top of page
  • Writer's pictureAnbezhil

ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா

Updated: Jul 25, 2021

திருவேங்கடவனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அதற்கு முடிவே இல்லை எனலாம். அவ்வளவு மகிமை வாய்ந்தவர், அவ்வளவு அதிசயங்கள் கொண்டது அவர் கோவில், அவ்வளவு உத்சவங்கள் வழிபாடுகள், சேவைகள் நிறைந்தவை அவர் சந்நிதி! வானுலகத்தில் இருப்பவர்களும் இறங்கி வந்து சேவிக்கவும், மண்ணுலகில் இருப்பவர்களும் எறி வந்து சேவிக்கவும் ஒரு தாயாரின் வாத்சல்யத்துடன் மலை மேல் குடியிருக்கிறார் ஸ்ரீ என்னும் திருமகளை திருமார்பில் வைத்திருக்கும் ஸ்ரீனிவாசன். கோவில், திருமலை, பெருமாள் கோவில், திருநாராயணபுரம் என்று நாலு க்ஷேத்திரங்கள் முக்கியமாக சொல்வார்கள் வைணவர்கள். கோவில் என்பது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். திருமலை என்பது திருப்பதி கோவில், பெருமாள் கோவில் என்பது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், திருநாராயணபுரம் என்பது மேலுகோட்டை செல்வநாராயண பெருமாள் கோவில். அதன் பெருமைக்குரிய ஸ்லோகம் இது. ஸ்ரீ ராமானுஜர் அருளிச்செய்தது.

ஸ்ரீரங்க மங்கள மணிம் (நிதிம்) கருணா நிவாஸம்

ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம்

ஸ்ரீ ஹஸ்திஸைல சிகரோஜ்வல பாரிஜாதம்

ஸ்ரீஸம் நமாமி சிரஸா யதுஸைல தீபம்

பொருள்: கருணையின் வாசஸ்தலத்தமான -ஸ்ரீரங்கத்தின் புனித அணி ஸ்ரீ ரங்கநாதரை, வெங்கடாத்ரி என்று அழைக்கப்படும் மலையின் உச்சியில் இருக்கும் தயை என்னும் மழைநீர் கொண்ட கருமேகமான வெங்கடேசனை, ஹஸ்தி சைலத்தின் உச்சியில் பிரகாசிக்கும் கேட்டதை கொடுக்கும் பாரிஜாத மரமான வரதராஜ பெருமாளை,யதுசைலத்தின் உச்சியான மேலுகொட்டையில் வீற்றிருக்கும் உலகை ஞான ஒளியால் பிரகாசிக்க வைக்கும் விளக்காக விளங்கும் திருநாராயணனை நான் வணங்குகிறேன்

அப்படி திருவரங்கத்துக்குப் பிறகு பெருமை வாய்ந்த கோவில் வேங்கடவன் குடியிருக்கும் திருமலை. இங்கு இவரை ஒரு நிமிடமோ அரை நிமிடமோ தான் நாம் தரிசிக்க முடிகிறது. அதற்குள் அவரை நாம் சேவித்து நம் மனத்துக்குள் இருத்திக் கொள்ளவேண்டும். இங்கு பெருமாள் மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று தன் வலது கையால் திருவடிகளை காட்டிக் கொண்டு, இடது கை கடி ஹஸ்தம் நீ என்னை பற்றினால் நான் உன்னுடைய சம்சாரம் என்னும் கடலை முழங்கால் அளவுக்கு வற்றடித்து உன்னை காப்பற்றுகிறேன் என்கிறபடி சேவை சாதிக்கிறார். அப்படிப்பட்ட பெருமாள் ஒரு நாளைக்கு 23 மணி நேரம் நமக்காக தரிசனம் கொடுக்கிறார். அவர் ஒய்வு பெறும் நேரம் அரைமணியோ ஒரு மணியோ தான். திருவேங்கடவன் கர்பக்கிரகத்தில் சிலா ரூபத்தில் உள்ளார். அவர் மார்பில் திருமகள் உறைகிறாள். கர்பக்கிரகத்தின் உள்ளேயே மேலும் மூன்று ஸ்ரீனிவாசர்கள் உள்ளனர். நாம் மூலவரை சேவிக்க தான் அந்த சில மணித் துளிகளை எடுத்துக் கொள்கிறோம். மற்றவர்களை தரிசிப்பது இல்லை, (விஐபியாக இருந்தால் அது வேறு விஷயம்). அதனால் அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். அவர்கள் ஸ்ரீ போக ஸ்ரீனிவாசர் - இவர் அனுபவம், ஆராதனைகளை ஏற்றுக் கொள்பவர். ஸ்ரீ கொலுவு ஸ்ரீனிவாசர்- இவர் ராஜ தர்பார் நடத்தும் ஸ்ரீனிவாசர். இவர் கர்பக்கிரகத்தில் இருந்து வெளியில் உள்ள மண்டபத்தில் ஏளி இவர் முன் தான் கோவிலின் கணக்கு வழக்குகள் படித்து ஒப்படைக்கப்படும். மண்டபத்தில் கொலு வீற்றிருப்பவர் அதனால் கொலுவு ஸ்ரீனிவாசர். அடுத்து ஸ்ரீ உக்ர ஸ்ரீனிவாசர். இவர் கர்பக்கிரகத்தை விட்டு வெளியே வருடத்துக்கு ஓரிரு முறை தான் வருவார் அதுவும் விடியற்காலையில் வந்து பொழுது புலர்வதற்கு முன்பே திரும்பி விடுவார். நித்ய கல்யாண உத்சவங்கள், ஊஞ்சல் உத்சவங்களை ஏற்றுக் கொள்பவர் ஸ்ரீ மலையப்ப சுவாமி. அவர் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருடன் எழுந்தருள்வர். இவரை நாம் நிறைய படங்களிலும் வீதி உலா வரும்போது திருமலையில் நேரிலும் தரிசித்திருப்போம். மேலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் இருக்கிறார். இவரைத் தவிர ஸ்ரீ கண்ணன், ஸ்ரீ இராமன் இருவரும் எழுந்தரளுயிருக்கின்றனர். நாட்டிய கண்ணன் ருக்மிணி தேவியுடன் சேர்ந்து எழுந்தரளுயிருக்கிறார். ஸ்ரீ ராமன் சீதா லக்ஷ்மனருடன் எழுந்தருளியுள்ளார்.


கோடிக்கணக்கான பக்தர்கள் வழிபடும் ஏழுமலையானை திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், வெங்கடாஜலபதி,பாலாஜி என்று பல பெயர்களில் அழைத்தாலும் வெறுங்கைவேங்கடவன் என்பதே பழைய தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பெயராகும். எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேங்கடவன் என்று அழைக்கப்பட்டார். தொல்காப்பியத்தில் திருமலையைப் பற்றி "வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ் கூறு நல்லகம்" என்று குறிப்பும் உள்ளது. சிலப்பிதிகாரத்தில் "நெடியோன் குன்றம்" என்று திருமலையைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். மணிமேகலையிலும் குறிப்புகள் உள்ளன. வைணவப் பண்பாட்டில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது தி ருப்பதி-திருமலை ஆலயம் தான். பத்துப் புராணங்களிலும் சொல்லப்பட்டவர். ஆழ்வார்களால் கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பத்து ஆழ்வார்களால் பாடல் பெற்ற திவ்ய தேசம் திருமலை திருப்பதி.

திருமழிசை ஆழ்வார் அருளிச் செய்த ஒரு பாடல் இது.

வேங்கடமே விண்ணோர் தொழுவதும் மெய்ம்மையால்

வேங்கடமே மெய்வினை நொய்தீர்ப்பதுவும் ---வேங்கடமே

தானவரை வீழத் தானாழிப் படைத் தொட்டு

வானவரைக் காப்பான் மலை

இதன் பொருள்: நித்யசூரிகள் உண்மையான பக்தியுடன் தொழும் மலை வேங்கடமே. நம்முடைய பாவங்களையும், உடலை வருத்தும் நோய்களையும் தீர்த்து வைப்பது வேங்கடமே. தேவர்களையும் காத்தருள்பவனுடைய மலையும் வேங்கடமே.

ஸ்ரீஆண்டாள் அரங்கனை தான் விரும்பினாள், அவரை தான் மணமுடித்தாள் அவர் மேல் பத்துப் பாசுரங்களே பாடியுள்ளாள். ஆனால் திருவேங்கடவன் மேல் அதைவிட அதிகப் பாசுரங்கள் பாடியுள்ளாள். திருப்பாவையில் 27, 28, 29ஆம் பாசுரங்களிலும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று ஸ்ரீனிவாசரை தான் அழைக்கிறாள். வேங்கடத்து நெடியோன் மட்டும் தான் மோட்சத்துக்கான வழியை நம் எல்லாருக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே நிற்கிறான்! குல முதல்வனான ஸ்ரீநம்மாழ்வார், சரணாகதி என்று வரும் போது மட்டும், அரங்கனிடம் செய்யாமல், வேங்கடவனிடம் செய்கிறார்.

"அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா

நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே

புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே" என்ற சரணாகதிக்கான ஒரே பாசுரம், வேங்கடவன் மேல் அமைத்துள்ளார். அத்தனை மகிமை பொருந்தியவர் ஸ்ரீநிவாசப் பெருமாள்.


