top of page
  • Writer's pictureAnbezhil

ஸ்ரீமத் பாகவதம்

Updated: Oct 14, 2021


ஸ்ரீமத் என்றால் மிக அழகானது, மிகச் சிறந்தது, புகழ் வாய்ந்தது என்று பொருள். பாகவதம் என்றால் பகவானிடமிருந்து வருவது அல்லது பகவானுடன் தொடர்புடையது என்று பொருள். எனவே, #ஸ்ரீமத்_பாகவதம் என்பது “பகவானைப் பற்றிய அழகான புத்தகம்”. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல்வேறு அவதாரங்கள், லீலைகள், மற்றும் அவரது பக்தர்களைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் இதில் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் பாகவதமானது வேத மெய்யறிவை கொடுக்கும் கற்பக மரம். ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமே ஸ்ரீமத் பாகவதம் ஆகும். ஒரு கல்லிலோ பளிங்கிலோ பகவானை வடிக்கும் போது, அவரை விக்ரகம் என்கிறோம். அவர் மீனாகத் தோன்றினால் மத்சயர், ஆமையாகத் தோன்றினால் கூர்மர், பாதி மனிதனாக பாதி சிங்கமாகத் தோன்றினால் நரசிம்மர் என்ற அவதாரங்கள் என்று அழைக்கின்றோம். அதுபோலவே, புத்தகத்தின் வடிவில் கிருஷ்ணர் தோன்றினால், அவர் ஸ்ரீமத் பாகவதம் என்று அறியப்படுகிறார். வேறு எந்த புராணத்தையும் ஸ்ரீமத் என்று அடைமொழியுடன் அழைப்பதில்லை. இந்த புராணத்தில் ஒவ்வொரு வரியும் கிருஷ்ணரின் புகழையே பாடுகின்றன. "श्रीमद्भागवताख्योयं प्रत्यक्ष: कृष्ण एव हि" - "ஸ்ரீமத் பாகவதாக்யேயாம் ப்ரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவ ஹி" என்பது பாகவத மாஹாத்ம்யத்தில் இருக்கும் ஒரு ஸ்லோகம். ஸ்ரீமத்பாகவதத்தின் உருவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார் என்பது இதன் பொருள். பாகவதத்தை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள்.



















#பாகவதத்தின்_தோற்றம்: நான்கு வேதங்கள், வேதாந்த சூத்திரம், புராணங்கள், மகாபாரதம் போன்றவற்றை தொகுத்து வழங்கிய மாமுனிவரான ஸ்ரீ வியாச பகவான் அவ்வாறு தொகுத்த பின்னும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. அதற்கான காரணத்தை அவர் தன் ஆன்மீக குருவான ஸ்ரீ நாரத பகவானிடம் கேட்டார். அதற்கு நாரதர், ஸ்ரீஹரியின் குணங்களை சொல்லும் நூல்களையே சாதுக்கள் விரும்புவர். அனந்தனின் திவ்ய நாம பெருமைகளை கூறுவதே மக்களின் பாவங்களை போக்கக் கூடியது. அப்படிப்பட்ட பகவானின் களங்கமற்ற புகழை நீ இதுவரை வர்ணிக்கவில்லை. அவரின் தெய்வீகப் புலன்களைத் திருப்தி செய்யாத வெறும் தத்துவங்கள் பயனற்றவை. அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை விவரமாக விளக்கியுள்ள போதிலும், ஸ்ரீஹரியின் புகழை நீ இதுவரை பாடவில்லை. தியானத்தில் அமர்ந்து அவர் பெருமைகளை உணர்ந்து அவற்றை சொல்லி பக்தியின் பெருமையை கூறவும். பகவானின் லீலைகளைப் பற்றி நேரடியாக வர்ணித்தால் அதுவே உன் ஏக்கத்தை திருப்தி செய்யும் என்று வியாசருக்கு உபதேசித்தார். தனது குருவான நாரதரின் கட்டளைப்படி, வியாசர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவில் நமக்கு அருளினார். நாரத முனிவர் ருக்குமணி பிராட்டியாருக்கு வியாசர் அருளிய பாகவதத்தை சொன்னார்.

#பாகவதம்_பூமிக்கு_வந்த_விதம்: வேதம் முழுவதையும் கிரகித்த வியாஸ பகவான், கலியுகத்தில் இருக்கும் மனிதர்களைக் கருத்தில் கொண்டு முழு வேதத்தையும் ஒருவர் ஒரு வாழ்நாளுக்குள் கற்றுக் கொள்வது கடினம் என்று உணர்ந்து அதை நான்காகப் பிரித்தார். பின்னர்

