டாடினார். அப்பொழுது அழகிய பொன் விமானத்தில் அத்தெய்வ உருவை எழுந்தருளச் செய்து, வீதிகள் தோறும் வலம் வரச் செய்தார். நாள்தோறும் கிரமமான வழிபாடுகளை நடத்தி வந்தார். அவருடைய பிரபந்தங்களைப் பாடிப்பரப்பும் பணியிலும் ஈடுபட்டார். வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார், (நம்மாழ்வார் பாடிய பாடல்களில் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி, முறையே ரிக், யஜுர், அதர்வண, சாம வேத சாரங்களே ஆகும்), திருவாய்மொழிப்பெருமாள் வந்தார், திருநகரிப்பெருமாள் வந்தார், திருவழுதிவளநாடர் வந்தார், திருக்குருகூர்நகர்நம்பி வந்தார், காரிமாறர் வந்தார், சடகோபர் வந்தார், பராங்குசர் வந்தார் என்று நம்மாழ்வாரின் பல விருதுகளைப் பாடிக் கொண்டே மதுரகவியாழ்வார் மதுரையுள் சென்றார். அங்கே இருந்த சங்ககாலப் புலவர்கள், நம்மாழ்வாரின் பாடல்களை சங்கப்பலகையில் ஏற்றாமல், விருதுகளைப் பாடக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அக்காலத்தில் சங்க பலகையில் பாடலை எற்றுவர்.பலகை அப்பாடலை கிழே தள்ளிவிட்டால், புலவர்கள் அப்பாடலை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம்மாழ்வார் எட்டு வரி, நான்கு வரி கொண்ட பாடல்கள் நிறையப் பாடியுள்ளார். அவற்றை விட்டு, இரண்டே வரியுள்ள

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்

என்னும் திருநாமம் திண்ணம் நாரணமே! (திருவாய்மொழி 10.5.1)

(கண்ணனின் திருவடிகளில் ஆசை உடையவர்கள், கண்ணின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருங்கள், அது கண்ணனையே காட்டும்.இது திண்ணம்) என்ற பாடலை பலகையில் மதுரகவியாழ்வார் ஏற்றினார். பலகை அப்பாடலைத் தள்ளாமல் ஏற்றுக்கொண்டது. நம்மாழ்வாரின் பெருமையை புரிந்துக்கொண்ட சங்ககாலப் புலவர்களும் தாம் செய்த தவற்றின் பரிகாரமாக நம்மாழ்வாரின் பெருமையை ஏற்றுக் கொண்டனர். அவரை போற்றி பாடலும் இயற்றினர்.

ஈயடுவதோ கருடற்கெதிரே இரவிர்கெதிர் மின்மினி ஆடுவதோ

நாயாடுவதோ உறுமும்புலி முன் நரி கேசரி முன் நடையாடுவதோ

பேயடுவதோ ஊர்வசிக்குமுன் பெருமானடிசேர் வகுளாபரணன்

ஓராயிரமாமறையின் தமிழிற்ஒருசொற்பொறுமோ இவ்வுலகிற்கவியே


(இவ்வுலகில் உள்ள கவிகளே, பெரிய சிறகுகளை உடைய கருடன் முன் சிறிய ஈ ஆடுவதும், இரவின் முன் மின்மினி பூச்சிகள் ஆடுவதும், உறுமுகின்ற புலிமுன் நாய் ஆடுவதும், சிங்கத்தின் முன் நரி ஆடுவதும், அழகிற்சிறந்த ஊர்வசிமுன் பேயாடுவதும், வகுளமாலையத் தரிந்த நம்மாழ்வாரின் பாசுரங்கள் முன் தமிழில் உள்ள ஒரு சொல் சமமாகுமா! என்பது பொருள்) இதில் வியப்பு என்ன வென்றால், அங்குக் கூடியிருந்த அனைத்து புலவர்களும் மேற்சொன்ன ஒரேப் பாடலை எழுதினர். இவ்வாறு மதுரகவியாழ்வார் வெகுகாலம் நம்மாழ்வாரின் பெருமையை எடுத்துச்சொல்லி ஆச்சாரிய கைங்கர்யம் செய்து அவரும் தம் பெரியவரான நம்மாழ்வாரின் திருவடியைச் சென்று சேர்த்தார்.


