top of page
  • Writer's pictureAnbezhil

மாயா

Updated: Oct 26, 2021

மாயா/மாயை என்றால் என்ன? எது உண்மை என்று நாம் நினைக்கிறோமோ அதற்கு எதிரானதா? கானல் நீர் தான் மாயையா? அது எப்படி மாயை ஆகும்? தாகம் தணிக்காவிட்டாலும் கண்ணுக்குப் புலப்படும் ஒன்று தானே அது? வாழ்வே மாயம் என்றால் நம் சரீரமமும் மனமும் படும் வலியும் வேதனையும் உண்மை இல்லையா? மாயை என்பது கனவு நிலை மாதிரி, திரையில் ஓடும் திரைப்படம் மாதிரி என்றெல்லாம் உவமைகள் கேட்டிருக்கிறேன். கனவு முடிந்ததும் அதுவே வாழ்க்கை இல்லை என்றும் திரைப்படம் முடிந்ததும் திரையில் பார்த்தது கதை, உண்மை இல்லை என்பதும் புரியும், அதனால் அவை மாயை என்று சொல்லப்படுகிறது. ஆனால் கனவில் நடக்கும் சம்பவங்களை அச்சமயத்தில் நாம் அனுபவித்து, பயந்தோ, அழுதோ, மகிழ்ந்தோ உணர்கிறோமே. கனவு கலைந்த பிறகு தானே அது வேறு ஒரு பரிமாணத்தில் நடைப்பெற்றவை என்று தெரிகிறது. கனவில் இறந்தவர் உண்மையில் உயிரோடு தான் இருக்கிறார் என்பது புரியும். ஆனால் இறந்த அவருக்காக கனவில் வருந்தியது உண்மை தானே? திரையில் ஒன்றி படத்தைப் பார்க்கும்போது அதுவும் உண்மையானதாக எண்ணி உணர்ச்சிவசப்படுகிறோம் அல்லவா? அந்த உணர்வுகளும் மாயையா? மாயை என்பதன் பொருள் பொய் என்பதா?


கிருஷ்ணன் நாரதர் இருவரும் சேர்ந்த மாயையை விளக்கும் பிரபலமான கதை ஒன்று உள்ளது. நாரதருக்கு கண்ணன் மாயை என்றால் என்ன என்று ஒரு சிறு ஆள்மாறாட்டம் மூலம் விளக்குவார். குளத்தில் குளித்து எழுந்தவர் தான் நாரதர் என்பதையே மறந்து ஒரு இளம் பெண்ணாக மாறி இருப்பார். பின் அரசனை மணந்து பிள்ளைப் பெற்று அதன்பின் பல துன்பங்களை அனுபவித்துத் தவிக்கும் போது கண்ணன் அவரை பழையபடி நாரதராக்கி அவர் அதுவரை பெண்ணாக அனுபவித்தது மாயை என்பதை அவர் புரிந்து கொள்ள வைப்பார். அப்படி பார்த்தால் நம் ஒவ்வொரு பிறவியும் மாயையால் மூடப்பட்டது தான். நாம் இப்பிறவியில் அனுபவிக்கும் துன்பமும் இன்பமும் முற்பிறவியின் பயன் அல்லவா? ஆனால் என்ன செய்தோம் இந்த துன்பத்தை அனுபவிக்கிறோம், என்ன செய்தோம் இந்த இன்பத்தை அனுபவிக்கிறோம் என்ற நினைவு இல்லையே! இந்த மாயை இறைவனின் லீலையே! மாயை என்பது கடவுளின் ஆச்சரியமான சக்தி என்பதை புரிந்து கொள்கிறோம். மாயை என்றால் ஒருவிதப் பொருளை இன்னொரு விதமாக காட்டும் சக்தி, மாயை என்பது உண்மையை மறைக்கும் திரை என்ற பொருளிலேயே அது பொதுவாக பயன்பட்டாலும் பிரபஞ்ச சாரமான சக்தியின் அலகிலா அழகுத் தோற்றமாகவும் கருதப்படுகிறது. இந்த மாயையின் மூலமாகவே இறைவன் உலகை உண்டாக்குகிறான். இறைவனுக்கு இந்த மாயை அடங்கி அவனால் ஆளப்படுவதால் மாயையே சொத்தாக உடையவன் என்ற பொருளில் இறைவன் மாயாவி எனப்படுகிறான்.