1. ரிக் வேதத்தை பைலர் என்ற ரிஷியிடமும், 2. யஜுர் வேதத்தை வைசம்பாயனர் என்ற ரிஷியிடமும், 3. ஸாம வேதத்தை ஜைமினியிடமும், 4. அதர்வண வேதத்தை சுமந்து என்ற ரிஷியிடமும் கொடுத்தார். பதினேழு புராணங்களை ரோம ஹர்ஷணர் என்ற பௌராணிகரிடம் கொடுத்தார். கடைசியாக பதினெட்டாவதாக எழுதிய ஸ்ரீமத்பாகவத புராணத்தைக் கொடுக்க தகுந்த ஒருவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு தந்தை சொத்தைப் பிரித்துக் கொடுப்பது போல கொடுத்துவிட்டு, தனக்குப் பிரியமான சொத்தை சரியாக நிர்வகிக்கத் தகுந்த ஆளை எதிர்பார்ப்பது போல் அவர் காத்திருந்தார். ஸ்ரீ வியாஸ பகவான் ஒரு சமயம் யாகம் செய்யும்போது, யாக குண்டத்திலிருந்து தோன்றியவர் ஸ்ரீ சுகாசார்யார். இவரிடம் தான் பாகவதத்தை ஒப்படைக்க வேண்டும் என்று உடனே வியாசருக்குத் தெரிந்தது. தோன்றும்போதே பதினாறு வயது நிரம்பிய இளம் பாலகனாக, அழகு சொட்டும் உருவத்தோடு விளங்கினார் சுகாசார்யார். ஞான ஸ்வரூபமான சுகர், யாக குண்டத்திலிருந்து வெளி வந்ததும், எதையும் கவனிக்காமல் கிடுகிடுவென்று ஓடத் துவங்கினார். எங்கும் நிரம்பியிருக்கும் ஆத்மாவில் ஆழ்ந்திருப்பவர் என்பதால் ஆடைகளின்றி, திக்குகளையே ஆடையாகக் கொண்டு திகம்பரராக சங்கல்பமின்றி சஞ்சரித்தார். தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புத்திரன் கிடைத்துவிட்டான் என்று மகிழ்ந்துபோன வியாஸரோ, சுகரைத் துரத்திக்கொண்டு ஓடினார். மகனே மகனே, என்று கத்திக்கொண்டு தந்தை துரத்திக்கொண்டு ஓட, சுகர் தன்னைத்தான் அழைக்கிறார் என்று நினைக்கவில்லை. ஏனெனில் ப்ரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கும் ஆத்மாவே தானென்று உணர்ந்திருந்தார். ஆனால், வழியிலிருந்த மரம் செடி கொடிகளெல்லாம் ஏன் ஏன் என்று வியாஸருக்கு பதில் கூறின. இதிலிருந்து அவருடைய ப்ரும்மானுபவம் எத்தகையது என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஓடிக்கொண்டிருந்த சுகர் ஒரு குளத்தின் வழிச் செல்ல, அங்கு ஆடையின்றி குளித்துக்கொண்டிருந்த பெண்கள் அவரைப் பார்த்துவிட்டு எந்த சஞ்சலமும் இல்லாமல் குளியலைத் தொடர்ந்தனர். சற்று நேரத்தில் பின்னாலேயே துரத்தக்கொண்டு வந்த வியாஸரைப் பார்த்ததும் ஓடிச் சென்று ஆடைகளை அணிய முற்பட்டனர். இதைக் கண்ட வியாஸர், அந்தப் பெண்களைப் பார்த்து பதினாறு வயதுடைய என் மகன் ஆடையின்றி செல்கிறான். அவனைப் பார்த்து நீங்கள் வெட்கமடையாமல் கிழவனும், ரிஷியுமான என்னைக் கண்டதும் வெட்கப்படுகிறீர்களே இது நியாயமா என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்கள், மன்னித்துவிடுங்கள் மஹரிஷி. தங்கள் மகன் இளவயதுடையவராய் இருந்தபோதும், அவரைக் கண்டதும் வெட்கமேற்படவில்லை, காரணம் அவர் தன்னை ஆணா, பெண்ணா என்று கூட உணராமல் ப்ரும்மவஸ்துவாகவே இருக்கிறார். அவரைக் கண்டதும் எங்கள் மனத்தில் எந்த விகாரமும் ஏற்படவில்லை. ஆனால், நீங்கள் வயதானவர் என்றாலும் நீங்கள் ஆண், நாங்கள் பெண்ணினம் என்ற பேதம் தெரிவதால் வெட்கம் வந்து ஆடைகளை அணிந்தோம் என்றனர். இந்த நிகழ்வு வியாஸரைக் குறைத்துச் சொல்லப்பட்டதல்ல. தந்தையான அவர் தன்னைக் குறைத்துக்கொண்டு தனயனின் பெருமையை உணர்த்துகிறார். மேலும், இதயத்தில் துளியும் காமவாசனையற்ற, ப்ரும்மஸ்வரூபமான ஸ்ரீ சுகர்தான் பாகவததின் தசம(10)ஸ்கந்தத்தில் ராஸலீலையை வர்ணிக்கிறார் என்றால் ரஸம் எவ்வளவு உயர்ந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்தின் ருசியில் தெரியும் வரும். அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால் அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும். இதையே பாகவதத்தில்

நிகம-கல்ப-தரோர் கலிதம் பலம் ஷுக-முகாத் அம்ருத-த்ரவ-ஸம்யுதம்

பிபத பாகவதம் ரஸம் ஆலயம் முஹுர் அஹோ ரஸிகா புவி பாவுகா:

என்ற ஸ்லோகத்தில் காணலாம். ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம், சுக பிரம்ம ரிஷியின் (’சுக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால், மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது என்பது பொருள். வியாசர் தன் மகன் சுகருக்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார். ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும், 36,000 பாடல்களும் கொண்டது. இதில் 25 கீதைகளும், பல அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்துள்ளன பாடல்கள். இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது. ஸ்ரீமத் பாகவதம் மோக்ஷத்தை மட்டுமல்ல கேட்ட மாத்திரத்தில் நான்கு புருஷார்த்தங்களையுமே அளிக்கவல்லது. வேத அத்யயனம் செய்வதுபோல் சந்தை திருவையாக அதாவது ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ஒரு முறை சொல்லி மூன்று முறை வாங்கிச் சொல்லி அர்த்தத்தோடு உள்வாங்கிக்கொண்டார் சுகர். பின்னர் சுகமுனிவர் பரீட்சித்து மன்னனுக்குச் சொன்னார்.

ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடக்கும் இடத்திற்குச் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்தால் ஸம்ஸ்க்ருதம் புரியா விட்டாலும், அர்த்தம் தெரியாவிட்டாலும் பாராயண ஒலி கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வளவு கர்ம வாசனைகளோடு ஸம்சாரத்தில் உழன்றுகொண்டிருக்கும் நமக்கே பாகவத சப்தம் மகிழ்ச்சி தருகிறதென்றால், ப்ரும்மஸ்வரூபாக விளங்கும் ஸ்ரீ சுகருக்கு எப்படி இருந்திருக்கும்? பாகவதம் தந்த பேரானந்ததில் திளைத்துக் கொண்டிருந்த சுகர் அதை யாருக்காவது சொல்லவேண்டுமே என்று தவித்தார். ஏழு நாட்களில் மரணம் என்ற சாபத்தோடு தனக்கு யாராவது உய்யும் வழி காட்டமாட்டார்களா என்று வருந்திக் கொண்டிருந்த பரீக்ஷித்தும் சுகரும் கங்கைக் கரையில் ஒன்று சேர்ந்தனர்.


அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அபிமன்யுவின் மகன் பரீக்ஷித். பரிக்ஷித் ஒருமுறை காட்டில் வேட்டையாடி விட்டு ஒரு முனிவரின் வீட்டுக்குள் நுழைந்து விட்டான். அங்கு சமீகர் என்கிற முனிவர் தியானத்தில் இருந்தார். அவரிடம் தான் பரிக்ஷித் மன்னன் என்றும் தான் அம்பு எய்த ஒரு மானை தேடி வந்ததாகவும், அந்த மானை பார்த்தீர்களா என்று பல முறை கேட்டும் அவர் தவத்தில் இருந்ததால் பதில் கூறவில்லை. இதனால் கோபம் அடைந்த பரிக்ஷித் அங்கு கிடந்த ஒரு செத்த பாம்பை தன் வில்லினால் எடுத்து அவர் தோளில் போட்டு விட்டு சென்று விட்டான். ஆனால் அந்த துறவி அதனால் கோபப்படவில்லை. அவரது மகன் சிருங்கி, தவத்தில் சிறந்தவன், ஆனால் கோபக்காரன். அவன் நடந்ததை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்தான். தன் தந்தையை அவமானப்படுத்திய அந்த பரிக்ஷித் மன்னன் இன்னும் ஏழு இரவுகளுக்குள் கடும் விஷமுடைய தக்ஷகன் என்ற பாம்பினால் கடிக்கப்பட்டு மரணமடைவானாக என்று கடும் சாபத்தை கொடுத்தான். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பரீக்ஷித் தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உடனே உணர்ந்தான். தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்று யோசித்தான். கலியுகம் தொடங்கியதாலேயே, கலிபுருஷன் தன்னை தீண்டியதாலேயே இப்படியொரு மகாபாவமான செயலை செய்ய நேர்ந்தது என்று உணர்ந்து மிகவும் வருந்தினான். உடனடியாகத் தன் மகன் ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான். பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, கங்கைக் கரையில் பிராயோபவேசம் {அன்ன ஆகாரம் இன்றிப் பட்டினிக்கிடத்தல்} செய்து கொண்டு ஏழாம் நாள் தனக்கு வரப்போகிற மரணத்தை எதிர்பார்த்திருந்த அர்ச்சுனனது பேரனாகிய பரீட்சித்துக்கு வியாசருடைய பிள்ளையும், முற்றுந்துறந்த முழு ஞானியுமான சுகப்ரம்மத்தால் சொல்லப்பட்டது பாகவதம். பரீட்சித் மோட்சம் பெறுவதற்காக ஸ்ரீமத் பாகவத கதைகளை ஏழு நாட்களுக்குக் கூறினார்.


