top of page
Writer's pictureAnbezhil

கலியுகம்

Updated: Jun 9, 2023


புராணங்களின்படி யுகங்கள் நான்கு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். இந்த நான்கு யுகங்கள் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு யுகத்திலும் வாழ்பவர்களின் தோற்றமும்,குண நலன்களும் ஒவ்வொரு வகையானவை.

  • கிருத யுகம் - அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரிாக 9 அடி உயரமும், 1 லட்சம் ஆண்டுகள் வாழலாம்.

  • திரேதா யுகம் - நான்கில், மூன்று பகுதி அறநெறியுடனும் ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 8 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10000 ஆண்டுகள் வாழலாம். ஸ்ரீராமர் திரேதா யுகத்தில் அவதரித்தார்.

  • துவாபர யுகம் - சரிபாதி அறநெறியுடனும் மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் உள்ளவர்களாகவும், 1000 ஆண்டுகள் வாழலாம். ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பலராமர் துவாபர யுகத்தில் அவதரித்தவர்கள்.

  • கலியுகம் - நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 ஆண்டுகள் வாழலாம். கலி முற்றும் போது மனிதன் 3 அடியாகவும் 30 வருட வாழும் காலமாக குறைந்து இருக்கும்.

பொதுவாக இருக்கும் அபிப்பிராயம் கலியுகம் கஷ்டமான யுகம், இந்த யுகத்தில் தர்மம் நிலைக்காது. அது உண்மை தான் - ஒரு கோணத்தில் பார்த்தால்! அதர்மம் தலைவிரித்தாடினாலும் சிலதை கலியில் எளிமையாக சாதித்து விடலாம். யுகம் தோறும் தர்மம் மாறுகிறது. (சாதாரண தர்மமான உண்மையே பேச வேண்டும், பிறர் பொருள் மீது ஆசை வைக்காது இருத்தல் போன்றவை எல்லா யுகங்களுக்கும் பொது. ஆனால் விசேஷ தர்மமான முக்தி அடைவது பற்றிய தர்மம் யுகத்துக்கு யுகம் வேறுபடுகிறது.) எல்லா யுகங்களிலும் நமக்குக் குறிக்கோள் ஒன்றே. இறைவனை அடைவது எப்படி என்பது தான் அது. நம்மை விட பகவானுக்கு அந்த குறிக்கோள் முக்கியம். நாம் அசட்டையாக இருந்தாலும், அவனை வந்து நாம் அடைய வேண்டும் என்பதில் வெகு ஆவலுடன் இருக்கிறான் அவன். அதனால் தான் வழி முறைகளையும் அவன் மாற்றி அமைத்தான். கிருத யுகத்தில் பகவானை தியான மார்க்கமாக தான் அடைய முடிவதாக இருந்தது. தியானத்தால் அடைய வேண்டும் என்றால் அதற்கு நிரம்பப் பயிற்சி வேண்டும். இடைவிடாமல் பகவானை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும், மிகவும் கடினமான வழி. ஆனால் அதற்கான காலமும் சுத்த சித்தியும் அப்பொழுது மனிதனுக்கு இருந்தது. இப்பொழுது நமக்கு பத்து நிமிடங்கள் இடைவிடாமல் நினைப்பது கூட கடினம் தான். மனமும் மற்ற புலன்களும் நமக்கு வசப்படாது. கிருத யுகத்தில் இருந்தவர்களுக்கு இந்திரியங்களை அடக்கும் சக்தி அதிகமாக இருந்தது. ஆனால் நாம் இருப்பதோ கலி யுகத்தில். தியானம் செய்ய முதல் தேவை பத்மாசனம். அவ்வாறு அமர்ந்து இருக்கவே இப்போது இயலாத காரியமாகி விட்டது. நம் உடலுக்கு அதற்கான பயிற்சி இல்லை. அடுத்து வேத அத்யயனம் பூரணமாக செய்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. கிருத யுகத்தில் வாழ்ந்தவர்காளால் மட்டுமே அது சாத்தியமாக இருந்தது. அதனால் பகவான் அடுத்த யுகமான த்ரேதா யுகத்திலேயே வழியை சற்றே எளிமையாக்கினார். கைகளால் யஞ்ய யாகத்தை செய்து தன்னை வந்தடையும் வழியை ஏற்படுத்தினார். மந்திரம், ஜபம் ஹோமத்தினால் அவனை சென்று அடையலாம். அடுத்து துவாபர யுகம் வந்தது. ஹோமம், யஞ்ஞம் செய்யும் ஞானமும் இல்லாமல் போயிற்று. அதனால் அர்ச்சனம், சேவனம் செய்து இறைவனை அடைய வழி அமைத்தார். கலியுகம் வந்தது அந்த அளவு கூட பக்தி இல்லமல் போயிற்று. ஆனால் இறைவனை அடைய வேண்டும் என்கிற ஆசை மட்டும் போகவில்லை. அதனால் கலியுகத்துக்கு மிக எளிமையான வழியை சொன்னார். நாம சங்கீர்த்தனம். கேசவனை நாம சங்கீர்த்தனம் செய்தால் அவன் திருவடியைப் பற்ற முடியும் என்றார்.

#பாகவதபுராணம் கலி எப்படி இருக்கும் என்று சொல்கிறது. இப்பொழுது நாம் இருப்பது கலியின் ஆரம்பத்தில் தான். கலி யுகம் ஆரம்பித்து ஐயாயிரம் ஆண்டுகளே ஆகியுள்ளன. உண்மையான கலியின் வீர்யம் தெரிய இன்னும் மூணு லட்சம் வருடங்கள் போக வேண்டும். ஆனால் அதன் வாசனை இப்பொழுதே தெரிகிறது. கலியுகத்தின் கடுமை தெரிந்தால் தான் அதனை எதிர்கொள்ள என்ன வழி என்பதும் புரியும். பாகவதம் கலி எப்படி இருக்கும் என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறது.

கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள் காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். [பாகவத புராணம் 12.2.1]

பண்புகள் அடிப்படையில் ஒருவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும் சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். [பாகவத புராணம் 12.2.2]

சில ஆண்களும், பெண்களும் வெறும் உடலுறவுக்காக மட்டுமே தொடர்பு கொண்டிருப்பார்கள். தொழில் துறைகளில் வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். பூணூல் அணிந்திருப்பதால் மட்டுமே ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுவான். [பாகவத புராணம் 12.2.3]

கணவன், மனைவி உறவு என்பது வெறும் உடலுறவுக்காக மட்டுமின்றி அது ஒரு மிக உன்னதமான பந்தம். ஆணும், பெண்ணும் சமம் இருவரும் தங்களின் குடும்பத்தை முறையாக வழி நடத்த வேண்டும். பெண்ணை மதிப்பதால் தான் ஒருவன் ஆணாகிறான். ஆணை மதிப்பதால் தான் ஒருத்தி பெண் ஆகிறாள். பிராமணன் என்பவன் நற்குணங்களாலும் தர்ம செயல்களாலும் உருவாகிறானே தவிர பூணூல் அணிவதால் அல்ல. சமூகத்தில் வேண்டுமென்றால் பூணூல் அணிந்து கொண்டு தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ளலாம். ஆனால் பகவானின் முன்னிலையில் எல்லாவுயிர்களும் சம்மே! சர்வபூதேஷு சமஹ் - கீதை ஆனால் கலியில்

ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி தவறான போலி குருக்களை நம்பி வழி தவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர் கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். [பாகவத புராணம் 12.2.4]

கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட் செல்வம் (பணம்) இல்லாதவனை தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும், அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வான். [பாகவத புராணம் 12.2.5]

அலங்காரம் செய்தவனெல்லாம் அழகானவன் என்றறியப்படுவான். முரட்டுத்தனமான பேச்சு உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள் ஆட்களை சேர்த்துக் கொள்வதையும் பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். [பாகவத புராணம் 12.2.6]

உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்து விடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன் அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். [பாகவத புராணம் 12.2.7]

ஊழல் நிறைந்த அரசாங்கத்தால் நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது வசூலிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். அரசின் அலட்சியப் போக்கினால் கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.9]

கடுங்குளிர், புயல் கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன் பங்களிலும் சிக்கிக் கொள்வார்கள். [பாகவத புராணம் 12.2.10]

கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 50 ஆண்டுகளாக குறையும். [பாகவத புராணம் 12.2.11]

தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதி காலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மறப்பார்கள். [பாகவத புராணம் 12.3.42]

பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல் தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். [பாகவத புராணம் 12.3.41]

வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். [பாகவத புராணம் 12.3.38]

தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில் தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசு பால் கொடுப்பது குறைந்து விட்டால் அப்பசுக்களும் கொல்லப்படும். நன்றிகடன் மறக்கப்படும். [பாகவத புராணம் 12.3.36]

நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர் வேதங்கள் கயவர்களால் தங்கள் சுய நல கோட்பாடுகளைப் பரப்ப பொய்யான முறையில் மொழிப் பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்ல மெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆசாரியர்கள் தோன்றி பக்தர்களை ஏமாற்றி தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். [பாகவத புராணம் 12.3.32]

சுருக்கமாக அரசர்கள் செங்கோல் தாழும்.கொடுங்கோல் ஏற்றமுறும். வரிகள் அதிகமாகும். அரசுகள் இறை நம்பிக்கை மற்றும் வழிபாடுகளை பாதுகாக்க மாட்டார்கள். அரசே மக்களை துன்புறுத்தும். மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வர்.

  • மக்கள் மனப்பான்மை: பொறாமை அதிகமாகும்;ஒருவருக்கொருவர் வெறுப்பு வளரும். கொலைகள் எந்தவொரு குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தாது.காமம் மற்றும் பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும்.

  • ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காது.அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து உண்டாகும்.

  • திருமணம் அவரவர் விருப்பப்படி தான் நடக்குமே தவிர பெரியவர்கள் சம்மதத்தின் பேரில் அல்ல.

கலியுகம் துன்பங்கள் நிறைந்தது, ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் உள்ளது. கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழையினில் குடை போல் இறைவனிடம் காட்டும் பக்தி இத்துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். மனத்தை உறுதியாக வைத்துக் கொள்ள தியானமும் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள யோகமும் செயலை தூய்மையாக வைத்துக் கொள்ள சுயநலமற்ற சேவைகளும் புரியவேண்டும். கலியுக துன்பங்களில் நம்முடைய தர்மங்களை மறந்துவிட கூடாது. கலி என்னும் பாலைவனத்தில் சோலைவனமாக நாமசங்கீர்த்தனம் செய்பவனின் மனம் திகழும். இதுவே பகவான் நமக்குக் கொடுத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். கலியுகத்தின் நடுவில் ஒரு பொற்காலம் மலரும் என கூறப்படுகின்றது. இப்போது நாம் எல்லோரும் அந்த பொற்காலத்திற்காக உலகத்தை தயார் செய்ய வேண்டும். அனைத்தையும் அச்சமின்றி மிகவும் துணிவாக எதிர் கொள்ள வேண்டும்! மிகவும் தெளிவான சிந்தனையோடு செயல்பட வேண்டும். ஒரு போதும் கடவுளை மறவாமல் இருக்க வேண்டும்.