கயிறை பாம்பாக கருதுவதும் பாம்பை கயிறாக கருதுவதும் மதிமயக்கம் தருகின்ற மாயையால். பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மம் என்ற கடவுள் என்றும் எப்போதும் மாறாதவர், ஆனால் இயற்கை மாறி கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தது வேறொரு காலத்தில் மற்றொன்றாக இருக்கும். அதனால் உலகத்தின் ஆன்மா கடவுள் என்றால், உலகம் என்ற உடல் மாயை என்று அழைக்கப்படுகிறது. இயற்கை அன்னையை மாயா தேவி என்று பல உபநிஷதங்கள் மிகவும் அழகாக கூறுகின்றன.

கடவுளை காண்பதற்கு திரையாக மாயை மறைக்கிறது என்பது உண்மை. பாசி தண்ணீரை மறைப்பதை போலவும், தூசி கண்ணாடியை மறப்பதை போலவும், ஆடை உடலை மறைப்பதை போலவும் மாயை என்பது இறைவனை மறைத்து கொண்டிருக்கிறது. பாசியை விலக்கி விட்டால் தெளிந்த நீர் தெரிந்துவிடும். அதை போன்று நமது இதய கண்ணாடியில் படிந்து கிடக்கின்ற காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம் ஆகியவற்றை நீக்கிவிட்டால் கடவுள் தெளிவாக தெரிவார். "என்னை வெளிப்படுத்திக் கொள்ளாத பிரம்மமாக இருக்கையில் நானே மாயையாக இருக்கிறேன்" என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. கீதையில் மாயையை வசப்படுத்திக் கொண்டு நான் அவதரிக்கிறேன் என்று கூறுகிறார். அதனால் மாயை தவறில்லை, பொய்யில்லை. அதுவும் உண்மை. நம்மை காக்க அவதாரம் எடுக்கும் இறைவனும் உண்மை. மாயை என்பது உலகில் இயங்குவதற்கு தேவையானவற்றை படைத்துக் கொடுப்பதற்காக உள்ளது.

பிரம்மத்திலிருந்து உருவாகி பிரம்மத்தின் பகுதியாக நிலைநிற்கும் ஓர் உண்மையே இப்பிரபஞ்சம். விசிஷ்டாத்வைத தத்துவத்தின் படி மூவகை உண்மைகள் உண்டு. பிரம்மம், ஆத்மா, பிரபஞ்சம். அதாவது ஆத்மா பிரம்மம் அல்ல அது தனித்துவம் வாய்ந்த ஓர் இருப்பு. மாயையை உருவாக்குவது எது? பிரம்மம் என்றால் பிரம்மம் குறையுடையது என்று பொருள். பிரம்மமே ஆத்மா என்றால் மாயையின் உருவாக்கமான ஆத்மா மாயைக்கு காரணமாக இருக்க முடியாது. இதற்கு பதிலளிக்கும் ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியரான இராமானுஜர் பிரம்மம் மாயையின் மூலம் பிரபஞ்சமாக ஆவதில்லை, அது பிரபஞ்சமும் கூட என்கிறார்.

இதை ஓர் உவமை மூலம் விளக்கலாம். கடலில் வாழும் மீனுக்கு அதை சுற்றியுள்ள சிறிய நீர்பரப்பும் மணலும் பாறைகளும் மற்ற மீன்களுமே கடல் என்று நினைக்கும். ஆனால் கடல் அதுவல்ல. அதே சமயம் அது கடலும் கூடத்தான். கடலின் ஒரு பகுதியும் கடல் தான். மீனுக்குத் தெரியும் கடல் பொய்யோ மாயையோ அல்ல என்று. அதுவும் உண்மை தான். கடல் என்ற பேருண்மையின் ஒரு பகுதியான சிறு உண்மையே மீன் அறியும் கடல்.

