top of page
  • Writer's pictureAnbezhil

ராதே ராதே ராதே, ராதே கோவிந்தா!

பக்தியில் பலவகை உண்டு. அதில் 'காதல்' பாவத்தில் கிருஷ்ணனை நேசித்து அவனுடன் ஓருயிராக இணைந்து, அணுவளவும் அவனை விட்டுப்பிரிய மனமினறி வாழ்ந்து, பரமாத்வான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மா ராதை! அதனாலேயே அவள் பெயரைத் தன்னோடு இணைத்து 'ராதா' கிருஷ்ணன் ஆனார். கிருஷ்ணனுக்கு 16,008 மனைவிகள் இருந்தாலும் நாம் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனை வழிபடும்போது ராதையைத் தான் அவருடன் வைத்துக் கொண்டாடுகிறோம். சீதா கல்யாணமோ,ருக்மிணி கல்யாணமோ ராதா கல்யாணத்தை விட எண்ணிக்கையில் குறைவு. ராதா கிருஷ்ணன் என்ற பெயர் பாரதம் எங்கும் பரவி யிருக்கிறது. வட இந்தியாவில் ராதா கிருஷ்ண மந்திர் இல்லாத ஊரே கிடையாது. இவ்விதம் ராதைக்கு பெருமை இருந்தும் ஸ்ரீமத் பாகவதத்திலோ, மகாபாரதத்திலோ ராதா பற்றிய குறிப்பு இல்லை. ஆனால் ராதையைப் பற்றி விரிவாகத் தனி புராணமே இருப்பதால், ஸ்ரீ வ்யாச பகவான் ராதையைப் பற்றி பாகவதத்திலோ, பாரதத்திலோ சொல்லவில்லை என்று தோன்றுகிறது. ராதையைப் பற்றி ப்ரம்மவைவர்த்த புராணத்தில் வ்யாசர் விரிவாகச் சொல்லியிருக்கிறார். மேலும் ஸ்ரீ தேவி பாகவதம், கர்க ஸம்ஹிதை, பாத்ம புராணம், பிரம்மாண்ட புராணம் முதலியவைகளிலும் ராதையின் பிரபாவம் சொல்லப்பட்டிருக்கிறது.


ப்ரம்மவைவர்த்த புராணத்தில் ராதா சரித்திரம் பின்வருமாறு உள்ளது. ‘வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணன் வசிக்குமிடம். வைகுண்டத்திற்கும் ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது கோலோகம். இதற்கு அதிஷ்டான தேவனான ஸ்ரீ கிருஷ்ணன் ராதையுடன் வீற்றிருக்கிறார். வைகுண்டபதி, கோலோகாதிபதி இருவரும் ஒருவரே. ஒரு சமயம் கோலோகத்தில் ராஸ மண்டலத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் ராதையுடன் லீலைகள் புரிந்து கொண்டிருந்தபோது, ராதை தன் பரத்வத்தை மறந்தாள். உடனே பகவான் மறைந்தார். ‘விரஜா’ என்ற மற்றொரு கோபியுடன் காலம் கழித்தார். ராதை தன் தோழிகளின் மூலம் கிருஷ்ணன் இருப்பிடம் அறிந்து விரஜாவின் வீடு வந்தாள். விரஜாவும் க்ருஷ்ணனும் மறைந்தனர். ராதை தன் வீடு வந்து துக்கம் தாளாமல் படுத்திருந்தாள். அது சமயம் க்ருஷ்ணன் ராதையைத் தேடி அங்கு வர, ராதை கோபத்துடன் கிருஷ்ணனைத் தாறுமாறாகப் பேசி வெளியேறச் செய்தாள். ராதையின் கடுமையான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதாமா (க்ருஷ்ணனின் பரிவாரத்தில் ஒருவன்) ராதையைப் பார்த்து “தாயே! தாங்கள் ஹரியிடம் இவ்விதம் நடந்து கொள்ளலாமா? உங்களுடைய பதவிக்கு அவர் தானே காரணம்” என்று சொல்ல, ராதை அவனை மானிடனாகப் பிறக்க சபித்தாள். ஸ்ரீதாமாவும் ராதையைப் பார்த்து மானிடரைப் போல் கோபமடைந்ததால் நீ மனுஷியாகக் கடவாய், பிருந்தாவனத்தில் ‘ராயனன்’ என்ற வைஸ்யனுடைய மனைவி என்று உன்னைச் சொல்லுவார்கள். பிறகு கோகுலத்தில் கிருஷ்ணனை அடைந்து, ஸுகித்து, பல வருஷங்கள் பிரிந்திருந்து மறுபடி கூடிக் கடைசியில் கோலோகம் திரும்புவாய் என்று சொன்னான். பிறகு விஷயங்களை அறிந்து ஸ்ரீ கிருஷ்ணன் ராதையைப் பார்த்து, “நீ வ்ருஷபானுவின் மகளாக பிறப்பாய், நான் அங்குவந்து பால ரூபனாய் உன்னை ஏற்றுக் கொள்கிறேன்” என்றார். ராதையும் அவ்விதமே வ்ருஷபானு கலாவதி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்து ஸ்ரீ கிருஷ்ணனின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.


