top of page
  • Writer's pictureAnbezhil

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் - திருப்பாவை

Updated: Feb 17, 2022


அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்

பன்னு திருப் பாவைப் பல் பதியம்! – இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை

பாடி அருள வல்ல பல் வளையாய் – நாடி நீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்

நாங் கடவா வண்ணமே நல்கு!


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்


மகாவிஷ்ணு நம்மைப் போன்ற சம்சாரிகளை உய்விக்க பல அவதாரங்களை எடுத்து நம்மை காக்கிறார், அவரை வந்தடையும் மார்கத்தையும் காட்டுகிறார். தான் அவதரித்தது போதாதென்று ஸ்ரீவைகுண்டத்தில் அவர் கூடவே இருக்கக்கூடிய நித்ய சூரிகளையும் நம்மை வழிநடத்த இம்மண்ணுலகிற்கு அனுப்பி, ஆழ்வார்களாக பிறப்பித்தார். அவ்வாழ்வார்கள் (பக்தியில் ஆழ்ந்தவர்கள்) ஒன்று கூடி பக்தி சாஸ்திரத்தைப் பரப்புவதற்காக நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் பாசுர தொகுப்பை அருளிச் செய்தார்கள். இவ்வாழ்வார்கள் பன்னிரண்டு பேர். அதில் பத்து ஆழ்வார்கள் தெய்வத்தை தெய்வமாகக் கொண்டார்கள். அவர்கள், பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடி ஆழ்வார், பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார். அவர்களுக்குப் பெருமாளே ஆச்சார்யார், அவரே தெய்வம், அவரே உரையாட துணை இருக்கும் சகா, அவரே பக்தரும் கூட. எல்லாம் அவரே. இதில் இரண்டு பேர் மட்டும் ஆச்சாரியனையே தெய்வமாகக் கொண்டவர்கள். அவர்கள் தான்ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும், ஸ்ரீ ஆண்டாளும் ஆவர்.


மற்ற பத்து ஆழ்வார்களும் எம்பெருமானைத் தவிர மற்றவர்களை பார்க்கமாட்டார்கள். அவர்கள் எம்பெருமானை அடையும் மார்க்கத்தை காட்டுவது எப்படி என்றால், நேராக பெருமாளை சேவிப்பது, நேராக அவருக்கே தொண்டு செய்வது என்ற வழி. அந்த வழியில் செல்வது கடினம். பெருமாள் தனக்கு நெருக்கமாக இருந்த அர்ஜுனனுக்கும் வசுதேவர் தேவகிக்கும் கூட மோட்சம் அளிக்கவில்லை. சொர்க்க பதவி தான் கிடைத்தது. ஆனால் ஆச்சார்யனைப் பற்றிக் கொண்டு ஆண்டாள், மதுரகவி ஆழ்வார் மேற்கொண்ட முறைப்படி சென்றால் மோக்ஷம் நமக்கு நிச்சயம். பெருமாளைப் பற்றி வைகுண்டம் அடைவதில் பல கடினமான வழிமுறைகள் இருப்பதால் ஆச்சார்யனைப் பற்றி அதே பாக்கியத்தை பெற முடியும் என்று காட்டியவர்கள் இரு ஆழ்வார்களான ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் ஸ்ரீ ஆண்டாளும். ஆனால் அகங்காரம் தொலைந்து பின் தான் அவர்களை ஏற்றுக் கொள்வேன் என்ற விதி ஆச்சார்யர்களிடம் இருந்தது. இதுவும் அனைத்து மக்களும் பெருமாளை அடையத் தடையாக இருந்தது. அதனால் இராமானுஜர் என்ன செய்தார் என்றால், முதலில் ஆச்சார்யனைப் பற்றுங்கள் பிறகு தானே அகங்காரம் மற்றும் இதர வேண்டாத குணங்கள் தொலையும் என்று வழியை இன்னும் எளிமைப் படுத்தினார். ஸ்ரீ ராமானுஜர் அவதரித்து, இந்தக் கலி காலத்தில் ஆச்சார்யனைப் பற்றி பரமபதம் அடைவதே எளிய, சிறந்த மார்க்கம் என்று தெளிவாக ஏற்படுத்திச் சென்றார். அதைத் தான் அவருக்கு முன்பே அவதரித்த கோதை நாச்சியார் செயல் படுத்தியிருந்தார். கூடியிருந்து குளிர்ந்து என்று அனைவரையும் அழைத்து மோக்ஷ பேற்றினை அருளினார்.


