top of page
Writer's pictureAnbezhil

முக்தி - மோக்ஷம்

Updated: Jul 24, 2022

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்கிறார் ஔவை பிராட்டியார். மனிதப் பிறவி மிக உயர்வானது, உன்னதமானது. காரணம் வேறு எந்த பிறவியிலும் கிடைக்காத முக்தி என்கிற மோட்சம் இந்த மனிதப்பிறவியின் மூலம் தான் நாம் அடையமுடியும், அதனால் தான் மகான்கள், சித்தர்கள், ஞானிகள், கிடைத்த இந்த மானிடப் பிறவியில் பக்தியாலும், இறை வழிபாட்டாலும் முக்தி என்கிற பேரானந்த பேற்றினை பெற்றனர். முக்தி அல்லது மோக்ஷம் என்பது என்ன? எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாமை தான் முக்தி. முக்தி என்பது ஒரு வடமொழிச் சொல். அதற்கு தமிழில் விடுதலை என்று பொருள். எதில் இருந்து விடுதலை? மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதில் இருந்து விடுதலை! எங்கிருந்து வந்தோமோ அங்கு திரும்ப செல்லுதல், நம் பிறந்த வீட்டை அடைதல் முக்தி. எல்லையில்லா, முடிவில்லா ஆனந்தத்தில் திளைத்திருப்பது முக்தி. சமய நூல்கள் இதனைத்தான் இறைவனடி சேர்தல் எனக் குறிப்பிடுகின்றன. நான்கு முக்கிய சித்தாந்தங்கள் இந்து மதத்தில் உள்ளன. அவை துவைதம், அத்துவைதம், விசிஷ்டாத்வைதம், சைவ சித்தாந்தம் இவை முக்தியை ஒவ்வொரு விதமாக பார்க்கிறது, அதை அடையும் வழியும் வெவ்வேறாக அவை குறிப்பிடுகின்றன.

துவைதம்- துவி என்றால் இரண்டு. பிரபஞ்சமும், பரமாத்மாவும் வேறானவை. பரமாத்மா தனி, மற்றவை அதில் சேராதவை. பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருட்கள். உலகம் மாயை அல்ல, உண்மை. இந்நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர் ஸ்ரீமத்வர். இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் அநந்தேஸ்வரம் என்னும் கிராமத்தில் அவதரித்தார். தமது ஒன்பதாம் வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார். பிரம்மம் பிரபஞ்சம் ஆத்மா ஆகியவை எந்நிலையிலும் இணையாத முற்றிலும் வேறுபட்ட இருப்புகள் என்று சொல்லும் தத்துவ கோட்பாடு தான் இவர் முன் வைத்தது. பிரம்மமே பிற அனைத்தும் என்ற சங்கர வேதாந்தத்தை (அத்துவைதம்) துவைதம் முற்றாக மறுக்கிறது . இறுதி நிலையில் அனைத்தும் பிரம்மத்தில் ஒடுங்குகின்றன என்ற விசிஷ்டாத்வைத கொள்கையையும் அது ஏற்பது இல்லை. துவைதத்தின் முக்கிய கோட்பாடுகள்:

ஹரி என்று அறியப்படும் பகவான் விஷ்ணுவே முழுமுதற் கடவுள்.

அவரை சாஸ்திரங்களின் வாயிலாக தான் அறிந்து கொள்ள முடியும்.

பௌதீக உலகம் ஒரு தோற்றம் அன்று, அது உண்மையானது.

பிரம்மம் நாம் காணும் அறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்ட நமக்கு முற்றிலும் மேலான ஒரு பேரிருப்பு.

சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு.

ஜீவாத்மாக்கள் பகவான் விஷ்ணுவிலிருந்து வேறுபட்டவர்கள்.

ஜீவாத்மாவின் இயற்கை பகவானின் சேவகனாக இருப்பதுவே.

முக்தி பெற்ற நிலை, மாயைக்கு உட்பட்ட நிலை ஆகிய இரண்டு நிலைகளிலுமே ஜீவன்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு.

முக்தி என்பது பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளை அடைவதே, அருவப் பிரம்மனில் கலப்பது அல்ல.

தூய பக்தித் தொண்டினால் அந்த முக்தி சாத்தியமாகும்.

கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம்.

இவை துவதத்தின் நம்பிக்கைகள்.

இந்த சித்தாந்தத்தை மேற்கொள்பவர்களுக்கு முத்தி என்பது இயற்கை உருவாக்கும் அலைகள் அடங்கி பிரம்மத்தை உணர்ந்து அதற்கு முழுமையாக ஆட்பட்டு நிற்கும் நிலையேயாகும். இதை அடைய மத்வ மதம் முன்வைக்கும் வழி உணர்ச்சிகரமான தூய பக்தியேயாகும். இந்த சம்பிரதாயம் பல மகான்களை உலகுக்கு அளித்துள்ளது.

அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) - அதாவது இரண்டற்ற நிலை. ஜீவாத்மா என்பதும் பரமாத்மா (இறைவன்) என்பதும் ஒன்றுதான், வேறல்ல. சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது. ஆதிசங்கரர் முதன் முதலில் அத்வைத தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனுமிடத்தில் சிவகுரு - ஆரியாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக அவதரித்தார். அவர் உருவாக்கிய அத்துவைததில் மூன்று முக்கிய கோட்பாடுகள் உள்ளன.

1. பிரம்மத்தின் இரண்டற்ற நிலை.

2. பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபடாத நிலை.

3. உலகத்தின் உண்மையற்ற நிலை. (மாயை)

இதன் சாரம், 'பிரம்மம் ஒன்றே'. அத்வைத வேதாந்த நோக்கில் முக்தி என்பது ஒரு ஜீவாத்மா பிறப்பு-இறப்பு எனும் மீளாத சுழற்சியிலிருந்து நிலையாக விடுதலை பெற்று, பிரம்மத்தில் ஐக்கியமாவது. இந்த சித்தாந்தத்தில் ஜீவன் முக்தி, விதேக முக்தி மற்றும் கிரம முக்தி என மூன்று படிகளில் ஒரு மனிதன் முக்தியை அடையலாம். எப்பொழுது 'நான்' என்பது இல்லாமல் போகிறதோ, அங்கு மோட்சம் இருக்கிறது. 'நான்' இருக்கும்போது, அங்கு மோட்சம் இருக்க முடியாது என்கிறது அத்துவைதம்.

