top of page
Writer's pictureAnbezhil

புராணம்

#புராணம் என்பது (சமஸ்கிருதம்: पुराण purāṇa, #பண்டைய_காலங்களில்) இந்து மத நூல்கள்.

यस्मात्पुरा ह्यनतीदं1 पुराणं तेन तत्स्मृतम्।

निरुक्तमस्य यो वेद सर्वपापैः प्रमुच्यते।।२०३।।

புரா + வேர்ச் சொல் - அண் என்பதன் பொருள், ஆதி காலத்தில் இருந்து சுவாசித்து வருவது என்பதாகும் என்கிறது வாயு புராணம்.

இதன் சொற்பிறப்பியல் (etymology) - இதனை அறிந்தவர்கள் பாவங்களை போக்குகிறது என்கிறது. புண்ணிய பாப தகுதி தோஷத்தைப் பற்றிச் சொல்வதால், ராக்ஷஸர் போன்ற தீயவர்களை விரட்டுவதால், ஒன்பது வித பக்தியை உண்டாக்குவதால், இது புராணம் என்று அழைக்கப்படுகிறது என்கிறது KulArnava TantrA ,17.39.

புரா அபி நவம் பழைய கதைதான், ஆயினும் என்றும் புதுக்கருக்கு அழையாத தங்கம் போல ஜொலிக்கிறது என்பதால் ‘புரா அபி நவம்’ — அதாவது முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் இருப்பது என்று பிரித்தும் புரானத்திற்குப் பொருள் சொல்லப்படுகிறது.


வேதத்தில் கூறப்பட்டவைகளின் சாரங்களை கதை வடிவில் ஸ்லோகங்களாக புராணங்களில் உள்ளன. பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள், தேவர் -அரக்கர் போர்கள் போன்ற பலவற்றினை புராணங்கள் விவரிக்கின்றன. பிரபஞ்சத்தின் உருவாக்கம் முதல் அழிவு வரையிலான வரலாறு, அரசர்கள், மாவீரர்கள், முனிவர்கள் மற்றும் தெய்வங்களின் வம்சாவளியைப் பற்றிய விவரணை அவற்றில் உள்ளன. ஆன்மிக உணர்வைப் பெறுவதற்கான சமயம், தத்துவம், யோகம், போன்றவற்றைப் பற்றிய உரையாடல்கள் நிரம்பிய அறிவுக் கருவூலமாகப் இவை திகழ்கின்றன. புராணங்களின் நோக்கம் மக்களை தெய்வங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதாகும். பழங்கால வேத நூல்களின் அத்தியாவசிய போதனைகள் மற்றும் சிக்கலான யோக தத்துவங்களை சாதாரண மக்கள் அணுகவும் புரிந்து கொள்ளவும் புராணங்கள் உதவுகின்றன. புராணங்களை கேட்பவர், படிப்பவர்களுக்கு சாத்வீக குணம் வளரும் என்பது திண்ணம்.

புராணத்திற்குப் பொதுவான ஒரு சிறப்பியல்பு அவற்றின் #pantheism - இயற்கை யாவையும் இறையுருவே, கடவுள் அனைத்திலும் இருக்கிறார் என்பதே ஆகும். இந்து மதத்தின் கொள்கைகள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களப் பொருத்தமான புராணங்களின் மூலம் விளக்கப் படுகின்றன, நடைமுறைப் படுத்த வேண்டிய சடங்குகள், வெவ்வேறு தெய்வங்களின் வழிபாட்டில் பயன்படுத்த வேண்டிய பிரார்த்தனைகளை பரிந்துரைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தெய்வம் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப் படுகிறது, மேலும் அந்த தெய்வீகம் தனிப்பட்ட பிரிவின் சார்புக்கு ஏற்ப எளிமைப் படுத்தப் படுகிறது. மனித வாழ்வியலில் தத்துவ உண்மைகள் கடினமானவையாக இருந்தன. எனவே, அவை அனைவரையும் எளிமையாகச் சென்றடையும் வகையில் நீதிக் கதைகள் வடிவில் தொகுக்கப்பட்டன. அவ்வாறு தொகுக்கப்பட்ட கதைகள், கருத்துகளே புராணங்கள்.


புராணங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை காஞ்சி #மகாபெரியவா இவ்வாறு விளக்குகிறார்.

"ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக ஸ்ரீமந்நாராயணனே ஸ்ரீராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கே பார்த்தாலும், 'இது என் அபிப்பிராயம்’ என்று சொல்லவே மாட்டார். 'ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது’ என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ஸ்ரீராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான். "

இதே போல ஸ்ரீ கிருஷ்ணனும் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசிக்கும் பொது பெரியவர்கள் இப்படித் தான் சொல்லியிருக்கிறார்கள் என்று, தான் சொல்லும் அறிவுரையையே அப்படி குறிப்பிடுகிறார். புராணங்கள் சொல்வதை கடவுள்களே அனுசரித்து நடந்து வந்தனர் என்பது இதில் இருந்து தெளிவாகிறது.


புராணங்கள் அனைத்தும் ஐந்து விஷயங்களை விவரிக்கின்றன.

1. சர்கா (படைப்பு)

2. பிரதிசர்கா (பொழுதுபோக்கு)

3. வம்சம் (முனிவர்களின் வரலாறு)

4. மன்வந்தரம் (மனுவின் காலங்கள்)

5. வம்சானுசரிதா (அரசர்களின் மரபியல்)

அதாவது எந்தப் புராணம் ஆனாலும் சரி எப்படி உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்று சொல்ல வேண்டும், எப்படி அழிக்கப்படுகிறது என்று சொல்ல வேண்டும், இடைப்பட்ட காலத்தில் என்னன்னா வம்சங்கள் இருந்தன, யார் யார் பிறந்தார்கள் என்று சொல்ல வேண்டும். மேலும் கிளைக்கதைகள் சொல்லப்படும்.


