top of page
  • Writer's pictureAnbezhil

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

Updated: Aug 9, 2021

இந்து மதத்தில் சைவமாக இருக்கட்டும் வைணவமாக இருக்கட்டும் பெண்கள் ஆன்மீகத்தில் மிகவும் உயர்ந்த நிலையை தொட்டும், பிறருக்கு உபதேசித்தும், இருந்து வந்திருக்கின்றனர். காரைக்கால் அம்மையார், ஔவையார், ஸ்ரீ ஆண்டாள், மீரா பாய், என்று பலரும் பக்திக்கு இலக்கணமாகவும், நம் வேத வேதாதங்களை அறிந்து எளிய முறையில் பாமர மக்களும் அறிந்து கொள்ளும்படி எடுத்துரைத்து, சமுதாயத்துக்குப் பெரும் சேவைகள் செய்து வந்துள்ளனர். இஸ்லாமிய படையெடுப்புகளின் போது தங்கள் உயிர்களை பணையம் வைத்து கோவில் விக்கிரங்களை காப்பற்றியுள்ளார்கள். அவர்களில் நம் மனத்தில் அழியா இடம் பெற்றவர் ஸ்ரீரங்கத்து வெள்ளையம்மாள், அவர் பெயரில் ஸ்ரீ ரங்கநாதர் திருக் கோவிலில் வெள்ளை கோபுரம் என்ற பெயருடனும், நிறத்துடனும், சரித்திரத்துக்குச் சான்றாக, அவள் கோவிலை காக்க கோபுரத்தின் மேலிருந்து விழுந்த கோபுரம் இன்றும் நிற்கிறது. அப்படிப்பட்ட ஆன்மீகத்தில் உயர்ந்த பெண்களில் ஒரு பரம விவேகியான ஒரு பெண்பிள்ளை பற்றிய கட்டுரையே இது. ஆன்மிகத்தில் நாம் எந்நிலையில் உள்ளோம் என்று எடைபோட இந்த திருக்கோளூர் பெண்பிள்ளை ஸ்ரீ ராமானுஜரை பார்த்துக் கேட்ட கேள்விகள் உதவும். ஆம் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்பது ஸ்ரீ ராமானுஜரைப் பார்த்து ஓர் எளிய பெண்பிள்ளை கேட்ட என்பத்தியொரு கேள்விகளுக்கு தான் இந்தப் பெயர். பகவான் கிருஷ்ணன் அடியவர்களுக்கு அருளியது பகவத் கீதை என்னும் வாழ்க்கைக்கான அறிவுரை. ஆச்சாரியனுக்கு அடியவர் வழங்கிய கீதை திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்.


விசிஷ்டாத்வைட வைணவ ஆச்சார்யாரான ஸ்ரீ இராமானுஜர் வாழ்ந்த காலத்தே அவர், ஜாதி பேதம், பெண் ஆண் பேதம் என்று எந்த வித வேறுபாடும் பார்காமல் எல்லோரையும் தன்னுடைய சிஷ்யர்கள் ஆக்கிக் கொண்டவர். அவர் குரு பரம்பரையைப் பற்றி நாம் படித்துப் பார்த்தால் எப்பொழுதுமே அவருடன் 12,000 கிரகஸ்த சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள், 700 சந்நியாசிகள் அவர் பின்னாடி சென்றுள்ளார்கள் என்று தெரியும். அதைத் தவிர ஏராளமான பெண்களும் அவருக்கு சிஷ்யராக இருந்துள்ளனர். கூரத்தாழ்வானின் தேவிகள் ஆண்டாள் எவ்வளவோ கைங்கர்யம் செய்துள்ளார். அதனால் எல்லாரும் சேர்ந்து தான் வைணவ சம்பிரதாயத்தை வளர்த்துள்ளனர். எல்லாருக்கும் ஸ்ரீ ராமானுஜரின் அருட்பார்வை உண்டு.

தேவுமற்றறியேன் குருகூர் நம்பிஎன ஸ்வாமி நம்மாழ்வாரைப் போற்றிய ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவதரித்த ஸ்தலம் திருக்கோளூர். இந்த திவ்ய தேசத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையிலே எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாளை சேவிக்க எம்பெருமானார் ஸ்ரீ இராமானுஜர் ஆழ்வார்திருநகரியிலிருந்து எழுந்தருளும்போது

ஒரு பெண்பிள்ளை திருக்கோளூரை விட்டு வெளியூர் செல்ல மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். உடனே இராமானுஜர் அப்பெண்பிள்ளையிடம்,

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்

கண்ணன்* எம்பெருமான் என்றென்றே* கண்கள் நீர் மல்கி*

மண்ணினுள் அவன் சீர்* வளம் மிக்க அவனூர் வினவி*

திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே!

திருவாய்மொழி [6-7-1] ” என்று ஆழ்வாரே சொல்லியிருக்கும் ‘புகும் ஊர்‘ என்று போற்றப்படும் இந்த திருக்கோளூரை விட்டு நீ வெளியே செல்வதற்கான காரணம் என்ன” என்று கேட்டார். அதுவும், பெண்கள் புகும் ஊர் (இளமான் புகும் ஊர்) என்றாரே ஆழ்வார், பெண்கள் 'வெளியே செல்லும் ஊர்' என்று சொல்லவே இல்லையே என்று விசாரிக்கிறார். அதற்கு அந்த பெண்பிள்ளை, ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன, எங்கு சென்றால் என்ன? நான் ஒரு முயல் புழுக்கை. நான் மேட்டில் இருந்தாலும் கவலையில்லை வெறு இங்கு இருந்தாலும் கவலையில்லை. என்னால் என்ன பிரயோஜனம் என்று சொல்லி 81 வைஷ்ணவ அடியார்களின் அருஞ்செயல்களைக் கூறி, அப்படிப்பட்டவர்களின் வைணவ நலங்கள் எனக்கு வாய்க்கவில்லையே என்று கூறி வருந்தினாள். இந்த பெண்பிள்ளை கூறிய வாசகங்களின் மறைப்பொருளைக் கொண்ட நூல் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம்‘. இது வைஷ்ண ரகஸ்ய கிரந்தங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இவை வெளிப்படையாக அந்த பெண் சொன்ன வார்த்தைகள் தான் ஆனால் மிகவும் தத்துவார்த்தம் பொருந்தியவை. அதனால் ரகசியம் என்று போற்றப்படுகிறது.


ஒரு சாதாரண மோர்/தயிர் விற்கும் பெண் ஸ்ரீ ராமானுஜரிடம் தெரிவித்த 81 கருத்துக்கள்தான் இந்த ரகசியம். இராமாயணமும், மகாபாரதமும், பாகவதமும், ஆழ்வார்கள் வரலாறும் தெரிந்த அந்தப் பெண்மணி , வெகு இயல்பாக, ‘அழைத்து வருகிறேன் என்றேனோ அக்குரூரரைப் போலே’, ‘அகல் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே’ எனத் தொடங்கி ‘துறைவேறு செய்தேனோ பகவரைப் போலே’ என முடியும் 81 விஷயங்களைக் கூறி, அப்பேர்ப்பட்ட நபர் நான் அல்ல, எனவே வெளியேறிக் கொண்டிருக்கிறேன் என்று பாண்டித்யமாக பதில் அளிக்கிறாள். அந்த 81 வாக்கியங்களில் (வார்த்தைகள் என்றும் சொல்வர்) அவள் வைணவத்தைச் சாறாகப் பிழிந்து தருகிறாள். இந்தச் சிறு பெண் சொன்னதெல்லாம் ராமானுஜருக்கும் தெரியும் தான் ஆனால் அவள் சொல்வதை பொறுமையுடனும், ஆச்சர்யத்துடனும் கேட்டு மகிழ்கிறார். அப்பேர்பட்ட ஆச்சார்யர் அவர். எம்பெருமானாரை நினைத்தாலே பாக்கியம். இந்தப் பெண் பிள்ளை இவரிடம் பேசிக் கொண்டும் அவர் கேட்டுக் கொண்டும் இருக்கும் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறாள். அத்தனை உயர்ந்தவள் இந்த சிறுமி. அவள் பேசுவதை எல்லாம் கேட்டுவிட்டு பின் அவளிடம் சொல்கிறார், நீ இராமாயண மகாபாரத பாகவத வேத வேதாந்தம் அனைத்தில் இருந்தும் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறாய். நீ கண்டிப்பாக திருக்கோளூரில் இருக்க வேண்டியவள் தான் என்று கூறி அவளை ஊருக்குள் அழைத்துச் செல்கிறார். சாதாரண தயிர் விற்கும் பெண்மணிக்கே இந்த ஞானம் இருக்கும் எனில் நிச்சயம் இது புக வேண்டிய ஊர்தான் என அந்தப் பெண் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு வைத்தமாநிதி பெருமாளை கோவிலில் சேவித்து அந்தப் பெண்ணையும் தன் சீடராக்கிக் கொள்கிறார். அவளை உணவு சமைக்க சொல்லி அவள் இல்லத்தில் திருவமுது செய்தார். அவர் ஒரு மிகப் பெரிய சந்நியாசி. ஆண்கள் பார்த்தே உண்ண மாட்டார். அதுவும் பிக்ஷை வாங்கி தான் உணவருந்துவார். அப்படிப்பட்டவர் இந்தப் பெண்ணின் வீட்டில் அவள் கையால் அமுது செய்தார் என்றால் அந்தப் பெண்ணின் ஏற்றம் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.


ஒவ்வொரு வைணவப் பெரியோரையும் குறிப்பிட்டு இந்த பக்தனை போல நான் செய்தேனோ என்று ஒப்பீடு செய்கிறாள். அப்படி கைங்கர்யம் செய்யவில்லையே நான் எதற்கு இந்த ஊரில் இருக்க வேண்டும், அதற்கு எனக்குத் தகுதி இல்லை என்கிறாள்.எண்பத்தொரு வைணவப் பெரியவர்களின் தன்மைகளைக் கூறி அத்தகைய செயல்கள் எதையும் தாம் செய்யவில்லையே என்று அடுக்கிக் கூறிய தொடர்களின் களஞ்சியமே ’திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்’.


1. அழைத்து வருகின்றேன் என்றேனோ

அக்ரூரரைப் போலே

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைத்தக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே என்று ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்தக் கண்ணனை கொன்றுவிட பல வழிகளில் கம்சன் முயன்று தோற்றான். இறுதியில் வில் விழா என்று ஒன்று ஏற்பாடு செய்து அதில் மல் யுத்தர்களான முஷ்டிக சாணூரகர்கள் மற்றும் குவலயாபீடம் என்ற யானையையும் வைத்து கண்ணனை கொன்று விடலாம் என்று திட்டம் போட்டு அக்ரூரரை பிருந்தாவனத்தில் இருந்து கிருஷ்ணர் பாலராமர்களை அழைத்து வர அனுப்புகிறான் கம்சன். அகரூரர் வசுதேவருக்கு உறவினரும் கூட. அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு கிருஷ்ணரையும் பலராமரையும் அழைத்துவர கோகுலம் போகிறார். கம்சன் கொல்லத் தான் அழைத்து வரச் சொல்கிறான் என்று தெரிந்தாலும் கிருஷ்ணருக்கு எந்தத் துன்பமும் வராது என்பது அவருக்குத் தெரியும். அவரைப் போல நான் ஏதாவது சேவை செய்தேநா நான் ஏன் இந்த ஊரில் இருக்கவேண்டும் என்கிறாள்.


2. அகம் ஒழித்து விட்டேனோ

விதுரரைப் போலே

அகம் என்பதை மனம், அகம்பாவம் என்று இரண்டு பொருள் பட சொல்லலாம். பெருமாளை நம் மனத்தில் வர இடம் கொடுக்க வேண்டும். விதுரர் பகவானை ஒரு நொடி இல்லாமல் வைத்து போற்றிக் கொண்டிருப்பவர். விதுரர் உரைத்த நீதி மிகவும் புகழ்பெற்ற நீதி நூல். திருதுராஷ்டிரனின் தம்பியும் சபையில் மகா மந்திரியும் ஆவர் விதுரர். கிருஷ்ண பகவான் பாண்டவ தூதனாக துரியோதனன் சபைக்கு வருகிறார். அப்பொழுது துர்யோதனன் மாளிகையில் தங்காமல், பிதாமகர் பீஷ்மர் மாளிகையில் தங்காமல், உன் வீட்டுக்கு வா என்று தன் இல்லத்தையே கண்ணனுடையது என்றழைத்த வேலைக்காரியின் மகனான விதுரரின் குடிசையில் இரவு தங்குகிறார். அளவில்லா மகிழ்ச்சி அடைந்த விதுரர் அவருக்கு உபசாரம் செய்கிறார். அந்த மகிழ்ச்சியில், அவர் வாழைப் பழத்தை உரித்து பழங்களை தூக்கிப் போட்டுவிட்டு தோலை தன் நிலை மறந்து கிருஷ்ணனுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தார். பகவானும் மகிழ்ச்சியோடு அத்தோலிகளை உண்டு பசியாறினார். அவ்வாறு பகவானனைப் பார்த்தவுடன் தன்னிலை மறந்தேனா நான் என்கிறாள்?


3. தேகத்தை விட்டேனோ

ரிஷி பத்தினியைப் போலே

கண்ணன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது சிறுவர்களுக்கும் அவருக்கும் கொண்டு வந்த மதிய உணவினால் பசி அடங்கவில்லை. அதனால் பார்த்தார் கண்ணன். பக்கத்தில் ஒரு ஆசிரமத்தில் யாகம் நடந்து கொண்டிருந்தது. அதில் ஆவிர் பாகம் கொடுக்க நிறைய உணவு வகைகள் சமைத்து வைக்கப்பட்டிருந்தன. பையன்களை அங்கே அனுப்பி உணவு வாங்கிக் கொண்டுவரும்படி பணிக்கிறார் கண்ணன். ஆனால் குழந்தைகள் அங்கே போன போது அந்த ரிஷிகள் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இவர்கள் கேட்டதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை. யாருக்காகக் ஆக்கப் பட்ட உணவோ அதை அவரே கேட்டு அனுப்பியும் அதை கொடுக்க அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. குழந்தைகள் கோபத்துடன் திரும்பி வந்தவுடன் அவர்களை மறுபடியும் அங்கே போய் ரிஷி பத்தினிகளிடம் கண்ணனும் பலராமனும் பசிக்கிறது என்று உணவு கேட்டார்கள் என்று போய் கேளுங்கள் என்று அனுப்புகிறார். இதை கேட்டவுடன் அந்தப் பெண்கள் செய்கின்ற வேலையை போட்டது போட்டபடி விட்டு, அனைத்து உணவு வகைகளையும் எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு கண்ணன் இருக்குமிடம் மகிழ்ச்சியுடன் வந்துவிட்டனர். கண்ணன் உண்ட பிறகும் திரும்பி செல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆனால் கண்ணன் வற்புறுத்தி அவர்களை திருப்பி அனுப்புகிறான். உங்களை உங்கள் கணவன்மார்கள் ஏதும் கடிந்து கொள்ளாமல் ஏற்றுக் கொள்வார்கள் திரும்பி செல்லுங்கள் என்று சொல்கிறார். எல்லா ரிஷிகளும் அவ்வாறே செய்தனர் ஒருவரைத் தவிர. கண்ணனிடம் தன் மனைவி சென்றதால் அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். அதனால் அந்தப் பெண் கண்ணனை நினைக்க ஆத்மா அல்லது மனம் போதும் இந்த உடல் எதற்கு என்று உயிரை விட்டுவிடுகிறார். கண்ணன் அருளால் அந்தப் பெண் பரமபதத்துக்குப் போனாள். உடனே அனைத்து ரிஷிகளும் தங்கள் தவறை உணர்கின்றனர். அந்தப் பெண்ணைப் போலே நான் கண்ணன் மேல் இருக்கும் அதீத அன்பால் ஏன் தேகத்தை விட்டேனா என்கிறாள்.


4. தசமுகனைக் செற்றேனோ

பிராட்டியைப் போலே

ஸ்ரீ ராமாயணம் என்றாலே சிறை இருந்தவளின் ஏற்றம் என்று பொருள். அவள் தான் சீதா பிராட்டி. செற்றேனோ என்றால் அழித்தேனோ என்று பொருள். சீதை சுய சக்தியால், தன் கற்பின் வலிமையால் இராவணனை எரித்து இருக்கலாம். ஆனால் ஸ்வசக்தியை விட்டு இராமன் வந்து தன்னை காப்பற்ற வேண்டும் என்று அவர் வரவுக்காக ராம நாமத்தை சொல்லிக் கொண்டிருந்தாள். இராவணன் அவளை துன்புறுத்த வரும்போதெல்லாம் நல்ல வார்த்தைகள் சொல்லி அவனை திருத்த முயன்றாள். அந்தப் பொறுமை எனக்கில்லை என்கிறாள் திருக்கோளூர் பெண் பிள்ளை. தசமுகன் என்பதற்கு இன்னுமொரு பொருள் உண்டு. கர்மேந்திரியங்கள் 5 ஞானேந்திரியங்கள் 5 இந்தப் பத்தும் தான் தச முகம். நமக்குள்ள இருக்கிற ராவணன் இந்த பத்தும் தான். இராவணன் எவ்வளவோ முறைகளில் அவளை அடைய முயன்றான். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. ஒரு புல்லை கிள்ளிப் போட்டு அந்தப் புல்லைப் பார்த்து அவள் இராவணனுக்கு அறிவுரை சொல்கிறாள். அவனை அந்தப் புல் அளவுக்கு தான் மதித்தாள். பதிவிரதா தர்மத்தை அணுவளவும் பிசகாமல் காப்பாற்றினாள். அவளைப் போல நான் இருந்தேனா என்று கேட்கிறாள்?


5. பிணம் எழுப்பி விட்டேனோ

தொண்டைமானைப் போலே

திருவேங்கடமுடையானின் பரிபூரண அருள் பெற்ற தொண்டைமனடலத்தின் பேரரசர் இந்த தொண்டைமான். இந்த தொண்டைமானின் பக்திக்குக் கட்டுப்பட்டு தன் சங்கு சக்கரத்தையே அவனிடம் கொடுத்து வைத்திருந்தாராம். அதனால் பின்னாடி இவரை வெவ்வேறு கடவுளாக இருக்க வாய்ப்ப்புண்டு என்று பலரும் சந்தேகத்தை எழுப்பினர். இறுதியில் அந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்தவர் ஸ்ரீ ராமானுஜர் தான். திருவேங்கடமுடையன் இந்த தொண்டைமான் சகரவர்த்தியுடன் ஏழு நாழிகை கூட இருந்து ஏழு தத்துவப் பொருட்களுடன் கூடிய ஏழு திருமந்திரங்களை உபதேசித்து பொருளையும் விளக்கி கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட பக்திமான் அந்த மன்னன். அவன் தேசத்தில் கூர்மன் என்ற வேதம் ஓதும் அந்தணன் தன் மகனிடம் தன் அஸ்தியை காசியில் கங்கையில் கரைக்க வேண்டும் என்கிற ஆசையை சொல்லி இறந்து விடுகிறார். மகனும் அந்திமக் காரியங்கள் எல்லாம் முடித்து தொண்டைமானிடம் சென்று தன் தந்தையின் விருப்பத்தை சொல்லி தான் காசிக்குச் சென்று அஸ்தியைக் கரைத்து வரும்வரை தன் மனைவியையும் மக்களையும் பார்த்துக் கொள்ளும்படி அவரிடம் ஒப்படைக்கிறான். அவர் பார்த்துக் கொள்வதாக சொல்லி சந்தோஷமாக வழி அனுப்பி வைக்கிறார். இன்று போல் இல்லை அன்று. வெகு நாட்கள் ஆகும் காசிக்குப் போய் திரும்பி வர. அவன் அஸ்தியை கரைத்து விட்டு நாடு வந்து சேர்ந்து மன்னனிடம் போய் தன் மனைவி மக்களை பற்றி கேட்கிறான். அப்பொழுது திடுக்கிடுகிறான் மன்னன். ஆட்சியை கவனித்த சமயத்தில் அவன் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்ததை மறந்து விட்டான். அவர்கள் திருவேங்கட யாத்திரை போய் இருக்கிறார்கள், வந்துவிடுவார்கள் அது வரை என் மாளிகையில் நீ இரு என்று சொல்லிவிட்டு அவர்களை தேடிப் போகிறான். போய் பார்த்தால் உண்ண உணவின்றி அவர்கள் இறந்து வெறும் எலும்புக் கூடுகள் தான் அங்கே இருக்கின்றன. உடனே ஸ்ரீநிவாசப் பெருமாளிடம் போய் உதவி கேட்கிறான். அவரும் அவனிடம் தன் அபிஷேக தீர்த்தத்தை தெளித்தால் அவர்கள் உயிருடன் வந்துவிடுவார்கள் என்று அருள்கிறார். அவ்வாறே அவன் செய்ய அவர்கள் தூக்கத்தில் இருந்து விழிப்பது போல எழுந்து அரசனை வணங்குகிறார்கள். இவன் அவர்களை அந்தணன் மகனிடம் அழைத்து செல்கிறான். ஆனால் உண்மை அனைத்தையும் சொல்லிவிடுகிறான். அந்தணன் மகனும், மன்னா என் மனைவி மக்கள் அவர்கள் கர்ம வினையினால் இறந்து விட்டார்கள், இப்பொழுது பகவான் அருளால் பிரசாதமாக எனக்குக் கிடைத்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டு குடும்பத்துடன் செல்கிறான். இந்த தொண்டைமானைப் போலே திட பக்தி எனக்கு இருக்கிறதா? தவறு இழைத்துவிட்டு பெருமாள் காப்பாற்றுவார் என்று ஒடி அவனிடம் முறையிட்டு சரணாகதி அடையும் மனம் எனக்கு இந்த வைத்தமாநிதிப் பெருமாளிடம் உள்ளதா? நான் ஏன் இங்கே இருக்க வேண்டும் என்கிறாள்.


6. பிணவிருந்து இட்டேனோ

கண்டாகர்ணனைப் போலே

கண்டா கர்ணன் என்று ஒருவன். கண்டா என்றால் மணி. அதை காதில் கட்டிக் கொண்டிருப்பான் எப்பொழுதும். சிவபெருமானின் பெரும் பக்தன். நாராயணனின் நாமமே காதில் விழக் கூடாது என்பதற்காக காதில் மணியைக் கட்டிக் கொண்டிருப்பவன். அவன் பிசாசமாக இருந்து கொண்டிருந்தான். ஒரு முறை கைலாயத்துக்குப் போய் சிவனிடம் மோக்ஷம் கொடு என்று கேட்கிறான். அதற்கு சிவ பெருமான் இந்த பிசாச கோலத்தில் இருந்து உனக்கு மோக்ஷம் கிடைக்கவேண்டும் என்றால் நீ ஜனார்த்ததனை தான் கேட்க வேண்டும் என்கிறார். நான் எங்கு சென்று அவனை பார்ப்பேன் அவன் எப்படி இருப்பான் என்று கேட்கிறான். அதற்கு சிவன் அவர் இப்பொழுது கிருஷ்ணாவதாரம் எடுத்துள்ளார். என்னைப் பார்த்து ஒரு வரம் கேட்க கைலாயத்துக்கு வருவார். நானும் அவரிடம் ஒரு வரம் கேட்கவேண்டும், அப்பொழுது நீ அவரை பார்க்கலாம் என்று கூறுகிறார். மேலும் அவர் எப்படி இருப்பார் என்றும் விவரிக்கிறார். அந்த உருவத்தையே மனத்தில் நினைத்துக் கொண்டு அவன் நாமத்தையே துதிக்க ஆரம்பித்தான் கண்டாகர்ணன். சிலகாலம் கழித்து கண்ணன் அங்கு வந்தார். அவரைப் பார்த்தவுடன் அங்கு தவம் பண்ணிக்கொண்டிருந்த சாதுவை ஒரு சூலாயுதத்தால் குத்தி அதை கண்ணனுக்கு முன் போட்டான். கிருஷ்ண பகவான் என்னப்பா இப்படி ஒரு நல்ல சாதுவை கொன்று எனக்கு முன் போடுகிறாயே என்று கேட்டார். அதற்கு கண்டாகர்ணன் உங்களுக்கு இந்த சாத்வீகமாக உணவு உண்ட சாதுவை நான் படைக்கிறேன். நான் நர மாமிசம் உண்பவன் அதனால் நான் உண்பதை உங்களுக்கு படைக்கிறேன் என்றான். கிருஷ்ணன் மிக மகிழ்ந்து அவன் கேட்ட மோக்ஷத்தை அவனுக்கு அருளினார். அவன் கூட அவன் தம்பியும் இருந்தான், அவனுக்கும் மோகஷம் அருள வேண்டினான். அதையும் அருளினார் கண்ணன். மேலும் தவம் செய்து கொண்டிருந்த கண்டாகர்ணனால் கொல்லப்பட்ட சாதுவுக்கும் மோக்ஷத்தை அருளினார். தெய்வத்துக்கு எப்பொழுதும் நாம் உண்ணுவதை படைத்து விட்டு தான் சாப்பிட வேண்டும், (குருவுக்கு அவருக்குப் பிடித்ததை வாங்கித் தர வேண்டும்) இதுதான் தர்ம நெறி. அதனால் கண்ணன் அவன் வைத்த பிண விருந்தை ஏற்றுக் கொண்டு மோக்ஷம் அருளினார். அந்த ஆழ்ந்த ஞானம் எனக்கு இருந்ததா? நான் வைத்தமாநிதிக்கு என்ன கொடுத்தேன் என்று கேட்கிறாள்.


7. தாய்க்கோலம் செய்தேனோ

அநுசூயைப் போலே

தந்தை சொல் கேட்டு இராமன் சீதை, லக்ஷ்மனருடன் காட்டுக்கு ச் சென்றான். அப்பொழுது அவர்கள் காட்டில் உள்ள அத்ரி மகரிஷியின் ஆஸ்ரமத்துக்கும் சென்றனர். அத்ரி மகரிஷியின் மனைவி அநசூயை மிகவும் தவ வலிமை மிக்கவள், கணவனுக்கு ஈடான பாண்டித்தியம் உடையவள். அவள் தன்னை சோதிக்க வந்த மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கி அவர்களுக்கு உணவு கொடுத்தவள். அனசூயை என்றால் பொறாமையே இல்லாதவள் என்று பொருள். இன்னொரு பொருளும் உண்டு, அதாவது அவளைப் பார்த்து யாருமே பொறாமை பட முடியாத அளவில் குணத்தாலும் கற்பாலும் மிக உயர்ந்த நிலையில் இருப்பவள் என்பதும் தான். சீதையை அன்புடன் உள்ளே அழைத்து சென்று அவள் திருக்கல்யாணத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொள்கிறாள். சீதையும் எவ்வளவு விமர்சையாக நடந்தது என்று விவரித்துக் கூறுகிறாள். மரவுரி தரித்து வந்த சீதைக்கு ஒரு தாயைப் போலே தன் தவ வலிமையால் நகைகள் கிடைக்கப் பெற்று அவற்றை அவளுக்கு அணிவித்து அழகு பார்த்து இராமனிடம் அனுப்புகிறாள். இராமனே திருமணத்தன்று பார்த்த சீதையைப் போல இருக்கிறாள் என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது அந்த அலங்காரம். அவள் காட்டில் அதன் பின் இருந்த போது அந்த அலங்காரங்களுடனே தான் சீதை இருந்தாள். இந்த மாதிரி தாயுள்ளத்துடன் நான் யாருக்கும் எதுவும் செய்யவில்லையே. எத்தனை உன்னிப்புடன் தெரிந்து கொண்டு நான் என்றாவது ஒரு நாள் நான் வைத்தமாநிதியின் கோளூர்வல்லி தாயாருக்கும் குமுதவல்லி தாயாருக்கும் இப்படி அலங்காரம் செய்திருப்பேனா என்று கேட்கிறாள்.


