ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ:
ஸ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நமஹ:
ஸ்ரீகருடாழ்வார் பெரிய திருவடி என்பதும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சிறியதிருவடி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அடியேன் இந்த பெயர்கள் இவ்விருவருக்கும்எவ்வாறு வந்திருக்கும் என்று யோசித்தபோது உதித்த கற்பனை தான் இந்த பதிவு. ஏதேனும் தவறதுலாக கூறியிருந்தால் அடியேனை மன்னித்தருளுமாறு வேண்டுகிறேன்.
எங்கே, நமது கற்பனைக்குள் நுழைவோமா?
இடம்:
பரமபதம்
ஸ்ரீ வைகுண்டம்
108ஆவது திவ்ய தேசம்
ஸ்ரீமன்நாராயணன் பிராட்டிமார்களோடு அனந்தன் மீது அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அருகில் கருடர் முதலான நித்யஸூரிகள் மற்றும் முக்தாத்மாக்கள் கைங்கர்யம் செய்துகொண்டு சதா ஆனந்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கேட்கும் ஒரே த்வனி - "ஓம் நமோ நாராயணாய".
த்வாரபாலகர்கள் உள்ளே வருகிறார்கள்; சர்வேஸ்வரனை வணங்கி நாரத முனிவர் ஈஸ்வரனை காண்பதற்கு ஆவலோடு வைகுண்டம் வந்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். இறைவன் மகிழ்ச்சியோடு, நாரதரை உள்ளே அழைத்து வரச் சொல்கிறார்.
“நாராயணா, நாராயணா - அடியேன் தாசன்” என்று கூறி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறார், நாரதர்.
“என்ன நாரதரே, ஏது இந்த பக்கம்? நீர் ஒருவர் தாம் "ந ச புனராவர்த்ததே, ந ச புனராவர்த்ததே" என்கிற வாக்கியத்திற்கு விலக்கு - வைகுண்டம் வந்த பின்பும் இதர உலகங்களுக்கும் சென்று வருகிறீர்; என்ன விஷயம் இப்பொழுது தங்களை வைகுண்டம் வரவழைத்தது?
நாரதர்கூறினார் – “இந்த பெரிய வீடுதான் அடியேன் சதா இருக்க ஆசை; ஆனால் என் செய்வது? தங்களின் பக்தர்களை, பாகவதர்களை பார்க்க மனம் துடிக்கும் பொழுது அடிக்கடி பூலோகமும் சென்று வருகிறேன்”.
இறைவன் சிரித்து விட்டு "அது சரி; இப்பொழுது என்ன விஷயமாக இங்கு வந்தீர்?" என்று வினவினார்.
"அடியேன் பூலோகத்தில் உலவும் பொழுது, ஒரு ஜீவாத்மா மற்ற ஜீவாத்மாக்களிடம் ஒரு கேள்வி கேட்டது - "பெரிய திருவடி சிறிய திருவடி என்று குறிப்பிடுகிறோமே - எதனால்?" என்று. அந்த கேள்வி கொஞ்சம் நீண்டு "எதனால் ஒருவர் பெரிய திருவடி என்றும் மற்றொருவர் சிறிய திருவடி என்றும் அழைக்கப் படுகிறார்கள்?" என்று மாறியது. அடியேன் அதற்கு விடையை தங்களிடமே தெரிந்து கொள்ள விழைந்து இங்கு ஓடி வந்தேன்" என்றார் நாரதர்.
பரமபதநாதன், உடனே "ஏது, உனக்கு இன்று நான் தான் கிடைத்தேனா?
ஹ்ம்ம் - சரி, உன் விளையாட்டை ஆரம்பிக்கலாம்" என்று கூறினார்.
நாரதர் பெருமாளை வணங்கி விட்டு, மேலும் ஒரு விண்ணப்பம் வைத்தார் - "ஸ்வாமி, இந்த விஷயத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, அடியேன் தங்களின் அம்சமாகிய வ்யாஸ பகவானையும் நித்யஸூரிகளில் முக்கியமானவரான வால்மீகியையும் இந்த சமயம் இங்கு எழுந்தருளும்படியாக சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.
பிராட்டிமார்களும் "ததாஸ்து" என்று ஆசீர்வதித்தனர்.
வ்யாஸபகவானும் வால்மீகி முனிவரும் ப்ரத்யக்ஷமானார்கள். நாரதர் அவர்களை வணங்கி விட்டு "அடியேனின் அநந்தகோடி நமஸ்காரங்கள். அடியேனின் வேண்டுகோளை ஏற்று இங்கு பெரிய திருவடியை பற்றியும் சிறிய திருவடியை பற்றியும் கூற வந்தமைக்கு நன்றி. வ்யாஸ பகவானே, நீர் கருடனை பற்றியும் தொடர்ந்து வால்மீகி ஆஞ்சநேயரை பற்றியும் அடுத்தடுத்து எடுத்துரைக்க பிரார்த்திக்கிறேன். பின்னர், எந்த திருவடி சிறந்தது என்பதை அந்த பரந்தாமனே தீர்ப்பளிக்க விண்ணப்பிக்கிறேன். நாராயண, நாராயண" என்று கூறி அமர்ந்தார்.
