top of page

முதல் மூன்று ஆழ்வார்கள்-பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

  • Writer: Anbezhil
    Anbezhil
  • Nov 12, 2021
  • 5 min read

ஆழ்வார்கள் என்றால் வேதத்தாலும் அளவிட்டு அறிய இயலாத பெருமாளின் எல்லா குணங்களையும் அவனருளாலே அறிந்து அனுபவிக்கும் ஞானம் பெற்றவர்கள் என்று கூறலாம். மொத்தம் பன்னிரெண்டு ஆழ்வார்கள். ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஒரே பரமனைத்தான். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே அவதரித்தனர். பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. எம்பெருமானுடைய திருவருளைப் பெற வேண்டும் என்பதற்காக ஆழ்வார்கள் அருளால் பிறந்த பாடல்கள் என்பதால் இவற்றை அருளிச் செயல் என்றே வைணவர்கள் சொல்லுவது வழக்கம். ஆழ்வார் என்கிற சொல்லின் உயிரான பொருள் இறைவனின் குணக்கடலில் ஆழ்ந்தவர்கள், பக்தி நிஷ்டர்கள் என்பதே. அனைத்து மக்களும் புரிந்து ஓத, திராவிட வேதம் என போற்றப்படும் தமிழ் மறையாம் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை இயற்றியவர்கள் ஆழ்வார்கள்.

ஆழ்வார்கள் வேறொன்றில் கண்வையாது பகவானின் எல்லையற்ற குணங்களான அமுத வெள்ளத்தில் ஆழ்ந்தவர்கள். அவனையே நினைந்து முதிர்ச்சியான பக்தியிலே மூழ்கியவர்கள். அப்படி மூழ்கி எழுந்தபோது கிடைத்த முத்துக்களைப் பக்திப் பனுவல்களாகப் பாடி கொடுத்தவர்கள். எனவே, இறைவனைப் பற்றிய ஆழமான தத்துவப் பொருள்களை சொன்னவர்கள் ஆழ்வார்கள் என்று எடுத்துக்கொள்ளலாம் . ஆழ்வார்களை சடகோபன், கலியன், பொய்கையார், குலசேகரன், தொண்டரடிப்பொடி, ஆண்டாள், என்று பல்வேறு பெயர்களால் அழைத்தார்கள். ஆழ்வார்கள் என்று கம்பீரமாக பெயர்சூட்டி அழைத்தவர்களில் சிறப்பானவர் ஸ்ரீமணவாளமாமுனிகள். அவர்தான் தம்முடைய உபதேசரத்தினமாலையில் ஆழ்வார் என்கிற பதத்தையும் அவர்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்ய பிரபந்த பனுவலை அருளிச் செயல் என்றும் பல்லாண்டு பாடுகின்றார்.

"ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி

தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி

ஏழ்பாரும் உய்ய அவர்கள் உறைத்தவை

கள்தாம் வாழி

செய்ய மறை தன்னுடனே சேர்ந்து.” (பாசுரம் 3, உபதேசரத்தினமாலை)

வடமொழி வேதங்களோடு இணைந்து தமிழ் மறையாய் விளங்குகின்ற அருளிச்செயலும், அருளிச்செய்த ஆழ்வார்களும் வாழவேண்டும் என்று போற்றுகின்றார்.


பன்னிரண்டு ஆழ்வார்களில் முதாலாழ்வார்கள் மூவர். சித்தாதிரி ஆண்டு ஐப்பசி மாதத்தில், அடுத்தடுத்த நட்சத்திரத்தில் இவர்கள் பிறந்தது ஒரு அதிசயதக்க உண்மை!

பொய்கையாழ்வார் திருமாலின் திருக்கரத்தில் உள்ள சங்கின் அம்சமாக ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில், காஞ்சிபுரத்தில் திருவெஃகாவை அடுத்த ஒரு பொய்கையில் பொற்றாமரை மலரில் அவதரித்தார். அவர் பொய்கையில் பிறந்ததால் அவருக்கு அந்தப் பெயர்.