8. தந்தை எங்கே என்றேனோ

துருவனைப் போலே

உத்தானபாதன் என்ற ஸ்வாயம்புவ மனுவின் மகனுக்கு(நான்முகனின் பேரன்) இரண்டு மனைவிகள், சுநீதி, சுருச்சி. சுநீதியின் ஐந்து வயது மகன் துருவன். சுருச்சியின் மகன் உத்தமன். அரசனுக்கு சுருச்சியின் மேல் தான் அதிக அன்பு. அதனால் அவள் மகன் உத்தமன் மேல் அதிக பாசம். ஒரு முறை துருவன் அப்பாவைப் பார்க்க மன்னன் இருப்பிடம் போனபோது அங்கே உத்தானபாதன் உத்தமனை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தான். இவனும் தனத்தை மடியில் ஏறப் போனபோது சூரிச்சி அவனை தள்ளி விடுகிறாள். குழந்தை அவளைப் பார்த்து ஏன் தள்ளிவிடுகிறாய் என்று கேட்கிறது. அதற்கு அவள் என் வயிற்றில் நீ பிறந்திருந்தால் உனக்கு உட்காரும் தகுதி இருக்கும். அதனால் எம்பெருமானை போய் பிரார்த்தித்து திரும்ப என் வயிற்றில் பிறக்கக் வேண்டும் என வேண்டிக் கொள் என்று சொல்லி அவனை விரட்டி விடுகிறாள். அரசனும் இதைப் பார்த்துக் கொண்டு தடுக்கவில்லை. குழந்தை அழுதுகொண்டே அம்மாவிடம் வந்து நடந்ததை சொல்கிறது. என்ன நடந்தது என்று கேட்டறிந்த தாய் சித்தி சரியாகத் தானே சொல்லியிருக்கிறாள் என்று கூறுகிறாள். அதற்கு குழந்தை அப்பா மடியில் உட்கார உரிமையில்லை என்று சொன்னது சரியா என்று கேட்கிறது. இல்லை ஆனால் எம்பெருமானை நோக்கித் தவம் செய் என்று சொன்னது மிக சரியே என்றார். இந்த அப்பாவை விட்டுவிட்டு. இந்த தேகத்துக்கான அப்பா இவர். உலகத்துக்கே அப்பாவான ஜகந்நாதனை நோக்கித் தவம் செய் என்கிறாள். நம் அனைவருக்கும் தந்தை பரம்பொருளான பகவான் தான். தாய், தந்தை, உற்றார், உறவினர், நண்பர் என அனைத்து வித சொந்தங்களாகவும் அவரே விளங்குவார், மண்ணில் பிறந்த அனைவருக்கும் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, சிறப்பாக வாழவைப்பவன் இறைவன் ஒருவனே என்று ஆறுதல் கூறினாள். தந்தையைத் தேடி காடு, மலைகளில் திரிந்தான். வழியில் நாரத மகரிஷி வந்தார். அவர் துருவனுக்கு “ஓம் நமோ பகவதே வாசுதேவாயநம” என தியானிப்பதற்குச் சொல்லிக் கொடுத்தார். துருவனும் அம்மந்திரத்தை இடைவிடாது கூறினான். முதலில் ஒரு வேளை உணவு மட்டும் உண்டான். பிறகு அதையும் நிறுத்தித் தண்ணீர் மட்டும் பருகினான். அடுத்து காற்றை மட்டும் சுவாசித்தான்.

மதுவனம் என்கிற இடத்தில் தவம் செய்த இடம் இன்னும் நாம் சேவித்துக் கொள்ளலாம். ஐந்து மாத கால தவம் செய்தான். இருதயத்தில் இறைவனை வைத்து நாமஜெபம் செய்தான். இறைவன் முதலில் அவன் மனத்தில் அந்தர்யாமியாய் தோன்றி பின் அவன் கண்ணால் தரிசிக்கும்படியாகவும் காட்சி தந்து அவன் வேண்டும் வரங்களை அளித்தார். நமக்கும் இறைவனுக்கும் தந்தை மகன் உறவு உள்ளது. அப்படிப்பட்ட நம்பிக்கையோடு நான் துருவனைப் போல என் தந்தையான ஈஸ்வரனை தேடினேனா என்கிறாள் பெண்பிள்ளை.


9. மூன்றெழுத்து சொன்னேனோ

சத்திரபந்துவைப் போலே

க்ஷத்ரபந்து மிகவும் கொடுங்கோல் குணம் கொண்ட ஓர் அரச குமாரன். மக்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டதால், மக்கள் அவன் மீது புகார் சொல்ல, அரசன் அவனைக் காட்டுக்கு விரட்டிவிட்டார். காட்டிலும் அவன் குணம் மாறவில்லை. அவ்வழியாக வருபவர், போவோரைத் துன்புறுத்தத் தொடங்கினான். வனத்தில் வாழும் ரிஷிகளைக் கொன்றான். க்ஷத்ரபந்துவின் துர்குணம் மாறவேயில்லை. ஒரு நாள் அவ்வழியாக வந்த ரிஷி ஒருவருக்குத் தாகம் எடுத்தது. வழியில் ஒரு குளத்தில் நீர் அருந்தியபோது கால் வழுக்கிக் குளத்தில் விழுந்தார். தன்னைக் காப்பாற்ற வேண்டி ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கதறினார். அங்கு வந்த க்ஷத்ரபந்து, கயிற்றைக் கொண்டு ரிஷியைக் காப்பாற்றினான். கோவிந்த நாமம் கேட்டதால், கெட்டவனையும் (க்ஷத்ரபந்து) நல்லது செய்ய வைத்தது. கரைக்கு வந்த ரிஷி க்ஷத்ரபந்துவுக்கு நன்றி கூறினார். பிறகு அவனையும் கோவிந்த நாமம் சொல்லச் சொன்னார். சம்ஸ்கிருதத்தில் கோவித என்றால் கோவிந்தா என்று பொருள். இந்த மூன்றெழுத்து நாமம் சொன்னால் நன்மை கிட்டும் என்றும் ஆண்டாளுக்குப் பிடித்தது, திரௌபதிக்குப் புடவை சுரந்தது எல்லாம் இந்த கோவி்ந்த நாமம்தான் என்று ரிஷி அவனிடம் கூறினார். க்ஷத்ரபந்து, ரிஷியிடம், நான் அனைவரையும் துன்புறுத்துபவன், என்னவோ தெரியவில்லை; உங்களைக் காப்பாற்றிவிட்டேன். இங்கிருந்து சென்றுவிடுங்கள். எப்போதும் பாவச் செயல்களைச் செய்வதுதான் என் வேலை, அதனாலேயே காட்டுக்குத் துரத்தப்பட்டவன் எனக்கு எந்த நாமமும் தெரியாது என்றான். ரிஷி அவனைப் பார்த்து, நீ எந்த வேலை செய்தாலும் கோவிந்த நாமத்தைக் கூறிக்கொண்டே செய். மூச்சுவிடுவதைப் போலச் சொல்லிக் கொண்டிரு. உனக்குள்ளேயும் நல்லவர் உண்டு. உலகில் தவறு செய்யாதவர்கள் யாருமில்லை. நாம் சொல்வதையெல்லாம், நம் மனம் கேட்க வேண்டும். நான் கோவிந்த நாமம் சொல்லி அழைத்தேன். அந்த நாமத்தால்தான் நீ வந்து என்னைக் காப்பாற்றினாய். நீயும் கோவிந்த நாமத்தை இடைவிடாது சொல் உனக்கும் நல்லது நடக்கும்’ என்றார். சரி சொல்கிறேன் என்று ஒப்புக்கொண்டான் க்ஷத்ரபந்து. அன்றிலிருந்து கோவிந்த நாமத்தை இடைவிடாது சொல்லிக்கொண்டே வந்தான். பாவம் செய்யும் ஆசையைவிட்டு கோவிந்த நாமத்தை சொல்லி நல்ல கதியை அடைந்தான். அடுத்த ஜென்மம் அழகாக எடுத்து நல்ல பக்திமானாய் பிறந்து மோட்சத்தை அடைந்தான். நான் க்ஷத்ரபந்துவைப் போல் மூன்றெழுத்து நாமத்தைத் தொடர்ந்து சொல்லவில்லையே சுவாமி என்று ராமானுஜரிடம் வருத்தப்பட்டாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.


10. முதல் அடியைப் பெற்றேனோ

அகலிகையைப் போலே

முனி கௌதமரின் மனைவி அகலிகையிடம் முறைகேடாக நடந்த இந்திரனின் சூழ்ச்சியால் அவள் கணவனிடம் இருந்து சாபம் அகலிகைக்கு கிடைத்தது. கல்லாய்க் கிடக்கச் சாபம் கொடுத்தார். சாபத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று அழுத மனைவிக்கு இடைவிடாது ராம நாமம் ஜபிக்கச் சொல்லியும், ராமாவாதாரத்தில் ஸ்ரீராமர் பாதம் பட்டவுடன் நீ பெண்ணாவாய் என்றும் கூறினார். ராமரின் பாத மேன்மையைத் தெரிவிக்க இப்படியொரு சாப விமோசனத்தை இட்டார். இறைவனின் பாதம் பிடிக்க வேண்டும். இறைவனின் பாதம் நம் மீது பட ராம நாமம் சொல்லி ஜபிக்க வேண்டும். நம் மனமும் கல்போல் திண்மமாக இருக்கும். அதை ராம நாமம் சொல்லிக் கரைய வைக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த நிகழ்வு. பொறுமையாக ஆயிரம் வருடங்கள் கல்லாய் கிடந்து, ராம நாமம் சொன்னாள் அகலிகை. ராமர் பிறப்பதற்கு முன்பே ராம நாமம் ஜபித்தாள் அகலிகை. விஸ்வாமித்திரர், ராம லட்சுமணரோடு தாடகை வதம் முடித்து கௌதமர் ஆசிரமம் வந்தபோது ஸ்ரீராமனின் பாத துளி அகலிகை மீது பட்டது. உடனே அகலிகை பெண்ணாக மாறினாள். அகலிகையைப் போல இறைவனின் திருவடியை நான் நினைக்கவில்லையே என்று ராமானுஜரிடம் கூறுகிறாள் திருக்கோளுர் பெண்பிள்ளை.


11. பிஞ்சாய்ப் பழுத்தேனோ

ஆண்டாளைப் போலே

பிஞ்சிலே பழுத்தால் கனி ருசிக்காது, வெம்பல் என்று அதற்கு பெயர். ஆனால், நம் ஆண்டாளோ பி்ஞ்சிலே பழுத்தாலும் தெவிட்டாத கனி போன்றவள். அவள் இந்தப் புவியில் ஆறு வயது வரை தான் வாழ்ந்தால், பின் பெருமாளுடன் ஐக்கியமாகி விட்டாள். சிறு வயதிலேயே கண்ணணின் பெருமைகளைப் பெரியாழ்வார் ஆண்டாளுக்குக் கூறுவார். குழந்தை ஆண்டாளும் அதை கேட்டு கிருஷ்ண பிரேமையி்ல் மகிழ்ந்திருந்தாள். பெரியாழ்வாரே கண்ணனை கலியுக யசோதாவாக பாலூட்டிச் சீராட்டி வர்ணித்து பல்லாண்டு பாடினார், அவரின் மகள், அவரையும் வி்ஞ்சிக் கண்ணணை திருமணம் செய்து கொண்டாள். இவள் சூடிக் கொடுத்த மாலையை இறைவன் ஆனந்தமாக அணி்ந்து கொண்டான். அதனால் சூடிக் கொடுத்த சுடர்க் கொடி எனப்பட்டாள். இவளது அழகுத் தமிழால் பாடியதால் ‘பாடவல்ல நாச்சியார்’ எனவும் போற்றப்பட்டாள். பெரியாழ்வாரின் நந்தவனத்தில் திருத்துழாய் மாடத்தின் அருகில் ஆடிப்பூரத்தில் பிறந்தாள். கண்ணனையே தன் மணாளனாகப் பாவித்து பாவை நோன்பு வைத்தாள். அவள் இயற்றிய திருப்பாவை, நான்கு வேதங்களின் சாரமாகத் திகழ்கிறது.ஆண்டாளைப் போல் தான் சிறுவயதிலேயே பக்தி பண்ணவில்லையே சுவாமி என்று ராமானுஜரிடத்தில் நம் திருக்கோளூர் பெண்பிள்ளை சொல்கிறாள்.

12. எம் பெருமான் என்றேனோ

பட்டர்பிரானைப் போலே

பட்டர் பிரான் என்று அழைக்கப்படுபவர் பெரியாழ்வார். ஆண்டாள் நாச்சியாரை வளர்த்து அரங்கனுக்கே மாமானார் ஆகும் பேறு பெற்றவர். ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபெருங்கோயிலுடையானுக்கு நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். திருமாலின் அவதாரங்களுள் முதன்மையான மச்சாவதாரத்தினை பாண்டியர்கள் தமது சின்னமாகக் கொடியில் பொறித்து மதுரையில் அவர்களின் நல்லாட்சி நடத்தி வந்த நேரம். மதுரையை ஆண்ட மன்னன் வல்லபதேவன், ஓரிரவு, மாறுவேடத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்தான். மன்னன் நடந்து வந்த வீதியில் ஒரு திண்ணையில் ஒரு பெரியவர் உறங்குவதற்கு முன் இறை வழிபாடு செய்வதைக் கண்ட மன்னன் பெரியவரை பற்றி விசாரித்தான். அவர் தாம் காசியில் இருந்து தீர்த்த யாத்திரையாக இங்கு வந்துள்ளதாகக் கூறினார். அவரிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு தனக்கு ஒரு நல்ல அறிவுரை கூறுமாறு கேட்டான். "இரவுக்கு வேண்டியதை பகலிலும், மழை காலத்துக்கு வேண்டியதை கோடையிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் பெற ஒருவன் முயல வேண்டும். இதுவே நான் உனக்கு தரும் அறிவுரை!" என்று அந்த பெரியவர் தத்துவம் மிகுந்த பாடலைக் கூறினார். மன்னன் அவரை வணங்கி அரண்மனை வந்து சேர்ந்தான். அவர் சொன்னது முதல் மூன்றும் புரிந்தது. மறுமைக்கு தேவையான மோட்க்ஷத்தை எப்படி இம்மையிலேயே சேர்ப்பது, மோட்சத்தை நிச்சயமாக அளிக்கக்கூடிய தெய்வம் எது என்பதும் கேள்வியாக இருந்தது. அவன் அரசவையில் யாருக்கும் அதுக்கான விடை தெரியவில்லை.

மறுநாள், "முழுமுதற் கடவுள்" யார் என்று வினவி, அதற்கு தன் மனம் ஏற்கும் வகையில் விடை கூறுவோர்க்கு பொற்கிழியும் பரிசளிப்பதாய் கூறினான். நாட்கள் பல சென்றன. வந்தவர்கள் ஒவ்வொருவரும் பல விதமாக மன்னனின் கேள்விக்குப் பதில் கூறினாலும் மன்னனின் சந்தேகத்திற்கு விளக்கமும் மனதிற்கு அமைதியும் இல்லாமல் போனது. தன் கேள்விக்கு தகுந்த பதில் கூறி தன்னை நல்வழியில் அழைத்துச் செல்லும் ஒரு அறிஞரை அனுப்புமாறு கூடல் அழகனின் ஆலயத்தை அடைந்து இறைவனை வேண்டினான். தன் பக்தனின் பெருமையை உலகம் அறிய இதுவே உகந்த தருணம் என்பதை அறிந்த ஸ்ரீமன் நாராயணன், விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) கனவில் தோன்றி, விஷ்ணு சித்தரே, என் பக்தனான பாண்டியன் உண்மைப் பொருளை அறிய விரும்புகிறான். நீர் மதுரைக்குச் சென்று வேதங்கள் ஓதி உண்மைப் பொருளைப் பற்றி தெளிவுறுத்தும். பெரியாழ்வார் தான் வெறும் புஷ்பக் கைங்கர்யம் செய்பவர், வேறொன்றும் தெரியாதே என்று பகவானிடம் கூறினார். அதற்கு அவர், என் அடியாராகிய உமக்கு ஓதாதுணரும் தன்மையை அளித்துள்ளேன். கவலையின்றி என் அருளைப் முதலாய்க் கொண்டு பாண்டியன் சபைக்குச் செல்லும் என்றார். பொற்கிழிக்கு ஆசைப்படாத விஷ்ணு சித்தர், நாராயணனின் வார்த்தைகளை தமக்கிட்ட ஆணையாய் ஏற்று, அரண்மனை சென்று மன்னனிடம், பக்தி செய்வதே மறுமைக்கு பயன் தரும். அதற்குச் சரணாகதி தர்மமே ஒரே வழி என்ற தத்துவத்தை பாண்டியன் சபையில் நிலைநாட்டினார். அரசசபையில் எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அப்போது கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லப தேவன் மகிழ்ந்து 'பட்டர்பிரான்' என்ற பட்டம் சூட்டினான். மேலும், விஷ்ணு சித்தர் அவர்களை தன் பட்டத்து யானை மேல் ஏற்றி, குடை, கொடி சாமரம், ஆல வட்டம் ஆகியவற்றின் மூலம் மரியாதைகள் செய்து, வாத்திய கோஷங்களுடன் மதுரையை வலம் வர செய்தான். அப்பொழுது, தன் பிள்ளையின் பெருமையை உலகம் கொண்டாடுவதை நேரில் காண விரும்பும் தாயைப் போல், பரம் பொருளான ஸ்ரீமந் நாராயணன் பெரிய பிராட்டியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்த திருக்கோலத்தில் வானில் தோன்றினார். கருட வாகனதில் தோன்றிய ஸ்ரீமன் நாராயணனின் அழகில் மயங்கிய பெரியாழ்வார், மக்களின் திருஷ்டி பெருமாளுக்குத் தீங்கு செய்துவிடக் கூடாது என்பதற்காக, "திருப்பல்லாண்டு" பாசுரத்தை பாடி, "என்னல் எம்பெருமான்" என்று ஸ்ரீமன் நாராயணனை பணிவுடனும் பக்தியுடனும் அழைத்தார். திருக்கோளூர் பெண் பிள்ளை பெரியாழ்வார் போல் என் பிறப்பின் உண்மை அறிந்து, பெருமானை அவ்வாறு அழைத்தேனோ என்று வினவுகிறார்.


13. ஆராய்ந்து விட்டேனோ

திருமழிசையார் போலே

திருவள்ளூர் மாவட்டத்து திருமழிசையில் பார்கவர் என்ற மகாமுனிவருக்கும் கனகாங்கி என்ற அவரது மனைவிக்கும் பிண்ட வடிவமான ஆண் சிசு பிறந்தது. அதை அவர்கள் பிரம்புப் புதரின் கீழ் விட்டுவிட்டுச் சென்று விட்டார்கள். பெருமாளின் அருளால் அந்த குழந்தைக்கு உறுப்புகள் வளர்ந்தன. பசித்து அழத் தொடங்கியது. பெருமாள் தாயாருடன் வந்து அந்தக் குழந்தைக்குப் பால் ஊட்டினார். திருமழிசை என்ற ஊரில் பிறந்ததால் திருமழிசை ஆழ்வார் என்று பெயர் ஏற்பட்டது. ஒரு நாள், திருவாளன் என்பவன் பிரம்பு அறுக்க வந்த போது புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அந்தக் குழந்தையை மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு தன் மனைவி பங்கயச் செல்வியிடம் கொடுத்தான். அவள் அந்தக் குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தாள். திருமழிசை ஆழ்வார் பல சாஸ்திரங்கள் கற்றார். உலகில் பல மதங்கள் இருக்கிறன, இந்த உலகத்தைப் படைத்த கடவுள் யார் என்று குழப்பம் ஏற்பட்டது. கடும் தவம் புரிந்தார். பல இடங்களுக்கு அலைந்து திரிந்தார். சிலர் சாக்கிய (பௌத்த) மதம் தான் கடவுளை அடைய வழி என்றார்கள். உடனே ஆழ்வார் சாக்கிய மதத்தில் சேர்ந்து அவர்களின் தத்துவ நூல்களைப் படித்தார். அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. குழப்பம் இன்னும் அதிகமாகியது. அந்த மதத்தை விட்டுவிட்டு சமண மதத்துக்குச் சென்றார். அங்கேயும் அதே போல அவருக்குத் தெளிவு ஏற்படவில்லை. அலைந்தார். பிறகு சைவ மதத்தைத் தழுவினார். சிவவாக்கியர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, சைவ தத்துவ விளக்கங்களை ஆராயத் தொடங்கினார். பின், பேயாழ்வாரை ஒருமுறை சந்தித்தார். அவரின் அறிவுரையின் பேரில் அவருக்குத் தெளிவு பிறந்தது. தனது வாதத் திறமையினாலும், யோக நிஷ்டையினாலும் பல யோகிகளை வெற்றி கண்டார். அப்படிப்பட்ட திருமழிசை ஆழ்வாரைப் போல பல சமயங்களை எல்லாம் ஆராய்ந்து இறுதியாக வைணவமே சிறந்தது எனக் கொண்டவளா நான் என்பதையே, ஆராய்ந்துவிட்டேனோ திருமழிசையார் போல என கேட்கிறாள்.


14. அவன் சிறியன் என்றேனோ

ஆழ்வாரைப் போலே

மகா விஷ்ணு உலகையே தாங்குகிறார். அவரை உள்ளத்தில் வைத்து தாங்கிய நம்மாழ்வார், உன்னையே தாங்கும் நான் பெரியவன் என்று அன்பின் மிகுதியால் சொல்கிறார். அதனால் இறைவனை அவன் சிறியன் என்கிறார். பெருமாளை போய் சிறியவர் என்று சொல்லலாமா என்றால், பக்தியின் மிகுதியால் பெருமாளையே இதயத்தில் தாங்கும் அந்தத் தன்மையினால் அப்படி சொல்லியிருக்கார். ஆழ்வார் என்றால் நம்மாழ்வாரையே குறிக்கும். நம்மாழ்வாரை உயிராகவும், மற்ற ஆழ்வார்களை உடலாகவும் கொள்வது வைணவ மரபு. நம்மாழ்வார் திருமால் திருவடியில் எப்போதும் விளங்குகின்றார். அதனால் பெருமாள் கோவில்களில் சேவிக்கச் செல்வோர் முடிமீது அவர் திருவடியாக வைக்கப்படுவதை “சடகோபன், சடாரி” என்று சொல்வது வழக்கம். அவ்வளவு ஏற்றம் உடைய நம்மாழ்வாரைப் போல, நான் இறைவனை இதயத்தில் வைத்து அவன் சிறியன் என்று சொல்லவில்லையே சுவாமி என்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை. அதனால் தான் ஊரைவிட்டுப் போவதால் என்ன நஷ்டம் என்று கேட்கிறாள்.


15. ஏதேனும் என்றேனோ

குலசேகரர் போலே

கொல்லிநகரான கருவூர் திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் பிறந்தவர் குலசேகர ஆழ்வார். குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். குலசேகர ஆழ்வார், திருவேங்கடமுடையான் மேல் பாடிய பாசுரத்தில் "எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!",என்றார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!

என்ற வரிகளின் வழி,குலசேகர ஆழ்வார், தன்னிலை எதுவாகினும், கல்லோ மன்னோ, தான் திருமலையில் இருந்து தினமும் திருவேங்கடவனை காண விரும்புவதை விவரித்துள்ளார். குலசேகர ஆழ்வாரின் தூய பக்தியை மனதில் கொண்டு இறைவனை தினமும் பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே இன்றும் வெங்கடேசப் பெருமாள் கோவிலின் கருவறைப்படி "குலசேகரப் படி" என்று அழைக்கப்படுகிறது. இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டி நின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படடுகிறது. திருக்கோளூர் பெண் பிள்ளை அந்த குலசேகர ஆழ்வார் போல் இறைவனைக் காண எண்ணினேனா என்று கேட்கிறார்.


16. யான் சத்யம் என்றேனோ

கிருஷ்ணனைப் போலே

கிருஷ்ணன் என்றால் பொய் பேசுபவன் என்று தான் ஆழ்வார்கள் பாசுரங்களில் சொல்கிறார்கள். நம்மாழ்வார் மெய் போல் பொய் சொல்வான் என்கிறார். நாச்சியார் திருமொழியிலும் ஆண்டாள் சொல்கிறாள்

மாலாய்ப் பிறந்த நம்பியை

மாலே செய்யும் மணாளனை

ஏலாப் பொய்க ளுரைப்பானை

இங்கே போதக் கண்டீரே

மாலாய்ப் பிறந்த நம்பி, கருப்பாய்ப் பிறந்த நம்பியை ,என்னை மயக்கமுறச் செய்யும் மணாளனை, ஏற்றுக்கொள்ள முடியாத பொய்கள் உரைப்பவனை (அது ஏன் ஏற்றுக் கொள்ள முடியாத பொய்கள், இவ்வளவு தவி தவிக்கிறாள் ஆனால் அவன் அதற்கு வராமல் இருக்க ஒரு உண்மைக் காரணமாவது சொல்லலாம் தானே,) அந்தப் பொய் சொல்பவனை பார்த்தீர்களா என்று ஒரு கோபிகை இன்னொரு கொபிகையிடம் சொல்வாளாம். ஆழ்வார்கள் சொல்கிறார்கள், என்ன மாதிரி பொய் சொல்வான் என்றால் பச்சை பசும் பொய் சொல்வானாம். புதிது புதிதாய் பொய் சொல்வான் ஒவ்வொரு முறையும். ஆனால் திருக்கோளூர் பெண்பிள்ளை சொல்லியிருக்கிறாள் யான் சத்யம் என்றேனோ கிருஷ்ணனைப் போலே என்று. அது உண்மை தான். எப்படி ஸ்ரீ ராமபிரான் தர்மவானாக இருந்தாரோ அதே போல சனாதன தர்மத்தை நிலை நாட்ட கிருஷ்ணனும் உண்மை தான் பேசினார். கிருஷ்ணன் பக்தர்களை காப்பாற்ற தான் பொய் சொன்னார். ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் முதலில் சொன்ன வாக்கியமே பொய்யாம். அதாவது பகவான் உவாச்ச என்று சொல்லி, கூறப்படுவது என்னவென்றால் கண்ணன் மண்ணை தின்று விடுகிறான், பலராமன் யசோதையிடம் போய் கண்ணன் மண்ணை தின்றுவிட்டான் என்று கூறுகிறான், யசோதை அவனை பார்த்து நீ மண்ணை தின்றாயா என்று கேட்கிறாள். சாப்பிடவே இல்லை என்கிறார். அது தான் பாகவதத்தில் அவர் சொல்லும் முதல் பேச்சு. மேலும் பலராமனும் மற்ற பிள்ளைகளும் பொய் சொல்கிறார்கள் என்றும் சொல்கிறார். உடனே வாயைத் திறந்து காட்ட சொல்கிறாள் யசோதை. பார்த்தால் உள்ளே ஈரேழு லோகங்கள் தெரிகிறது. அதுக்குள்ளே ஒரு கோகுலம் தெரிகிறது அதுக்குள்ளே யசோதை வாயைத் திறக்க சொல்லி கண்ணன் வாயைத் திறந்து காட்டுவதும் தெரிகிறது. தலை சுற்றி விடுகிறது யசோதைக்கு. அதே போல குலசேகர ஆழ்வாரும் ஒரு பாசுரத்தில் கண்ணன் எப்படி வரிசையாக பல பெண்களை ஏமாற்றி பொய் பேசியிருக்கிறார் என்று கூறியுள்ளார். இப்படியே பொய் பேசித் தான் நாளொரு வண்ணமாய் வளர்ந்து வந்தார். ஆனால் அவர் பேசும் பொய் எல்லாம் பொய்யல்ல அது நமக்குத் தஞ்சம் என்று பூர்வர்கள் சொல்கிறார்கள். அவர் உண்மையை பேசிய இடங்களும் உண்டு.

அனன்யா சிந்தயந்தோமாம் யே ஜனா: பர்யுபாஸதே

தேஷாம் நித்யாபி யுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்

அர்ஜுனனிடம் சொல்கிறார் எவன் ஒருவன் என்னையே இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டு இருக்கிறானோ, அவன் யோகத்தையும் ஷேமத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் கண்ணன். அதே போல திரௌபதி துர்யோதனன் சபையில் துகில் உரியப்பட்டபோது கண்ணன் காப்பாற்றுகிறான். அப்பொழுது திரௌபதி போட்ட சபதம் இவர்களை அழித்த பிறகு தான் தலை முடி முடிவேன் என்பது. கிருஷ்ணன் சொல்கிறார் அந்த சபதம் நிச்சயம் நிறைவேறும் என் வாக்கு சத்தியம் என்கிறார். கீதையில்

"மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு.." (பகவத் கீதை 18:65) என்னிடம் மனதைத் தந்து, எனது பக்தனாக இருந்தால் என்னையே நீ அடைவாய். இது சத்தியம் என்கிறார் அர்ஜுனனிடம். அடுத்த ஸ்லோகத்தில்,

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ

அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச

எல்லா தர்மங்களையும் அறவே தியாகம் செய்து விட்டு, என் ஒருவனையே சரணடைக. உன்னை நான் எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். கவலைப்படாதே என்கிறார். கிருஷ்ணனனை நன்கு உணர்ந்த விதுரரும் சஞ்சயனும் கிருஷ்ணணனை சத்யா சீலன் என்கிறார்கள். மகாபாரத ஸ்லோகத்தின் படி அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கற்பத்தில் இருந்த குழந்தையை அது வெளியே வந்து விழுந்த போது கரிக்கட்டையாய் விழுகிறது. அப்போது ஒரு அசரீரி கேட்கிறது. அதில் யார் ஒருவன் நைஷ்டிக பிரம்மச்சாரியோ, யார் ஒருவன் பொய்யே பேசாதவனோ அவன் தொட்டால் குழந்தை உயிர் பெற்றுவிடும் என்று. அங்கு குழுமியிருந்த எவருமே தேவர்கள் தொட முன்வரவில்லை. அப்பொழுது கிருஷ்ணன் அவ்விரண்டும் எனக்குப் பொருந்தும் என்று சொல்லி கால் கட்டை விரலால் தீண்டுகிறார். குழந்தை பரிக்ஷித் உயர் பெற்று எழுகிறான். இது மகா பாரதத்தில் வருகிறது. இதற்கான ஸ்லோகமும் உள்ளது ஆனால் பாகவதத்தில் இந்தக் குறிப்பு இல்லை. அதனால் யான் சத்யம் என்றேனோ கிருஷ்ணனை பிள்ளை.