#திருமலை_வரலாறு சீமாந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கிறார். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு 'ஏழுமலையான்’என்ற பெயர். ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேஷனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேஷாசலம் என்று பெயர் உள்ளது. திருமால் வராஹ அவதாரம் எடுத்து பூமாதேவியை பாதாள லோகத்தில் இருந்து மீட்டப் பின் தன் இருப்பிடமாக திருமலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கேயே வசிக்கலானார். அதனால் அந்த இடத்திற்கு வராஹ ஷேத்ரம் என்ற பெயரும் வந்தது. இந்த காலம் ஷ்வேத வராஹ கல்பம்! அவரின் வராஹ தோற்றம் அதி பயங்கரமாக இருந்தது. தேவர்களும் முனிவர்களும் பிரார்த்தித்துக் கொண்டதன் பேரில் வராஹ பெருமான் அழகிய ரூபத்தை எடுத்துக் கொள்ள இசைந்தார். ஶ்ரீதேவி பூதேவியுடன் பூமியில் வசிக்க வாக்குக் கொடுத்தார்.

பூமியை ஸ்திரப்படுத்திய பின்னர் மஹாவிஷ்ணு (பூவராஹர்) கருடனை அழைத்து, வைகுண்டத்தில் இருந்து க்ரிடாசலாவையும் தேவர்களையும், விஷ்வக்சேனரையும் கொண்டுவரச் செய்தார். க்ரிடாசலா ஒரு தேவ மலை. தங்கமும், வைரமும், வைடூரியமும் நிறைந்தது. வானளாவிய மரங்கள், நறுமணம் கமழ்கின்ற மலர்கள் நிறைந்த பூங்காவனம் அது. ஹரியின் உறைவிடமாக இருக்க முழுத் தகுதி நிறைந்த வாசஸ்தலம் அந்த நாராயண மலை! அந்த மலையை வராஹர் எந்த புனிதமான இடத்தில் வைக்க வேண்டும் என்று கருடனுக்கு உத்தரவு இட்டார். நீண்ட மலையானது ஆதிசேஷனை ஒத்து இருந்தது. நைமிசாரண்யத்தில் முனிகளும் ரிஷிகளும் சூத பௌராணிகரிடம் எந்த ஸ்தலம் மஹா விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது என்று ஒரு முறை கேட்டனர். அதற்கு அவர் திருமலையை சுட்டிக் காட்டினார். அந்த மலைக்குக் கேட்டதைக் கொடுக்கும் பலமும் வந்து வணங்குவோர்க்கு அனைத்துச் செல்வங்களையும் தரும் சக்தியும் இருப்பதை எடுத்துரைத்தார்.

வருவோர்க்கு மோக்‌ஷம் அளிக்கும் இடமாக அது ஹரியின் அருளால் மாறியது. பக்கத்திலேயே ஸ்வாமி புஷ்கரணி என்ற புனித குளம் உதயமாயிற்று. அதற்கு தெற்கு புரத்தில் தான் பின்னாளில் ஶ்ரீனிவாச பெருமாள் அதிவராஹரிடம் இருந்து அனுமதி பெற்று திருமகளுடன் வீற்றிருக்கப் போகிறார். முதலில் திருமலையில் வசித்தது ஆதி வராஹர் என்பதால் நாம் ஸ்ரீஆதிவராக மூர்த்தியைத் தரிசித்துவிட்டே ஏழுமலையானையும் மற்ற சந்நிதிகளையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.


#ஸ்ரீனிவாசர்_திருமலை_வந்த_வரலாறு

ஒரு முறை நிறைய முனிவர்கள் சேர்ந்து கங்கைக் கரையில் ஒரு யாகம் நடத்தினர். அங்கு வந்த நாரதர் அந்த யாகப்பலனை எந்த பகவானுக்கு கொடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார். அதுவரை அதைப் பற்றி யோசிக்காத முனிவர்கள் அந்த பொறுப்பை ஸ்ரீ ப்ருகு முனிவரிடம் ஒப்படைத்தனர். அவரும் முதலில் சத்திய லோகம் சென்று ப்ரம்மனை தரிசித்தார். அவரோ கலைவாணியுடன் பேசிக் கொண்டு இவரை கவனிக்கவில்லை. அடுத்து கைலாசம் சென்றார். அங்கும் சிவனார் சக்தியோடு ஐக்கியமாகி இவரை கண்டுக் கொள்ளவில்லை. பிறகு அவர் வைகுண்டம் சென்றார். அங்கேயும் இதே கதை தான். திருமால் திருமகளுடன் ஆனந்தமாக இருந்தார். கோபம் வந்து ப்ருகு முனிவர் திருமாலின் மார்பில் காலால் எட்டி உதைத்தார். உடனே எழுந்த மஹா விஷ்ணு ப்ருகு முனியின் பாதங்களைப் பற்றி என்னை உதைத்ததில் உங்கள் கால் வலித்திருக்குமே என்று அவர் காலை பிடித்து விட்டார். பொறுமையும், அமைதியும் நிறைந்த திருமாலுக்கே யாகபலனைத் தருவதென முனிவர்கள் முடிவெடுத்தனர். தான் வாசம் செய்யும் மார்பில் உதைத்த பிருகு முனிவரைத் தண்டிக்கும்படி தாயார் லட்சுமி சொல்ல திருமால் மறுத்துவிட்டார். மகாலட்சுமி கோபம் கொண்டு பாற்கடலில் இருந்து கிளம்பி, பூலோகத்தை அடைந்து கோலாப்பூரில் வாசம் செய்து தவத்தில் ஆழ்ந்தாள். திருமாலும் திருமகளை தேடி பூவுலகத்தைச் சுற்றி அலைந்து வேங்கடமலையில் வந்து ஒரு புற்றில் கண்மூடி அமர்ந்தார். அவருக்கு பசித்தது. இதுபற்றி, நாரதர் தவத்தில் இருந்த லட்சுமியிடம் சொன்னார். லட்சுமி வருத்தமடைந்தாள். நாரதர் அவளிடம் திருமாலின் பசியைப் போக்க வழியும் சொன்னார். அதன்படி பிரம்மாவும், சிவனும் பசுவாகவும் கன்றாகவும் மாற, மகாலட்சுமி தாயார் அவற்றின் எஜமானி போல் வேடமணிந்து, அப்போது அப்பகுதியை ஆட்சிசெய்த மன்னனிடம் விற்கச்சென்றாள். மன்னன் வாங்கிய பசு மேய்ச்சலுக்குச் செல்லும்போது திருமால் இருந்த புற்றுக்குச் சென்று பால் சொறிந்தது. பசுவினை மேய்த்த இடையன் பசுவின் பின்னால் சென்று புற்றில் பால் சொறிவதைக் கண்டான். கோடரியால் பசுவை அடிக்க முயன்றான். கோடரி தவறி புற்றுக்குள் இருந்த பெருமாளின் தலையில் பட்டு ரத்தம் சிந்தியது. இதைக் கண்ணுற்ற பால்காரன் அந்த இடத்திலேயே உயிர் நீத்தான். பின் அந்தப் பசு கீழே சென்று அரசனை மலைக்கு அழைத்து வந்தது. அரசன் மிகவும் வருத்தமுற்றான். ஶ்ரீனிவாசர் அரசினடம், பின்னாளில் ஆகாசராஜா தன்மகள் பத்மாவதியை எனக்கு மணமுடித்துக் கொடுப்பார், அப்பொழுது அவர் ஒரு கிரிடம் பரிசளிப்பார். அதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் அணிவேன். அப்பொழுது எனக்கு வலி தெரியாது என்று கூறினார். பின் தன் காயம் தீர மூலிகை தேடிச் சென்ற பெருமாள், ஆஸ்ரமம் ஒன்றினைக் கண்டார். அது வராஹ மூர்த்தியின் ஆஸ்ரமம். அங்கிருந்த வகுளாதேவி (முற்பிறவியில் கண்ணனின் அன்னை யசோதையாக பிறந்தவள்) தன் பிள்ளையான திருமாலின் முகத்தைக் கண்டவுடன் பாசத்தில் மூழ்கினாள். திருமாலும் அன்புடன் வகுளாதேவியை "அம்மா என்று அழைத்தார்.வகுளாதேவி தன் பிள்ளைக்கு ஸ்ரீனிவாசன் (செல்வம் பொருந்தியவன்) என்று பெயரிட்டாள். தன் பிள்ளையின் காயம் தீர மருந்திட்டு, பசிபோக்கிட கனிகளைத் தந்தாள்.


#ஶ்ரீனிவாசர்_கல்யாணம்

இந்நிலையில், சந்திரிகிரி என்ற பகுதியை ஆகாசராஜன் என்பவன் ஆண்டு வந்தான். ஆகாசராஜன் தொண்டைமானின் சகோதரன், சந்திர வம்சத்தினன். பிள்ளை வரம் வேண்டி தன் குலகுரு சுகமாமுனிவரின் ஆலோசனைப்படி புத்திர காமேஷ்டி யாகம் செய்ய நல்ல நேரம் குறித்தான். யாகம் செய்யும் இடத்தை செம்மைப்படுத்தும் போது, பூமியில் புதைந்திருந்த பெட்டிக்குள் இருந்த தாமரையில், படுத்த நிலையில் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. தாமரைக்கு பத்மம் என்று பெயர் உண்டு. எனவே குழந்தைக்கு பத்மாவதி என்று பெயரிட்டான். தமிழில் அலர்மேல் மங்கை, அதே பொருள். ராமாவதாரத்தின் போது வேதவதி என்னும் பக்தை, ராமனை மணாளனாக பெற வேண்டி தவம் செய்தாள். ராமனும் அவளிடம், பின்னாளில் அவளை மணம் செய்து கொள்வதாக வாக்குறுதி தந்தார். அதன்படியே வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். பிறந்து ஆகாச ராஜனின் மகளாக வளர்ந்து வந்தாள். பிறகு அவனுக்கு வசுதேவா என்ற மகனும் பிறந்தான்.