விசிஷ்டாத்துவைதம் மேலே கூறிய இரண்டும் சேர்ந்த நிலைப்பாடு. ஸ்ரீ இராமானுஜர் தோற்றுவித்தது. ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர் அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி.

வைணவர்கள் பின்பற்றுவது.

ஸ்ரீஇராமானுஜர், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை முதலியவற்றிற்கு தமது விசிஷ்டாத்வைதக் கொள்கைப்படி உரை எழுதினார்.

விசிஷ்ட + அத்வைதம் = விசிஷ்டாத்வைதம்.

அத்வைதம் இரண்டற்ற ஒன்றாக உள்ளது. விசிஷ்டம் - விசேஷம். விசிஷ்டாத்வைதம் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளால் ஆனவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து.

பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார்.

அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் ஜடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார்.

பரமாத்மாவே நிலையானவர்.

சுதந்திரம் உடையவர், சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரியனிடத்தில் சரணாகதி, அவர் மேல் அன்பு மற்றும் பக்தி, சுருதி, ஸ்மிருதி நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுத்தல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம் என்கிறது விசிஷ்டாத்வைதம். அதன் பின், நித்ய சூரிகளாக இறைவனிடத்தில் என்றென்றும் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் ஆனந்த நிலையே முக்தி.

உபன்யாசகர் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் ஒரு சொற்பொழிவில், வானில் நிலவு இருக்கிறது அதை நேரடியாக பார்க்கும் பொழுது துவைதம் அதே நிலவு கீழே தண்ணீரில் தெரிகிறது அதை பார்க்கும்பொழுது அத்வைதம் அதே நிலவை வானில் பார்க்கிறான் கீழிருக்கும் தண்ணீரிலும் பார்க்கிறான் அவன் கையில் உள்ள கத்தியிலும் பார்க்கிறான் மூன்றாக தெரிகிறது இது விசிஷ்டாத்வைதம் என்று அழகாக விளக்கம் கொடுத்துள்ளார்.


சைவ சித்தாந்தம்: இந்தத் தத்துவப் பிரிவு சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி ஆகும். மற்ற மூன்று கோட்பாடுகளுக்கு மாற்றாக, சைவ சித்தாந்தம் ஆன்மாவைப் பற்றிப் பேசுகிறது. சைவசித்தாந்தம் என்பது வேதங்களை ஆதாரமாக எடுத்துக் கொள்வதுடன் தனக்கு ஆதரவாக சைவ ஆகமங்களையும் எடுத்துக் கொள்கிறது. ஆகமங்கள் எப்போது தோன்றின என்று ஊகித்துக் கூறுவது கடினம். மகாபாரதத்தின் பன்னிரண்டாவது பர்வமாகிய சாந்தி பர்வத்திலும் ஆகம சாத்திரங்களைப் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன. ஆகவே ஆகமங்களானவை மிகத் தொன்மையானவை. ஆகமங்கள், வேதங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு எதிரானவை அல்ல. உண்மையில் வேதங்களும் ஆகமங்களும் ஒத்துப்போகின்றன. தலைசிறந்த ஞானியான திருமூலர் தனது திருமந்திரத்தில் வேதமும் ஆகமமும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதை மறுக்கிறார்.

வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல்

ஓதும் பொதுவும் சிறப்புமென் றுள்ளன

நாதன் உரையவை நாடில் இரண்டந்தம்

பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே.

இதன் பொருள் : " வேதங்களும் ஆகமங்களும் உண்மையானவை. அவ்விரண்டும் கடவுளைப் பற்றி விளக்குகின்றன. அவை முறையே கடவுளின் பொதுத் தன்மையையும், சிறப்புத்தன்மையையும் விளக்குவதாக கருதவேண்டும். அவை இரண்டும் கடவுளால் அருளப்பட்டவையே. அவை இரண்டும் தம் முடிவுகளில் வேறுபடுகின்றனவென்று சொல்லப்பட்டாலும், நன்கு ஆராய்ந்து பார்த்தால் அவ்விரண்டும் வேற்றுமை அற்றவை என்றே பெரியோர் கொள்வர். இந்த ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டதுதான் சைவசித்தாந்தம். பொயு. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த மெய்கண்டார் சைவசித்தாந்ததிற்கு ஒரு புதிய எழுச்சியை அளித்தார். அவர் எழுதிய சிவஞானபோதம் சைவ சித்தாந்தக் கொள்கை, சித்தாந்த சமயம் ஆகியவற்றை தெளிவாக விளக்குகிறது. சைவ அடியார்களின் தெய்வீகப் பாக்களை ஒருவகை அருள் இலக்கியம் என்று கூறலாம். அவற்றை பன்னிரு திருமுறைகளாக தொகுத்து அளித்தவர் நம்பியாண்டார் நம்பி என்பவர் ஆவார். ஞானசம்பந்தர், அப்பர்,சுந்தரர் ஆகிய மூவரும் பாடியவை தேவாரம் என்று அழைக்கப்படுகின்றன. அவையே முதல் ஏழு திருமுறைகள். மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். இந்த நால்வருக்குப் பின்னர் வாழ்ந்த சில அடியார்கள் எழுதிய பாக்கள் அடுத்துவரும் நான்கு திருமுறைகளாக அமையும். இவற்றில் கடைசி திருமுறை சேக்கிழார் எழுதிய "பெரியபுராணம்" என்பதாகும்.

மொத்தம் பதினான்கு நூல்கள் மெய்கண்ட சாத்திரங்கள் சைவ சித்தாந்தத்தை விரிவாக விளக்குகின்றன. முதன்முதலில் சைவசித்தாந்தம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியவர் திருமூலரே. ( சித்தாந்தத்தே சீவன்முத்தி சித்தித்தலால் திருமந்திரம் 2394).


சிவவாக்கியர் என்ற சித்தர் எழுதிய பாடல்

நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா ?

நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?

