top of page
  • Writer's pictureAnbezhil

சுந்தர காண்டம்

#சுந்தரகாண்டம் என்னும் பெயரை சொல்லும்போதே மனத்தில் ஒரு குதூகலம் ஏற்படுகிறது. வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் என்பதை உணர்த்தும் படலம் என்பதால் இராமாயணத்தில் இந்தப் பகுதிக்குள்ள ஏற்றம் அது. இதிகாசத்திலே மிக உயர்ந்தது இராமாயணம், அதிலே மிக உயர்ந்ததது சுந்தர காண்டம். அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.

ஸுந்தரே ஸுந்தரோ ராம:

ஸுந்தரே ஸுந்தரி கதா

ஸுந்தரே ஸுந்தரி ஸீதா

ஸுந்தரே ஸுந்தரம் வநம்

ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்

ஸுந்தரே ஸுந்தரோ கபி:

ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்

ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்

அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு; அன்னை சீதா அழகு; சுந்தரியான சீதையைப் பற்றி பேசுகிற காண்டம் அதனால் சுந்தர காண்டம் என்று பெயர். சுந்தர காண்டம் கதை அழகு; அசோகவனம் அழகு; வானரர்கள் அழகு; சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு; நல்ல பலனைக் கொடுக்கும் மந்திரங்கள் அழகு; காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்! அனுமனுக்கு அவர் தாயார் அஞ்சனை வைத்தப் பெயர் சுந்தரன். அவரின் சாகசங்களை சொல்லும் படலம் என்பதாலும் இப்பெயர்.

இராமாயணத்தில் ஆறு காண்டங்கள் உண்டு ஐநூற்றுக்கும் மேற்பட்ட சர்க்கங்கள் உண்டு. ஸ்ரீமத்ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ளது சுந்தர காண்டம். இதை முதலில் இயற்றியவர் ஸ்ரீ வால்மீகி முனிவர். வேதத்தில் சொல்லப்பட்டவைகளை நடைமுறையில் நடத்திக் காட்டினார்கள், பூமியில் அவதரித்த இறை அவதாரங்கள். அவற்றை காவியங்களாக இதிகாசங்களாக எழுதி வைத்துள்ளனர் பெரியோர். இவை நாம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நல்ல வழியை தெரிந்து கொள்ள உதவுகின்றன. இமாலயத்தில் இருந்து குமரிமுனை வரை அனைத்து பாரதக் குடிமகன்களின் நாடி நரம்பிலும் இராமாயணதின் ஒலி கேட்கும் என்றால் மிகை ஆகாது. சூரிய சந்திரர்கள் இருக்கும் வரை பூமியில் நதிகளும் மலைகளும் இருக்கும் வரை இராமாயணத்தின் பெருமை பேசப்படும், புகழ் மங்காது என்று பிரம்மா வரம் கொடுத்திருக்கிறார்.


இராமன் தன் பதினாலு வருட வனவாசத்தின் கடைசி கால கட்டத்தில் இராவணனால் சீதை தூக்கிச் செல்லப்பட, இராமபிரான் சீதையை பிரிந்து வாடிய பொழுது சுக்ரீவன் தன் வானரர்களை நாலா திக்கிலும் அனுப்பி சீதை இருக்கும் இடத்தை தேடி அறியும்படி ஏற்பாடு செய்தான். தென் திக்கிற்கு ஜாம்பவானின் தலைமையில் வாலி மகன் அங்கதனுடனும், நீலன், இன்னும் சில முக்கியமானவர்களுடன், அனுமனும் புறப்பட்டார். அவர்கள் தென்னாடுகள் எங்கும் தேடிக் கொண்டே மகேந்திர கிரி மலைத் தொடருக்கு அருகில் வந்தனர். கடலும் வந்துவிட்டது. அவர்களால் இதுவரை சீதையைக் கண்டுபிடிக்க முடியாததால் வருத்ததுடன் ஜடாயு உயிர் நீத்தார்போல நாமும் உயிரை விட வேண்டும் வேறு வழியில்லை என்று சீதை கிடைக்காத துயரத்தில் பேசிக் கொண்டதை அங்கு மிக மிக வயோதிக நிலையில் இருக்கும் சம்பாதி என்னும் கழுகு கேட்டு தன் சகோதரர் ஜடாயுவின் பேரை சொல்கிறார்களே என்று விவரம் கேட்டார். இராமன் தன் சகோதரனுக்கு அந்திம காரியங்களை செய்தார் என்பதை கேட்டு மகிழ்ந்து அதற்குப் பிரதி உபகாரமாக அவர்களுக்கு உதவ தன் இடுங்கிய கண்காளால் தூரப் பார்த்து இலங்கையில் சீதை இருப்பது அவருக்குத் தெரிந்து அவர்களிடம் கூறினார். அங்கே சென்று திரும்பி வர யாருக்கு சக்தியுள்ளது என்றால் அனுமனுக்கு மட்டுமே என்று ஜாம்பவான் சொல்ல அனுமன் பாரதத்தின் தெற்கு முக்கில் இருந்து ஒரே தாவாக தாவி கடலைத் தாண்டி இலங்கைக்கு சென்று தேடி சீதை இருக்கும் இடத்தை அறிந்து, சீதைக்கு ஆறுதல் கூறியும், இராவணனிடம் இராமபிரானின் பராக்கிரமத்தை எடுத்து சொல்லியும், இறுதியில் இராமனிடம் சீதை இருக்கும் இடத்தை தெரியப்படுத்தி இராமன் சீதை இருவரின் துயரையும் தீர்த்தார் அனுமன் என்பது தான் இந்தக் காண்டத்தின் கதை சுருக்கம்.

நிகழ்ச்சிகளின் தொகுப்பு என்று பார்த்தால் இந்த தேடுதல் நடத்தும் போது ஒவ்வொரு இக்கட்டான இடத்திலும் மதி நுட்பத்துடன் செயல்பட்ட அனுமனின் சாதுர்யமான மற்றும் வீர தீர செயல்களும், வில்லன் இராவணனின் பல்வேறு துன்புறுத்தலால் சீதை உச்சக் கட்ட சோகத்தைத் தொடுவது, அன்னை சீதாவை கண்டு அவளிடம் தான் இராம தூதன் என்று சொல்லி இராமன் விரைவில் வந்து இராவணனை வென்று சீதையை மீட்பார் என்று ஆறுதல் கூறுவது, அரக்கர்களுடன் தனி ஒருவனாக அனுமன் சண்டை இடுவது, தீ மூட்டப்பட்ட வாலால் நகரத்தையே எரிப்பது, இறுதியில் யாரிடமும் அகப்பட்டுக் கொள்ளாமல் கிஷ்கிந்தா திரும்பி வந்து இராமனிடம் கண்டேன் சீதையை என்று அவருக்கு நற்செய்தியை வழங்குவது என்று விறுவிறுப்பான நிகழ்வுகளும் இறுதியில் சுபமான முடிவையும் பார்க்கிறோம். அதனாலேயே எந்த ஒரு தடங்களும் நீங்க சுந்தர காண்டம் பாராயணம் செய்வது வழக்கத்தில் வந்தது. இதை பாராயணம் செய்தால் தடைகள் விலகும், நினைத்த காரியம் வெற்றி பெறும்.

கம்பராமாயணத்தில் கம்பர் மிக அழகாக சொல்கிறார்,

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

இதன் பொருள்:-

ஐம்பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன், ஐம்பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி, ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று, ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு, அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான். அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான். இது அனுமனை நோக்கி கம்பன் எழுதிய துதி. இந்தப் பாடல் சுருக்கமாக அனுமன் சுந்தரக் காண்டத்தில் செய்த அனைத்தையும் சொல்லிவிடுகிறது. மேலும் பஞ்சபூதங்களையும் வென்றவர் என்ற பெருமை ராமாயணத்தில் அனுமனுக்குக் கிடைத்தது.


சீதையை இராவணன் தூக்கி சென்றான் என்பதை தான் நாம் எல்லோரும் சொல்கிறோம், நம்புகிறோம். திருமாலின் திருமார்பில் உறையும் திருமகளை யாராலும் தூக்கி செல்ல முடியாது, அவளாக விருப்பப்பட்டுஅசோகவனம் என்னும் சிறைக்குள் புகுந்தாள் என்பதே உண்மை. ஏனென்றால் இராவாணன், இந்திரனின் மனைவி மற்றும் ஏராளமான தேவ பெண்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக சிறை பிடித்து வைத்திருந்தான். அவர்களை விடுவிக்க அவளே சிறைக்குள் செல்கிறாள். அப்படி செல்வதால் இராமன் அவளை விடுவிப்பதுடன் மற்ற பெண்களுக்கும் அதனால் விடுதலை கிடைக்கும் என்பதே அவளின் ஒரு நோக்கம். இன்னும் ஒரு மிகப் பெரிய காரணம், சனாதன தர்மத்தை நிலை நாட்ட! பூமா தேவிக்கு இராவணனன் மற்றும் இதர ராக்ஷசர்களும் பெரும் துன்பம் கொடுத்து வந்தனர். அவர்களை கொன்று பூமி தேவிக்கு மகிழ்ச்சியை அளிக்கவே எடுக்கப்பட்ட அவதாரம் இராமாவதாரம். அந்த சம்ஹாரங்கள் நடக்க ஒரு காரணம் வேண்டாமா? அதனாலேயே சீதைக்கு அசோகவன சிறைவாசம்! ஒரு அற்பனான இராவணனால் அவளை சிறை பிடிக்க ஒரு நாளும் முடியாது. இது மறுக்க முடியாத உண்மை. நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஓர் உண்மை.

