#திருமங்கையாழ்வார்
#பெரியதிருமொழி
ஐந்தாம் திருமொழி - கலையும் (988)
988. கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்துபோய்,
சிலையும் கணையும் துணையாகச்
சென்றான் வென்றிச் செருக்களத்து,
மலைகொண் டலைநீ ரணைகட்டி
மதிள்நீ ரிலங்கை வாளரக்கர்
தலைவன், தலைபத் தறுத்தகந்தான்
சாளக் கிராம மடை நெஞ்சே
பாசுரத்தின் நேர்ப்பொருள்:
இங்கே கலை, கரி, பறி(மா) என்கிற வார்த்தைகளால், ஆழ்வார் மான், யானை மற்றும் குதிரையை குறிக்கிறார்.
கானம் என்றால் காடு;
திரியும் கடந்து போய் என்றால் காட்டில் சுற்றி அலைந்து வந்து என்று பொருள்; சிலை, கணை என்பது வில் அம்பை குறிக்கின்றன. இவை இரண்டையும்
துணையாக கொண்டு காட்டில் திரிந்து வந்தார் – யார்? - ஸ்ரீ ராமர்.
செருக்களம் என்றால் போர்க்களம் - வென்றி என்ற சொல் இங்கே, போர் என்று ஒன்று வந்தால் வெற்றி நிச்சயம் என்பதை சொல்கிறார் ஆழ்வார். ஏன் என்றால், அது ஸ்ரீ ராமர் புரியும் போர்.
சென்றான் -அப்படிப்பட்ட ஸ்ரீ ராமர் சென்றார் - எங்கே? இலங்கைக்கு - அது எப்படி பாதுகாக்கப்படுகிறது? மதிள் நீர் என்றால் சுற்றியும் மதில் சுவர்கள், சமுத்திரமே அகழியாக (உள்ளே செல்வதை தடுக்க
கட்டப்படும் பெரிய குழி நீரால் நிரம்பி இருக்கும்) இருக்கிறது;
எப்படி சென்றார்? மலை கொண்டு- வானரப்படைகள் உதவியோடு, எப்பொழுதும் ஓயாமல் அலைகள் அடிக்கும் அந்த கடலில், சிறிய பாறைகளை வைத்து பாலம் அமைத்து சென்றார்.
அங்கே யார் ஆள்கிறார்? இராவணன் -அரக்கர் தலைவன் - பெரிய வாளை துணையாகக்கொண்டு ஆண்டு வந்தான்.
ஸ்ரீ ராமர் போரில் இராவணனின் பத்து தலையையும் அறுத்தெடுத்து உகந்தர் என்கிறார் ஆழ்வார். போரில் பகைவனை வெல்லும் போது மகிழ்வது இயற்கை. இப்படிப்பட்ட ஸ்ரீ ராமரை திருசாளக்ராமத்தில் (தஞ்சம்) அடைய தன் மனதை ஆணை இடுகிறார்.
1 When you bow down (surrender), lord breaks that bow (your ego)
2 Credits: based on English meaning as given in www.koyil.org
அடியேனின் கற்பனை:
(பொன்)மான் ஸ்ரீ ராமர் சீதா தேவியை இழக்க காரணமாயிருந்தது; பொய்யான அழகு மற்றும் அதன் மேல் உள்ள பற்று, ஆபத்தை வரவழைத்தது. அர்ச்சா மூர்த்தி(சாளக்ராம வடிவத்தில்) ஸ்ரீ ராமனை நினைத்து முழு சரணாகதி (bow down before almighty) செய்தால், அவன் நமக்கு,யானையின் பலம், குதிரையின் (ஹயக்ரீவர் அருளால்) புத்திக்கூர்மையை கொடுத்து, போர்க்களமான இந்த வாழ்க்கை என்னும் பயங்கரமான காட்டை கடக்க அருள் செய்து, நாம் செய்யும் பக்தியும், சொல்லும் பகவன் நாமாவையும் பாலமாக அமைத்து, ஸம்ஸார சாகரத்தின் நடுவே, அஞ்ஞானம் என்ற இருட்டு கோட்டையில், செய்த பாவங்களே பெரும் அகழியாக அதை சுற்றி இருக்க, அஹங்காரம் என்னும் வாளுடன், பத்து இந்திரியங்களை (கர்மேந்திரியம் 5, ஞானேந்திரியம் 5) பத்து தலைகளாக வைத்துக்கொண்டு, நம்முள் இருக்கும் மனம் என்னும் ராவணனை அழிக்க, பகவத் கீதையில் 3 (Chapter 16 ஸ்லோகங்கள் 1 முதல் 3 வரை) கூறியுள்ள 26 குணங்களையும் 26 அம்புகளாக எய்தி, நமக்கு முக்தி அளித்து உகப்பான் என்பது உறுதி (அதுவே வெற்றி)! ஆதலால்,
சாளக்கிராமம் அடை நெஞ்சே!
சாளிக்ராமத்திற்கும் ஸ்ரீ ராமருக்கும் என்ன சம்பந்தம்?
சாளிக்ராமத்திலிருந்து சிறிது தொலைவில் தான் ஸ்ரீ ராமர் சிவ தனுசை முறித்து சீதா தேவியை திருமணம் புரிந்த இடம் (ஜனக்பூர் - Janakpur) இருக்கிறது. 26 அம்புகள் ஏன்? 5 பூதங்கள், 5 தன்மாத்திரைகள், 5 கர்மேந்திரியங்கள், 5 ஞானேந்திரியங்கள், 1 மனசு, 1
அஹங்காரம், 1 மஹத், 1 ப்ரக்ருதி, 1 ஜீவாத்மா and 1 பரமாத்மா – மொத்தம் 26.
Sarvam Sri Krishnarpanam
written by Adiyarkadiyan
yrskprasad@gmail.com
Comments