யுகத்துக்கு யுகம் ஏன் மாறுதல் நிகழ்கிறது? கிருத யுகத்தில் மனிதன் ஆயிரக் கணக்கான வருடங்கள் வாழ்ந்தான். உடல் ஆரோக்கியமாக இருந்தது. சுற்றுச் சூழல் மாசுபடாமல் இருந்தது. அதனால் அவனால் மிகக் கடினமான தபஸ் கூட மேற்கொள்ள முடிந்தது. யுகங்கள் மாற மாற ஆயுள் குறைந்தது, ஆரோக்கியம் குறைந்தது - எதனால்? பஞ்ச பூதங்களில் மாசு ஏற்பட்டதால். அது மட்டும் அல்லாமல் பஞ்ச பூதங்களில் இருந்து நேரடியாக பெற்ற இயற்கை சக்திகளை உதாசீனப் படுத்தி செயற்கைக்கு முக்கியத்துவம் தந்ததால். அந்த யுகங்களில் இயற்கையில் இருந்து சக்தியை பெற்றுக் கொண்டிருந்தனர். இன்றோ செயற்கையில் தான் வாழ்கிறோம். கிருத யுகத்தில் புத்தி ஒரு நிலையை நோக்கி, பரமாத்மாவை நோக்கிப் போயிற்று. கலியியில் நிறைய தொந்தரவுகள். நம்மால் பகவானை மனத்தில் ஒருநிலைப் படுத்தி நினைக்க முடிவதில்லை. வேகமான வாழ்க்கை முறை.


ஆயினும் கலியின் மேன்மையை வேத வியாசர் இவ்வாறு முக்கியமான மூன்று விஷயங்கள் மூலம் சொல்கிறார்.

கலி சாது: கலி மிகச் சிறந்தது.

யோஷித சாது: பெண்கள் சிறந்தவர்கள்.

ஷூத்ர சாது: நாலாம் வர்ணத்தவர் சிறந்தவர்கள்

நான்கு யுகங்களில் கலி யுகத்துக்கு ஏற்றம். ஆண்களை விட பெண்களுக்கு ஏற்றம். நான்கு வர்ணத்திலே நான்காவது வர்ணத்துக்கு ஏற்றம். இந்த மூன்றும் உயர்வானது என்று வியாசர் சொன்னதற்கு என்ன காரணம் என்று மற்ற ரிஷிகளுக்குப் புரியவில்லை. ஏனென்றால் அவர்கள் கிருத யுகம் தான் உயர்ந்தது, ஆண்கள் தான் உயர்ந்தவர்கள், அந்தணன் தான் உயர்ந்தவன் என்று எண்ணியிருந்தார்கள். அதற்கு விளக்கம் கொடுத்தார் வியாசர். இவர்கள் உயர்ந்தவர்கள் என்று நீங்கள் உரிமையில் பேசுகிறீர்கள், ஆனால் நான் சொல்வது, எளிமை என்கிற அடிப்படையில் இவர்கள் மூவருக்கும் ஏற்றம் என்றார். கிருத யுகத்தில் நூறு வருடங்கள் கடினமாக உழைத்து பெற்ற ஒரு விஷயத்தை, உதாரணம் முக்தி, அதை பத்தே வருடங்களில் த்ரேதா யுகத்தில் பெற்றுவிடலாம். அதுவே துவாபர யுகத்தில் ஒரு வருடத்தில் அடைந்து விடலாம். கலி யுகத்தில் அதை ஒரு நாளில் சாதித்து விடலாம். ஒரே விஷயத்தை ஒருவன் எளிமையாகவும் பெற முடியும், கடின முறையிலும் பெற முடியும் என்றால் அவன் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பான்? சுலபமான வழியைத் தானே? அதனால் கலியில் தான் சிறு முயற்சிக்குப் பெரும் பரிசு கிடைக்கிறது என்று கலியை உயர்த்திக் கூறினார்.


"த்யாயன் க்ருதே, யஜன் யஜ்ஞை: த்ரேதாயாம் த்வாபரே அர்ச்ச்சயன் . யதாப்நோதி, ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்" என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. இதன் கருத்து, க்ருத யுகத்தில் த்யானத்தினாலும் த்ரேதா யுகத்தில் யாக யஜ்ஞங்களாலும் த்வாபர யுகத்தில் பகவானுக்கு செய்யும் அர்ச்சனையினாலும் எந்த பயனை ஒருவன் அடைகிறானோ அந்தப்பலனை கலியுகத்தில் பகவானுடைய திருநாம சங்கீர்த்தனம் செய்வதால் அடைகிறான் என்பதாகும். கலியுகம் மிகக்கொடியதாய் இருந்தாலும் இந்த சுலபமான வழி இதில் இருப்பதனால் மற்ற யுகங்களைக் காட்டிலும் இதுவே உயர்ந்தது என்று ஆசார்யர்கள் கருத்து.


கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன நாளும்

கொடுவினை செய்யும் கூற்றின்தமர்களும் குறுககில்லார்

விடமுடையரவில் பள்ளிவிரும்பினான் சுரும்பலற்றும்

தடமுடைவயல் அனந்தபுரநகர் புகுதும்இன்றே (தி. வா.10-2-1)

பொருள்: கேசவா என்று ஒரு முறை கூற எல்லாத் துன்பங்களும் அழியும்; எப்பொழுதும் கொடிய செயல்களையே புரியும் யமதூதர்களும் அணுக மாட்டார்கள்; ஆதலால் நஞ்சு பொருந்திய ஆதிசேஷ சயனத்தில் அரிதுயில் கொள்கின்ற எம்பெருமானுடைய வண்டுகள் ஒலிக்கின்ற தடாகங்களை உடைய வயல்கள் சூழ்ந்த திருவனந்தபுரம் என்னும் நகரத்தை இன்றே அடைவோம், என்று நம்மாழ்வார் திருவனத்தபுரம் அனந்தபத்மநாப சுவாமியை மங்களாசாசனம் செய்துள்ளார். நமக்காக கலியுகத்தில் வந்து அவதரித்த ஆழ்வார்களில் #ஆழ்வார் என்றாலே நம்மாழவாரை குறிக்கும் பெருமையுடைய நம்மாழ்வார் நமக்கு நாம சங்கீர்த்தனத்தின் பெருமையை விளக்க அளித்த சத்திய வாக்கு இது..