சுந்தர காண்டம் முதல் சர்க்கத்தின் தொடக்கம், அனுமன் மகேந்திர மலையின் மீது எறி பெரிய உருவம் எடுத்து, பின் தொடை தட்டி உயரே எழும்பிப் பறப்பதுடன் தொடங்குகிறது. முதலில் பர்வதத்தின் மேல் எறி நின்றார், ராம நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தார். உடனே அவர் உருவம் பெருகத் தொடங்கியது. எழுபது என்பது அடிக்கு உயர்ந்து, அந்த ஆகிருதியோடு அவர் மேலெழும்பினார், அப்பொழுது அந்த அதிர்வில் அவரை சுற்றியுள்ள மரம் செடி கொடிகளும் கற்களும் அவருடன் எழும்பி சிறிது தூரம் அவரை வழியனுப்பவது போல மேலே அவருடன் சென்று பின் கீழே இறங்கின. இங்கே ராம நாமத்தை சொல்லி அவர் உருவம் உயர்ந்தது, நாம் ராம நாமத்தைத் தொடர்ந்து ஜபித்து வந்தால் நம் பக்தி பெருகும். எப்படி அனுமான் எந்த இடரையும் ராம நாமத்தை வைத்து வெற்றி பெற்றாரோ அது போலே எந்தத் துன்பத்தையும் தைரியத்துடன் எதிர்கொள்ள, நம் மன வலிமை பெருக ராம நாமம் உதவி செய்யும்.

உயரப் பறந்து கொண்டு இருந்த அனுமான் இலங்கைக்கு சென்று இறங்கும் முன் அவருக்கு மூன்று இடர்பாடுகள் வந்தன. மைந்நாக மலை என்ற பொன் மலை ஒன்று முதலில் கடலின் உள்ளே இருந்து அவர் பறக்கும் உயரத்திற்கு எழுந்து நின்றது. சமுத்திர ராஜன் உதவ நினைப்பதாக எண்ணி, மைனாக மலையிடம் அனுமன் ராம காரியத்திற்காக கஷ்டப்பட்டு கடலை ஆகாய மார்க்கமாக தாண்டிக் கொண்டிருப்பதால் நீ மேலே எழும்பி அவர் உன் முகட்டில் தங்கி இருந்து ஆசுவாசப் படுத்தி செல்ல வழி செய் என்றார்.

ஆனால் அனுமன் உதவ நினைத்த மைந்நாகமலையை ஆதரவுடன் தழுவிக் கொண்டு திரும்பி வரும்போது உங்களிடம் தங்குகிறேன் இப்பொழுது ராம காரியமாக செல்லும்போது வெறு எந்த விதத்திலும் நோக்கம் மாறக் கூடாது என்று அன்புடன் தவிர்த்து மேலே பறக்கிறார். அடுத்து சுரசை என்னும் நாக கன்னிகை சித்தர்களும் தேவர்களும் வேண்டியதற்கு இணங்க அனுமன் முன் தோன்றி தனக்கு உணவாக ஆகும்படி கூறுகிறாள். அவள் கோரமான ராக்ஷச ரூபம் எடுத்து, நான் தேவர்களிடம் வரம் வாங்கி வந்துள்ளேன் எனக்கு நீ உணவாக வேண்டும் என்று அனுமனிடம் கர்ஜிக்கிறாள். பெரிய குகை போன்ற வாயை உடையவளாக அனுமன் வரும் பாதையில் வந்து தோன்றி, “வலிமையுள்ள குரக்கினத் தோன்றலே! கொடிய எமனும் அஞ்சுகின்ற வாயை உடைய எனக்கு உணவாக வருகிறாய் போலும் நீ என்று சொல்லிக் கொண்டு, தன் பெரிய வாயை அகலத் திறந்தாள். அனுமனும் உடனே மிகப் பெரிய ரூபத்தை எடுக்கிறார், இன்னும் பெரிதாக எடுக்க எடுக்க சுரசையும் தன் வாயை அதற்கேற்றாற்போல பெரிதாக்குகிறாள். ஒரு நொடியில் அனுமன் மிகச் சிறிய வடிவத்தை எடுத்து அவள் வாயினுள் புகுந்து வெளி வந்துவிடுகிறார். அவர் சாமர்த்தியத்தையும், தன் நோக்கில் இருக்கும் மாறா கவனத்தையும் பார்த்து தேவர்கள் மகிழ்கின்றனர். அடுத்து சிம்ஹிகா என்னும் ராக்ஷசி, அனுமனை மேலே செல்ல விடாமல் தடுத்து அவரை தனக்கு இரை ஆக்கிக்கொள்ள அவரின் நிழலை பிடித்து இழுக்கிறாள். அதனால் அனுமனால் தொடர்ந்து பறக்க முடியவில்லை. உடனே அவர் அவள் வாயினுள் சிறிய உருவில் புகுந்து பின் பெரிய உருவம் எடுத்து அவள் வாயை கிழித்துக் கொண்டு அவளை கொன்றுவிட்டு மேலே முன்னேறினார். ராம காரியம் இனி ஜெயமாக முடியும் என்று இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் மனமகிழ்ந்தனர். அனுமன் முதலில் அன்பாலும், பின் சாதுர்யத்தாலும் அடுத்து சக்தியினாலும் மூன்று தடங்கல்களையும் வென்றார்.


அனுமான் சாதாரண குரங்கு உருவில் இலங்கைக் கரையை அடைகிறார். வானத்தில் இருந்து இலங்கையை பார்க்கும் பொழுதே ஜகஜ்ஜோதியாக ஒளிவிடும் இலங்கையைக் கண்டு இத்தனை அழகிய நகரத்துக்கு அதிபதியா இராவணன் என்று வியக்கிறார். அங்கே உள்ளே நுழைகையில் இலங்கையின் காவல்காரியான ராக்ஷசி லங்கிணி அவரை தடுத்து நிறுத்துகிறாள். எதற்காக இலங்கைக்குள் நுழைப் பார்க்கிறாய் என்று கேட்டவுடன் அவர் சமயோசிதமாக நான் காட்டில் திரியும் வானரம் தானே, நகரம் எப்படி இருக்கும் என்று பார்க்க வந்தேன் என்று சொல்கிறார். அதை அவள் நம்பவில்லை. உடனே அவர் பெரிய உருவம் எடுத்து அவளை தன் முஷ்டியினால் தாக்குகிறார். அவள் அப்படியே மல்லாந்து சாய்கிறாள்.

உடனே லங்கிணி, இலங்கைக்கு நாச காலம் தொடங்கிவிட்டது என்று கூறுகிறாள். முன்பு ஒரு முறை அவளிடம் பிரம்மா, எப்பொழுது ஒரு குரங்கினால் நீ ஜெயிக்கப் படுகிறாயோ அப்பொழுது இலங்கையும் ராட்சசக் கூட்டங்களும் அழியும் என்று கூறியிருக்கிறார். அது நடந்துவிட்டது என்று வேதனைப் படுகிறாள். பின் அனுமன் நகருக்குள் செல்கிறார்.