வ்ருஷபானு திருமகள் ராதையின் அவதார தினம் மார்கழி மாதம், சுக்லபக்ஷ அஷ்டமி என்று பாத்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பிறகு கிருஷ்ணனும் மதுராபுரியில் வஸுதேவ தேவகி மகனாகப் பிறந்து, பிறந்தவுடனேயே கோகுலம் சேர்க்கப்பட்டு, நந்தகோபன் யசோதா தம்பதிகளால் வளர்க்கப் பட்டு, பால லீலைகள் பல செய்த விவரம் ப்ரஹ்ம வைவர்த்த புராணம் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்ம காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ராதைக்கு வயது பன்னிரண்டாக இருந்தபோது அவளை ‘ராயனன்’என்ற ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக வ்ருஷபானு நிச்சயம் செய்தார். இதை அறிந்த ராதை தன் யோக சக்தியால் தன் இடத்தில் தன் சாயையை வைத்துவிட்டு மறைந்தாள். ராயனன் திருமணம் செய்துகொண்டது ராதையை அல்ல. ராதையின் நகலை. சில வருடங்களுக்குப் பிறகு ராதை புண்ணியமான ரமணீயமான பிருந்தாவனத்தில் பிரம்மாவின் மூலமாக கிருஷ்ண பகவானை மணந்தாள்.

க்ருஷ்ணேன ஸஹ ராதாயா:

புண்யே ப்ருந்தாவனே வனே விவாஹம் காரயமாஸ விதினா, ஜகதாம்பதி:

(ப்ரமஹ்மவைவர்தம், ப்ரக்ருதி காண்டம்)

ஒரு சமயம் நந்தகோபன் ஸ்ரீ கிருஷ்ணனுடன் பிருந்தாவனம் சென்று, மாடுகன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். ஒரு மரத்தடியில் படுத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணனை மார்பின் மேல் போட்டுக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தார். திடீரென மேகம் மிகுந்து வானம் இருண்டது. சூரியன் அஸ்தமித்தது. இடியின் சப்தமும் காற்றின் வேகமும்,மழையின் கடுமையும் நந்தகோபனைப் பயப்படும்படி செய்தன. நான் எப்படி குழந்தையை வீடு சேர்ப்பேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது கிருஷ்ணன் அழுதான். பயத்தால் தந்தையின் கழுத்தைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டான். இப்படி இருக்கும் பொழுது பகவத் விருப்பத்தால் ராதை அங்கு வந்தாள். மனித நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் அந்த இடத்தில், அந்த நேரத்தில் ராதையைப் பார்த்த நந்தகோபன் ஒரு கணம் ஆச்சரியம் அடைந்தார். பிறகு,தெளிந்து நமஸ்கரித்து, ”தாயே! தாங்கள் லட்சுமி தேவி என்றும் இந்தக் குழந்தை ஸ்ரீமன் நாராயணன் என்றும் கர்க ரிஷியின் வாக்கால் அறிவேன். எனினும் விஷ்ணு மாயையால் மதி மயங்கினேன். தாங்கள் பிராணநாதனைப் பெற்றுக் கொண்டு, ஆசைகளை பூர்த்தி செய்து கொண்டு, பிறகு என்னிடம் கொடுப்பீர்களாக” என்று சொல்லி பயத்தால் அழுதுக்கொண்டிருந்த குழந்தையை ராதையிடம் கொடுத்தார். ராதை மகிழ்ச்சியுடன் குழந்தையைப் பெற்றுக்கொண்டாள். குழந்தையும் அழுகையை நிறுத்தியது. ராதை நந்தனிடம் “பல ஜன்ம பலத்தால் நீ என்னைப் பார்த்தாய். கர்கருடைய வாக்கால் நீ எல்லாம் அறிவாய். எங்களுடைய ரகசியமான சரித்திரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது” எனக் கூறி, ”வேண்டும் வரமளிப்பேன் கேட்பபாய் என, நந்தன் “ உங்கள் இருவரிடமும் பாத பக்தியை அருளுங்கள். மற்றெதிலும் எனக்கு ஆசையில்லை.” என்று வேண்டினார்.