இப்பாடலை உற்றுநோக்கின் அதிலுள்ள ஓர் உண்மை புலனாகும். இறைவன் நமக்கு உள்ளே இருக்கின்றான், நாம் அதை உணரவேண்டும் என்பது இப்பாடலின் மையக்கருத்து ஆகும். சிவவாக்கியரின் பாடலில் உள்ள கேள்வி "நட்ட கல்லும் பேசுமோ?" என்பதாகும். அதற்கு விடை "நாதன் உள்ளிருக்கையில்" என்பதாகும். அதாவது கடவுள் நம்முள் இருக்கிறார், அதை நாம் உணரவேண்டும் என்பதாகும். கடவுளுடைய அருள் பெற்றவர்களால் கடவுளை உணர முடியும். மற்றவர்களால் முடியாது என்கிறது சைவ சித்தாந்தம். தானே அறிய இயலாமல் பிறிதொருவர் உணர்த்திய பின்பு தன்னை உணரக்கூடிய நிலையில் உடலுக்குள் ஆன்மா இருக்கிறது. உணர்த்தக் கூடிய இன்னொருவர் யார்? இறைவன். 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி'.


சைவசித்தாந்தத்தில் உள்ள பதி பசு பாசம் (அதாவது கடவுள், உயிர், உயிரைப்பற்றிய பந்தங்கள்) என்ற தத்துவம் சிறப்பு வாய்ந்தது. மக்களிடம் பிறக்கும் பொழுதே உள்ள திருவருளானது மேகங்களால் மறைக்கப்பட்டுள்ள சூரியனைப் போல மறைந்துள்ளது. அதேபோல இதயத்தில் உள்ள அருள் ஒளி பந்த பாசத் திரைகளால் மறைக்கப்படுள்ளது. அது பிரகாசமாகப் புலப்படவேண்டுமானால் பாசத்திரையை நீக்கம் செய்தல் அவசியமாகும். நான் யார்? எனத் தேடி தன்னை அறிவதே ஒரு பெரிய ஆன்மீக நிலை அனுபவம் ஆகும். பாச நீக்கத்தின் பொருட்டுச் செய்ய வேண்டிய நான்கு முக்கியமான சாதனைகள்: கேட்டல், சிந்தித்தல், தெளிதல் நிட்டைக் கூடுதல் எனபவாகும். அவற்றை யோகிகள் பத்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் எனக் கூறுவர். சிவனடியார்கள் அவற்றைச் சரியை கிரியை யோகம் ஞானம் என வர்ணிப்பார்கள். இதன் மூலமே முக்தியை இந்த மார்க்கத்தில் பெற முடியும். நன்றும் தீதும் பிறர்தர வாரா எனத் தெளிவு படுத்தியுள்ளனர். நன்மையும் தீமையும் இருமை வகையுடைய மனித மனத்தால் சிருஷ்டிக்கப் படுவனவாகும். அவை இறைவனுடைய சிருஷ்டி அல்ல. அவை இரண்டும் ஒரே நாணயமாகிய மனத்தின் இருபக்கங்களாகும். நன்மையிலும் தீமை உண்டு; தீமையிலும் நன்மை உண்டு. சான்றோர்கள் இவை இரண்டையும் சமமாகக் கருதி இவற்றிலிருந்து விடுதலைப் பெறுதலே மோட்சம் எனக் கொண்டனர். தமிழ் நாட்டில் சைவ சித்தாந்த ஆதீனங்கள் இச்சிந்தனையை வளர்த்துத் தொண்டு புரிகின்றனர்.

நாம் பிறவி எடுப்பது எதனால்?

நம் பாவ புண்ணியங்களின் பலனால்!

புனரபி ஜனனம் புனரபி மரணம் என்னும் திரும்பத் திரும்பப் பிறவி எடுக்கும் நிலை நமக்குப் பிடித்துள்ளதா?

நிச்சயமாக இல்லை என்பது தான் ஒரு முதிர்ந்த ஞானியின் பதிலாக இருக்கும். வாழ்க்கையில் இன்பத் துன்பங்கள் மாறி மாறி வருகின்றன. இன்பத்தில் மோகித்து மீண்டும் மீண்டும் பிறக்கிறோம், அல்லது பாவங்கள் பல செய்து மீண்டும் மீண்டும் பிறக்கிறோம். இந்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும், எது வரை? நமக்கு முதிர்ச்சி ஏற்படும் வரை! அப்பொழுது முக்தியை நாடத் தொடங்குவோம். சிற்றின்பங்கள் இல்லா உண்மையான பேரின்பத்தில் திளைத்திருக்கும் நிலையான முக்தியை அடைய துடிப்போம்.


பிறப்பின் ரகசியம் அல்லது பயன் என்ன?

மீண்டும் பிறவா நிலையை அடைவதே! அதாவது முக்தியை அடைவது.


முக்தியை அடைவது எப்படி?

மோக்ஷத்தைப் பெற பல வழிகள் உள்ளன. அதற்கு நாம் மேற்கொள்ளும் மார்க்கமே பாதையை வகுத்துக் கொடுக்கும். அத்துவைதம் ஞானத்தின் மூலம் மோக்ஷத்தை அடைய முடியும் என்கிறது. ஞானம் தான் பாம்பும், கயிறும் வேறு வேறு, யானை பொம்மையில் நிஜ யானை இருப்பதில்லை என்பதை போதிக்கிறது. அந்த ஞானத்தின் மூலம் மோக்ஷத்தை அடைய முடியும் என்கிறது. பக்தியின் மூலம் மோக்ஷத்தை அடைய முடியும் என்று துவைதம் கூறுகிறது. பகுத்தறிவால் முக்தியை அடைய முடியும் என்று சைவ சித்தாந்தம் அருள்கிறது. இன்னொரு மிக எளிய வழி இறைவனிடத்தில் சரணாகதி செய்வது, அனைத்துச் செயல்களையும் அவனுக்கே அர்ப்பணித்து விடுவது தான். இதை ஆச்சார்யான் மூலமாக செய்வது ப்ரபத்தி அல்லது சரணாகதி - இது விசிஷ்டாத்வைத முறை. விசிஷ்டாதுவதத்தில் ஒவ்வொரு ஜீவ ராசியும் பகவானின் சொத்து. எப்பொழுது அதை உணர்ந்து சரண் அடைகிறோமோ, முக்தி அளிப்பது இறைவன் பொறுப்பாகிறது. சரம ஸ்லோகம் எனப்படும் கீதையில் வரும்,

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ,

அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச

இந்த ஸ்லோகம், ஸ்ரீ கீதாசார்யனான கண்ணனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப் பட்டது. இதன் பொருள் நீ செய்யும் தர்மங்களே மோக்ஷ உபாயம் என்பதைக் கைவிட்டு, என் ஒருவனையே சித்தோபாயமாகப் பற்றிக்கொள், நான் உன்னை அனைத்து பாபங்களில் இருந்து விடுவிக்கிறேன் என்பதாகும்.