மறு நாள் அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் கதாயுதத்தின் அம்சமாக மாமல்லபுரத்தில் நீலோற்பல மலரில் (குருக்கத்தி மலரில்) பூதத்தாழ்வார் அவதரித்தார். பூதம் என்னும் வடசொல் பூ என்ற அடிச்சொல்லில் இருந்து தோன்றியது. இதன் பொருள், சத்தைப் பெற்றது என்பது. (சத்து = அறிவு) திருமாலின் திருக்குணங்களை அநுபவித்தே அறிவைப் பெற்றவர் பூதத்தாழ்வார்.

அதற்கும் அடுத்த நாள் சதய நட்சத்திரத்தில் பெருமாளின் வாளின் அம்சமாய் மயிலாப்பூரில் உள்ள கிணற்றில் செவ்ல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார். இவருடைய பக்தி வைராக்கியத்தால் இவர் செய்த செயல்கள் சராசரி மனிதனை விட வேறு படுத்திக் காட்டியது. தம்மை மறந்த நிலையில், பேய் பிடித்தவர் போல, கண்கள் சுழலும்படி விழுந்து, சிரித்து, தொழுது, குதித்து ஆடினார், பாடினார். இதனால் இவரைப் பேயாழ்வார் என்று யாவரும் கூப்பிட்டனர்.


இவர்கள் பூவுலகத்தில் அவதரித்த முக்கியத்துவம் பல பரிமாணங்கள் கொண்டது. பக்தி, பரபக்தி, பர ஞானம் மற்றும் பரம பக்தி ஆகிய மூன்று நிலைகளை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தியதே அது. பெரும் பக்தர்கள்! இவர்கள் சம்பிரதாயத்தின் காவலர்கள். இவர்களிடையே என்ன ஓர் ஒற்றுமை பாருங்கள்! நீர் நிலையில், மூன்று வெவ்வேறு மலர்களின் மீது, ஒரு தாய் வயிற்றில் பிறக்காமல் இம்மூவரும் அவதரித்து உள்ளனர். இயற்கையை நேசிப்பவர்கள். ஞான தமிழைப் பாடி தமிழ் தலைவன் எனப் பெயர் பெற்ற ஆன்மீகக் கவிஞர்கள் இவர்கள்.தெய்வத்தின் அம்சமாகப் பிறந்ததினால் இயற்கையிலேயே ராஜச குணம், தாமச குணம் இல்லாமல் சத்வ குணத்தில் திளைத்திருந்தனர். பெருமாளின் அருளாலே மயர்வற மதிநலமும் அருளப் பெற்றிருந்தனர். இறைவன் மேல் அதிக பக்தியுடன், வைராக்கியத்துடன், போக வாழ்க்கையைத் துறந்து, மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் இன்னொரு நாள் இருக்காமல் வாழ்ந்து வந்தனர். ஒருவரை ஒருவர் அறியவில்லை. இவர்கள் மூவரும் சந்திக்காமலே வாழ்ந்து வந்தாலும் இறைவன் மேல் திவ்யப்பிபந்தங்களை இயற்ற வேண்டிய தருணம் வந்ததும் மூவரும் திருக்கோவலூரில் சந்தித்துக் கொள்கின்றனர். எல்லாமே அவன் செயல் தானே!