”அவ்விதமே அளித்தோம். இந்தப் பிறவி முடிந்தவுடன் கோலோகம் வருவாய்” என வரம் கொடுத்துவிட்டு ராதை குழந்தையை எடுத்துச் சென்றாள்.


குழந்தையை மார்பில் அணைத்துக்கொண்டு அடிக்கடி முத்தமிட்டாள். வழியில் கோலோகம் ராஸ மண்டலம் ஞாபகம் வந்தது. உடன், அங்கே விதம் விதமாக அலங்கரிக்கப்பட்ட ரத்ன மண்டபத்தைப் பார்த்தாள். உள்ளே சென்றாள். தாம்பூலம், பழங்கள், புஷ்பங்கள் முதலியவற்றைக் கண்டாள். அலக்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் புஷ்ப சயனத்தில் தன் அழகிய மனவாலனைப் பார்த்தாள். உடனே ஸ்ரீ கிருஷ்ணன் “ராதே! கோலோக விருத்தாந்தம் நினைவிருக்கிறதா? உன் விருப்பத்தை இப்பொழுது பூர்த்தி செய்கிறேன் ” என்றார். கையிலிருந்த பாலகிருஷ்ணனைக் காணவில்லை. இந்த விருத்தாந்தங்களை ஆதாரமாகக் கொண்டு தான் ஸ்ரீஜெயதேவர் கீத கோவிந்த காவியத்தில் ஆரம்ப ஸ்லோகமாகிய மங்களா சரணத்தைச் செய்திருக்கிறார்.பிரிந்திருந்த ராதையையும் கிருஷ்ணனையும் ராதையின் சகி/தோழி (பிரியஸகி) தன் முயற்சியால் மறுபடியும் சேர்ப்பித்த விருத்தாந்தத்தைக் கவி தன் சாதுர்யமான கற்பனைகளால் வர்ணிக்கிறார். அச்சமயத்தில் பிரம்மதேவர் அங்கு தோன்றி ராதையையும், கிருஷ்ணனையும் வணங்கினார்.


வைகாசி விசாக பௌர்ணமி நாளில்தான் பிருந்தாவனத்தில்- பாண்டீர வனத்தின் ஆல மரத்தின் கீழ் ராதா- கிருஷ்ண திருமணம் நடந்ததாம்.


பகவானின் விருப்பத்தால் பிரம்ம தேவன் ராதைக்கும் கிருஷ்ணனுக்கும் அக்னிசாட்சியாக திருமணம் செய்துவைத்தார். கிருஷ்ணன் அக்னியின் முன் ஹோமம் செய்து, ராதையின் கையைப் பிடித்துக் கொண்டு பாணிக்ரஹணம், அம்மி மிதித்து (ஸப்தபதி) அக்னி வலம் வந்தார். எவ்விதம் தகப்பன் தன் மகளுக்கு திருமணம் செய்வித்து ஆனந்திப்பாரோ, அவ்விதம் பிரம்மா ராதாக்ருஷ்ணர்களுக்கு திருமணம் செய்வித்து ஆனந்தம் அடைந்தார். இந்தத் திருக்கோலத்தைப் பார்க்க தேவர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் முதலியவர்கள் பிருந்தாவனம் வந்தனர். துந்துபி, ஆனகம், முரஜம் முதலிய வாத்யங்கள் கோஷித்தன. தேவர்கள் பாரிஜாத புஷ்பத்தை பொழிந்தனர். பிரம்மா தட்சிணையாக ராதாக்ருஷ்ண பாத பக்தியை வரம் கேட்டார். தேவர்கள் பக்தியைக் கோரினர். திவ்ய தம்பதிகள், எல்லோரும் கோரிய வரங்களை அளித்து, அவரவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்பிவைத்தனர். கிருஷ்ணனும் ராதையும் ஆனந்த ஸாகரத்தில் மூழ்கினர். கண் அயர்ந்த ராதை விடியற்காலையில் விழித்துக் கொண்டாள். பக்கத்தில் புருஷனைக் காணவில்லை. நந்தன் தன்னிடம் தந்த குழந்தையைக் கண்டாள். துக்கம் தாளாமல் அழுதாள். குழந்தையும் அழுதுகொண்டே இருந்தது. அப்பொழுது அசரீரி வாக்கு கேட்டது. “ஹே ராதே! ஏன் அழுகிறாய்? ஸ்ரீ க்ருஷ்ணனின் பாத ஸ்மரணம் செய், தினமும் இரவு வீட்டில் உன் ஸாயையை வைத்துவிட்டு இங்கு வந்து ஹரியுடன் மகிழ்ச்சியுடன் இரு, அழாதே” என்ற அசரீரி வாக்கைக் கேட்டு சற்று நிம்மதி அடைந்தாள் ராதை.