எப்படி திருப்பாணாழ்வார் கண்ணனை கண்ட கண்கள் இனி மற்றொன்றை காணாது என்று பாடினாரோ அது போல மதுரகவியாழ்வார் நம்மாழ்வார் தவிர வேறொருவரை தொழ மாட்டேன் என்று சரணாகதி செய்தார். மேலும் வைகுந்தம் போக வேண்டும் என்று ஆசைப் படுபவர்கள் இந்தப் பதினோரு பாசுரனகளையும் தினமும் சொல்ல வேண்டும். பதினோராம் பாசுரம் பலஸ்ருதி, இந்த பாசுரங்களை சொல்வதால் உண்டாகும் பயனைச் சொல்வது.

'அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்

நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே' இதை சொல்பவர்களுக்கு வைகுந்தம் உறுதி என்று உத்தரவாதமே கொடுக்கப்படுகிறது. தினம் அனுசந்திக்க முடியாதவர்கள் ஏகாதசி அன்று சொல்லலாம், சனிக்கிழமைகளில் சொல்லலாம்.


திராவிட வேதமான நாலாயிர திவ்யபிரபந்தம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அதிலும் முதல் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற முதல் மூன்று திருவந்தாதிகள் ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை . தீந்தமிழால் பாடப்பெற்ற இந்த பாசுரங்கள் காலப்போக்கில் பயன்பாட்டிலிருந்து மறைந்துவிட்டன. எனினும் பொயு 824 வருடத்தில் கடலூர் மாவட்டத்தில் வீரநாராயணபுரம் என்னும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் சோபக்ருத ஆண்டு ஆனி மாதம், அனுச நட்சத்திரம், பௌர்ணமி திதியன்று சேனை முதலியாரின் படைத்தலைவர் கஜாநனர் அம்சமாக திருவரங்கநாதன் என்னும் இயற்பெயருடன் அவதரித்த ஸ்ரீ நாதமுனிகள் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும் நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு வழங்கினார். (இவர் பிறந்த ஊரின் பெயர் வீரநாரயணபுர சதுர்வேதிமங்கம் என்று கல்வெட்டுகளில் உள்ளது.) ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் மகா விஷ்ணு, மகாலட்சுமி, விஸ்வக்சேனர், நம்மாழ்வாருக்குப் பின் ஆச்சார்யராக வருபவர். இவரை முதல்வராகக் கொண்டே வைணவ ஆச்சார்யர்களின் பரம்பரை துவங்குகிறது. இவர் ராமானுஜரின் குருவிற்கெல்லாம் குரு. (ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் தெற்குவாசல் வழியாக உள்ளே நுழைந்ததும், இடதுபுறம் முதல் சந்நிதியாக இருப்பது இந்த நாதமுனிகள் சந்நிதிதான்.)

அவர் ஒரு சமயம் தன் தந்தையுடன் வட நாட்டு யாத்திரை செய்தபோது அவருக்குப் பெருமாள் கனவில் தோன்றி கொடுத்த உத்தரவின் படி, இறைவனின் திருவுளப்படி தன் சொந்த ஊரான வீரநாராயணபுரம் திரும்பி நாதமுனிகள் காட்டுமன்னனார் கோயிலில் மலர், திருவிளக்கு கைங்கரியம், கோயில் நந்தவனப் பராமரிப்பு, பிரசாதம் சமைத்தல், இறைவனை அலங்கரித்தல் என்று இறைத் தொண்டு செய்து வந்தார். அவ்வாறு செய்து வருகையில் ஒருநாள் நாதமுனிகள் தனது சீடர்களுடன் கோயில் மண்டபத்தில் அமர்ந்து திருமாலின் பெருமைகளை தனது சீடர்களிடம் கூறிக் கொண்டிருந்தார். அப்போது கும்பகோணத்திலிருந்து அடியார்கள் சிலர் பெருமாளைச் தரிசிக்க வந்திருந்தனர். அவர்கள் பெருமாள் சந்நிதியில் ஒரு பாடல் தொகுப்பை இசையோடு பாடினர்.

ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே! சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே! ……………………………….திருவாய்மொழி 5-8-1

என்னும் பாடலில் தொடங்கி,

உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான் கழல்களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும் மழலைத் தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே ……………………………திருவாய்மொழி 5-8-10.

என்று 10 பாடல்களை அவர்கள் பாடி முடித்தனர்.இந்தப் பாடல்களைக் கேட்ட நாதமுனிகள் மெய்சிலிர்த்தார். உடனே அவர்களின் அருகில் சென்று அந்த பாடல்களை மீண்டும் பாடச்சொல்லி கேட்டார். பின்னர் அவர்களிடம் நாதமுனிகள், இந்த பாடல்களில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருகிறது. நீங்கள் பத்துப் பாடல்களை மட்டும்தானே பாடினீர்கள், மற்ற பாடல்களையும் பாடுங்களேன் என்று கூறினார். அதற்கு அவர்கள், எங்கள் ஊர் சாரங்கபாணி பெருமாள் குறித்து பாடப்பெற்ற இந்த பத்துப் பாடல்களை மட்டுமே எங்கள் முன்னோர் எங்களுக்கு கற்றுத் தந்துள்ளனர். மற்ற பாடல்கள் பற்றி எங்களுக்குத் தெரியாதே என்று கூறி வருந்தினர். எனினும் கும்பகோணம் வாருங்கள், அங்குள்ள எங்கள் ஊர் முதியவர்கள் யாருக்காவது மற்ற பாடல்கள் தெரியுமா என்று கேட்டுப் பார்க்கலாம் என்று அழைப்பு விடுத்தனர்.


சற்றும் தாமதிக்காமல் நாதமுனிகள் உடனே கும்பகோணம் புறப்பட்டார். அங்கிருந்த வைணவச் சான்றோர்களிடம் நாதமுனிகள் பேசியபோது, அவர்களும் தங்களுக்கும் அந்த பத்து பாடல்கள் மட்டுமே தெரியும், என்றாலும் இந்த பாடல்களை திருக்குருகூரைச் சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் பாடியதாக மட்டும் தெரியும், எனவே அங்கு சென்றால் ஏதாவது தகவல் தெரியும் என்று கூறினார்கள். அங்கு எவரும் இதைப்பற்றி அறியவில்லை. இறுதியில், அவர் மதுரகவியாழ்வாரின் சீடனான #பராங்குசதாசரை சந்தித்து அவரிடம் இதைப்பற்றி விசாரிக்கையில், அவர், நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியும், பிரபந்த பாடல்களும் சில காலம் முன்னமேயே மறைந்துவிட்டன, தம் குருவான மதுரகவியாழ்வார் தமக்களித்த #கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் பிரபந்தம் மட்டும் தம்மிடம் இருப்பதாகவும் அந்த பாசுரங்களை திருப்புளியாழ்வார் (திருக்குருகூரில் நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன் பக்தியுடன் அமர்ந்து பன்னீராயிரம் முறை (12,000 முறை) ஓதினால் நம்மாழ்வார் நம்முன் தோன்றி, வேண்டுவன அருளுவார் என்று பதிலளித்தார்.