சுக பிரம்ம ரிஷியிடம், 'எது ஒருவனுக்கு உயர்ந்த லக்ஷியம்? மரணமடையும் முன் நான் என்ன செய்யவேண்டும்? மனிதனானவன் எதை கேட்கவேண்டும், செய்யவேண்டும், ஞாபகம் கொள்ளவேண்டும் என்று கேட்கிறான். பாகவதத்தை பரீக்ஷித்- சுகர் சம்வாதம் என்றும் சொல்வதுண்டு. பரீக்ஷித் கேட்ட கேட்கப்பட வேண்டியவைகளில் மிகவும் முக்கியமானது என்ன என்ற கேள்விக்கு சுகர் அதுதான் பாகவத புராணம் என்று பதிலளித்தார். இந்த பாகவத புராணம் வேதத்திற்கு சமமானது. இதை கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன் த்வாபரயுகத்தில் என் தந்தையான வியாஸரிடமிருந்து அத்யயனம் செய்தேன். நிர்குணபிரம்மத்தில் நிலைத்த முனிவர்களும் ஹரியின் குணங்களைப் பேசுவதில் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே ஹரியின் கருணைக்குப் பாத்திரமான உங்களுக்கு நான் இதை அளிக்கிறேன் என்றார். சுக பிரம்ம ரிஷி அவனின் அனைத்துக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார். 'மனிதன் பொறுப்பற்று தனது பொன்னான வாழ்நாளை உலக வாழ்க்கையின் ஆசா பாசங்களில், மாயையில் வீணாகப் போக்குகிறான். சம்சார சாகரத்திலிருந்து தளை நீங்கி விடுதலை பெற (மோக்ஷ சாதகத்துக்கு) பாகவதம் படித்தாலோ, கேட்டாலோ போதும். ஏழு நாள் பாகவதம் சொல்கிறார் சுகர். அதில் ப்ரம்மாவும் நாரதரும், விதுரரும் மைத்ரேயரும், யுதிஷ்டிரனும் நாரதரும், கிருஷ்ணனும் உத்தவரும், பரிமாறிக்கொண்ட சம்பாஷணைகள் பற்றி சொல்கிறார். குறிப்பாக, நாராயணனின் அவதாரங்கள் பற்றி, பக்தர்களைப் பற்றி, ஆத்மாவின் உண்மை ஸ்வரூபம் பற்றி, ஆசா பாசங்களின் மாயத் தளைகள்-அவற்றிலிருந்து ஜீவன் எப்படி விடுபடுவது என்பதை, ஹிந்து சனாதன தர்ம கோட்பாடுகளைப் பற்றி, சாதுகளின் சங்கம் தரும் பெருமை பற்றி, பக்தி ஞான கர்ம மார்கத்தில் காட்டும் வழிகள், அதனுள் பக்தி யோகம் என்பது எப்படி சிறந்த மார்க்கம் ஆகியவை சொல்கிறார். பரிக்ஷித்திடம், ஆத்மா உன் உடம்பல்ல, அது பிறப்பற்றது. உடல் அழிந்தாலும் ஆத்மா அழியாது, இதை அறிந்தாலே நீ ப்ரம்மாகிவிடுவாய் என்று கூறுகிறார். இறுதியில் இன்னும் என்ன சொல்லட்டும் என்று கேட்கிறார். அதற்கு பரீக்ஷித் குருவே, நான் அடைய வேண்டியதை அடைந்துவிட்டேன். பாக்யவான் நான். சாஸ்வதமான ஹரியை எனக்குக் காட்டிவிட்டீர்களே. வேறு என்ன வேண்டும்! என் அறியாமை, சந்தேகம் எல்லாம் நீங்கின. இனி என்னை அந்த தக்ஷகன் என்கிற சர்ப்பம் தீண்டி மரணம் அடைந்தாலும் துளியும் வருத்தமோ, கவலையோ இல்லை என்கிறான். அந்த சமயத்தில் சூத பௌராணிகரும் (பௌராணிகர் என்றால் உபன்யாசம் செய்பவர்) உடனிருந்து பாகவதத்தை கேட்டார். அந்த ஸ்ரீமத் பாகவதத்தையே சூத பௌராணிகரும் சனகாதி முனிவர்களும் நைமிசாரண்யத்தில் வைத்து கேள்வி பதிலாக பகிர்ந்து கொள்வதாய் பாகவதம் ஆரம்பிக்கும். நைமிசாரண்யத்தில் பகவான் வன ரூபத்தில் இருக்கிறார் என்பதது ஐதீகம். அவர் அனிமிஷ அல்லது கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

வியாசர் எழுதியதில் எந்த புராணத்தை கேட்டால் மக்களுக்கு நல்லதோ, ஆயுசு கூடுமோ அதை எடுத்து சொல்ல வேண்டும் என்று துவாபர யுகத்தின் கடைசியில் நைமிசாரண்யத்தில் தீப ஸத்ர யாகம் செய்யக் கூடியிருந்த சாதுக்கள் அங்கு அப்பொழுது வந்த சூத பௌராணிகரிடம் கேட்கிறார்கள். கலி காலம் பக்கத்தில் வந்து விட்டதால் தீப ஸத்ர யாகம் செய்ய நைமிசாரின்யத்தில் அமர்ந்திருக்கிறார்கள் ரிக்விக்குகள். (ஸத்ர யாகத்திற்கும் மற்ற யாகங்களுக்கும் உள்ள வேறுபாடு, மற்ற யாகங்களில் யஜமானன் என்கிற ஒருவன் தன் திரவியத்தைச் செலவு செய்து, தக்ஷிணை கொடுத்து, யாகம் செய்கிறான். ரித்விக்குகள் யஜமானனிடம் தக்ஷிணை வாங்கிக்கொண்டு அவனுக்காக யஞ்ஞத்தை நடத்தித் தருகிறார்கள். சத்ர யாகங்களில் மட்டும் யாகம் செய்யும் அத்தனை பேருமே யஜமானர்கள். ஒரு யக்ஞத்தினால் லோக க்ஷேமமும், அதில் கலந்து கொள்கிற எல்லோருக்கும் சித்தசுத்தியும், அதைத் தரிசிப்பவர்களுக்கு நன்மையும் ஏற்படுகின்றன. சத்ர யாகங்களில் ரித்விக்குகளே யஜமானர்களாக இருப்பதால் அத்தனை பேருக்கும் சமமான புண்ணியம்.) இந்த யாகத்தை ஆயிரம் வருஷம் செய்ய வேண்டும். அவ்வளவு காலம் அந்த யாகம் செய்பவர்களும் உயிருடன் இருக்க வேண்டுமே. கலசஸ் ஸ்தாபனம் செய்யும்போது மற்ற தெய்வங்களோடு, இந்திரன், வருணன் இவர்களுடன் யமதர்மனையும் சேர்த்து ஆவாஹனம் செய்து விட்டார்கள். மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் இவர்கள். அதனால் ஆயிரம் வருஷங்களுக்கு யாகம் செய்பவர்கள் யார் உயிரும் போகாமல் இருக்க இதே போல யமனையும் கட்டிப் போட்டு விட்டார்கள். யமதர்மனும் 12 பாகவதோத்தமர்களில் ஒருவர். பிரம்மா, நாரதர், சிவபெருமான், ஸ்வாயம்புவ மனு, சுகாச்சார்யர், ஜனகர், சனத்குமாரர்கள், கபிலர், பிரகலாதன், பலி சக்கரவர்த்தி, பீஷ்மர், யமதர்மன் ஆகியோர் அந்த பன்னிரண்டு பேர்கள். அதனால் பாகவதர்கள் ஆசையுடன் சேவித்துக் கொண்டிருப்பர்.