பல புராணங்கள் பாரதத்தில் உள்ளன. அதில் மிக முக்கியமானவை #வேதவியாசர் இயற்றி அருளிய 18 மகா மகா புராணங்கள் ஆகும். புராணங்களின் தொகுப்பை உலகிற்குத் தெளிவுபடுத்தியவர் அவர் மகன் #சுகப்பிரம்மர். பதினெட்டு மகாபுராணங்கள் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. அவை மற்றவர்களுக்கு கூறப்பட்டு இறுதியாக வேதவியாசரை அடைந்து எழுத்து வடிவம் பெற்றுள்ளன.

  1. சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.

  2. கூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.

  3. கருட புராணம் - கருடன் காசியபருக்குக் கூறினார்.

  4. மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.

  5. அக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.

  6. வராக புராணம் - வராகரே கூறினார்.

  7. கந்த புராணம் - கந்தனே கூறி அருளினார்.

  8. வாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.

  9. விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.

பதினெட்டு மகா புராணங்கள் பட்டியல்:

1. விஷ்ணு புராணம்

2. நாரதீய புராணம்

3. பத்ம புராணம்

4. கருட புராணம்

5. வராக புராணம்

6. பாகவத புராணம்

7. பிரமாண்ட புராணம்

8. பிரம்மவைவர்த்த புராணம்

9. மார்கண்டேய புராணம்

10. பவிஷ்ய புராணம்

11. வாமன புராணம்

12. பிரம்ம புராணம்

13. மத்சய புராணம்

14. கூர்ம புராணம்

15. லிங்க புராணம்

16. சிவ புராணம்

17. ஸ்கந்த புராணம்

18. அக்னி புராணம்

ஆகியவை. புராணங்கள் மும்மூர்த்திகளின் அடிப்படையில் #சிவபுராணம், #விஷ்ணுபுராணம், #பிரம்மபுராணம் எனப் பிரிக்கப்பட்டன. பதினெட்டு புராணங்களில் சிவபுராணம் பத்து, விஷ்ணு புராணம் நான்கு பிரம்ம புராணம் இரண்டு, அக்னி மற்றும் சூரியன் தலா ஒரு புராணம் என்று பதினெட்டுப் புராணங்களும் வகைப்படுத்தப் பட்டுள்ளன.


விஷ்ணுவை முதன்மைக் கடவுளாகக் கொண்ட புராணங்கள் #சத்வகுணம்

1. விஷ்ணு புராணம் -

விஷ்ணு புராணம் 6000 பாடல்களை கொண்டதாகும். இது வம்சம், மனுவந்தரம்,கிருஷ்ண பலராம சரித்திரம், பிரபஞ்ச சிருஷ்டி. அண்ட கோசம், சுவர்க்க நரக லட்சணங்கள், கிரக மண்டலம், சப்த காண்டம், இராஜ பரிபாலனம், ஜாதி ஒழுக்கம், யுகவரலாறு, ஜல அக்கினிப் பிரளயங்கள் என்பவை பற்றிய செய்திகளைக் கூறுகிறது. பல்வேறு பக்தர்களின் கதைகள், வர்ணாஸ்ரமத்தின் விளக்கம், வேதத்தின் ஆறு அங்கங்கள், கலியின் வயது பற்றிய விளக்கம், ஸ்வேத-வராஹ கல்பத்தின் விளக்கம், விஷ்ணு தர்மோத்தரம் ஆகியவை இதில் அடங்கும். பிருகு முனிவர் போன்றவர் கதைகளும் இதில் உள்ளன.

2. நாரதிய புராணம் - 25,000 சுலோகங்கள். இந்த புராணம் எல்லாவற்றின் சுருக்கத்தையும் கொண்டுள்ளது. இது ஜகன்னாத புரி, துவாரகா, பத்ரிநாதா போன்றவற்றை விவரிக்கிறது.

3. பத்ம புராணம் - 55,000 பத்திகள். ஸ்ரீமத் பாகவதத்தின் மகிமையைக் கொண்டுள்ளது. ராமர், ஜகந்நாதர், மத்ஸ்ய, ஏகாதசி, பிருகு போன்றவர்களின் கதைகள்.

4. கருட புராணம் - 19,000 சுலோகங்கள். பகவத்கீதையின் பொருள், மறுபிறவி, விஷ்ணு-சஹஸ்ர-நாமம், தர்ஸ்ய கல்பத்தின் விளக்கம் ஆகியவை இதில் அடக்கம். கருட புராணத்தில் பிறப்பு , இறப்பு ,தானம், தர்மம், தவம், சடங்குகள் சொர்க்கம், நரகம், மறுபிறவி என அனைத்து விவரங்களும் சொல்லப் பட்டுள்ளது. அதோடு வர்ணாசிரம முறையையும் அதைத் தொடர்ந்து வரும் குலத் தொழிலையும் வலியுறுத்துகிறது. இதில் கருடன் பகவானிடம் கேள்வி கேட்க அவர் பதில் அளிப்பது போல் அமைந்துள்ளது. சனகாதி முனிவர்களுக்கு சூத முனிவர் இதைக் கூறுவதோடு, அவர்கள் கேட்கும் மற்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார். மனிதன் செய்யும் பாவங்களுக்கு தண்டனைகள், அவற்றிற்கான பரிகாரங்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. 5. வராஹ புராணம் - 24,000 சுலோகங்கள். வெவ்வேறு விரதங்களையும் விஷ்ணுவின் மகிமைகளையும் விவரிக்கிறது. 6. பாகவத புராணம் - 18,000 சுலோகங்கள். இது பரீட்சித்தின் சாபம், சுகர் உபதேசம், கண்ணன் சரிதை, மனுவந்தரம், சூரியவம்சம், பூருயயாதி, பிரியவரதன் ஆகியோர் மற்றும் மரபு, புவி தருமம் முதலியவை பற்றி உரைக்கிறது.