17. அடையாளம் சொன்னேனோ

கபந்தனைப் போலே

கபந்தன் என்னும் இளவரசன் ஸ்தூலசிரஸ் என்னும் ரிஷியை அவமதித்ததால் ‘பெரிய உடல் கொண்டவனாக ஆகக்கடவாய்’ என்று சபிக்கப்பட்டான். ஒரு சமயம், தேவேந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டு தொடைகள் வயிற்றுக்குள்ளும் அவனுடைய தலை மார்பிலும் புதைந்தன. வயிற்றில் வாயை வைத்துக் கொண்டு இரு கைகளையும் நீட்டிக் கிடைக்கும் உணவுகளையெல்லாம் கபந்தன் சாப்பிட்டு வந்தான்.ராமர், லஷ்மணரோடு சீதாப்பிராட்டியைத் தேடி வரும் வேளையில் அவர்களைப் பிடித்துச் சாப்பிட முயன்ற கபந்தனுக்கு வந்திருப்பது, தன்னை சாபத்தில் இருந்து விமோசனம் தரும் தெய்வங்கள் என்று தெரிந்தது. தன்னை எரித்து விடும்படி கபந்தன் வேண்டினான். ராமலஷ்மணரும் தீமூட்டி கபந்தனை எரித்தார்கள். உடல் எரிந்ததும் அவன் சாபம் நீங்கி தேவசரீரம் கொண்டான். தேவசரீரம் கொண்ட கபந்தன் ராமலஷ்மணரின் வருகையின் நோக்கம் உணர்ந்து சீதை இருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்கான வழிகளைச் சொன்னான். இவ்வழியே சென்றால் மதங்கர் ஆசிரமம் வருமென்றும் அங்கேயிருக்கும் சபரிக்குத் தரிசனம் கொடுத்த பின்பு, அடர்ந்த மரங்கள் நிறைந்த ரிஷ்யமுகப் பர்வதத்தில் வாழும் சுக்ரீவனின் உதவி கிட்டும் என்று வழிகாட்டினான்.

இப்படி தெய்வங்களுக்கே உதவ முடிந்த கபந்தனைப் போல் நான் தெய்வ அனுக்கிரகம் பெறவில்லையே சுவாமி என்று ராமானுஜரிடத்தில் வருத்தத்துடன் சொல்கிறாள் திருக்கோளுர் பெண்பி்ள்ளை.


18. அந்தரங்கம் சொன்னேனோ

திரிசடையைப் போலே

இலங்கையில் ஒரே தர்மவானான விபீஷணனின் மகள் திரிசடை. அவள் அசோகவனத்தில் சீதையை காவல் காத்த அரக்கிகளுள் ஒருத்தி. ஆனால் தாயுள்ளம் படைத்தவள். இராவணன் வந்து சீதையை அச்சுறுத்தும் போதெல்லாம் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அவளை இராவணனால் ஒன்றும் செய்ய முடியாது, சீதையின் விருப்பத்துக்கு மாறாக அவன் அவளைத் தொட்டால் அவன் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் என்று கூறி அவள் துக்கத்தை குறைத்தவள். அனுமன் இலங்கைக்கு வரும் முன் அவளுக்கு ஒரு கனவு வந்தது. தான் கண்ட கனவை அசோகவனத்தில் அரக்கிகள் முன்பும் சீதையும் முன்பும் அவள் சொன்னாள். ஒரு குரங்கால் இலங்கை நகரமே எரியும் காட்சியைக் கண்டதாகவும், ராவணனும் இந்திரஜித்தும் சிவப்பு ஆடை உடுத்தி தெற்குத் திசை நோக்கிப் பயணம் போவதைப் பார்த்தாகவும் கூறுகினாள். சீதை மிகவும் நல்லவள் என்றும், அவளை ஒன்றும் செய்யாதீர்கள் என்றும் அவளுக்கு மீட்சி காத்திருக்கிறது என்றும் காவல் காக்கும் அரக்கிகளிடம் சொன்னாள். சீதையிடம் கலங்காதிருக்கும்படியும், நம்மைச் சுற்றி எது நடந்தாலும் கடவுளிடம் செய்யும் பிரார்த்தனையால் உதவி வருமென்று ஒரு தாய் மகளுக்கு ஆறுதல் அளிப்பதைப் போலச் சொல்லி வந்தாள். சீதைக்குத் தோழியாக, தாயாக சத்தியத்தைச் சொல்லி சீதையைக் காப்பாற்றிக் கொடுத்த திரிசடையைப் போல ஆறுதல் அளிக்கும் பக்தி தனக்கு இல்லையே என்று திருக்கோளூர் பெண்பிள்ளை ராமானுஜரிடத்தில் சொல்கிறாள்.

19. அவன் தெய்வம் என்றேனோ

மண்டோதரியைப் போலே

ஆஞ்சநேயர் இலங்கையில் நுழைந்தபோது அரண்மனையில் இருந்த மண்டோதரியை சீதை என்று நினைத்துக்கொண்டார். தெய்விகம், சாந்தம், அமைதி ததும்பும் முகத்துடன் அம்சதூளிகை எனப்படும் மஞ்சத்தில் படுத்திருந்த மண்டோதரியைப் பார்த்து முதலில் குழம்பிய அவர், ராமபிரானைப் பிரிந்த அன்னை மஞ்சத்தில் உறங்கவே மாட்டாள் என்ற தெளிவுக்கு வந்தார். மண்டோதரி அந்த அளவு சீதைக்கு ஒப்ப இருந்தாள். ஆத்ம ஞானம் உடையவள். ராவணன் போருக்குக் கிளம்பும்போது, ராமன் சாதாரண மனிதன் அல்ல, அவன் பரமாத்மா என்று கூறி மண்டோதரி எச்சரித்தாள். ராவணன் இறந்த பிறகு அவன் உடலைக் கட்டிக்கொண்டு, ராமன் தெய்வம் என்று கூறினேனே, நீங்கள் கேட்கவில்லையே சுவாமி என்று அரற்றுகிறாள். ஒருவர் இறந்த பிறகும் அவரது ஆத்மா சிறிது நேரம் அங்கேயே சரீரத்தின் மீது அபிமானத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும், அதனால் தான் கதறுவதை கேட்டாவது இராவணனின் ஆத்மா ராமனை அடையட்டும் என்று எண்ணி ராமனின் புகழ் பாடுகிறாள். இப்படி கணவனைப் பறிகொடுத்த நிலையிலும் கடவுளைச் சிந்தனை செய்யும் மண்டோதரியைப் போலத் தனக்குப் பக்குவம் வரவில்லையே என்று ஏங்குகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.


20. அஹம் வேத்மி என்றேனோ

விசுவாமித்திரரைப் போலே

இராமபிரான் பாலகனாக இருந்தபோது விசுவாமித்திரர் தசரதரிடம் ஒரு உதவி கேட்டு வந்தார். அவரது சித்தாஸ்ரமத்தில் நடைபெறவுள்ள யாகத்துக்கு ஆறுநாட்கள் காவலாக இராமனை அனுப்புமாறு கேட்டார். இதைக் கேட்ட தசரதருக்கு அவர் தன் உயிரையேக் கேட்பது போல இருந்தது. அப்போது விஸ்வாமித்திரர் சொன்னார்

"அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம்

ஸ்த்யராக்ரமம் வஷிஷ்டோபி

மஹாதேஜா யே சேமே தபஸிஸ்திதா"

நான் ராமனை மஹாத்மா என உண்மையில் அறிகிறேன். மஹாதேஜஸ்வியான வசிஷ்டரும் கூட இதை அறிவார். அனைவரும் இதை அறிவார்கள். மன்னனும், முனிவரின் வார்த்தையில் உள்ள உண்மையினை உணர்ந்து, நம்பிக்கையுடன் ஸ்ரீ ராமனையும், அவனை விட்டுப் பிரியாத இலட்சுமணனையும் முனிவருடன் வழியனுப்பி வைத்தார். அப்படி விஸ்வாமித்திரர் "அஹம்வேத்மி: என்று சொன்னது போல நான் சொல்லவில்லையே, பின் நான் ஏன் இங்கிருக்க வேண்டும் என்கிறாள் அப்பெண்.

21. தேவு மற்று அறிவேனோ

மதுரகவியார் போலே

என்னுடைய குரு தான் என் தெய்வம், வேறு தெய்வம் எனக்கில்லை என்று வாழ்ந்த மதுரகவி ஆழ்வாரைப் போல நான் பக்தி செய்தேனா என்று கேட்கிறாள். அவர் இயற்றிய பாசுரங்கள் எதுவுமே எந்தப் பெருமாள் மேலும் இல்லை, தன் குரு நம்மாழ்வாரின் மேல் மட்டும் கண்ணிநுன் சிறுதாம்பு தொகுப்பைப் பாடியுள்ளார். திருக்கோளுரில் பிராமண சமூகத்தில் மதுரகவியாழ்வார் பிறந்தார். இளமையில் எல்லாக் கலைகளையும் கற்று கவிபாட வல்லவராகி “மதுரகவி” என்னும் பெயர் பெற்றார். ஒரு நேரம் மதுரகவிகள் யாத்திரையாக அயோத்திக்குச் சென்றிருந்தபோது தென்திசையிலிருந்து ஒரு பிரகாசம் வெளிப்படுவதைப் பார்த்தார். அதைப் பின்தொடர, அந்த ஒளி ஆழ்வார் திருநகரியில் கொண்டு சேர்த்தது. இந்த ஊரில் ஏதாவது அபூர்வ விசேஷம் உண்டா என்று விசாரித்தார். கண் திறக்காமல், பேசாமல், சாப்பிடாமல் 16 வயதுள்ள சடகோபன் என்னும் பிள்ளை பிறந்ததிலிருந்து வாழ்ந்து வருகிறான் என்ற தகவல் கிடைத்தது. அவர் தியானம் செய்துவந்த புளிய மரத்தடிக்கு மதுரகவியாழ்வார் சென்றார். அவரது நிலையைச் சோதிக்க ஒரு சிறுகல்லை எடுத்துப் போட்டார். 16 ஆண்டுகள் தியானத்திலிருந்த சடகோபர் என்ற நம்மாழ்வார் கண்திறந்து பார்த்தார். மதுரகவிகள் சடகோபரைத் தண்டனிட்டு சிஷ்யனாக ஏற்பதற்கு முறையிட அவரும் ஏற்றுக் கொண்டார். இப்படியாக ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ என்று ஆரம்பித்துப் பாடிக் கொண்டிருக்க 108 திவ்ய தேசப் பெருமாள்களும் தம்மைப் பாடமாட்டாரா என்று போட்டிபோட்டுக் கொண்டு நின்றனர். கூட்டம் தாங்காது போக மதுரகவிகள் அந்தப் புளியங்கொம்பு ஒன்றை ஒடித்துக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினார் என்று தெரிகிறது. அப்படி ஒவ்வொரு பகவானாக வரிசையில் நின்று பாசுரம் பெற்றுப் போகுமளவுக்கு நம்மாழ்வாரின் திருவடி பலம் மதுரகவியாழ்வாருக்கு இருந்தது. ‘மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்றறியேன் குருகூர் நம்பி’ என்று வாழ்ந்த மதுரகவியாழ்வாரைப் போல ஓர் ஆசிரியரை நம்பி நான் வாழவில்லையே என்று வருந்துகிறாள் திருக்கோளூரைச் சேர்ந்தவள்.


22. தெய்வத்தைப் பெற்றேனோ

தேவகியாரைப் போலே

ஒரு தம்பதியர் திருமாலை நோக்கிப் பல்லாண்டுகள் தவம் செய்தனர். அவர்கள் சாதாரண மக்கள் பேறு அடையத் தவம் புரியவில்லை தெய்வத்தையே மகனாகப் பெற்றிடத் தவம் செய்தனர். திருமாலும் அவர்கள் முன் தோன்றினார். வேண்டும் வரங்களைத் தருவதாகக் கூறினார். ‘‘பெருமாளே! நாங்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும் நீங்களே எங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும்!’’ என்று அவர்கள் வேண்டினர். பெருமாளும் அவர்கள் கேட்ட வரத்தை அளித்தார். அவ்வரத்தின்படி, துவாபரயுகத்தில் அத்தம்பதியர் வசுதேவர்-தேவகி என்ற பெயருடன் பிறந்தனர். அவர்களுடைய மகன்தான் கிருஷ்ணன். கம்சன் போன்ற பல அசுரர்களின் கொடுமைகளுக்கு முடிவுகட்டவும், பாரதப் போரை நடத்தி, பூமாதேவியின் பாரத்தைக் குறைக்கவும் பெருமாள் தேவகியின் வயிற்றில் கண்ணனாகப் பிறந்தார். தன் குழந்தை, கம்சனிடமிருந்து தப்பி எப்படியாவது, எவ்விடத்திலாவது நலமாக வாழவேண்டும் என்ற தியாக உள்ளத்துடன் பெற்ற அன்றே மகனைப் பிரிந்த தேவகியின் பெருமை மகத்தானது. 'தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே?’-என்று வினவுகிறார் திருக்கோளூர் பெண்பிள்ளை. ‘தேவகி’ என்று கூறாமல், ‘தேவகியார்’ என்று குறிப்பிட்டு தேவகிக்கு முந்திய அதிதி, சுதபஸ் ஆகிய பிறப்புகளையும் நினைவு கூர்கிறார். காஸ்யபர்-அதிதிக்கு மகனாக வாமனரும், பிருச்சினி-சுதபச்சுக்கு மகனாக பிருச்சினி கர்ப்பன் என்னும் தெய்வாம்சத்துடன் பெருமாள் இவர்களின் முற்பிறவிகளில் பிறந்துள்ளனர். தேவகியாரைப் போன்று தான் தெய்வத்தைப் பெற்றெடுக்கும் பேறு அடையவில்லையே என்று ஏங்குகிறார் திருக்கோளூர் பெண்பிள்ளை.


23. ஆழிமறை என்றேனோ

வாசுதேவரைப் போலே

வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து கம்சன் ஒவ்வொரு குழந்தையாக கொன்று வந்து கொண்டிருந்தான். எட்டாவது குழந்தை கிருஷ்ணன் மாணிக்கமாக வந்து உதித்தார். சாதாரணமான லௌகீகமான் குழந்தையாக பிறக்கவில்லை அவர். சங்கு சக்கரத்துடன் நான்கு புஜங்களுடன், ஆபரணங்களும், பட்டும் அணிந்து சாக்ஷாத் மகா விஷ்ணுவாகவே காட்சி தந்தார். உடனே வசுதேவர் பயந்து விட்டார். கம்சன் எட்டாவது குழந்தையை கொல்வதற்காக காத்துக்கொண்டிருக்கிறான். குழந்தையோ இப்படி தெய்வமாக காட்சி அளிக்கிறதே, இவனை இந்தக் கோலத்தில் யசோதையிடம் எப்படி இரவோடு இரவாக கொண்டு விடுவது என்று பயந்தார் வசுதேவர். உடனே அவர் கண்ணனை பார்த்து ஆழிமறை என்றார். பகவானும் சின்னக் குழந்தையாக எல்லாரையும் போல மாறிவிட்டார். தந்தைப் பேச்சை பிறந்தவுடனே கேட்ட குழந்தை கிருஷ்ணன், ஸ்ரீ ராமன் கூட தந்தை சொல்லை 25 வயதில் தான் கேட்டு காட்டுக்குப் போனார். அப்படி நான் பகவானை காப்பாற்ற ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே என்கிறாள் திருக்கோளூர் பெண் பிள்ளை.


24. ஆயனை வளர்த்தேனோ

யசோதையாரைப் போலே

ஆயனாய் வளர்த்தேனோ என்றிருக்க வேண்டும். அதாவது குழந்தை கண்ணன் ஷத்திரியனாகத் தான் பிறந்தான் ஆனால் இடைச் சேரியில் ஆயப் பிள்ளையாய் யசோதா நந்தகோபர்களின் கோகுலத்தில் வளர்ந்தான். தினம் தினம் அவனை வளர்க்க அவ்வளவு சிரமப்பட்டாள் யசோதை. குழந்தையாய் இருக்கும்போதே கம்சன் அனுப்பிய அரக்கர்களால் வந்த துன்பங்கள் பல. கண்ணனுக்கு அவை விளையாட்டாக இருந்தாலும் தாயான அவளுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்தது. கண்ணன் சிறிது வளர்ந்த பின் யசோதையின் தயிர் வெண்ணெயை அவளுக்குத் தெரியாமல் எடுத்து சாப்பிட்டுவிட்டு, வெண்ணையை பலர் வீட்டுக்குச் சென்று திருடி தின்று ஆயர்குலப் பெண்களின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டான். ஆயப் பெண்கள் மத்துக் கடையும் சத்தமே அவனுக்கு சுப்ரபாதமாக இருந்தது. தினம் யசோதைக்கு புகார் பட்டியல் தான். அவன் செய்த சேஷ்டிதங்களுக்கு அளவே இல்லை. அவள் தத்து தான் கொண்டாளோ அல்லது தானே தான் பெத்தாளோ என்ற அளவில் அவள் அவ்வளவு அருமையாக வளர்க்கிறாள். அவனை குளிக்க வைப்பதும் ஒரு பாடு. அவனை கெஞ்சி கொஞ்சி தான் குளிக்க வைக்க முடியும். ஆனால் இப்படிப்பட்ட ஆயனை வளர்க்கும் பாக்கியம் தெய்வ நங்கை யசோதைக்கு தான் கிடைத்தது. பெற்ற தாய் தேவகிக்கும், ஸ்ரீ தேவி, பூதேவி, நீளா தேவிக்கும் கூட கிடைக்கவில்லை. தெய்வம் என்று தெரிந்தும் அடித்தும், கட்டி வைத்தும், மாடு மேய்க்க அனுப்பியும் ஆயப் பிள்ளையை போல வளர்த்த யசோதையைப் போல நான் வளர்த்தேனோ என்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

25. அநுயாத்திரை செய்தேனோ

அணிலங்களைப் போலே

அணில்கள் எல்லாம் எப்படி சிறு கைங்கர்யம் செய்து பெருமாளின் ஆசியைப் பெற்றன என்பதை சொல்லும் வாக்கியம் இது. ராமர் இலங்கை சென்று சீதையை மீட்க, குரங்குப் பட்டாளம் அனுமன் தலைமையில் பாலம் அமைத்தன. ஆஞ்சநேயர் ராம என கல்லில் எழுதி கொடுக்க அனைத்து கற்களும் பாலமாக மிதந்தன. மலை போன்ற கற்களைக் கொண்டு குரங்குகள் பாலம் அமைப்பதைப் பார்த்த அணில்களும் கடலில் சென்று குளித்து பின்னர் மணலில் புரண்டு வந்து கற்களின் இடையில் மணலை உதறி மீண்டும் கடலில் குளித்து மணலில் புரண்டு பாலத்தில் மணலை உதிர்த்து ராமர் பாலம் கட்டுவதற்கு உதவின. அணில்கள் கடலில் குளித்தால் தண்ணீர் குறைந்து சமுத்திரம் வற்றிப் போகும் என நினைத்தன. இதனை கண்ட ராமர், ஒரு அணிலை தூக்கி தன் விரல்களால் வருடினார் அந்த வரிகளே அனைத்து அணில்களின் முதுகிலும் மூன்று கோடுகளாகப் பதிந்தன. கற்பாலத்தில் ராமனின் கால் பதித்தால் உருத்துமே எனவும் மணலை பாதங்களுக்கு மெத்தென்று இருக்கக் கொட்டின. இது ராமர் மேல் உள்ள அளவு கடந்த அன்பையும் அவற்றின் பக்தியையும் எடுத்துக்காட்டுகிறது. அணில்கள் போல் இறைவனுக்காக நான் உதவவில்லையே சுவாமி என்று வருந்தினாள் திருக்கோளுர் பெண் பிள்ளை.


26. அவல்பொரியை ஈந்தேனோ

குசேலரைப் போலே

சுதாமா என்பது குசேலரின் இயற்பெயர். குசேலம் என்றால், கிழிந்த ஆடை என்று பொருள். கிழிந்த ஆடையை உடுத்தியவர் என்ற பொருளில் சுதாமாவை, (கேலியாக) குசேலர் என்றனர். கண்ணனும் சுதாமாவும் சாந்தீபனி முனிவரின் குருகுலத்தில் தங்கி, கல்வி கற்றவர்கள். யாதவ குலத்தைச் சேர்ந்த கண்ணனும் வேதியர் குலத்தைச் சேர்ந்த சுதாமாவும் குருகுலத்தில் சமச்சீர் கல்வி பயின்றனர். கண்ணனும் சுதாமனும் இணைபிரியாத நண்பர்களாகத் திகழ்ந்தனர். அத்துடன் ஆசான் சாந்தீப முனிவரின் அன்புக்கும் பாராட்டுக்கும் உரிய மாணவர்களாக விளங்கினர். குருகுலத்தில் கல்வி நிறைவு பெற்றவுடன் குசேலர் சுசீலை என்ற பெண்ணை மணந்துகொண்டு, குழந்தைகளைப் பெற்றார்; பெரிய குடும்ஸ்தர் ஆனார் என்று ஸ்ரீமத் பாகவத புராணம் உரைக்கிறது. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார். அதே நேரத்தில் கண்ணன் துவாரகைக்கு மன்னனாகிப் புகழுடன் விளங்கினான். அவனைச் சரணடைந்தவர்கள் அனைவரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தனர். அதனை அறிந்த குசேலரின் மனைவி தன் கணவரிடம் கண்ணனைக் கண்டு, உதவிகள் பெற்று வர ஆலோசனை கூறினாள். உதவி கேட்பதைவிட, உற்ற நண்பனைக் காண்பதையே குறிக்கோளாகக் கருதி, குசேலர் துவாரகைக்குப் புறப்பட்டார். நடந்தே போனார். கண்ணனுக்குப் பிடித்த அவலை அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து வாங்கி ஒரு கிழிந்த துணியில் கட்டிக் கொடுத்து அனுப்பினாள் சுசீலை. கண்ணன் குசேலரைக் கண்டான். மாளிகையிலிருந்து வெளியே வந்து, குசேலரைத் தழுவி வரவேற்றான். உள்ளே அழைத்துச் சென்று ஆசனம் அளித்து, குசேலரின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்தான். ருக்மிணி மற்றும் சத்யபாமைக்குத் தன்னுடைய உயிர் நண்பரை அறிமுகம் செய்து வைத்தான். இனிய விருந்திற்குப் பிறகு நண்பர்கள் தங்கள் குருகுல அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். கண்ணனின் செல்வச் செழிப்பைக் கண்ட குசேலர் தன்னுடன் கொண்டு வந்த அவலை வெளிப்படுத்தத் தயங்கினார். கண்ணனே அதனைக் கேட்டு வாங்கிச் சுவைத்து மகிழ்ந்தான். அன்றிரவு குசேலர் கண்ணனின் மாளிகையிலேயே சிறப்பு விருந்தினருக்கு உரிய மரியாதைகளுடன் தங்கினார். கண்ணனின் தரிசனம் கிடைத்த பிறகு, குசேலருக்கு மற்றவை அனைத்தும் மறந்தன. கண்ணனிடம் பிரியா விடை பெற்றுத் தமது ஊருக்குப் புறப்பட்டு வந்தார். அவரால் அவருடைய கண்களையே நம்ப முடியவில்லை! அவருடைய இல்லம் துவாரகையில் உள்ள கண்ணனின் மாளிகையைப் போல் காட்சியளித்தது! மனைவி சுசீலையும் குழந்தைகளும் விலையுயர்ந்த ஆடை அணிகலன்களுடன் அவரை வரவேற்க மாளிகை வாயிலுக்கு வந்தனர்! மாளிகையுள் நுழைந்தார். கேளாமலேயே கண்ணன் கொட்டிக் குவித்திருக்கும் செல்வத்தைக் கண்ட குசேலர் கண்ணன் இருந்த திசையை நோக்கித் தொழுதார். நல்ல நெறியில் வாழ்ந்தார். அவல்பொரியை எந்தேனோ குசேலரைப் போலே? என்று திருக்கோளூர்ப் பெண் பிள்ளை குசேலர் கண்ணனுக்கு அவல் கொடுத்த வரலாற்றைக் குறிப்பிட்டு கேட்டார்.


27. ஆயுதங்கள் ஈந்தேனோ

அகத்தியனைப் போலே

ராமர் வனவாசத்தில் பல காடுகளுக்குச் சென்றார். அங்கே இருக்கும் ரிஷிகளையும், முனிவர்களையும் வணங்கி அவர்கள் ஆசிரமத்தில் தங்கி அவர்களுக்குத் தொண்டு புரிந்து நல் உபதேசங்களையும் அவர்களின் ஆசியையும் பெற்றார். ராமர் அகஸ்தியரைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று விரும்பினார். முனிவர் சுதீக்ஷனரை வணங்கி, முனிவரே எனக்கு நீண்ட நாட்களாகத் தமிழ் மொழியைக் கற்பித்த அகஸ்தியரைச் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று ஆசை. அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும் என்று கேட்க அதற்குச் சுதீக்ஷனரும் மகிழ்ச்சியுடன் அகஸ்தியர் வசிக்கும் இடத்துக்கு வழி சொன்னார். பல மலைகளைக் கடந்து அவர்கள் அகஸ்தியர் இருக்கும் இடத்துக்கு சென்று அவரைக் கண்டு வணங்கினர். அகஸ்தியர் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்றார். பழங்களைக் கொடுத்து உபசரித்தார். சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது அகஸ்தியர் ராமா நீ உலகங்களுக்கு எல்லாம் அரசன் உனக்குச் சில பரிசுகளைத் தருகிறேன் என்று ஒரு வில்லை எடுத்துக் கொடுத்தார். அந்த வில் ரத்தினங்கள் பதித்து பிரகாசமான இருந்தது. ராமர் அதை வாங்கிக்கொண்டார். அகஸ்தியர், ராமா இந்த வில் விஸ்வகர்மா மஹா விஷ்ணுவிற்காகச் செய்தது, பிரம்மாவினால் கொடுக்கப்பட்டது என்றார். வில்லுடன் கூடவே அம்புகள் கொடுக்க வேண்டும் அல்லவா, அகஸ்தியர் நிறைய அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணியைக் கொடுத்தார். ராமர் அதையும் வாங்கிக்கொண்டார். அகஸ்தியர், இந்தக் கூர்மையான அம்புகள் அக்னி போல ஒளிவீசும். இவை இந்திரனால் கொடுக்கப்பட்டது. இந்த அம்புறாத்தூணியில் அம்புகள் எடுக்க எடுக்கக் குறையவே குறையாது என்றார். ராமர் அதை முதுகில் மாட்டிக்கொண்டார். அடுத்து அகஸ்தியர் தங்கத்தால் செய்யப்பட்ட ரத்தினங்கள் பதித்த கத்தி ஒன்றைக் கொடுத்தார். ராமா இந்த வில், அம்புகள் கத்தியைக் கொண்டு தான் மகாவிஷ்ணு அசுரர்களைக் கொன்று தேவர்களை முன்பு காப்பாற்றினார் என்றார். இந்த ஆயுதங்களைப் பார்த்து ராமர் பதினான்கு வருடம் காட்டில் இருக்க வேண்டும். எனக்கு மீதம் இரண்டரை வருடம் தான் பாக்கி இருக்கிறது எதற்கு எவ்வளவு ஆயுதம் என்று யோசித்தார். முனிவர், 'ராமா இது எதிரிகளைக் கொல்லுவதற்குப் பிற்காலட்தில் உனக்கு உதவும். என்றும் மங்கலம் உண்டாகுக' என்று வாழ்த்தினார். அவர் முக்காலமும் அறிந்தவர்! சுவாமி, அகஸ்தியரைப் போல நான் ராமருக்கு எந்த உபகாரமும் செய்யவில்லையே, அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன் என்றாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.