சரணாகதி என்றால் என்ன?

நம் முயற்சியால் எதுவும் முடியாது என்பதை உணர்ந்து, பெருமானே கதி, எனது பாரத்தை அவர் மீது வைக்கிறேன், எனது கர்மவினைகளை (பாவம் & புண்ணியம்) போக்கி என்னை வைகுந்தம் கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும், எனக்கு நித்யகைங்கர்யத்தை கொடுத்தருள வேண்டும் என்று நினைத்து வேண்டுவதே சரணாகதி ஆகும். ஒரு ஆசாரியன் மூலமாக நாம் இந்த சரணாகதியை செய்ய வேண்டும். சரணாகதியின் தத்துவத்தை பெருமானே அவரது மூன்று அவதாரங்களில் உபதேசித்துள்ளார். கூர்ம அவதாரம், ராமாவதாரம் மற்றும் கிருஷ்ணா அவதாரம். இதேபோல் ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் இதனை உபதேசித்து உள்ளனர். ஸ்வாமி ராமானுஜர் இந்த தத்துவத்தை உணர்த்த சரணாகதி கத்யம் இயற்றியுள்ளார்.


இந்து மதத்தில் பல கடவுள்கள் இருக்கிறார்கள். சிவனை வணங்குபவர்கள், அவனையே ஒரே கடவுள் என்று கவனம் செலுத்தி பரம்பொருளாக வணங்குங்கள் என்று ஊக்குவித்து இருக்கிறார்கள். அதேபோல் விஷ்ணுவே ஒரே கடவுள் என்று அவனை வணங்குபவர்கள், வேறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். நடுவில் இந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன், அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன் என்றால், அந்தந்தக் கடவுளர் தரும் நன்மைகளில் நாட்டம் வருகிறது என்றும் அல்லது, பரப் பிரம்மனையே அடைய வேண்டும் என்ற சிந்தையிலிருந்து விலகி, தோன்றும் உலகிலுள்ள பிற பயன்களை மனம் நாடுகிறது என்றும் ஆகி, தீவீர வழிபாட்டை நீர்க்கச் செய்து விடும். இந்தக் கோட்பாடுகள், முக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்குத் தேவை. முக்தியில் நாட்டம் இல்லாதவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி, எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த பலன்களுக்கு தேவதையோ, அந்தந்த தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம். அல்லது மனம் விரும்பும் தெய்வங்களை (இஷ்ட தெய்வங்களை) வணங்கிக் கொள்ளலாம்.


இந்த விஷயத்தில் பிரபத்தி செய்து கொண்ட ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது. அதே சமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக் கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண பகுத்தறிவு போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன் தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?


இதைச் சுட்டிக் காட்டும் வண்ணம் கீதையில் கண்ணன் கூறுகிறான். (7-16).

நான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்றனர்.

செல்வத்தை வேண்டி வழிபடுகின்றனர்.

துன்பத்திலிருந்து விடுபடவேண்டி வழிபடுகின்றனர்.

வேறு சிலர் இந்த இறைவன் எப்படிப் பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)

மெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.

இப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி" – எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல். முக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அதில் நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது பாவ கர்மாவை உண்டு பண்ணும்.

ராகவேந்திர சுவாமி, வள்ளலார் போன்ற மகான்கள் ஜீவ சமாதி மூலம் காற்றாகவும், சிலர் மண்ணாகவும், சிலர் நீராகவும், சிலர் நெருப்பாகவும், சிலர் ஒன்றும் இல்லாத வெற்றிடமாகவும் தங்களது ஆற்றலை மாற்றி முக்தி அடைந்து இருகிறார்கள். சிலர் பகவானை நேரில் தரிசித்து விட்டாலே நம் அனைத்து கர்மங்களும் தொலைந்து விடும், உயர்ந்த கதியை அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். பலபேர் பகவானை நேரில் தரிசித்தும் இருக்கிறார்கள். பஞ்ச பாண்டவர்கள், பீஷ்மாச்சார்யர், துரோணாச்சார்யார் இவர்கள் எல்லாரும் பகவானை தரிசித்தவர் தாம், கர்மங்கள் தொலைந்து முக்தி அடைந்து விட்டார்களா? இவர்கள் சொர்கத்துக்குப் போனதாக தானே புராணங்கள் கூறுகின்றன. இதைத் தவிர கெட்டவர்களான ராவணன், துர்யோதனன் போன்றவர்கள் பகவானை தரிசித்தும் மோக்ஷம் அடையவில்லை. மகாபலி பாணாசுரன் போன்றோர் பெருமாளை தரிசித்தும் மோக்ஷம் அடையவில்லை. நாம் என்னதான் பகவானை சேவித்தாலும் பகவான் தன்னை நமக்குக் காட்சி கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் தான் அது தரிசனம், நமக்கு முக்தியை அளிக்கும் தரிசனம், துருவனுக்குக் காட்சி கொடுத்தது போலே. அவர் திருவுள்ளத்துடன் நமக்கு தரிசனம் கொடுக்க வேண்டும். அது நம்மை சம்சார பந்தத்தில் இருந்து விடுவிக்கும்.