ஒரு முறை ஶ்ரீனிவாசர் காட்டுக்கு வேட்டையாடப் போனார். ஒரு யானையைத் துரத்தியபடி வெகு தூரம் பயணப்பட்டு ஒரு நந்தவனத்தை அடைந்தார். அங்கு ஆகாசராஜனின் புதல்வி தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். ஶ்ரீனிவாசர் பத்மாவதியைக் கண்டவுடன் மையல் கொண்டு அவளை மணமுடிக்க அவளிடம் விருப்பத்தைத் தெரிவித்தார். வசுதேவரின் மகனான கிருஷ்ணன் தான் தான் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். ஆனால் அவர்கள் அவரை விரட்டியடித்துவிட்டனர். அவர் மிகுந்த சோகத்துடன் எறும்புப் புற்றுக்கு வந்து அமர்ந்து விட்டார். அவரை கவனித்த வகுளா தேவி அவரின் வருத்தத்தைக் கண்டு அவரே அரசனிடம் சென்று பேச முடிவெடுத்தார். அதற்கு முன்பே ஶ்ரீனிவாசர் ஒரு குறத்தியைப் போல வேடமிட்டு ஆகாசராஜனின் அரசி தரணியைப் பார்த்து அவளை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார். அந்த சமயம் வகுளா தேவியும் அங்குச் செல்ல எல்லாம் இனிதே முடிந்தது. ஶ்ரீனிவாசருக்கும் பத்மாவதித் தாயாருக்கும் முப்பத்து முக்கோடி தேவர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நிறைவேறியது. திருமலைவாசனின் திருமண பத்திரிக்கையில் குலதெய்வம் என்ற இடத்தில் ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்று போடப்பட்டிருக்கிறது.

ஸ்ரீனிவாசருக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் திருமணம் முடிந்த பிறகு அஹோபிலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வழிபட்டனர் என வேங்கடேச மகாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. திருமணத்துக்கான செலவுகளுக்கு ஸ்ரீனிவாசரிடம் லட்சுமிதேவி உடனில்லாததால் செல்வம் இல்லை. எனவே பத்மாவதியை மணப்பதற்காக குபேரனிடம் கடன் பெற்றார். கலியுகம் முடியும் வரை, தான் பெற்ற கடனுக்கு, வட்டி செலுத்துவதாகவும், வாக்களித்தார். அதன்படியே, பக்தர்களின் காணிக்கை அனைத்தும், ஏழுமலையானின் கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. உலகிலேயே பெரும் பணக்காரரான கடவுளாக இருந்தாலும் குபேரனிடம் இன்னும் வட்டி கட்டும் கடனாளியாக உள்ளதாக ஐதீகம்.


தொண்டைமான் தான் இப்பொழுது இருக்கும் கோவிலை நிறுவினார். சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோயில் ஒன்றை எழுப்பினார். ஸ்ரீனிவாசப் பெருமாள் கலியுகம் முடியும் வரை திருமலையில் சிலாரூபமாக பக்தர்களுக்கு அருள் தரும் விதமாக திருமலையில் எழுந்தருளினார். இந்த அழகிய கோவிலில் திருப்தியுடன் வசிக்கிறார் ஶ்ரீனிவாசர். பத்மாவதி திருமலை அடிவாரத்தில் அலமேலுமங்காபுரத்தில் அருளாட்சி செய்கிறாள். ஸ்ரீனிவாசப் பெருமாள் தினமும் இரவில் திருச்சானூர் வந்துதங்கிவிட்டு காலையில் திருமலைக்கு திரும்பி விடுவதாக ஐதீகம் நிலவுகிறது. திருப்பதி திருமலை ஏழுமலையானை நாம் தரிசிக்கும் முன் திருச்சானுரில் உள்ள பத்மாவதி தாயாரை தான் முதலில் தரிசிக்க வேண்டும். பத்மாவதி தாயாரை தரிசித்த பிறகு திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்பதால் விசேஷ பலன் கிடைக்கும்.

#திருமலையின்_பெருமை

திருமலைக்குப் பல கல்யாண குணங்கள் உண்டு. விரஜா நதியைப் போல கங்கையின் பிறப்பிடமான இந்த மலைக்குப் பாவங்களை போக்கும் வல்லமை உள்ளது. பார்ப்பதற்கு சாதாரண மலையைப் போல் இருந்தாலும் பக்தர்களின் பக்தி இந்த மலையில் புனிதமடைகிறது. பக்தியின் சக்தி பன்மடங்காகப் பெருகி கேட்ட வரத்தை அடையச் செய்கிறது. அதே போல ஸ்வாமி புஷ்கரணியில் நீராடினாலும் பாவங்கள் தொலைகின்றன.


இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே வருடத்திற்கு 100 கோடிகளை சம்பாதிக்கும் தலம். திருப்பதி லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப் படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள்.பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும் கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.

#கோவில்_அமைப்பு கோவிலின் அமைப்பு அதி அற்புதம். பெருமாள் ஆனந்த விமான நிலையத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ராஜ கோபுரம் நாற்கோண அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்து கட்டட கலை வடிவமைப்பில் உள்ள இந்த கோபுரம் 13ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. படிகாவலி மஹா துவாரம் என்று இந்த கோபுரத்தை அழைக்கின்றனர். கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை சம்பங்கி பிரதட்சிணம் என்று அழைக்கின்றனர். இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.

கிருஷ்ண தேவராய மண்டபம்: வாயில் கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள். இங்கு துலாபாரம் உள்ளது. துலாபார நேர்த்திக் கடன் செய்வோர் இங்கு அதனை செய்வர். இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி (இடது), சின்னா தேவி (வலது) ஆகியோர் உள்ளனர். இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது. 1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார். கிருஷ்ணதேவ ராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார். 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் ஸ்ரீராமர் வில்லை உடைக்கும் காட்சி, ஸ்ரீராம பட்டாபிஷேகம், ஸ்ரீ கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.


ரங்க மண்டபம்:

சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் மாலிக் காபூர் தலைமையில் நடைபெற்ற இஸ்லாமிய படையெடுப்பின் பொழுது ஸ்ரீரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்குக் கொண்டுவரப்பட்டு 60 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டது. அந்த சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்ட மண்டபமே ரங்க மண்டபம். 1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்கநாதயாகவ ராயர் காலத்தில் விஜயநகர பாணியில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.


திருமலைராய மண்டபம்:

ரங்க மண்டபத்தின் மேற்கு பகுதியில் திருமலை ராயர் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை அமர்ந்து கோயிலின் கணக்கு வழக்குகள் பற்றி விசாரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இங்குள்ள தூண்களில் மோகன தேவி மற்றும் பிதாபீபி ஆகியோரின் சிலைகள் உள்ளன.


ஜனா மண்டபம்:

திருமலை ராய மண்டபத்தின் வடக்கு பகுதியில் இரண்டு பிரிவுகளை கொண்ட ஐனா மகால் உள்ளது. வரிசைக்கு ஆறு தூண்கள் வீதம் ஆறு வரிசைகளில் 36 தூண்கள் கொண்ட மண்டபம் இது. மண்டபத்தின் மத்தியிலுள்ள அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்க விடப் பட்டுள்ளது. இதில் மலையப்ப சுவாமி அமர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்த்துவார்.


துவஜஸ்தம்ப மண்டபம்:

வைகானஸ ஆகம விதிகளின்படி துவஜஸ்தம்ப (கொடிமரம்) மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. மற்ற கோயில்களில் உள்ள கொடிமர மண்டபங்களில் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் உற்சவங்களை நிகழ்த்த முடியாது. ஆனால் இந்த மண்டபத்தில் சீதோஷ்ணம் எப்படி இருந்தாலும் உற்சவங்களை நடத்த முடியும்.

நடிமி படி காவிலி:

இப்படி ஒரு வித்தியாசமான பெயருடன் கூடியதே இக்கோவிலின் உள்கோபுரம் ஆகும். கொடிமர மண்டபத்தை அடுத்து இந்த கோபுரவாசல் உள்ளது. கோபுர கதவுகள் வெள்ளி தகடுகளால் மூடப்பட்டுள்ளது. வெளி கோபுர கதவுகளைவிட இந்த கோபுர கதவுகள் சிறியது. இந்த கதவுகளின் அருகில் நின்று எந்த பிரார்த்தனை செய்தாலும் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. வெண்டிவாகிலி என்று இந்த கதவுகளுக்கு பெயர். இந்த கதவுகளை ஒட்டியுள்ள சுவரில் ஜடா வர்மன் சுந்தரபாண்டியன் 1251ல் இக்கோவிலுக்கு அளித்த உபய விபரங்கள் தெரிவிக் கப்பட்டுள்ளது.


திருமாமணி மண்டபம்:

பதினைந்தாம் நூற்றாண்டில் சந்திரகிரி பகுதியை ஆண்ட மல்லண்ணா என்பவர், இந்த மண்டபத்தை உருவாக்கினார். 16 தூண்கள் உள்ள இந்த மண்டபம், மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கொலுவு ஸ்ரீனிவாசமூர்த்தி இந்த மண்டபத்தில் அமர்ந்து, சேவை சாதிப்பார். இந்த மண்டபத்தில் திருமணி, திருமாகமணி என்னும் 2 மணிகள் உள்ளன. நைவேத்திய நேரத்தில் இந்த மணிகள் ஒலிக்கப்படும். இதன் காரணமாக இந்த மண்டபத்திற்கு திருமாமணி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. முக மண்டபம் என்றும் இதைச் சொல்வர். மண்டபத்தின் கிழக்கே கருடர் சன்னதியும், வடக்கே உண்டியல் மண்டபமும் உள்ளது.