மதுரகவி ஆழ்வார் மிகப் பெரிய யோகி. அவருடைய ஆச்சார்யரான நம்மாழ்வார் அவரும் ஒரு மிகப் பெரிய ஞான வித்து. மதுரகவி ஆழ்வார் தன் ஆச்சார்யனையே எல்லாமுமாக கொண்டு அவர் அருளிய பிரபந்தங்களை தொகுத்து, அவரையே எல்லாமுமாக கொண்டிருந்தார். அவர் எந்தக் கோவில் பெருமாளையும் மங்களாசாசனம் (போற்றிப் பாடாமல்) செய்யாமல் நம்மாழ்வார் மேல் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று தொடங்கி பதினோரு பாசுரங்களை மட்டும் பாடி குருமுகமாக வைகுண்ட பதவியை அடைந்தார். அவரையும் விடச் சிறந்த, ஆச்சார்யனையே தெய்வமாகக் கொண்ட ஆழ்வார் ஆண்டாள் ஆவார். தன் தந்தையான பெரியாழ்வாரே அவருக்கு ஆச்சார்யன். மிக எளிய தமிழில், அன்பை முன் வைத்த மிக எளிய பக்தி மார்க்கத்தில், அவர் பெண்ணானதால் புருஷோத்தமான பகவான் மீது காதல் கொண்டு அருளிய திவ்ய பிரபந்தப் பாடல்கள் நாம் தினமும் புரிந்து கொண்டு அனுசந்தித்தால் (பாராயணம் செய்தால்) பகவானை அடைவது திண்ணம். மதுரகவி ஆழ்வார் தன் ஆச்சாரியரோடு ஒரு தனி உலகத்தில் யாரோடும் சேராமல் வாழ்ந்தார். ஆனால் ஆண்டாள் அப்படி இல்லை. தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் கூவிக் கூவி அழைத்து பக்தி செய்ய வைத்தார். பகவான் கூட ஒரு முறை நம்மை எழுப்பிவிட்டு போய் விடுவார், ஆனால் ஆண்டாள் அப்படி இல்லை. மதி மயக்கத்தில் ஆழ்ந்துறங்கிக் கொண்டிருக்கும் நம்மை தட்டித் தட்டி நாம் எழுந்திருக்கும் வரை விடாது எழுப்பி நமக்குள் பக்தி என்னும் ஞான விளக்கை ஏற்றுகிறார். தன் ஆச்சார்யரான தந்தை பெரியாழ்வாரை போல அனைவரையும் அரவணைத்து அழைத்துப் பெருமாளிடம் சேர்ப்பிக்க விழைகிறார். அவர் திருவடிகளைப் பற்றிக் கொண்டால் நாம் வைகுந்தத்தை அடைந்து விடலாம்.


பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் சூடிக் கொடுத்த சுடர்கொடி, ஸ்ரீ ஆண்டாள். அவர் வேதம் வேதாந்தத்தை மிக மிக எளிய வழியில் நாம் புரிந்து கொள்ளும் வகையில் 30 திருப்பாவை மற்றும் 143 பாடல்களைக் கொண்ட நாச்சியார் திருமொழி ஆகியவை அருளியுள்ளார். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 474 - 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். 504 தொடக்கம் 646 வரையுள்ளவை நாச்சியார் திருமொழி ஆகும். கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது இப்பாடல்கள். உண்மையில் "பரந்தாமன் மட்டுமே ஆண், ஜீவாத்மாக்கள் ஆகிய நாமனைவரும் பெண்கள் தான்", என்கிற வைணவ சித்தாந்தத்தை வலியுறுத்தி அதன் படி நின்ற ஆண்டாளின் பாசுரங்களுக்குத் தனி ஏற்றம்.


எம்பெருமானைச் சென்றடைய வழி அவனுடைய திருவடிகளில் சரணாகதியாவதேயாகும் என்பதையும் இறைவனை எப்படி வணங்கி அருளைப் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளதால் திருப்பாவை நம்மிடையே உயரிய இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் மார்கழி மாதத்தில் எப்படி பாவை நோன்பு இருக்க வேண்டும் என்பதை எளிய முறையில் சொல்வது திருப்பாவைக்குள்ள தனிப் பெருமை. தமிழில் பாடப்பட்ட பாடல்கள் என்றாலும், தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமாள் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு ஆழ்வாருக்கும் காணப் படாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் காணப்படுவது திருப்பாவை வழிபாடாகும். நேபாள மொழியில் எழுதி வைத்துக் கொண்டு திருப்பாவை சேவிப்பவர்கள் உள்ளனர். திருமலையில் மார்கழி மாதம் முழுவதும் விடிகாலையில் விடிகாலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக, திருப்பாவை சேவிக்கப்படும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் இன்றும் கருட சேவை அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள், பட்டு வஸ்திரம், கிளிகள் ஆகியவை திருமலைக்கு கொண்டு வரப்பட்டு, அவை திருமலையப்பனுக்கு சமர்ப்பிக்கப் படுகின்றன.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேதமனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ்

ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு.'

திருப்பாவையின் பெருமையும் ஆண்டாளின் பெருமையும் இதிலிருந்து புலப்படுகிறது.