28. அந்தரங்கம் புக்கேனோ

சஞ்சயனைப் போலே

மகாபாரதத்தில் சஞ்சயன் கௌரவர்களின் தேரோட்டி. திருதராஷ்டிரனும் சஞ்சயனும் ஒரே குருகுலத்தில் பயின்றவர்கள். ( மகாபாரதப் போரில் திருதராஷ்டிரர், என்னால் என் மக்களுக்காகப் போர்க்களம் புக முடியாதே என வருத்தமுற்றபோது வியாசர் ஒரு உதவிசெய்தார். குருக்ஷேத்திரத்தில் நடக்கும் யுத்தக் காட்சிகளை அரண்மனையில் இருந்தே காணும்படியான வரத்தைப் பெற்றார். கண் இல்லாத திருதராஷ்டிரர், தன் நண்பன் சஞ்சயனுக்கு அந்த வரத்தைக் கொடுத்து யுத்தகளக் காட்சியை நேரடியாகத் தெரிந்து கொண்டார். சஞ்சயன் இல்லை என்றால் கிருஷ்ணன் குருக்ஷேத்திரப் போரில் காட்டிய விஸ்வரூப தரிசனம் திருதராஷ்டிரனுக்கு கிடைத்திருக்காது.) கௌரவர்களின் படையுடன் நின்று உதவிசெய்ய, கிருஷ்ணனிடம் சஞ்சயனை திருதராஷ்டிரர் தூது அனுப்பினார். சஞ்சயன் கிருஷ்ணனைத் தேடிச் சென்றபோது சத்யபாமா, திரௌபதி, அர்ச்சுனன் ஆகியோர் அந்தப்புர மஞ்சத்தில் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். சஞ்சயன் வரவை அறிந்த கிருஷ்ணர் சஞ்சயனை வரவேற்றார். அந்தப்புரத்தில் அர்ச்சுனனைப் பார்த்த சஞ்சயன் கிருஷ்ணனின் உதவி பாண்டவர்களுக்கு மட்டுமே என உணர்ந்து கொண்டான். சஞ்சயன், இறைவனை அந்தப்புரத்தில் கண்டதும் மெய் மறந்து திகைத்துவிட்டான். உள்ளத்திலே இறைவனை உறைய வைத்த சஞ்சயன் இறைவனின் அந்தரங்கம் வரை செல்லும் வாய்ப்பை பெற்றான். அந்தக் கிடைத்தற்கரிய காட்சியை இறைவன் சஞ்சயனுக்குக் கொடுத்தார். சஞ்சயன் மிக நல்லவன், அதனாலே தன் அந்தரங்க இடத்திலும் வரவேற்றார் கிருஷ்ணர். சஞ்சயனைப் போல் நான் இறைவனின் அந்தரங்கம் வரை செல்லும் பேறைப் பெறவில்லையே சுவாமி என்கிறாள் திருக்கோளுர் பெண் பிள்ளை.


29. கர்மத்தால் பெற்றேனோ

சனகரைப் போலே

சீதையைப் பெண்ணாக அடைந்த ஜனகர் சிறந்த கல்வியாளர். தெளிவான ஞானம் பெற்றவர். பேரிடர் வந்தாலும் சிறிதும் கலங்காமல் தனக்குரிய கடமைகளைச் செவ்வனே செய்பவர். சிறந்த பிரம்மஞானியான யாக்ஞவல்கியர் தலைமையில் மிதிலையில் பல முனிவர்களும் சான்றோர்களும் கூடி, பிரம்ம வித்தை குறித்து ஆராய்ந்து கொண்டிருந்தனர். அந்த ஆய்வரங்கத்தில் ஜனகரும் பங்கு பெற்றார். யாக்ஞவல்கியர் அந்த ஆய்வரங்கத்தில் பங்கு பெற்றவர்களின் மனநிலையையும், பண்புகளையும் அறிந்துகொள்ள சில வீரர்களை அழைத்து ஆய்வரங்கம் காரசாரமாக நடைபெறும்பொழுது, மீதிலை தீப்பிடித்து எரிகிறது என்று கூறச் சொன்னார். அந்த வீரர்களும் அவசரமாக ஓடிவந்து, “ஜனகமகாராஜா! மிதிலை தீப்பற்றி எரிகிறது!” என்று கூறினர். முனிவர்களில் பலர் தங்கள் உயிருக்கு அஞ்சி ஓடினர். சான்றோர்கள் பலர் தங்கள் உடைமைகளைக் காப்பாற்றும் நோக்கத்துடன் ஓடினார்கள். ஆனால், ஜனகர் மட்டும் சற்றும் சஞ்சலமின்றி, “எல்லாம் ஈசன் செயல்!” என்று கூறியபடி அமர்ந்திருந்தார். யாக்ஞவல்கியர், ஜனகரே உண்மையான பிரம்மஞானி என்று பிரகடனம் செய்தார். உண்மையில் மிதிலையில் தீப்பிடிக்கவில்லை என்பதை அறிந்து பிறகு அனைவரும் அரங்கிற்குத் திரும்பினர். அவர்கள், ஜனகரால் எவ்வாறு சிறிதும் சஞ்சலம் அடையாமல் இருக்க முடிந்தது என்று வினவினார்கள்.

“உலகங்களும், அவற்றிலுள்ள பொருள்களும் கடவுளின் உடைமைகள்! அவற்றைப் பாதுகாப்பதும், காவாமல் இருப்பதும் அவன் செயல்.

நாம் எதற்காக வீணில் கவலைப்பட வேண்டும்” என்றார் ஜனகர்.

அவருடைய விவேகத்தையும், ஞானத்தையும் எண்ணி அனைவரும் வியந்தனர். பெருமாள் சும்மா இருப்பாரா? இத்தகைய கர்மயோகியின் கலப்பையில் ஸ்ரீதேவியாகிய சீதையை அகப்படச் செய்தார். சீதையும் ஜனகரின் பெண்ணாகவே வளர்ந்து இராமனுக்கு மாலையிட்டாள். “கர்மத்தால் பெற்றேனோ சனகரைப் போலே!”அது போன்ற கர்மயோகியாகத் தன்னால் வாழ முடியவில்லையே என்று ஏங்குகிறாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.

30. கடித்து அவனைப் பெற்றேனோ

திருமங்கையாழ்வார் போலே

திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். 'கலியன்' என்னும் இயற்பெயர் கொண்ட இவர், சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவரை சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார். திருமங்கை மன்னன், குமுதவல்லி நாச்சியார் எனும் மங்கை மீது கொண்ட காதலினால், நாச்சியாரின் விருப்பப்படி வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர், தினமும் ஆயிரம் திருமாலின் அடியார்களுக்கு அன்னம் இடுவதையும், திருக்கோயில் கைங்கரியங்களில் ஈடுபடுவதையும் செய்து வரலானார். காலப்பொழுதில் தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டு தன் செல்வங்களையும், அரசு செல்வங்களையும் முழுக்க இழந்தார். நாட்டை துறந்த மன்னன் திருமங்கை, கொள்ளை அடித்தாவது அடியார்களைப் பேண வேண்டும் என்னும் கொள்கை உடையவர் ஆனார். ஒருமுறை பெருமான், மணக்கோலத்தில் வர, ஆழ்வார் அவர்களிடம் இருந்த நகைகளையும், பொருள்களையும் பறித்தார். அப்பொழுது மணமகன் காலில் உள்ள நகையைக் கழற்ற இயலாமல் பல்லால் கடிக்க, பெருமானால், கலியன் (பலம் மிக்கவன்) என அழைக்கப்பட்டார். பறித்த பொருட்களை மூட்டையாக கட்டி எடுத்துச்செல்ல முயன்ற பொழுது அடியாரால் எடுத்துச் செல்ல முடியவில்லை. பெருமாளை நோக்கி, “எதும் மந்திரங்கள் போட்டாயா? நீ என்ன மாயங்கள் அறிந்தவனா? மந்திரத்தை கூறும், சொல்லாவிடில் இந்த வாளுக்கு இறையாவாய்” என்று தம் கையில் வாளைக் காட்டி அதிகாரத்துடன் கேட்க, தனக்கு சேவை செய்ய, தன் அடியார்களுக்கு சேவை செய்ய திருடவும் துணிந்த திருமங்கைக்கு ஸ்ரீமன் நாராயணனாக காட்சியளித்தார். எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தார். ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது. தனது பெரிய திருமொழியின் முதல் பாசுரத்தை பாடினார் :

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயர் இடும்பையில் பிறந்து

கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர்தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்

உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து

நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமமே

திருக்கோளூர் பெண்பிள்ளை, திருமங்கையாழ்வார் போல் ஸ்ரீமன் நாராயணனின் திருவடி விரலை கடித்தாவது அவரின் அருள் பெரும் பாக்கியத்தை பெற்றேனோ, என்று வினவுகிறார்.

31. குடைமுதலானது ஆனேனோ

அனந்தாழ்வான் போலே


சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்

நின்றால் மறவடியாம் நீள் கடலுள் என்றும்

புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்

அணையாம் திருமாற் கரவு.

என்று பொய்கையாழ்வார் ஆதிசேஷனின் மகிமையைப் பாடியுள்ளார். இறைவன் பக்தர்களைக் காக்கச் செல்லும்போது, வெயிலோ, மழையோ தாக்காதவாறு குடையாக ஆதிசேஷன் திகழ்கிறார். நடந்து களைத்து அமரும்போது ஆசனமாகவும் நின்ற கோலத்தில் பாதுகையாகவும் திருப்பாற்கடல் சயனத்தில் சுகமான படுக்கையாகவும் இருக்கிறார். தன் தலையிலுள்ள ரத்ன மணிகளின் பிரகாசத்தால் திருவிளக்காக ஆதிசேஷன் ஜொலிப்பவர். இந்த ஆதிசேஷனின் அவதாரம் தான் திரேதா யுகத்தில் ராமனின் தம்பியான லக்ஷ்மணன். அவரும் ராமனுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார். ராமன் குழந்தையாக இருந்தபோது, என்ன காரணமென்று புரியாமல் வீல் வீலென்று அழுதார். தாயும் சேடிகளும் என்னென்னவோ செய்தும் அழுகை நிற்கவில்லை. குலகுரு வசிஷ்டர் தான் தம்பி லக்ஷ்மணனை உடன் உறங்க வையுங்கள் என்று ஆலோசனை கூறினார். குழந்தை ராமன், தனது அணையான லக்ஷ்மணனின் உடல் ஸ்பரிசத்தைப் பெற்றதும் அழுகையை நிறுத்திவிட்டார். ஆதிசேஷன் தான் கலியுகத்தில் ராமானுஜராக அவதாரமெடுத்து 120 ஆண்டுகள் வாழ்ந்தார். தொண்டனூரில் ஆயிரம் சமணர்களுடன் ஒரே சமயத்தில் ஆயிரம் முகங்களுடன் ஆதிசேஷனாக மாறி வாதிட்டார் என்றும் கூறப்படுகிறது. அப்படியான எந்த கைங்கரியத்தையும் நான் பகவானுக்கு நிறைவேற்றவில்லையே என்று வருத்தமுடன் கூறுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.


32. கொண்டு திரிந்தேனோ

திருவடியைப் போலே

காசியப முனிவருக்கு கத்ரு, வினதை ஆகிய இரு மனைவியர். கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் புதல்வர்கள். வினதைக்கு கருடன், அருணன் எனும் இரு புதல்வர்கள். கத்ரு வினதையை அடிமையாக்க நினைத்து ஒரு போட்டியில் அவளைத் தோற்கடித்தாள். அடிமைப்பட்ட வினதையின் மகன் கருடன் தனது தாயை விடுவிக்க நினைத்தான். அந்த அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதற்காக தேவலோகத்தில் இருக்கும் அமிர்தகலசத்தை எடுத்துவருமாறு கத்ரு கட்டளை இட்டாள். அப்போது ஸ்ரீமன் நாராயணனனுக்கும் கருடனுக்கும் யுத்தம் உருவானது. கருடனின் வீரத்தைப் பார்த்து பின்னர் சமாதானமும் ஏற்பட்டது. இந்தச் சமாதானத்தை அடுத்து நாராயணனுக்கு வாகனமாகவும் கொடியாகவும் கருடன் ஆனார். கருடாழ்வாரைப் பெரிய திருவடி என்று அழைப்பார்கள். இறைவனுக்கு பிரம்மோற்சவம் நடைபெறும்போது முதல் நாளான கொடி ஏற்றத்தில் கருடக் கொடியே ஏற்றப்படுகிறது. இறைவனைச் சுமந்து வரும்போது கருட சேவை நிகழ்வு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இறைவன் ஆதிமூலமே அபயம் என்று அழைத்த கஜேந்திரனுக்கு, வரமருள வரும்போதும் கருட வாகனத்திலே விரைந்து வந்து மோட்சம் தந்தார். கருடனைப்போல இறைவனை சுமக்கும் வரம் எனக்கு கிடைக்கவில்லையே சுவாமி என்கிறாள் திருக்கோளுர் பெண்பிள்ளை.


33. இளைப்பு விடாய்த் தீர்த்தேனோ

நம்பாடுவான் போலே

பாண்டிய தேசத்தில் திருக்குறுங்குடி என்னும் ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசம் இருக்கிறது. அங்கே இருக்கும் பெருமாள் அழகிய நம்பி. திருக்குறுங்குடி மலை அடிவாரத்தில் பாணர் குலத்தில் வைணவ பக்தன் வாழ்ந்து வந்தான். பெயர் நம்பாடுவான். தாழ்ந்த குலத்தில் பிறந்தவன். அதனால் அவனுக்குக் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இதைப் பற்றி எல்லாம் அவனுக்குக் கவலை இல்லை. தினமும் விடிகாலையில் குளித்து பாண் வாத்தியத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கோயிலின் வாயிலுக்கு முன் நின்றுகொண்டு திருக்குறுங்குடி அழகிய நம்பியைக் குறித்து பண் இசைத்துப் பாடிக்கொண்டு இருப்பான். ஒரு கார்த்திகை ஏகாதசி, இரவு முழுவதும் கண் விழித்து அழகிய நம்பியைத் தியானித்து மறுநாள் துவாதசிக்கு, விடியற்காலை விரதத்தை முடிக்கக் கோவிலுக்குப் புறப்பட்டான். நல்ல இருட்டு. காட்டுவழியே செல்லும்போது மரத்திலிருந்து ஒரு பிரம்ம ராட்சசன் அவன் முன்னே குதித்தது. மரத்திலிருந்து குதித்த ராட்சசன் நம்பாடுவானைப் பிடித்துக்கொண்டு உன்னை உணவாகச் சாப்பிடப் போகிறேன் என்றது. அதற்கு நம்பாடுவான் என்னை நீ சாப்பிடு ஆனால் நான் விரதத்தில் இருக்கிறேன். நம்பியைப் பாடிவிட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு திரும்ப வரும்போது என்னைச் சாப்பிட்டுக் கொள் என்றான். பிரம்ம ராட்சசன் அவன் திரும்பி வருவான் என்று நம்பவில்லை. அதற்கு நம்பாடுவான் நான் பாணர் வகுப்பைச் சேர்ந்த பெருமாள் அழகிய நம்பியின் பரம பக்தன். பொய் சொல்லமாட்டேன். இது சத்தியம். என்னை நம்பு என்றான். பிரம்ம ராட்சசன் உன் சத்தியத்தை எப்படி நம்புவது என்று கேட்டது. அதற்கு நம்பாடுவான் பதினேழு விதமான சத்தியங்களைச் சொல்லி என்னை விரதத்தை முடிக்க விடு என்று ராட்சசனிடம் மன்றாடுகிறான். ஆனால் ராட்சசன் அவனை விடுவதாக இல்லை. நம்பாடுவான் பதினெட்டாவது சத்தியமாக “நான் திரும்ப வரவில்லை என்றால் திருமாலையும் மற்ற தேவதைகளைச் சமமாக நினைத்து வணங்குபவர்களுக்கு என்ன பாவம் கிடைக்குமோ அது எனக்குக் கிடைக்கட்டும்” என்று சத்தியம் செய்ய அவனது விஷ்ணு பக்தியைக் கண்டு ராட்சசன் அவனை அனுப்பி வைக்கிறான். நம்பாடுவான் மகிழ்ச்சியுடன் திருக்குறுங்குடி அழகிய நம்பியின் கோயிலுக்கு முன் இனிமையான பாடல்களைப் பாடி தன் விரதத்தை முடித்துக்கொண்டான். ராட்சசனைத் தேடித் வேகமாக நடக்க ஆரம்பித்தான். எதிரே ஒரு கிழவர் நம்பாடுவானிடம் “எங்கே இவ்வளவு வேகமாகச் செல்கிறாய்?” என்று கேட்க அதற்கு நம்பாடுவான் “காட்டுக்குள் செல்கிறேன்” என்றான். அந்தக் கிழவர் “இந்த வழியில் ராட்சசன் இருக்கிறான் வேறு வழியில் செல்” என்றார். நம்பாடுவான் கிழவரிடம் நடந்த விஷயங்களைச் சொன்னான். எல்லாவற்றையும் கேட்ட கிழவர் ”ஒரு நல்லவனிடம் சத்தியம் செய்திருந்தால் அதை நிறைவேற்றலாம். ஆனால் நீ ஒரு கொடூர கெட்ட ராட்சசனிடம் செய்த சத்தியத்தைக் காப்பாற்ற அவசியம் இல்லை” என்று சொல்ல அதற்கு நம்பாடுவான் “என் உயிரே போனாலும் நான் சத்தியம் தவற மாட்டேன் அது ராட்சசனாக இருந்தாலும்” என்றான். கிழவர் நம்பாடுவானின் உறுதியைக் கண்டு அவனுக்குத் திருக்குறுங்குடி அழகிய நம்பியாகக் காட்சிகொடுத்து ”எல்லாம் நல்லவையாகவே நடக்கும்” என்று அருள்புரிந்து மறைந்தார். நம்பாடுவான் ராட்சசனிடம் சென்றான். என்னைச் சாப்பிடு என்று கூற ராட்சசன் மெதுவாக இவனிடம் பேச்சுக் கொடுக்கிறது. அப்போது எப்படி சாபத்தால் இந்த மாதிரி பிரம்ம ராட்சசனானேன் என்ற தன் கதையைச் சொல்லிவிட்டு, உனக்கு உயிர்ப் பிச்சை கொடுக்கிறேன் எனக்கு நீ கோவிலின் முன் பாடிய பாடலின் பலனைக் கொடு என்று கேட்க அதற்கு நம்பாடுவான் எனக்கு உயிர்மீது ஆசை இல்லை, என்னைக் கொன்று தின்றுவிடு ஆனால் பாடலின் பலனைக் கொடுக்கமாட்டேன் என்றான். ராட்சசன் விடவில்லை முழு பாடலின் பலனைக் கொடுக்க வேண்டாம், அதில் கொஞ்சமாவது கொடு என்று கேட்டது. நம்பாடுவான் முடியாது என்று மீண்டும் மறுத்தான். இன்று கடைசியாகப் பாடிய பாட்டின் பலனையாவது எனக்குத் தர வேண்டும் என்று நம்பாடுவான் காலில் விழுந்தது. நம்பாடுவான் சரி என்று பலனைக் கொடுக்கப் பிரம்ம ராட்சசன் பாவங்கள் எல்லாம் தொலைந்து, சாபம் தீர்ந்து மோட்சம் பெற்றான். நம்பாடுவான் போல நான் யாருக்காவது கொடிய வினையைத் தீர்த்து மோட்சம் கொடுத்தேனா ? இல்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன் என்றாள் திருக்கோளூர் பெண் பிள்ளை.


34. இடைகழியே கண்டேனோ

முதலாழ்வார்களைப் போலே

முதல் ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஒரு நாள் வெவ்வேறு இடங்களிலிருந்து, தனித்தனியே திருக்கோவலூர் என்ற திவ்ய தேசத்துக்கு வந்தார்கள். அன்று காற்றுடன் கூடிய நல்ல மழை. மாலைப் பொழுது முடிந்து நன்கு இருட்டிவிட்டது. மின்னலும் இடியுமாக இருக்க. மழைக்கு ஒதுங்க நினைத்த பொய்கையாழ்வார் மிருகண்ட முனிவர் ஆசிரமத்தில் உள்ள இடைகழியில் ஒதுங்கினார். (இடைகழி – ரேழி என்றும் சொல்லுவர். வீட்டின் வாசலுக்கும், உள்ளுக்கும் நடுவில் உள்ள இடம்).

பொய்கை ஆழ்வார் அந்த இடைகழியில் சற்று ஓய்வெடுக்க நினைத்தார். படுத்துக் கொண்டார். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே பூதத்தாழ்வார் வந்தார். கதவைத் தட்டிவிட்டு வெளியே கடும் மழை பொய்கிறது. உள்ளே வரலாமா என்றார். உள்ளே இருந்த பொய்கை ஆழ்வார் இது குறுகலான இடைகழி இங்கே ஒருவர் படுக்கலாம் இருவர் இருக்கலாம். நாம் இருவரும் சேர்ந்து அமரலாம், வாருங்கள் என்று உள்ளே அழைத்து அவருக்கு இடம் கொடுத்தார். இருவரும் ஒருவருக்கொருவர் தண்டனிட்டு, பகவத் குணானுபவம் செய்து கொண்டு வீற்றிருந்தனர். அப்போது பேயாழ்வார் அங்கு வந்து தங்க இடம் கேட்க, இவ்விடம் ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் தண்டனிட்டு, மூவரும் அவ்விடை கழியிலே நின்று கொண்டு எம்பெருமானுடைய குணங்களை ஒருவருக்கொருவர் சொல்லியும், கேட்டும் மகிழ்ந்திருந்தனர். ஞானிகளான இவர்களோடு நெருக்கத்தை விரும்பிய எம்பெருமான் அங்கு வந்து இவர்களை நெருக்கத் துவங்கினார். முதலாழ்வார்கள் மூவரும், நெருக்கத்தின் காரணம், திருமாலே என்று உணர்ந்தனர். இறைவனைக் கண்ட காட்சியில், உள்ளம் உருகி அவனுள்ளமும் கனியும் வண்ணம் பாசுரங்களைப் பாடினார்கள். திருக்கோளூர் முதலாழ்வார்கள் போல், அவனருளால் அறியாமை எனும் இருள்

நீங்கி அவனைக் காணும் பாக்கியத்தைப் பெற்றேனா என்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

35. இருமன்னர் பெற்றேனோ

வால்மீகரைப் போலே

லவ குச பிறப்பை அழகாக அந்தவரியில் கூறுவதாக உள்ளது! மக்களுக்கு உரிய நீதியே பகவானே மன்னரானாலும் பொருந்தும் என்ற கருத்தை நிலைநாட்ட ஸ்ரீராமர் ஒரு துணி வெளுப்பவரின் வாக்கால் உந்தப்பட்டு அப்போது கர்ப்பிணியாக சீதையைக் காட்டிற்கு அனுப்பினார். சீதாபிராட்டி வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் தங்கி இருந்து லவன் என்ற மகனைப் பெற்றாள். ஆசிரமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களைப் போலவே சீதையும் ஆசிரமப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஒருநாள் வால்மீகி முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தநேரத்தில் சீதை தண்ணீர் கொண்டு வரச் சென்றாள். குழந்தை லவனையும் சீதை தன்னுடன் எடுத்துச் சென்றாள். வால்மீகி தியானத்திலிருந்து விழித்து எழுந்தபொழுது குழந்தையைக் காணாது திடுக்கிட்டார். ஆசிரமவாசிகளும் துணுக்குற்றனர். சீதை திரும்புவதற்குள் வால்மீகி, தன்னுடைய தவத்தின் ஆற்றலால், ஒரு தர்ப்பைத் துண்டை லவனைப் போன்ற ஒரு குழந்தையாகச் செய்தார். சீதை ஆசிரமம் திரும்பினாள் அவள் கையில் குழந்தை லவன் இருந்தான் ஆனால் அவனைப் போன்ற மற்றொரு குழந்தை இருந்ததைக் கண்டாள். அவளிடம் நடந்ததை வால்மீகி முனிவர் விளக்கியுரைத்தார். சீதையின் வேண்டுகோளின் படி இரு குழந்தைகளையும் ஒருங்கே வளர ஏற்பாடு செய்தார். 'குசம்’ என்ற சொல் தர்ப்பைப் புல்லைக் குறிக்கும் தர்ப்பைப் புல்லிலிருந்து தோன்றிய குழந்தைக்கு 'குசன்’ என்று பெயரிட்டார் வால்மீகி. லவனும் குசனும் ஒருதாய் மக்களாகவே ஆசிரமத்தில் வளர்ந்தனர். வசிஷ்டர் ஆசிரமத்தில் ராமனும் லட்சுமணனும் சகல கலைகளையும் கற்றது போல வால்மீகியின் ஆசிரமத்தில் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த லவனும் குசனும் ராமரின் அசுவமேதக் குதிரையை அடக்கிப் பிடித்தனர். பின்னர் ராமரின் அசுவமேத வேள்விச் சாலையிலேயே ராம கதையைப் பாடி அரங்கேற்றினர் என்பது ராமாயண உத்தர காண்டம் உரைக்கும் செய்தியாகும். இருமன்னர் பெற்றேனோ வால்மீகரைப் போலே என்று இதனைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை குறிப்பிட்டு ஸ்ரீ ராமாநுஜரிடம் கேட்கிறாள்.


36. இருமாலை ஈந்தேனோ

தொண்டரடிப் பொடியார் போலே

சோழ நாட்டில் பூதங்குடி என்ற தலத்திற்கு அருகில் உள்ள மண்டங்குடி என்ற ஊரில் அவதரித்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். பெற்றோர் அவருக்கு விப்ரநாராயணர் என்று பெயர் சூட்டினர். விப்ரநாராயணர் திருவரங்கப் பெருமாளிடம் தனி ஈடுபாடு கொண்டார். அங்கு தங்கி பெரியாழ்வாரைப் போல் மலர் மாலை சமர்ப்பிக்கும் தொண்டு செய்து வந்தார். விப்ர நாராயணரின் நந்தவனத்திற்கு வந்த தேவதேவி என்ற நடனமாது அவரிடம் மையல் கொண்டாள். பெருமுயற்சிக்குப் பிறகு தேவதேவி விப்ர நாராயணரை மையலில் சிக்க வைத்தாள். பிராட்டியின் வேண்டுகோளின்படி, உரிய நேரத்தில் நிகழ்த்திய திருவிளையாடல் வழியே பெருமாள் விப்ரநாராயணரை மீண்டும் தன்பால் ஈர்த்தார். விப்ர நாராயணர் மாதர் மையலால் மாதவனை மறந்த குற்றத்தை உணர்ந்து வருந்தினார். அக்குற்றத்திற்குப் பரிகாரம் என்னவென்று சான்றோர்களிடம் வினவினார் விப்ரநாராயணர். இவ்விடத்தில் ஶ்ரீபாத தீர்த்த மகிமை வெளிப்படுகிறது. சான்றோர்கள் திருமாலடியார்களின் பாதங்கழுவிய புனித நீரே அவருக்கு உயர்வளிக்கும் என்றனர். அவ்வாறே செய்த விப்ரநாராயணர் அடியார்களின் பாத (அடி) சேவையால் தொண்டரடிப் பொடியாழ்வாராக உயர்ந்தார்

இரு(பா)மாலை திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களை இயற்றினார். அரங்கனை, ‘அச்சுதா! அமரர் ஏறே!’ என்று அழைத்து 'இச்சுவையை அறிந்த அவர் இந்திரலோகம் ஆளும் அச்சுவையையும் வேண்டேன்’ என்றார் தொண்டரடிப் பொடியாழ்வார். இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப் பொடியார் போலே என்று கூறுமிடத்து தொண்டரடிப் பொடியாழ்வாரின் மலர்மாலைத் தொண்டையும் நினைவு கூர்ந்தார் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. அவர் பெருமாளுக்குப் பூமாலை, பாமாலை என்ற இரண்டு வகையான மாலைகளை ஈந்தார். மற்றொன்று பூமாலையிலும் திருத்துழாய் (துளசி) மாலை மற்ற மலர் மாலைகள் என்ற இருண்டு வகையான மாலைகளைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார்.


37. அவன் உரைக்கப் பெற்றேனோ

திருக்கச்சியார் போலே

பூவிருந்தவல்லியில், 1009 ஆம் ஆண்டு பிறந்த திருக்கச்சி நம்பிகள் வணிகம் செய்யும் குலத்தில் பிறந்தவர், இயற்பெயர் கஜேந்திரதாசர். அவரது சகோதரர்கள் மூவரும் பொருளீட்டுவதில் விருப்பத்துடன் இருப்பினும், கஜேந்திரதாசர் காஞ்சியில் உறையும் வரதராஜப் பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கரியம் செய்வதிலேயே தன் வாழ்வினை கழித்தார். தேவப் பெருமாளுக்குத் திருவாலவட்டம் வீசும் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும் அதே சமயம் நேரடியாகத் தேவப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடும் அளவிற்குப் பெருமாள் மற்றும் தாயாரின் அருளையும் நம்பிக்கையையும் பெற்றவர். இராமானுஜருக்கு

ஏற்பட்ட சந்தேகத்தைத் திருக்கச்சி நம்பிகளிடம் கூற அவரும் அதை தேவப்

பெருமாளிடம் எடுத்துரைக்க, பேரருளானும் மனமுவந்து ஆறு வார்த்தைகளை

அருளிச்செய்தார். அவை

1. நாமே உயர்ந்த தத்துவம் (நாராயணனே பரம் பொருள்).

2. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு என்பது சித்தாந்தம்.

3. சரணாகதியே மோட்சத்திற்கான சிறந்த வழி.

4. அந்திம காலத்தில் ஸ்ம்ருதி வேண்டியதில்லை. முழுமையாகச் சரணமடைந்தவன் தன் இறுதி காலத்தில், தன் நேரம் நெருங்கும் வேளையில், நாராயணனை நினைத்தல்வேண்டுமென்கிற நிர்பந்தமில்லை. அவ்வாத்மாவுக்கு மோக்ஷம் நிச்சயம்.

5. சரீர முடிவில் மோட்சமுண்டு. சரணடைந்த பிறவியின் முடிவில் மோட்சமுண்டு, மரணமானால் வைகுந்தம் ப்ராப்தமாகும்.