பிரம்மாவை முதன்மையான தெய்வமாகக் கொண்ட புராணங்கள் #ரஜோகுணம் 7. பிரம்மாண்ட புராணம் – 12,000 சுலோகங்கள். வேதாங்கங்களை விவரிக்கிறது. ஆதி கல்பத்தை விவரிக்கிறது. 8. பிரம்மவைவர்த்த புராணம் – 18,000 சுலோகங்கள். ராதை மற்றும் கிருஷ்ணரின் பெருமைகள் மற்றும் பொழுது போக்குகளைக் கொண்டுள்ளது. 9. மார்க்கண்டேய புராணம் - 9,000 சுலோகங்கள். ராமர் மற்றும் கிருஷ்ணரின் கதைகள்.

10. பவிஷ்ய புராணம் - 14,500 பத்திகள். பக்தித் தொண்டின் பெருமைகளையும், சைதன்ய பகவானின் கணிப்பையும் கொண்டது. 11. வாமன புராணம் - 10,000 சுலோகங்கள். திரிவிக்ரம பகவானின் கதை கொண்டது. 12. பிரம்ம புராணம் - 10,000 சுலோகங்கள்.


சிவபெருமானை முதன்மைக் கடவுளாகக் கொண்ட புராணங்கள் #தமோகுணம் 13. மத்ஸ்ய புராணம் – 14,000 சுலோகங்கள். கோவில் கட்டுமானம், வாமன மற்றும் வராஹ கல்பங்களை விவரிக்கிறது. இதில், மச்சாவதாரத் தோற்றம், திருமால் நீர்ப் பிரளயத்திலிருந்து வைவஸ்தமனு மற்றும் சப்தரிஷிகளையும் காத்து உலகில் மீண்டும் ஜீவராசிகளை வளர்ச்சியடையச் செய்ததையும், பிரம சிருஷ்டி, திரிபுர வதம், தாரகாசுரனுடன் போர், பார்வதி சிவபெருமானை மணத்தல், கந்தனாகிய முருகனின் தோற்றம் ஆகியவற்றை விளக்குகிறது 14. கூர்ம புராணம் - 17,000 சுலோகங்கள். கிருஷ்ணருக்கும் சூரியக் கடவுளுக்கும் இடையேயான உரையாடலைக் கொண்டுள்ளது (பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது) தன்வந்திரி, லட்சுமி கல்பத்தை விவரிக்கிறது. 15. லிங்க புராணம் – 10,000 சுலோகங்கள். பகவான் நிருஸ்மதேவரின் மகிமையைக் கொண்டுள்ளது. ஜனார்த்தன, அம்பரீஷ கதை, காயத்ரியின் பெருமைகள் இதில் உள்ளன. இலிங்கபுராணம் சிலர்களுடைய சீலம், ஐசுவரியம், சுகமோட்சம், அண்டகோசம், மனுவந்தரம் முதலிய செய்திகளைக் கூறுகின்றது. புராணங்களில் யுகங்கள் பற்றி குறிப்பிடும்போது அரச வம்சங்கள் சுட்டிக் காட்டபடுகின்றன. மகதம், கோசலம் ஆகிய இடங்களில் அரசவம்சங்கள் செல்வாக்கடைந்தன. சந்திர வம்சம், சூரிய வம்சம் முதலிய அரச வம்சங்களும் குறிப்பிடப்படுகின்றன. நந்தர், மோரியர், சுங்கர், சாத வானகர் முதலியோரின் ஆட்சிக் காலங்களிலும் குறிப்பிடப்படுகின்றன. அத்துடன் குப்தமன்னர்களின் ஆட்சிச் சிறப்பு பற்றியும் விளக்கப்படுகிறது. 16. சிவபுராணம் – 24,000 சுலோகங்கள். 17. ஸ்கந்த புராணம் – 81,000 சுலோகங்கள். 18. அக்னி புராணம் - 15,400 சுலோகங்கள். சாளக்கிராமத்தின் விளக்கத்தைக் கொண்டுள்ளது; ஈசான கல்பத்தை விவரிக்கிறது.


இவற்றைத் தவிர உபபுராணங்களும் உள்ளன. அவை

சூரிய புராணம்

கல்கி புராணம்

துர்வாச புராணம்

கபில புராணம்

நந்திகேஸ்வர புராணம்

பசுபதி புராணம்

கணேச புராணம்

சனத்குமார புராணம்

வாசிஷ்ட புராணம்

பராசர புராணம்

பிருகத்தர்ம புராணம்

மானவ புராணம்

காளிகா புராணம்

நரசிம்ம புராணம்

பார்க்கவ புராணம்

கம்ப புராணம்

பராண புராணம்

முத்கலா புராணம்


மதுரைச் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைக் கூறுவது திருவிளையாடற் புராணம். 63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் சிவனடியார் சரித நூல் பெரியபுராணம். புராணங்களில் காணப்படுகின்ற கருத்துக்களையொட்டி காவியங்களான இரகுவம்சம், சாகுந்தலம் முதலியன தோன்றின. நாயன்மார் ஆழ்வார்களின் திருமுறைகள், பிரபந்தம் என்பவற்றிலும் பின்னர் எழுந்த சிற்றிலக்கியங்களிலும் புராணக் கதைகள் இழையோடியுள்ளன.


எந்தப் புராணம் ஆக இருந்தாலும் அது வேதாந்தத்தின் பொருளை வலியுறுத்தப் பிறந்துள்ளது. எத்தனையோ கருத்துகள் வேதாந்தத்தில் இருக்கும். அதை புரியவைக்க ரிஷிகள் ஆச்சார்யர்கள் பிறக்கிறார்கள். அவர்கள் எப்பப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்வதற்கு தான் இந்தக் கதைகள். கதை என்ற வெல்லப் பாகுக்குள் கருத்தான சற்றே கசப்பான உண்மையை வைத்துக் கொடுத்தது தான் இதிகாசங்களும் புராணங்களும். புராணம் வேறு இதிகாசம் வேறு. (இதிஹாசம். இதி-ஹ-ஆஸ என்பதற்கு உண்மையில் இருந்தது என்று பொருள். இந்து மதத்தைப் பொறுத்த வரையில் இராமாயணமும், மகாபாரதமும் இதிகாசம் என்றழைக்கப்படுகின்றன.)