ராதை குழந்தையை எடுத்துக்கொண்டு நந்தன் வீடு சென்று யசோதையிடம் கொடுத்தாள். பிறகு தன் வீடு சென்று வேலையில் ஈடுபடலானாள். தினமும் பிருந்தாவனம் சென்று ஹரியுடன் நேரத்தை கழித்துவந்தாள். கோகுல பிருந்தாவன வாசம் லீலைகள் முடிந்து ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகா நிர்மாணம் செய்து அங்கு சென்று பல வருடங்கள் கோலோச்சினார். இவ்வளவு காலமும் ராதை கிருஷ்ணனை விட்டுப் பிரிந்திருக்க வேண்டியிருந்தது. பக்த ஸ்ரீ தாமாவின் வாக்கியத்திற்கிணங்க ஸ்ரீ க்ருஷ்ணாவதார காரணமாகிய பூபாரஹரணம் முடிந்தவுடன், அவர் ராதையுடன் பூலோகம் விட்டு, தன் இடமாகிய கோலோகம் சேர்ந்தார். கோலோகத்தில் ராதாவுடன் இருந்துகொண்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள் புரிந்து கொண்டிருக்கிறார்.


உத்தரப்பிரதேசத்தில் மதுராவுக்கு அருகில் 'பிரம்மஸரண்' என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பர்ஸானா என்ற சிறிய ஊர்தான் ராதை பிறந்த இடம். ராதையை இங்கு 'ராதாராணி' என்றே கூபிடுகிரார்கள். இங்கு அமைந்துள்ள ராதாராணி ஆலயம், ராஜா பீர்சிங் என்பவரால் 1675 -ம் ஆண்டு, செந்நிறக் கற்களால் மிக அழகாக உருவாக்கப்பட்டது. அருகிலேயே இக்கால இணைப்பாக பளிங்கினால் கட்டப்பட்ட ஆலயமும் உள்ளது. ராதையின் பிறந்த நாளான ராதாஷ்டமி இந்த ஊரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் என்னும் ஓர் உன்னதத்தை நாடி அதனோடே சங்கமமான ராதையின் பக்தியைக் கொண்டாடுவதுதான் ராதா பிறந்த நாளான ராதாஷ்டமியின் நோக்கம். கோகுலத்தில் யாதவ குலத்தில் வ்ருஷபானு மற்றும் கமலாவதி தம்பதியருக்கு மகளாக கண்ணன் பிறப்பதற்கு முன்பே பிறந்த ராதை கண்களைத் திறந்தது கண்ணன் பிறந்த பின்புதானாம்! கோபியர் அனைவருக்குமே கண்ணன் இனியவன் என்றாலும் ராதையின அன்பு மட்டுமே அவனைக் கட்டிப் போட்டதாம்! கண்ணனின் மேல் ராதையின் அன்பு ஒரு பெருங்கடல் எனறால் மற்ற கோபியரின் அன்பு ஒரு சின்ன குளத்தளவே!

அயனா/ராயனா என்ற யாதவனின் மனைவியான ராதை கண்ணனின் குழலோசை கேட்டவுடன் போட்டது போட்டபடி ஓடுவந்து விடுவாளாம்! திருமணமான பெண்தான் என்றாலும் கிருஷ்ணன்மேல் கொண்ட காதலை அவளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. கண்ணனும் பெரும்பாலான நேரம் ராதையுடன் இருப்பதிலேயே மகிழ்ந்தார்! கண்ணன் கடவுள்; அவரது ஆத்மா ராதா! உலகுக்கு ஆற்றலை அளிப்பவன் கண்ணன்; அவனது சக்தி ராதா! அவள் கணவனான அயானும், கிருஷ்ணனின் பெரிய பக்தர் ஆவர். கிருஷ்ணர் மீது அனைவருக்கும் காதல் இருந்தது. அது பரமாத்மா மீது ஜீவாத்மா கொண்ட காதலாகும். ராதை, அயான், அஷ்டவக்கிரர் என ஆண் பெண் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் அவரை காதலித்தனர்.