முதலில் திருக்கோவலூர் வந்தவர் பொய்கையாழ்வார். அவர் மிருகண்டு முனிவரின் ஆசிரமத்தில் உள்ள ஒரு மிகச் சிறிய அறையில் தங்கி (ரேழி மாதிரி) சயனித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த பூதத்தாழ்வார் தனக்கும் அங்கு தங்க இடம் இருக்குமா என்று வினவினார். அதற்குப் பொய்கையாழ்வார் இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம் என்று கூறி பொய்கையாழ்வாரை வரவேற்றார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி உரையாட ஆரம்பித்தார்கள். அப்பொழுது அங்கு வந்த பேயாழ்வார் அவரும் தங்க இடம் கேட்க, ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று கூறி அவ்விருவரும் பேயாழ்வாரை வரவேற்றனர். நெருக்கி நின்று கொண்டு மூவரும் இறைவனின் பெருமையை சொல்லியும் கேட்டும் மகிழ்ந்தனர். இந்த சந்தோஷ சூழ்நிலையில் அங்கிருக்க விரும்பி எம்பெருமானும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அந்த சிறிய இடத்தில் அவர் வந்து அவரும் நெருக்க ஆரம்பித்ததும், யார் தங்களை நெருக்குவது என்ற கேள்வி அவர்கள் மனத்தில் எழுந்தது. இரவு நேரம். சுத்தமாக வெளிச்சம் இல்லை. எப்படி காண்பது? விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது. சாதாரண விளக்கில்லை ஞான விளக்கு. ஏன்? நான்காவது ஆளைத் தொட்டு உணர முடியவில்லை. உணர முற்பட்டு மூவரும் இறைவன் பால் திவ்யபிரபந்தப் பாடல்களை பாட ஆரம்பித்தனர். இதுவே நல்லாரம்பம்! அப்போது முதலில் வந்த பொய்கையாழ்வார் அந்தாதி தொடங்குகிறார் இப்படி:

வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடர்ஆழி நீங்குகவே என்று (பொய்கையார்)

(வையம் = மண்ணுலகம்; தகளி = அகல்; வார் = நீண்ட; வெய்ய = வெம்மையான; சுடர்ஆழி = ஒளிமிக்க சக்கரப்படை; இடர்ஆழி = துன்பமாகிய கடல்)

எல்லாமுமாக இருக்கும் இறைவனுக்குச் சின்னஞ்சிறு அகல்விளக்கு ஏற்ற விரும்பவில்லை அவர். இறைவன் தகுதிக்கு ஏற்பப் பெரிய விளக்கேற்ற உள்ளம் கொண்டார். எனவே இவ்வுலகத்தையே அகல்விளக்காகவும், அதனை வளைத்துக் கிடக்கும் பெரிய கடல்நீரையே நெய்யாக வார்த்தார். அக்கடற்பரப்பின் ஒரு விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும் சூரியனை அதிலேற்றும் சுடராக்கி ஞான விளக்கேற்றி வழிபட்டார். அது அகவிருள் அகற்றும் விளக்காதலால், உலக மாயையையே உண்மையெனக் நினைக்கும் ஆத்மாக்களுக்கு வீடுபேறளிக்கும் என்பது அவர் நம்பினார்.

பொய்கையாழ்வார் இறைவனை ஐம்புலன்களாலும் காண்கிறார். மேலும் நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐம்பூதங்களாகவும், அழிவற்ற மெய்ஞ்ஞானமாகவும், ஞானமுடையார் செய்யும் வேள்வியாகவும், அறமாகவும் கண்டு மகிழ்கின்றார். இவர் இயற்றிய 100 வெண்பாக்கள் முதல் திருவந்தாதி என்று பெயர்பெற்றன. அதற்கான் முதல் பாடலே வையம் தகளியா.

இந்தப்பாடலில் அகல் உள்ளது, நெய் உள்ளது, சுடர் உள்ளது. ஆனால் திரி இல்லை. திருவரங்கத்தமுதனார் இராமானுச நூற்றந்தாதியில் இதைக் குறிப்பிடுகிறார்,

'வருத்தும் புறவிருள் மாற்ற எம்பொய்கைபிரான் மறையின்

குருத்தின் பொருளையும் செந்தமிழ் தன்னையும் கூட்டி ஒன்றைத்

திரித்தன் றெரித்த திருவிளக்கு'

அதாவது வருத்தும் புற இருள் மாற்ற பொய்கையாழ்வார் வேதங்களின் பொருளையும், தமிழையும், தன்னையும் கூட்டித் திரியாக்கி தீபச் சுடரை ஏற்றினார் அன்று என்று சொல்கிறார்! என்ன அருமையான ஒரு எண்ணம்.