புராணத்தில் கணக்குகள் ஆறு அம்சங்கள். ராமாயணம் என்றால் காண்டங்கள் என்று சொல்வது போல பாகவதம் என்றால் ஸ்கந்தங்கள் என்று சொல்வது போல, மகாபாரதம் என்றால் பர்வங்கள் போல, புராணங்கள் என்றால் அம்சங்கள். ஒவ்வொரு அம்சத்திற்குள்ளும் பல அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயத்திற்குள்ளும் பல ஸ்லோகங்கள். 1.5.3 என்று குறிப்பிடப்பட்டால் முதல் அம்சத்தில், ஐந்தாவது அத்தியாயத்தில் மூன்றாவது ஸ்லோகம் என்று பொருள். (இதுவே ராமாயணத்தில் 1.5.3 என்று சொன்னால் பால காண்டத்தில் ஐந்தாவது சர்கத்தில் மூன்றாவது ஸ்லோகம் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.)

புராணங்கள் என்ன சொல்கின்றன என்பதற்கு ஓர் உதாரணமாக #புராண_ரத்னம் என்று சொல்லப்படுகிற விஷ்ணு புராணத்தை எடுத்துக் கொண்டு விளக்கலாம். இந்தப் புராணத்தில் சீடரான மைத்ரேயர் கேள்வி கேட்க பராசரர் பதில் அளிக்கிறார். விஷ்ணு புராணத்தில் முதல் அம்சத்தில் இந்த அண்டங்கள் எப்படி சிருஷ்டிக்கப்பட்டன என்பதைப் பற்றி சொல்லப் படுகிறது. பகவான் அமிர்தத்தைக் கடைந்து எடுத்துக் கொடுத்தார், மோகினியாக வந்தார், ஆமையாக உருவெடுத்தார் என்ற அவதாரக் கதைகள் சொல்லப் படுகின்றன. நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை அழித்து பக்த பிரகலாதனை ரட்சித்தார். துருவனின் சரித்திரம், பாலகனான அவன் காட்டுக்குப் போய் ஆறாவது மாதத்திலேயே பகவானை எப்படி தரிசிக்க முடிந்தது, அதற்கு என்ன தவம் அவனிடம் இருந்தது, சின்ன பிள்ளையாக இருந்தாலும் பக்தியில் எப்படி முத்தியிருந்தான் ஆகிய விஷயங்கள் சொல்லப்படுகின்றன. இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கிறதே இது அத்தனையும் பகவான் தன் திருமேனியாலேயே தாங்குகிறார். அவர் எப்படி தாங்குகிறார், நாம் அவரை கோவிலில் தரிசிக்கப் போகும்போது அவர் ஆபரணங்களை அணிந்து, ஆயுதங்களை தாங்கி இருப்பதைப் பார்க்கிறோம். இது நமக்குத் தெரிந்துள்ள, நம்முடன் இருக்கும் அனைத்தின் பிரதிநிதித்துவம். பகவான் சக்கரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அது அதிவேகமாக சுற்றும் நம் மனத்தைத்தான் குறிக்கிறது. அது போல நாம் ஒவ்வொன்றையும் பார்க்க வேண்டும். இதற்கு அஸ்திர பூஷணாத்தியாயம் என்று பெயர். இதனுடன் முதல் அம்சம் முடிந்து விடுகிறது.


இரண்டாவது அம்சத்தில் பூகோளம் எப்படியுள்ளது, பதினாலு லோகங்கள் எவை? சிருஷ்டிக்கப் பட்டுவிட்டன என்று முதல் அம்சத்தில் சொல்லியாகிவிட்டது. அதில் என்னன்ன உள்ளது, காலம் என்பது என்ன? சூரியன் எப்போது உதிக்கிறார், சந்திரன் எப்போது உதிக்கிறார் - இந்த சரித்திரம் எல்லாம் இதில் உள்ளது. இரண்டாவது அம்சத்தின் கடைசியில் ஆத்மா, பரமாத்மா யார்? அவர்கள் வெவ்வேறா? எல்லா ஆத்மாக்களும் ஒன்றா? உடலும் ஆத்மாவும் வேறா? அவற்றைப் பிரித்துத் தெரிந்து கொள்வது எப்படி? இதை எல்லாம் ரிபுனிதார் என்கிற கதையில் சொல்லி, (மிக சுவாரசியமான கதை) முடிந்து விடுகிறது.


மூன்றாவது அம்சத்தில் பகவான் வேதங்களை எல்லாம் எப்படி படைக்கிறார், அதை வியாசர் எப்படி பிரித்துக் கொடுக்கிறார் என்பது பற்றி சொல்லப் படுகிறது. ரிக், யசஜூர் வேதங்களில் உள்ள சாகைகள், சாம வேதத்தில் உள்ள ஆயிரம் கிளைகள், வங்காளத்தில் எது உள்ளது, உத்தரபிரதேசத்தில் எது உள்ளது, காஷ்மீரத்தில் எது உள்ளது, தமிழகத்தில் எது பாடப்படுகிறது என்கிற ஆச்சரியகரமான விஷயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. வேதம் பயில்வதே பகவானை ஆராதிக்க தான். அதனால் ஆராதனை விதிகள் என்ன, ஆராதனை செய்ய ஒருவனுக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும், ஒருவன் பிறந்ததில் இருந்து என்னன்னா சம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும், இவற்றை செய்தவனுக்கு என்ன பலன், செய்யாதவனுக்கு என்ன தண்டனை ஆகியவை சொல்லப்படுகிறது.


நான்காவது அம்சத்தில் சூரிய பகவானின் வம்சத்தில் வந்தவர்கள் பற்றி ராமாவதாரம் வரை சொல்லப் படுகிறது. சீதை யாரிடத்தில் இருந்து பிறந்தார் என்றும் அவருடைய பூர்வ கதையும் சொல்லப்படுகிறது. யதுகுல வம்ச சரித்திரம் எல்லாம் சொல்லி கண்ணன் பிறந்தார் என்பது வரை சொல்லப்படுகிறது.