எப்படி முக்தி அடைவோம், நாம் வெளிவருவோமா அல்லது சம்சார சாகரம் நம்மை விட்டு விலகி விடுமா என்பதற்கு காஞ்சி மகா பெரியவா ஓர் (அத்வைத தத்துவம்) விளக்கம் கொடுக்கிறார். #தெய்வத்தின்குரல் ஆறாம் பகுதி, "மாயையை விட்டு ஞானி விலகுகிறான் என்றில்லாமல், ஞானியை விட்டே மாயை விலகுகிறது என்ற இந்த விஷயம் த்ரயம்பக மந்திரத்திலும் சொல்லியிருக்கிறது. ‘பந்தத்திலிருந்து உர்வாருகம் மாதிரி விடுபடணும்’ என்று முக்கண்ணனான பரமேச்வரனைப் பிரார்த்திக்கும் மகா மிருத்யுஞ்சய மந்திரம் அது. உர்வாருகம் என்றால் வெள்ளரிப் பழம். வெள்ளரிப் பழம் மாதிரி விடுபட வேண்டும் என்றால் என்ன? சொல்கிறேன். அந்தப் பழம் முற்றிக் கனிந்த பிற்பாடும் மற்றப் பழங்கள் மரத்திலிருந்து விழுகிறாற்போல் விழுவதில்லை. என்ன காரணமென்றால் அது பழுப்பது, காய்ப்பது எல்லாமே மரத்தில் இல்லை; கொடியில்தான். வெள்ளரி என்பது கொடியே தவிர செடியோ மரமோ இல்லை. அந்தக் கொடியையும் பந்தல் போட்டு படர விடும் வழக்கம் கிடையாது. முழுக்க பூஸ்பரிசம் இருந்தால்தான் அந்தக் கொடியின் வளர்ச்சிக்கு நல்லதென்பதால் நிலத்திலேயேதான் படர விடுவது. அதனால் என்னவாகுமென்றால் ஒரு வெள்ளரிக்காய் நன்றாகக் கனிவதும் நிலமட்டத்தில்தான்; உயரத்தில் ஒரு கிளையிலோ, பந்தலிலோ இல்லை. இப்படிப் பழம் முற்றி கனிந்தவுடன் காம்பு தானே இற்றுப் போய்விடும். ஆனாலும் பழம் இருந்த இடத்திலேயேதான் இருக்கும். ஏனென்றால் அதுதான் விழமுடியாமல் நில மட்டத்திலேயே இருக்கிறதே! கொடி பாட்டுக்கு படர்ந்துகொண்டே இருக்கும். அப்போது பழம் எந்த இலைப் பாகத்தோடும் காம்போடும் ஒட்டிக் கொண்டிருந்ததோ அவையும் நகர்ந்து போய்விடும். அதாவது காம்புதான் இதை விட்டு விலகிற்றே தவிர இது விலகுவது, விடுபடுவது என்ற காரியத்தைக் கூடப் பண்ணுவதில்லை!


இதே போலத்தான் – ஞானி சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவதென்பது, அது ஒரு விருக்ஷம் மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும், இவன் அதில் முற்றிப் பழுத்து விழுவது மாதிரியும் இல்லை. ஞானத்தில் அவன் பழுத்த பழமான பின்னும், தான்பாட்டுக்கு இருந்தபடியேதான் இருப்பான். வெளியிலே காரியம் பண்ணினாலும் உள்ளே அசலமாக, சலனமேயில்லாமல்தான் இருப்பான். சம்சாரத்திலிருந்து விடுபட்டு அப்புறம் மோக்ஷம் என்று எங்கேயோ ஒரு லோகத்திற்குப் போவது என்ற காரியம் அவனுக்கில்லை. த்வைதிகள் தான் அப்படி எங்கேயோ உள்ள ஒரு மோக்ஷத்திற்கு போவது. அத்வைத ஞானி இங்கேயே, இந்த லோகத்திலேயே, சரீரத்திலே இருப்பதாகத் தெரியும் போதே ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்றவன். அதுதான் விடுபட்ட நிலையான மோக்ஷம் என்பது. ‘விடுபட்ட’ என்றாலும் இவன் ஒன்றும் விடுபடும் கார்யம் பண்ணவில்லை. இவன் பண்ணியது ஆத்மாவே குறியாக விசாரம் செய்ததுதான். அதனால் ஸாக்ஷாத்காரம் வந்து, தான் ஆத்மாவே என்று தெரிந்து கொண்டு அதுவாகவே இருப்பான். அப்போது பந்தம், ஸம்ஸார மாயை என்பது அதுவே கத்தரித்துப் போய்விடும். த்வைதம் நகர்ந்து ஓடிப்போய்விடும். வெள்ளரிப்பழம் பூமியிலே இருப்பதுபோல இவனும் லோகத்தில் முந்தி எங்கே இருந்தானோ அங்கேயே ஜீவன் முக்தன் என்ற பெயரில் தொடர்ந்தும் இருந்து கொண்டிருப்பதாகத் தெரியும். ஆனாலும் லோகத்தில் தனி ஜீவ மனத்தின் வாழ்க்கை என்று வேரோடிப் படர்ந்திருந்த ஒரு கொடியோடு இவனுக்கு முந்தி இருந்த பிணைப்பு இப்போது கத்தரித்துப் போயிருக்கும். இவனாக விடுபடாமலே, இவனை விடுவித்துவிட்டு, அது ஓடிப் போயிருக்கும்! இதுதான் வெள்ளரிப்பழ முக்தி!

ஜீவன் முக்தி விதேக முக்தி. லோகத்தில் ஒருத்தன் இருக்கிற மாதிரித் தோன்றும் போதே ஞானம் வந்து மாயை விலகி, தனி மனசின் வேலை அடங்கிப் போய் ஆத்மானுபவத்திலிருந்து கொண்டிருப்பது தான் ஜீவன் முக்தி. லோக மாயை இவனிடமிருந்து அப்போது கத்தரித்துப் போய்விடுவதைத்தான் வெள்ளரிக்கொடி பழத்திலிருந்து கத்தரித்துக்கொண்டு ஓடுவதற்கு உவமித்தது. இப்படி லோக மாயை போனாலும் அந்த ஜீவன் முக்தனுக்கு சரீரம் இருக்கிறது. அவனுக்கு சரீர உணர்வு இல்லாவிட்டாலும் நாம் பார்ப்பதற்கு சரீரம் என்று ஒன்று தெரியத்தானே செய்கிறது? பிற்பாடு ஒருநாள் – அவனுடைய ப்ராரப்தம் முழுசாகத் தீர்ந்து போகும் நாள் வரும்போது அவனுடைய சரீரம் மரணமடைகிறது. அதுதான் விதேக முக்தி. ஞானியான அப்புறமும் அவனுக்கு இருந்த ப்ராரப்த கர்மா இப்போது அடியோடு இல்லாமல் வெடித்துவிட்டது. ஜோதியோடு ஜோதி மந்திரத்தில் முக்தி தரும் திரயம்பகேச்வரனை சுகந்தமுள்ளவன் என்றும் புஷ்டியை விருத்தி செய்கிறவனென்றும் சொல்லியிருக்கிறது. வெள்ளரிப்பழம் ஜீரணித்துப் போகாமல் நல்ல புஷ்டியுடனும், துர்கந்தமெடுக்காமல் சுகந்தமாகவும் இருந்துகொண்டே பட்டென்று வெடித்து, இல்லாமல் போய்விடுவது போல மேலே சொன்ன ஞானிகளின் சரீரத்துக்கும் ஏற்படுவதாகச் சொல்லலாம்.