முதலில் தோட்டங்களில் சீதையைத் தேடுகிறார். அடுத்து ராவணனின் மாளிகைகளில் புகுந்து அங்குள்ள அந்தப்புறத்தில் தேடுகிறார். அங்கும் இல்லை. மண்டோதரி உறங்கிக் கொண்டிருக்கிறாள், அவளை ஒரு கணம் சீதையாக இருக்குமோ என்று ஐயப்படுகிறார், பின் இராமனின் பத்தினி எப்படி இராவணனின் அந்தப்புறத்தில் இருக்க முடியும் என்று தன் தவறான எண்ணத்தைத் திருத்திக் கொள்கிறார். அங்கு குபேரனிடம் பறித்த அழகிய புஷ்பக விமானத்தைப் பார்க்கிறார் அனுமான். இந்த சொத்தெல்லாம் இனி இவனிடம் நிலைக்குமா, அவனே உயிருடன் இருப்பானா என்ற எண்ணிக் கொண்டே அடுத்து பான சாலையில் போய் பார்க்கிறார். அது குடித்துவிட்டு மயங்கி கிடக்கும் மக்கள் கூட்டம் இருக்கும் இடம். அங்கு மயங்கி கிடக்கும் அல்லது அரை மயக்கத்தில் இருக்கும் பெண்களை எல்லாம் உற்று உற்று சீதையாக இருக்குமோ என்று நோக்குகிறார். அப்பொழுது அவருக்குத் தோன்றுகிறது இப்படி பெண்களை அருகில் வைத்துப் பார்ப்பதினால் தன்னுடைய பிரம்மச்சரியத்துக்கே பங்கம் வந்துவிடுமா என்று. ஆனால் உடனே அவர், மனம் தானே அனைத்துக்கும் காரணம், நான் மனத்தை ராமனிடம் செலுத்திவிட்டேன் அதனால் அவர் அனைத்துக்கும் பொறுப்பு. அதனால் அவ்வளவு உயர்ந்த வஸ்துவில் நான் மனத்தை வைத்து விட்டதால் இந்த அல்பமான விஷயங்களில் என் மனம் நிலைக்காது என்று நிம்மதி அடைகிறார். ஆனால் பல இடங்களில் தேடியும் சீதை கிடைக்காததால் அவர் மனம் ஒடிந்து விடுகிறார். சீதை ஒருவேளை உயிரை விட்டிருப்பாளோ அப்படி செய்திருந்தால் நான் இராமனிடம் போய் என்ன சொல்வேன் என்று கலங்குகிறார். அடுத்த கணமே அவ்வாறு எதுவும் நடந்திருக்காது, நாம் மனத்தை தளர விடக் கூடாது. இராமபிரான் இருக்கும்போது நாம் இப்படி நினைப்பதே தவறு என்று தன்னை தேற்றிக் கொள்கிறார். இது தான் நம் சனாதன தர்மத்தின் மகிமை. நாம் தான் ஒரு செயலுக்குக் காரணம், நம்மால் தான் இவை நடந்தன அல்லது நடக்கின்றது என்றுமே நாம் நினைப்பதை ஆதரிப்பதில்லை நம் வேதங்கள். எல்லாமே அவன் செயல், அவனின் சொத்து நாம், அவன் வழிகாட்டுதலில் நாம் நம் கடமையை செய்யவேண்டும் என்பதே அனைத்து இதிகாசங்களும் புராணங்களும் வேத வேதாந்தத்தின் சாரத்தை நமக்கு அறிவுறுத்துகின்றன.


அதனால் புதிய உத்வேகத்துடன் எழுந்து திரும்ப தேட ஆரம்பிக்கிறார் அனுமான். அவர் தைரியத்தின் உதாரணம் ஆயிற்றே அதனால் மனத் தளர்வை தொலைத்த எழுந்து கொள்கிறார். எது நடந்தாலும் அதைக் கண்டு கலங்காமல் அடுத்து என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்பதே நாம் இதில் இருந்து தெரிந்து கொள்ளும் பாடம். சோர்ந்து உட்கார்ந்து கொண்டால் ஆவது ஒன்றும் இல்லை. சம்பாதி பார்த்து சீதை இருப்பதாக சொன்னாரே அப்போ இங்கே தானே இருக்கவேண்டும் என்ற சிந்தனை வருகிறது. அப்பொழுது அவருக்கு ஓர் எண்ணம் வருகிறது. இத்தனை நேரம் நாமே தேடுவதாக எண்ணித் தேடிக் கொண்டிருக்கிறோம். நம்மால் முடியாத காரியம் இது. இறைவனடித்தில் சரணாகதி செய்யவேண்டும் என்று சீதையை நோக்கிப் பிரார்த்தித்துக் கொள்கிறார், அம்மா, நீ இருக்கும் இடத்தை எனக்குக் காட்டிக் கொடு என்று. அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல நாம் இறைவனை தேடலாம் ஆனால் அவர் அருளிருந்தால் தான் நம்மால் அவரை கண்டுபிடிக்க முடியும். இராமரை நோக்கிப் பிரார்த்திக்கிறார். வால்மீகி சொல்கிறார்:

நமோஸ்து ராமாய ஸ

லக்ஷ்மணாய தேவ்யைச தஸ்ய

ஜனகாத்மஜாயை நமோஸ்து ருத்ர

இந்தர யம அநிலேப்யக நமோஸ்து

சந்தராக்க மருத் கணேப்ய: மருத் கணங்கள் சூரியன், சந்திரன், இந்திரன், இராமன், லக்ஷ்மணன், சீதை,எல்லாரையும் பிரார்த்தித்துக் கொள்கிறேன், சீதை எனக்குக் கிட்டட்டும் என்று வேண்டிக் கொள்கிறார். அடுத்த நிமிஷம் அவர் உட்கார்ந்திருந்த மரக் கிளைக்கு அடியில் சீதை கிடைத்து விட்டாள். இத்தனை காலம் தான் தேடுவதாக தேடியபோது கிடைக்காத சீதை, அவளின் தயவை நாடியவுடன் அவள் இவருக்குக் கண்ணில் காட்சி தந்தாள்.

இவர் பார்த்த பொழுது சுக்ல பக்ஷத்தின் ஆரம்பத்தில் சந்திரனின் கீற்று முதல் பிறையில் எப்படி மெலிந்து இருக்குமோ அந்த நிலைவை போல் மிக மிக மெலிந்து இருந்தாள் சீதை. அவர் முன்பு ஒரு முறை சீதையை பார்த்திருக்கிறார். எப்பொழுது என்றால் ஆகாய மார்க்கமாக ராவணன் அவளை தூக்கி சென்ற போது தன் நகைகளை எல்லாம் மூட்டைக் கட்டி சுக்ரீவன் அனுமன் முதலானோர் இருந்த ரிஷ்யமுக பர்வதத்தின் மேல் தூக்கிப் போட்ட போது இவர் பார்த்திருக்கிறார், அப்பொழுதே அவள் ஒரு ராஜகுமாரியாக இருக்கவேண்டும் என்று நினைத்தார். அதனால் இப்பொழுது ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அங்க அடையாளங்கள் ஒத்து இருந்தன. ஆனால் அவள் குளிக்காமல் அழுக்கடைந்த அதே ஆடையை உடுத்திக் கொண்டு காணப்பட்டாள். இவள் தான் சீதை என்று அனுமானுக்குத் தெரிந்து விட்டது. உடனே சீதையைப் பிரிந்து வாடும் இராமனையும் எதிரில் இருக்கும் சீதையையும் தன் மனக் கண்ணில் ஒரு சிம்மாசனத்தில் அமர்த்திக் கொண்டார்.

இராமன் தன் கணையாழியை எந்த குரங்கிடமும் கொடுத்து அனுப்பியிருக்கலாம், அவரின் பலத்தால் தான் அனுமன் கடலைத் தாண்டி சீதையைக் கண்டார். வெறு எந்தக் குரங்கும் அதை செய்திருக்கும் ஆனால் இராமன் குறிப்பாக அனுமனிடம் கொடுத்தனுப்பியதற்கு ஒரு காரணம் உள்ளது. அனுமன் சீதையைப் பிரிந்து வாடுவதைப் பார்த்து, என்ன இந்த இராமன் ஒரு ஷத்ரியனாக இருந்து இப்படி மன உளைச்சலுக்கு உள்ளாகி தவிக்கிறாரே, தைரியமாக இருக்க வேண்டாமா, மனைவியைப் பிரிந்து இப்படி தான் வாட வேண்டுமா என்று நினைத்திருந்தார். இது இராமபிரானுக்குத் தெரியும். அதனால் தான் அவரை சீதையைக் கண்டு வர அனுப்பியிருந்தார். சீதையைப் பார்த்தவுடன் அனுமன், ராமன் தான் எத்தனை கல் நெஞ்சுக்காரர், எப்படி இந்த சீதையைப் பிரிந்து இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று நினைத்தாராம். காதல், அன்பு என்றால் என்னவென்றே தெரியாது போலிருக்கு இவருக்கு என்று நினைத்துக் கொள்கிறாராம். அப்படிப்பட்ட மாகாத்மியம் மிக்கவர் சீதாதேவி. பெருமாளுக்கும் பிராட்டிக்கு மட்டும் தான் திவ்ய தம்பதிகள் என்று பெயர் ஏனென்றால் அழகும், கருணைக்கும் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் அத்தனை நிகர். இருந்தும் அனுமான் இருவரையும் ஒப்பிடுகையில் கண்ணழகில் சீதை இராமனை விஞ்சிவிடுகிறாள் என்று நினைக்கிறார், ஏனென்றால் அத்தனை சோகத்திலும் கருணையும் வாத்சல்யமும் அழகும் நிறைந்தவையாக உள்ளன அவளின் கண்கள். இவர் அடுத்து என்ன செய்வது என்று சிந்திப்பதற்குள் இராவணன் அங்கு சீதையை மிரட்ட வந்து விடுகிறான். அந்த சமயம் தன்னைக் வெளிக் காட்டிக் கொள்வது சரியாகாது என்று நினைக்கிறார் அனுமான். அதனால் மரத்தின் இலைகளின் நடுவில் தன்னை மறைத்துக் கொள்கிறார். அதுவும் அவரின் சமயோசிதத் திறனை காட்டுகிறது.