கண்ணனின் ஆசைக் காதலியாக, கண்ணனை விட்டுப் பிரியாமல் கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் ஆடிப்பாடி கூடி மகிழ்ந்த ராதை கண்ணன் மதுராவுக்குச் சென்ற பின்பு அவனையே நினைத்து அழுதாளாம்; தன் கரங்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்து சற்றும் உறங்காமல் இருந்தாள் என்று உத்தவர், 'பிரஹ்லாத சம்ஹிதையி'ல் கூறுகிறார். "கண்ணா உன்னை விட்டு நான் வாழ்வதெப்படி?" என ராதை கேட்க "நான் என்றும் யுகயுகமாய் உன்னுடன்தான் இருப்பேன்" என்று ஆறுதல் சொன்ன கண்ணனை இன்றும் நாம் நினைக்கும்போது முதலில் ராதைதானே வந்து நிற்கிறாள். ராதா இல்லாமல் கிருஷ்ணன் இல்லை. இதிகாசப்படி கிருஷ்ணன் கோகுலத்தை விட்டு சென்றதும் ராதா கிருஷ்ணனின் தொடர்பு முடிவடைந்து விடுகிறது. ஆனால் கிருஷ்ண பக்தர்கள் மற்றும் வைஷ்ணவ வழிபாட்டு முறைப்படி ராதாவுக்கு இறப்பில்லை.


இதுபோன்ற விஷயங்களை மனிதக் கண்ணோட்டத்தில் காணாமல் ஆன்மீக முறையில் தான் காணவேண்டும். ஜீவாத்மாக்களான நாம் அனைவருமே ராதை தான். பரமாத்வான கிருஷ்ணனுடன் கலப்பதே ஜீவாத்மாக்களான நம் ஒரே குறிக்கோள்.

ராதா என்பது 12 நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்ற கிருஷ்ண பக்தர் இயற்றிய அஷ்டபதி / கீத கோவிந்தம் என்கிற பாட்டுகளின் ஒரு கற்பனை நாயகி என்று சொல்பவர்கள் உண்டு. ராதா ஒரு கற்பனை பாத்திரமாக வைத்துக் கொண்டாலும் நமக்கு நிபந்தையற்ற அன்பை கடவுளிடம் எப்படி செலுத்துவது என்று சொல்லிக் கொடுக்க வந்த ஆசானாக அப்பாத்திரம் உள்ளது. ஜெயதேவர் தன்னையே ஒரு பெண்ணாக பாவித்து சிருங்கார ரஸத்தில் இயற்றிய கவிதைகள் அஷ்டபதி. ஆகவே கிருஷ்ண பக்தியையே ராதையாக உருவகப்படுத்தியிக்கிறார் என்றும் கொள்ளலாம். சிருங்காரத்தின் வழியாகப் பக்தியை மடைமாற்றும் இலக்கியங்களில் ஜெயதேவரின் ‘கீத கோவிந்தம்’ முக்கியமானது. ஒவ்வொரு பாடலிலும் எட்டுக் கண்ணிகள் இருப்பதால், இதை ‘அஷ்டபதி’ என்றும் அழைப்பர். அதில் ராதைக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையேயான ஊடலும் கூடலும் மனப் போராட்டங்களும் காதல் காட்சிகளும் ஒரு ஜீவாத்மா பரமாத்மாவை அடைவதற்கான தவிப்பும், அதற்குப் பரமாத்மாவே இறங்கிவரும் அழகும் பதிவாகியிருக்கின்றன. ‘ராதே கிருஷ்ணா’ என்பது வெறும் வார்த்தையல்ல. பரிபூரணமான ராதையின் அன்புக்கான சாட்சி என்பதை வார்த்தைக்கு வார்த்தை விளக்கியிருப்பார் ஜெயதேவர்.