ஐந்தாவது அம்சத்தில் முழுக்க முழுக்க கிருஷ்ணன் பற்றியது. அவரது பால லீலைகள், சிறிது வளர்ந்த பிறகு அவர் செய்த செஷ்டிதங்கள், அதன் பின் அரசனாகவும், பாண்டவ தூதனாகவும் அனைத்து மக்களையும் ரத்சிப்பவராகவும் இறுதியில் இப்பூவுலகை விட்டு செல்வது வரை அனைத்தும் இதில் சொல்லப்படுகிறது.


ஆறாவது அம்சத்தில் நம்மிடம் கலியின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி விவரிக்கிறது. கலி எப்படி வித்தையை மறைத்து அவித்தியையை உண்டாக்குகிறது, அதை எப்படி நாம் வெற்றிக் கொள்ள முடியும் ஆகியவவைகளை சொல்லித் தருகிறது. இறுதியாக காண்டிக்ய கேசித்வஜ சம்வாதம் பற்றி சொல்லி இந்த அம்சம் முடிவடைகிறது. அதாவது காண்டிக்யம், கேசித்வஜா என்ற இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலை கேட்டு/படித்து அதில் இருந்து நமக்கு வேண்டிய படிப்பினையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு இந்த ஆறு அம்சங்களும் விஷ்ணு புராணத்தில் உள்ளது போல மற்ற புராணங்களிலும் பல மிக மிக பயனுள்ள அம்சங்கள் நம் நலனுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. பல புராணங்களை எழுதியும் தொகுத்தவரும் ஸ்ரீ பராசர மகரிஷி. இவர் வசிஷ்டரின் கொள்ளுப் பேரன், சக்தியின் பேரன், வியாசரின் மகன், சுகருக்குத் தந்தை. அத்தனை பெரிய பாரம்பரியத்தில் வந்தவர் பராசர முனிவர். அவரை நாம் கொண்டாட வேண்டும். அவர் எழுதியதை நாம் படித்தால் மட்டும் நமக்குப் புரிந்து விடாது. எழுதியவரை நாம் ஸ்தோத்திரம் செய்து வணங்க வேண்டும். அப்பொழுது தான் அந்த ஸ்லோகங்கள் நமக்கு விளங்கும். பராசர மகரிஷிக்கு உதாரர் என்ற பட்டம் உள்ளது, அதாவது மிகப்பெரிய வள்ளல். எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்கள் நலனுக்காகவே பொக்கிஷங்களை நமக்கு அளித்துள்ளார். சித், அசித், ஈஸ்வரன் இவை பற்றி மிக விவரமாக, எளிமையாக புரிந்து கொள்ளும்படி கொடுத்து விட்டுப் போயிருக்கிறார். அசித் என்பது நாம், சித் என்பது ஜடப் பொருள், ஈஸ்வரன் பகவான். நாம் சித்தை விட்டு ஈஸ்வரனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே இவரின் உபதேசம். இதை அவர் சித்தான ஜடப் பொருளுக்கு உபதேசித்து எந்தப் பயனும் இல்லை, எல்லாம் அறிந்த ஈஸ்வரனுக்கு உபதேசிக்கத் தேவையேயில்லை. அதனால் நமக்கு உபதேசிக்கிறார். இறைவனையும் உலக பந்தத்தையும் ஒரு சேர இண்டையும் பிடித்துக் கொண்டால் ஒரு பயனும் இல்லை, அதே சமயம் சித்தைப் பிடித்துக் கொண்டாலும் பிரயோஜனம் இல்லை. சித்தை வீடு ஈஸ்வரனைப் பற்றிக் கொள்ள வேண்டும், அல்லது ஈஸ்வரனைப் பற்றிக் கொண்டால் சித்தின் மீதான பற்றுதல் தானே விட்டுப் போய்விடும் என்கிற ரகசியத்தை, தத்துவத்தை இந்த புராண ரத்தினத்தின் மூலம் நமக்கு அளித்த பராசர பட்டரை நாம் நன்றி சொல்லி நமஸ்கரிப்போம்.


கோவில்களிலே சித்தரிக்கப்படுகின்ற சிற்ப வேலைப்பாடுகளுக்கு ஆதாரமாக விளங்குபவை புராணக் கதைகளாகும். திரிபுராந்தகர், காமாந்தகர், லிங்கோற்பவர் முதலிய சிவ வடிவங்கள் செதுக்கப் படுவதற்கு புராணக் கதைகளே மூலாதாரமாக விளங்கியுள்ளன. வைணவ சிற்பம் பாகவதபுராணக் கதைகளின் மூலம் பெறப்பட்டவையாகும். சக்தியின் மகிஷாசுர மர்த்தன வடிவங்களும் புராணக்கதைகளுடன் மிகவும் தொடர்புபட்டவை. முருகனின் தோற்றம் சிவபுராணம் மற்றும் ஸ்கந்தபுராணம் முதலியவற்றிலிருந்து பெற முடிகிறது. எனவே புராணங்கள் இந்து சிற்பக் கலையின் மூலாதாரமாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.


அந்தக் காலத்தில் எல்லா வகை புராணங்களும் செவி வழியாகப் பயிலப்பட்டு வந்து பிறகு, ஓலைச் சுவடிகளில் எழுத்து வடிவம் பெற்று அதற்கும் பிறகு புத்தகமாக வெளிவந்தது. இதைத் தவிர ஸ்தல் புராணம் என்றும் உள்ளது. அது ஒவ்வொரு கோவிலுக்கும் க்ஷேத்திரத்திற்கும் இருக்கும் மகிமையை விளக்குவது ஆகும். அவை வெறும் கதைகள் இல்லை. புராணக் கதை என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதன் பொருள் இன்று வழக்கில் இருக்கும் பொருள் அல்ல. சொல்வது/சொல்லப்பட்டது என்பது பொருள். இன்றும் இலங்கையில் இந்தப் பொருளில் தான் கதை என்ற சொல் வழக்கில் உள்ளது.