புண்ணியஞ்செய்து நல்லபுனலொடுமலர்கள்தூவி

எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பறுக்கும் அப்பால்

திண்ணம் நாமறியச்சொன்னோம் செறிபொழிலனந்தபுரத்து

அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார் ( தி.வா 10-2-5)


பொருள்: பக்தியோடு தண்ணீரையும் மலர்களையும் கொண்டு அர்சித்து எம்பெருமானுடைய திருநாமங்களை நினையுங்கள். அவ்வாறு நினைத்தால், அந்நினைவு இறப்பினை நீக்கும். அதற்கு மேல், சோலைகள் சூழ்ந்த திருவனந்தபுரத்தில், எழுந்தருளி இருக்கின்ற பெரியோனுடைய திருவடித் தாமரைகளைச் சேர்கின்றவர்கள் நித்தியசூரிகள் ஆவர். எல்லாரும் அறியும்படியாக நாம் அறுதியிட்டுச் சொன்னோம் என்கிறார் நம்மாழ்வார். இந்த உலக வாழ்க்கையில் வேண்டியதும் கிட்டும், அதற்குப் பின் மோக்ஷமும் கிட்டும். எத்தனை பாபங்களை சேமித்து வைத்திருந்தாலும் நாம சங்கீர்த்தனம் அதை போக்கிவிடும். நூறு வருட இருட்டு குகையில் ஒரு தீபம் ஏற்றி வைத்தால் எப்படி இருட்டு அகன்று ஒளி பிறக்குமோ அது போல் ஒரு முறை இறைவன் நாமத்தை சொன்னால் அனைத்துப் பாபங்களும் தொலைந்து மோக்ஷம் கிட்டும் என்கிறார்கள் ஆழ்வாரிதிகள்.

பகவானுக்கு என்ன ஏற்றம் உள்ளதோ அது அவன் நாமத்துக்கும் உள்ளது. பகவானை கோவிலில் சென்று தரிசிக்க இயலாவிட்டாலும் இருந்த இடத்தில் இருந்து கொண்டு நாம ஜபத்தை செய்து வந்தால் தரிசித்தப் பலனும் அதற்கு மேலும் நமக்குக் கிட்டும். நாமம் சொல்வதினால் வியாதியும் போகும், எதிரியும் அழிவர், ஐஸ்வர்யமும் கிட்டும், மோக்ஷமும் சித்திக்கும். #நாமசந்கீர்த்தனத்துக்கு அத்தனை உயர்வு. இந்த உலக வாழ்க்கையில் நமக்கு நல்லது செய்து, இறந்த பின் முக்தியையும் அளிக்கவல்லது. பகவானின் பிரதிநிதிகளே நாமங்கள். #திருமங்கையாழ்வார் சொல்கிறார்


"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"

நித்தியமும் நாராயண நாமம் சொல்வோம்! நமது துன்பம் நீங்கி இவ்வுலகில் இன்பமும் பின்பு வீடும் பேறும் அடைவோம்!


பொருள் தெரிந்து தான் நாமம் சொல்லவேண்டுமா இல்லை தெரியாமல் சொன்னாலும் பலம் கிட்டுமா என்றால் நாமத்தைச் சொன்னாலே போதும். அர்த்தம் தெரிந்து தான் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நெருப்பு சுடும் என்று தெரியாமல் தொட்டாலும் அது சுடும், அதே போலத் தான் திருநாமங்களும். அதன் பொருள் தெரியாமல் சொன்னாலும் பலனை கொடுத்து விடும். அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும். அதற்கு #அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் #அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது. அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர். ஒரு முறை, யாக யக்ஞங்களுக்காக தர்ப்பை முதலியவைகளை சேகரிக்க வேண்டி அஜாமிளன் காட்டுக்கு சென்றார். அங்கே ஒரு தாசியை கண்டு அவளை மோகித்து, தன்னிலை மறந்து, அவளுடனேயே வாழ்கிறார். அந்த தாசிக்கும் அஜாமிளனுக்கும் 10 பிள்ளைகள் பிறக்கிறார்கள். முன் வினை பயனால் தனது கடைசி பிள்ளைக்கு நாராயணன் என்று பெயரிட்டார். கடைசி பிள்ளையின் மேல் பாசம் வைத்த அஜாமிளன் தன்னை அறியாமல் நாராயணா என்று பல முறை கூறுகிறார். கடைசி காலத்தில் அஜாமிளனின் உயிரை கொண்டு செல்ல யம தூதர்கள் வருகிறார்கள். யம தூதர்களை கண்ட பயத்தில் அஜாமிளன் தனது கடைசி மகனை நினைத்து நாராயணா என்று அழைக்கிறார். நாராயணா நாமத்தை சொன்னவுடன் வைகுண்டத்திலிருந்து பகவான் விஷ்ணுவின் தூதர்கள் வந்து யம தூதர்களை தடுத்தார்கள். யம தூதர்கள் அஜாமிளன் செய்த பாவத்தின் பட்டியலை எடுத்து கூறினார்கள். அதற்கு விஷ்ணு தூதர்கள் அனைத்து பாவங்களையும் ஸ்ரீ நாராயண நாம ஜபம் போக்கி விட்டதை எடுத்துரைத்து அஜாமிளன் உயிரை காக்கிறார்கள். இதை கேட்ட அஜாமிளன், பகவான் நாமத்தின் மகிமையை உணர்ந்து, தனது மீதி நாட்களை ஹரித்வாரில் பகவன் நாம சங்கீர்த்தனத்தில் கழித்து பிறகு வைகுண்ட பதவி அடைகிறார்.