கண்ணனையே மணாளனாக அடைவது என்று தீர்மானித்து, அவர் பாவை நோன்பு இருந்து அவனையே அடைந்தார். மணமகளாக அலங்கரித்துக் கொண்டு அரங்கன் சன்னதி நுழைந்த கோதை பின் யாராலும் பார்க்கப்படவில்லை. அரங்கன் சன்னதியில் அவனால் முழுதுமாக ஆட்கொண்டப்பட்ட இரு ஆழ்வார்கள் ஸ்ரீ திருப்பாண் ஆழ்வார் மற்றும் ஸ்ரீஆண்டாள் ஆகும். தூய, ஆழ்ந்த பக்திக்குப் பரிசு இறைவன் திருவடிகள் என்பதை இவர் திருவவதாரம் நமக்குச் சொல்லித் தருகிறது.


திரேதா யுகத்தில் மிதிலை நகரில் ஜனக மன்னன் யாகசாலை அமைக்க கலப்பை கொண்டு பூமியை உழுகையில், அங்கே ஸ்ரீ தேவியின் அம்சமாக ஒரு குழந்தை கிடைக்க, அவளை தன் மகளாகப் பாவித்துச் சீதையென்று பெயரிட்டு வளர்த்தார் ஜனக மகாராஜா. அத்திருமகளே திருமாலின் அம்சமான ஸ்ரீராமனை மணந்தார். மனைவியைக் காரணமாக பூமியில் தீயோரைக் கொன்று நல்லோரைக் காத்தார் திருமகள்நாதன். அதுபோல கலி யுகத்தில் பாண்டிய நாட்டில்

' கோதை பிறந்தவூர் கோவிந்தன வாழுமூர்

சோதி மணிமாடம் தோன்றுமூர் – நீதியால்

நல்ல பத்தர் வாழுமூர் நான்மறைகளோ துமூர்

வில்லிபுத்தூர் வேதக்கோனூர்'

என்று எல்லோராலும் போற்றிப் புகழப்படும் ஶ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவர் ஸ்ரீ ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் இறைவனுக்கு மலர் மாலை கட்டித் தருவதற்கு அமைக்கப்பட்ட நந்தவனத்தில் துளசி செடியின் அடியில் (எட்டாம் நூற்றாண்டில்) நள ஆண்டு ஆடி மாதம் வளர்பிறையில் சதுர்த்தசி திதியில் செவ்வாய்க்கிழமையன்று பூர நட்சத்திரத்தில் பூமிப்பிராட்டியார் அம்சமாக கோதை நாச்சியார் அவதரித்தார்.

அந்தக் குழந்தையை தன் மகளாகப் பாவித்து அதுவரை குழந்தைப் பேறு இல்லாத அவர் வளர்க்கலானார். பகவானை பக்தியாலும், நாயகி பாவத்தாலும் சொல் மலர்களாகிய பாமாலையை பாடி துதித்து, பெருமாளின் நாயகியாக வேண்டும் எனும் எண்ணத்தோடு, அரங்கனை ஆராதித்து, அவனை நாயகனாகவும் அடைந்து பேறு பெற்றவர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்.


ஸ்ரீ மணவாளமாமுனிகள் தன்னுடைய உபதேச ரத்தினமாலையில் ஆண்டாளை இவ்வாறு புகழ்கிறார் இன்றோ திருவாடிப்பூர மெமக்காக அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத வாழ்வாக வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய். (22) ஆடிமாதம் பூர நட்சத்திரம் இன்றுதானோ எங்களுக்காக என்று என்னும்படி குறையாத வாழ்வு உண்டாகும்படியாக ஸ்ரீவைகுண்டத்திலுள்ள உயர்ந்த அநுபவத்தை அளித்து, பெரியாழ்வார்க்கு திருமகளாக இவ்வுலகத்தில் ஆண்டாள் அவதரித்தாள். பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக் குண்டோ மனமே யுணர்ந்துபார் ஆண்டாளுக் குண்டாகி லொப்பிதற்கு முண்டு (23)

பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் பிறந்த ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் வைபவம் வேறெரு தினத்திற்கு உண்டோ மனமே உணர்ந்துப்பார். ஆண்டாளுக்கு ஒப்பு ஆண்டாளே.