பாவங்கள் கழியும் வரை காத்திருக்கும் அவசியம் ஆத்மாவிற்கு இல்லை.

6. பெரிய நம்பிகளையே குருவாகக் கொள்வது.

இராமானுஜரின் எண்ணத்திற்கு விடையாக அமைந்ததே இந்த அருட்செயல்.

இந்த ஆறு வார்த்தைகளை தாமே குரு போல இருந்து விளக்கினார்

திருக்கச்சி நம்பிகள். இவ்வாறு இராமானுஜர் என்ற மகானை உருவாக்கிக் கொடுத்ததில் எல்லாமாக இருந்தவர் திருக்கச்சி நம்பிகள். திருக்கோளூர் பெண் பிள்ளை திருக்கச்சி நம்பிகள் போல் பெருமாளுடன் உரையாடும்

அருளைப் பெற்றேனோ, என்று வினவுகிறார்.


38. அவன் மேனி ஆனேனோ

திருப்பாணரைப் போலே

திருப்பாணாழ்வாரை பாணர் குலத்தைச் சேர்ந்த தம்பதிகள் காவேரிக் கரையில் ஒரு கழனியில் கண்டெடுத்து வளர்த்தனர். அவர்களிடம் யாழ் பாடலைக் கற்றுத் அவர் தேர்ச்சி பெற்றார். திருவரங்கத்துப் பெருமானின் மீது அன்பு கொண்டு விடிகாலையில் எழுந்து, ஸ்ரீரங்கத்துக்குள்ளே தன் பாதம் பதிக்கவும் அஞ்சி அரங்கனை நினைத்து காவிரிக் கரையிலேயே நின்று இருகரம் கூப்பி துதித்துக் கொண்டிருந்தார். அப்போது, திருக்கோயிலின் அர்ச்சகர் லோக சாரங்க முனி அரங்கனின் திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு போக காவிரித்துறைக்கு வந்தார். வழியில் நின்றிருந்த திருப்பாணரை விலகுமாறு பல முறை குரல் கொடுத்தார். அவர் அரங்கனை அகக்கண்ணால் கண்டு மெய்மறந்திருந்தார். அர்ச்சகர் ஒரு சிறு கல் எடுத்து அவர் மீது இட்டார். திருப்பாணரின் நெற்றியில் அந்தக் கல் தாக்கி குருதி கொட்டியது. பாணர் கண் திறந்து பார்த்தார். திருவரங்கனுக்கு திருமஞ்சன நீர் எடுத்து செல்லும் வழியில் தடையாக இருந்துவிட்டேனே என அர்ச்சகரிடம் மனம் வருந்தினார். அர்ச்சகரோ, பாணனின் தலையில் இரத்தம் கொட்டியதைப் பார்த்து மிகவும் துயரமுற்றார். அன்றைய இரவு அர்ச்சகரின் கனவில் தோன்றிய அரங்கநாதன் அடுத்த நாள் காவிரிக் கரைக்கு சென்று திருப்பாணரை உன் தோள்மீது சுமந்து என் ஆலயம் அழைத்து வா என்று ஆணையிட்டார். பொழுது புலர்ந்தது. காவிரிக் கரைக்கு வந்து திருப்பாணரை தன் தோள்மீது அமர்ந்து கொள்ளுமாறு அர்ச்சகர் அழைத்தார். திருப்பாணரோ அர்ச்சகராகிய உமது தோளில் நான் அமரமாட்டேன் என மறுக்கிறார். இது திருவரங்கனின் ஆணை என்று கூறுகிறார். உடனே மறுப்பு சொல்லாமல் அர்ச்சகர் தோளில் அமர்ந்து கொண்டார். இதற்கு காரணம் திருவரங்கனின் மீது திருப்பாணர் கொண்ட அளவுக்கதிகமான அன்பாகும். லோக சாரங்க முனியின் தோளில் அமர்ந்து கொண்டு கோயிலுக்குள் நுழைந்தார். இதனால் திருப்பாணர் முனிவாகனர் எனப் பெயர் பெற்றார். அரங்கனின் கருவறையில் இறக்கிவிட்டு லோக சாரங்கர் மறைவாக நின்றார். திருப்பாணர், திருவரங்கனைக் கண்ட உடன் பாதாதிகேசமாக தரிசித்தார், அரங்கனும் தன் திவ்ய மங்கள வடிவைக் காட்டினார். திருவடிக்கமலம், பீதாம்பரம், திருவயிறு, திருஉதரபந்தம் (அரைஞாண்கயிறு) திருமார்பு, திருக்கழுத்து, திருச்செவ்வாய், வாடாத திருக்கண்கள், திருமேனி ஆகியவற்றை திருப்பாணாழ்வார் கண்டு பாடிய பத்து பாசுரமே “அமலனாதி பிரான்". “அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று தன் விருப்பத்தை வெளியிட்டார். அவரை பெருமாள் உடனே அங்கீகரிக்க, அவரும் அனைவரும் காண அரங்கனின் திருவடிகளில் கலந்து மறைந்தார். அவன் மேனியானார் திருப்பாணார். அதுபோல இறைவனுடன் சேரும் நற்பேற்றை நான் பெறவில்லையே சுவாமி என மனம் வாட்டமடைந்தாள் திருக்கோளுர் பெண் பிள்ளை.


39. அனுப்பி வையும் என்றேனோ

வசிட்டரைப் போலே

தசரதன் அரசவைக்கு வந்த விஸ்வாமித்திரர், தன் வேள்வியைக் காத்திட இராமனைத் தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டினார். இராமன் சிறுவன் என்பதால், அவனைக் காட்டிற்கு அனுப்பத் தயங்கினார் தசரதன். இராமனின் உண்மையான பராக்கிரமத்தை ‘நான் அறிவேன்’ (அஹம் வேத்மி) என்று கூறினார் விஸ்வாமித்திரர். மஹா தேஜஸ்வியான வசிஷ்டரும் அவரைப் போன்ற முனிவர்களும் இராமனை அறிவார்கள் என்று விஸ்வாமித்திரர் மேலும் விளக்கினார். அத்துடன், வசிஷ்டரும் ஒரு முனிவர் என்பதால், தனக்குச் சாதகமாகப் பேசுவார் என்று எண்ணலாகாது என்றும் கூறிய விஸ்வாமித்திரர், முனிவர்கள் பொய்யுரைத்தால், அவர்களுடைய தவத்தின் ஆற்றல் குறைந்துவிடும் என்ற உண்மையையும் எடுத்துக் கூறினார். இறுதியாக வசிஷ்டர் இராமனையும் லட்சுமணனையும் முனிவருடன் அனுப்பி வைக்க அறிவுறுத்தினார். இராமன் விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்களுடன் செல்வதால் பல நன்மைகளையும் அடைவான் என்றார். சீதா கல்யாணம் என்ற நன்மையும் அவற்றுள் ஒன்று. அனுப்பி வையும் என்றேனோ

வசிட்டரைப் போலே என்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.


40. அடிவாங்கினேனோ

கொங்குப் பிராட்டியைப் போலே

கொங்கில் பிராட்டியும் அவளுடைய கணவன் கொங்கிலாச்சானும் கர்நாடக மாநிலத்தில் கொல்லேகாலில் வாழ்ந்தனர். அங்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அங்கிருந்து பஞ்சம்பிழைக்க அரங்கம் வந்தனர். “எங்கும் திரிந்து அரங்கம் வந்து சேர்” என்பது பழமொழி. அதுபோல் அரங்கம் வந்து வாழ்ந்த சமயம் ராமானுஜர் அரங்கன் கோயில் பணிகளையும் திருத்திப் பணிகொண்டு வாழ்ந்து வந்தார். ஸ்ரீரங்கத்தின் உடைமைகளுக்கு உடையவர் இவரே என்பதால் உடையவர் என்று திருநாமம் இருந்தது. அவர் பிறந்த ஸ்ரீபெரும்புதூரில் இளையாழ்வார் என்றும், காஞ்சிபுரத்தில் இராமானுசர் என்றும், திருப்பதியில் பாஷ்யகாரர் என்றும் அழைக்கப்பட்ட ராமானுஜர் திருவரங்கத்தில் பிட்சை எடுக்க வேண்டி வீதிகளில் சென்றார். அப்பொழுது கொங்கில் பிராட்டி ராமானுஜரை வீழ்ந்து வணங்கி தனக்கு உபதேசிக்கும்படி வேண்டினாள். அவரும் ஓம் நமோ நாராயண நாமம் கூறி ஆசி வழங்கினார். பிறகு சில காலம் சென்றதும் கொங்கில் பிராட்டியின் சொந்த ஊரில் மழை பெய்து வளம் பெற்றது. அவள் மீண்டும் தன் சொந்த ஊருக்குத் திரும்பும் முன் ராமானுஜர் அவளுக்கு உபதேசித்த மந்திரத்தை மறந்துவிட்டாள். மீண்டும் அவரை ஸ்ரீரங்கத்தின் மடத்தில் சென்று சந்தித்துத் தன் மறதியைக் கூறி வருந்தினாள். ராமானுஜரும் அவளுக்குத் திரும்ப மந்திர உபதேசம் பண்ணினார். அவள் மந்திரம் பெற்றுக் கொண்டதுடன் ராமானுஜரின் அடிகளைத் (பாதுகைகளை) தருமாறு வேண்டினாள். அவள் விரும்பியபடி தன் காலடிகளையும் கொடுத்தார். அன்றிலிருந்து பாதுகை அணிவதை நிறுத்திவிட்டார். அதைப் பெற்ற கொங்கில் பிராட்டி தான் ஊர் திரும்பியதிலிருந்து அவள் சாப்பிடும் அன்னத்தை இராமானுசரின் பாதுகைக்கு சமர்ப்பித்து வழிபட்டு பின்பு அருந்தினாள். மீண்டும் எப்போது இராமானுசரைச் சந்திப்போமோ என மனவருத்தத்துடனும் ஏக்கத்துடனும் தன் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஸ்ரீரங்கத்தில் கிருமி கண்ட சோழனின் துன்புறுத்தலால் தன் சீடர்களுடன் கொங்கு நாட்டுக்கு வந்தார் இராமானுசர். கொங்கில் பிராட்டியின் இல்லத்தில் உணவருந்தி இவளுக்குக் காட்சி கொடுத்தார். உண்மையான அன்பும் பக்தியும் கொண்டு வழிபடுவோருக்கு இறைவன் காட்சி கொடுப்பார் என்பது இவளின் வாழ்வில் நடந்த ஒரு உண்மையான நிகழ்வு. இன்றும் எண் 55, மங்கம்மா நகர், ஸ்ரீரங்கம் எனும் முகவரியில் கொங்கில் ஆச்சான் மாளிகை உள்ளது. அங்கு இவர்களின் வம்சத்தார் இராமானுசரின் பாதுகையைப் பாதுகாத்து வருகின்றனர். இராமானுசரின் பாதுகை (அடி) பெற்று வழிபட்ட கொங்கில் பிராட்டியைப் போல, நான் சிறப்புறவில்லையே என வருத்தமடைகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

41. மண் பூவை இட்டேனோ

குருவ நம்பியைப் போலே

திருப்பதியில் குரவபுரம் என்னும் ஊரில் பீமன் எனும் குரவ நம்பி மண்பாண்டங்கள் செய்து பிழைத்து வந்தார். திருப்பதி ஏழுமலையான் மீது மாறாத அன்பும், பக்தியும் கொண்டு, தினமும் இறைவனுக்கு மண்பூவைச் சூட்டுவார். இவர் வாழ்ந்த காலத்திலே தொண்டைமான் சக்கரவர்த்தியும் வாழ்ந்தார். அவர் ஒவ்வொரு நாளும் மலையப்பனுக்குச் சொர்ணப் பூவைச் சமர்ப்பித்து வணங்குவார். மறுநாள் இறைவனைச் சேவிக்க வரும்போது, இறைவன் மீது ஒரு மண்பூவைப் பார்ப்பார். தொண்டைமான் இறைவனை வழிபட்ட பின்னர், மண்பூவைச் சூட்டியது யார் என அர்ச்சகரிடம் வினவினார்.

அர்ச்சகர் விவரம் தெரியாமல் குழம்பினார். யார் சூட்டிய மண் பூ இதுவென்று யோசித்துக்கொண்டேயிருந்த தொண்டைமானின் கனவில் வந்த பெருமாள், குரவ நம்பி செய்த அன்பு மலர் என்ற செய்தியைக் கூறி மறைந்தார்.

மறுநாள் தொண்டைமான் குரவபுரம் சென்று பீமனின் வீட்டை அடைந்து, அன்று மாலை வரை பீமனைக் கண்காணித்தவாறு மறைந்திருந்தார். தினமும் தன் தொழிலைப் பக்தியுடன் முடித்து கடைசியில் மண்பாண்டச் சக்கரத்தில் ஒட்டி இருந்த மண்ணைச் சேர்த்தெடுத்து பூவாகச் செய்து, தன் வீட்டிலிருந்த ஏழுமலையானின் திருவுருவப் படத்தின் மீது சூட்டினான். இதைப் பார்த்த சக்கரவர்த்தி, வெளியேவந்து குரவ நம்பியின் காலில் விழுந்து வணங்கினார். குரவ நம்பியோ தன் பக்தி அரசனுக்குத் தெரிந்துவிட்டதே என வருந்தினான். இனி எல்லோரும் நம்மைக் கொண்டாடுவார்களே. அப்படிக் கொண்டாடினால் எனக்குக் கர்வம் வந்துவிடுமே எனச் சிந்தித்தவாறே கீழே விழுந்து தன் உயிரை விட்டுவிட்டான் குரவ நம்பி. குரவ நம்பியைப் போல என் அன்பால் ஒரு சிறு மலரையும் இறைவனுக்குச் சூட்டவில்லையே சுவாமி என வருந்துகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.


42. மூலம் என்று அழைத்தேனோ

கஜராசனைப் போலே

இந்திரத்யும்னன் என்ற பாண்டிய நாட்டு அரசன் ஒரு சாபத்தின் விளைவால் கஜேந்திரன் என்ற யானையாகப் பிறந்தான். யானையாகப் பிறந்தாலும் முற்பிறவியில் இருந்து தொடர்ந்து வந்த திருமாலிடம் இருந்த பக்தி குறையவில்லை. தினமும் மலை அடிவாரத்தில் இருக்கும் தாமரைக் குளத்தில் இறங்கி அங்கே அழகாகப் பூத்திருக்கும் தாமரை மலர்களைப் பறித்துத் திருமாலுக்கு அர்ப்பணித்து வந்தான். ஒரு நாள் பூப்பறிப்பதற்காகத் தாமரைக்குளத்தில் இறங்கியது. அப்போது யானையின் காலை முதலை கவ்வியது. அந்த முதலையும் முற்பிறவியில் ஹூ ஹூ என்கிற கந்தர்வன், ஒரு சாபத்தால் முதலையாகப் பிறந்திருந்தான். யானை தன் பலத்தை எல்லாம் உபயோகித்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தது. முடியவில்லை. கூட இருந்த யானைகள் எல்லாம் கஜேந்திரனைக் கரைக்கு இழுத்தும் பயன் இல்லை. யானைக்குத் தரையில் பலம், முதலைக்குத் தண்ணீரில் பலம். யானைக்கும் முதலைக்கும் இழுபறி நீடித்தது. கூட இருந்த யானைகள் ஒன்றும் செய்ய முடியாமல் வருத்தத்துடன் சென்றன.

கஜேந்திரன் தன்னை தானே காத்துக்கொள்ள முடியும் என்ற தைரியத்தில் பல ஆண்டுகள் போராடியது. இறுதியில் சோர்வு ஏற்பட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று தோன்றியது. ”ஆதிமூலமே! என்னைக் காக்க வா!” என்று அலறியது. பெருமாள் விரைந்து வந்து, ஆகாசத்திலிருந்து யானையைப் பார்த்தார். சக்கரத்தை ஏவினார். முதலை வாயைப் பிளந்தார், யானையை விடுவித்தார். யானைக்கு அப்போதும் மகிழ்ச்சி ஏற்படவில்லை. யானை தன் துதிக்கையில் வைத்திருந்த அந்த ஒற்றை தாமரை மலரைப் பெருமாளின் திருவடியில் சமர்ப்பித்தது, வணங்கியபின் தான் அதற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. சுவாமி! நீங்களே சொல்லுங்கள் ஒரு விலங்கான யானைக்கு இருந்த பக்தி கூட என்னிடம் இல்லையே அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன் என்றாள் அந்தப் பெண்.


43. பூசக் கொடுத்தேனோ

கூனியைப் போலே

அக்ரூரர் கண்ணனையும் பலராமரையும் கம்சன் சொன்னதன் பேரில் தேரில் அழைத்துக் கொண்டு மதுரா நகரத்தில் நுழைந்தவுடன், மதுரா நகரின் அழகில் மயங்கி விடுகிறார் கண்ணன். அவர் தேரிலிருந்து இறங்கி சுற்றி பார்த்துவிட்டு வருவதாக கூறுகிறார். மதுராவில் வாழ்ந்தவள் திருவக்ரா. கம்சனுக்கு வாசமிகு சந்தனம் அரைத்து அவனுக்குப் பூசிவிடுவாள். அவள், கூன்விழுந்த உடலைக் கொண்டவள். கூனி திருவக்ரா, கிண்ணங்களில் மணமிக்கச் சந்தனத்தை நிரப்பி அரண்மனைக்கு வழக்கம்போல எடுத்துச் சென்றாள். வழியில் கூனியைக் கண்ட கிருஷ்ண பகவான், சுந்தரி என்று அழைத்தார். இதைக் கேட்டதும் மகிழ்ந்து போனாள் திருவக்ரா. ஊரில் அனைவரும் அவளைக் கூனி என்று அழைத்த துயரம் எல்லாம் மறைய, தன் கையால் சந்தனத்தை எடுத்து கண்ணனின் கால், கை, முகம் எங்கும் சந்தனத்தைப் பூசிவிட்டாள். அரசனுக்குப் பூசக் கொண்டுவந்த சந்தனத்தை எனக்குப் பூசிவிட்டாயே என்று உடலும் மனமும் குளிர்ந்து சொன்ன கிருஷ்ணன், கூனியின் கால் கட்டை விரலைத் தன் காலால் அழுத்தி மிதித்து அவளது மோவாயைத் தொட்டு நிமிர்த்தினார். கூனி திருவக்ரா, அழகான இளம்பெண்ணாகத் தோற்றம் எடுத்தாள். கிருஷ்ணர் அவளைப் பார்த்தவுடன் அழைத்தது போலவே எழில்கோலம் கொண்ட சுந்தரி ஆனாள் கூனி. கிருஷ்ண பகவான் பூமியில் பிறந்து வளர்ந்து நடமாடிய காலத்தில் தான் வாழவில்லையே என்றும் என் கையால் சந்தனம் பூசும் நற்பேறு கிடைக்கவில்லையே என்று அரற்றுகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.


44. பூவைக் கொடுத்தேனோ

மாலாகாரரைப் போலே

மதுராவுக்குள் வந்த பிறகு வண்ணான் ஒருவரிடம் இருந்து அழகிய வஸ்த்ரம் வாங்கிக்கொண்டு, திருவக்ராவிடம் சந்தனமும் பூசிக் கொண்டனர் கிருஷ்ண பலராமர்கள். அழகிய புதிய மாலைகளை அணிய விரும்பி, மதுரா நகரின் கடைவீதியில் உள்ள மாலாகாரரின் குடிலுக்கு சென்றனர். மாலாகாரர் என்றார் பூமாலைகள் தொடுத்து விற்பவர் என்று அர்த்தம். பாகவதம், அம்மாலாகாரரின் பெயர் சுதாமா என்று கூறுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனையும் பலராமனையும் கண்ட சுதாமா அவர்களை அடையாளம் கண்டு கொண்டார். அவர்களின் பாதங்களில் விழுந்து வணங்கிய சுதாமா, அவர்கள் விரும்பியது போல் சிறந்த, அழகான, வாசனை மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகள் இரண்டை எடுத்து அவர்களுக்கு கொடுத்தார். மாலையை ஸ்ரீ கிருஷ்ணனிடமும் பலராமனிடமும் வழங்கும் முன், தன் முகத்தை ஒரு துணியால் மூடிக்கொண்டு கொடுத்தார். மாலையின் அழகில் மயங்கி, அதை தான் உபயோகிக்க எண்ணம் கொண்டால் அம்மாலை ஸ்ரீ கிருஷ்ணனை சென்று சேராமல் போய்விடும். மேலும், அதனால் தன் முகம் வாடினால் அது ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் வருத்தத்தை அளிக்கும். தனது சிறந்த படைப்பு, ஸ்ரீ கிருஷ்ணனுக்கே சமர்ப்பணம். எனவே, தனது முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு மாலைகளை கொடுத்தார். சுதாமாவின் இச்செயலை, அக்ரூரர் பாராட்டினார் என்கிறது கீதா பாஷ்யம். மாலாகாரர் போல், எதையும் எதிர்பார்க்காமல் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பு காட்டினேனா என்று வினவுகிறார் திருக்கோளூர் பெண்மணி.


45. வைத்த இடத்து இருந்தேனோ

பரதனைப் போலே

ஸ்ரீராமர் வனவாசம் மேற்கொண்ட பிறகு பரதன் வனத்தை நோக்கி அண்ணனை திரும்ப அழைத்து வர சென்றார். தன்னை அழைக்க வந்த பரதனிடம், தந்தையின் சொல்படி பதினான்கு ஆண்டு வனவாசம் முடித்துத்தான் அயோத்திக்குத் திரும்புவேன் என்று கூறி ராமன் மறுத்துவிட்டார். மனவருத்தமுற்ற பரதன் ராமனின் பாதுகைகளை வாங்கிவந்து சிம்மாசனத்தில் வைத்து அரசாண்டார். ராமனின் பாதுகைக்கே அவ்வளவு ஏற்றம். இதனைக் கருத்தில் கொண்டே ஸ்ரீநிகமாந்த மகாதேசிகர் பாதுகா சகஸ்ரம் இயற்றினார். விஷ்ணு சகஸ்ர நாமத்தினைவிட சக்தி வாய்ந்தது பாதுகாசகஸ்ரம் என்பர். ராமருடன் வந்து கைங்கரியம் செய்து வனவாசம் மேற்கொள்ளவில்லை என்றாலும், நந்தி கிராமத்திலே குடில் அமைத்துப் பாதுகையை வைத்த இடத்திலே இருந்து வணங்கித் தினமும் வழிபட்டு அரண்மனை வசதிகளைத் துறந்து வனத்தில் வாழ்வது போலத் துறவியாக வாழ்ந்தார் பரதர். ஸ்ரீராமரின் வருகையை நோக்கி பகவானுக்கு ஒரு தொண்டன் போல காத்திருந்தார். பரதனைப் போல நான் இறைவனின் மேன்மையை உணரவில்லையே எனத் தனது சி்ந்தையை நொந்தாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

46. வழி அடிமை செய்தேனோ

இலக்குமணனைப் போலே

கைகேயியின் சொற்படி ராமர் காட்டுக்குப் புறப்பட்ட போது ராமர் லக்ஷ்மணனை அயோத்தியில் ராஜ்யத்தைப் பார்த்துக்கொள் என்கிறார். ஆனால் லக்ஷ்மணன் அதைக் கேட்கவில்லை. பிடிவாதமாகச் சீதை, ராமர் கால்களில் விழுந்து உங்களுக்குத் தொண்டு புரிய உங்களுடன் வருவேன் என்று ராமருக்கு முன்னே புறப்படுகிறார். காட்டுப் பாதையில் முள், கூர்மையான கற்கள், விஷப் பூச்சிகளை அகற்றி பாதை அமைத்துக் கொடுக்க லக்ஷ்மணன் முன்னே செல்வார். காட்டில் சீதை, ராமருக்குப் பழம், கிழங்கு, தேன் முதலியவற்றைச் சேகரித்துப் பசிக்கும்போது உணவாக அளிப்பார். சுத்தமான தண்ணீரைக் கொண்டு வந்து தாகம் தணிப்பார். பல இடங்களிலும் நடப்பதால் பாதத்தைத் தாமரை இலைகளில் தண்ணீரை எடுத்து வந்து கழுவியும் மரவுரிகளைத் துவைத்து அதைச் சுத்தம் செய்தும், இரவு தூங்கும்போது கொடிய காட்டு விலங்குகள் வரலாம் என்று வில்லும் கையுமாக இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்துக் காவலாகவும் இருந்தார். ஒரு சமயம் இலை தழைகளால் ஆன குடிசை ஒன்றைக் கட்டினார். அதைப் பார்த்ததும் ராமர் மகிழ்ந்தார். தம்பியை இறுகக் தழுவிக்கொண்டார். நீ இருக்கும்போது எனக்குத் தந்தை இல்லாத குறையே இல்லை என்று ராமர் லக்ஷ்மணனைப் பார்த்துக் கூறினார். இப்படி ராமர் போகும் இடம் எல்லாம் தொண்டு செய்த லக்ஷ்மணன் போல் நான் எந்தத் தொண்டும் செய்யவில்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்” என்றாள்.


47. அக்கரைக்கே விட்டேனோ

குகப்பெருமானைப் போலே

ராமன் வனவாசத்திற்குப் புறப்பட்டுக் கங்கைக் கரையை அடைந்த செய்தியை அறிந்தான் குகன். தேனும் மீனும் எடுத்துச் சென்று ராமனைத் தரிசித்தான். சில மணித்துளிகளே ராமனுடன் பழகினான். அதற்குள் ராமனிடம் பேரன்பு கொண்டான். ராமனைப் பிரிய மனம் இல்லாமல் அன்றிரவு அவர்களுடன் தங்க அனுமதி கேட்டான். ராமனும் குகனது அன்பின் ஆழத்தை லக்ஷ்மனனுக்கும் சீதைக்கும் குறிப்பால் உணர்த்தினான். குகனிடம், ‘‘யாதினும் இனிய நண்ப! இருத்தி ஈண்டு எம்மொடு’’ என்றான். அன்று இரவு தர்ப்பைப் புல்லைப் பரப்பி பஞ்சணையைப் போலே ஒரு படுக்கையை ஏற்படுத்திக் கொடுத்து ராமனையும் சீதையையும்இரவு முழுவதும் கண்ணீர் வடித்தபடி, காவல் பணியில் ஈடுபட்ட லக்ஷ்மனனுடன் குகனும் கண்ணுறங்காது காவல் பணியில் ஈடுபட்டிருந்தான். “உனது உண்மையான அன்பால் எங்கள் நால்வரோடு நீயும் எங்களுடைய சகோதரன் ஆனாய். நீ என் சகோதரனே என நால்வரோடு ஐவரானோம்” என்று எந்தப் பேதமும் பார்க்காமல் கூறுகிறார். அக்கரையில் பரதன், ராமரைத் தரிசிக்க வருவதைக் கண்டு, போருக்கு வருவதாகக் கருதி, குகன் படைகளைத் திரட்டி சண்டைக்கு ஆயத்தமானார். பரதன் விளக்கிய பிறகுதான் சமாதானம் ஆனார் குகன். ராமனிடம் எல்லையில்லாத அன்பு வைத்த குகப்பெருமானைப் போலே, நான் ஒரு சிறு பக்தியும் இறைவனிடம் செலுத்தவில்லையே என்று ராமானுஜரிடத்தில் தன் வருத்தத்தைத் தெரிவித்தாள், திருக்கோளூர் பெண்பிள்ளை.


48. அரக்கனுடன் பொருதேனோ

பெரிய உடையாரைப் போலே

இங்கு “பெரிய உடையார்” என்று அழைக்கப்படுபவர், ஜடாயு. ஸ்ரீ இராமன், ஜடாயு மீது கொண்டுள்ள நன்மதிப்பும், தந்தைக்கு நிகராக ஜடாயுவைக் கண்டதுமே இதற்குக் காரணம். சீதாதேவி மற்றும் இலட்சுமணனுடன் அகத்தியரின் குடிலுக்குச் சென்று அகத்தியரிடம் ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டு பஞ்சவடி நோக்கிப் பயணத்தைத் தொடரும் பொழுது வழியில் ஜடாயுவைச் சந்தித்தனர். தன்னை யார் என்று வினவிய ஸ்ரீ இராமனிடம் ஜடாயு, தான் சூரியனின் தேரோட்டி அருணனின் புதல்வன், கழுகுகளுக்கெல்லாம் அரசன், சம்பாதியின் தம்பி, தசரதச் சக்ரவர்த்தியின் நண்பர்கள், இக் காட்டில் வசிப்பவன், நீங்கள் பஞ்சவடியில் வாழும் வரை உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் வசதிகளையும் செய்து தருகிறேன் என்னுடன் வாருங்கள் என்று கூறி, அவர்கள் குடில் அமைக்க அமைதியான, அழகான இடத்தையும் காட்டினார். சீதாப்பிராட்டியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராவணனின் தவறைச் சுட்டிக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜடாயு. இராவணன் கேட்காமல் போக, இராவணனுடன் ஜடாயு மோதுகிறார். இராவணனின் தேரை உடைத்து சுக்கு நூறாக்கி, அவனையும் தன் மொத்த பலம் கொண்டு தாக்குகிறார். இறுதியில் இராவணன் வாளுக்குத் தன் ஒரு பக்க இறக்கையை இழந்து, ஜடாயு தரையில் விழுகிறார். ஸ்ரீ இராமன் மற்றும் இலட்சுமணனின் வருகைக்காகக் காத்திருந்தவர், அவர்கள் வந்ததும் நடந்தவற்றைக் கூறி, இராவணன் சீதையைக் கொண்டு போன தென்திசையை அடையாளம் காட்டிவிட்டு, ஸ்ரீ இராமருக்கு மங்களாசாசனம் செய்துவிட்டு உயிர் விடுகிறார். தனது தந்தையின் ஸ்தானத்தைக் கொடுத்து, ஜடாயுவை மதித்துப் போற்றிய ராமர், தன் அம்பினால் ஏழு புண்ணிய நதிகளையும் வரவழைத்து, ஒரு புஷ்கரணியை ஏற்படுத்தினார். தன்

தந்தையாகவே ஜடாயுவை ஏற்று, தர்ப்பணம் முதலான ஈமக்கிரியைகளை புஷ்கரணியின் கரையிலேயே செய்தார். ஜடாயுவுக்கு மோக்க்ஷமும் கிடைத்தது. ஜடாயுவைப் போல் (பெரிய உடையார்) இராவணனுடன் போரிட்டு, பிராட்டிக்கும் பெருமாளுக்கும் உதவி புரிந்தேனா என்று வினவுகிறார் பெண் பிள்ளை.