புராணங்களை நம்ப முடியாது, அவை வெறும் கட்டுக்கதைகள் என பலரும் சொல்வதுண்டு. இதற்கு காரணம் நாம் பார்க்கிற யதார்த்த நிலவரங்களுக்கு வேறான விஷயங்கள் இருப்பதால் அவற்றை நம்ப மறுக்கிறோம் என #தெய்வத்தின்_குரல் நூலில் காஞ்சி மகா பெரியவா குறிப்பிடுகிறார். மேலும் அவர் கூறுகையில், தேவர்கள் வந்தார்கள், தவம் செய்தார்கள், தெய்வங்கள் வரம் கொடுத்தன, பூமிக்கு வந்தன, பெண்ணை கல்லாக்கினார்கள், கல் பெண்ணாக மாறியது என இந்த காலத்தில் நடக்காததால் புரளி என்று தோன்றுகிறது. அதிலும் சூரியனை உதிக்காமல் நிறுத்துவதெல்லாம் நம் சக்திக்கு முடியாததால் வெறும் கட்டுக்கதை என நினைக்க தோன்றுகிறது. இந்த காலத்தில் முடியவில்லை, இந்த காலத்தில் நடக்கவில்லை என்பதற்காக எந்த காலத்திலும் நடக்காது, முடியாது என நாம் எப்படி சொல்லி விட முடியும்? வேதமந்திர சக்தி, உயர்ந்த தவம், யோக அனுஷ்டானம் ஆகியன முந்தைய காலத்தில் இருந்துள்ளதற்கு பல புத்தகங்கள் ஆதாரமாக உள்ளன. இதனால் தேவசக்திகளெல்லாம் இந்த லோகத்தினராலேயே எளிதில் உணர முடிந்தது. வெளிச்சம் இருந்தால் கூடவே நிழலும் இருக்கும். அதே போல் தேவசக்திகளை போலவே அசுர சக்திகளும் இருந்து கொண்டு தான் உள்ளன. தேவ அசுர வதம் இப்போதும் நன்மை - தீமை இடையேயான போராட்டமாக இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த காலத்தில் இந்த சக்திகளை தபோ சக்திகளை கண்களால் உணர முடிந்தது. இப்போதும் மனிதர்களின் கண்ணுக்கு புலப்படாத மர்ம சக்திகள், ஒலி-ஒளி அலைகள் நம்மை சுற்றி உள்ளதாக இருப்பதாக விஞ்ஞானமும் சொல்கிறது. இதற்கும் ஒரு படி மேலே போய், நல்ல வேவதைகள், துர்தேவதைகள் உள்ளன என்பதையும் விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது. அதற்கு பிறகும் நம்ப முடியாது என எப்படி சொல்ல முடியும்.


அதிசயமான விஷயங்களை வரலாறுகளாக ஏற்றுக் கொள்வதில்லை. பல்லவ மன்னனும், பாண்டிய மன்னனும் ஜைன மதத்தை விட்டு, சைவத்திற்கு மாறியதற்கு எந்த எழுத்துப்பூர்வ ஆதாரங்களும் இல்லை தான். அதனால் அவர்கள் மாறியது இல்லை என்று ஆகி விடுமா, ஏதாவது காரணம் இல்லாமல் அல்லது ஏதாவது பெரிய விஷயம் நடக்காமல் இரு பெரும் ராஜாக்களும் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியுமா? ஒரு காலத்தில் பெரிய உருவத்திலான மனிதர்கள், விலங்குகள் இருந்ததாக எலும்புகள், படிமங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதையே புராணங்களும் சொல்கின்றன. பூர்வ ஜென்மங்கள் பற்றி புராணங்கள் சொன்னால் நாம் சந்தேகிக்கிறோம். ஆனால் அதே விஷயம் செய்திதாள்களில் வந்தால் உண்மை என்று நம்புகிறோம். புராணங்களில் சிலவை கற்பனையாக இருக்கலாம். பிற்காலத்தில் வந்தவர்களின் இடை செருகல்களாக இருக்கலாம். அதற்காக அதில் குறிப்பிட்ட அனைத்தும் பொய், கற்பனை, கட்டுக்கதை என்று ஆகி விட்டாதே. நமது மன அழுக்கை, சித்த மலத்தை போக்குவற்காகவே புராணங்கள் இயற்றப்பட்டன. அதை மனதில் வைத்து பயபக்தியோடு படித்தால் அதற்குரிய பலன் கிடைக்கும். ஆட்சேபங்களுக்கும், சந்தேகங்களுக்கும் இடம் இருக்காது. ஆராய்ச்சி, விஞ்ஞானம் என சொல்லி விட்டால், அதன் பெயரால் என்ன சொன்னாலும் நம்பி விடுவது தான் மூட நம்பிக்கை. இவ்வாறு #புராணம் பற்றி நீண்ட விளக்கம் மூலமாக பதிலளிக்கிறார் காஞ்சி மகாபெரியவா.


இந்து மதத்தை முழுவதுமாக அறிய புராணங்களே களஞ்சியமாக விளங்குகின்றன. சிவ- விஷ்ணு வழிபாட்டுடன் வினாயகர், அம்மன், முருகன், சூரியன் வழிபாடுகளும் புராணங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆகமங்கள் சுருங்க கூறும் கருத்துகளுக்கு புராணங்கள் விளக்கங்கள் போல் அமைந்துள்ளன. சிவபெருமான் முக்கண்ணன், விட ஊர்தி, விரிசடைக்கடவுள், எண்தோள் வீசி நின்றாடும் பிரான் நீலகண்டன், இறைவி அவனுடைய உடலில் பாதி பற்றியுள்ளாள், சூலப்படையுடனும், வில்லைத் தாங்கியும், புலித்தோலை உடுத்தும்,சுடலைப் பொடி பூசியும் அவ்வப்போது தோன்றுவான் என இறைவனது திருகோலங்களுக்கு அமைய விரித்துக் கூறுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டே திருவுருவங்களை நாம் அமைத்து வழிபடுகிறோம். இறைவன் செய்த திருவிளையாடல்கள். சிவன் நடராஜ மூர்த்தி வடிவம் கொண்டு ஆனந்தத் தாண்டவம் ஆடி ஐந்தொழில்களைச் செய்வது ஆகியவற்றைப் புராணங்கள் கூறுகின்றன. இறைவனின் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் பற்றிய லிங்க புராணம் கூறுகின்றது. அதர்மங்களை அழித்தபோது பயங்கர உருவங்களை இறைவன் கொண்டதாக மத்சய, பாகவத புராணங்கள் கூறுகின்றன. சிவனின் முக்கண் மற்றும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களை மச்ச புராணம், பத்ம புராணம், கூர்ம புராணம் ஆகியன சொல்கின்றன.