ஆண்டாள் குழந்தையாக இருக்கும்போதே பெரியாழ்வார் அவருக்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்துவைத்து தினமும் கண்ணன் பற்றிய கதைகளை கூறி வந்தார். நாளாக நாளாக தந்தை முதலியோர் வியக்கும்படி பெருமாள் மீது கோதைக்குப் பக்திப் பெருகியது. அவனையே மணம் செய்து கொள்ள வேண்டி சதா அவனையே நினைத்து, துதித்து வந்தார். நாள்தோறும் விஷ்ணுசித்தர் வடபத்திரசாயிக்கு சாற்றுவதற்காகக் கட்டிவைத்த திருமாலையை தன் மேல் சாற்றிக் கொண்டு தான் கண்ணனுக்கு ஈடாக இருக்கிறேனா என்று கண்ணாடியில் அழகு பார்ப்பார். மாலை சூட்டிக்கொள்ளுதலுடன் சிறந்த அணிகலன்களை அணிந்து, உயர்ந்த பட்டாடையை உடுத்தித் தன்னை அலங்கரித்து, அந்த அழகையும் கண்ணாடியிலே கண்டு, தந்தை பார்க்கும் முன்னர் மலர் மாலையைக் களைந்து முன்போலவே செண்டாகச் சுற்றிப் பூங்குடலையினுள்ளே வைத்துவிடுவது அவரது அன்றாட வழக்கம். பின் அந்த மாலையையே பகவானுக்கு எடுத்துச் செல்வார் விஷ்ணுசித்தர். அதையும் பெருமாள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு வந்தார். இப்படி பல நாட்கள் சென்றபின் ஒருநாள் வெளியில் சென்ற ஆழ்வார் சீக்கிரம் திரும்பிவிட மலர்மாலையைக் கோதை சூடியிருத்ததைப் பார்த்து ரொம்ப கோபம் கொள்கிறார். அன்று வடபத்திரசாயிக்கு அவர் மாலை சமர்ப்பிக்கவில்லை. அன்று அத்திருப்பணிக்கு இடர் வந்து விட்டதே என்று மிகவும் மனம் வருந்தினார். அன்றிரவு இறைவன் ஆழ்வார் கனவில் வந்து, மாலை கொண்டு வராததற்கு காரணம் கேட்கிறார். ஆழ்வார் காரணத்தைச் சொல்ல, 'அவள் சூடிக்கொடுத்த மாலையே நமக்கு விருப்பமானது. இனி அவள் சூடிக் கொடுத்த மாலையையே நமக்குக் கொண்டு வருவாய்' என்றருளி மறைந்தார். விழித்தெழுந்த விஷ்ணுசித்தர் கோதை, மலர்மங்கையின் அவதாரம் என்பதைப் புரிந்து கொண்டு, ஆண்டாள் என்றும் சூடிக்கொடுத்த நாச்சியார் என்றும் திருப்பெயரிட்டார்.

ஆண்டாள் வளர வளர அவள் திருமால் மேல் வைத்த காதலும் வளர்ந்தது. இனி அவனை ஒரு நொடிப் பொழுதும் பிரியாதிருக்க முடியாது என்னும் நிலை அடைந்து, கோகுலத்து ஆயர் மங்கையர் போலத் தானும் நோன்பு நோற்று திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற திவ்வியப் பிரபந்தங்களின் மூலமாக இறைவனிடம் விண்ணப்பம் செய்தார். இந்த சமயம் பெரியாழ்வார் கோதைக்கு மணமுடிக்க வரன் தேட ஆரம்பித்தார். ஆண்டாள், 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன். யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன்' என்று அவரிடம் தனக்கு இறைவனே மணவாளன், மானிடன் யாரையும் தேடவேண்டாம் என்று கூறிவிட்டார். பின் தன் தந்தை பட்டர்பிரானிடம், நூற்றி எட்டுத் திருப்பதிகளிலும் எழுந்தருளியுள்ள இறைவனுடைய பெருமைகளை விளக்கமாக எடுத்துரைக்கச் சொல்லி அனைத்துக் கோவில்களிலும் வீற்றிருக்கும் அர்ச்சாவதார திருமேனிகளைப் பற்றி தெரிந்து கொள்கிறார். வடமதுரையில் எழுந்தருளியுள்ள கண்ணபிரானது வரலாற்றைக் கேட்டபோது மயிர்சிலிர்ப்பும், திருவேங்கடமுடையவனின் பெருமைகளை செவி மடுத்த போது முகமலர்ச்சியும், திருமாலிருஞ்சோலையழகரது வடிவழகை அறிந்தவுடன் புளகாங்கிதமும், திருவரங்கநாதனது பெருமையை கேட்டவுடன் அளவற்ற மகிழ்ச்சியும் அடைந்தார். உடனே அரங்கநாதனிடத்தே மனத்தைச் செலுத்தி, அவனுக்கே தன்னை மணமகளாக நிச்சயித்து அவரையே எப்பொழுதும் நினைத்தபடி இருந்தார்.