49. இக்கரைக்கே சென்றேனோ

விபீடணரைப் போலே

ராவணன் தம்பி விபீஷணன் அறவழியில் சென்றவன். அரக்கர் குல ஒழுக்கத்திற்கு மாறுபட்டு நன்னெறியில் வாழ்ந்தவன். சீதையைக் கவர்ந்து வந்த செயலைக் கண்டித்தான். பிராட்டியை ராமனிடம் ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு ராவணனை வலியுறுத்தினான். ராமன், திருமாலே என்று தெளிவுபடக் கூறினான். திருமாலை எதிர்த்து அழிந்த இரணியனின் வரலாற்றை விபீஷணன் ராவணனுக்கு எடுத்துக் கூறினான். அவனுடைய அறிவுரைகளை ராவணன் ஏற்கவில்லை. அத்துடன் விபீஷணனைக் கடிந்தும் பேசினான். அதன்பிறகு, தான் இலங்கையில் இருப்பது அழகல்ல என்று தீர்மானித்த விபீஷணன் நான்கு ஆதரவாளர்களுடன் ராமனைச் சரண் அடைய இக்கரைக்கு வந்தான். ராமரிடம் தனது வரவை அறிவிக்கும்படி வானர வீரர்களிடம் வேண்டினான். விபீஷணனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வது குறித்த ஆலோசனையை நடத்தினார் ராமர். இறுதியில் அனுமன் ஆராய்ந்து உரைத்த கருத்தின்படி விபீஷணனை தன்னிடம் வரப் பணித்தார் ராமர். ராமரின் திருவடிகளில் விபீஷணன் விழுந்து வணங்கி, சரணாகதி (அடைக்கலம்) வேண்டினான். ராமர் விபீஷணனைத் தன்னுடைய ஆறாவது தம்பியாக ஏற்றருளினார். இலங்கையிலிருந்து புறப்பட்டு இக்கரைக்கு வந்து ராமனிடம் அடைக்கலம் புகுந்த விபீஷணனைப் போல் தான் பகவானிடம் சரணாகதி செய்யவில்லையே என்று ஏங்குகிறாள். ராமர் விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்த செயலை அபயப்பிரதானம் என்பர்.


50. இனியது ஒன்று வைத்தேனோ

சபரியைப் போலே

ராமாயண சபரி மதங்க முனிவரின் காலத்தில் காட்டில் வாழ்ந்து வந்தாள். வேடர்களில் தேன், அரக்கு போன்ற பொருட்களைச் சேகரித்து விற்கும் பிரிவினரைச் சபரர் என்பர். ராமாயண சபரியும் அதே தொழிலைத்தான் செய்து வந்தாள். அவளுக்கு எல்லோரையும் குடும்ப வாழ்வில் ஈடுபட விருப்பமில்லை. ஒருநாள் மதங்க முனிவர் ஆற்றில் நீராடிவிட்டு தமது ஆசிரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சபரி, தற்செயலாக அவரைக் கண்டாள். அன்று முதல் சபரிக்கு மதங்க முனிவரிடம் ஆழ்ந்த பக்தி மேலிட்டது. அவரைச் சந்தித்து, அவருக்கு ஏதாவது பணிவிடைகள் செய்ய வேண்டும் என்று விரும்பினாள். மதங்கர் அன்றாடம் ஆசிரமத்திலிருந்து ஆற்றங்கரைக்குச் செல்லும் பாதையில் இருந்த கற்கள் முதலியவற்றை அகற்றினாள். பாதையைச் சமப்படுத்தினாள். நீர் தெளித்து நடப்பதற்கு மென்மையான தடமாக மாற்றிவிட்டாள். அதுபோல், ஆசிரமத்திற்குத் தேவையான விறகுகளை வெட்டிவந்து சேர்த்தாள். யாகம் வளர்ப்பதற்கு உகந்த சமித்துகளைச் சேகரித்து வந்து ஆசிரம வளாகத்தில் போட்டாள் சபரி. இப்பணிவிடைகளை எவரும் அறியாதபடி, தொடர்ந்து செய்து வந்தாள். மதங்கரின் சீடர்களின் வேலைகளில் பெரும்பகுதியைச் சபரி செய்து வந்தாள். சீடர்கள் அது குறித்து முனிவரிடம் தெரிவிக்கவில்லை. யோகநெறியில் முக்தியடைய மதங்கர் முற்பட்டார். அதற்குரிய சமாதி நிலையில் அமர்ந்தார். அப்போது சபரி என்ற பக்தைக்கு அருள்செய்ய வேண்டிய கடமை எஞ்சியிருப்பதை மதங்கர் ஞானத்தால் உணர்ந்தார். மதங்கர் சபரியைத் தமது முதன்மை சிஷ்யையாக அங்கீகரித்து ஆசிகள் வழங்கினார். ராமர் வரும்வரை, தமது ஆசிரமத்தில் இருந்து தவமியற்ற அறிவுறுத்திய மதங்கர், ராம தரிசனம் பெற்ற பிறகு மோட்சத்திற்குச் செல்லலாம் என்றும் கூறினார். சபரி தனது குருநாதரின் கட்டளைப்படி தவவாழ்க்கை மேற்கொண்டு சிறந்த யோகினியாகத் திகழ்ந்தாள். யோகக்கலை பெண்களுக்கும், அடித்தளத்து மக்களுக்கும் உரியதாக இருந்தது என்பதை சபரியின் வரலாற்றால் அறியலாம்.ஒவ்வொரு நாளும் ராமனின் வருகையை எதிர்பார்த்திருந்த சபரி, கனிகளைப் பறித்து வருவாள். இனிய சுவையையுடைய கனிகளை மட்டும் ராமனுக்கு என்று தனியே எடுத்து வைப்பாள். மதங்கர் கூறியிருந்தபடி, ராமர் சபரியிருந்த மதங்காஸ்ரமத்திற்கு வந்தார். சபரியின் அன்பான உபசரிப்பை ஏற்றார். இனியது ஒன்று வைத்தேனோ சபரியைப் போலே! -என்று சபரியின் கனிந்த, கனி ஈந்த பக்தியைப் போற்றினார் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.

51. இங்கும் உண்டு என்றேனோ

பிரகலாதனைப் போலே

இரணியகசிபு பிரம்மாவிடம் இருந்து பெற்ற வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான் தான் கடவுள் என்றும், அனைவரும் தன்னைத் தான் வணங்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி வந்தான். குருகுலத்தில் குரு அனைத்து குழந்தைகளுக்கும் “இரணியகசிபு தான் முழுமுதற் கடவுள்”, என்று கற்றுக் கொடுக்க, பிரஹலாதனோ, “ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற் கடவுள்” என்றான். இச் செய்தியறிந்த இரணியன், விஷ்ணு உண்மையான கடவுள் அல்லர், அவர் நம் குல விரோதி, உன் சித்தப்பாவைக் கொன்றவன் என்று நயமாகவும், மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனத்தை மாற்ற முடியவில்லை. துன்பப்பட்டாலும் விஷ்ணு தான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். பிரஹலாதன் “நாராயணா நாராயணா”என்றபடி இருந்ததால், ஸ்ரீமன் நாராயணன் அவனை எல்லா இடர்களில் இருந்தும் காப்பாற்ற, இரணியனின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போக, இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்த இரணியன், விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி, உன் கடவுளைக் காட்டு, என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ, ஸ்ரீமன் நாராயணன் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான். இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ, தூணிலும் இருப்பார், தூணின் தூசியிலும் இருப்பார், தந்தையே என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன்நராயணன், நரசிம்ம அவதாரம் பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற வரங்கள் பொய்க்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார். திருக்கோளூர் பெண் பிள்ளை பிரகலாதனைப் போல் மாறுபாடில்லா நம்பிக்கையுடன், ‘ஸ்ரீமன் நாராயணன் எங்கும் உள்ளார், இங்கும் உள்ளார்’, என்று கூறினேனா என்று வினவுகிறார்.


52. இங்கில்லை என்றேனோ

ததிபாண்டனைப் போலே

ஒருநாள், யசோதை கண்ணனைத் தண்டிக்கும் முனைப்புடன் தேடிக் கொண்டிருந்தாள். ஒளிந்து கொள்வதற்காக ஓடிய கண்ணன், தயிர் வியாபாரம் செய்யும் ததிபாண்டனின் வீட்டில் ஒரு பெரிய தயிர்ப் பானைக்குள் ஒளிந்துகொண்டான். ததிபாண்டனிடம் கெஞ்சிக் கூத்தாடி, என் அம்மா யசோதை வந்தால் நான் இங்கில்லை என்று கூறுமபடி தயிர் பானைக்குள் ஒளிந்துகொண்டான். யசோதை தேடிவந்தபோது, கண்ணன் இங்கில்லையே என கண்ணன் ஒளிந்திருக்கும் பானை மீது ததிபாண்டன் அமா்ந்துகொண்டான். எங்கும் நிறைந்த பரப்பிரம்மத்தைப் பானைக்குள் இட்டு, அதற்கு மூடியாக தானே ஏறி அமா்ந்து மறைத்தான் ததிபாண்டன். யசோதை சென்றுவிட்டதும் ததிபாண்டா எழுந்திரு, நான் வெளியே வரவேண்டும் என்று சிறுவன் கண்ணன் கோரினான். கண்ணா நீ எல்லோருக்கும் மோட்சம் அளிப்பாய் என்று கூறுகிறார்களே! எனக்கு மோட்சம் கொடுப்பதாக வாக்கு கொடு உன்னை விடுகிறேன் என்றான். உனக்கு மோட்சம் அளிக்கிறேன் என கண்ணன் உறுதியளித்தான். ததிபாண்டனோ தனது தயிர்பானைகளுக்கும் மோட்சம் கொடுக்குமாறும் தன்னுடன் இந்தத் தயிர்ப் பானைகளும் சேர்ந்து துன்பப்படுவதாக விண்ணப்பித்தான். நம் மக்கள், எப்போதும் தாம் செய்யும் தொழிலுக்கு உதவும் கருவிகளை தமது உடலாகவும் உயிராகவும் நினைப்பார்கள். அப்படியே ததிபாண்டனும் கேட்டான். சரி, எல்லோர்க்கும் மோட்சம் அளிப்பதாக வாக்களித்த பிறகு ததிபாண்டன் உட்கார்ந்திருந்த தயிர்ப் பானையிலிருந்து எழுந்து கண்ணனை விடுவித்தான். துவாபர யுகத்தில் கண்ணன் எனும் பரப்பிரம்மம் வாழ்ந்தபோது நான் பிறக்கவில்லையே எனப் பெரிதும் வருத்தப்பட்டாள் நம் திருக்கோளுா் பெண்பிள்ளை.


53. காட்டுக்குப் போனேனோ

பெருமானைப் போலே

மன்னன் தசரதன் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று அறிவித்த உடனே, முன்னர் ஒருசமயம் தன் உயிரைக் காத்த கைகேயிக்கு அளித்த இரு வரங்களை உபயோகித்துக் கொள்ள தீர்மானித்தாள் அவள். ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும். பரதன் அரசாள வேண்டும் என்று தன் கணவனான மன்னனிடம் கேட்டாள். பிடிவாதமாக இருந்தாள்.கொடுத்த வாக்கைக் காக்க மனனுக்கும் வேறு வழியில்லை. ராமன் , லட்சுமணன், பிராட்டியுடன் வனத்திற்குக் கிளம்புகிறான். தந்தையிடம் விடை பெறச் செல்கிறான். ராமா! நான் கொடுத்த வரத்திற்கு கட்டுப் பட்டுவிட்டேன். நீ என்னை மதியாமல் அயோத்தியைக் கைப் பற்றியிருக்கலாமே என்கிறார் தசரதன். தந்தையே! நான் ராஜ்ஜியத்திற்கு ஆசைப்படவில்லை. உங்கள் வாக்கைக் காப்பாற்றுவேன். பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரிந்து திரும்புவேன்' என்றான் ராமன். தன் தந்தையின் வாக்கைக் காக்கக் காட்டிற்கு சென்றேனோ பெருமானைப் போல நான் என்றாள் திருக்கோளூர்ப் பெண்.


54. கண்டு வந்தேன் என்றேனோ

திருவடியைப் போலே

திருவடி என்று திருக்கோளூர் பெண்பிள்ளை அழைப்பது “சிறிய திருவடி”யான ஹனுமனை. சீதையை தேடி கண்டுபிடிக்க, சிதையின் இருப்பிடம் குறித்து அறிய, கிஷ்கிந்தை தலைவன் சுக்ரீவன், நான்கு திசைகளிலும் வானரக் கூட்டங்களை அனுப்பினான். தெற்குத் திசையில் தேடிச் செல்ல, ஹனுமான், ஜாம்பவான் மற்றும் சில வானரங்களை அங்கதனின் தலைமையில் அனுப்பினான். ஒரு மாதத்திற்குள் அவர்கள் சீதையின் இருப்பிடம் குறித்து அறிந்து வர ஆணையிட்டான். கடல் தாண்டிச் சென்ற ஹனுமான், இலங்கை அடைந்து, அசோகவனத்தில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சீதையைக் கண்டார். இராமன் தன்னிடம் கொடுத்த கணையாழியை சீதையிடம் வழங்கி தான் இராமனின் தூதுவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சீதைக்கு நம்பிக்கையும், ஆறுதலும் கூறிய பின், சீதை கொடுத்த சூளாமணியை எடுத்துக் கொண்டு ஸ்ரீ இராமனிடம் வந்தார். ஹனுமானின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஸ்ரீ இராமனிடம், 'கண்டனன், கற்பினுக்

கணியைக் கண்களால்' என்கிறார் ஹனுமான். சீதையை என்று தொடங்கி விட்டால் இராமன் சீதைக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்று பதை பதைத்து

விடுவாரோ என்று எண்ணி, இராமனுக்கு மணித்துளி மன வருத்தத்தையும் தான் அளிக்கக் கூடாதெனக் கருதியும், தன்சொல்லில் ஐயம் எழக்கூடாதெனக் கருதியும் ஹனுமான் “கண்டேன்” என ஆரம்பித்தார். ஹனுமானின் வார்த்தைகளைக் கேட்டு மன மகிழ்ந்த ஸ்ரீ இராமன், அவனை ஆரத் தழுவிக்

கொண்டான். திருக்கோளூர் பெண்பிள்ளை ஹனுமனைப் போல் பெருமானுக்குத் தான் சேவை செய்து அவரை மனம் மகிழச் செய்தேனா என்று

வினவுகிறார்.


55. இருகையும் விட்டேனோ

திரௌபதியைப் போலே

சூதாட்டத்தில் தருமர் மயங்கி, வீடு, வாசல், நாடு, நகரம் அனைத்தையும் பணையம் வைத்து இழக்கிறார்.கடைசியில், சகோதரர்களையும், தன்னையும், திரௌபதியையும் தோற்றார். கௌரவர் சபைக்கு பாஞ்சாலி, துச்சாதனனால் அழைத்து வரப்படுகிறாள். அவளைத் துகிலுரிகையில் தன்னைக் காக்க கண்ணன் ஒருவனால்தான் முடியும் என அவனை சரணாகதி அடைகிறாள். ஆரம்பத்தில், தனது இருகைகளால் மானம் போகாது மறைத்து கண்ணனைக் கூப்பிடுகிறாள். கண்ணன் வரவில்லை. பின், ஒரு கையால் மானத்தை மறைத்து, மறுகையால் கண்ணனை வணங்கி அலறுகிறாள்.கண்ணன் வரவில்லை. இறுதியாக, தன் இருகைகளையும் மேலே தூக்கி, முற்றிலும் அவனே கதி என "கோவிந்தா" என கதறுகிறாள். கண்ணன் வந்து ரட்சிக்கிறான். எம்பெருமானை, சரணாகதி என வந்துவிட்டால், நம்மை அவன் காப்பாற்றுவான் என்பதற்கு இதைவிட வெறு சான்று தேவையில்லை. நான் அந்த திரௌபதியைப் போல முற்றிலும் சரணம் என இருகையும் விட்டேனா, ஆகவே எனக்கு இந்த ஊரில் இருக்க என்ன தகுதி உள்ளது? ஆகவே நான் போகிறேன் என்றாள் திருக்கோளூர்ப் பெண்.


56. இங்குப் பால் பொங்கும் என்றேனோ

வடுக நம்பியைப் போலே

வடுக நம்பியின் ஆச்சார்ய பக்தி பற்றி முன்பே இந்தக் கட்டுரையில் பார்த்திருக்கிறோம். மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரிடம் காட்டிய பக்தியை ஸ்ரீ ராமாநுஜரிடம் வடுக நம்பி காட்டினார். ஒரு முறை திருவரங்கத்தில் உற்சவம். நம்பெருமாள் வீதியில் உலா வந்தார். ராமானுஜர் தங்கியிருந்த மடத்தின் வாசலில் பெருமாள் வந்தபோது எல்லோரும் வீதியில் வந்து பெருமாளைத் தரிசித்தார்கள். வடுக நம்பியை மட்டும் அங்கே காணோம். ராமானுஜர் “வடுகா! பெருமாளைச் சேவிக்க வா” என்று அழைக்க, உள்ளிருந்து வடுகநம்பி “நான் என் பெருமாள் ராமானுஜருக்காகப் பால்காய்ச்சிக் கொண்டிருக்கிறேன். உம்முடைய பெருமாளைச் சேவிக்கவந்தால், என்னுடைய பெருமாளுக்குப் பால் பொங்கிவிடுமே!” என்று உள்ளிருந்து பதில் சொன்னார். சுவாமி, வடுக நம்பிபோல ஆசாரிய அபிமானம் எனக்கு இல்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன் என்றாள்.


57. இரு மிடறு பிடித்தேனோ செல்வப்

பிள்ளையைப் போலே

மண்ணுக்குள் புதைந்திருந்த திருநாராயணபுரம் கோவிலை, அவ்வூரின் மக்கள் மற்றும் மன்னனின் உதவியுடன் மீட்டெடுத்து, அங்கு புதியதாய் ஒரு கோவிலைக் கட்டி, மூலவருக்கு மூன்று நாள் திருவாராதனம் செய்த ஸ்ரீ ராமானுஜரின் கனவில் தோன்றிய ஸ்ரீமன் நாராயணன், உற்சவரான ராமப்ரியன் டெல்லி பாதுஷாவின் அரண்மனையில் உள்ளார். அவரை அழைத்து வருவாயாக, என்றார். ராமானுஜர், உற்சவரை மீட்க இரண்டு மாதங்கள் பயணம் செய்து, பாதுஷாவின் அரண்மனையை அடைந்தார். பாதுஷாவிடம் நடந்தவற்றைக் கூறி, தான் வந்ததற்கான காரணத்தையும்

கூறினார். பாதுஷா, அவ்விக்ரகம் என் மகளிடம் உள்ளது. அவளுக்கு மிகவும்

பிரியமான விக்ரகம். கொடுக்க விரும்ப மாட்டாள். நீங்கள் அவரைக் கூப்பிடுங்கள். அவர் உங்களுடன் வந்தால் கூட்டிக் கொண்டு செல்லுங்கள் என்றார். இளவரசியின் அறைக்குச் சென்ற ஸ்ரீ ராமானுஜரும் பாதுஷாவும் அங்கு, இளவரசியின் படுக்கையில் செல்வநாராயணனின் விக்கிரகத்தைக் கண்டனர்.'சாரங்கபாணி தளர் நடை நடவானோ' என்று பெரியாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்தது போல், ஸ்ரீ ராமானுஜர் தன் இரு கைகளை விரித்து, “என் செல்வப்பிள்ளையே வாராய்” எனக் கண்களில் நீர் பெருக அழைத்தார். ஸ்ரீ ராமானுஜரின் குரலைக் கேட்டதும், ராமப்ரியன் உடனே தான் அணிந்திருந்த ஆபரணங்கள் ஜொலிக்க, சின்னஞ்சிறு பாதங்களில் சலங்கை சிணுங்க ஓடி வந்து ராமானுஜரின் மடியில் ஏறி அமர்ந்து தன் இரு பிஞ்சுக் கரங்களால் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டார். பின் பாதுஷாவின் அனுமதியுடன் ஸ்ரீ ராமானுஜர் ராமப்ரியனை திருநாராயணபுரம் அழைத்து வந்தார். கோவிலில் அவரை நிறுவி, உத்சவ மூர்த்திக்குரிய உத்சவங்களை முன்னின்று நடத்தினார். திருக்கோளூர் பெண்பிள்ளை செல்வப்பிள்ளை போல் இரு கைகளால் ஸ்ரீ ராமானுஜரின் கழுத்தை அன்புடன் அனைத்துப் பிடித்தேனோ? என்று வினவுகிறார்.

58. நில்என்று பெற்றேனோ

இளையாற்றுக்குடி நம்பியைப் போலே

திருவரங்கத்தில் உற்சவங்கள் பெருமாளின் குணங்கள் போல் எண்ணில் அடங்காதவை. திருவரங்கம் அருகில் இடையாற்றங்குடி என்ற சிறு கிராமத்தில் நம்பி என்பவர் வாழ்ந்து வந்தார். திருவரங்க பெருமாள் மீது மிகுந்த காதல் கொண்டவர். எல்லாத் திருவிழாவிற்கும் இவர் தவறாமல் செல்வார். உற்சவங்களைச் சேவிப்பது தான் இவருக்கு உணவே. நம்பி அன்று என்ன உற்சவம் கண்டுகளித்தாரோ அதை இரவு இன்று நம்பெருமாள் முத்துமாலை என்ன அழகு, அவர் கையில் சாத்தியிருந்த வளையல், வைர பதக்கம், வசந்த மண்டபத்துக்கு நடந்து வந்த அழகு என்று எல்லாவற்றையும் இன்பமாக அனுபவித்துக்கொண்டு இருப்பார். நம்பிக்கு நூறு வயதானது. அந்த வருடம் பிரம்மோற்சவம் ஆரம்பம் ஆகியது. நூறாவது வயதில் தள்ளாடிக் கொண்டு இருந்தார் நம்பி. அவரால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. அதனால் உற்சவத்துக்கு அவரால் போக முடியவில்லை. நம்பிக்கு உற்சவம் எல்லாம் அத்துப்படி. இன்று முதல் நாள் உற்சவம் அன்று நம்பெருமாள் அலங்காரம், நடை எல்லாம் அவர் மனதில் ஓடியது. ஆராத அருளமுதம் பொதிந்த கோவில் போக முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். #நம்பெருமாள் உற்சவத்தில் சுற்று முற்றும் பார்த்தார். நம்பியைக் காணவில்லை. எல்லாத் தூண் இடுக்கிலும் நோட்டம் விட்டார் ஆனால் நம்பி இல்லை. நம்பெருமாள் தவித்தார், நம் நம்பியைக் காணவில்லையே, ஏன் வரவில்லை என்றார் வருத்தத்துடன். நம்பியாலும் போக முடியவில்லை, நம் பெருமாளும் தினமும் அவரை உத்சவக் கூடத்தில் தேடிக் களைத்துப் போனார். ஆறாம் நாள் எப்படிய் எழுந்து நின்று சிரமத்துடன் கையில் ஒரு கோலுடன் தள்ளாடிக்கொண்டு தன் கிராமத்திலிருந்து திருவரங்கம் புறப்பட்டார். கோயிலுக்குள் வந்து ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு நின்றார். நம்பெருமாள் அன்றும் நம்பியைத் தேடினார் தூணைப் பிடித்துக்கொண்டு இருந்த நம்பியைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். என்ன நம்பி நலமா ஏன் வரவில்லை தினமும் உன்னைத் தேடினேன் என்றார். நம்பி பேசமுடியாமல் வருடம் முழுக்க எல்லா நாட்களும் உன் உற்சவத்தைச் சேவித்தேன். இப்போது தூணைப் பிடித்துக்கொண்டு நிற்கக் கூட முடியவில்லையே என்றார். “இனி கவலை வேண்டாம். இங்கேயே நில்லும்” என்று வாகன மண்டபத்திலிருந்து கார்த்திகை மண்டபம் பக்கம் செல்லும்போது ’தீராத வினை அனைத்தும் தீர்க்கும் கோவில்! திருவரங்கம் எனத்திகழும் கோவில் தானே!” என்று நம்பி அந்த இடத்திலேயே மோட்சம் பெற்றார். இது மாதிரி பெருமாள் என்னை நிற்க வைத்து மோட்சம் தரவில்லையே! அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள்.


59. நெடுந்தூரம் போனேனோ

நாதமுனியைப் போலே

காட்டுமன்னார்கோவில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் பிறந்தவர் நாதமுனி சுவாமிகள். திருக்குடந்தை ஆராவமுதப் பெருமாளை சேவிக்க வந்தார் அச்சமயம் அங்கு சேவித்த அரையர்கள்,

ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே

நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே

சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை

ஏரார் கோலம் திகழக்கிடந்தாய் ! கண்டேன் எம்மானே!

என பாசுரம் பாடுகிறார்கள். அதனைக் கேட்ட நாதமுனிகள், இந்தப் பாசுரங்கள் ஆயிரத்தில் பத்து என கூறுகிறீர்களே எனக்கு ஆயிரம் பாசுரத்தையும் பாடியருளுங்கள் என வேண்டுகிறார். இவை மட்டுமே உள்ளது என்று தெரிந்து இதையடுத்து மொத்தப் பாசுரங்களையும் பெறுவதற்காக அலைந்து நம்மாழ்வாரிடம் போய் நான்காயிரம் பாடல்களையும் பெற்றவர். அவற்றைத் தொகுத்த நாதமுனிகள் பல ஊர்கள் சென்று நான்காயிரத்தையும் பரப்பினார். நாதமுனி சுவாமிகள் அடிக்கடி பகவான் வயப்பட்டு நிஷ்டையில் ஆழ்வார். நிஷ்டை கலைந்ததும் அவரின் எதிரே இருப்பவர்களை இறைவனின் அம்சமாகவே காணுவார். ஒருமுறை அப்படிப்பட்ட பகவத்யானத்திலிருந்து நாதமுனிகள் எழுந்துவர, வீட்டில் இருந்தவர்கள் வீட்டுக்கு ஆண்பிள்ளை ஒருவரும் பெண்கள் பலருமான வந்துபோனதைச் சொன்னார்கள். கண்ணனும் கோபிகைகளும் வந்தார்களோ என்று தேடி ஓடிய நாதமுனி சுவாமிகள் கங்கை கொண்ட சோழபுரத்துக்கே போய்விட்டார். அவரைத் தொடர்ந்து போன மாணவர்கள், சோழ அரசனும் அவனுடைய பத்தினிகளும் வந்து போனார்கள் என்பதைத் தெரிவித்து திரும்ப அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இன்னொருமுறை இரண்டு வில்லாளிகளும் ஒரு பெண்ணும், ஒரு குரங்கும் வந்து சென்றதாக அருகில் இருப்பவர்கள் கூறினர். அடடா! ராமா! லட்சுமணா! சீதா! அனுமனே! என்று சொல்லி நெடுந்தூரம் ஓடி ஓடித் தேடினார். ஆனால், அங்கே வந்தவர்களோ ராஜாவும் மந்திரி பிரதானிகளும் ராணியும் வேட்டையில் பிடித்த குரங்குமே. வீடுதேடி வந்த ராமனையும் சீதையையும் லட்சும்மணனையும் அனுமனையும் பார்த்து தரிசிக்காமல் விட்டுவிட்டேனே என்று வருந்திப்பெருமூச்செறிந்தவர், அப்படியே விழுந்து பிராணனை விட்டார். விழுந்தவர் பிராணன் சர்வேஸ்வரனாகிய பகவானை அடைந்தது. இப்படி நாதமுனியைப் போல், கடவுளின் உணர்விலேயே திளைத்து அவனடி அடையும் பேற்றை நான் பெறவில்லையே என்று தன்னைத் தானே நொந்துகொள்கிறாள் திருக்கோளுர் பெண்பிள்ளை.