விஷ்ணு தூதர்கள் தங்களை தடுத்த விஷயத்தை யமதர்மராஜனிடம் யம தூதர்கள் கூற, அதற்கு யமன் "பகவான் மஹா விஷ்ணுவிற்கு தான் கட்டுப்பட்டவர் என்றும், பகவானின் பக்தர்களையும் பகவானின் நாமத்தை கூறுபவர்களையும் ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று தனது யம தூதர்களுக்கு உரைக்கிறார். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில் "சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து" என்று வருகிறது. இதன் பொருள், அது பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம். நாரயணா என்ற சப்தமே நமது துயரங்களை போக்க வல்லது. எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை (அது தவறாக இருந்தாலும்) தாய் புரிந்து கொள்கிறாளோ, அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.

ஆனால் பொருளை தெரிந்து கொண்டு சொல்வதினால் நாம் இன்னும் பகவானை அனுபவிக்க முடியும். அவன் கல்யாண குணங்களை அறிந்து சொல்லும் பொழுது அந்த குணங்களும் நம் மேல் ஒட்டிக் கொள்ளும். அதனால் பொருள் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். திருநாமம் யார் சொன்னாலும் பலனை கொடுக்கும், எப்பொழுதும் பலனை கொடுக்கும், எந்தப் பலனையும் கொடுக்கும். பகவானுக்கு உள்ள அத்தனை பெருமையும் அவர் நாமத்துக்கு உள்ளது. அதனால் தான் #தொண்டரடிப்பொடியாழ்வார்


பச்சை மாமலை போல் மேனி

பவளவாய்க் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே

ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான் போய்

இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகருளானேன்

என்கிறார், அச்சுதா, ஆனந்தா கோவிந்தா என்று அவன் திருநாமம் சொல்லும் பேற்றினை விட வேறு பெரிய பேறில்லை என்கிறார். வைகுந்தமே வேண்டாம் என்கிறார். நாமங்கள் சொல்வதற்கு எந்த விதியும் கடைபிடிக்க வேண்டியதில்லை. அவை மந்திரங்கள் அல்ல நியம நிஷ்டைகள் கடைபிடிக்க. ராமா கிருஷ்ணா கோவிந்தா ஷண்முகா நமசிவாயா காமாட்சி மீனாட்சி என்று எப்பவும் எந்நிலையிலும் சொல்லலாம்! குருவிடம் உபதேசம் பெறாமலும் தீக்ஷை வாங்காமலும், படித்தவன் படிக்காதவன், ஆண் பெண் குழந்தை என்ற எந்த பேதமும் இல்லாமல் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், முக்தி பெறலாம். நமக்கு சொல்ல நாமமும் இருக்கு, பொழுதும் இருக்கு,நாக்கும் இருக்கு ஆனால் சொல்வதற்கு மனம் தான் இல்லை.


ஒவ்வொரு யுகத்திற்கும் என்ன வேறுபாடு என்றால் மனிதனின் குணங்கள் மாறுபடுகின்றன. முதல் யுகமான கிருத யுகத்தில் மனிதனுக்கு சத்வ குணம் நிறைய இருந்தது. த்ரேதா யுகத்தில் மனிதர்களுக்கு ரஜோ குணம் நிறைய இருக்கும். துவாபர யுகத்தில் மனிதனுக்கு ரஜோ குணம், தமோ குணம் இரண்டும் சேர்த்து நிறைய இருக்கும். இந்த யுகமான கலியுகத்தில் மனிதனுக்குத் தமோ குணம் அதிகமாக இருக்கும்.

சத்வ குணம் என்றால் என்ன? சத்வ குணம் ஞானத்தை நிறைய வளர்க்கும். ரஜோ குணம் என்றால் என்ன? ரஜோ குணம் ஆசையையும் கோப தாபத்தையும் வளர்க்கும்.

தமோ குணம் என்றால் என்ன? தூக்கம், மயக்கம் அறிவின்மை இவை மூன்றையும் தரும்.

என்று வரை இந்த உலகத்தில் இருக்கிறோமோ அன்று வரை இந்த குணங்கள் நம்மை விடவே விடாது என்று கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் நம் முயற்சியால் ரஜோ குணம், தமோ குணத்தைக் குறைத்துக் கொண்டு சத்வ குணத்தை வளர்த்துக் கொள்ள பார்க்க வேண்டும். கோபம், தாபம், ஆசை, மயக்கம் அப்பொழுது தான் குறையும்.