அஷ்டபதியை புரி ஜகன்னாத ஷேத்திரத்தில் ஜயதேவர் பாட அவர் மனைவி பத்மாவதி ஆடினார். ஆடல் பாடல் இரண்டும் பகவானுக்குப் பூஜாகாலத்தில் செய்யும் அறுபத்து நான்கு உபசாரங்களில் சேர்ந்தவை. உபசாரம் ஒவ்வொன்றும் நம்மிடம் பகவானுக்குக் கருணை உண்டாக்கும் கருவியாம். அவைகளில் நாட்டியமும் சங்கீதமும் மிகவும் அந்தரங்கமான தத்துவம் நிறைந்தவை. பகவான் நாத வடிவினன். நாதம் காற்றுடன் கலப்பதே நாட்டியக் கலையாம். வேதவ்யாஸர் 18 புராணங்களின் மூலமாகப் பற்பல அரிய பெரிய தத்துவங்களை உலகுக்கு அளித்தார். அவைகளில் பத்தாவதான ப்ரம்மவைவர்த்தம் எனும் புராணத்தில் ஸ்ரீராதாக்ருஷ்ண சரிதத்தைக் கூறுகிறார். அதற்கு விரிவுரை வடிவமாக அமைந்த கர்க்க ஸம்ஹிதை என்ற இதிஹாஸத்திலும் இது மிக விரிவாகவும் அழகாகவும் தத்துவார்த்தத்துடனும் விளக்கப்பட்டிருக்கிறது. இவ்விரு நூல்களையும் ப்ரமாணமாகக் (ஆதாரமாக) கொண்டே அஷ்டபதி அமைக்கப்பட்டது.


ஒருநாள் ஜெயதேவர் கிருஷ்ணன் ராதையிடம் கூறுவதை போல ஒரு சுலோகம் எழுதுகிறார். "குளிர்ச்சி நிறைந்த பாதங்களை உடையவளே, அதை என் தலைமீது வை" . அட பகவானின் தலைமீது பக்தை பாதம் வைப்பதா என எண்ணி அந்த வரிகளை அடித்து விடுகிறார் . அதன் பிறகு ஆற்றில் நீராடப் போகிறார். ஜெயதேவரின் தோற்றத்தில் வரும் கண்ணனோ, அடித்த வரிகளை மீண்டும் எழுதி வைக்கிறார். ஜெயதேவருடைய மனைவி பத்மாவதி கொடுக்கும் பிரசாதத்தையும் உண்டுவிட்டுச் செல்கிறார். ஆற்றில் குளிக்கச் சென்ற ஜெயதேவர் திரும்பிவந்து பார்த்தால், ஓலையில் தான் அடித்த வரிகள் மீண்டும் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறார். “நீ எழுதினாயா?” என்கிறார் மனைவியிடம். “நீங்கள்தானே எழுதிக் கொண்டிருந்துவிட்டு, நான் கொடுத்த பிரசாதத்தையும் அருந்தினீர்களே” என்கிறார் பத்மாவதி. இது கண்ணனின் லீலைதான் என்பதை ஜெயதேவர் உணர்ந்துகொள்கிறார். ராதையின் பாதங்களைத் தம் சிரசில் தாங்கிக்கொண்டது கிருஷ்ணனின் விருப்பம்! அதில் வெளிப்படுவதுதான் ராதையின் காதல், பக்தியின் உன்னதம்!

முக்தி என்பதை நாம் அறியவில்லை. அறியாத ஒன்றை அறிந்த ஒன்றின் மூலமாகவே அறியவேண்டும். துன்பக் கலப்பில்லாத பேரின்பமே முக்தி. அந்த ஆனந்தத்தின் திவிலைகளே மற்ற ஆனந்தங்கள். அனுபவத்தினால் மட்டுமே அறியக்கூடிய இன்பம் பேரானந்தம். அதை அறிய அவரவர் அனுபவத்தால் உணர்ந்த சிற்றின்பத்தை உதாரணமாகக் காட்டுகிறது வேதம். சிற்றின்பமென்பதைத் தற்கால உலகம், மேல் நாட்டவரைப் போல் மிருக இன்பமான காதல் எனக் கருதுகிறது. அது தவறு. சதிபதிகள் மனம் ஒருமித்து, இனிமையாகப் பேசுதல், பழகுதல், ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமை, பிரிவால் ஏற்படும் துன்பம், பகவத் பூஜையின் உபசாரமான ஆடல் பாடல்களை நமது காயமெனும் கோவிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு அளித்தல், ஆலிங்கனம், முத்தமிடுதல் என்ற வகையில் இருவரும் பேதமில்லாதிருத்தல் முதலியவையே சிற்றின்பமாம்.