நல்லதை நினைத்தால் அதற்கான பலன் கிடைக்கும் கலியுகத்தில். அதனால் கலி என்பது சாதுவாக உருவகப்படுத்தப் படுகிறது. சுதரைப் பார்த்து நீங்கள் படகோட்டியைப் போல கிடைத்துள்ளீர்கள். தர்மத்துக்காக போராடக் கூடியவரான கிருஷ்ண பரமாத்மா அவதார காரியங்களை முடித்து இந்த உலகத்தை விட்டு மறைந்த பிறகு தர்மம் யாரை சரணம் அடைந்தது என்று எங்களுக்குத் தெரிய வேண்டும். மேலும்

1. எல்லா சாஸ்திரங்களுடைய சாரமானது எது? 2. பகவான் எதற்காக தேவகி வசுதேவரிடம் தோன்றினார் 3.அவருடைய அவதாரங்களைப் பற்றி கூறுங்கள். நாரதர் போன்றோர் எடுத்து சொன்ன லீலைகள், அவதார கதைகளையும் சொல்லுங்கள் என்கின்றனர். 4. தன்னை மறைத்துகொண்டு மனிதனைப்போல் நடித்த கிருஷ்ணருடைய மனித இயல்பினை மீறிய செயல்களைப் பற்றி கூறுங்கள் என்று கேட்டார்கள்.

இவர்கள் கேட்ட கேள்விகளினால் சூத பௌராணிகருக்கு மயிர் கூச்செரிகிறது. நைமிசாரின்யத்தில் வந்து அமர்ந்து படித்தவர்கள் முன் சொல்லப் போகிறோம், மேலும் வியாச பகவானின் கருணையை நினைத்து, மனிதப் பிறவி எடுத்தேனே பகவத் கதைகளை சொல்ல என்று அவருக்கு மேனி சிலிர்த்தது. ஸ்ரீமந் நாராயணனையும், புருஷ ச்ரேஷ்டரரான நரனையும், சரசுவதியையும், ஸ்ரீவியாச பகவானையும் வணங்கி வெற்றியை அளிக்கும் இந்தப் புராணத்தைக் கூறுகிறேன் என்று வியாசர் மகனே என்று கூப்பிட்டால் மரம் செடி கோடிகள் வியாசருக்கு சமாதானமாக இருக்கட்டுமே என்று என்ன என்று கேட்டனவாம் என்ற இடத்தில் தொடங்கி பாகவத புராணத்தை அவர்களுக்குப் போதிக்கிறார்.

வரப்போகிற கலி காலத்தில் மக்களுக்கு அல்பாயுசு என்று சொல்லிவிட்டார் பகவான். கலியுகத்தில் ஆயுள் கம்மி, மக்கள் சோம்பேறிகளாக, மந்த புத்தி உடையவர்களாக இருப்பார்கள். விண்வெளிக்குச் செயற்கைக் கோள் அனுப்பும் அளவு அறிவு இருக்கும் ஆனால் அந்த அறிவை தந்தது இறைவன் தான் என்பதை நம்பாமல், புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். பகவத் குணத்துக்கு வர முடியாத அளவுக்கு கர்ம பலன் அவர்களை தடுக்கும். எத்தனையோ காரணங்களை சொல்லி சத் சங்கத்தை தவிர்ப்பர். வியாதிகளினால் பீடிக்கப் படுவார்கள். நிறைய கர்மாக்கள் அனுஷ்டிக்க வேண்டியிருந்தாலும், சாஸ்திரங்கள் படி நடக்க வேண்டும் என்று இருந்தாலும் அவற்றையும், நாலு வித தர்மங்களையும் யாரும் கடைபிடிக்க மாட்டார்கள். பாகவதம் இவை யாவற்றையும் விரிவாக சொல்லியிருக்கின்றன.


கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுட் காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். (பாகவத புராணம் 12.2.1)

கலியுகத்தில், பொருட் செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். ஒருவனின் முறையான பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படமாட்டான். மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். (பாகவத புராணம் 12.2.2)

வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். (பாகவத புராணம் 12.2.3)

ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு, அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி, தவறான போலி குருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர், கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். (பாகவத புராணம் 12.2.4)

கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும், அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.5)

அலங்காரம் செய்தவர்கள் எல்லாம், அழகானவர்களாக அறியப்படுவார்கள். முரட்டுத்தனமான பேச்சு, உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள், ஆட்களை சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். (பாகவத புராணம் 12.2.6)

உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன், அரசாளும் அதிகாரத்தைப் பெற்றிடுவான். (பாகவத புராணம் 12.2.7)

ஊழல் நிறைந்த அரசாங்கத்தால், நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது திணிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். அரசின் அலட்சியப் போக்கினால், கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி, துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.9)

கடுங்குளிர், புயல், கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங் களிலும் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.10) கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகளாக குறையும். (பாகவத புராணம் 12.2.11)

தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதி காலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். (பாகவத புராணம் 12.3.42)

பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். (பாகவத புராணம் 12.3.41)

வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே பலரும் தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். (பாகவத புராணம் 12.3.38)

தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில், தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசுவிடம் பால் குறைந்துவிட்டால், அந்தப் பசுக்களும் கொல்லப்படும். நன்றிக்கடன் மறக்கப்படும். (பாகவத புராணம் 12.3.36)

நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடு களைப் பரப்ப, பொய்யான முறையில் மொழிப் பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆச்சாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி, தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். (பாகவத புராணம் 12.3.32)


இவற்றில் இருந்து எப்படி தப்பிப்பது? அதற்கு இறைவனை சரணடைவதைத் தவிர வேறு உபாயம் இல்லை. கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் இருக்கும். கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக, நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழைத் துளி படாமல் இருக்க குடை உதவுவது போல, இறைவனிடம் காட்டும் பக்தி துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும். அதனால் சூத பௌராணிகர் பகவன் நாமாவின் மகிமையைப் பற்றி சொல்கிறார். பயங்கரமான சம்சார பந்தத்தில் ஈடுபட்டிருக்கும் போது, பாசக் கயிற்றால் யமன் இழுத்துக் கொண்டு போகும் போது பக்தர்களுக்கு எல்லாம் பதியாக இருக்கும் பகவானின் திருநாமத்தை சொன்ன மாத்திரத்தில் அவன் சம்சார பந்தத்தில் விடுபடுகிறான். கிருஷ்ண நாமத்தை சொல்லும் போது பயமும் பயந்து போகும். அந்த பகவானின் பாதத்தில் யார் சேவை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் பாதத்தை பற்றிக் கொள்பவர்களும் சுத்தம் ஆகிறார்கள். எப்படி கங்கை கங்கை என்ற வாசகத்தை சொன்னாலே நம் இதயம் சுத்தம் ஆகிவிடுமோ அது போல பகவன் நாமாவை நினைப்பவனுக்கும் உச்சரிப்பவனுக்கும் எப்படி முக்தி கிடைக்காமல் இருக்கும் என்கிறார்.

ஒருமுறை #பக்திதேவி, உலகில் நான் மட்டும் இளைமைப் பொலிவுடன் திகழ என் குழந்தைகளான ஞானமும் வைராக்கியமும் பொலிவிழந்து முடிவை நெருங்கும் தறுவாயில் இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் பொலிவுறச் செய்ய தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும் என #நாரதரிடம் முறையிட்டாள். ஆனால் நாரதருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பிறகு, ‘பாகவத சப்தாஹம் ஒன்றே அதற்கு வழி என்பதை சனத்குமாரர்கள் வாயிலாக தெரிந்து கொண்டு அதை கங்கை கரையில் சப்தாஹமாக நிறைவேற்றி ஞானமும் வைராக்கியமும் இழந்த பொலிவை பெற உதவினார்.


#பாகவதத்தில்_கூறப்பட்டுள்ளவை: சிருஷ்டியின் தொடக்கம், அண்டச்சராசரங்களும், பஞ்ச பூதங்களும், உலகம் தோன்றியதும் அனைத்தும் பாகவதத்தில் உள்ளது. இதில் சொல்லப்படாத வேத வேதாந்த கருத்துக்களே இல்லை. பகவத் அவதாரங்கள், பகவானின் லீலைகள், புராண கதைகள் அனைத்தும் நடந்ததை நடந்த படி சொல்லி நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக சனாதன தர்மத்தையும், பக்தியையும், பகவானை அடையும் மார்கத்தையும் போதிக்கிறது. பதினெட்டாயிரம் ஸ்லோகங்களில் சொல்லப்பட்டிருப்பவை ஏராளம். அதிலிருந்து வெகு சில விஷயங்களை மட்டுமே இப்பதிவில் கூற முயற்சி செய்கிறேன். நீங்களே அந்த ரசானுபாவத்தில் மூழ்கி முழு பாகவதத்தையும் படித்தும் கேட்டும் அனுபவிக்க ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருள் புரிவான்.