புராணங்கள் பிராமணர்களை உயர்நிலையில் வைக்கிறது. மன்னர்களும், ரிஷிகளும் யாகம் செய்த நிகழ்வுகளையும், எப்படி யாகத்தைக் காட்டிலும் தவத்திற்கு அதிக மதிப்பு உள்ளது என்பதை புராணங்கள் விளக்குகின்றன. சிவனை அடைவதற்கு உமாதேவியார் செய்த தவத்தினையும், தாட்சாயினி தவம் செய்த வேளையில் நடைபெற்ற சகல விஷயங்களையும் மத்சய புராணம் கூறுகிறது. தீர்த்தம் பற்றியும், தீர்த்தமாடுவதனால் கிடைக்கும் பயன் யாகத்தினை விடப் பெரியதாகவும் சிறந்ததாகவும் அமையுமெனவும், தீர்த்தத்திலே நீராடுவதால் பாவங்கள் நிங்கும் என்ற சகல விஷயங்களையும் புராணங்கள் கூறுகின்றன. தியானம், விரதத்தின் மகிமை மற்றும் அவற்றின் வரலாறுகள், அவை கடைப்பிடிக்க வேண்டிய முறைகளை பற்றி கூர்மபுராணம், சிவபுராணம் கூறுகின்றன. அக்கினி புராணத்தில் வினாயகர் விரதங்கள் பற்றி விளக்கப்படுகிறது. மேலும் ஆலய வழிபாடு, ஸ்தலச்சிறப்பு, ஸ்தலயாத்திரை, ஸ்தோத்திர முறைகள் முதலிய அம்சங்களையும் புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.


இந்தப் புராணங்கள் மேலும் ஒரு முக்கிய உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்கின்றன. விஷ்ணு புராணத்தில் சிவபெருமானைப் பற்றி குறிப்பிடப்படுகிறது. சிவ புராணத்தில் விஷ்ணுவைப் பற்றி சொல்லப் படுகிறது. ஸ்கந்த புராணத்தில் எல்லா தெய்வங்களும் வருகிறார்கள். எந்தப் புராணத்தை எடுத்துக் கொண்டாலும் எந்த தெய்வத்தையும் உயர்த்தியும், தாழ்த்தியும், நிந்திப்பதும் இல்லை. ஆகையால் நம் இந்து மதத்தில் இப்பொழுது "திராவிடர்கள்" என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் பொய்யுரைப்பது போல் எந்த வித்தியாசமும், பாகுபாடும் நம் தெய்வங்களிடம் இல்லை என்பது புராணங்களில் இருந்து தெள்ளத் தெளிவாகிறது.

வேதவியாசரின் மகன் சுகரிடமிருந்து கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை வைசம்பாயனர், ஹஸ்தினாபுரத்து மன்னன் பரிட்சித்திற்கு எடுத்துக் கூறும் போது அங்கிருந்த சூத பௌராணிகரான உக்கிரசிரவஸ் அவைகளை நன்கு கேட்டார். அப்புராண இதிகாசங்களை, கோமதி ஆற்றாங்கரையில் அமைந்திருந்த நைமிசாரண்யம் எனப்படும் இடத்தில் உள்ள குலபதி சௌனகர் முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என மகாபாரத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட நூற்றியெட்டு(108) வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.

புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் முதன் முதலில் வருகிறது. சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பட்டுள்ளது என அறியலாம். "புராணவித், புராணி" போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச்சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலில் பாடியது சிவபுராணம். அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள்.


இந்திய வரலாற்றில் புராணங்கள் இன்றியமையாதவை. வானியல், மருத்துவம், வரலாறு மற்றும் பல பாடங்கள் போன்றவற்றில் உள்ள அறிவுதான் மக்களுக்கு புராணங்களின் மிகப்பெரிய பங்களிப்பு. உள்ளே உள்ள அனைத்து அறிவையும் கொண்டு, புராண நூல்கள் தங்கள் முன்னோர்களின் அறிவை குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கான சிறந்த ஆதாரங்களாக செயல்பட்டன. நவீன இந்து நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகளின் அடித்தளத்தை உருவாக்குகின்றன. பாடல், நடனம் மற்றும் நாடகம் போன்ற கலை புராண நூல்களால் ஈர்க்கப்பட்டது. இதேபோல், ஹோலி மற்றும் தீபாவளி போன்ற இந்து பாரம்பரியத்தில் கொண்டாடப்படும் நாட்காட்டிகள் மற்றும் தேதிகள் மற்றும் பண்டிகைகள் புராண நூல்களிலிருந்து வந்தவை. இந்த தாக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு பரதநாட்டியம், அதன் நடன அமைப்பு புராணங்கள் போன்ற நூல்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. புராணங்கள் பதிவுசெய்யப்பட்ட பல கையெழுத்துப் பிரதிகள் இன்றும் உள்ளன.