பங்காரு வகிலி:

திருமாமணி மண்டபத்தைக் கடந்து "பங்காரு வகிலி எனப்படும், தங்க நுழைவுவாயில் வழியாகவே பெருமாளைத் தரிசிக்க நாம் செல்கி றோம். இதன் வாசலில் ஜெயன், விஜயன் எனப்படும் துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாசலில் உள்ளமரக்கதவை, தங்க முலாம் பூசிய தகடுகளால் போர்த்தியுள்ளனர். அந்த தகடு களில் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதனுள் நுழையும்போது, சுப்ரபாதம் எந்நேரமும் காதில் ஒலிக்கும்.


கருவறை:

வெங்கடாசலபதி கருவறைக்கு செல்லும் முன் ஒரு சதுரவடிவ அறை இருக்கும். இதை ஸ்நாபன மண்டபம் என்று அழைக்கிறார்கள். இதை அடுத்துள்ள செவ்வக அறையை ராமர் மேடை என்கின்றனர். இதில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணர் ஆகியோரின் சிலைகளும், விஷ்வக்ஸேனர், கருடன் ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிலையும் வைக்கப்பட்டுள்ளன. குலசேகர ஆழ்வார் படியை ஒட்டி போக ஸ்ரீனிவாசர் சயனிக்கும் சயன மண்டபம் அமைந்துள்ளது. இதை அர்த்த மண்டபம் என்றும் அழைப்பர். இங்கு தான் போக ஸ்ரீனிவாசர் கோவில் நடை சாத்தியவுடன் கொண்டு வந்து சயனிக்க வைத்து, பின் அரை மணி நேரத்திலேயே சுப்பரபாத சேவைக்கு இவரை துயிலெழுப்பி மூலவர் சந்நிதிக்கு கொண்டு சென்றுவிடுவர். மார்கழி மாதம் முழுவதும் இந்த சேவை கண்ணனுக்கே. அவரை தான் சயன மண்டபத்தில் ஏளி பின் விடியற்காலை சுப்ரபாதத்திற்குப் பதிலாக திருப்பாவை சேவித்து திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். இது ஆண்டாள் நாச்சியாருக்கான பெருமை. இதையடுத்து கர்ப்பகிரகத்தில் வெங்கடாசலதி ஒன்பது உயரத்தில் நின்ற கோலத்தில் இருக்கிறார். இவரை காணும் முன்பு நம்மை அறியாமலே ஒரு படியின் மீது காலை வைக்கிறோம். அந்த படிக்கு குலசேகர படி என்று பெயர். இந்த படியில் கால் வைத்ததும் நமக்கு குலசேகர ஆழ்வார் நினைவுக்கு வருவார். அப்போது, செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!

நெடியானே! வேங்கடவா! நின் கோயில் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே! என்ற பாடல் நம் மனத்தில் கண்டிப்பாக ஒலிக்கும்.


ஆனந்த நிலைய விமான வெங்கடேஸ்வரர்! நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வரர் எழுந்தருளி யிருக்கிறார். கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார். வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகம விதி.

ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம். ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது. இது ஒரு வெள்ளை அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும். பிரம்மா முதலானவர்களுக்குக் கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் தரிசனம்! ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும். இது ஒரு #சிவப்பு அம்புக்குறியால் மார்க் செய்யப்பட்டிருக்கும். உள்ளே பெருமாளை நாம கூட்டத்தில் சரியாக தரிசித்து வேண்டுதல்களை சொல்ல முடியாமல் போனாலும் கோபுரத்தில் அதே கோலத்துல இருக்கும் விமான வெங்கடேஸ்வரரிடம் நமது வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வர அது மூலவர் இடம் சொன்னமாதிரி தான். ஜடாவர்மன் சுந்தர பாண்டிய அரசரால் இந்த விமானம் 12-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டதற்கு கல்வெட்டு உள்ளது. வீரநரசிங்கராயர் என்ற அரசர் அவருடைய உடல் எடைக்கு நிகராக தங்கத்தை துலாபாரம் அளித்தார் என்றும அந்தத் தங்கத்தால்தான் இந்த ஆனந்த விமானம் பொன்னால் வேயப்பட்டது என்றும் கல்வெட்டு கூறுகிறது.


உண்டியல்மண்டபம்

காவாளம் என்னும் மிகப் பெரிய பித்தளை அண்டா துணி சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைத்து நம் பார்வைக்குப் படாமல் வைக்கப்பட்டிருக்கும். அது நிறைந்தவுடம் அந்த வண்டி நகர்த்தப்பட்டு இன்னொரு வண்டி உள்ளே புகுத்தப்படும். நிறைந்த வண்டி உண்டியல் எண்ணப்படும் மண்டபத்துக்கு எடுத்து செல்லப்பட்டு எண்ணப்படும். சில பக்தர்களும் இந்த சேவையில் கலந்து கொள்வார்கள். உள்ளே செல்பவர்கள் எந்த விலையுயர்ந்த பொருளையும் எடுத்து செல்லக் கூடாது, சென்றால் அதுவும் பெருமாளுக்கு சொந்தமாகிவிடும். சிலர் நேர்த்திக் கடனாக தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை உண்டியல் முன் நின்று கழட்டி உண்டியலில் போடுவார்கள். ஒரு நாள் உண்டியல் பணமே சில கோடிகள் வரும்.

திருமலை திருப்பதி அமிர்தகலச பிரசாதம்! ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், திருமலை திருப்பதியில பெருமாளுக்கு அமிர்தகலசம் என்ற பிரசாதம் நைவேத்யம் செய்யப்படும். இது அரிசிமாவு, மிளகு,வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் ஒரு பிரசாதம். பெருமாளுக்கு நைவேத்யம் செய்துவிட்டு, அடுத்து கருடாழ்வாருக்கு நைவேத்யம் செஞ்சபிறகு இந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள்.

அமிர்தகலசம் சாப்பிடும் தம்பதிகளுக்கு உடனே குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் அமிர்தகலசம் பிரசாதம் எடுத்துக்கொண்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தையினால் அந்தத் தம்பதிகளுக்கு சிறப்பு உண்டாகும் என்றும் ஆகம சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அளவிற்கு விசேஷ சக்தி கொண்ட பிரசாதம் அமிர்தகலசம் அமிர்தகலசம் ஞாயிறு காலை மட்டுமே திருமலை திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது. ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.


திருமலை திருப்பதி சுவாமி புஷ்கரணி!

இந்த சுவாமி புஷ்கரணி என்பது இந்த பூமண்டலத்திலேயே புனிதமான தீர்த்தம் என்றும் வைகுண்ட துவாதசி அன்று பூமண்டலத்தில் இருக்கும் அத்தனை புண்ணிய ந்திகளில் இருந்தும் புண்ணிய தீர்த்தங்களில் இருந்தும் சக்தி வந்து இந்த சுவாமி புஷ்கரணியில் கலக்கும் என்றும், இதற்கு சுவாமி புஷ்கரணி தீர்த்த முக்கோட்டி என்று பெயரிட்டு அன்று சக்கரஸ்நானம் நடைபெறுகிறது. திருமாலுடைய திவ்ய ஆயுதமான சுதர்சன சக்கரம் கர்ப்பாலயத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் வடகிழக்கு திசையில் இருக்கும் மிகவும் புனிதமான சுவாமி புஷ்கர்ணியில் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த சக்கரஸ்நானத்தின்போது சுவாமி புஷ்கரணியில் குளிக்கும் பக்தர்களுக்கு எத்தனையோ ஜென்மங்களுடைய பாவங்கள் எல்லாம் நசித்து அபாரமான புண்ணிய ராசிகள் சங்கமிக்கும் என்றும், ஸ்வாமியின் அருள் கிட்டும் என்பதும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட உண்மை. சுவாமி புஷ்கரணி என்பது மிகவும் பவித்ரமானது. பார்க்கும்பொழுதே, அல்லது அந்த தீர்த்தத்தை புரோட்சனை செய்துகொள்ளும்போதே பாவங்களை அழிக்கக்கூடிய புண்ணிய தீர்த்தம். தர்சன, பர்சன, மாத்ரேன என்று சொல்லப்பட்ட புனிதமான புஷ்கரணியில் பக்தர்கள் சக்கரஸ்நானத்தின் பொழுது ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி,சுவாமியின் அருளால் பாவங்களை நீக்கி புண்ணியங்களைப் பெறுவதற்கு இது மிகவும் விசேஷமான ஒரு வாய்ப்பு.

திருமலை திருக்கோயில் அமைந்திருக்கும் மலைத்தொடரில் மிகவும் புனிதமான ஆறுகோடி தீர்த்தங்கள் இருப்பதாக சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த ஆறுகோடி தீர்த்தங்களில் முக்கியமான தீர்த்தங்களில் சில மனிதர்கள் சென்று தரிசிக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. இதில் முக்கியமானது, ஆகாச கங்கா, பாபவிநாசனம், ஜாபாலி தீர்த்தம், கோகர்ப தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், குமாரதாரா தீர்த்தம், சேஷ தீர்த்தம், சனகசனந்தன தீர்த்தம், சக்கர தீர்த்தம் முதலியவை.