வெள்ளரி விஷயத்தில் அது வெடிப்பதால் சத்தம் எழும்பும். இந்த மகான்கள் விஷயத்தில் சத்தமாகச் சொல்லாமல், ஜோதியோடு ஜோதி கலந்தது என்று சொல்கிறார்கள். அதாவது ஒலிக்குப் பதில் ஒளியைச் சொல்கிறார்கள். ஞானத்தில் போய்தான் என்றில்லாமல் உசந்த பக்தியிலேயே போய் நந்தனார், மீராபாய் போன்றவர்களும் இப்படித்தான் உடம்பைச் சவமாக விட்டுப் போகாமலே, அப்படியே சரீரம் மறைந்து அகண்டாகாரமானதாக இருக்கிறது. இதையும் வெள்ளரிப்பழ முக்தியாக உவமிக்கலாம்." #மகாபெரியவா


முக்தி பற்றி ஐயன் திருவள்ளுவர்,

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு

என்று கூறியிருக்கிறார். (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:352)

இன்பம் பயக்கும் மெய்யறிவு, வீடுபேறு என்கிற காட்சியை வேண்டுபவர் தன்னுள் உள்ள இருள் (எனும் மயக்கம், அறியாமை, துன்பம், குற்றங்களை) நீக்கிக் கொள்ள வேண்டும், எதன் மேலும் மயக்கம் அல்லது விருப்புக் கொண்டு இருந்தால் அதில் இருந்து நீங்க/விலக வேண்டும், தன்னுள் உள்ள எவ்வித ஒரு மாசு (அழுக்கு, தீமை, பாவம், குற்றம், இருள்) ஆகியவற்றை அறுத்தல் வேண்டும். (தன்னுள் உள்ள அறியாமை நீக்கி மயக்கத்தை நீக்கி மாசினை அறுத்தால்) அவ்வாறு செய்தால் அவர் இன்பம் பயக்கும் மெய்யுணர்ச்சியை அடைவார், அதாவது மோட்சத்தை அடைவார் என்கிறார் திருவள்ளுவர். இவர் விளக்கம் சைவ சித்தாந்த நெறியின் படி இருப்பது போல் உள்ளது.


முக்தி மார்க்கத்திற்கு சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கடவுளர்களையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்று மேற்சொன்ன யோகங்கள் காட்டுகின்றன. ஆனால் நான்முகப் பிரமன் விஷயம் அப்படிச் சொல்லப்படவில்லை. இருப்பதிலேயே, நான்முகன் பக்திதான் எளிதானது. வேதத்தைப் போற்றுதலும், வேதம் ஓதுதலை வளர்த்தலும், வேதம் ஒதுவோரை நன்முறையில் காத்தலும், அவர்களுக்குச் சேவை புரிதலும் பிரமனுக்குச் செய்யும் பக்தி என்று சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்பத்திலும் வேதத்தை நினைவுக்குக் கொண்டு வந்து உலகைப் படைத்து, வேதத்தை நிலை நிறுத்துபவன், நான்முகப் பிரமனாக இருக்கவே, வேதத்தைப் போஷித்தலே முக்திக்கு வழி என்றாகிறது. நான்முகப் பிரம்மனே வேத உருக் கொண்டவன் என்றும் ஆகிறது. அதனாலும் அவனுக்கென்று தனிக் கோயில் இல்லாமல் இருக்கலாம். அதனாலும், ஒவ்வொரு உற்சவத்திலும், முதலில் வேத கோஷம் செய்துகொண்டு கற்றோர் செல்ல வேண்டும். அவர்களைப் பின்தொடர்ந்து தான் மற்றோர் செல்வர். வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரம்மனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரம்மனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ அவன் முக்தி அடைவான். மும்மூர்த்திகள் மூலமும் முக்தி கிடைக்கும் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பல முக்தர்கள், சித்தர்கள் வரலாறுகள் இருக்கின்றன.

இதைப் பற்றி ஜைமினி, பாதராயணர் போன்றோர் விவாதித்த கருத்துகள் பிரம்ம சூத்திரங்களாக உள்ளன. மறு பிறவி என்னும் கர்மப் பிணைப்பிலிருந்து இந்த முக்தர்கள் விடுபட்டு விடுகிறார்கள். ஆனால் நான்முகப் பிரமனின் 100 வருட ஆயுளாக இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் கால் பகுதியைவிட்டு இவர்களால் வெளியேற முடியாது என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. நான்முகப் பிரமன் இருக்கும் பிரம்ம லோகத்தில் இவர்கள் நிலை பெற்று, அந்த நான்முகனின் ஆயுள் முடியும்போது அவனுடன், இந்தச் சக்கரத்தை விட்டு வெளியேறி, பிரபஞ்சத்தையே தன் கருவில் தாங்கும் பரம் பொருள் என்னும் அந்தப் பிரம்மனிடம் (Supreme Brahman) லயிப்பர். இந்தக் கால் பகுதி பிரபஞ்சத்தில் முக்தி அடைந்த உயிர்கள், எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம், எதை நினைத்தாலும் சாதிக்கலாம். படைத்தல் தொழில் தவிர, பரம் பொருள் செய்யும் எந்தச் செயலையும் செய்யக்கூடிய நிலையையும் ஆற்றலையும் அவர்கள் பெறுகிறார்கள். பல யுகங்களாக இருந்து வரும், காட்சி கொடுத்து அருள் பாலிக்கும் பல சித்தர்கள் இந்த வரிசையில் தான் வருவார்கள்.


அவரவர் தமதமது அறிவறி வகைவகை

அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்

அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்

அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

- திருவாய்மொழி

இப்பாசுரத்தில் நம்மாழ்வார், கடவுளர்களும், இறைசார் தத்துவங்களும் மதத்துக்கு மதம் வேறுபடுவது போலத் தோன்றினாலும், (இங்கே மதம் என்பது இந்து மதத்தில் உள்ள பிரிவுகள்) ஆன்மாவின் இலக்கு என்பது ஒன்றே என்ற ஆழ்ந்த கருத்தை பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே 4 அடிகளில் மிக எளிமையாக அருளியிருக்கிறார்.


ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில்


சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள்கேளாய்

பெற்றும்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதே

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றைநம் காமங்கள் மாற்றோலோர் எம்பாவாய்


என்று பாடியிருக்கிறார். கண்ணனே, மிக விடியற்காலையிலேயே நாங்கள் எழுந்து வந்து உன் அரண்மனையில் உன்னைச் சேவித்து பொற்றாமரை போன்ற உனது திருவடிகளைப் போற்றி, நாங்கள் கோரும் வரம் இதுதான். மாடு மேய்த்து உண்ணும் எங்களது ஆயர்குலத்தில் கோபாலனாக அவதரித்த நீ (பரம்பொருள் என்பதை நாங்கள் அறிவோம்), உனக்கு நாங்கள் செய்யும் சிறுசிறு தொண்டுகளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாங்கள் உன்னுடைய அருளை இன்றைக்கு மட்டும் பெற்றுக் கொள்ள வரவில்லை.

கோவிந்தா, எந்த காலத்திலும், ஏழேழு பிறவிகளிலும் நாங்கள் உன் அடியார்களாக பிறப்பு எடுத்து உன்னோடு இணைந்து வாழும் பேறு பெற்று உன் அருளைப் பெற வேண்டுகிறோம்.எங்களது உள்ளத்தில் எழும் மற்ற சிற்றாசைகளை நீ எங்களிடத்திலிருந்து நீக்கி, அதைப் பக்தியாக மாற்றி அருள் செய்ய வேண்டுகிறோம். இதுவே எங்களுடைய கோரிக்கை என்கிறார். இதுவே முக்திக்கான வழி.

அவனருளால் அவன் தாள் பணிந்து என்பது போல், உன் கருணை இருந்தால் மட்டுமன்றோ நாங்கள் உனக்குத் தொண்டு செய்து, பிழைக்க முடியும். அதை விடுத்து எங்களுக்கு, பறை, சங்கு, விளக்கு, கொடி, விதானம் ஆகியவற்றை நாங்கள் கேட்டுப் பெற்றது அல்ல உன்னைக் காண வந்த நோக்கம், போதும்! பகவானே! நீ ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் போதும், உன்னைவிட்டுப் பிரியாது உனக்குத் தொண்டு செய்து, உன்னடி போற்றுபவர்களுக்கு உன்னோடு உறவு உள்ளவர்களாக, நாங்கள் வந்து தொண்டு புரியவேண்டும்.

.உனக்கே நாமாட்செய்வோம். உன் ஒருவனுக்கே நாங்கள் தொண்டர்களாக இருந்து தொண்டூழியம் செய்ய வேண்டும். இது தவிர, மற்ற பணிகளில் எமது சிந்தனையும் செயலும் ஈடுபடாது. பிற செயல்களில் வரக்கூடிய ஆசைகளை நீயே மாற்றி அருளவேண்டும். உனக்குப் பணி செய்திருக்கும் தவமுடையேன். இனிப் போய் ஒருவன் தனக்கு பணிந்து கடைத்தல் நிற்கை நின் சாயை அழிவு கண்டாய் என பெரியாழ்வார் அழகரிடம் விண்ணப்பித்திருப்பதைப் போல், ஆண்டாளும் திருமால் ஒருவனே சரண்புகத் தக்கவன். அவன் திருவடிகளில் தொண்டு புரிவதே பிறவிப்பயன் என்பதை அழகாக விவரிக்கிறாள். இதுவே முக்தி பெற எளிய வழி. இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இப்பிரிவின் முக்கிய நம்பிக்கையாக உள்ளது. அதனால் ஆசாரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முக்திக்குத் தேவையான தியானம் இல்லாவிட்டாலும்கூட, முக்தரான இராமானுஜரைத் தியானிப்பதால், ‘தத்க்ரது’ கோட்பாட்டின்படி,(ஒன்றை தீவிரமாக நினைத்தால் நாம் அப்படியே ஆகிவிடுவோம்) வைணவர்கள் இராமானுஜரை அடைந்து, தாமும் முக்தி அடைவர். தெய்வம் கொடுத்த உறுதிமொழி இப்படி நடைமுறைப்படுத்தப்படும்.

நாம் நமது சொந்த முயற்சியால் கர்மங்களை போக்க நினைப்பது வேதங்களில் சொன்ன மார்க்கம். ஆழ்வார் சொன்ன மார்க்கம் – நம்மால் எதுவும் முடியாது என்று பெருமானின் திருவடியில் தஞ்சமடைந்து சரணாகதி செய்தால் அவர் நமது கர்மங்களைத் போக்குவார். நம் முயற்சியால் எத்தனை ஜன்மங்கள் ஆகும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் பெருமானிடம் சரணாகதி அடைந்தால் இந்த ஜென்மத்திலேயே மோக்ஷம் கிடைக்கும். அதாவது கருமங்களை போக்கும் நமது பாரத்தை பெருமானிடம் வைத்து விட வேண்டும். "கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே” ஸ்வாமி ராமானுஜரும் இதே தத்துவத்தை தனது வேதார்த்த சங்கரமத்தில் குறிப்பிட்டுள்ளார். கர்மாவை போக்கும் கார்யத்தை பெருமானிடம் ஒப்படைத்து சரணாகதி செய்தால் இந்தப் பிறவியின் முடிவில் மோட்சம் கிட்டும் என்பதே நம்மாழ்வாரின் வாக்கு🙏எம்பெருமானார் திருக்கச்சி நம்பிகள் மூலமாக வரதராஜ பெருமாளிடம் கேட்ட ஆறு வார்த்தைகளில் ஒன்று, அந்திம காலத்தில் பெருமாளை நினைத்தால்தான் வைகுந்தம் கிட்டுமா? தேவாதி ராஜனும் இதற்கு சரணாகதி செய்து என் மேல் திட விஸ்வாசம் கொண்டிருக்கும் அடியார்களை கடைசி காலத்தில் என்னை நினைக்காவிட்டாலும் வைகுந்தம் கொடுப்போம்! என்கிறார். இதிலிருந்து நாம் அறியும் விஷயம் என்னவென்றால் கடைசி காலத்தில் அவர் நம்மை நினைக்க வேண்டும் (அஹம் ஸ்மராமி மத் பக்தம்) என்றால்- சரணாகதி செய்த பின்னர் நாம் அவரை எப்பொழுதும் (நினைவு தப்பும் வரை) நினைத்து இருக்க வேண்டும்! கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்! ஆனால் சரணாகதி என்பது ஒரு நாள் விஷயமல்ல, வாழ்நாள் முழுவதும் பெருமானை அடிபணிந்து அந்த நினைவுடன் வாழ வேண்டும்.