புராணங்கள் சொல்வதைத் தெரிந்து கொள்ள நம் மனத்தில் அவா இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் மேலும் மேலும் தெரிந்து கொள்ள நமக்கு அது உதவும். துஷ் பிராச்சங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் புராணங்கள் என்ன சொல்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள நாம் நிச்சயம் முயற்சி எடுக்க வேண்டும். பிரம்ம ஞானத்தைத் தெரிந்து கொள்ள நமக்கு விருப்பம் இருக்க வேண்டும். நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? எதற்காக இந்த மண்ணில் பிறவி எடுத்து இருக்கிறோம்? இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.


புராணத்தில் "அர்த்த பஞ்சகம்' என்று ஒன்று இருக்கிறது - பொருள் பொதிந்த ஐந்து விஷயகள். இந்த ஐந்தைத் தெரிந்து கொண்டு விட்டாலே நம் இந்த ஜன்மம் கடைந்தேறி விடும். ஆனால், நாம் எல்லோரும் இந்த ஐந்தை விட்டு விட்டு, ஐந்தாயிரம் விஷயங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறோம். அர்த்த பஞ்சகம் என்றால் ஜீவாத்மா, பரமாத்மா, உபாயம், பிரதிபந்தகம், கைங்கர்ய சொரூபம் என்னும் ஐந்துமே. ஜீவாத்மா என்பது "நாம் யார்' என்பதைப் பற்றிச் சொல்வது. உயிர்களைப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் கடவுளின் தன்மையை விளக்குவது பரமாத்மா. உயிர், கடவுள் இந்த இரண்டிலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. கடவுளை அடையும் வழியைச் சொல்வது மூன்றாவதான உபாயம். இதில் ஆயிரமாயிரம் வழிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் பலவித சமய நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. கடவுளை அடைய விடாமல் தடுக்கும் சம்சார பந்தத்தைப் பற்றிச் சொல்வது பிரதி பந்தகம். முக்தி நிலையில் கடவுளை அடைந்த உயிர், நித்யமான இன்பத்தை அடையும். இதற்கு கைங்கர்ய சொரூபம் என்று பெயர். இந்த நிலையை அடைந்தால், உயிர் எல்லை இல்லாத ஆனந்தத்தை அனுபவித்தபடி இருக்கும்.


என்ன இல்லை புராணங்களில்? புராணங்களை படிப்போம், பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வோம். உபன்யாசங்கள் மூலம் எளிதாக அவற்றை உள்வாங்குவோம். நாமும் அறிந்து நம் அடுத்த சந்ததியினருக்கும் எடுத்துச் செல்வோம். சனாதன தர்மம் தழைக்க நம் கடைமையைச் செய்வோம்.


சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.



பின் குறிப்பு:

18 புராணங்களின் பெயர்களை எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு ஸ்லோகம் உள்ளது.

மத்வயம் பத்வயம் சைவ ப்ரத்ரயம் வசதுஷ்டயம் I அனாபலிங்ககூஸ்கானி புராணானி ப்ருதக் ப்ருதக் II

இந்த ஸ்லோகத்தின் பொருள் :- இரண்டு ‘ம’, இரண்டு ‘ப’, மூன்று ‘ப்ர’, நான்கு ‘வ’ மற்றும் ‘அ’,’நா’.’ப’, ‘லிங்’, ‘க’, ‘கூ’,’ஸ்கா’ ஆகியவையே புராணங்களாகும்.

இரண்டு ‘ம’ என்பது மகாரத்தில் ஆரம்பிக்கும் மத்ஸ்ய மற்றும் மார்க்கண்டேய புராணங்கள் இரண்டு ‘ப’ என்பது பகாரத்தில் ஆரம்பிக்கும் பவிஷ்ய மற்றும் பாகவத புராணத்தைக் குறிக்கும். மூன்று ‘ப்ர’ என்பது ப்ர-வில் ஆரம்பிக்கும் ப்ரஹ்ம, ப்ரஹ்மாண்ட மற்றும் ப்ரம்மவைவர்த புராணத்தைக் குறிக்கும். நான்கு ‘வ’ என்பது வகாரத்தில் ஆரம்பிக்கும் வராஹ, விஷ்ணு, வாயு, மற்றும் வாமன புராணத்தைக் குறிக்கும். ‘அ’ என்பது அக்னி புராணத்தைக் குறிக்கும். நா’ என்பது நாரதீய புராணத்தைக் குறிக்கும். ‘ப’ என்பது பத்ம புராணத்தைக் குறிக்கும். ‘லிங்’ என்பது லிங்க புராணத்தைக் குறிக்கும். ‘க’ என்பது கருட புராணத்தைக் குறிக்கும். ‘கூ என்பது கூர்ம புராணத்தைக் குறிக்கும். ‘ஸ்கா’ என்பது ஸ்கந்த புராணத்தைக் குறிக்கும்.

ஆக இப்படி 18 புராணங்களையும் நினைவில் கொள்ள ஒரு சிறிய ஸ்லோகத்தை நினைவில் வைத்திருந்தால் போதும். காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.


புராணம் எனப்தை ஆங்கிலத்தில் myth என்று மொழிபெயர்க்கிறார்கள். அது தவறான பிரயோகம். Mythology என்பது கட்டுக்கதை என்ற பொருளிலும் வரும். புராணங்கள் கட்டுக்கதைகள் அல்ல. அவை வரலாற்று நிகழ்வுகள்.


Referenece: Upanyasam by Sri Velukkudi Krishnan Swamy

Upanyasam by Sri Dushyanth Sridhar Swamy

https://www.svat21.in/2021/03/blog-post.html

885 views2 comments

Recent Posts

See All

2 comentários


ranantha94
ranantha94
13 de nov. de 2022

ஞீ குருப்யோ நமக 🙏🙏😇😇 பிரமாதமான பதிவு

Curtir

Ganesan Srinivasan
Ganesan Srinivasan
11 de nov. de 2022

நல்ல தொண்டு! நம் சமயச் செல்வங்களை நன்கு புரிந்து கொண்டால் பல விபரீ்தங்களைத் தவிர்ப்பது மட்டுமில்லாமல் நல்ல மனிதர்களாகவும் வாழ முடியும்.

Curtir
bottom of page