இந்த தீர்த்தங்களை அடைவதற்கு பக்தர்கள் காட்டின் வழியாக சென்று பார்க்கலாம்.


ஆகாசகங்கா தீர்த்தத்திலிருந்துதான் திருவேங்கடமுடையானுக்கு ஆராதனைக்காக தீர்த்தம் தினமும் கொண்டுவரப்படுகிறது. அதற்கு அப்பால் பாபவிநாசன தீர்த்தம் இருக்கிறது. கோகர்ப தீர்த்தம் பாண்டவ தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. குமாரதார தீர்த்தம் என்ற புனித தீர்த்ததில் சுப்ரமணிய சுவாமி நிரந்தர தவத்தில் இருப்பார் என்றும், தினமும் கர்ப்பாலயத்தில் வந்து சுவாமியை தரிசிப்பார் என்றும், ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே மாதிரி தும்புரு தீர்த்தத்தில், நாரதர்,தும்புரர் என்று தேவரிஷிகள் வந்து கானம் செய்வார்கள் என்றும், இந்த தீரத்தங்களில் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள், ரிஷிகள், யோகிகள் வந்து நீராடி, சுவாமியை தரிசித்து செல்வார்கள் என்றும் அவர்களுடைய பாத சுவடுகள்கூட சிலர் பார்த்திருப்பதாக பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட புனிதமான தீர்த்தங்கள் மலையில் ஏராளமாக உள்ளன. இவை இல்லாமல் திவ்ய தீர்த்தங்கள் சாமானிய ஜனங்களுக்கு, அதிருஷ்யமாக, கண்ணில் படாத வகையில் நிறைய உள்ளன. இவை சித்தர்களுக்கும், தேவதைகளுக்கும் மட்டும் தெரிபவை. அவர்கள் அதில் நீராடி , சுவாமியை தரிசித்து,புண்ணியத்தை பெறுவர் என்று புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. திருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் 'சிலா தோரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இங்கு மட்டுமே காணப்படும் இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏழுமலையானின் திருமேனியும், இந்தப் பாறைகளும் ஒரே விதமானவை.


திருமலை திருவேங்கடமுடையான் அபிஷேகம் திருவேங்கடமுடையான் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மூலவர் விக்ரகத்திற்கு அபிஷேகம் நடைபெறும். சுமார் ஒன்பதரை அடிகள் உயரம் கொண்ட இந்த மூலவர் சாளக்கிராமத்தால் செய்யப்பட்ட சிலை. சிற்பிகள் செய்யாத சுயம்பு வடிவமாக தானே உருவாகியது. வைகுண்டத்தில் இருந்து மஹாவிஷ்ணு அர்ச்சாவதரா சொரூபமாக அவதரித்த திருவுருவம் இந்த மூலபிம்பம். அபிஷகத்திற்கு முன்னால், சுவாமி அணிந்திருக்கும் பட்டு பீதாபரங்கள் பட்டு உத்தரீயம் முதலியவை அகற்றிவிட்டு ஏகாந்தமாக அவருக்கு கௌபீனம் அலங்கரித்து சுவாமியினுடைய திருமேனிக்கு புனுகுதைலம் தடவி திருமஞ்சனம் தொடங்கும். வேதபண்டிதர்கள், பக்த சூக்தங்களை பாராயணம் பண்ணிக் கொண்டிருக்க, சுத்தமான நீருடன்,பிறகு பசும்பாலுடன் அபிஷேகம் நடக்கிறது. முற்காலத்தில் எம்பெருமான் நித்திய அபிஷேக சேவை கைங்கர்யத்தில் ஈடுபட்ட மகா பக்தர் "பெரிய திருமலை நம்பி" வம்சத்தவர் கொண்டு வந்த நீரை பக்தியோடு தங்கச் சங்கில் ஆகாசதீர்த்தத்தை எம்பெருமான் சிரசின் மீது பொழிந்து "ஹரி!! ஹரி!!" என்று புருஷசூக்தத்தினை தொடங்குவர். பெருமாளின் திருவுருவம் சாளக்கிராம சிலையானதால், இவருக்கு பசும்பால் மட்டும்தான் அபிஷேக திரவியமாக உபயோகபடுத்தப்படுகிறது. மற்ற விக்ரகங்களுக்கு நடத்தும் தயிர், தேன், இளநீர் முதலிய திரவியங்கள் உபயோகப்படுத்தப் படுவதில்லை. பசும்பால் அபிஷேகம் முடிந்த பிறகு திரும்ப சுத்தோதக ஸ்நானம் நடைபெறும். திருமேனியில் பாலின் பிசுபிசுப்பு அகற்றுவதற்கு பரிமளம் எனும் சுகந்த திரவியம், சந்தனம், குங்கும்பபூ, பச்சகற்பூரம் முதலியவை சேர்ந்த பரிமளம் என்ற திரவியத்துடன் அவர் திருமேனியை மத்தனம் செய்து பிறகு, சுத்தோதக ஸ்நானம் செய்யப்படுகிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.


இதே சமயத்தில் திருவேங்கடமுடையானின் மார்பில் வலதுபக்கத்தில் இருக்கும் வியூகலட்சுமி என்ற மிகவும் விசேஷமான சக்திவாய்ந்த மகாலட்சுமி உருவத்திற்கு மஞ்சள் காப்புடன் திருமஞ்சனம் நடக்கிறது. இந்த பரிமளம் சுத்தோதகம் சேர்ந்த தீர்த்தம்தான் அபிஷேகஜலமாக பக்தர்களுக்கு பிறகு விநியோகிக்கப்படுகிறது. அபிஷேகத்தின் போது பெருமாள் திருமார்பில் இருக்கும் லக்ஷ்மியை அவர் மார்பில் இருந்து எடுத்து தனியாக அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படும். இதை பார்த்த இராமானுஜர் அகலகில்லேன் இறையும் அலர்மேல்மங்கை உறைமார்பா என்று தாயார் இருக்கும்போது இப்படி பிரித்து திருமஞ்சனம் செய்தாக வேண்டியுள்ளதே என்று எண்ணி வருந்தினார். ஆனால் செய்து தான் ஆகவேண்டும் என்பதால் அந்த சமயத்தில் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் சேவிக்க ஏற்பாடு செய்தார். அது இன்று வரை தொடர்கிறது. ஆண்டாள் கண்ணனை விட்டுப் பிரிந்ததை ஆற்றிக் கொண்டார் போலே தாயாரும் இங்கே பெருமாளை விட்டுப் பிரிந்த பிரிவாற்றாமையை தனித்துக் கொள்ளட்டும் என்று ஏற்படுத்தி வைத்தார்.


அபிஷேகம் முடிந்து சுவாமிக்கு ஏகாந்தமாக அலங்காரம் நடக்கிறது சுவாமியின் திருமேனியில் இருக்கும் ஈரத்தை தோத வஸ்திரத்தினால் ஒத்தி எடுத்து,24 முழம் நீளம் கொண்ட புதிய வேஷ்டி 12முழ நீளம் கொண்ட பட்டு உத்தரீயம் முதலியவற்றை சுவாமிக்கு அனிவித்து, சுவாமியின் சிரசில் சிறுவா வஸ்திரம் அமைத்து, சுவாமியின் முகபிம்பத்தில் பச்சகற்பூரம் நீர்க்காப்பாக, மெலிதாக அலங்கரித்து, சுவாமியின் நிஜபாத தரிசனம் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.


இந்த சமயத்தில் திருவேங்கடமுடையான் திருமேனியில் நாகாபரணம், ஒட்டியாணம் இருக்கும்,ஸ்ரீவத்சம்,கௌஸ்துபம் என்ற மஹாவிஷ்ணுவுக்கே உரிதான அணிகலன்கள் சுவாமியின் மார்பில் அலங்கரிக்கபடுகிறது. இது நிஜபாத தரிசனம் என்று பெயர். அவரின் பாதகமலங்கள் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கின்றன. நிஜபாதங்கள் மற்ற நேரங்களில் தங்க கவசங்களினாலும், அர்ச்சனை செய்த துளசிதளங்களினாலும் மறைக்கப்படுகின்றன. இது நிஜபாத தரிசனம்.


நிஜபாத தரிசனம் முடிந்த பிறகு, சுவாமிக்கு அலங்காரம் நடக்கிறது. இது சமர்ப்பணா என்று சொல்லுவார்கள் இது ஏகாந்தமாக நடக்கும். கதவு சாத்தப்பட்டிருக்கும், அர்ச்சகர்கள் மட்டும்தான் கர்ப்பாலயத்தில் இருந்து அலங்காரம் நடத்திக்கொண்டிருப்பார்கள். முதலில் அவர் திருமுகத்தில் பச்சை கற்பூரத்தை திருநாமமாக அணிவித்து, அதன் நடுவில் கருப்பு நிறமான கஸ்தூரி திலகம் மூங்கில் இலைபோன்ற வடிவத்தில் அமைத்து, பிறகு, சுவாமியின் முகத்தில் புனுகு தைலம் லேபனம் செய்து புதிய பட்டு வேஷ்டி உத்தரீயங்களை அணிவித்தபிறகு சுவாமியின் திருவாபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன. பெருமாளுக்கு முகவாயிலிலும் பச்சை கற்பூரம் வைக்கப்படும். அதற்குக் காரணம் உண்டு.


ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு புஷ்பங்கள் சாற்றப்படுவது போல திருமலையில் பூமாலை பெருமாளுக்கு சாற்றப்படுவதில்லை என்று வருந்தியதால் அவருடைய சிஷ்யர் அனந்தாழ்வான் திருமலைக்கு புஷ்பக் கைங்கர்யம் செய்ய அந்தக் காலத்தில் சரியான பாதையும் இல்லாத நிலையில், காட்டில் கொடிய மிருகங்கள் இருந்தும் திருமலைக்குக் குடி பெயர்ந்து தோட்டம் அமைத்து பெருமாளுக்கு புஷ்பக் கைங்கர்யம் செய்து வந்தார். அனந்தாழ்வானுக்குத் தோட்ட வேலையில் உதவி செய்யச் சின்னப் பையனாகச் சென்றார் பெருமாள். பெருமாளுக்குத் தான் மட்டுமே பூக்கைங்கரியம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்து இருந்தார் அனந்தன். தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை மட்டும் உதவ அனுமதித்தார். அப்பெண்மணி படும் சிரமத்தைக் கண்டு மனம் பதைத்த பெருமாள், ஒரு சிறுவனாக மாறி உதவச் சென்றார். தன் சபதத்திற்கு இடையூறு செய்வதாக கருதி உதவிக்கு வந்த அந்தச் சிறுவனை விரட்டி அடித்தார் அனந்தன். இரும்பு கடப்பரையைச் சிறுவன் மீது கல் விட்டு அடித்தார். சிறுவன் மறைந்தான். இதே நேரத்தில் திருமலையில் உள்ள ஆனந்த நிலையத்தில் சந்நிதியில் குடி கொண்டிருந்த பெருமாளின் திருமுகமண்டலத்தில் உள்ள முகவாய்க்கட்டையில் ரத்தம் பீறிட்டது. அர்ச்சக சுவாமி பெருமாளின் பீதாம்பரத்தால் துடைத்தார். ரத்தம் வெளிவருவது நிற்கவில்லை. தனது அங்கவஸ்திரத்தால் துடைத்தார். ரத்தம் பீறிறிடுவது நிற்கவில்லை. எவ்வளவு துடைத்தாலும், ரத்தம் பீறிடுவது நிற்காததால் திகைத்தார் அர்ச்சக சுவாமி. பெருமாளுக்குத் திருநாமம் இட, அருகில் வெள்ளை நிறப் பச்சைக் கற்பூரம் வைக்கப்பட்டிருந்தது. அவசரத்தில் அதனை எடுத்து ரத்தம் வரும் இடத்தில் அணைத்தாற்போல் வைத்தார் அர்ச்சக சுவாமி. ரத்தம் கொட்டுவது நின்றது. வெள்ளை நிறத்தில் இருந்த அந்தப் பச்சைக் கற்பூரம் அங்கேயே திருக்கோலம் கொண்டுவிட்டது. அவருக்கு ஒரு நிரந்தர அடையாளத்தைக் கொடுத்துவிட்டது. இன்றும் அனந்தன் விட்டெறிந்த அந்தக் கடப்பரையை திருமலை கோயிலின் பிரதான நுழைவாயிலில் காணலாம். அனந்தாழ்வான் ஏற்படுத்திய தோட்டம் இன்றும் உள்ளது. அங்கு அவர் ஒரு மரமாக எழுந்தருளியுள்ளார். இரட்டை மரமாக இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை ஆடி பூரத்தன்று பெருமாள் அங்கு எழுந்தருளி அந்த மரத்துக்கு சடாரி சாதிப்பார். தன்னுடைய திருவடி சரத்தை அந்த மரத்துக்கு சமர்ப்பிப்பார். ப்ரம்மோத்ஸவத்தின் போதும் ஒரு நாள் அவர் அங்கு எழுந்தருள்வார்.

பெரிய திருமலை நம்பிகள், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ அனந்தாழ்வான் மூவரும் திருமலைக்கு மிக முக்கியமானவர்கள். பெரிய திருமலை நம்பிகள் ஸ்ரீ ராமானுஜரின் தாய் மாமா ஆவார். அவர் திருமலையில் வாசம் செய்து திருமலையப்பனுக்குக் கைங்கர்யம் செய்து வந்தார். ஆகாச கங்கையில் இருந்து பெருமாள் திருமஞ்சனத்துக்கு தினமும் தண்ணீர் கொண்டு வந்து தீர்த்த கைங்கர்யம் பண்ணினார். இராமாயணம் காலட்சேபம் ஸ்ரீ இராமானுஜருக்குப் பண்ணினார். ஏன் ஸ்ரீ ராமானுஜரையே நமக்கு அளித்தார். பெரிய திருமலை நம்பிகளுக்குத் தனி சந்நிதி உள்ளது. இவர் பிரம்மாவுக்கே தாத்தா என்று கொண்டாடப்படுவார். அவர் மேல் இயற்றப்பட்டிருக்கும் தனியனும் அதை குறிப்பிடுகிறது. எப்படி என்று பார்ப்போம். பெருமாள் தான் பிரம்மாவை படைத்தார். ஆனால் பெருமாளே ஒரு முறை சிரு பிள்ளையாக உருவமெடுத்து பெரிய திருமலை நம்பிகள் தீர்த்தம் எடுத்து வரும்போது அப்பா என்றழைத்து தண்ணீர் அருந்த கேட்டிருக்கிறார். அப்போ பிரம்மாவுக்குப் பாட்டனார் தானே? ஆனால் நம்பிகள் இது பெருமாளுக்கு எடுத்துப் போகும் தீர்த்தம் தரமுடியாது என்று கூறியிருக்கிறார். அனால் பகவான் விடுவாரா? அவர் ஒரு கல்லை எறிந்து பானையை ஓட்டையாக்கி நீரைப் பருகி மற்ற நீரும் நிலத்தில் போகும்படி செய்து விட்டார். பெரிய திருமலை நம்பி வம்சத்தவர் இன்னும் திருமலையில் உள்ளனர். அவர்கள் இந்த கைங்கர்யத்தை இன்றும் செய்து வருகிறார்கள்.


பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் பூஜை முறைகள் ஸ்ரீ இராமானுஜரால் முறையாக்கப்பட்டன. ஸ்ரீ ராமானுஜர் கோவில் நிர்வாகத்துக்காக மடத்தை ஏற்படுத்தி ஜீயர் சுவாமிகளை நியமித்தார். திருமலை கோவிலின் எதிரே எழுந்தருளியிருக்கும் பேடி ஹனுமாரின் முத்திரை மோதிரத்தை அளித்து பெரியகேள்வி அப்பன் ராமானுஜ ஜீயர் சுவாமிகளை பட்டத்தில் அமர்த்தினார். இந்த மடம் நிறுவப்பட்டு 900 ஆண்டுகள் ஆகியுள்ளது. திருமலை ஒழுகு எனும் நூலில் இம்மடம் நிறுவப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. ஸ்ரீராமானுஜருடைய நேர்ச் சீடரான அனந்தாழ்வான் அருளிய ‘ஸ்ரீவேங்கடாசல இதிஹாஸமாலா” என்ற வடமொழி நூலிலும் இம்மடம் ஸ்தாபிக்கப்பட்டது குறித்த செய்திகள் விரிவாகக் கூறப் பெற்றுள்ளன. ஸ்தாபிக்கப்பட்ட நாளும் மிகத் தெளிவாகவே அந்நூலில் குறிப்பிடப் பெற்றுள்ளது. கலி 4220ம் வருடம், சாலிவாஹன சகாப்தம் 1041ம் ஆண்டு, விகாரி வருடம், தை மாதம், சுக்ல பக்ஷம் , வெள்ளிக் கிழமை அன்று இம்மடம் ஏற்படுத்தப்பட்டதாக அந்நூல் தெரிவிக்கின்றது. இந்த விவரங்களைக் கொண்டு பார்க்கும்போது, சரியாக 23-1-1120 அன்று திருமலையில் மடம் ஸ்தாபிக்கப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் ஸ்ரீமணவாளமாமுனிகள் (ராமானுஜரின் மறு அவதாரம் என்று கொண்டாடப் படுபவர்) திருமலைக்கு எழுந்தருளியபோது சிலகாலம் தாமே பெரிய ஜீயராக எழுந்தருளியிருந்து, கைங்கர்யங்கள் ஒரு நிமிடமும் விட்டுப்போகாமல் செய்யப்பட வேண்டும் என்பதற்காக சிறிய ஜீயர் மடத்தை ஏற்படுத்தினார் . சிறிய கேள்வி அப்பன் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் என்பது பட்டப் பெயர். இது கி.பி. 1420-30ல் நடந்திருக்க வேண்டும் . பெரிய ஜீயர் ஸ்வாமி ஒருவர் பரமபதித்து விட்டால் அடுத்த கணமே சிறிய ஜீயர் பெரிய ஜீயராக ஆகி, உடனே அவர் சிறிய ஜீயர் ஸ்வாமி ஒருவரை நியமிப்பது என்ற ஏற்பாடு இன்றளவும் இடையறாது நடைபெற்று வருகிறது. இவ்வாறாக, எம்பெருமானார் , மணவாள மாமுனிகள் இருவருமே பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஒரே மடம் என்ற பெருமை திருமலை பெரிய ஜீயர் மடத்திற்கு மட்டுமே உண்டு. ஜீயங்கார் என்றும் பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி என்று அன்புடனும் மரியாதையுடன் இன்று அழைக்கப் படுகின்றனர்.