வந்த இராவணன் சோகத்தில் கவிழ்ந்து கிடக்கும் சீதையை எல்லா விதத்திலும் மிரட்டிப் பார்க்கிறான். நான் கொடுத்த ஒரு வருடக் கெடு இன்னும் இரண்டு மாதத்தில் முடியப் போகிறது. அதற்குள் என் ஆசைக்கு இணங்கிவிடு. இராமன் வந்து காப்பாற்றுவான் என்று நம்பி ஏமாறாதே என்கிறான். அவள் அவனை அங்கேயே தன் பார்வையால் பஸ்மமாக்கி விட்டிருக்க முடியும். அவளோ ஒரு புல்லைக் கிள்ளிப் போட்டு அந்தப் புல்லை இராவணனாக பாவித்து அந்தப் புல்லிடம் பேசுகிறாள். உனக்கு உயிர் மேல் ஆசை இருந்தால், உன் குலம் வேரோடு அழியக் கூடாது என்று எண்ணம் இருந்தால் இப்பவும் ஒன்றும் மோசம் போய் விடவில்லை. இராமனிடம் சென்று அவன் கையைப் பிடித்து நீ செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டு என்னை கொண்டு விட்டுவிடு என்று நல்ல வார்த்தையால் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள். இராமன் காலில் விழு என்று அவள் கூறியிருக்கலாம், அவர் காலில் விழக் கூட தகுதியற்றவன் தான் இராவணன். ஆனால் அவள் ராஜ நீதி அறிந்தவள். ஒரு நாட்டின் சகரவர்த்தி இன்னொரு நாட்டின் சக்கரவர்த்தியின் காலில் விழு என்று சொல்வது நீதிக்குப் புறம்பானது. அதனால் அந்த துக்க சமயத்திலும் சமநோக்கோடு அவனுக்கு தாயினுடைய வாத்சல்யத்துடன் அறிவுரை சொல்கிறாள். மேலும் சரணம் என்று வந்துவிட்டால் இராமன் யாராக இருந்தாலும் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வான், அதனால் விரோதியான உன்னை ஏற்கமாட்டான் என்று நினைக்காதே என்று மேலும் கூறுகிறாள். ஆனால் விநாச காலே விபரீத புத்தி ஆயிற்றே, ஒன்றுமே அவன் காதில் ஏறவில்லை.


அவன் சென்ற பிறகு அவன் அங்கே காவலுக்கு வைத்திருந்த 700 அரக்கிகளும் சீதையை இராவணன் துன்புறுத்தியது போதாதென்று அவளிடம் இராவணனின் புகழ் பாடி இராமனை இகழ்கின்றனர். மனம் நொந்த சீதை தன் முடியினாலேயே மரத்தில் கட்டி உயிர் கொலை செய்ய முடிவெடுக்கிறாள். இனி ராமனை பிரிந்து வாழ்வதில் பயனில்லை என்று மரத்தின் அருகே செல்லும்போது அனுமன் ஏதாவது உடனடியாக செய்து சீதையின் உயிரைக் காக்க வேண்டுமே என்று பதறுகிறார். குரங்காய் போய் நின்று குரங்கு பாஷையில் பேசினால் சீதைக்குப் புரியாது. சமஸ்கிருதத்தில் பேசினால் நிச்சயம் ராவணன் தான் மாறுவேடத்தில் வந்திருக்கிறானோ என்று சந்தேகப்படுவாள். ஆனால் உடனடியாக சீதையின் உயிரை காப்பாற்ற வேண்டுமே என்று யோசித்தபோது ராம நாமம் கைகொடுத்தது. போகும் உயிரையும் நிற்க வைக்கும் ஆற்றல் ராமாம்ரிதத்திற்கு உள்ளதே. அதனால் ராம நாமத்தை பாடியபடியே மரத்தில் இருந்த கீழ் கிளைக்குத் தாவினார். ராம கதையை மெல்ல சொல்ல ஆரம்பித்தார். இதற்கு முன்பே விபீஷணனின் மகள் திரிசடை (அவளும் அங்கு காவல் காப்பவளில் ஒருத்தி) சீதையிடம் தான் கண்ட கனவினையும், சுப சகுனங்களையும் சொல்லி இருந்தாள். ஆயினும் அவள் உயிரை விடும் முடிவை எடுத்துவிட்டாள். அனுமான் மெல்ல ராம கதையை சொல்ல ஆரம்பித்தார். தசரதருக்கு வாரிசு இல்லாமல் இருந்ததில் தொடங்கி, புத்திர காமேஷ்டி யாகம் செய்து நான்கு மகன்கள் பிறந்து, சீதாவை மணமுடித்து அயோத்தி திரும்பி வந்து, கைகேயின் வரத்தால் காடு ஏகி, பின் 13 வருடங்கள் காட்டில் கழித்து, பஞ்ச வடியில் இருக்கும்போது கபட சந்நியாசி வேஷத்தில் வந்து ராவணன் சீதையை அபகரித்தது அனைத்தையும் கூறினார். பின் இராமருக்கு சுக்ரீவனுடன் ஏற்பட்ட நட்பு, வானரர்களை நாலா பக்கமும் சீதையை தேட அனுப்பியது, பின் அனுமன் ஆன தான் இலங்கைக்கு வந்து சீதையை கண்டது வரை சொல்லி முடித்தார்.

இதைக் கேட்ட சீதை ஒரு மகுடிக்கு அகப்பட்ட பாம்பை போலே உயிரை விடவும் முடியாமல் ராம கதையில் ஆழ்ந்தும் இருந்தாள். வானத்தை நோக்கிப் பார்க்கிறாள் கஜேந்திர வரதனாக பெருமாள் தன்னை காக்க அசரீரியாக மேலிருந்து ராம கதையை சொல்கிறாரா அல்லது தன்னுடைய தாயாரான பூமா தேவி தான் சீதை படுகின்ற துன்பத்தைப் பார்த்து ஆறுதல் கூறுகிறாளா என்று பூமியையும் பார்க்கிறாள். அப்பொழுது அனுமன் அவள் முன்னே தோன்றி உங்களை பார்த்தால் ராஜகுமாரியாக தெரிகிறதே, உங்களை முன்னம் ஒருமுறை பார்த்திருக்கிறேன் அதற்கு இப்போ நீங்கள் மிகவும் மெலிந்து இருக்கிறீர்களே என்று கேட்டு நீங்கள் யார் என்று எனக்கு சொல்லுங்கள் என்கிறார். அதற்கு சீதை அனுமனை முதல் முறையாக பார்த்து இவன் வானரனோ அரக்கனோ யக்ஷனோ தெரியவில்லையே ஆயினும் இவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுவோம் என்று, நான் தசரதனின் மருமகள், ஜனகரின் மகள், சீதை என்று பெயர்,ராமனின் மனைவி என்கிறாள். இதை கம்பர் கம்பராமாயணத்தில் அழகாக சொல்கிறார்:

அரக்கனேஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்

குரக்கு இனத்துஒருவனேதான் ஆகுக; கொடுமை

ஆக;

இரக்கமே ஆக;வந்து, இங்கு, எம்பிரான் நாமம்

சொல்லி,

உருக்கினன்உணர்வை; தந்தான் உயிர்; இதின்

உதவி உண்டோ?

அரக்கனாகவே இருக்கட்டும் அல்லது தேவனாகவே இருக்கட்டும், குரக்கு இனத்தைச் சார்ந்த ஒருவனாகவே இருக்கட்டும். இவன் பண்பு கொடுமை உடையதாகவோ இரக்கம் உடையதாகவே இருக்கட்டும். இவன் இங்கு

வந்து இராகவன் பெயரைக் கூறி என்னுடைய உணர்ச்சியை நெகிழச் செய்தான், உயிரை எனக்கு திருப்பி கொடுத்தான், அதனால் தான் யார் என்பதை அனுமனிடம் சொல்கிறாள் சீதை. பின் சீதை நீ யார் என்று அனுமனிடம் கேட்கிறாள். அவர் தான் ராம தூதன் என்கிறார். ராம தூதன் என்றால் அவரின் அங்க அடையாளங்களை, குணங்களை சொல் என்கிறாள்.


அனுமார் சொன்ன அங்க அடையாளங்களை வால்மீகி அழகாக சொல்கிறார்.

ராம: கமல பத்ராக்ஷ: ஸர்வ ஸத்வ மனோஹர:

ரூப தாக்ஷிண்ய ஸம்பன்ன: ப்ரஸுதோ ஜனஹாத்மஜே

ராமர் தாமரை போன்ற கண்ணழகு கொண்டவர், ஸர்வ ஸத்வ மனோஹர: எல்லாருடைய மனத்தையும், கவரும் அழகு, அவரோட அழகு, ஆண்டாள் கூட,

“சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கினியானை பாடவும் நீ வாய் திறவாய்” என்று இராமனைச் சொல்லும்போது “மனத்துக்கினயான்” என்று சொல்றாள். “க்ஷணத்துக்கு க்ஷணம், கிளைக்கு கிளை குரங்கு தாவுகிற மாதிரி, மனசு ஒவ்வொரு நிமிஷம் மாறி மாறி தாவுகிறது, அதனால எங்களை மனசுக்கு உவமானமாக சொல்லுவார்கள். அப்படி இருக்கும் நாங்கள் இந்த ராம காரியத்தில், எல்லாரும், ஒரே மனதாக ஈடுபட்டிருக்கோம் என்றால், அவருடைய, அந்த ராமருடைய கண்ணழகு தான் காரணம். அவருடைய அழகு எங்களை கவர்ந்து விட்டது. அவ்வளவு இனியவன்,” என்கிறார் அனுமான்.


கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்*

கண்-இணையும் அரவிந்தம் அடியும் அஃதே*

அவ் வண்ணத்து அவர் நிலைமை கண்டும் தோழீ!*

அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே

திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகம் பாசுரம். இது போல இராமபிரானின் எல்லாமுமே தாமரை தான் என்கிறார் அனுமான். சொல்லவேண்டும் என்பதற்காக சொல்கிறேனே தவிர என்னால் அவர் அழகை வர்ணித்து முடிக்க முடியாது என்கிறார். இதைக் கேட்டு சீதை சமாதானம் அடைந்தாள். அவளுக்கு அடுத்து ஒரு சந்தேகம் வந்தது. சுக்ரீவனுக்கும் இராமனுக்கும் நட்பு எப்படி ஏற்பட்டது என்று. மனிதனான இராமனும், குரங்கான சுக்ரீவனும் எப்படி நண்பர்கள் ஆனார்கள் என்று அவளுக்கு சந்தேகம், மேலும் தன் அருள் இல்லாமல் எப்படி இந்தத் தொடர்பு ஏற்பட்டது என்பத்தும் அவளுக்கு விளங்கவில்லை. பிராட்டி கிருபை இல்லாமல், அவள் சிபாரிசு இல்லாமல் பெருமாள் எதுவுமே செய்ய மாட்டார். உடனே அனுமன் அதைப் புரிந்து கொண்டு சீதையைப் பார்த்து இந்த சம்பந்தமே உங்களால் தான் ஏற்பட்டது, உங்களை இராவணன் தூக்கிக் கொண்டு போகையில் நீங்கள் வானத்தில் இருந்து தூக்கிப் போட்ட நகை முடிச்சு ரிஷிய முக பர்வதத்தில் இருந்த எங்கள் கைகளில் தான் விழுந்தது. அதைத் தேடிக் கொண்டு தான் இராமன் வந்தார் என்றார் அனுமான். உங்கள் அருளில்லாமல் எங்களுக்கு இராமன் கிடைத்திருக்க மாட்டார், உங்கள் ஆபரணங்களை அவரிடம் காட்டி தான், உங்கள் அங்க அடையாளங்களை அவரிடம் கேட்டு பெற்று தான் உங்களை தேடி வந்தேன் என்றார் அனுமான்.


பின் ராமன் அனுப்பிய சேதியை சீதையிடம் சொல்கிறார். காட்டில் வசிப்பது என்பது சிரமம், ஆகையால் நான் திரும்பி வரும்வரை என் அன்னையர்க்கு பணிவிடை செய்து கொண்டிரு என நான் சொல்லி முடிக்கும் முன்பாக, மரவுரி தரித்து தவ வேடத்தோடு சீதை எனக்கு முன்பாக நின்றாள், நான் புறப்பட்டு கோட்டையைத் தாண்டும் முன்பாக கானகம் எங்கே இருக்கிறது என்று தாங்கள் கேட்டதையும் தங்களிடம் நினைவு படுத்தச் சொன்னார். தேரைச் செலுத்தி வந்த அமைச்சர் சுமந்திரனிடம் தாங்கள் வளர்த்து வந்த கிளிகளையும், நாகணவாய்ப் பறவைகளையும், ஊர்மிளை முதலானோரைக் கவனித்துக் கொள்ளச் சொல்லி அனுப்பியதை தங்களிடம் சொல்லச் சொன்னார் என்று கூறி அவர் கொடுத்தக் கணையாழியையும் சீதையிடம் கொடுத்தார் அனுமான். அதைக் கண்டதும் அதை கண்களில் ஒற்றிக் கொண்டு மரபில் வைத்து இராமபிரானே தன்னை அணைப்பது போல அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறாள் சீதை. இதைக் கம்பன் வெகு அழகாக விவரிக்கிறார்:

வாங்கினள் முலைக் குவையில் வைத்தனள் சிரத்தால்

தாங்கினள் மலர்க் கண்மிசை ஒற்றினள் தடந்தோள்

வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போடு

ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமோ

சீதை அம்மோதிரத்தை தன் கையால் வாங்கினாள், அதைத் தன் மார்பின் மீது பதித்துக் கொண்டாள். தலமேல் வைத்துக் கொண்டாள். கண்களிலே ஒற்றிக் கொண்டாள். அதனால் அவளது தோள்கள் பூரிக்கப் பெற்றாள். மனம் குளிர்ந்தாள், உடல் மெலிந்தாள், உடலில் தோன்றிய காதல் வெப்பத்தாள் ஏங்கினாள், பெருமூச்சு விட்டாள். அவள் நிலை இத்தகையது என்று சொல்ல முடியுமோ என்று கம்பன் வியக்கிறான். சீதைக்கு இந்த மோதிரத்தைக் கண்டவுடன் போயிருந்த உயிர் திரும்ப வந்தது போலே ஆசுவாசப் பட்டாள்.


பின் அனுமானிடம் ராமனே உன்னை தேர்ந்தெடுத்து இந்த மோதிரத்தை உன்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார் என்றால் நீ மிகவும் உயர்ந்தவன் உனக்கு ஏன் நன்றி என்று கூறுகிறார். சீதை இராமன் வந்து அவன் கணவன் என்பதை நிலைநாட்டி என்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியதை கேட்டு இது நாளும் ராமதாசனாக மட்டும் இருந்த அனுமன் சீதாராம தாசனாக அந்தக் கணமே மாறினார். பின் சீதையிடம் விடை பெறும் முன் இராமனுக்கு என்ன சேதி சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். இன்னும் ஒரே மாதத்தில் என்னை காப்பாற்றி அழைத்துச் செல்ல வேண்டும் இல்லை என்றால் நான் உயிரை விட்டு விடுவேன் என்று இராமனிடம் கூறு என்கிறாள். இராவணன் அவளுக்குக் கொடுத்த கெடு இரண்டு மாதங்கள் ஆனால் சீதை இராமனுக்குக் கொடுத்த கெடு ஒரே மாதம் தான் .சேலை முந்தானையில் முடித்து வைத்திருந்த அவளின் கடைசி அணிகலனான சூடாமணியை அனுமனிடம் கொடுத்து, காக்காசுரன் தன்னிடம் நடந்து கொண்டதையும் அவனை இறுதியில் சீதையின் சிபாரிசினால் இராமன் மன்னித்து விட்ட நிகழ்வையும் சொல்ல சொல்லி தூது விடுகிறாள்.

அதற்கு அனுமன் சீதையிடம் இராமன் உன் நினைவாக உண்ணுவதில்லை, உறங்குவதில்லை, எந்த ஆனந்தத்தையும் அனுபவிப்பதில்லை. அவர் உடலில் ஊருகின்ற பூச்சி புழுக்களை கூட அவர் உணருவதில்லை என்கிறார். பின் இராமன் வந்து உங்களை மீட்டுக் கொண்டு போக நாளாகும். அதனால் என் தோளில் எறிக் கொள்ளுங்கள் நான் நிமிடங்களில் உங்களை இராமனிடம் கொண்டு சேர்த்து விடுகிறேன் என்கிறார் அனுமான். அதற்கு சீதை இவ்வாறு செய்தால் நீங்கா பழி தான் வந்து சேரும். யாரோ ஒரு ராக்ஷசன் சீதையை அபகரித்துப் போனான், பின் ஒரு வானரம் அவளை காப்பாற்றி கூட்டி வந்தது என்று தான் நாளை உலகம் பேசும். என்னால் இயலாது என்றா இராமனுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன், என் சொற்களால் இராவணை எரித்து விட முடியும். ஆனால் இராமன் வந்து என்னை மீட்டுக் கொண்டு போவதே தர்மம் என்கிறாள். கம்பன் இதை அழகாக கம்பராமாயணத்தில்

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.

என்கிறார். துன்பத்தைக் கொடுக்கும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகங்கள் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன். அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று செய்யாமல் இருக்கிறேன் என்கிறாள். மேலும் இது தான் சரணாகதி தத்துவம். நம்மை நாமே காத்துக் கொள்வதை விட இறைவனின் கையை எதிர்பார்ப்பதே முழுமையான சரணாகதி. நம்மை காத்துக் கொள்ளும் பொறுப்பு இறைவனுடையது, அது நம்முடையது அல்ல என்று புரிந்து கொள்வது தான் சரணாகதி. அப்படி இருக்க முடியுமா என்றால் நிறைய உதாரணங்கள் கூறலாம். திரௌபதி எல்லா முயற்சிகளும் கைவிட்ட பிறகு கோவிந்தா என்று இரு கை தூக்கி சரணாகதி செய்கிறாள். உடனே அவள் இரட்சிக்கப் படுகிறாள். அப்படியே தான் ஆதிமூலமே என்று கூக்குரலிட்ட கஜேந்திரனுக்கும் மோக்ஷம் அருளினார் பகவான். இறைவன் தான் துணை வெறு நமக்கு யாரும் ரக்ஷகன் இல்லை என்கின்ற திடமான எண்ணமே சரணாகதி.