60. அவன் போனான் என்றேனோ

மாருதியாண்டான் போலே

கிரிமி கண்ட சோழன் என ஸ்ரீவைஷ்ணவர்களால் அழைக்கப்பட்ட சோழ மன்னனால் ஏற்பட்ட பிரச்சனைகளால், இராமானுஜர், ஸ்ரீரங்கத்திலிருந்து கர்நாடகாவில் இருந்த திருநாராயணபுரத்திற்குச் சென்று சில ஆண்டுகள் தங்கினார். மனம், அனுதினமும் ஸ்ரீ ரங்கத்திற்கு திரும்பும் நாளையே எண்ணிக் கொண்டிருந்தது. ஒரு முறை, இராமானுஜர், தனது சீடரான மாருதியாண்டான் என்பவரை அழைத்து, ஸ்ரீரங்கம் சென்று வருமாறு கூறினார். மாருதியாண்டான் திருவரங்கம் வந்தார். பெரிய நம்பிகள் பரமபதம் அடைந்துவிட்டார் என்பதையும், சோழ மன்னனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக கூரத்தாழ்வான் கண்ணிழந்து திருமாலிருஞ்சோலையில் இருப்பதையும் அறிந்தார். அனைத்துக் கொடுமைகளுக்கும் காரணமான சோழ மன்னன், கண்டமாலை என்ற நோயினால் இறந்து போனதையும் அறிந்தார். இனி இராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பலாம் என்பதில் ஆனந்தம் கொண்ட மாருதியாண்டான், அச்செய்திகளை இராமானுஜருக்குத் தெரிவிக்க உடனே திருநாராயணபுரம் புறப்பட்டார். இராமானுஜரைக் கண்டதும் "அவன் போனான்" (சோழமன்னன் இறந்தான்) என்பதைக் கூறினார். இராமானுஜர் ஸ்ரீரங்கம் திரும்பும் நேரம் வந்ததை அறிந்து மனம் மகிழ்ந்தார். பின்னர், பெரிய நம்பிகள், கூரத்தாழ்வார் பற்றிக் கேள்விப்பட்டு மனம் வருந்தினார். சற்றும் தாமதிக்காமல், தனது சீடர்களுடன் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். இராமானுஜரின் வருகை அறிந்த கூரத்தாழ்வானும் ஸ்ரீ ரங்கம் வந்தடைந்தார். ஸ்ரீரங்கத்தில் மீண்டும் சேவையில் ஈடுபட்டனர். திருக்கோளூர் பெண்பிள்ளை, மாருதியாண்டான் போல், இராமானுஜரின் மனம் ஆனந்தம் கொள்ளும் வண்ணம் ஏதும் கூறினேனா, என்று வினவுகிறார்.

61. அவன் வேண்டா என்றேனோ

ஆழ்வானைப் போலே

கூரத்தாழ்வான் சோழன் அரசவையில் கண் பிடுங்கப்பட்ட நிலையில் திருவரங்கம் திரும்பினார். அவரைத் திருவரங்கம் கோயிலுள் அனுமதிக்கக் கூடாது என்று சோழன் ஆணையிட்டிருந்தான். திருக்கோயில் காவலர்கள், கூரத்தாழ்வானைத் தடுத்து, ராமானுஜர் வேண்டாமென்றும் திருவரங்கன் மட்டுமே வேண்டுமென்றும் கூறினால் கூரத்தாழ்வா திருக்கோயிலில் அனுமதிக்க இயலும் என்றார்கள். குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வார், தனக்கு ராமானுஜரே வேண்டுமென்றும் அரங்கன் வேண்டாம் என்றும் கூறிவிட்டு, திருமாலிருஞ்சோலைக்குச் சென்று விட்டார். இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த திருக்கோளூர்ப் பெண்பிள்ளை, அவன் வேண்டா என்றேனோ ஆழ்வானைப் போலே என்கிறாள்.


62. அத்வைதம் வென்றேனோ

எம்பெருமானாரைப் போலே

யக்ஞமூா்த்தி என்பவர் அத்வைதச் சன்னியாசி. மிகப் பெரிய அறிஞர், அத்வைதத் தத்துவத்தைக் கரைத்துக் குடித்தவர். காசி போன்ற வட தேசங்களுக்குச் சென்று பலரை வாதப் போரில் வென்றவர். அவருடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. அவா் உலகப் பெருமைக்காக ராமாநுஜரிடம் வாதப்போர் புரிய வந்தார். மேலக் கோட்டை தொண்டணூரில் ஆயிரம் சமணர்களை ராமாநுஜர் ஜெயித்தார் என்பதை அறிந்து அவரிடம் வாதப்போர் செய்ய விரும்புவதாக அவரை அழைத்தார். அவர் கேட்ட அவகாசம் 18 நாட்கள். அந்த வாதத்தில் தான் தோற்று விட்டால், அத்வைத சித்தாந்தத்தை விட்டு ராமாநுஜதாசன் ஆகிறேன் எனவும் கூறினார். ராமாநுஜரோ, இந்த வாதப் போரில் தோற்றால் கிரந்தங்கள் எழுதுவதை விட்டுவிடுவதாக கூறினார். 16-ம் நாள் வரை வாதம் சரிசமமாகச் சென்றது. 17ஆம் நாள் யக்ஞமூா்த்தி வெற்றி பெறுவது போலே முடிந்தது. அன்று இரவு ராமாநுஜருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆழ்வார்கள் முதல் நாதமுனிகள் வரை கட்டிக் காப்பாற்றிய விசிஷ்டாத்வைதம் தன்னால் குறைபடப் போகிறதே என வருந்தினார். தினமும் பூஜிக்கும் காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் முறையிட்டு உண்ணாமல் படுத்து உறங்கிவிட்டார்.வரதன் வரம் கொடுப்பவர் அல்லவா; அவரின் மூர்த்தம் இன்றளவும் ரங்க ராமாநுஜ சன்னிதியில் உள்ளது. மறுநாள் 18-ம் நாள் வாதத்தில் யக்ஞமூர்த்தி ராமாநுஜரைப் பார்த்து, நான் தோற்றேன் என்றார். ஏதும் புரியாத சபையினரைப் பார்த்து இவர் சாதாரண மனிதர் இல்லை! அரங்கராஜனே நடந்து வருவது போல் கண்டேன் என்றும், எம்பெருமானாரைத் தரிசித்தேன் எனவும் கூறி. தோல்வியை யக்ஞமூர்த்தி ஒப்புக்கொண்டார். அதன்பிறகு ராமாநுஜர் யக்ஞமூர்த்திக்கு, “அருளான பெருமான் எம்பெருமான்” எனப் பெயர் சூட்டிவிடுகிறார். அத்வைதத்தை வென்று விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டினார். வரதன் அருளிய வரங்களைப் பெற்ற ராமானுஜரைப் போல் கச்சி வரதனின் நினைவு ஒரு துளியும் இல்லாமல் என் வாழ்க்கை செல்கிறதே என வருந்தினாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.


63. அருள் ஆழம் கண்டேனோ

நல்லானைப் போலே

நல்லான் என்பவர் ஒரு வேதியர். எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகிய அந்தணர் அவர். சாதி, இன வேறுபாடுகளைக் கடந்த நலப்பணிகளை ஈடுபாட்டுடன் செய்து வந்தார். ராமானுஜர் அவரை, ‘நல்லான் சக்ரவர்த்தி’ என்று அழைத்து மகிழ்ந்தார். ஆதரவற்றவர்களுக்கு இறுதிக்கடன் இயற்றுவது ஓர் அறமாகும். அதனைச் செய்து சிறப்புப் பெற்றவர் நல்லான் சக்ரவர்த்தி. நல்லான் சில அந்தணர்களுடன் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பிணம் ஆற்றில் மிதந்து வருவதைக் கண்டார். அது எவருடைய உடல் என்பது தெரியவில்லை. எனினும், அந்த உடலில் சங்கு, சக்கர சின்னங்கள் இருப்பதைக் கண்டார். நல்லான் தானே பல அடியார்களுக்கு வைணவச் சின்னங்களாகிய சங்கு, சக்கரங்களைப் பொறித்து, அவர்களை திருமால் நெறியில் ஆற்றுப் படுத்தியவர். ஆற்றில் வந்த ஆதரவற்ற அந்த உடலைக் கரையில் கொண்டுவந்து சேர்த்தார். முறைப்படி அந்த உடலுக்கு இறுதிக்கடன்களைச் செய்தார். தொடர்பற்றவர்களிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் கொள்வது அருள். அத்தகைய அருளும் நல்லானிடம் ஆழமாக இருந்தது. அத்தகைய அருளின் ஆழம் தன்னிடம் இல்லையே என்று ஏங்குகிறார், திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.


64. அனந்தபுரம் புக்கேனோ

ஆளவந்தாரைப் போலே

வைணவ ஆசாரியனாகிய ஆளவந்தார், நாதமுனிகளின் பேரனாக, ஈசுவரமுனிக்கு மகனாக காட்டுமன்னார்கோயிலில் யமுனைத்துறைவன் என்ற பெயருடன் பிறந்தார். மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் ஆளவந்தார். தமக்குப் பிறகு வைஷ்ணவத்தைக் காக்க இராமானுஜரே சரியானவர் எனத் தேர்ந்தெடுத்தவர் இவரே. திருவரங்கத்தில் நடக்கும் அரையர் சேவை நாட்டிய நிகழ்ச்சியில் ஆழ்வார் பாசுரங்களுக்கு இசையமைத்து அபிநயம் பிடித்துக் காட்டும் கலைஞர்களின் நிகழ்ச்சியை முன்வரிசையில் அமர்ந்து பார்ப்பது ஆளவந்தாரின் ஈடுபாடுகளில் ஒன்றாகும். ஒரு வருடம் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து, இராப்பத்து உற்சவம் முடிந்து 21ம் நாள் உற்சவத்தின் போது அரையா்கள், திருவாய்மொழியில் வரும் ‘ஆனந்தபுரம் புகுதும் இன்றே' என்ற பகுதியை மூன்று முறை பாடி நடித்தனர். ஆளவந்தார் அந்தக் கலைஞர்கள் தன்னை நோக்கி உத்தரவிட்டதாகக் கருதினார். உடனடியாக ஆவல் மேலிட தனது சீடர்களுடன் திருவனந்தபுரம் சென்று அங்கே பள்ளிகொண்டிருக்கும் திருஅனந்த பத்மநாபனை திருவடி வாசல், திருநாபிவாசல் வழியாக தரிசித்தார். திருமுடி வாசல் பக்கம் சென்றால் அவன் அழகில் சொக்கிவிடுவேன். எனவே இந்த திவ்ய தரிசனமே என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது என உருகி நின்றார். ஆளவந்தாரைப் போலே திருவனந்தபுரம் சென்று திருஅனந்தபத்மநாபனைச் சேவிக்கும் ஆவல் எனக்கில்லையே என்று வருந்துகிறாள் திருக்கோளுா் பெண்பிள்ளை.


65. ஆரியனைப் பிரிந்தேனோ

தெய்வ வாரியாண்டானைப் போலே

ஆளவந்தார், திருவனந்தபுரம் புறப்பட்டு செல்வதற்கு முன்னால் தம் மடத்தின் பொறுப்பை தெய்வவாரியாண்டான் என்ற சீடரிடம் விட்டுச் சென்றார். இந்த சீடர் குருபக்தி அதிகம் கொண்டவர் ஆவார். ஆளவந்தாரின் பிரிவு அவரை

வாட்டியது. அதனால் உடல் நலம் குன்றி படுக்கையில் வீழ்ந்தார். இதைக் கண்ணுற்ற உடன் இருந்தவர்கள், ஆச்சாரியனின் பிரிவே இதற்குக் காரணம் என அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர். அவரை பல்லக்கில் ஏற்றினர். ஆச்சார்யானைக் காணப் போகிறோம் என்ற எண்ணமே அவருக்கு உடல் தேறத் தொடங்கியது. திருவனந்தபுரத்தில் எம்பெருமானை தரிசித்துவிட்டு ஆளவந்தார் திரும்பி வந்த போது பல்லக்கைக் கண்டார். மடத்தை பொறுப்பாக கவனிக்காமல் அவர் வந்ததைக் கண்ட, வாரியாண்டாரே! பரதன், ராமபெருமான் கட்டளைக் கிணங்க நந்திக்கிராமத்தைவிட்டு அகலாமல் இருந்தார்.ஆனால் நீயோ என் கட்டளக்கு கீழ் படியாது வந்துவிட்டாய் என்று கடிந்து கொண்டார். அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாத வாரியாண்டார் மயங்கி விழுந்தார். தன் பிரிவுதான் வாரியாண்டானின் நிலைக்குக் காரணம் என மற்றவர்கள் மூலம் அறிந்த, ஆளவந்தார் அவரை எழுப்பி, ஆறுதல் கூறினார். ஆளவந்தார், வாரியாண்டானை எம்பெருமானை தரிசித்துவிட்டு வரச் சொன்னார். ஆனால் அவரோ, ஆரியப் பெருமானே எனக்கு அரங்கனும் நீங்களே அனந்த பத்மனாபனும் நீங்களே! உங்களைப் பிரிய இயலாது என்றார். பின் குருநாதருடன் ஸ்ரீரங்கம் திரும்பினார். ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே என இதையே திருக்கோளூர்ப் பெண் கூறினாள். (இங்கு ஆரியன் என்பது உயர்ந்தவர் என்ற பொருளில் ஆளவந்தாரைக் கூறியது)


66. அந்தாதி சொன்னேனோ

அமுதனாரைப் போலே

ஸ்ரீரங்கத்தில் ராமாநுஜர் அரங்கனின் கோயில் பணிகளை திருத்தி கைங்கரியம் செய்பவா்கள் அனைவருக்கும் அவரின் பரம்பரைகள் அதைத் தொடா்ந்து செய்யும்படி பணி அமா்த்தினார். தினப்படிக் கட்டளைகளை திருத்திச் சரி செய்தார். அக்காலகட்டத்தில் கோயிலில் பெரிய கோவில் நம்பி என்பவர் கைங்கரியத்தில் ஈடுபட்டுவந்தார். ஆகமங்களில் ஞானமுடையவராக இருந்தாலும் ஞானம் காரணமாக அகம்பாவம் உடையவராக இருந்தார். திருவரங்கன் திருக்கோயில் தொண்டில் ஈடுபட்டிருந்தார். எனினும் அவருடைய தொண்டுகள் அரங்கனுக்கும் அடியார்களுக்கும் பயனுள்ளதாக அமையவில்லை. நம்பியை திருத்தத் திருவுள்ளம் கொண்டார் ராமானுஜர். ராமானுஜரின் அறிவுரைகளை நம்பி அலட்சியம் செய்தார். அதனால் மனமுடைந்த ராமானுஜர் காஞ்சிக்கே திரும்ப எண்ணினார். ஆனால், கூரத்தாழ்வான் அவரைச் சமாதானம் செய்தார். நம்பியை நல்வழிப்படுத்தும் பொறுப்பைத் தான் மேற்கொள்வதாகச் சொன்னார். அதில் வெற்றியும் கண்டார். நம்பிகள் மனம் திருந்தி வந்து ராமானுஜரின் சீடரானார். ராமானுஜர் நம்பிக்கு ‘திருவரங்கத்து அமுதனார்’ என்ற திருப்பெயரையும் சூட்டினார். அமுதனார், ராமானுஜர் மகிழும் விதத்தில் தொண்டுகளைச் செய்தார். திருவரங்கன் சந்நதியில் இயற்பா சேவிக்கும் பணியையும் இனிதே செய்து வந்தார். திருவரங்கத்து அமுதனார்க்கு ஒரு நூல் இயற்ற வேண்டும் என்ற அவா மேலிட்டது. அதனை ராமானுஜரிடம் கூறினார். கூரத்தாழ்வார் அல்லது பன்னிரு ஆழ்வார்கள் குறித்த நூல் ஒன்றை எழுதலாம் என்றார் ராமானுஜர். ஆனால். அமுதனாரோ ‘ராமானுஜர் நூற்றந்தாதி’ என்ற நூலை இயற்றினார். ஒவ்வொரு பாடலிலும் ராமானுஜரின் திருப்பெயரை அமைத்து, நூறு பாடல்கள் கொண்ட அந்தாதியாக இயற்றினார். ராமானுஜரின் முன்னிலையில் அந்த நூல் அரங்கேறியது. ‘பூ மன்னு மாது பொருந்திய மார்பன்’ என்று தொடங்கி திருமகள் கேள்வனின் பெருமைகளையும் ஆழ்வார்களின் மகிமைகளையும் ஆழ்வார்களிடம் பக்திகொண்ட ராமாநுஜரின் ஆத்ம குணங்களையும் அனைவரும் அனுபவிக்கும் வகையில் பாடினார். அறிஞர்கள் பாராட்டினர். அடியவர்கள் பாராயணம் செய்தனர். அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே? என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ஏங்கினார். திருவரங்கத்து அமுதனார் ராமானுஜரின் சீடராகி, அவர் மீது நூற்றந்தாதி பாடி, தமது குருபக்தியை வெளிப்படுத்தினார். அது போன்ற ஒரு நூலை இயற்றும் பேறு தமக்குக் கிடைக்கவில்லையே என்ற தமது ஏக்கத்தைத் தெரிவிக்கிறார்.


67. அநுகூலம் சொன்னேனோ

மாலியவானைப் போலே

சீதையை தூக்கிக் கொண்டு அசோகவனத்தில் சிறை வைத்தாஹ் பின் ராவணனுக்கு அநேகம் பேர் நல்ல வார்த்தை சொல்லி அறிவுரை கூறுகின்றனர். மாரீசன் ராமனின் பராக்கிரமத்தை நேரில் கண்டவன், அவன் சொல்கிறான் சீதை திரும்ப கொண்டு விட்டுவிட்டு அவநாள் நம் குலத்துக்கே அழிவு வரும் என்கிறான். விபீஷணன் சொல்கிறான், சீதை நம் நாட்டிற்கு வந்த பிறகு நிறைய கெட்ட சகுனங்கள் தோன்றுகின்றன என்கிறான். கும்பகர்ணனும் மண்டோதரியும் அசீதையை திரும்ப கொண்டு விட சொல்கின்றனர். சீதையே அவனிட சொல்கிறாள், நீ ராமன் காலில் கூட போய் விழவேண்டாம் அவன் புருஷோத்தமன், நண்பனாக பாவித்து அவனிடம் கொண்டு போய் என்னை விட்டுவிட்டால் உன்னை மன்னித்து விடுவான் என்கிறான். எதற்கும் அவன் மசியவில்லை. மால்யவான் என்பது ராவணனின் தாய் வழி பாட்டனார். வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர். ராவணனுக்கு புத்தி புகட்டக் கூடிய தகுதி படைத்தவர். அவர் அவனுக்கு முன்பே இலங்கைக்கு மன்னனாக இருந்தவர். அவர் தனிமையில் அவனிடம் கூறுகிறார், திரேதா யுகத்தில் அரக்கர்களை அழிக்க மனிதர் உருவில் எம்பெருமானே அவதரிப்பார் என்று நாரதர் முன்பே என்னிடம் கூறியிருக்கிறார். இதுவரை அந்த மாதிரி எந்த சமிஞ்ஞையும் வராததால் நான் உன்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இப்பொழுது இராமன் தான் எம்பெருமான் என்று தெரிகிறது. உனக்கு மனிதனாலும் குரங்கினாலும் ஆபத்து வந்தால் உன் வரங்கள் உன்னை காக்காது ஏனென்றால் அவற்றினால் வரும் துன்பத்தை காக்க நீ வரம் வாங்கிக் கொள்ளவில்லை. அதனால் நீ சீதையை கொண்டு விடாவிட்டால் நம் குலமே அழிந்து விடும் என்று கூறுகிறார். ஆனால் விநாச காலே விபரீத புத்தி என்பதால் இராவணன் அவர் சொன்ன வார்த்தைக்கும் செவி மறுக்கவில்லை. இதைத் தான் திருக்கோளூர் பெண்பிள்ளை ஒரு கெட்டவனுக்கு நல்ல வார்த்தை சொல்லி மாளியவானைப் போல திருத்த முயன்றேனா என்கிறாள்.


68. கள்வன் இவன் என்றேனோ

லோககுருவைப் போலே

அசுரர்களின் அரசன் மகாபலியின் வேள்வி இடத்தில் வாமனனாய் நுழைந்து மூன்றடி மண்ணை யாசித்த வாமனனுடைய நடை, உடை, பாவனை, சிரிப்பு, கள்ளத்தனம் அனைத்தையும் பார்த்து மகாபலியின் குருவான சுக்கிராச்சாரியார் சந்தேகப்பட்டார். இவன் மாயம் செய்யும் கள்வன் விஷ்ணு என்று எச்சரிக்கை செய்தார். ஆனால், மகாபலி சக்கர வர்த்தியோ மகிழ்ச்சி அடைந்தான். வராகராக, நரசிம்மராக, தன்வந்திரியாக, மோகினியாக பல அவதாரங்கள் எடுத்த விஷ்ணு, தனக்காக வாமனத் தோற்றத்தில் வந்து கைநீட்டி நிற்கிறாரே என்று பெருமிதம் கொண்டான். அத்தருணத்திலேயே வாமனன் கேட்டதை தருவதற்கான அடையாளமாக கமண்டல நீரைத் தரையில் விட்டு தாரை வார்த்தார். கள்வன் என்பது ஸ்ரீமன் நாராயணனுக்கு ஆழ்வார்களும் அவரின் பக்தர்களும் செல்லமாக பிரியத்துடன் வழங்கிய பெயராகும். கள்வன் என்றால் திருடன் அல்லது ஏமாற்றுபவன் என்று பொருள். எம்பெருமான் தனது பக்தர்களுடன் நடத்தும் லீலைகளினால் இப்படி ஒரு பெயர். திருவாய்மொழி 2-2-10 : 'கள்வா! எம்மையும் ஏழுல கும்நின் உள்ளே தோற்றிய இறைவ!' என்று சிவனும் பிரமனும் இந்திரனும் இதர தேவர்களும் நாராயணனை, ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் போது அழைத்தனர் என்கிறார் நம்மாழ்வார். திருமங்கையாழ்வாரும், திருநெடுந்தாண்டகம் பாசுரங்களில் "கார்வனத்து உள்ளே கள்வா" என்கிறார். இதெல்லாம் பக்தனின் உரிமை. குழந்தையை அம்மா திருட்டு குட்டி என்று கொஞ்சுவது போல். என்றாவது உரிமையுடன் பக்தியுடன் பெருமாளை ஒரு வேளையாவது கள்வன் என்று சொன்னது கிடையாதே. (ஆழ்வார்களை தான் அவள் லோக குரு என்று கூறுகிறாள்.) எந்த விதத்தில் இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்கோளூரில் நான் வசிக்க தகுதி பெற்றவள் என்கிறாள்.


69. கடலோசை என்றேனோ

பெரிய நம்பியாரைப் போலே

மாறனேரி மகான் ஆளவந்தாரின் சீடராக விளங்கியவர். பெரிய நம்பிக்கு நெருக்கமானவர். இவர் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள் அவர் மண்ணைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பெரிய நம்பி அதைப் பற்றிக் கேட்டார், மண்ணால் ஆன உடலுக்கு மண்ணை இடுகிறேன் என சொன்னவர், அத்துடன் கண்ணனும் மண்ணை உண்டதைச் சொன்னார். ஆளவந்தார் ராஜபிளவைக் கட்டியினால் அவதிப்பட்டார். மாறனேறி நபிகள், அதனைத் தான் வாங்கிக் கொண்டு ஆளவந்தாரைக் குணமடையச் செய்தார். தமது நோயை வாங்கிக் கொண்ட நம்பிக்கு, பெரிய நம்பி பணிவிடைகள் செய்தார். இப்படி அவர்கள் சாதி பேதமின்றிப் பழகினர். மாறனேறி நம்பி மறைந்து விட வேதியரான பெரிய நம்பி, அவருக்கு இறுதிக் கடன் களைச் செய்தார். அதை விரும்பாத மற்ற வேதியர்கள்பெரிய நம்பியை விலக்கி வைத்தனர். இது கண்ட அவரது மகள் கோபமுற்று திருவரங்கப் பெருமானிடம் நியாயம் கேட்கச் சென்றாள். அப்போது, தேரில் உலா வந்து கொண்டிருந்த திருவரங்கனை நோக்கி, எனது தந்தை மாறனேரி நம்பிக்கு இருதிக்கடன் செய்தது நியாயம் என்றால், உமது தேர் அசையாது நிற்கட்டும் என்றாள் அந்துழாய் (பெரிய நம்பியின் மகள்) தேர் அப்படியே நின்றது. அப்போது ராமானுஜர் அங்கு வந்தார். பெரிய நம்பியின் செயலுக்கு விளக்கம் கேட்டார் பெரிய நம்பிகள், பறவையினத்தைச் சேர்ந்த ஜடாயூவிற்கு ஸ்ரீராமன் இறுதிக் கடன் செய்ததையும்,விதுரருக்கு தர்மபுத்திரர் இறுதிக் கடன் செய்ததையும் கூறி மாறனேரி நம்பி இவர்களைவிட தாழ்ந்தவரா என்றார். ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அதனால்தான் மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்ததாகப் பெரிய நம்பி சான்றுகள் காட்டிப் பேசினார். மேற்கண்ட சான்றுகளை எடுத்துக்காட்டிப் பேசிய பெரிய நம்பிகள் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஒரு கருத்தைத் தெரிவித்தார், ‘ராமர், தருமர் செய்த செயல்களை ஆழ்வாராதியர் குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்கள் கடலோசை போன்றவையா?’’ என்று வினவினார். அதாவது, கடலோசை ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது! அதனை எவர் பொருட்படுத்துகின்றனர்? முற்போக்குச் சிந்தனைகளையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் அவ்வப்போது தோன்றும் மகான்கள் சான்றோர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றனர். அவை வீணில் ஒலிக்கும் கடலோசையைப் போன்று அலட்சியம் செய்யப்படுகின்றனவே என்று பெரிய நம்பி எடுத்துப் பேசினார். இதையே திருக்கோளூர்ப் பெண்பிள்ளை கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே? என்றாள்.


70. சுற்றிக் கிடந்தேனோ

திருமாலை யாண்டான் போலே

70, 71, 72, மூன்றுமே எம்பெருமானாரைப் பற்றிய வார்த்தை. அவற்றை எம்பெருமானாரிடமே விண்ணப்பிக்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.


திருக்கோட்டியூர் நம்பி. திருமாலையாண்டான் என்பவரை அழைத்துக் கொண்டு ராமானுஜரை காண ஸ்ரீரங்கம் வந்தார். திருமாலையாண்டான் ஆளவந்தாரின் சீடர். நம்பிகளை வரவேற்ற ராமானுஜர் இருவரையும் வணங்கினார். நம்பிகள் ராமானுஜரிடம், இவர் என் குரு ஆளவந்தாரின் சீடன் .திருவாய்மொழியை ஆளவந்தாரிடம் கற்றுத் தேர்ந்தவர். நீங்கள் இவரிடம் திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ராமானுஜரும் ஒப்புக் கொண்டார். திருமாலையாண்டான், திருவாய்மொழியை தான் ஆளவந்தாரிடம் கற்றவிதத்தில் அர்த்தத்துடன் கற்பித்தார். ஆனால், ராமானுஜர் அவ்வப்போது குறுக்கிட்டு, இதற்கு இந்தப் பொருள் வராதே எனக் கூறினார். இது ஆண்டானுக்கு எரிச்சல் மூட்டியது. உதாரணத்திற்கு, திருவாய்மொழி இரண்டாம் பத்தில் வரும்

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து

அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்:

அறியாமைக் குறள் ஆய், நிலம் மாவலி மூவடி என்று

அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே

என்ற பாசுரத்திற்கு பாடம் எடுத்தார். இதற்கு ஆண்டான், அறிவு பெறாத காலத்தில் தன்னுடன் வைத்திருந்த பெருமாள், பின்பு தன்னை சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டதாக புலம்புகிறார் ஆழ்வார் எனப் பொருள் கூறினார். ஆனால் ராமானுஜர், அது சரியான விளக்கம் அல்ல. தன்னுள்ளே உரையும் இறைவனை தெரிந்து கொள்ளாதது தனது அறியாமையே என்று விளக்கினார். இதனால் கடுப்பான ஆண்டான், பாடம் எடுப்பதை நிறுத்தி விட்டார். இதையெல்லாம் அறிந்த திருக்கோட்டியூர் நம்பி, எல்லாம் அறிந்த கிருஷ்ண பகவான் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கேட்டார். அதுபோல எண்ணி ராமானுஜருக்கு கற்பிக்கவும் என ஆண்டானுக்கு அறிவுரை கூறினார். திரும்ப பாடம் ஆரம்பமானது. ராமானுஜர் குறுக்கீடும் இருந்தது. ஆண்டான் யோசித்தார், ராமானுஜர் சொல்லும் அர்த்தம் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தார். பின் கேட்டார், நீர் ஆளவந்தாரிடம் பேசியதில்லை, அவர் பேசிக் கேட்டதும் இல்லை. அப்படியிருக்க இவ்வளவு சரியானபடி அவர் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்கிறீர்கள் என்று. அதற்கு ராமானுஜர் நான் ஒரு ஏகலைவன் என்றார். அப்படி ராமானுஜர் குறுக்கீடுகள் இருந்தும், அவரைச் சுற்றியே இருந்த திருமாலையாண்டான் போல நான் சுற்றிக் கிடந்தேனோ? இல்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்.