எல்லா யுகங்களிலும் நல்லதும் இருந்தது தீயதும் இருந்தது. முதல் ஐந்து அவதாரங்கள் கிருத யுகத்தில் தான் தோன்றினார்கள். தீயதை அழிக்கத் தானே தோன்றினார்கள்? ஹிரண்யகசிபு இருந்தது கிருத யுகத்திலே, இராவணன் இருந்தது துவாபர யுகத்திலே. கலியுகத்துக்குத் தோள் தீண்டியான துவாபர யுகம். அதாவது கலியுகத்துக்கு மிக நெருங்கிய உறவு கொண்டது துவாபர யுகம். அந்த யுகத்தில் திரௌபதி மானபங்கப் படுத்தப் பட்டாள். அதனால் தான் மகாபாரத யுத்தமே வந்தது. யுத்தத்தில் தர்மம் கடைபிடிக்கப்பட்டதா? கிருத யுகத்திலும் தீயவர்கள் உண்டு. இராவணனை கொல்ல இராமன் செய்த யுத்தத்தில் இராமபிரான் போர் நியதிகளை கடைபிடித்தார். அது போல மகாபாரத யுத்தத்தில் கடைபிடிக்கப் படவில்லை. இந்த யுகமான கலியுகம் சற்றே கொடியது தான். காரணம் நம்முடைய தாமச குணம். கலி யுகத்திலும் நன்மை உண்டு. இடத்தை குற்றம் சொல்வதிலோ காலத்தை குற்றம் சொல்வதிலோ எந்த லாபமும் இல்லை. நமக்கு நாமே எப்படி ஜாக்கிரதையாக இருப்பது, எப்படி என்று தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்க வேண்டும். கிருத யுகத்தில் ராக்ஷசர்கள் தனியாக ராக்ஷசர்களாக அசுரத் தன்மையோடு இருந்தார்கள். மனிதர்கள் நற்குணத்துடன் (கூடியவரை) இருந்தார்கள், அதாவது அசுரத்தன்மை இல்லாத அளவு. ஆனால் துவாபர யுகத்தில் கம்சன் மனிதன் தான், அசுரன் அல்லன் ஆனால் அவனை அசுரன் என்று எண்ணும்படி ராக்ஷச குணங்களுடன் இருந்தான். அதனால் மனிதனே இன்று கலியுகத்தில் அசுர குணங்களுடன் காணப் படுகிறான். நம் ஒவ்வொருவருக்குள்ளும் அசுரன் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறான். இது தான் கலியுகம். அதனால் நம்மை நாமே மாற்றிக் கொள்ள பாடுபட வேண்டும். அதற்கு நாமசங்கீர்த்தனம் ஒன்றே வழி.


கலியுகத்தில் நிச்சயம் நமக்கு ஒரு குரு தேவை. எந்த சம்பிரதாயத்தை நாம் தொடர்ந்தாலும் (த்வைதம், அத்வைதம், த்வைதாத்வைதம், விசிஷ்டாத்வைதம்) அந்த சம்பிரதாயத்து குருவை நாம் ஏற்றுக் கொண்டு அவர் அறிவுரைப்படி நடக்க வேண்டும். யோகமும் தியானமும் குறைந்திருக்கும் போது அந்த ஆச்சார்யர்கள் நிச்சயம் தேவைப் படுவார்கள். குரு எதற்கு? இடைத் தரகர்கள் எதற்கு என்று கலியுகத்தில் நிறைய நம் காதில் விழும், இவை நம்மை மூளைச் சலவை செய்வதற்காகத் தான். நம் தந்தை எந்த சம்பிரதாயத்தை கடைபிடித்தாரோ அதனையே தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்று அந்த குருவினை கேட்டு அதன்படி நாம் வாழ முயல வேண்டும். ஆனால் பழைய குருவாக இருக்க வேண்டும், ஆயிரம் காலத்து ஆசிரமம் அல்லது மடத்தைச் சேர்ந்தவராக இருத்தல் நலம். அவர்கள் தான் இந்த கலியுகத்தில் நமக்கு நேர்மையாக வழி காட்டுவார்கள். அவரிடம் நம்பிக்கையும் வேண்டும், அவருக்கு வேண்டியதை செய்யும் கைங்கர்ய மனநிலையும் கைங்கர்யம் செய்யும் வினயமும் வேண்டும். இந்த எளிமையான வழி கலியுகத்தில் நமக்க ஏகப்பட்ட நன்மைகளை அளிக்கும். சத்ய யுகத்தின் நியதி போல தியானம் செய் என்றால் இப்பொழுது இயலாது, நூறு புண்ணிய நதிகளில் நீராடி வா என்றாலும் முடியாது. அதனால் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு சில நியதிகளை கடைபிடித்தல் (உதாரணம்) பிராணி வதை பண்ணாதே, அஹிம்சையை கடைபிடி, யாரையும் துன்புறுத்தாதே போன்றவற்றை செய்து வந்தால் தன்னாலே நாம் மாறுவது தெரியும்.


பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,

நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,

கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,

மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்


ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவராக உள்ள நம்மாழ்வார் பொலிக, பொலிக என்கிறார், மங்களம் சாந்தி என்று சமஸ்கிருதத்தில் சொல்கிறாப் போலே பொலிக என்பது அதற்கு இணையான சொல். ஒளிமிக்கது என்பதாகும். இனிமேல் நரகம் என்பதே இருக்காது. திருமாலே இந்த பூமியில் வந்து பிறந்து நமக்கு அருள் செய்த பின், யார் நரகம் போகப் போகிறார்கள்? எமனுக்கு என்ன வேலை? கலி புருஷனும் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறான்" என்கிறார். அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. இனிமேல் மரணம் இல்லை, நரகம் இல்லை. இது உண்மையாக இருக்க பாகவதர்களை நாம் நல்லபடியாக ரட்சிக்க வேண்டும். நல்லவர்கள் கூட்டம் பக்தர்கள் கூட்டத்திற்கு மனத்தாலோ சரீரத்தாலோ தொண்டு புரிய வேண்டும். அதே போல நம்மை சுற்றியுள்ள ஜீவ ராசிகளுக்கு நன்மை செய்ய வேண்டும். இவை முக்கியம். திருநாம ஸ்மரணை, பாகவதர்களை போற்றுதல், ஜீவராசிகளை காத்தல் இவை மூன்றும் செய்தால் கலி நம்மைத் தீண்டாது. அதில் பகவானுக்குக் கலியுகத்தில் செய்யும் கைங்கர்யம் நாம சங்கீர்த்தனம், மிக எளிமையானது. பாகவதர்களுக்கு கைங்கர்யம் செய்வது நமக்குக் கஷ்டம். ஏனென்றால் ஒரு மனிதனை பகவானுக்கு இணையாக பார்க்க நம் மனம் (அகந்தை) இடம் கொடுக்காது. ஆனால் அடியார்க்கடியான் அடியார்க்கடியான் என்று எத்தனை பாடியிருக்கிறார்கள் பெரியோர்கள். அதனால் அதன் மேன்மை தெரிந்து தொண்டு செய்யவேண்டும்.