அடுத்து பூதத்தாழ்வார் அன்பே விளக்காகவும், ஆர்வமே நெய்யாகவும், சிந்தையே திரியாகவும் கொண்டு ஞான விளக்கை ஏற்றி நாராயணனைத் துதித்தார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான் (1)

(சிந்தை = உள்ளம்; நன்பு = நன்மை)

அன்பு, ஆர்வம், இன்பு என்றவை எல்லாம் இறைவன் பால் ஏற்படும் ஈர்ப்பில் நமக்குண்டான சிறப்பு நிலைகளாகும். உலகில் பொருள்கள் பிரகாசிப்பதற்கு விளக்கு ஏற்றுவர். இவரும் நம் இயல்பும் பெருமாளின் இயல்பும் பிரகாசிப்பதற்காக ஞானச் சுடர் விளக்கை ஏற்றினார்.

இவ்விருவர் ஏற்றிய விளக்கில் பேயாழ்வார் இலட்சுமி நாராயணனைக் கண்டார்.

திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன் என்ஆழி வண்ணன்பால் இன்று

(அருக்கன் = கதிரவன்; செருக்கிளரும் = போர்க்களத்தில் கிளர்ச்சியுடன் விளங்கும்; பொன்ஆழி = பொன்மயமான சக்கரப்படை; சங்கம் = சங்கு;ஆழிவண்ணன் = கடல் நிறம் கொண்ட பெருமான்.)


பரிந்துரை கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன். அவருடைய சேர்க்கையினாலே நிறம் பெற்ற திருமேனியைக் கண்டேன். சூரியன் போன்ற அழகிய நிறத்தையும் கண்டேன். போரில் சீறும் திருச்சக்கரத்தையும், மற்றொரு திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்' என்கிறார் பேயாழ்வார். பொன்னின் நிறம் போன்ற திருமகளின் நித்ய சேர்க்கையாலே அப்படியே பொன்னிறத்தைப் பெற்றது பெருமானின் கரிய திருமேனியும்.


இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். மூவரும் உலகுய்ய திவ்யபிரபந்தங்களை அருளிச் செய்து பெருமாளின் கல்யாண குணங்களையும் விரிவாக அனுபவித்து, பிறரையும் அனுபவிக்கச் செய்தனர். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்ற கூற்றை பொய்யாக்கி அவர்கள் இறைவனைக் கண்டு அதனை நம்முடன் பகிர்ந்ததே அவர்களின் அளப்பறியா அன்புக்குச் சான்று.


ஆன்மீகத் தேடலின் பாதை இவ்வாறு

1.தெய்வத்தைச் சந்திக்கும் ஆர்வம்

2.தெய்வ தரிசனத்துக்ககக் காத்திருத்தல்

3.ஆன்மாவின் கேவல்

4.தெய்வீகத் தோற்றம்

5.தெய்வத்துடன் சந்திப்பு

ஆழ்வார்கள் ஆயினும் அவர்களுக்கும் இதே பாதை தான் இருந்திருக்கிறது என்று அவர்கள் வரலாற்றைப் படிக்கும்போது தெரிகிறது. திருப்பாற்கடலும் திருவேங்கடமும் எம்பெருமானின் இருப்பிடங்களாக இருந்தாலும், அவ்விடங்களில் அவர் இருப்பதே சமயம் பார்த்து பக்தனின் மனத்தில் குடிகொள்ளத் தான் என்று நிச்சயமாகக் கூறுகிறார் பொய்கையாழ்வார். நம்மைக் காப்பதே அவர் தொழில் என்கிறார். இப்படிப்பட்டத் தேடல் எவருக்கு இருந்தாலும் பக்தி மார்க்கத்தின் மூலம் ஒருவர் தன் ஆன்மாவின் உண்மை நிலையை உணர்ந்து, இறைவனை அறிந்து கொள்ள ஏற்படும் ஆசையின் மூலம் தியானத்தில் ஆழ்ந்து, ஆன்மாக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பினை அறிந்து கொள்ள முடியும். அப்பொழுது பக்தி முதிர்ந்த நிலையில் இறைவனைக் காண முடியும் என்கிறார்.


உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமநேன்றும்

உளன் கண்டாய் உள்ளுவா ருள்ளத் - துளன்கண்டாய்

வெள்ளத்தி னுள்ளானும் வேங்கடத்து மேயானும்

உள்ளத்தி னுள்ளானென் றோர்

எங்கும் எல்லாவற்றிலும் என்றும் நின்று அருளும் பரம்பொருள் (omnipresence) இந்த மனித உள்ளத்துக்குள்ளும் கோவில் கொண்டுள்ளது என்கிறார் பொய்கையாழ்வார். எந்தத் துன்பம் உண்டானாலும் அவன் அருளைத் தேடினால் நிச்சயமாக அவ்வருளைப் பெறுவாய் என்று மூன்று ஆழ்வார்களுமே உறுதியளிக்கிறார்கள். வெளியில் எங்கும் போய் தேடவேண்டியதில்லை, கொஞ்சம் தியானித்தால் உள்ளத்துக்குள்ளேயே காண்போம் என்கிற நம்பிக்கை இவர்கள் இயற்றிய மூன்று திருவந்தாதிகளைப் படித்தால் புரியும். இவர்களின் முதல் பாசுரமே அதை பிரதிபலிக்கிறது.


மற்ற ஆழ்வார்களுக்கு முன்பாக அவதரித்து அவர்களுக்கு வழிகாட்டியாகத் திவ்யபிரபந்தங்களை முதன் முதலில் அருளிய பெருமையால் இவர்கள் முதலாழ்வார்கள் என்று பெயர் பெற்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 100 பாசுரங்கள் இயற்றினர், அவையே முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி என்று போற்றப்படுகின்றன.

பிற சமயக் கண்டனம் இல்லாமை, பக்திப் பிரவாகம், பெருமாளின் திருவடி பெருமையைப் போற்றுதல், வழிபாட்டு நெறி காட்டுதல்,"தன்னனுபவக் கூறல்" இவை இம்மூவர் பாடல்களின் சிறப்பு அம்சங்கள். இறைவனைக் கண்டதை இவர்கள் நம்முடன் பகிர்கிறார்கள். மாதவனின் பெயரைச் சொல்வதே இனிமையான எளிமையான உய்யும் வழி, அதுவே வேதங்களுக்கு நிகர் என்ற உண்மையை நமக்கு எடுத்துரைத்துள்ளனர்.


அவர்கள் பல திவ்யதேச யாத்திரை செய்து யோக பலத்தால் நெடுங்காலம் வாழ்ந்திருந்து பிறகு மறுபடியும் திருக்கோவலூரையே அடைந்து அங்கேயே திருநாட்டுக்கு எழுந்தருளினர்.


அறியாமை இருளுக்கு எதிராக விளக்கேற்றி பகவானை தரிசனம் செய்தனர். நம்மையும் தரிசிக்க வைத்தனர். அவர்களின் படைப்புகளான முதல், இரண்டம் மற்றும் மூன்றாம் திருவந்தாதிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் அவர்களின் அவதார நாட்களைக் கொண்டாடுவோம்.

ஆழ்வார் திருவடிகளே சரணம்!





ref:

https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26846

 
 
 

留言


Subscribe Form

Thanks for submitting!

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2020 by Anbezhil's musings. Proudly created with Wix.com

bottom of page