பின் கோதை நாச்சியார் ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், அப்பதியிலிருந்த பெண்களையும் தன்னையும் ஆயர்குல பெண்களாகவும், அங்குள்ள பழமையான வடபத்ரசாயி திருக்கோயிலை நந்தகோபன் மனையாகவும், அப்பெருமானைக் கண்ணனாகவும் கருதித் திருப்பாவையைப் பாடியருளிப் பின் பதினான்கு தலைப்புகளில் 143 திருமொழிகளைப் பாடியருளினார். இதற்கு நாச்சியார் திருமொழி என்று பெயர். ஆழ்வாருக்கோ இந்தப் பெண் பகவான் மேல் பித்தாக இருக்கிறாளே அவர் எப்படி இவளை மணமுடிப்பார் என்று என்று கலங்கிக் கொண்டிருந்தபோது அரங்கனே ஆழ்வாரது கனவில் எழுந்தருளி, "உமது திருமகளைக் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு வாரும். அவளை யாம் ஏற்போம்" என்றருளினார். பின்பு திருவரங்கநாதர் கோயிற் பரிவாரமாகியுள்ளவர் கனவிலும் தோன்றி, நீங்கள் அனைவரும் குடை, கவரி, விருந்துகள், வாத்தியங்கள் முதலிய பல சிறப்புகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் போய், பட்டர் பிரானாருடைய அருமைச் செல்வியாகிய கோதையை, அவர் தந்தையுடன் தன்னிடம் அழைத்து வர பணித்தருளினன். பிறகு பாண்டிய நாட்டு மன்னன் வல்லபதேவன் கனவிலும் தோன்றி, ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி திருவரங்கத்திற்கு அழைத்து வர ஆணையிட்டான். கோதையும் தாம் அதே இரவு பலவகைக் கனவுகளைக் கண்டதாகத் தோழியிடம் கூறினாள்.


அக்கனவில் திருமண வினைகள் அனைத்தையும் முறையே கண்டதாகப் பத்துப் பாடல்களில் அவர் நாச்சியார் திருமொழியில் பாடியுள்ளார். அவற்றுள்,

"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்"

என்பது மிக அழகியப் பாடல்.

பாண்டிய வேந்தன் வல்லபதேவன் தன் சேவகர்களைக் கொண்டு விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்தூரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வழியில் தண்ணீர் தெளித்தும், தோரணங்கள் கட்டியும், வாழை கமுகு வைத்து நன்றாக அலங்கரித்து, நால்வகைச் சேனைகளையும் கொண்டு ஆழ்வார் இடம் வந்து சேர்ந்து, பகவான் கூறியவற்றை ஆழ்வாருக்குத் தெரிவித்தான். பின்பு கோயிற்பரிவார மாந்தர் பெரியாழ்வாரை வணங்கி, இரவு தங்கள் கனவில் திருவரங்கத்து அமலன் காட்சி அளித்துக் கூறிய செய்திகளை அறிவித்தனர். பட்டர்பிரானார் இறைவனது அன்பிணைக் கண்டு ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தார். பின் அந்தணர்கள் பலர் பல புண்ணிய நதிகளினின்று நீரினைக் கொண்டு வந்தார்கள். கோதையின் தோழிகள் அந்நீரினால் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்திவிட்டு ஒப்பனை செய்தபின், தோழியர் புடைசூழ ஆண்டாள் நாச்சியார் அரசன் கொண்டு வந்திருந்த மணிச்சிவிகையில் ஏறினார். மற்றவர்கள் பல்லக்கிலும், தேர் முதலிய ஊர்திகளிலும், இன்னும் பலர் கோதையின் சிவிகைக்கு முன்னும் பின்னுமாக நடந்து சென்றார்கள்.

இப்படி திருவரங்கம் நோக்கிச் சென்ற போது பலர், "ஆண்டாள் வந்தாள்!சூடிக் கொடுத்த சுடர்க் கொடி வந்தாள்! சுரும்பமர் குழற் கோதை வந்தாள்!திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! பட்டர்பிரான் புதல்வி வந்தாள்! வேயர் குல விளக்கு வந்தாள்! தென்னரங்கம் தொழும் தேசி வந்தாள்!"என்று முன்னே கட்டியங் கூறிச் சென்றனர். அரசன், பட்டநாதர் முதலாயோருடன் கோதையின் சிவிகை திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்து, பெரிய பெருமாளுடைய முன்மண்டபத்தை அடைந்தது. பின் கோதை பெருமாளைச் சேவிக்கும்போது பெருமாளினால் ஈர்க்கப்பட்டு அப்படியே அவனுடன் ஒன்றானார்.

இவ்வாறு ஆண்டாள் அரும் பேறு பெற்றதைத் தரிசித்து ஆழ்வாரும், அவரது சீடனான வல்லபதேவனும் மற்றவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கும் போது அரங்கன் அர்ச்சகர் முகமாக ஆழ்வாரை அருகிலழைத்து, 'கடல் மன்னனைப் போன்று நீரும் நமக்கு மாமனாராய் விட்டீர்' என்று கூறித் தீர்த்தம், திருப்பரியட்டம், மாலை திருச்சடகோபம் முதலியவற்றை வழங்கி, 'வில்லிபுத்தூர் உறைவானுக்கே தொண்டு பூண்டிரும்' என்று திருவாய் மலர்ந்து விடை கொடுத்து அருளினான். ஆழ்வாரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று முன்போலவே இறைவனுக்கு மாலை அணிவிப்பதில் ஈடுபடுதலுடன் எண்பத்தைந்து ஆண்டுகள வாழ்ந்திருந்து, திருநாடு அலங்கரித்தார்.