மகா பெரியவா சொல்கிறார், "பரமேஸ்வரன் மீது ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதில் பக்தர் இப்படிச் சொல்கிறார். திரிபுர சம்ஹாரம் செய்த பிரபுவே, என்னுடைய இரண்டு அபராதங்களை க்ஷமிக்க வேண்டும். அந்த இரண்டு அபராதங்கள் என்ன? போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்காதது ஓர் அபராதம். வரப்போகிற ஜன்மத்தில் உன்னை நான் நமஸ்கரிக்காமல் இருக்கப் போவது இரண்டாவது அபராதம். போன ஜன்மத்தில் நான் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்று எப்படித் தெரிகிறது என்கிறாயா? எனக்கு இப்போது ஒரு ஜன்மம் ஏற்பட்டிருப்பதிலிருந்தே அது தெரிகிறது. போன பிறவியில் உன்னை நமஸ்கரித்து இருந்தால் அப்போதே எனக்கு மோஷம் கிடைத்திருக்கும். இந்த மறு பிறவியே ஏற்பட்டிராது. அது சரி, அடுத்த ஜன்மாவில் நமஸ்கரிக்க மாட்டேன் என்றது ஏன் தெரியுமா.

இந்த ஜன்மாவில் உன்னை நமஸ்கரித்துவிட்டேன் அல்லவா. அதனால் எனக்குப் பிறவியே தர மாட்டாய். மறு ஜன்மாவே இல்லாதபோது அப்போது உனக்குச் செய்ய வேண்டிய நமஸ்காரம் மட்டும் எப்படி இருக்கும். இப்படியாக போன ஜன்மா, வருகிற ஜன்மா இரண்டிலும் உன்னை வணங்காத குற்றத்தை மன்னித்துவிடு. இந்த ஸ்லோகத்திலிருந்து என்ன ஏற்படுகிறது? மனப் பூர்வமாக ஈஸ்வரனை நமஸ்காரம் செய்துவிட்டால் போதும். அவர் நம்மை ஜனன மரண சக்கரத்திலிருந்து விடுவித்துவிடுவார். நம் பாவங்களையெல்லாம் போக்கி முக்தி தந்துவிடுவார்." அதனால் இறைவனை நேரடியாக நமஸ்கரித்து அவனை சரண் அடைந்து முக்தியை பெறலாம் என்று அத்வைதம் சொல்கிறது.


உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

என்ற சரணாகதி தத்துவத்தை விளக்கும் செய்யுளே கம்ப ராமாயணத்தின் முதல் செய்யுளாக அமைக்கப்பட்டுள்ளது! உலகம் அனைத்தையும் படைத்துக் காத்து அதை நீக்கும் இடையறா விளையாட்டைக் கொண்ட அந்தத் தலைவனுக்கே நாங்கள் சரண் என்று கூறிப் பெரிய தத்துவத்தை நான்கே அடிகளில் தெளிவுபட விளக்கி விட்டார் கவி சக்கரவர்த்தி கம்பன்.


இறைவன் அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன். யசோதா எவ்வளவு பெரிய கயிறாய் எடுத்து வந்தாலும் அவளால் குறும்பு செய்யும் கண்ணனை உரலில் கட்ட முடியவில்லை, இரண்டு அங்குலம் குறைவாகவே இருந்தது. பிறகு அம்மாவின் தவிப்பைப் பார்த்து தானே கட்டுண்டான். இறைவனின் அன்பின் வெளிப்பாடே முக்தியை அடைய வெவ்வேறு வழிகளை நமக்குக் காட்டிக் கொடுத்திருப்பது. அவருடைய பிரதிநிதிகளாக ரிஷிகள், மகான்கள், ஆச்சார்யர்கள், தங்கள் ஆழ்ந்த ஞானத்தால் அவர்கள் அனுபவத்தை, முக்தி பெறுவது எப்படி என்று அவரவர் சார்ந்த சம்பிரதாயத்தை அல்லது மேற்கொண்ட வழிமுறைகளை வைத்து நமக்கு எளிமைப்படுத்தி அளித்துள்ளார்கள். இந்த அமிர்தத்தை பருகி நித்ய ஆனந்தத்தில் திளைப்பது மட்டுமே நம் வேலை. இவை அனைத்துக்கும் நாம் முதற்கண் நன்றி சொல்ல வேண்டியது ஸ்ரீ வேத வியாசருக்கு. அவர் தான் அனைத்து வேதங்களையும், உபநிஷத்களையும், புராணங்களையும் தொகுத்து மனிதர்களான நமக்கு அளித்துள்ளார். அதில் இருந்து தான் சனாதன் தர்மத்தின் பிரிவுகள் தோன்றின.


இது வரை முக்தி அடைந்தவர்கள் கணக்கிடலங்கா மகான்களும் சாமானியர்களும் ஆவர். பல மகான்கள் தங்கள் தவ வலிமையால் நிறைய பேருக்கு முக்தி அளித்திருப்பதையும் நம் தேசத்தின் ஆன்மீக வரலாற்றில் பார்த்திருக்கிறோம். இந்து மதத்தில் முக்தி என்பது அனைத்து ஆத்மாகளுக்கும் நிச்சயமாக கிடைக்கும் ஒன்று, இந்த ஜென்மத்திலோ அல்லது இனி வரும் எதோ ஒரு ஜென்மத்தில். எவருமே இதை அடைய விதிவிலக்கல்ல. எத்தனையோ மதங்கள் இருந்தாலும் இந்து மத வழியில் மட்டுமே முக்தி அடைய முடியும் என்பது ஆன்றோர் வாக்கு. இன்று வேற்று மதத்தில் இருப்பவர்கள், அவர்கள் நன்னெறி வாழ்க்கையை வாழ்ந்து வரும் பிறவியில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்து இந்து நெறியில் வேத வேதாந்தங்களைப் பயின்று, அதன்படி வாழ்ந்து, அவர்களும் முக்தியை அடைவது திண்ணம். நமக்கு இப்பிறவி மூலம் கிடைத்திருக்கும் நல்வாய்ப்பை சரியாக பயன்படுத்துவோம். நம் வாழ்வின் இறுதியில் இறைவன் திருவடியை சென்றடைவோம்.


சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்







https://www.holy-bhagavad-gita.org/chapter/18/verse/66

https://kadanthavai.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/









2,481 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page