கோவிலின் நித்ய சேவைகளை ஏற்படுத்தியதும் ஸ்ரீ ராமானுஜரே. முதலில் சுப்ரபாத சேவை. ஹஸ்திகிரி சுவாமி இயற்றிய சுப்ரபாதம், பங்காரு வாகிலி என்று தங்க கதவிற்கு வெளியே நின்று தான் சுப்ரபாதம் சேவிக்கப்படும். உள்ளிருந்து பெருமாள் கேட்டுப்பார். அன்னமாச்சார்யா சுவாமி அவர்கள் சந்ததியினர் அவரின் சில பாடல்களை சேவிப்பர். போக ஸ்ரீனிவாசர் சயன மண்டபத்தில் இருந்து கர்ப்பக்கிரகத்துக்கு எழுந்தருள்வார். மைசூர் மகாராஜா சமஸ்தானத்தார் ஒரு புறம் நின்று அவர்கள் நைவேத்தியத்துக்கு வெண்ணெய் சமர்பிப்பர். நவநீதம் நைவேத்யம். அடுத்து ஆர்ஜித சேவை. வானவர் வானவர் கோனுடன் வந்து திருவாராதனம் செய்கிறார்கள். கோவில் நடை சாற்றப்பட்டிருக்கும் போது தேவர்களுடன் பிரம்மா வந்து திருவாராதனை செய்கிறார். பங்காரு பாவி என்னும் கிணறு உள்ளது. வகுலமாலிகா தாயார் சந்நிதி அருகில் உள்ளது இந்த கிணறு. அதில் இருந்து தான் இப்பொழுது அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. பூன பாவி என்று ஒரு கிணறு உள்ளது. திருமலையில் யாருக்கும் மாலை, புஷ்ப பிரசாதம் கொடுப்பதில்லை. சுவாமியின் மேல் அணியப்பட்ட மாலைகள் களைந்த பின் இவை பூனபாவி என்னும் இடத்தில் சேர்க்கப்படுகின்றன. என்ன புஷ்பம் களையப்பட்டாலும் அது அந்தக் கிணற்றுக்கு போகும். தோமாலை சேவை. தோள் மாலை மருவி தோமாலை என்றாகிவிட்டது. இந்த சமயத்தில் பழைய மாலைகள் களையப்பட்டு புது மாலைகள் சாற்றப்படும். பெரிய ஜீயர் சுவாமி முதலில் புஷ்பங்களை சுமந்து கொண்டு வருவார். அவரிடம் இருந்து வாங்கி அர்ச்சகர்களும் பெருமாளுக்கு சாற்றுவர். பெருமாளுக்கு காலையில் ஒரு தோமாலை சேவை, மாலையில் ஒன்று. பிரதி வியாழக் கிழமைகளில் பூலங்கி சேவை. புஷ்ப கைங்கர்யம் பெருமாளுக்கு அவ்வளவு பிடிக்கும். அதனால் தான் திருமலைக்கு புஷ்ப மண்டபம் என்று பெயர். ஸ்ரீரங்கத்துக்கு போக மண்டபம் என்றும், காஞ்சிபுரத்துக்கு தியாக மண்டபம் என்றும் மேல்கோட்டைக்கு ஞான மண்டபம் என்று பெயர்.

ஒரு சமயத்தில் சிவாச்சார்யர்கள் வேங்கடவனின் திருக்கோலத்தை சிவபெருமான்தான் என்று கருதினார்கள். இராமானுஜர் ஸ்ரீமந்நாராயணன் என்று கருதினார். அவர்கள் இருவருக்கும் மட்டுமல்ல, உலகத்தில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ள ஒரு சிறிய நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால், சிவபெருமான் எனில் அவரின் ஆயுதங்களையும், ஸ்ரீமந்நாராயணன் எனில் அவருக்குரிய சங்கு, சக்கரங்களையும் சில குறிப்பிட்ட சிவாச்சார்யர்கள் முன்னிலையிலும், இராமானுஜர் முன்னிலையிலும் வைத்து முதல் நாள் இரவு நடை அடைக்கப்பட்டது.

மறுநாள் காலை மூலவரின் சன்னிதானத்தைத் திறந்து பார்த்தால் அங்கு சங்கு, சக்கரதாரியாக "ஏழுமலையான்" காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆகவே இன்று நாம் திருமலையில் காணும் தோற்றத்திற்கு இராமானுஜரே காரணம். பெருமாளுக்கு "சங்கு, சக்கரம், நாமம்" அணிவித்தவர். வேங்கடவனின் மார்பில் இருக்கும் "பத்மாவதி" பதக்கத்தையும் அவரே அணிவித்தார். கோவிலுக்கு என்று சட்ட திட்டங்களை வகுத்தவர் இராமானுஜர். திருமலையில் யாரும் பூ வைக்கக் கூடாது. திருமலையில் யாரும் வேறு வாகனங்களில் போகக்கூடாது. கோவில் ஊழியர்களைத் தவிர யாரும் திருமலையில் தங்கக் கூடாது என்ற சட்ட திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர் இராமானுஜரே. பெருமாளுக்கு சங்கு சக்கரம் பொருத்தியதால் அவர் தன் சந்நிதியில் சின் முத்திரையுடன் பெருமாளுக்கு ஆச்சார்யனாக காட்சி தருகிறார்.


இந்தக் கோவிலில் ஏராளமான உத்சவங்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்தையும் நெறி படுத்தியதும் ஸ்ரீ ராமானுஜர் தான். எல்லா வைணவ பண்டிகைகளும் சிறப்பாக கொண்டாடப்படும். வருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்சவங்களும் இவருக்கன்றி வேறு எந்த தெய்வத்துக்கும் நடைபெறுவதில்லை. அதனால்தான் திருப்பதியை, 'பூலோக வைகுண்டம்’ என்றே சிறப்பித்திருக்கிறார்கள். பெருமாளை தரிசிக்க முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கு கூடினர். அவருக்குப் பெருவிழா நிகழ்த்த அனுமதி வேண்டினான் பிரம்மன். பரம்பொருளும் இசைந்தது. அதுமுதல் துவங்கியது திருமலையின் பிரம்மோற்ஸவம்.இங்கு பத்து நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவம் மிகவும் விசேஷமானது.

இதில் ஏழாம் நாள் கருட உத்சவத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஸ்ரீஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அனுப்பிவைக்கப்பட்டு அதை அன்று அவருக்கு சாற்றுகின்றனர். ஆண்டாள் இறைவனைக் கணவராக அடையவேண்டி, மார்கழி மாதம் பாவை நோன்பு அனுஷ்டித்து, திருப்பாவைப் பாசுரங்களைப் பாடி வழிபட்டாள். பின்னர், தன்னை ரங்கநாதர் ஏற்றுக்கொண்டால், கள்ளழகருக்கும், வேங்கடவனுக்கும் வேண்டிக் கொண்டாள். ஆண்டாள், தான் விரும்பியபடியே ரங்கநாதருடன் ஐக்கியமாகிவிட்டாள். ஆண்டாள் வேண்டிக்கொண்டதை நிறைவேற்றும் விதமாக, திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்மாலை, சித்திரை மாதம் பௌர்ணமியன்று கள்ளழகருக்கும், புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தின்போது வேங்கடேச பெருமாளுக்கும் சகல மரியாதைகளுடன் எடுத்துச் செல்லப்பட்டு, சமர்ப்பிக்கப்படுகின்றன.இந்த மாலை மிகவும் விசேஷமாக பல மலர்களை சேர்த்துக் கட்டப்பட்டு மிகுந்த மரியாதையுடன் அங்கிருந்து திருமலைக்கு அனுப்படுகிறது. இது 500 வருடங்களாக நடைபெறும் பழக்கம். இதற்கு முன் வெட்டிவேர் மாலை தான் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது ஏனென்றால் அவை ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து திருப்பதி வந்து சேர பல நாட்கள் ஆகும், அதனால் பூக்கள் வாடிவிடும் என்பதால் வெட்டிவேர் மாலை அனுப்பப்பட்டது. இப்பொழுது விரைவு வாகன வசதி இருப்பதால் மிக அழகிய செண்டு மாலை ஆண்டாள் மாலையை பெருமாள் சூடிக் கொள்கிறார். திருமலை ஆலயத்தில் தினம்தோறும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது மரபு. ஆனால், மார்கழி முழுவதும் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாசுரங்களையே பாடுகின்றனர். பாசுரங்களை திருமலை பெரிய ஜீயர் சுவாமிகளுடன் பட்டாசார்யர்கள் சேர்ந்து பாடுவார்கள். தமிழுக்கும் நாலாயிரத்துக்கும் அத்தனை ஏற்றம்!