சற்று தொலைவில், கருடர் கைகூப்பி "எக்கணமும் இறை சேவை செய்யதயார் நிலையில் நின்று கொண்டிருந்தார்”
வ்யாஸர் பரம்பொருளை வணங்கி விட்டு, தொடங்கினார் – “கருடர் பக்ஷி ராஜாவாக கஷ்யப முனிவருக்கும் தக்ஷப்ரஜாபதி மகளான விநதைக்கும் பிறந்தவர்.”
அடுத்துவால்மீகி முனிவர் ஒரு கணம் கண்களை மூடி பிரார்த்திக்க, அங்கே எம்பெருமானும் பூமி பிராட்டியும் சீதாராமனாக காட்சி கொடுக்கின்றனர்; மறு கணமே, ஆஞ்சநேயர் அங்கே வந்து பெருமாள் பிராட்டி முன்பு முட்டியிட்டு கை கூப்பி நிற்கின்றார்.
வால்மீகி கூறினார் – “ஆஞ்சநேயர் ருத்ரனின் அம்சமாக வாயு புத்திரனாக குரங்கினத்தில் கேசரி மற்றும் அஞ்சனாவிற்கும் பிறந்தவர்; ப்ரஹ்மா, விஷ்ணுவின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றியவர் என்றும், ருத்ரன் ப்ரஹமாவிலிருந்து தோன்றியவர் என்று அனைவரும் அறிந்ததே” என்று உரைத்தார்.
வ்யாஸர் தொடர்ந்தார் – கருடர், தாயை விடுவிப்பதற்கு தேவர்களுடன் போரிட்டு அம்ருதத்தை கொண்டு வந்தவர்; அம்ருதம் என்று தெரிந்தும் தான் அதை உபயோகப்படுத்தவில்லை; பகவான் விஷ்ணு இவருடைய ஸ்ரத்தயை மெச்சி இவருக்கு அமரத்வ வரம் (நித்யஸூரி) கொடுத்தார்; கருடரை தன் வாகனமாக இருக்க பணித்தார்” என்று கூறினார்.
வால்மீகி, “ஹனுமான், நண்பனுக்காக இறைவனை வேண்டி பின்னர் அவர் அருளோடு அசுரர்களோடு போரிடும் போது சஞ்சீவி மருந்துமலையையே சுமந்தவர்; பராக்ரமசாலியாய் இருந்தும் அதை அதிகம் பயன்படுத்தவில்லை; பகவான் இராமன் இவரின் பக்தியை மெச்சி இவருக்கு அமரத்வ வரம் (சிரஞ்சீவி) கொடுத்தார்; அனுமனை என்றும் தன் மனதில் இருக்க பணித்தார்” என்று உரைத்தார்.
வ்யாஸர்: “கருடர் வைகுண்டத்திலே இருந்து இறைவனுக்கு கைங்கர்யம் பண்ணுபவர்”
வால்மீகி: “ஆஞ்சநேயர் சீதா இராமனையேதன் இதயத்தில் சதா வைத்து பூஜிப்பவர்”.
வ்யாஸர்: “கருடர், பகவான் விஷ்ணுவைதன் கரங்களில் தாங்கி அவர் ஆணைக்கிறங்க எங்கு செல்ல வேண்டுமோ அங்கு அழைத்து செல்பவர்”.
வால்மீகி: “ஆஞ்சநேயர், இராம இலக்குவனை ஒரு முறை தன் தோளில்சுமந்து வேறிடம் அழைத்து வந்தவர்”.
வ்யாஸர்: “கருடர் இறைவனிடத்திலேயே சதாஇருப்பவர்”.
வால்மீகி: “ஆஞ்சநேயர் இறை நினைவிலேயேசதா இருப்பவர்”.
வ்யாஸர்: “கருடர், இறைவனின் திருவடியைதன் உடம்பில் சுமக்கிறார்”.
வால்மீகி: “ஆஞ்சநேயர், இறைவனின் திருவடியைதன் நெஞ்சில் சுமக்கிறார்”
வ்யாஸர்: “கருடர் மதுரகவி ஆழ்வாராகஅவதரித்து சிஷ்யன் குருவிடம் எவ்வாறு சரணம் செய்ய வேண்டும் என்று காண்பித்தவர்”.