71. சூளுறவு கொண்டேனோ

திருக்கோட்டியூரார் போலே

திருக்கோட்டியூர் நம்பி, ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவர். ஆளவந்தார், திருக்கோட்டியூர் நம்பியிடம், தனக்குப் பின்னர் மடத்தையும் சமயத்தையும் காக்க வரும் இராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசிக்க அறிவுறுத்தியிருந்தார். ஆயினும் தகுதியற்றவர்க்கு இதைக் கற்பிக்கக்கூடாது எனவும் கூறியிருந்தார் ஆளவந்தார். எனவே இவரிடம் இராமானுஜர் எட்டெழுத்து மந்திரத்தின் பொருளைக் கற்க வரும் பொழுது பதினெட்டு முறைகள் மறுத்து உடையவரின் தகுதியைச் சோதித்த பின்னரே கற்பித்தார். திருக்கோட்டியூர் நம்பிகள், திருவெட்டெழுத்து மந்திரம் பரம இரகசியம் என்றும், எவருக்கும் வெளியிடக்கூடாதுஎன்ற நிபந்தனையுடன் உபதேசத்தருளினார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி, அனைவருக்கும் கேட்டு உய்யும்படி

எல்லோருக்கும் உபதேசம் செய்தார் இராமானுஜர். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி ரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்லுவது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடும் என்றும் கடிந்துக்கொண்டார். இராமானுஜர், “திருவெட்டெழுத்தின் பயனைப் பலர் எய்தும் பொருட்டுத் தான் ஒருவன் நரகம் செல்வது உகந்தது”, என்றார். இந்தப் பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக் கண்டு இவரே எம்பெருமானார் என்று மகிழ்ச்சியுடன் ஆலிங்கனம் செய்து

கொண்டார். சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே ‘சூள்’ என்றால், சபதம் அல்லது ஆணை என்று பொருள். திருக்கோட்டியூர் நம்பி மறைபொருளை தகுதி அறிந்து உரைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். ராமானுஜர் திருக்கோட்டியூராரிடம் மறைபொருளை எப்படியும் பெறுவது என்று சூளுரைத்து, பதினெட்டு முறை முயன்று பெற்றார். இருவரும் சூள் உரைத்து உறவு கொண்டனர். தான் அவ்வாறு உறுதியுடன் உபதேசிக்கவோ, உபதேசம் பெறவோ வாய்ப்புப் பெறவில்லையே என்று திருக்கோளூர்ப்பெண்பிள்ளை ஏங்குகிறார்.


72. உயிராய பெற்றேனோ

ஊமையைப் போலே

இராமானுஜரின் மடத்தில் வாய் பேச முடியாத ஒருவர் இருந்தார். தன்னால் முடிந்த சேவைகளை இராமானுஜருக்கும் அவரது சீடர்களுக்கும் செய்து வந்தார். ஒருநாள் இராமானுஜர் அவரை ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றார். தனது பாதுகைகளை அவரது தலையில் வைத்து ஆசிர்வதித்தார். பின், அந்தப் பாதுகைகளை அவரிடமே கொடுத்துவிட்டார். இந் நிகழ்வுகளை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த கூரத்தாழ்வார், நானும் ஏதும் அறியாதவனாய், வாய் பேச முடியாதவனாய் இருந்திருந்தால் எனக்கும் இராமானுஜரின் ஆசி இதுபோல கிடைத்திருக்குமே! என் அறிவால் நான் கெட்டேன் என வருந்தினார். வாய் பேச முடியாதவர், இராமானுஜரின்பாதுகைகளை தனது உயிராய் எண்ணி, இராமானுஜருக்கு சேவை புரிவதே தனது வாழ்நாள் குறிக்கோளாய் கருதி, தன் வாழ்நாளைக் கழித்தார். திருக்கோளூர் பெண்பிள்ளை, அவரைப்போல், உமது பாதுகைகளைப் பெற்றேனா இல்லை அவற்றை உயிரெனக் கருதி

வாழ்ந்தேனா, என்று வினவுகிறார்.


73. உடம்பை வெறுத்தேனோ

திருநரையூராரைப் போலே

திருநரையூர் திவ்ய தேசத்தைத் தனது பெயரிலேயே கொண்டவராக பிள்ளை திருநரையூர் அரையர் இருந்தார். இவர் ஒரு நாள் தொட்டியம் திருநாராயணபுரம் வேத நாராயண பெருமாளைச் சேவிப்பதற்காகக் குடும்பத்துடன் சென்றார். அங்கு திருக்கோயில் புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. கோயில் கும்பாபிஷேகம் வரை ஓலைத் தட்டியால் மறைத்து உட்புறமாக ஊழியர்கள் சுண்ணம் அடிப்பது, சிலைச் சீரமைப்பு போன்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் யாரோ கோயிலுக்குத் தீமூட்டிவிட்டனர். காற்று வீசியடித்ததன் காரணமாக நெருப்பு கோயிலெங்கும் பரவியது. ஊழியர்களும் சேவார்த்திகளும் நெருப்பைப் பார்த்து பயந்து ஓடிவிட்டனர். அந்த நிலையில் அங்கு வந்த பிள்ளை திருநரையூரார் பதறிப் போனார். அச்சோ..! இறைவன் மீது தீ சுட்டு விடுமே ! என ஓடிச் சென்று இறைவனின் மீது தன் உடலைக் கொண்டு தீப்படாமல் மறைத்துக் கொண்டார். தீ கோயிலை எரித்துக் கொண்டிருந்தது. திருநரையூரார், இறைவனின் மென்மையான மேனி தாங்காதே என, தன்மீது தீயை வாங்கி தன் உடலை எரித்துக் கொண்டார். அவரது மனைவி, பிள்ளைகளும் திருமேனியைச் சேர்த்துக் கட்டிக்கொண்டனர். அர்ச்சிக்கும் உருவத்தில் தெய்வத்தைக் கண்டதாலேயே அவர்கள் பகவானைத் தீயிலிருந்து பாதுகாக்க நினைத்தனர். கடவுளுக்குப் பயன்படாத இந்த சரீரம் எதற்கு என்று அடியாள் நினைக்கவில்லையே என்று ராமானுஜரிடம் தன்னையே நொந்துகொண்டாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.


74. என்னைப் போல் என்றேனோ

உபரிசரனைப் போலே

முன்னொரு காலத்தில் ’வசு’ என்பவன் தன் நாட்டை ஆண்டு வந்தான். தர்மம் அறிந்தவன். அதன்படி நடப்பவன். தர்ம நெறி தவறாமல் ஆட்சி புரிந்தான். அதனால் தருமதேவதை அருளால் பூமிக்கு மேல் நடமாடும் ஆற்றலைப் பெற்றிருந்தான். தேரில் செல்லும் போது அவனுடைய தேர் பூமிக்கு மேலே பறந்து செல்லும். உபரி என்றால் மேலே என்று பொருள் சர என்றால் பிரயாணம். அதனால் அவனுக்கு உபரி-சர-வசு என்று பெயர். ஒரு சமயம் ரிஷிகளுக்கும் தேவர்களுக்கும் யாகப் பசு (யாகப் பசு என்பது ஆடு ) பற்றி ஒரு விவாதம் எழுந்தது. யாக வேள்வியில் உயிருள்ள யாக பசுவைப் பயன் படுத்த வேண்டும் என்று தேவர்கள் கூறினார்கள். ரிஷிகளோ அது ஜீவஹிம்சை, உயிருள்ள யாக பசுவிற்குப் பதிலாக மாவினால் யாகப் பசு போன்ற உருவம் ஒன்றைச் செய்து அதைப் பயன்படுத்தலாம் என்றார்கள். விவாதம் முடிவுக்கு வரமுடியவில்லை. விவாதம் பெரிய சர்ச்சையாகியது. தங்களால் தீர்க்க முடியாத இந்தப் பிரச்சனைக்குத் தர்மத்தில் சிறந்து விளங்கும் உபரிசரவசு தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று ரிஷிகளும், தேவர்களும் அவனை அணுகினார்கள். இருவருடைய கருத்துக்களையும் உபரிசரவசு கேட்டான். தன் உயிரைப் போலப் பிற உயிர்களை மதிப்பவன் உபரிசரவசு. அதனால் அவன் ரிஷிகளின் கூற்றையே ஆமோதித்தான். என்னை வெட்டினால் எனக்கு வலிக்கும் அதுபோலத் தானே இந்த யாகப்பசுவிற்கும் வலிக்கும். ’என்னைப் போல’ தானே யாகப் பசுவும் உயிர்வாழத்தக்கது, அதை வதைக்கக் கூடாது என்றான். இந்தத் தீர்ப்பினால் கோபம் கொண்ட தேவர்கள் அவனை நீ பூமியில் விழக் கடவாய் என்று சபித்தார்கள். உபரிசரவசு கலங்கவில்லை. அவன் தேர் ஆகாசத்திலிருந்து கீழே பூமியில் விழுந்து அழுந்தியது (தேர் அழுந்திய ஊரே தேர் அழுந்தூர், தேரழுந்தூர் என்று இன்று கூறுகிறோம்). சுவாமி, ’என்னைப் போல்’ தானே யாகப் பசுவும் என்று எந்த உயிர்களுக்குத் தீங்கு நினையாத வைணவ நெறியை நான் கூறினேனா? அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்! என்றாள்.


75. யான் சிறியன் என்றேனோ

திருமலை நம்பியைப் போலே

ராமாநுஜர் தனக்குப் பின்னால் கைகாட்டிய ஆச்சார்யர்களில் ஒருவர் பெரிய திருமலை நம்பிகள். ராமாநுஜரின் தாய்மாமனும் ஆவார். இவர், திருமலையில் வேங்கடவனுக்குத் தீா்த்த கைங்கரியம் செய்தார். பெரிய திருமலை நம்பிகள் ஒருநாள் பெருமாள் திருமஞ்சனத்துக்கு பாபநாசத்திலிருந்து தீர்த்தம் எடுத்துவந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வேடுவன் தனக்குத் தாகமாக இருப்பதாகச் சொல்லித் தண்ணீர் கேட்டார். பெருமாள் திருமஞ்சனத்துக்காகத் தண்ணீர் எடுத்துப் போவதைச் சொன்ன திருமலை நம்பிகள், காலதாமதம் ஆகிவிடும் என்று கொடுக்க மறுத்தார். தொடர்ந்து நடந்துபோனபோது, பானை லேசாக ஆவதை உணர்ந்தார். வேடுவன் அந்தப் பானையில் அம்புவிட்டு ஒழுகும் தண்ணீரைக் குடிப்பதையும் பார்த்தார். பெரிய திருமலை நம்பிகள் கோபத்துடன் பெருமாளுக்கான திருமஞ்சனத் தண்ணீரைக் குடிப்பதற்கு வெட்கமாக இல்லை என்று கேட்டார். எனக்கான தண்ணீரை நான் குடிக்காமல் வேறு யார் குடிப்பது என்று வேடன் விநயத்துடன் கேட்டார். பின்னர் ஸ்ரீநிவாசனாகக் காட்சி கொடுத்தார். தினசரி இவ்வளவு தூரம் நடந்து திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க வேண்டாமென்று கூறி, அம்பால் நிலத்தைத் துளைத்து அங்கேயே ஊற்றை உருவாக்கி, “தாத, இங்கிருந்தே தீர்த்தம் கொண்டுவாரும் என்று அருளினார். அந்த இடமே இன்றும் ஆகாச கங்கை என்று புகழ்பெற்றுவிளங்குகிறது. திருவேங்கடவனை தரிசிக்க அடிவாரத்தை வந்தடைந்த ராமாநுஜருக்கு மலை மேல் ஏறக் கூசியது. கால் பாதத்தால் நடக்க விரும்பாத ராமாநுஜர் தனது முழங்கால் கொண்டே மலையில் ஏறினார். பெரிய திருமலை நம்பிகள் ராமாநுஜரை வரவேற்க சன்னியாசி மரியாதையாக பூரணகும்பம், மாலை, பெருமாள் பிரசாதத்துடன் காத்திருந்தார். கடவுளால் மரியாதையுடன் அப்பா என்று அழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பிகள் தம்மை வரவேற்க வருவதைப் பார்த்து சங்கடப்பட்டார் ராமாநுஜர். என்னை வரவேற்க ஒரு சிறியவனை அனுப்பக் கூடாதா என்று கேட்டார். அடியேன் திருமலை பூராவும் தேடினேன், அடியேனைக் காட்டிலும் ஒரு சிறியவனைக் காணவில்லை என்றார் பெரிய திருமலை நம்பிகள். மேலும் திருமலை திருப்பதியில் தீர்த்த கைங்கரியத்தைச் செய்துவிட்டு, மலை மீதிருந்து இறங்கிவந்து ராமாநுஜருக்கு ராமாயணத்தைச் சொன்னவர் பெரிய திருமலை நம்பிகள். பெரிய திருமலை நம்பிகளைப் போலே தான் வைணவ லட்சணம் பொருந்தியவளாக அடியாள் இல்லையே என்று ராமாநுஜரிடமே தனது வேதனையை வெளிப்படுத்துகிறார் திருக்கோளூர் பெண்பிள்ளை.


76. நீரில் குதித்தேனோ

கணபுரத்தாளைப் போலே

நல்ல அடைமழையுடன் கூடிய இரவுப்பொழுது. ஸ்ரீநம்பிள்ளை, தனது சீடர்கள் சிலருடன் ஒரு சிறிய படகில் காவிரி நதியைக் கடந்து கொண்டிருந்தார். மழை மற்றும் எதிர்காற்றின் காரணமாகப், படகினைப் படகோட்டியால் விரைவாகச் செலுத்த இயலமுடியாது திணறினார். ஆற்றில் வெள்ளம் கூடும் அறிகுறி தென்பட, படகோட்டி, படகின் பாரம் அதிகமாய் உள்ளது. யாரேனும் நீந்தத் தெரிந்தவர் நீரில் குதித்தால் மற்றவர்களைக் காப்பாற்ற இயலும் என்றார். அப்போது, கணப்புரத்தாள் என்ற பெண், படகோட்டியிடம், எங்கள் ஆச்சாரியார் நம்பிள்ளையைக் காப்பாற்றுங்கள். நீங்கள் நூறு வயது வாழ்வீர்கள் என வாழ்த்திவிட்டு, காவிரி ஆற்றில் குதித்து விட்டாள். மற்ற பயணிகள் பத்திரமாகத் திருவரங்கத்தை அடைந்தனர். ஆற்றில் குதித்த கணபுரத்தாள் ஆற்றின் போக்கிலேயே சென்று, கரையின் ஒரு ஓரத்திலிருந்த கோரைப்புல்லைப் பிடித்துக் கொண்டு, கரையேற முடியாமல் போராடிக் கொண்டிருந்தாள். தங்களைக் காப்பாற்ற ஆற்றில் குதித்த பெண்ணைத் தேடியபடி, காவிரிக் கரையோரமாக நம்பிள்ளை விரைந்து சென்று பார்த்தார். கோரையைப் பிடித்துக் கொண்டிருந்த பெண்ணைக் கண்டார். மின்னல் வேகத்தில் செயற்பட்ட நம்பிள்ளை, ஓடக்காரரைக் கொண்டு அப்பெண்மணியை மீட்டு வரச் செய்தார். கணபுரத்தாள் என்ற அப்பெண்மணி, தான் உயிர்த் தியாகத்திற்குத் துணிந்த செயலைப் பெரிதாக எண்ணாது, ‘‘தேவரீர்! அடியாளைக் காத்தருளினீர்’’ என்று நம்பிள்ளையின் செயலைப் பாராட்டினாள். அவளது உலகமே ஆச்சார்யர் குறித்த எண்ணங்களால் நிறைந்திருந்தது. அதனால், அவரது உயிரைக் கூடப் பொருட்படுத்தாது, தனது ஆச்சார்யருக்காக உயிர் விடத் துணிந்தாள்.

திருக்கோளூர் பெண்பிள்ளை, கணப்புரத்தாளைப் போல் உயிரைத் துச்சமென எண்ணி, ஆச்சார்யரை உலகமாய் நினைத்தேனா என்று கேட்கிறாள்.


77. நீருகம் கொண்டேனோ

காசி சிங்கனைப் போலே

கங்கைக் கரையில் உள்ள காசி மாநகரத்தில் வாழ்ந்து வந்த சிங்கன் அடிக்கடி தற்பெருமை பேசுவார். தான் நீச்சலில் வல்லவர் என்றும் கங்கையின் எந்தப் பகுதிக்கும் நீந்திச் செல்லக்கூடியவர் என்றும் அவர் கூறுவது வழக்கம். ஒருநாள், கங்கையில் நீந்திச் சென்று கொண்டிருந்தபொழுது, எதிர்பாராத விதமாக ஆற்றின் சுழலில் சிக்கிக் கொண்டார். எவ்வளவு முயன்றும் சுழலிலிருந்து வெளிவர முடியாமல் வெள்ளம் அழுத்தியது. இறுதியில், இறைவனே காக்கவல்லவர் என்ற ஞானம் ஏற்பட்டது. தமது வல்லமை அற்பமானது என்று உணர்ந்தார். ‘‘பெருமாளே! என்னைக் காப்பாற்று!’’ என்று பகவானிடம் சரணாகதி செய்தார். சுழல், தானே அடங்கியது. சிங்கனும் ஆணவம் அடங்கியவராகக் கரையில் ஏறினார். நீருகம் கொண்டேனோ காசி சிங்கனைப் போலே? என்கிறார் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. கங்கையாற்றின் நீர்ச்சுழலில் சிக்கிய பிறகு ஞானம் பெற்ற காசி சிங்கனைப்போல் தனக்கு ஞானம் ஏற்படவில்லையே என்று ஏங்குகிறார்.


78. வாக்கினால் வென்றேனோ

பட்டரைப் போலே

கூரத்தாழ்வாரின் மகன் பராசர பட்டர். அவர் குழந்தையாக இருந்த போது, காவிரி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, சர்வக்ஞ பட்டர் என்பவர் பல்லக்கில் ஏறி தனது சிஷ்யர்கள் படைசூழ வந்து கொண்டிருந்தார். சிஷ்யர்கள் அவர் புகழைப் பாடி வந்தார்கள். ராமானுஜர், கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பாரும் வசிக்கும் ஊரில் இப்படி ஒருவர் வருவதை பராசர பட்டர் விரும்பவில்லை. தன் கையினால் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்ட அவர், அந்த பல்லக்கை தடுத்து நிறுத்தி சர்வக்ஞரிடம், நீங்கள் திறமைசாலி எனில், என் கையில் உள்ள மண் எவ்வளவு என சொல்ல முடியுமா? என்றார். மண் கோடிக்கணக்கில் இருக்கும். மண்ணை எண்ண முடியுமா என்ற சர்வக்ஞர் கேலியாக சிரித்தார். உடனே பராசரர், என்னால் சொல்ல முடியும் என்றார். வியந்த சர்வக்ஞர், சொல் பார்ப்போம் என்றார். "ஒரு கைப்பிடி மண்" என்றார் பட்டர். சிறுவனின் திறமையைக் கண்டு தலைவணங்கிய சர்வக்ஞர். அந்தக் குழ்ந்தை யார் என வினவ, கூரத்தாழ்வாரின் மகன் என அறிந்தார். குழ்ந்தையை தன் பல்லக்கில் ஏற்றி வந்து கூரத்தாழ்வார் வீட்டில் கொண்டு வந்து விட்டார். பின்னாளில் பராசர பட்டர் வளர்ந்ததும், ராமானுஜரின் அந்திம காலத்தில் ராமானுஜர் பராசரரை அழைத்து, திருநாராயணபுரம் சென்று,அங்கு வேதாந்தி என்பவரை வாதத்தில் வென்று வருமாறு கூறினார். பட்டரும் அப்படியே திருநாராயணபுரம் சென்று, வேதாந்தியை வாதத்திறமையால் வென்று அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார். அவருக்கு நன்ஜீயர் எனப் பெயரிட்டார். அவரை வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடிக்க வைத்தார். "வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே" (இல்லையே அதனால் நான் இங்கிருந்தால் என்ன ஆல்லது இவ்வூரை விட்டு வெளியேறினால் என்ன) என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்.


79. வாயில் கை விட்டேனோ

எம்பாரைப் போலே

முதலில் கோவிந்த பட்டராய் இருந்த ஆச்சார்யார் எம்பார், ராமானுஜரின் உறவினர். ஒரு முறை எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்து ராமானுஜரின் உயிரைக் காத்தவர். இவர் ஒரு சமயம் காசிக்குச் சென்று கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது அவர் கையில் சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அதை எடுத்து வந்து காளஹஸ்தியில் வைத்து வழிபட்டு வந்தார். பிறகு ராமானுஜர் எம்பாரை, திருமலை நம்பிகளிடம் ஆற்றுப்படுத்தினார். எம்பார், திருமலை நம்பிகளிடம் சீடராக இருந்து அவருக்குத் தொண்டுகள் செய்து வந்தார். திருமலை நம்பிகள் அமைத்திருந்த நந்தவனத்தில் பூச்செடிகளை வளர்க்கும் தொண்டை எம்பார் விரும்பிச் செய்தார். ஒருநாள் நந்தவனத்தில் களையெடுக்கும் பணியில் எம்பார் ஈடுபட்டிருந்த நேரத்தில் நாகப்பாம்பு சீறும் ஒலி கேட்டது. பாம்பை எம்பார் உற்று நோக்கினார். அதன் வாயில் முள் ஒன்று தைத்திருந்தது தெரிந்தது. பாம்பின் நாவில் முள் நன்றாகக் குத்தியிருந்தது. எம்பார் சற்றும் தயங்காமல் நாகப் பாம்பின் வாயில் தமது கையை விட்டு, அதன் நாவில் குத்தியிருந்த முள்ளை எடுத்து அப்பால் எறிந்தார். அதைக் கண்ட ராமானுஜர் பதை பதைத்துப் போனார். ‘‘கோவிந்தா! இது என்ன விபரீத விளையாட்டு’’ என்றார் உடையவர். முள் குத்தித் துடித்துக் கொண்டிருந்த பாம்புக்கு உதவுவது ஆறறிவு உடையவர்களின் கடமை என்று விளக்கினார் எம்பார். மேலும் சொல்கையில், "வைணவனின் அடிப்படை தர்மம் மனித நேயம், கருணை, இரக்கம். அதனால் பாம்பினிடம் இரக்கப்பட்டு, மனித நேயத்தால் அதன் வாயினுள் கையைவிட்டேன்" என்றார். ராமானுஜர் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியை, திருமலை நந்தவனத்தில் நடந்த நிகழ்ச்சியை, தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத அக்காலத்தில், திருக்கோளூரில் வாழ்ந்து வந்த பெண்மணி அறிந்து வைத்திருந்தார். வாயில் கை விட்டேனோ எம்பாரை போலே என்று கூறி ராமானுஜரை வியக்கச் செய்தார்.


80. தோள்காட்டி வந்தேனோ

பட்டரைப் போலே

அந்நாட்களில், ஸ்ரீரங்கத்து எம்பெருமான்

பல்லக்கில் வீதி உலா வரும்பொழுது, முன்னால் சவுக்கால் விதியை அடித்துச்

சுத்தப் படுத்திக் கொண்டே இருவர் வருவர். அவர்களின் செயலால், முன் நிற்கும் கூட்டமும் விலகும். சில சமயங்களில், எதிர்பாராமல், அவ்வடி பக்தர்கள் மேலும் படக்கூடும். ஒருமுறை, அவ்வாறு அடிக்கும் பொழுது, அது பராசர பட்டரின் தோள்பட்டையில் அடியாக விழ, பட்டரின் சீடர்கள் சவுக்கு வைத்திருப்பவரைக் கடிந்து கொண்டனர். தெரியாமல் அடித்து விட்டதாக அடித்தவன் பட்டரிடம் மன்னிப்புக் கேட்க, பட்டரோ, பரவாயில்லை. எம்பெருமானுக்கான கைங்கரியத்தின் போது விழுந்த அடி. மற்றொரு தோளிலும் விழவில்லையே என்றே நான் வருந்துகிறேன் என வருந்திக் கூறினாராம். பொறுமையும் மன்னிக்கும் குணமும் ஸ்ரீ வைஷ்ணவனின்

குணமாக இருக்க வேண்டும். திருக்கோளூர் பெண்பிள்ளை , பட்டர்பிரானைப் போல் ஸ்ரீவைஷ்ணவ குணத்துடன் வாழ்ந்தேனா என வினவுகிறார்.


81. துறைவேறு செய்தேனோ

பகவரைப் போலே

சிதம்பரம் அருகே உள்ள திருவஹீந்திரபுரத்தில் வில்லிபுத்தூர் பகவர் என்பவர் வசித்து வந்தார். பகவர் அந்தணரோ சந்நியாசியோ அல்ல. ஆனாலும் ஆற்றில் குளிக்கச் செல்லும் போது, எப்போதும் மற்றவர்கள் குளிக்கும் துறையை விட்டுவிட்டு வேறு துறைக்குச் சென்று தான் குளிப்பார். ஒருமுறை அந்தணர்கள் அவரிடம், நீங்கள் ஏன் நாங்கள் குளிக்கும் துறையில் குளிப்பதில்லை என்று கேட்டனர். அதற்குப் பகவர், நான் வைஷ்ணவன். ராமானுஜரைப் பின்பற்றுபவன். நாங்கள் நித்ய அனுஷ்டானத்தை ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்கிறோம். ஆனால், நீங்கள் வர்ணாஸ்ரமத்தைப் பின் பற்றுபவர்கள். இவை இரண்டும் ஒன்று சேராது. ஆகவேதான் நான் வேறு துறைக்கு செல்கிறேன்." என்றார். திருக்கோளூர் பெண்பிள்ளை, பகவரைப்போல் வைணவ நம்பிக்கையில் வேறு துறை செய்தேனோ என்று வினவுகிறார்.


நம் அகம் அழிய திருக்கோளூர் பெண் பிள்ளை சொன்ன இந்த 81 வாக்கியங்களையும் அதன் பொருளையும் நாம் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்க வேண்டும். அப்பெண் பிள்ளையின் எளிமையும், தாஸ்யத்தனமும் நமக்கு ஒரு படிப்பினை. நமக்கு பக்தி உள்ளது என்று நினைக்கிறோம், அது எந்த அளவில் உள்ளது என்று இந்த பெண்பிள்ளையின் என்பத்தியொரு கோணங்களை வைத்து நாம் பரிசீலனை செய்ய வேண்டும். அப்பொழுது தான் தெரியும் நாம் எந்த கீழ் மட்டத்தில் உள்ளோம் என்று. இவை அனைத்தும் மோகஷம் தரும் வார்த்தைகள். அதனால் முடிந்த பொழுதெல்லாம் ஸ்மரணம் செய்வோம். இறைவனை விட்டால் வெறு எந்த புகலிடமும் இல்லை என்கிற மனோபாவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு வழிகாட்டியாய் இருப்பவர்கள் குரு, ஆச்சார்யார்கள். அவர்களை தஞ்சம் அடைவது மேன்மை. உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என்பதே சத்திய வாக்கு. நம்மாழ்வார் சொன்னது திருக்குடந்தை ஆராவமதுனைப் பார்த்து,

என் நான் செய்கேன்! யாரே களைகண்? என்னை என் செய்கின்றாய்?*

உன்னால் அல்லால் யாவராலும்* ஒன்றும் குறை வேண்டேன்*

கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்!* அடியேன் அரு வாழ்நாள்*

செல் நாள் எந் நாள்? அந்நாள்* உன தாள் பிடித்தே செலக்காணே*


பொருள்: என்னால் ஏதாவது செய்ய முடியுமா? முடியவே முடியாது. இன்னொருத்தர் காலில் விழுவேனா என்றால் அதுவும் விழ மாட்டேன். என்னை என் செய்கின்றாய்- எனக்கு நீ என்ன செய்யப் போகிறாய்? உன்னைத் தவிர எனக்கு வெறு புகலிடம் இல்லை என்கிறார். நீ பார்த்து மோக்ஷம் கொடுத்தாள் தான் உண்டு என்கிறார். அது தான் உண்மையான சரணாகதி நிஷ்டை. இது தான் நம் நிலைமையும், இப்படித் தான் அசையாத நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும்.


ஆழ்வார், ஆச்சார்யார், எம்பெருமானார், ஸ்ரீ மணவாளமாமுனிகள், தேசிகன் திருவடிகளே சரணம்.


சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.






References.

Thanks to U.Ve. Velukkudi Krishnan Swamikal Upanyasam.

புகைப்படங்கள் இணையத்தில் இருந்து எடுத்தவை.

5,218 views0 comments

Recent Posts

See All
bottom of page