அனுமன் கிளம்பத் தயாராகும்போது அவருக்கு ஓர் எண்ணம் வந்தது. தூதுவனாக இராமன் தன்னை இலங்கைக்கு அனுப்பியுள்ளார், இராவணனை சந்தித்து அவன் பலம் என்ன என்பதை அறிந்து கொண்டு இராமனிடம் சொல்ல வேண்டியது தான் ஒரு தூதுவனின் கடமை. எனவே அவனை சந்திக்க ஒரு திட்டம் தீட்டுகிறார். அங்கிருந்த ஒரு கதையை எடுத்து சீதை இருக்கும் பகுதி தவிர அசோகா வனத்தின் மற்ற பகுதிகளை துவம்சம் செய்கிறார். அதை தடுக்க வந்த ராக்ஷசர்களை மிக எளிமையாக கொல்கிறார்.

இதைப் பார்த்த அரக்கிகள் அலறி அடித்து இராவணனிடம் அனுமன் செய்யும் அட்டகாசத்தைக் கூறுகின்றனர். ஒரு குரங்கை கொல்ல ஜம்புமாலி, ஏழு அமைச்சர்கள், ஐந்து சேனாதிபதிகள், ராவணனின் மகன் அக்ஷகுமாரன் என்று வரிசையாக இராவணன் அனுப்பிய அனைவரையும் கொன்று குவித்தார் அனுமான். அடுத்து இந்திரஜித் வந்தான். அவனுக்கு இது சாதாரண குரங்கல்ல என்று புரிந்து விட்டதால் முதலிலேயே பிரம்மாஸ்திரத்தை பிரயோகம் செய்தான். அனுமான் பிறந்த போதே பிரம்மா அவருக்குக் கொடுத்த வரத்தினால் அவரை அந்த பிரம்மாஸ்திரம் ஒன்றும் செய்யவில்லை. ஆனாலும் கட்டுப் பட்டார் போலே அனுமான் மயங்கி இருந்தார், ஏனெனில் அவருக்கு இப்படியாக இராவணனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால். மற்ற ராக்ஷசர்கள் பிராம்மாஸ்திரத்தினால் கட்டுண்ட அனுமனை மேலும் சணல் கயிறு, தாம்பு கயிற்றினால் கட்டினார்கள். இந்திரஜித்துக்கு ரொம்ப அவமானமாகப் போய் விட்டது. பிரம்மாஸ்திரத்தால் கட்டுப்பட்டு இருப்பவனை வேறு எதனாலும் கட்டினால் பிராம்மாஸ்திரம் விடுபட்டு விடும். பிரம்மாஸ்திரத்தை அவமதிப்பதாகும் செயல் அது. ஆனாலும் அனுமான் கட்டுப்பட்டிருப்பதை பார்த்து அவர் நடிக்கிறார் என்பது புரிந்து விட்டது இந்திரஜித்திற்கு. அவரை நகர் முழுவதும் இழுத்துக் கொண்டு இராவணன் சபைக்கு அழைத்துச் சென்றனர் ராக்ஷசர்கள். நகரைப் பார்த்து வியந்து இவை எல்லாம் அழிய வேண்டுமா, இராவணன் இவற்றுக்கெல்லாம் அதிபதியாக உள்ளானே அவனிடம் நல்ல வார்த்தை சொல்லி இராமனிடம் சரணம் அடைய சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் அனுமான்.


இராவணனிடம் தான் யார் என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறார் அனுமன். சுக்ரீவன் என்கிற அரசன் என்னை அனுப்பி வைத்துள்ளார். அவருடைய அண்ணன் வாலி. வாலியைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை, அவர் உங்களை தன் வாலில் கட்டி வைத்து படுத்திய பாடு நீங்கள் அறிந்ததே. அப்பேர்பட்டவனை இராமன் ஒரே அம்பால் கொன்று வீழ்த்தினார். அவரின் மனைவி சீதையை நீ கபடமாக தூக்கிக் கொண்டு வந்திருக்கிறாய். இது மிகப் பெரிய தவறு என்கிறார். இராமன் யுத்தம் செய்ய வந்துவிட்டால் யார் வந்தாலும் சிவனோ, பிரம்மாவோ, இந்திரனோ, எந்த வரமோ எதுவுமே உன்னை காக்காது. அவர் காப்பாற்ற என்று வந்துவிட்டால் வெறு எந்த தெய்வத்தின் துணையும் தேவையில்லை என்று இராவணனுக்கு புத்திமதி கூறுகிறார். இதைக் கேட்ட இராவணன் மிகவும் கோபமுற்று அனுமனை கொல்ல ஆணையிட்டார். அப்பொழுது அவன் தம்பி விபீஷணன் ஒரு தூதனை கொள்வது தர்மமில்லை. குரங்குகளுக்குப் பெருமை வால் தான். அதனால் அதற்கு தீ வைத்து விடலாம், அது குரங்கை கொல்லுவதற்கு சமம் என்கிறான். உடனே எல்லா ராக்ஷசர்களும் சேர்ந்து அனுமனின் வாலுக்கு தீ வைக்கின்றனர். ஆனால் அடுத்த நிமிஷமே அனுமான் ஒவ்வொரு கட்டடமாக தாவித் தாவி இலங்கைக்கே தீ வைத்து விடுகிறார்.

பற்றி எரிகிறது இலங்கை! அப்பொழுது அவருக்கு தீடீரென்று சீதை இருக்கும் அசொகவனமும் தீ பற்றி இருக்குமோ என்று அஞ்சி அவர் அன்கு விரைந்து பார்க்க அக்னி பகவான் மகாலட்சுமி தாயாரை எதுவும் செய்யவில்லை. வாலில் தீ இருப்பதை கண்ட சீதை அக்னி பகவானிடம் வேண்டி அவரை தீ சுடாதவாரு பார்த்துக் கொள்கிறாள். மீண்டும் ஒரு முறை சீதையை வணங்கி அவளிடம் இருந்து சிரஞ்சீவி வரத்தையும் பெற்று கிஷ்கிந்தா திரும்ப கிளம்புகிறார் அனுமான்.

வால்மீகி,

ராக்ஷசான் ப்ரவரான் ஹத்வா நாம் விஸ்ராவ்ய சாத்மனஹா

சமாச்வாஸ்ய ச வைதேஹீம் தர்ஷயித்வா பரம் பலம்

நகரீமாகுலாம் க்ருத்வா வந்ஜ்சயித்வா ச ராவணம்

தர்ஸயித்வா பலம் கோரம் வைதேஹாம் அபிவாதய ச

ப்ரதிகந்தும் மனஸ்சக்ரே புனர் மதேன சாகரம்

இரண்டே ஸ்லோகங்களில் அனுமான் இலங்கையில் என்ன சாதித்தார் என்று கூறுகிறார். ராக்ஷசர்களை கொன்று, தன் பெயர் என்ன என்று வெளிப்படுத்தி சீதையை ஆசுவாசப் படுத்தி, தன் பலம் என்ன என்பதை காண்பித்து, நகரம் முழுக்க நெருப்பு வைத்து, இராவணனையும் ஏமாற்றி, தன் பலத்தை ராக்ஷசர்களுக்கும் தெரியும்படி செய்து, வைதேகியை வணங்கி, ஒன்பது செயல்களை செய்து ஊர் திரும்ப கிளம்பினார்.


அங்கே இருந்து அரிஷ்டம் என்கிற மலை மீதிருந்து தாவி மகேந்திர மலை நோக்கிப் பறந்தார். அப்பொழுது வானத்தில் இருந்தே ஆரவாரமாக கர்ஜிக்கிறார். அதை கீழே இருந்து பார்த்த வானரங்கள் அனுமன் சீதை இருப்பிடம் தெரிந்து வெற்றியோடு திரும்புகிறார் என்பதை புரிந்து கொண்டு அவர்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