ஆண்டாள் மாதிரி பக்தி எனறோ நடந்தது என்று நினைக்கிறோம். 1730 ம் ஆண்டு, ஆந்திராவில் உள்ள தரிகொண்டா எனும் கிராமத்தில் கிருஷ்ணய்யமத்யா, மங்கமாம்பா எனும் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தவர் வேங்கமாம்பா. சிறுவயது முதலே திருமலை வேங்கடவன் மீது அளவில்லா பக்திக் கொண்ட இவர், திருமலை வேங்கடவனே தன்னுடைய கணவனாக வரித்துக்கொண்டு வாழ்ந்துவந்தார்.ஆயினும் அக்காலத்து வழக்கப்படி மிகச்சிறுவயதிலேயே பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இவருக்கு வேங்கடாசலபதி என்பவருடன் திருமணம் நடந்தேறியது. இளம்பிராயத்திலே கணவர் இறந்தபோது கூட சுமங்கலி பெண்களுக்குண்டான மங்கள சின்னங்களை நீக்காது வாழ்ந்தது அக்காலத்திலேயே மிகப்பெரிய புரட்சியாகும். திருமலை வேங்கடவனே தன்னுடைய கணவனாகக் கொண்டதால் இவர் இறுதிவரை மங்கள சின்னங்களோடே வாழ்ந்தார். சுப்ரமண்யுடு என்ற ஆசானிடம் யோகக் கலை பயின்று திருமலையிலேயே வாழ ஆரம்பித்த இவர் பல தெலுங்கு நூல்களை இயற்றி உள்ளார். ஒரு சமயம் திருவேங்கடவன் நகை காணாமல் போக, அப்பழி தினமும் கோயில் நடைசாற்றியவுடன் வேங்கடவன் முன் பாடும் வழக்கத்தை கொண்டிருந்த இவர் மீது விழுந்தது. இதனால் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இவர் தும்புறு குகையிலிருந்து திருமலை கருவறைக்கு ரகசிய பாதை அமைத்து தன்னுடைய பாமாலை பணியை யாருமறியவண்ணம் ஆறு வருடங்கள் தொடர்ந்து வந்தார். பின்னாளில் திருவேங்கடவன் மூலம் இவரின் பக்தி எல்லோராலும் அறியப்பட்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதோடு இவரின் பாடலோடும் கற்பூர ஆரத்தியோடும் நடைசாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இவ்வழக்கம் இன்றும் தொடர்ந்து ஏகாந்த சேவையில் அதாவது கோயில் நடைமூடப்படும் முன் செய்யும் உபசாரங்களில் இறுதியாக எடுக்கப்படும் கற்பூர ஆரத்திக்கு "வேங்கமாம்பா ஆரத்தி" என்றே பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இவரின் பிருந்தாவனம் திருமலை மாடவீதிக்கு அருகில் உள்ளது


சித்திரையில் இராமானுஜரின் பத்து நாள் உத்சவத்திற்கு பிறகு பௌர்ணமி முடிய மூன்று நாட்கள் வசந்தோத்சவம் மிகவும் சிறப்பாக்க கொண்டாடப்படும். அப்பொழுது வசந்த மண்டபத்தில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வேங்கடவனுடன் துவாபர யுகத்து கண்ணனும் த்ரேதா யுகத்து இராமனும் சேர்ந்து எழுந்தருளுகிறார்கள்.


மாசி மாதம் பௌர்ணமி முடிய ஐந்து நாட்கள் முடிய தெப்போற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். சுவாமி புஷ்கரணியில் சீதையுடன் இராமர் லக்ஷ்மணர் ஆஞ்சநேயர் சகிதமாக தெப்பத்தில் பவனி வருவார், பிறகு ருக்மிணி சத்தியபாமாவுடன் கிருஷ்ணரும், மலையப்பா சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடனும் தெப்போற்சவத்தில் கலந்து கொள்வார்கள். இங்கு மட்டும் கொண்டாடப்படும் கங்கம்மா சத்ரா விசேசமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா ஸ்ரீநிவாசப் பெருமாளின் தமக்கை ஆவார்.


பெருமாளுக்கான மூன்று முக்கிய நேர்த்திக் கடன்கள் மொட்டை அடித்துக் கொள்ளுதல், அங்கப் பிரதக்ஷணம் செய்தல், நடந்து மலையேறி வந்து தரிசித்தல். இவை மூன்றுமே நம் அகங்காரத்தை அழித்து நம்மை எளிமைப்படுத்திக் கொள்ளும் செயல்களாகும்..


பொயு நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களாலும் பொயு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்களாலும், பதினேழாம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசாலும் இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. விஜயநகரப் பேரரசின் மிகப்பெரிய மன்னனான கிருஷ்ண தேவராயர் இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்த கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். விஜய நகர மன்னர்களின் ராஜகுருவாகத் திகழ்ந்த, தலைசிறந்த அனுமன் பக்தரான ஸ்ரீ வியாசராஜர், அந்நியர் படையெடுப்பின் போது திருவேங்கடவன் ஆலயம் 12 ஆண்டுகளுக்கு மூடப்பட்டுவிட்டதால், திருமலைக்கு வந்து விமான வேங்கடேசனை நோக்கி அமர்ந்து மானசீகமாக பூஜைகளையும், வழிபாடுகளையும் செய்து கருவறையில் இருந்த திருவேங்கடவனின் சாந்நித்யம் பூரணமாக பரவுவதை உணர்ந்தார். ஆலயத்தை ஒழுங்கு படுத்தி பூஜைகளை மீண்டும் ஆரம்பிக்கச் செய்தார். பெருமாளின் சந்நதியில் மீண்டும் பக்தர்கள் கூடினார்கள். அந்தத் திருக்கோயில் முன்பு போலப் புகழ் பெற்று விளங்கத் தொடங்கியது. வியாசராயர் அங்கேயே பன்னிரண்டு ஆண்டு காலம் தங்கினார். பெருமாளின் மீது பல பதிகங்கள் பாடினார். ஹரிஸ்மரணம் செய்து புகழ் பெற்ற ஹரி தாசராக விளங்கினார். பல இடங்களிலிருந்தும் வந்த பல்வேறு சீடர்கள் அவரைச் சார்ந்து ஞானோபதேசம் பெற்றார்கள்! கி.பி. 1498 ஆம் ஆண்டு தன்னுடைய 92ஆம் வயது வரை திருமலையிலேயே தங்கியிருந்து திருவேங்கடமுடையானைப் பூஜித்து வந்தார். ஹரிதாசர்களின் குலதெய்வம் திருவேங்கடமுடையான். ஸ்ரீனிவாச கல்யாணம் / மகிமைகள் பற்றி ஏராளமான பாடல்களை இயற்றியுள்ளார்.

சந்திரன் வந்து வழிபட்ட திருமலைக்கு வந்து ஸ்ரீநிவாசப் பெருமாளை வழிபடும் அன்பர்கள்,தங்கள் ஜாதகத்தில் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் மற்றும் அசுப பலங்களிலிருந்து விடுபட்டு, நற்பலன் பெறுவார்கள் என்பது உறுதி. அதுவும் திங்கள் கிழமைகளிலும் வளர்பிறையிலும் வந்து தரிசிப்பது அதிகப் பலனைத் தரும். இந்தியாவில் சந்திரனின் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. 7 மலையும் சூட்சமான கிரகங்களுடன் சம்மந்தப்பட்டது. நாம் ஒவ்வொருமலையும் ஏறி இறங்கும் போது அந்தந்த கிரக் தோஷம் பாவங்கள் நீங்கி விடும். திருப்பதி வெங்கடாசலமும்,மகா லட்சுமியும் சர்வ ஐஸ்வர்யம் தருவர். பத்மாவதி தாயார் வாழ்வில் அனைத்து வசதியும் தருவார். அதனால் தான் திருப்பதி சென்றால் திருப்பம் நிச்சயம்’ என்பது பக்தர்கள் சொல்லும் சொற்றொடர். வேலைக்குச் சென்று சம்பாதிப்பவர்கள், தொழில் செய்பவர்கள், மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்கள் என எண்ணற்ற பக்தர்கள், அதனால்தான் தங்கள் சம்பாத்தியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஏழுமலையானைத் தரிசித்து, உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். தொடர்ந்து திருப்பதிக்குச் செல்லும்போதெல்லாம் உண்டியலில் லாபத்தின் குறிப்பிட்ட தொகையை செலுத்துகின்றனர்.


கடன் என்பது எவ்வளவு பெரிய வலி மிகுந்தது, அவமானம் நிறைந்தது என்பவை குபேரனிடம் கட வாங்கி வட்டி கட்டிக்கொண்டிருக்கும் வேங்கடவன் நன்றாகவே அறிந்திருக்கிறார் என்றும் அதனால்தான் தன்னுடைய பக்தர்கள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவித்தால், கடன் தொல்லையில் கலங்கிக் கண்ணீர் விட்டால், அவற்றை ஏழுமலையான் பொறுத்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டாராம். நல்ல வேலை இல்லாதவர்களுக்கு நல்ல உத்தியோகத்தை வழங்கி அருளுகிறார். தொழிலில் ஏற்றத்தைத் தருகிறார். வியாபாரத்தைச் செழிக்கச் செய்கிறார். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுகிறார். அதனால்தான், திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள், தங்களால் முடிந்த தொகையை ஏற்கெனவே மஞ்சள் துணியில் முடிந்து வைத்த தொகையை உண்டியலில் செலுத்தி வேண்டிக்கொள்கின்றனர் பக்தர்கள்.


திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரண்டு விதமான பாதைகள் உள்ளன. அலிபிரி- அதாவது கீழ்த் திருப்பதிக்கு அருகில் உள்ள இந்த பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகாதேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன் முதலில் அமைத்தவர். திருப்பதி சென்றால் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கடன் முதலான பணக்கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை மற்றும் நடைமுறையில் காணும் உண்மையும் கூட. அவரது வரலாற்றுப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது.


சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்



Reference: The tirumala Temple by Dr N.Ramesan

ஸ்ரீ உ.வே.velukkudi கிருஷ்ணன் சுவாமிகள் உபன்யாசங்கள்.

நன்றி சில புகைப்படங்களுக்கு https://venkatarangan.com/blog/2020/03/visit-to-tirumala-tirupati-sri-ananthalwar-thota/

898 views0 comments

Recent Posts

See All
bottom of page