தேவாரம், திவ்யப்ரபந்தம் முதலிய தமிழ் நூல்களிலும், பல பக்தர்களது பாடலிலும், ப்ரேமபக்தியை இங்ஙனம் சித்திரிக்கிறார்கள். அதோடு ஸ்தூலமாகப் பார்த்தால் சிற்றின்பம் போல் காணப்படினும் அவ்வளவும் வேதாந்தம் நிறைந்தது இது. ஆதலால் துறவியர்கூட இதைப் பாடுவார்கள். ஜீவன் பரமாத்மாவிடமிருந்து பிரிந்துவந்து பல துன்பங்களை - ஜனன மரணம், மூப்பு, பிணி, பசி போன்றவற்றை - அனுபவிக்கிறது. பரமனின் அருளால் நல்ல ஆசாரியன் அரிய உபதேசங்களைச் செய்து இறைவனிடம் ஜீவனைச் சேர்க்கிறார். கிருஷ்ணன் பரமாத்மா, ராதை ஜீவாத்மா, சகி ஆசார்யன், என கற்பிக்கப்படுகிறது. ( நன்றி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்)

சிலப்பதிகாரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.


கீத கோவிந்தம் என்னும் சிருங்கார ரச காவியத்தை மிகவும் ரசிப்பார் காஞ்சி மஹா பெரியவர். ஒரு சந்நியாசி சிருங்கார ரசம் கலந்த கீத கோவிந்தத்தை ரசிக்கிறாரென்றால் அந்த ஜெகந்நாதரே ரசித்த கீதமல்லவா! பூரி ஜெகந்நாத க்ஷேத்திரத்தில் ஸ்ரீ மஹா பெரியவரின் ஆக்ஞையின் பேரில், ஜெயதேவர்- மீரா விக்ரகத்துடன் காமகோடி மடம் கட்டப் பட்டுள்ளது என்றால், கீத கோவிந்த- ஜெகந்நாத மகிமையை ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் எந்த அளவுக்கு உணர்ந்துள்ளார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.


ஸ்ரீ மஹா பெரியவர் தன் சிறு வயதில் கும்பகோணம் மடத்திலிருந்தபோது, பாலு பாகவதர் என்பவரை மடத்திற்கு வரவழைத்து, பல நாட்கள் அந்த 24 பாடல்களையும் பாடச் சொல்லிக் கேட்டு அதன் மகிமையை உணர வைத்தார். அந்தப் பாடல்களில் உள்ள ஆண்பால்- பெண்பால் உணர்வு சார்ந்த பதங்களைத் தள்ளி, ஜீவாத்மா- பரமாத்மா இணைப்பை உணர வேண்டும் என்று கூறினார்.


கிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஒரு சந்நியாசி. அவரது சீடன் ஒருவன் பிச்சை யிட்ட பெண்மணியின் முகத்தைப் பார்த்தான் என்பதை அறிந்து அவனை விலக்கினார். அதனால் அந்த சீடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்டான். அத்தகைய சைதன்ய மகாபிரபு ராதா கிருஷ்ண இயக்க (ஒநஃஞச) சந்நியாசி. அவர் 12 ஆண்டுகள் பூரி ஜெகந் நாதர் கோவிலிலேயே வாழ்ந்து, தனது 50-ஆவது வயதில் ஜெகந்நாதரின் திருவடியில் கலந்தார். எனவே சந்நியாசிகளின் ராதா- கிருஷ்ண பிரேமை என்பது மிகவும் உயர்ந்த நிலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


அன்பே பக்தியாக மாறுகிறது. அதுவே பின் முக்தியையும் தருகிறது. அன்பு செலுத்துவது ஆரம்பப் படி, மிக எளிமையான வழி. அதுவும் கண்ணுக்கினிய கண்ணனை, மனதுக்கினிய மாதவனை நேசிப்பது கடினமா? ராதையின் மனோபாவத்தை ஆஸ்ரயித்து/தழுவி அந்த வைகுந்தப் பேற்றை அடைவோம்.


ஜெய் ராதேகிருஷ்ணா



https://groups.google.com/g/mintamil/c/enJtNJXomA4

https://www.facebook.com/360746907406088/posts/524945994319511/



258 views0 comments

Recent Posts

See All
bottom of page