எல்லா நாமங்களும் உயர்வானவையே. அதில் ராம நாமம் என்பது மிகவும் உன்னதமான நாமம். நம் துக்கத்தையெல்லாம் போக்கடிப்பவர் ராமன். #ராமேதி_ராமா ஆனந்தத்தை எல்லாம் அளிப்பவர் ராமன் என்று பெயர். தசரதர் காலம் முதல் பழங்காலம் தொட்டு எத்தனையோ பேருக்கு வாழ்க்கையிலே துனபத்தையெல்லாம் போக்கி, ஆனந்தத்தை அளித்த பரம்பொருள் அவர். அந்த பரம்பொருளின் நாமம், மஹாவிஷ்ணு குரு வடிவத்திலே இருந்து ஸ்ரீ ராமனாக தசரத குமாரனாக அவதாரம் செய்தார். தசரதருக்கு வெகு நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்ததனால் இந்த துன்பம் எல்லாம் நீங்குவதுடன் குழந்தை பிறந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்ட பொழுது துன்பங்கள் எல்லாம் நீக்கி ஆனந்தத்தை கொடுக்கக் கூடிய பெயர் #ராமன் என்ற பெயரை வைத்தார்கள். உபநிஷத்திலேயிருந்து ராமனுடைய நாமம் விளங்கி வருகிறது. தசரதர் மெய்மறந்து அந்த பெயரை வைத்தார். தசரதனுடைய குமாரனுக்கு 'ராமன்' என்று பெயரை வைத்தார்களே தவிர 'ராமா ராமா' என்பது அனாதியாக உலகம் தோன்றிய காலம் முதல் உபநிஷத்திலேயிருந்து நாமமாக உள்ளது ராம நாமம். 'தாரக நாமம்' என்று சொல்லுவார்கள்.


"தினம் நாம் ஒவ்வொருவரும் ராமபிரானை மனதில் நினைத்து ராம நாமத்தை ஜெபித்து நம்முடைய வாழ்க்கையிலும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருக ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று எல்லோரும் சொல்லவேண்டும். "ராமோ ராமோ ரானமதி இராஹா மனோ கதாஹா:" ராம ராஜ்யம் உலகம் முழுவதும் ராமமே ராஜ்யம் உஷ சகி. ராமன் ராஜ்ய பரிபாலனம் பண்ணும் போது ராமா ராமா என்று சொல்லுகின்ற ஜனங்கள் அரிசியில்லை, உளந்து இல்லை, கிருஷ்ணாயில் இல்லை, கறிகாய் இல்லை என்று ஒருவரும் அழவில்லை. அப்படிப்பட்ட நிலையை நம்முடைய நாட்டில் திரும்பவும் கொண்டு வர உலகம் முழுவதும் ராமா ராமா ராமா என்று ஜபத்தை ஜபித்து நம்முடைய வாழ்க்கையில் உள்ள எல்லா துன்பங்களும் அகலுவதற்கும், மனிதனுடைய துன்பங்கள் எல்லாம் அகலுவதற்கும், நல்ல புத்தி கிடைப்பதற்கு "ஸப்கோ சன்மதி ஹே பகவான்" என்று பிரார்த்தனை செய்து எல்லோருக்கும் நல்ல புத்தி கிடைப்பதற்கு ராமபிரான் அருள்வாராக." என்று ஆசீர்வதிக்கிறார் #காஞ்சிமகாபெரியவா


நம்மாழ்வார் சொல்கிறார் இந்த கலி யுகத்தில் எண்ணினால் போதும் என்கிறார். தியானம் இல்லை, இது சிந்தனை - எண்ணிக்கை இந்தப் பொருளில் சொல்கிறார். முந்தைய யுகங்கள் போல தியானம் செய்ய வேண்டியதில்லை, அசித் தத்துவங்கள் இருபத்தி நான்கு, அதனுடன் ஜீவாத்மா 25, அதன் பின் பரமாத்மா 2 6 - இந்த எண்ணிக்கையை நினைத்தால் கூட நான் வந்து விடுவேன் என்கிறார் பகவான். அவ்வளவு எளிது கலியுக வாழ்க்கை.

இன்னுமொரு ஏற்றம் கலியுகத்துக்கு என்னவென்றால் கண்ணன் சப்த ரூபத்தில் ஸ்ரீமத் பாகவத புராணத்திலேயே (புஸ்தகத்திலேயே) எழுந்தருளியுள்ளார். இதை அவர் இவ்வுலகை விட்டுக் கிளம்பும் போது அவர் பிரிவைத் தாங்காத உத்தவருக்குக் கொடுத்த வாக்குறுதி. கலியுகத்தில் பகவானை தரிசிக்க வேண்டும் என்றால் அதை சொற்கள் ரூபத்தில் தான் தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத் பாகவத பாராயணமும், அந்தப் புத்தகத்திற்கு மலர் தூவி வலம் வருவதும் கண்ணனையே நேரடியாக வழிபடுவதாகும். அது பாகவத புராணமாகவும் இருக்கலாம் அல்லது நாம சந்கீர்த்தனமாகவும் இருக்கலாம்.