திருப்பாவை - 30

மார்கழி மாதம் நற்சக்திகள் பெருகும் மாதம் என்பதாலும் அந்த சூழலில் அதிகாலை எழுந்து நோன்பு இருப்பதால் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான விஷயம் ஏற்படும் என்பதால் மார்கழி மாதம் தொடங்கி தை வ‌ரையான காலத்தில் இளம்பெண்களுக்கு ஒரு நோன்பினை விதித்திருந்தது. அந்த நோன்பு காத்தாயினி தேவிக்கு அர்பணிக்கபட்ட நோன்பாகவும், அப்படி நோன்பு நோற்று நல்ல கணவனை அடைய வழி தேவியின் சிலையினை அதாவது பாவை சிலையினை வைத்து நோன்பிருந்து பாடி மகிழ்ந்ததனர். ஆண்டாள் அந்த பாவை சிலையினை கண்ணாக கருதினாள், எல்லா இளம்பெண்களும் கணவனை அடைய அவளோ பரமாத்வாவினை அடைய நோன்பிருந்து பாடினாள், அதுதான் திருப்பாவை ஆயிற்று. திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் இந்த நோன்பு முறைகளைப் பற்றிக் கூறுகின்றன. ஆண்டாள் கண்ணன் வளர்ந்த மதுராவில் இருப்பது போலவும் தன் தோழிமார்களை கோபியர் போலவும் தன்னையும் ஓர் ஆய்க் குலப் பெண்ணாகவும் நினைத்து இந்தப் பாசுரங்களை பாடுகிறார்.


கண்ணனைச் சென்று காணும் போது அவனையே ஒரு மனத்தோடு நினைக்கும் மனநிலை வேண்டும். அதனால் நெய், பால் உண்ணாமல் கண்ணுக்கு மை தீட்டாமல், கூந்தலுக்கு மலர் சூடாமல், பிறர் குறைகளைப் பேசாமல், நல்ல நோக்கம், நல்ல எண்ணம், நல்ல செயல் உடையவராக நம்மைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும் என்கிறாள். நோன்பு நோற்கவேண்டி, ஆய்ப்பாடிச் சிறுமிகள் வீடுவீடாகச் சென்று தோழிகளைத் துயில் எழுப்பி வருகின்றார் ஆண்டாள். அப்பொழுது ஆய்ச்சியர் பொன்வளை ஒலிக்க, கைகளை மாற்றி மாற்றி மத்தினால் தயிர் கடைகின்ற இளங்காலைப் பொழுதில் அந்தத் தயிர் அரவம் கேட்டிலையோ எனச் சொல்லி, கேசவனைப் பாட வா என அழைக்கின்றார். உலகத்தவர் வாழ மழை பொழிய வேண்டும். அத்துடன் நாங்கள் மார்கழி நீராட மழை வேண்டும் என மண் வளத்தோடு மனித குல வளத்திற்கும் வேண்டுகின்றனர் பாவை நோன்பிருக்கும் பெண்கள். ஆண்டாள் நம்மை விடிகாலையில் துயில் எழுப்புவது நேரான பொருள். ஆனால் மறைபொருள் நம்மை இறைவனை அடையும் விழிப்புணர்வுக்குக் கொண்டுவருவத்சு தான். நம்மையும் எழுப்பி கண்ணனுக்கும் திருப்பள்ளியெழுச்சி செய்து நம்மை பரமாத்மாவுடன் கொண்டு சேர்க்கிறார்.

1. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;

நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்

நாரா யணனே, நமக்கே பறைதருவான்,

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.


2. வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்

செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்

பையத் துயின்ற பரமன் அடிபாடி,

நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி

மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;

செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.


3. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து

ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.


எனப் பாவை நோன்பின் நோக்கத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது பாசுரம்.


4. ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து

பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


5. மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,

தூய பெருநீர் யமுனைத் துறைவனை,

ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,

தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,

தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய்.


6. புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


7. கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?

நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.

8. கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.


9. தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;

மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று

நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.


கண்ணனின் தந்தை நந்தகோபனுடைய அரண்மனையை அடைந்து வாயிற் காவலன் அனுமதியுடன் உள்ளே நுழைந்து நப்பின்னையை எழுப்புகின்றனர். (தாயார் மூலம் பெருமாளின் திருவருள் பெறுவதற்குச் செய்யும் முயற்சி). பாவை நோன்பை ஆய்ப் பிள்ளைகள் பாவைக் களத்தில் ஒன்று சேர்ந்து மேற்கொள்வர். பாவை நோன்பு அல்லது வழிபாடு செய்யும் இடத்தைப் பாவைக்களம் என்று அழைக்கின்றனர்.


10. நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?

நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?

ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!

தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.


11. கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!

புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,

சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ

எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்


12. கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி

நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்

சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!

இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.


13. புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.