ஈசா வாஸ்ய உபநிஷதம் சுக்ல யஜூர் வேதத்தில் அமைந்துள்ளது இந்த சாந்தி ஸ்லோகம்.

ஓம் பூர்ணமத:பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே | பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே| ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி ||


இதன் பொருள்: அதுவும் பூரணம், இதுவும் பூரணம். பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்த பின் பூரணமே எஞ்சி உள்ளது. இவ்வாறு ப்ரம்மம் மாறுபடாதவராக உள்ளார். முழுமைத் தன்மையில் இருந்து குறைவுபடுவதில்லை. எனவே, முரண்பாடு வேண்டாம். உடல், மனம், ஆத்மா மூன்றிலும் அமைதி நிலவட்டும்.


இறைவன் முழுமையானவர், இந்த உலகம் முழுமையானது. முழுமையான உலகம் தோன்றி உள்ளது. முழுமையிலிருந்து முழுமை எடுத்த பின்பும் முழுமையே எஞ்சியுள்ளது. ஒரு புதிரின் மூலம் உலகத்தை விளக்க முற்படுகின்ற மந்திரம் இது. இறைவன் முழுமையானவராக, பூரணமானவராக இருக்கிறார். அவரிலிருந்து முழுமையான உலகம் தோன்றியுள்ளது. இருப்பினும் தனது பூரணத்துவம் குன்றாமல் முழுமையாகவே இருக்கிறார் அவர். சரி நாம் ஏன் பிறக்கிறோம், அதுவும் ஔவையார் சொன்னது போல அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்னும் பிறவியை ஏன் எடுக்கிறோம்? திரும்பவும் வீடு பேறு பெறத்தான். திரும்ப நம்மை உருவாக்கினவர் திருவடியை அடையத் தான். அதை செய்வதற்கு நமக்கு ஏகப்பட்ட தடைகள் வாழ்க்கையில் உருவாகின்றான். அவையாவும் இறைவன் உருவாக்கும் மாயையகள். அந்தத் தடைகளை தாண்டி இறைவனை அடைய மிக எளிய வழி அவன் தாள் படிதல் தான். அவனை சரண் அடைதல் தான். மாயப் பிறப்பறுப்பவன் அவன் மட்டுமே. அன்பே உருவானவன் இறைவன். அவனே தஞ்சம் என்று அடைந்து விட்டால் நம்மை எல்லா துன்பங்களிலும் இருந்து காப்பது அவன் பொறுப்பாகி விடுகிறது. தாயுமானவனாய் அரவணைத்து, தந்தையுமாகி பராமரித்து, குருவுமாகி கண்காணித்து நம்மை உரிய காலத்தில் அவன் திருவடியில் சேர்த்துக் கொள்வான்.

ஈஸாவஸ்ய உபநிஷத்தின் ஸ்லோகம் இதை அழகாக விளக்குகிறது. பதினெட்டே மந்திரங்களில் வேதசாரத்தைக் கொடுத்து, ஸ்ரீமத் பகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களின் சாரத்தின் சாரமாக உள்ளது இந்த ஸ்லோகம். முதல் மந்திரத்திலேயே இதன் சாரம் புரிகிறது. அதாவது கடவுளே எல்லா இடத்திலும் இருக்கிறார். அவரது அருளே எங்கும் நிரம்பி உள்ளது; அவரது ஆளுமையே எல்லாம். அதனால் என்னுடையது என்று எதுவுமில்லை, அனைத்துமே இறைவனுடையதாக அர்ப்பணித்து, நாம் பெறுவதை எல்லாம் அவரின் பிரசாதமாக ஏற்க வேண்டும். வேதாந்தத்தைப் படித்தால் கண்ணனைத் தவிர மற்றனைத்தும் மாயையே என்பது நமக்குப் புரியும். அதையே தான் எம்பெருமானார் இராமானுஜரும் எடுத்துரைக்கிறார்.