இதனுடன் நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதும். கலிபுருஷன் மஹாராஜா பரிக்ஷித்தின் காலத்தில் உள்ளே வந்து விட்டான். அவனை வெளியே போகச் சொல்கிறார் பரிட்சித் மகாராஜா. அதற்குக் கலி, "மஹாராஜா இப்போது கலி யுகம் 4,32,000 வருடங்கள் ஆட்சி செய்ய நான் வந்துள்ளேன், ஆனால் நீங்களோ என்னை ராஜியத்தை விட்டு போக சொல்கிறீர்கள்" என்றான். பிரம்மாவின் கட்டளையை மதிக்க வேண்டும் என்று உணர்ந்த மஹாராஜா கலி புருஷன் இந்த யுகத்தில் 5 இடத்தில் வசிக்க தன் நாட்டில் இடம் தருவதாக வாக்களித்தார். அந்த 5 இடங்களுக்கு வரும் மனிதர்களை கலி புருஷன் அழிக்கலாம் என்று அனுமதி அளித்தார். அந்த 5 இடங்கள்: விபச்சாரம் செய்யும் இடம், மிருகங்கள்/மனிதன் வெட்டபடும் இடம், சூதாடும் இடம், குரு/முனிவர்களை/பெண்களை அவமதிக்குமிடம் இதை கேட்டுக்கொண்டு இருந்த கலிபுருஷன் மஹாராஜா பரிஷித்திடம் ஒரு கேள்வி எழுப்பினார்: மஹாராஜா நீங்கள் குறிபிடும் இடங்களில் தீயவர்கள் எப்படியும் வருவார்கள் ஆனால் நல்லவர்களை நான் எப்படி அழிப்பது? அப்படி அழித்தால்தானே என் ஆணவம் எனும் ஆயுதம் பயன்படுத்தியதாகும்! இதை கேட்ட மஹாராஜா பரிஷித் இன்னொரு இடத்தை கலி புருஷன் உபயோகிக்க அனுமதித்தார் அதுவே தங்கத்தில் விருப்பம் இருக்கும் இடம். இவை தவிர பொய் சொல்லுதல், ஆணவம், பேராசை, கோபம், பகைமை இருக்குமிடத்தில் கலி வியாபிப்பான். இவற்றை நாம் புறம் தள்ளினால் நமக்குக் கலியை வெல்லும் திறன் வரும். கூடவே ஜீவகாருண்யம், பாகவதர்களை போற்றுதல், விடாத திருநாம ஸ்மரணை நம்மை கலியின் துன்பத்தில் இருந்து காப்பாற்றி வீடு பேற்றிணைத் தரும் என்பது நிச்சயம். துவாபர் யுகத்தில் கூட ரிஷிகள் புலால் உண்டு இருக்கின்றனர். ஆனால் கலியுகத்தில் புலால் உண்ணுதல் கூடாது என்கிறது கலியுக தர்மம்.பிராமணர்கள் மட்டும் இல்லை எந்த வர்ணத்தவரும் ஜீவா காருன்யத்ஹ்தைக் கடைபிடித்தல் கலியின் துன்பத்தில் இருந்து விலகி இருக்க உதவும். அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மரிடம் கேட்கிறார் தர்மபுத்திறார், தான் மாம்சம் சாப்பிடலாமா என்று. கலியுகத்தில் ஷத்ரியனும் மாம்சம் சாப்பிடக் கூடாது என்கிறார் பீஷ்மர். அவர் சொல்லும் காரணம், உயிர் போகும் தருணத்தில் அது துடிப்பது அஹிம்சை. கலியுகத்தின் தர்மம் அஹிம்சை. முன் யுகத்தில் நடந்துள்ளதே என்றால் அப்பொழுது பிராயச்சித்தம் தேட தெம்பு இருந்தது, பிராயச்சித்தம் செய்யவும் பட்டது.


கலி முற்ற தசாவதாரமான #கல்கிபகவான் அவதரித்து நம்மை ரட்சிப்பார்.

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்

தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||

– என கீதையில் மொழிகிறான் கண்ணன்.

எப்பொழுதெல்லாம் எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன் என்பது இதன் பொருள்.

கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கும். தற்போதைய கலியுடம் தொடங்கி 5117 வருடங்கள் தான் ஆகியுள்ளன. கலியுகம் 4,32,000 வருடங்கள். #காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். அதனால் யுகத்தைத் திட்டி பயனில்லை. யுகத்தை குற்றம் சொல்லக் கூடாது. நாம் இந்த யுகத்திற்கேற்றாற்போல் எப்படி நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். பாலைவனத்துள் சோலைவனமாக இருப்பது நாம சங்கீர்த்தனம். அந்த சொலைவனமே நம்மை இங்கும் மகிழ்ச்சியாக வைத்திருந்து, மோக்ஷத்துக்கும் இட்டுச் செல்லும்.


கிருத யுகத்தில் தர்மம் (தர்மத்தை பசுமாடு என்று உருவகப் படுத்திக் கொள்வோம்) நாலு கால்களுடன் இருந்தது. அவை சத்யம், தயா, தபஹா, தானம். சத்யம் - உண்மை, தயா - ஜீவ காருண்யம், தபஸ் - நல்லதை நினைத்து, அதையே பேசி, அதையே செய்கையில் காட்டுவது, தானம் - நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பது. இந்த நான்கு கால்களும் ஒவ்வொன்றாக குறைந்து இறுதியில் கலியின் முடிவில் பசுமாடு காலில்லாமல் இருக்கும். ஆயினும் நம்மைக் கலியின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள முடியும். உடல் ரீதியான உரவுகளை வெட்டிக் கொண்டு ஆத்ம ரீதியான உறவை ஒட்டிக் கொண்டால் கலியிலும் மிக சந்தோஷமாக வாழலாம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து வாழ்த்தி வாழ்ந்தோம் என்றால் கலி யுகமே கிருத யுகம் தான்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்


Source: Sri U Ve Velukkudi Krishnan Swamy Upanyasam

2,229 views2 comments

Recent Posts

See All

2 Comments


sdharma2490
Nov 23, 2023

வணக்கங்களும்.கலியுகத்தை வெல்ல 'நாம சங்கீர்த்தனங்கள்' எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை தெளிவாக புரியவைத்த ஐயா திரு.வேலுக்குடி கிருஷ்ணன் சுவாமி அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியும்

Like

vijayanarasimhan
Jun 09, 2023

What a treasure! Wish you can send these articles via email to me. I am 82 years old and learning a lot from your wonderful articles. thanks

Like
bottom of page