ஸ்ரீ நாதமுனிகள்

அதைக்கேட்ட நாதமுனிகள், மிகுந்த மகிழ்ச்சியுடன், பராங்குசதாசரிடம் கண்ணிநுண்சிறுத்தாம்பு பாடல்களை உபதேசமாகப் பெற்று, நேரே ஆழ்வாரின் திருப்புளியமரத்திற்குச் சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் புரிந்தார்.பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு பாடல்களை ஒருமுகமாய் ஓதினார். நம்மாழ்வார், நாதமுனிகளின் முன் தோன்றி, பிரபந்தத்தின் பாடல்களுடன், அவற்றின் பொருளையும், அஷ்டாங்க யோக இரகசியங்களையும் அருளினார். ஆயிரம் பாடல்களைத் தேடிவந்த இவருக்கு மற்ற ஆழ்வார்கள் ‌அனைவரும் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். எப்படி எம்பெருமான் நம்மாழ்வாருக்கு ஸகல அர்த்த விஷேசங்களையும் அருளினானோ, அதே அர்த்தங்களை நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளினார். இதைத் தான் உபதேஶரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச்செய்தார். இப்பாடல்களை திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்து முறைப்படுத்தி மேலையகத்தாழ்வார், கீழையகத்தாழ்வார் என்ற தன் இரு அக்காள் மகன்களை (மருமக்களை) திருவாய்மொழி திவ்யப் பிரபந்தப் பிரச்சாரத்தில் நாதமுனிகள் ஈடுபடுத்தினார். இவர்களின் வழி வந்தோரே இன்றைய அரையர்கள்.


இவ்வாறு கிடைத்த அனைத்து ஆழ்வார்களும் பாடிய 3892பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தமாக நாதமுனிகள் தொகுத்தார். பின்னர் வந்த மணவாள மாமுனிகள் திருவரங்கத்தமுதனார் இயற்றிய இராமானுஜ நூற்றந்தாதியையும் (108)இதில் சேர்த்து நாலாயிரமாக்கினார்.

இந்த நாலாயிரமும் கிடைக்க காரணமாயிருந்தது மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண்சிறுதாம்பு. அத்தனை ஏற்றம் இந்தப் பதினோரு பாசுரங்களுக்கும், அதை இயற்றிய மதுரகவியாழ்வாருக்கும்.


திருவரங்கத்தமுதனார் தாம் இயற்றிய இராமானுஜ நூற்றந்தாதியில், மதுரகவி ஆழ்வாரைப்பற்றிப் பாடும் போது, ராமானுஜருக்கும் மதுரகவி ஆழ்வாருக்கும் உள்ள தொடர்பைக் கொண்டாடுகிறார்.


“எய்தற்கரிய மறைகளை ஆயிரம் இன்தமிழால்

செய்தற்கு உலகில் வரும் சடகோபனை -

சிந்தையுள்ளே

பெய்தற்கு இசையும் “பெரியவர்” சீரை உயிர்

களெல்லாம்

உய்தற்கு உதவும் ராமாநுசன் எம் உறுதுணையே!'


இதில் மதுரகவி ஆழ்வாரை,“பெரியவர்” என்று கொண்டாடுகிறார். பெரியவர் என்னும் பதத்தை, மதுரகவி ஆழ்வார் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தியுள்ளார். அவரை பெரியவர் என்று எதனால் அமுதனார் சொல்கின்றார் என்பதற்கு ஒரு சுவையான காரணம் உள்ளது. நம்மாழ்வாருக்கும் பகவானுக்கும் யார் பெரியவன் என்ற விவாதம் நடக்கிறது. நம்மாழ்வார், “பகவானே உன்னை விட நான் பெரியவன். காரணம், நீ இரண்டு உலகங்களையும் (விண், மண்) உன்னிடம் வைத்திருக்கிறாய்.அப்படி வைத்திருக்கும் உன்னையே நான் என்னுள் வைத்திருப்பதால் நானே பெரியவன் என்பதை ஒப்புக்கொள்” என்று பாடிய பாடல் இது.

புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்

செவிவழி உள்புகுந்து என்னுள்ளாய் அவிவின்றி

யான் பெரியன் நீ பெரியை என்பதனை ஆர் அறிவார்

ஊன்பருகு நேமியாய் உள்ளு.”