அவர் தரை இறங்கியதும் சீதாயைக் கண்ட விவரத்தை ஜாம்பவானிடமும் அங்கதனிடமும் தெரிவித்தவுடன் அவர்கள் இருவரும் அவரை ஆரத் தழுவிக் கொள்கின்றனர். பின் அனைவரும் இராமனிடம் தெரிவிக்கப் போகும் போது வழியில் மதுவனத்தைப் பார்க்கின்றனர். அது சுக்ரீவனின் மிகப் பிரியமானதொரு தோட்டம். அங்கு அனைத்து வகை பழ மரங்களும், பறவைகளும் விலங்குகளும் நிரம்பி வழியும் ஒரு மிக அழகிய தோட்டம். அதில் புகுந்து அனைத்து வானரங்களள் தேனைப் பருகியும் பழங்களை உண்டும், சந்தோஷ மிகுதியால் மரங்களை துவம்சம் செய்தும் களியாட்டம் போட்டனர். இதைக் கண்ட அத்தோட்டத்தின் காவல்காரன் ததிமுகன் விரைந்து சென்று சுக்ரீவனிடம் தோட்டத்தை அனுமனுடன் வந்த வானரங்கள் செய்வதை விவரித்தான். இதைக் கேட்ட சுக்ரீவன் தன் வாலை பக்கத்தில் இருக்கும் பாறையில் வேகமாக அறைந்தான். குரங்குகள் தங்கள் மகிழ்ச்சியை இவ்வாறே வெளிப்படுத்தும். சுக்ரீவனுக்கு உடனே புரிந்துவிட்டது, அனுமன் சீதை இருக்குமிடம் அறிந்து கொண்டு வந்து விட்டான் என்று! பக்கத்தில் இருந்த லக்ஷ்மணன் என்ன இது உன் தோட்டத்தை குரங்குகள் அழித்து விட்டன என்று சொல்கிறார் காவல்காரர், நீ அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறாயே என்று கேட்கிறான். அதற்கு சுக்ரீவன் லக்ஷ்மணா, சீதை கிடைத்து விட்டாள் என்று கூறுகிறான். அது எப்படி உனக்குத் தெரியும் என்கிறான் லக்ஷமணன். அதற்கு சுக்ரீவன் நான் அனுமனுக்கு ஒரு மாதம் கெடு கொடுத்திருந்தேன், ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. சீதையை கண்டுபிடிக்காமல் வந்திருந்தால் என்னுடைய மிகப் பிரியமான வனத்தை இப்படி அழித்திருக்க மாட்டார்கள் என்றான்.


பின் அனைத்து வானரக் கூட்டமும் சுக்ரீவன் இருக்குமிடம் வந்தன. எப்பொழுதும் இராமனை கண்டதும் அவரை உடனே வணங்குவார் அனுமான். ஆனால் இம்முறை முதலில் தென் திசையை வணங்கி பின் இராமனை வணங்குகிறார். அதனால் வாயைத் திறந்து சொல்லும் முன்பே செய்கையால் பிராட்டி தென் திசையில் உள்ளாள் என்பதை இராமன் அறிந்து கொள்ளும்படி செய்து விட்டார். பின் கண்டேன் சீதையை என்கிறார், கண்டேன் என்பதை முதலில் சொல்லி பின் சீதையின் பெயரை உச்சரிக்கிறார். சீதை என்று சொல்லிய கணம் இராமன் அவளுக்கு என்ன ஆகியிருக்குமோ என்று அஞ்சக் கூடாது என்று முதலில் கண்டேன் என்று சொல்கிறார் அனுமான்.

கண்டனென் கற்பினுக்கு அணியை’, கண்களால்

தெண்திரை அலை கடல் இலங்கைத் தென்நகர்;

அண்டர் நாயக! இனி, துறத்தி ஐயமும்

பண்டு உள துயரும்’ என்று அனுமன் பன்னுவான்

கண்டேன் சீதையை (உயர்ந்த குடி பிறப்பு, கற்பு, பொறுமை இவை அனைத்தும் களி நடம் புரியும் சீதையை) என்றான் அனுமன். உலகத்துக்கே நாயகனாகிய ராமா, நீ இனிமேல் பழைய சந்தேகம்(கவலை) துயரத்தையும் மறந்துவிடலாம், தெளிந்த அலைகளுடன் கூடிய கடலால் சூழப்பட்ட இலங்கைத் தென்நகரத்தில் நான் சீதையை என் கண்களால் கண்டேன் என அனுமன் சொல்வதாக எழுதியுள்ளார் கம்பர். இந்த உன்னத சேதியை சொன்ன அனுமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார் இராமன்.

இராமனின் தூதனாக சென்ற அனுமனுக்குப் வாலில் தீ தான் பரிசாக கிடைத்தது. ஆனால் சீதையின் தூதுவனாக சென்ற போது அவருக்கு அவரின் பரமாத்மாவான இராமனின் ஆலிங்கனம் பரிசாக கிடைத்தது. அது தான் தாயாரின் பிரபாவம். அந்த பரமாத்மா இராமன் ஜீவாத்மா அனுமான் இருவரும் ஒருவரை ஒருவர் அனைத்துக் கொண்டு இருப்பது பக்தனுக்கு பகவான் எவ்வளவு தூரம் அன்பை செலுத்துகிறார் என்பது புரியும். நம் ஒவ்வொருவருக்கும் அனுமனின் அனுக்கிரகம் இருந்து என்றால் இராமனின் அணைப்பும் கிட்டும் என்பது திண்ணம். அதற்கு சாட்சியே சுந்தர காண்டம்.


மேலும் சீதை சொன்ன சேதியை அவரிடம் சொல்கிறார் அனுமன். இன்னும் ஒரு மாதமே கெடு கொடுத்திருக்கிறாள் இராமா அதனால் அதற்குள் அவளை விடுவிக்கவில்லை என்றால் உயிரைத் துறந்து விடுவதாக கூறியிருக்கிறாள் என்று சொன்னார். அதைக் கேட்ட இராமன் என்ன ஒரு மாதம் பிரிந்திருக்க முடியுமா சீதையினால், என்னால் அவளை விட்டு ஒரு நொடி கூடப் பிரிந்திருக்க முடியவில்லை, உயிரை விடவும் தயங்கவில்லை என்று இராமன் கூறினார். இதுவும் சீதைக்குண்டான ஏற்றம் தான். சீதையால் இராமனை ஒரு மாத காலம் பிரிந்திருக்க முடிகிறது. ஆனால் இராமனால் சீதையை ஒரு கணம் கூட பிரிந்திருக்க முடியவில்லை. அப்படி என்றால் சீதையின் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம். சொன்ன சொல்லாலே பார்த்தால் இராமனுக்கு ஏற்றம் ஏனென்றால் அவர் ஒரு வினாடி கூட சீதையை பிரிந்திருக்க முடியவில்லையே என்று கூறுகிறார். ஆனால் மெய் பொருளைப் பார்த்தால் சீதைக்கு ஏற்றம் ஏனென்றால் அவளைப் பிரிந்து இராமனால் ஒரு கணம் கூட வாழமுடியவில்லையே. நமக்கு உண்டான ஏற்றம் இவர்கள் இருவரும் சேர்ந்து நம்மை காப்பது தான். அவர் இராமன் இருக்குமிடம் வந்தவுடனே தென் திசையை நோக்கி பின் இராமனை வணங்குகிறார். அவள் அணிந்திருந்த சூடாமணியை கொடுக்கிறார் அனுமன்.சூடாமணியை அனுமனிடம் இருந்து பெற்று சீதையுடனேயே இருப்பதாக அதை நெஞ்சில் வைத்து மகிழ்கிறார் இராமன். இனி ஒரு நிமிஷம் கூட காலங்கடத்தக் கூடாது. சீதையின் துக்கத்தை உடனே துடைக்க வேண்டும் என்கிறார் இராமன்.

வேதமே தான் இராமாயணமாக பிறந்தது. வேத வேத்யனான ஸ்ரீமன் நாராயணன் தான் இராமனாக பிறந்தார். வைதேஹியின் சோகாக்னி அதாவது அவளின் சோகத்தில் உண்டான தீயை எடுத்து இலங்கையை எரித்த அனுமனை நாம் வணங்குவோம்.

‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்

தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்

பாஷ்பவாரி பரிபூரண லோசனம்

மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அந்த இடங்களில் எல்லாம் கண்களில் நீர் பெருக்கெடுக்க, பக்திப் பரவசத்துடன் அமர்ந்திருக்கும் நபர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்து கொள் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். அப்படி பக்தியின் ரூபமாக மயிர் கூச்செரிந்து அமர்ந்து கேட்பார் அனுமான். இன்றும் சிரஞ்சீவியாக ராம நாமத்தை ஜபித்து ராமம்ரிதத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே ரகுநாதாய நாதாய ஸூதாய.பதயே நம:


இந்த மந்திரம் ஸ்ரீ ராமரின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. தாய் சீதாதேவியின் கணவரான ராமனின் பெயரை மனதார சொன்னாலே இன்பத்தை வாரி வழங்குவார். இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் மன அமைதியும் வாழ்வில் வளமும் சேரும். எந்த பலத்தை பிரார்த்தித்தாலும் சுந்தர காண்ட பாராயணம் அதை கொடுக்கும். இகலோக பிரார்த்தனைகளை விட்டு சீதா ராமர் பாத கமலங்களே வேண்டும் என்று பிரார்த்தித்து சுந்தரகாண்டம் பாராயணம், அது நமக்கு அனைத்து நன்மைகளையும் ஒரு சேர கொடுத்துவிடும். பக்தியை கேட்டுக் கொண்டு பாராயணம் செய்தால் பக்தியும் கிடைக்கும் மற்ற அனைத்து நன்மைகளும் கிடைக்கும். பிராட்டியும் பெருமானும் சேர்த்து நமக்கு நல்குவர்.

வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தர காண்ட பாராயணம். சுந்தர காண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர். சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது. 68 அத்தியாயங்கள் உடைய இந்த காண்டத்தை ஒரே நாளில் படித்து முடிப்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு சுலோகம் என்பது வரை படிக்க முன்னோர்கள் அனுமதி அளித்துள்ளனர். என்றாலும் கூட ஒரு நாளைக்கு 7 அத்தியாயங்கள் வீதம் இதை 68 நாட்களில் ஏழு முறை படிக்கக்கூடிய 7 அத்தியாய பாராயணம் எல்லா நலன்களையும் விரைவில் அளிக்கவல்லது. பாராயணம் ஆரம்பிக்கும் முன்னர் படிக்க வேண்டிய சுலோகங்களைப் படித்து ஏழு அத்தியாயங்கள் படித்து முடிந்தவுடன் இறுதியில் படிக்க வேண்டிய சுலோகங்களையும் அன்றாடம் படிப்பது வழக்கமாக இருக்கிறது. ஒருமுறை 68 அத்தியாயங்கள் படித்து முடிக்கும் போது யுத்த காண்டத்தின் 131-வது அத்தியாயமான ராம பட்டாபிஷேக அத்தியாயத்தையும் படிக்க வேண்டும் என்பது மரபாகும். ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.


ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். இல்லறம் இனிக்க வேண்டும் என்றால் சீதா ராமருடைய அருள் முக்கியம். அதற்கு சுந்தர காண்ட பாராயணம் உதவும். கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க நல்ல குழந்தை பிறக்கும். தினம்தோறும் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யும் போது மன தைரியம் அதிகரிக்கும். மன வலிமை உண்டாகும். நம்முடைய கவலையெல்லாம் மறந்து போகும். அறிவு, ஆற்றல், புகழ், துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதுரியம் இவைகள் அனைத்தும் மேலோங்கி நிற்கும். குறிக்கோளை விரைவாக அடையலாம். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். நினைத்தது நடக்கும். நோய் நொடிகள் தீரும், திருமண தடை விலகும். நவகிரக தோஷம், ஏழரை சனி, அஷ்டமசனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும். கடவுளை விரைவாக நெருங்கும் சூழலையை நமக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே சுந்தரகாண்டம். சொல்லில் அடங்காத, கணக்கிலடங்காத பலனை கொடுப்பது சுந்தரகாண்டம் என்பது சத்தியம். ஆத்ம திருப்தியோடு, மனதார எவரொருவர் சுந்தரகாண்டத்தை தினம்தோறும் பாராயணம் செய்கிறாரோ, அவர் நல்ல மனிதனாக வாழும் தகுதியைப் பெற முடியும்.


ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க தகுந்தபடி சுந்தரகாண்ட பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறுவதோடு நலன்களையும் பெற முடியும். ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். ஒவ்வொரு நலனைப் பெறவோ அல்லது ஒவ்வொன்றாக தோஷத்தை நீக்கவோ முயற்சி செய்வதை விட தினசரி சுந்தர காண்ட பாராயணம் செய்தால் நமது தோஷங்கள் எல்லாம் தாமாகவே விலகுவதோடு நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் தாமாக நம்மை வந்து அடையும். சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் தோல்வியே இருக்காது. ஏனென்றால் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன் இதுவரை தோல்வியை சந்தித்தது இல்லை.


நமோஸ்து வாசஸ்பதயே ஸ்வஜ்ரிணே ஸ்வயம்புவே

சைவ ஹூதாஸனாயச|

தானே சோக்தம் யதிதம் மாமக்ரோத வனெள

கஸா தச்ச ததாஸ்து நான்யதா!!

மற்ற ஸ்லோகங்களை சொல்ல முடியாவிட்டாலும் இந்த ஸ்லோகத்தை யார் சொன்னாலும், அநேக நன்மைகளை பெற்று வாழ்வார்கள். சுந்தரகாண்டத்தில் சொல்லப்பட்டுள்ள மிக மிக முக்கியமான ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.


மந்திராலய மகான் ராகவேந்திர சுவாமி 68 அத்தியாயங்கள், 2885 ஸ்லோகங்களை கொண்ட சுந்தரகாண்டத்தை நான்கே வரிகளில் சுருக்கி எழுதியுள்ளார். இது முழு சுந்தர காண்டத்தைப் படிப்பதற்கு சமம். எப்படி முழு விஷ்ணு சஹாஸ்ரநாமத்தை ஸ்ரீ ராம ராமேதி ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி அதே பலனைப் பெற முடியுமோ அதே போல இந்த ஸ்லோகத்தை முழு சுந்தர காண்டத்தைப் பாராயணம் செய்ய முடியாதவர்கள் சொல்லலாம்.

யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத் தீர்ணாம்புதிர் லீலயா லங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்! அக்ஷாதீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம் தக்த்வா புரீம் தாம் புன: தீர்ணாப்தி: கபிபிர்யுதே யமனமத்தம் ராமசந்த்ரம் பஜே!

இதன் பொருள்: எவருடைய அனுக்ரஹ பலத்தினால், ஸ்ரீ ஹனுமார், கடலை விளையாட்டாக கடந்து, இலங்கையை அடைந்து, ராமருடைய பிரிய மனைவியான சீதா தேவியை பார்த்து, அறுதல் சொல்லி, ராவணனுடைய அசோக வனத்தை அழித்து, அக்ஷன் முதலான ராக்ஷதர்களை வதம் செய்து, தசக்ரீவனான ராவணனைப் பார்த்து, அவனுக்கு நல்ல புத்தி சொல்லி, அவன் கேட்காமல், ஹனுமாருடைய வாலில் தீ வெச்ச போது, அந்த தீயினாலையே, இலங்கையை எரித்து விட்டு, மீண்டும் கடலை கடந்து, வானரர்களோடு வந்து, எந்த ராமரை வணங்கினாரோ, எவருடைய அனுக்ரஹ பலத்தினால், இங்கே இருந்து கிளம்பி, இவ்வளவு கார்யங்களையும் பராக்ரமத்தோட பண்ணி முடித்து, மீண்டும் வந்து வானரர்களோடு கூட ராமரை வணங்கி, சீதா தேவியோட சூடாமணியை கொடுத்து, அவர் மனசை சந்தோஷப் படுத்தினாரோ, அந்த ராமரை பஜிக்கிறேன்.


பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம். சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம். தினம்தோறும் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யும்போது நெய்வேத்தியம் செய்து வைக்க முடியாதவர்கள் ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து, அதில் இரண்டு கற்கண்டுகளைப் போட்டு நெய்வேதியமாக வைத்துக் கொள்ளலாம். நீங்கள் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்யும் போது உங்கள் அருகில் ஒரு சிறிய பாயையோ அல்லது மன பலகையையோ போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் பாராயணம் செய்வதை கேட்பதற்கு உங்கள் வீட்டிற்கு ஹனுமன் கட்டாயம் வருகை தருவார் என்பது ஐதீகம்.


சுந்தரகாண்டம் இன்றும் பலம் மிகுந்து, அருள் நிறைந்த, சிறந்த பலனளிக்க கூடிய ஒரு காண்டமாக இருக்க காரணம், அதனுள் உறைந்திருக்கும், ஸ்ரீராமனின் ஆசிர்வாதம்தான். இது மட்டும் மனிதனுக்கு புரிந்தால் போதும், அவன் தன் வாழ்க்கையை நல்ல பாதையை நோக்கி திருப்பி விடலாம். இறைவனே மனித அவதாரம் எடுத்தால், எப்படிப்பட்ட கர்ம வினையையும் தாங்கித்தான் கடந்து வரவேண்டும் என்று இராமாயணத்தில் உணர வைத்து, தன் தாசனை பணிந்து, அவர் செய்த அரிய விஷயங்களை பாராயணம் செய்வதின் மூலம், மனித இனத்தின் பிரச்சினைகளை விலக்க வழிகாட்டியுள்ளார். ஜெய் ஸ்ரீராம்! ஜெய் மாருதி!


ராமாயண பாராயண மங்கள் ஸ்லோகம்


மங்களம் கோசலேந்த்ராய மஹ.நீய குணாப்தயே /

சக்ரவர்த்தி த.நுஜாய ஸார்வ பௌமாய ம்ங்களம் //

வேதவேதாந்த வேத்யாய மேகஸ்யாமலமூர்த்தயே /

பும்ஸாம் மோஹநரூபாய புண்யஸ்லோகாய மங்களம் //

விஸ்வாமித்ராங்காய மிதிலா நகரீபதே: /

பாக்யாநாம் பரிபாகாய பவ்யரூபாய மங்களம் //


சீதா ராமருடைய அனுக்கிரகமும் அனுமனின் உற்சாகமும் இப்பதிவை படித்த அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.


சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.





Ref Sri Velukkudi Swamy Upanyasanam on YouTube.

Kamba Ramayanam

Valmiki Ramayanam

https://koshasrini.blogspot.com/2017/12/blog-post_17.html


4,233 views2 comments

Recent Posts

See All
bottom of page