ஆதியில் பகவான் உலகை சிருஷ்டி செய்ய எண்ணி உடனே 16 கலைகள் கொண்ட விராட் ஸ்வரூபத்தை மேற்கொண்டார். அந்த உடலில் இருந்து தேவர்கள் மனிதர்கள் தோன்றினர். உலகம் விரிவடைந்தது. அசுரர்கள் உலகில் துன்பம் உண்டாக்கும் போது நன்மக்களை காக்க அவர் பல அவதாரங்களை எடுக்கிறார். தர்மம் ஞானம் இவற்றுடன் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தன் திவ்ய லோகத்துக்குப் போன பிறகு உலகினர் அஞ்ஞானத்தில் சிக்கி அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் போது இந்தப் பாகவத புராணம் தோன்றி ஒளி வீசத் தொடங்கியது.


அனாதி காலத்தில் இருந்தது ஒரு மாபெரும் முட்டையாகும். எங்கும் நீரே நிறைந்திருக்க இந்த முட்டை அதில் மிதந்து கொண்டிருந்தது. அந்த முட்டையிலிருந்து தன்னைத் தானே தோற்றுவித்துக் கொண்டு விஷ்ணு தோன்றினார். ஆயிரக்கணக்கான முகங்கள், கால்கள், கைகள் என்பவற்றுடன் அவர் இருந்தார். பிரம்மாவைத் தன்னுடைய தொப்புளில் இருந்து தோன்றிய தாமரையினின்று விஷ்ணுவே தோற்று வித்தார். தோற்றுவிக்கப்பட்ட பிரம்மனிடம் படைப்புத் தொழிலை ஒப்புவித்தார். சிவனிடம் அழித்தல் தொழிலை ஒப்புவித்தார். விஷ்ணு சத்துவம், ராஜசம், தாமசம் ஆகிய முக்குணங்களையும் படைத்தார். அறிவும், அறிவு சார்ந்த பணிகளும் சத்துவ குணத்தின் ஆட்சிக்கு உட்பட்டன. செயல், செயல்முறை ராஜச குணத்தின் ஆட்சிக்குட்பட்டவை. பொறி புலன்கள், ஐம்பூதங்கள் ஆகியவை தாமச குணத்தின் ஆட்சிக்குட்பட்டவை .பாகவதத்தில் குணமே இல்லாதது பிரம்மத்துக்கு லக்ஷணம். அது தான் பிரம்மத்தின் குணம். பிரம்ம சூத்திரத்தில் பிரம்மத்தை பிரம்மம் என்று ஒன்று உண்டு அதை உணர்ந்து கொள் என்கிறது. எந்த பரமாத்மாவின் இடத்தில் இருந்து இந்த உலகத்தின் உடைய சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் உண்டானாதோ அவர் சர்வமும் உணர்ந்தவர். அவர் சுதந்திரமானவர். பகவான் மட்டும் தான் தன் இஷ்டத்துக்கு செய்பவர். நம்மால் சுதந்திரமாக உண்மையில் எதையும் செய்ய முடியாது. யாரோ ஒருவரிடம் கட்டுப்பட்டிருக்கிறோம். அவர் தான் பகவான். அவர் மட்டுமே ஸ்வராட். (சுதந்திரமானவர்). அவர் ஆதி கவி. பிரம்மாவுக்குக் கூட சிருஷ்டி செய்யவேண்டும் என்னும்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. வேதத்தை யார் அனுக்கிரகம் பண்ணினாரோ இந்த லோகத்தை பிரம்மா மூலம் பகவான் சிருஷ்டி செய்தது அக்னி, ஜலம், ப்ரித்வி வைத்து தான் சிருஷ்டி செய்தார். ரஜோ, தமோ, சாத்விக குணம் வைத்து சிருஷ்டி செய்தார். இவை யாவற்றையும் பாகவத ஸ்லோகங்கள் சொல்கின்றன.

பாகவத புராணப்படி விஷ்ணு யாராலும், எக்காலத்தும் காணப்பட முடியாதவர். ஆயிரக்கணக்கான முகங்களும், கைகளும், கால்களும் உடையவர். இந்த ஆயிரக்கணக்கான முகங்களிலிருந்து தான் தேவை ஏற்படும் பொழுது குறிப்பிட்ட அவதாரங்கள் தோன்றுகின்றன. பொதுவாக விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து என்றும், அவற்றுள் ஒன்பது அவதாரங்கள் முடிந்துவிட்டன என்றும், கலியுகத்தின் கடைசியில் பத்தாவதாகிய கல்கி அவதாரம் தோன்றும் என்றும், பேசவும் எழுதவும் பட்டுள்ளன. பாகவத புராணம் ஒன்றுதான் விஷ்ணு எடுத்த அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை அவற்றில் இருபத்தி நான்கு முக்கியமானவை என்கிறது. இதுவரை 21 அவதாரங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இனி எடுக்கப் போவது கல்கி அவதாரம். மீதி இரண்டு அவதாரங்களுக்கும் பெயரைக் குறிப்பிடாமல் அவை உண்டு என்றும் சொல்கிறது. 1.பிரம்மாவின் மானஸ புத்திரர் நால்வர் 2.வராக 3.நாரத 4.நர நாராயன 5.கபில 6.தத்தாத்ரேய 7. யக்ஞா 8.ரிஷப 9.ப்ருது 10.மத்ஸ்ய 11.கூர்ம 12.தன்வந்திரி, 13.மோஹினி, 14.நரசிம்ம 15.வாமன 16.பரசுராம 17.ராம 18.வேதவியாச 19.கிருஷ்ண 20.பலராம 21.புத்த 22.கல்கி (இனிமேல் வரப் போகும் அவதாரம் கல்கி).இதுதவிர ஹம்ச (அன்னம்) ஹயக்ரீவ (குதிரை முக) முதலிய அவதாரங்களும் காணப்படும். 24 அவதாரங்களை பற்றி பாகவத புராணம் விரிவாகப் பேசுகிறது.