ஓங்கி உலகை அளந்தவன், கேசியைக் கொன்றவன், தென் இலங்கை அரசன் இராவணனை அழித்தவன், பறவை உருவில் வந்த பகாசுரன் என்னும் அசுரன் வாயைப் பிளந்து கொன்றவன் என்றெல்லாம் தந்தை பெரியாழ்வாரைப் போலவே அவதாரங்களுக்கும் செயல்களுக்கும் மங்களாசாசனம் (போற்றுதல்) செய்கிறாள் ஆண்டாள்.


14. உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.

15. எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;

‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’

‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’

‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’

'எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’

வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.


16. நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண

வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;

ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

17. அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;

கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;

அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த

உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;

செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.


நாராயணனே நமக்குப் பறை தருவான், வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் ஆகிய செல்வம், பால் போன்ற நிறமுடைய பாஞ்ச சன்னியம் போன்ற சங்குகள், பரந்து ஒலி எழுப்பக்கூடிய தோல் கருவியாகிய மிகப் பெரிய பறை, திருப்பல்லாண்டு பாடுபவர்கள், கோல விளக்கு, கொடி, விதானம் போன்றவற்றுடன் ஆல் இலையில் துயின்றவனை வழிபாடு செய்ய வேண்டும் என எதிர்பார்ப்புடன் நிற்கின்றனர் ஆய்ச்சியர்.


18. உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,

நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;

பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


19. குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;

மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,

தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.


20. முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.


தேவர்களுக்கு முன்னால் சென்று, தலைமை தாங்கிக் காப்பான் என்பது பொருள்.


21. ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;

ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;

மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்

ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்.


22. அங்கண் மாஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,

செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,

அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.


23. மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,

வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,

போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்

கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய

சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த

காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.


24. அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,

சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,

பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,

கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,

குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,

வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,

என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்.

இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.


ஆண்டாள் கண்ணனை அர்ச்சிக்கிறார்.

அடி போற்றி!

திறல் போற்றி!

புகழ் போற்றி!

கழல் போற்றி!

குணம் போற்றி!

வேல் போற்றி!


25. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


26. மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன

பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,

சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே, விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.


27. கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

நாடு புகழும் பரிசினால் நன்றாக,

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.


நோன்புக்கு முன்பு கண்ணனைப் பிரிந்த ஆய்ச்சி ‘நெய் உண்ணோம், பால் உண்ணோம்' என்றார். அவனைப் பெற்ற பிறகு,


சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்று அனைய பல்கலனும்யாம்அணிவோம் ஆடை உடுப்போம். அதன் பின்னே பால் சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்


(சூடகம் = தோளில் அணியும் அணி, பாடகம் = காலில் அணியும் அணி)

என்று கிடைத்தவற்றை உள்ளம் மகிழ்ந்து சொல்கிறார்..


28. கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;

அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்

பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,

இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


29. சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

30. வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.


இந்த முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பலன்:

திருப்பாற்கடலைக் கடைந்த மாதவனான கேசவனை சந்திரன் போல் முகமுடைய பெண்கள் சென்று யாசித்து விரும்பியதைப் பெற்ற வரலாற்றை(பாவை நோன்பு), அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் தோன்றிய தாமரை மாலை அணிந்த பெரியாழ்வாரின் மகள் ஆண்டாளால் அருளிச் செய்த திருப்பாவை முப்பது பாடல்களையும் தவறாமல் பாடுபவர்கள் நான்கு தோள்களையும், செங்கண்களையும் பெற்ற திருமால் திருவருள் பெற்று எப்பொழுதும் பேரின்பத்துடன் வாழ்வார்கள்.

ஆண்டாள் திருப்பாவை பாடி நோன்பிருந்து அந்த அரங்கனையே அடைந்து விட்டார். அப்படியென்றால் திருப்பாவைக்கான ஏற்றத்தை நாம் புரிந்து கொள்ளலாம். முப்பதும் சிறிய பாசுரங்கள், எளிமையான இனிமையான தமிழில். எவரும் படித்துப் புரிந்து கொள்ளலாம், தினம் பூஜையில்

சொல்லலாம்.


நோன்பின் பயன்

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்தில் பிறந்த நாங்கள் உன்னைப் பெறும்படியான புண்ணியத்தைப் பெற்றிருக்கிறோம். எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உறவுடையவர் ஆனோம், உனக்கே தொண்டு செய்வோம். எங்கள் பிற விருப்பங்களை மாற்றுவாயாக என்கிறார். கடந்த காலத்தில் செய்த பிழைகளும் இனிவரும் நாட்களில் செய்யப் போகும் பிழைகளும் தீயினில் தூசாகும் என்று அருமையான உவமையைப் பயன்படுத்துகிறார். தீ தானும் தூயதாய் தன்னிடத்து வரும் பொருள் எப்படிப்பட்டதாயினும் அதையும் தூய்மைப்படுத்தும் இயல்புடையது. எப்படிப்பட்ட பிழையாயினும் அவை ஒன்றுமில்லாமல் போகும் என்கிறார். நோன்பினால் மக்கள் நலனுக்காக மழை பெய்யும். சுவர்க்கம் புகலாம் என்றும் கூறுகிறார். அதனால் திருவள்ளுவர் சொன்னபடி

அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு

(பொருட்செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து இன்பம் இல்லையாயினாற் போல அருட்செல்வம் இல்லாதார்க்கு வீட்டுலக இன்பம் இல்லை.) இந்த நோன்பினால் பொருட்செல்வமும் அருட்செல்வமும் ஒரு சேரக் கிடைக்கிறது.