பெருமானை விட நம்மாழ்வார் பெரியவர் என்றால், அவரை தன் உள்ளத்தில் வைத்திருக்கும் மதுகவியாழ்வார் பெரியவருக்கு பெரியவரல்லவா. இதைத் தான் ராமானுஜ நூற்றந்தாதியில் பாடுகிறார்.


பெருமாள் கோயில்களில் நம் சிரசில் வைத்து அருளப்படும், 'சடாரி’ என்பது பெருமாளின் திருவடி நிலைகளாகும். நம்மாழ்வாரே பெருமாளின் திருவடிகளில் இருப்பதால் அவரது பெயரான’ சடகோபன்’ என்னும் பெயரே சடாரி என்று மருவியது.

“மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே”என்று பாடிய மதுரகவிகள் நம்மாழ்வாரின் திருவடிகளாக இருப்பவர். எனவே கோயில்களில் நம்மாழ்வார் சந்நதியில், சென்னியில் சாதிக்கப் படும் திருவடிகள் ‘மதுர

கவிகள்’என்று போற்றப்படுகின்றன.

ஸ்ரீ மதுரகவிகள்

ஒரு சமயம் ஒரு வைஷ்ணவர் மகா பெரியவாளிடம் வந்து உங்களை என்ன சொல்லி சேவிப்பது என்று கேட்டபோது, ஏன், கண்ணிநுண் சிறுத்தாம்பு சொல்லி சேவியேன் என்றாராம். அத்தனை ஏற்றம் அந்தப் பாசுரங்களுக்கு! குருபக்தியின் மூலம் குருவருள் பெற்று அவர் மூலம் திருவருள் பெறுவது தான் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயம். அதைத்தான் மதுரகவியாழ்வார் செயலில் காட்டினார். இவற்றை எல்லாம் பார்க்கும்போது வைகுந்தம் கிடைப்பது அப்படி ஒன்றும் கடினமான காரியம் இல்லை போன்றே தோன்றுகிறது. பகவானை ஆழ்வார் சரணடைகிறார். ஒன்று ஆழ்வாரை சரணடையவேண்டும் அல்லது ஆழ்வாரை சரணடைந்தவர்களை சரண் அடையவேண்டும். இது போதும் வைகுந்தம் கிட்டுவதற்கு! உய்ய ஒரு வழி, உடையவர் திருவடி என்ற தெய்வ வாக்கைப் போல குருவருள் பெற்றால் திருவருள் பெறுவோம் என்று நமக்கு முதல் எடுத்துக்காட்டாய் விளக்கும் பாசுரங்கள் இவை. கேட்டுப் பயில, அனுபவிக்க இந்த லிங்க் உதவும் https://www.youtube.com/watch?v=lSmzJxNm9kg&ab_channel=AmuthamMusic

ஸ்ரீ மதுரகவிகள் திருவடிகளே சரணம்🙏🏾

நம்மாழ்வார் வாழி திருநாமம்:

மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்

இனத்தாரை அல்லாது இறைஞ்சேன் தனத்தாலும்

ஏதும் குறைவு இலேன் எந்தை சடகோபன்

பாதங்கள் யாமுடைய பற்று


மதுரகவிகளின் வாழி திருநாமம்:

சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே

திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே

உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே

ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே

பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே

பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே

மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே

மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே


நாதமுனிகளுடைய வாழி திருநாமம்:

ஸ்ரீநாதமுனிகள் முயற்சியால் தான் நமக்கு இந்த அருளிச்செயல் கிடைத்தது. ஸ்தோத்ர ரத்னத்தில் அவருடையதிருப் பேரரான ஆளவந்தார் முதல் மூன்று ஸ்லோகத்தில் நாதமுனிகளுடைய பெருமைகளையே கூறுகிறார்.

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே


ஆழ்வார் ஆச்சார்யன் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் தேசிகன் திருவடிகளே சரணம்🙏🏾








https://guruparamparaitamil.wordpress.com/2016/10/12/madhurakavi-azhwar/

1,279 views0 comments

Recent Posts

See All
bottom of page