மீன் உதாரணத்தை எடுத்துக் கொண்டோமானால் எத்தனை விரிந்தாலும் மீனினால் கடலை அறிந்துவிட முடியாது. கடலை மீன் அறிவதற்கான வழி, சிறிது சிறிதாக தன்னை ரத்து செய்துகொள்வதே. அதன் தன்னுணர்வுநிலை இல்லாமல் போகும் போது தான் அதனால் கடலை உணர முடியும். ஆகவே அதன் முன் உள்ள ஒரே வழி தன் முன் உள்ள சிறிய நீர்வெளியை கடலென எண்ணி மயங்காமலிருப்பது. பெரிய கடலை அறிய வேண்டும் என்கிற உந்துதலில் தன்னை முழுமையாக அதற்கு ஒப்படைத்து விடுவது. இதுவே ஆழ்வார் பாடல்களில் பிரபத்தி என்று சொல்லப்படும் முழுமையான ஒப்புணர்வு ஆகும். இதன் மூலம் மனம் விரியும். ஒருவர் கடல் என்பது தன்னையும் உள்ளடக்கிய ஒன்று என அறியும் மீன் போல தன்னையிழந்து பிரம்மத்தை உணர்கிறார். எல்லா வேதாந்தக் கோட்பாடுகளுக்கும் பொதுவாக உள்ள கூறு என்பது அனைத்தும் பிரம்மத்தில் தோன்றி பிரம்மத்தில் அடங்குகின்றன என்ற புரிந்துணர்தல் ஆகும். விசிஷ்டாத்வைதம் திரும்பத் திரும்பச் சொல்லும் மனநிலை பிரபத்தி என்பதாகும். பிரபத்தி என்றால் இயல்பான வரம்பற்ற நிபந்தனையற்ற பக்தி. பக்தியானது அறிந்து தெளிந்து நோக்கம் கொண்டு வருவது. பிரபத்தி தன்னிச்சையானது, கட்டற்றது, நிபந்தனைகள் அற்றது. தாய்ப்பசு மீது கன்றின் பிரியம் போல வேறு எதிர்பார்ப்புகளே இல்லாதது. செடியில் பூ போல அடிப்படை விதியாலேயே உருவாவது. பிரபத்தி உருவாவதற்கே இறையருள் தேவை என்று இராமானுஜர் சொல்கிறார். அதையே தான் அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்கிறார். மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி என்று இறைவனை துதிக்கிறார். அவனால் மட்டுமே இதை செய்ய முடியும். பெரியாழ்வார் விஷ்ணுவிடம் கொண்டது பக்தி. ஆண்டாள் கொண்டது பிரபத்தி. நம்மாழ்வார் பாடல்களில் நாயகி பாவமாக பிரபத்தி நிலை அழகிய கவித்துவத்துடன் சொல்லப்பட்டுள்ளது.

பிரபத்தி என்னும் சரணாகதி மூலம் மட்டுமே நாம் மாயையில் இருந்து விடுபட்டு பிறவா வரம் பெறுவோம். சரம ஸ்லோகம் எனப்படும் கீதையில் வரும்,

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச

ஸ்ரீ கீதாசார்யனான கண்ணனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப் பட்ட மந்திரம் இது. இதன் பொருள் நீ செய்யும் தர்மங்களே மோக்ஷ உபாயம் என்பதைக் கைவிட்டு, என் ஒருவனையே சித்தோபாயமாகப் பற்றிக்கொள், நான் உன்னை அனைத்து பாவங்களில் இருந்து விடுவிக்கிறேன் என்பதாகும். இது மட்டுமே மாயையில் இருந்து விடுபட நமக்கு இருக்கும் உபாயமாகும்.


சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


406 views2 comments
bottom of page