ஆண்டாள், தமிழின் ஒப்பற்ற பொக்கிஷம். அவர் அருளிய பாசுரங்களை மார்கழி மாதத்தில் மட்டுமல்லாமல் தினமுமே பாடிவர நல்ல அருளும் மொழிவளமும் செல்வமும் நம்மோடு எப்போதும் நிறைந்திருக்கும். முப்பது பாசுரங்களை தினமும் சேவிக்க முடியாவிட்டாலும் இரண்டு பாசுரங்களை தினமும் பாட வேண்டும். அவை ஒன்று சிற்றஞ்சிறுகாலே என்னும் பாசுரம், இரண்டாவது வங்கக் கடல் கடைந்த என்று தொடங்கும் பாசுரம்.


இந்த உலகத்துப் பொருள்கள் வேண்டிப் பெற்று அனுபவித்து அதனால் நல்வினையும் தீவினையும் உண்டாகி மறுபிறப்பை ஏற்று பிறவிச் சுழலில் சிக்கிக்கொள்வோம். பிறவிப் பெருங்கடலை நீந்திக்கடந்து இறைவனின் திருவடி என்னும் கரையை அடைவதே அனைத்து பக்தர்களின் நோக்கம். ஆனால், அது சாத்தியமாவதில்லை. நாம் மறுபிறவியில்லா நிலையை அடைவதை நாம் மட்டும் மனது வைத்தால் போதாது. அந்த நாராயணனும் திருவுளம் கொள்ள வேண்டும். அவன் நம்மைப் பிறவிச் சுழற்சிக்குள் புக வைத்தால் அதை ஏற்கவும் செய்ய வேண்டும். அவ்வாறு எடுக்கும் பிறவியில் இறைவனை அறியாது மீண்டும் தீவினைகளுக்குள் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. அதனால்தான் அடியார்கள் வேண்டும்போது, "பிறவா வரம் வேண்டும். அப்படியே பிறந்தாலும் உன்னை மறவா வரம் வேண்டும்" என்று வேண்டுவார்கள். இதற்கு ஒரே வழி பூரண சரணாகதி என்கிறார் ஆண்டாள். அவனையே பற்று, மற்றனைத்தையும் விட்டு!


ஆண்டாள், பூமிப்பிராட்டியின் அவதாரம். நம் பாவங்கள் தீர வேத பாராயணம் செய்ய வேண்டும். ஆனால், கலியுகத்தில் வேத பாராயணமும் நலிந்துவருகிறது. வாழ்வில் மேன்மையுற கண்ணன் கீதையை உபதேசித்தான். கீதையையும் பாகவதத்தையும் பாராயணம் செய்வதும் நல்லது. ஆனால், எல்லோராலும் அந்த அளவுக்கு சிரத்தையோடு சொல்ல முடியாது. இதனால் நம் வாழ்வில் பாவம் சூழும். பூமிப்பிராட்டி தன் பிள்ளைகள் மேல் பாசம்கொண்டு ஆண்டாளாய் அவதரித்து, கீதையின் சாரத்தையும் வேதங்களின் உட்பொருளையும் விளக்குமாறு எளிய தமிழ் பாசுரங்களை வழங்கினார். எல்லோரும் பாடிப் போற்றி நற்கதி அடையவே ஆண்டாள் அழகு தமிழில் இப்படியொரு பாசுரங்களை நமக்கு வழங்கியிருக்கிறார். திருப்பாவையை பாடுவது நம்மைப் பரமனடிக்கு இட்டுச் செல்லும். காரணம் கோதையின் திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்தாகும் என்று போற்றுகிறது. திருப்பாவையின் பொருள் அறிந்தால் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சி அடையலாம். பொழிப்புரை தெரிந்து கொண்டால் சொர்க்கத்தினை அடையலாம். பெரியோர்கள் அருளிய வியாக்கியானத்தை தெரிந்து கொண்டால் வைகுண்டத்தை அடைவோம். அதனால் திருப்பாவையை ஆழ்ந்து படித்து வைகுண்டத்தை அடைவோம்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


வாழி திருநாமம்

திருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்





ஸ்ரீ வேளுக்குடி சுவாமிகள் உபன்யாசம்.

https://www.kamakoti.org/tamil/divya10.htm


819 views1 comment

Recent Posts

See All
bottom of page