வால்மீகி: “ஆஞ்சநேயர், பற்பல நேரங்களில்இன்றும் தோன்றி இறைவனிடம் எவ்வாறு பக்தி செய்ய வேண்டும் என்று காண்பிக்கின்றவர்”
வ்யாஸர்: “கருடர், எப்போதும் வாகனமாக இருந்து பெற்ற பெயர் பெரிய திருவடி"
வால்மீகி: “ஆஞ்சநேயர், ஒரு தரம் சுமந்தும் பின்பு எப்போதும் நினைத்திருந்தும் பெற்ற பெயர் சிறிய திருவடி"
இருவரின் பெருமையை சொல்ல நேரம் போததுதான்; ஆனால் வாதத்திற்கான நேரம் முடிவடைந்தது.
தீர்ப்புக்கான நேரம் வந்தது
நாரதர் உட்பட, அனைவரும் சர்வேஸ்வரனைநோக்கி ஆர்வமுடன் காத்திருந்தனர்.
பகவான் தன்னுடைய யோக நித்திரையிலிருந்து சற்றே தன் கடைக்கண் திறந்து பார்த்தார்; எழுந்து நின்று தீர்ப்பு சொல்ல வேண்டியது தான். அவரது பொற் தாமரை திருவடியின் கீழ், இங்கே நடந்த எந்த ஒரு வாதத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமே இல்லாமல், சதா தன் சிரம் தாழ்த்தி இறைவனின் திருப்பாதங்கள் தன் தலை மேல்வைக்க கை கூப்பி நெடுஞ்சாண்கிடையாக இருந்தன, அவரின் பாதுகைகைகள்.
இறைவன் அந்த பாதுகைகளை பார்வையிட்டார்; மெல்ல ஒரு புன்முறுவல் புரிந்தார்; அனைவரின் பார்வையும் பாதுகையில் விழுந்தது.
ஒரு ரீங்காரம் கேட்டது:
உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன் மயர்வற மதி நலம் அருளினன் யவனவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.
பளிச்சென்றுசில காட்சிகள் கண் முன்னே தோன்றியது:
மூன்றடி மண் கேட்டு வாமன அவதாரத்தில், பாதுகையோடு இருக்கும் பாதத்தால் மூவுலகையுமே அளந்தது
குருவின் சொல் கேட்டு இராமாவதாரத்தில் பாதுகையோடு இருக்கும் பாதத்தால் அகலிகையின் சாபத்தை போக்கியது
பரதனின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகை பதினான்கு ஆண்டுகள் அயோத்தியை நல்லாட்சி புரிந்தது
ஒரு திருவடி பறவை; ஒரு திருவடி மிருகம்; இப்பொழுது பார்க்கும் திருவடி ஒரு அசித்; உணர்த்தும் பொருள் என்ன - இறைவன் முன்பு, சித், அசித் அனைத்தும் ஒன்றே; தேவை - சரணாகதி; பரிபூர்ண நம்பிக்கை; சதா பகவத் சிந்தனை; பர சமர்ப்பணம்; நமது சிரத்தை இறைவனின் பாதத்தில் வைத்து, நமக்குள் இருக்கும் "நான்" என்கிற செருக்கை அழிக்க, தேவை திருவடி பாதுகா ரக்ஷை. ஆழ்வார் ஆச்சார்யர்களில் முன்தன்மையாக திகழ்பவர் ஸ்வாமி நம்மாழவார் - சடம் என்னும் வாயுவை தன் கோபத்தினால் ஒழித்ததுனால் சடகோபர் என்ற பெயர்; அவர் அருளினால் நாமும் நம் அகங்காரத்தை அழித்து எப்பொழுதும் பகவானுக்கு கைங்கர்யம் பண்ணிக் கொண்டு இருக்க தேவை திருவடி தொழல்.
அனைவருக்கும் அனைத்தும் புரிந்தது.
(பராசர) பட்டர் பகவானின் பாதுகைகள் சுமந்து அதை சடாரியாக சேர்க்க, அனைத்து நித்யஸூரிகளும் சிரம் தாழ்த்தி அதை பெரும் ஆனந்தத்தோடு சேர்த்துக் கொண்டனர்.
நாரதருக்கும் தன் கேள்விக்கான விடை கிடைத்த மகிழ்ச்சி. கருடர் அடுத்த உத்தரவு வரும் வரை தயார் நிலையில். ஆஞ்சநேயர் ராமா நாம ஜெப நினைவில். வியாசரும் வால்மீகியும் தியானத்தில். இறைவன் மறுபடியும் யோக நித்திரையில்.
--------------------------------------------------------------------------------------
பாதுகையின் மஹிமை - ஒரு வேளை பகவான் கிருஷ்ணரும்தன் பொற் பாதத்தில் பாதுகை அணிந்திருந்தால் வேடன் அம்பு தாக்கி இருக்காதோ? அவரை இந்த கலியுகத்திலும்நேரில் பார்க்கின்ற பாக்கியம் நமக்கும் கிடைத்திருக்கோமோ?
எழுதியது: அடியார்க்கடியான்
அவர் ஈ மெயில் ஐடி: yrskprasad@gmail.com
Comments