ஸனத்குமாரர் செய்த பாகவத ஸப்தாஹத்தில் ஸ்ரீமத் பாகவத மஹிமையை விளக்கும் #ஆத்மதேவன் என்பவரது சரித்திரத்தை சொல்கிறார்.

ஆத்மதேவன் என்ற ஒரு அந்தணர் பூரண வேத அத்யயனம் செய்து ஆச்சாரத்தோடு வாழ்ந்து வந்தார். பெரிய செல்வந்தரான அவர் நிறைய தான தர்மங்கள் செய்து வந்தும் அவருக்கு குழந்தைகள் இல்லை. அவரது மனைவி #துந்துலிக்கு கொஞ்சமும் குழந்தை ஆசை இல்லை. குழந்தை பிறந்தால் பொறுப்புகள் வரும், அழகு கெட்டுவிடும் என்று அஞ்சினாள். ஒரு சமயம் அவர் வருத்தத்தோடு காட்டு வழி நடந்தபோது துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு அழுதார். அந்த வழியாகச் சென்ற ஒரு ஸாது அவரைப் பார்த்து அவர் துக்கத்தின் காரணத்தை அறிந்தார். அவன் மேல் பரிதாபம் கொண்டு அவனுக்கு உதவ அவர் தியானம் செய்து அவனின் தலையெழுத்தைப் பார்த்தார். பின் ஆத்மதேவனிடம் இதற்கு முன்னால் ஏழு பிறவிகளுக்கும் உனக்கு குழந்தை இல்லை. இனி வரப்போகும் ஏழு பிறவிகளுக்கும் குழந்தை பிறக்கப் போவதில்லை. அதனால, நீ குழந்தை ஆசையை விட்டுவிட்டு ஸந்நியாசம் வாங்கிக்கொள் என்றார். ஆத்மதேவன் இதை கேட்டுவிட்டு முன்னிலும் பெரிதாக அழுதான். ஸாது பார்த்தார் இவரைப் பேசி சமாதானப்படுத்தமுடியாது என்று உணர்ந்து அருகில் ஒரு மாமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கனியைப் பறித்து ஜபம் செய்து, இதை உன் பத்னியிடம் கொடுத்து சாப்பிடச்சொல் நல்ல குழந்தையாகப் பிறக்கும் என்றார். ஆத்மதேவர் மிகவும் மகிழ்ந்து அவரை நமஸ்கரித்துவிட்டு பழத்தோடு வீட்டுக்கு ஓடினார். ஏழு ஜென்மத்துக்கு குழந்தை கிடையாது என்றார். இப்போது பழம் கொடுத்து பிறக்கும் என்கிறாரே என்றால், முன்னது விதி. பின்னது அனுக்ரஹம். ஒரு கஷ்டத்திற்கு காரணம் நாம் செய்யும் முன்வினை. அனுக்ரஹம் செய்யும்போது ஸாதுக்கள் தங்கள் தவத்தின் ஒரு பகுதியை பழம், விபூதி, குங்குமம் அல்லது ஏதோ ஒரு பொருளில் ஏற்றிக் கொடுக்கிறார்கள். அந்த வினையின் வீரியத்தைவிட அனுக்ரஹ பலம் அதிகமாக இருந்தால் கஷ்டம் விலகும். மாறாய் இருந்தால் தவத்தின் அளவுக்கேற்ற அளவு வினைப்பயன் விலகும்.


ஆத்மதேவன் நம் குறை தீர்ந்துவிட்டது. இந்தப் பழத்தை நீ சாப்பிடு குழந்தை பிறக்கும் என்று அனுக்ரகம் பண்ணி ஒரு ஸாது கொடுத்தார் என்று பழத்தை மனைவியிடம் கொடுத்தார். அவளுக்கு எரிச்சலாக வந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டு பழத்தை வாங்கி ஸ்வாமி மாடத்தில் வைத்தாள். அவளுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லாததால் என்ன செய்வது என்று யோசித்தாள். கணவனிடம் சென்று நமக்கு நல்லபடியாகக் குழந்தை பிறக்க வேண்டிக் கொண்டு தீர்த்த யாத்திரை போய் வாருங்கள். நான் என் அக்காவைக் கூப்பிட்டு உதவிக்கு வைத்துக் கொள்கிறேன் என்றாள். ஆத்மதேவனும் தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டார். குழந்தை நல்ல குணங்களோடும், மஹாத்மாகவும் விளங்கவேண்டும் என்பதே அவரது பிரார்த்தனை. அவர் போனதும் துந்துலி தன் சகோதரியை அழைத்தாள். அவளிடம் தன் பிரச்சினையைச் சொன்னதும், துந்துலி, எனக்கு ஏற்கனவே 5 குழந்தைங்க உள்ளன. மறுபடியும் கர்ப்பம் தரித்திருக்கிறேன். என் வீட்டிலோ வறுமை. நீ கொஞ்சம் பணம் கொடுத்தால் என் வயத்திலிருக்கும் குழந்தையை பெற்று கொஞ்ச நாள் உன் கூட இருந்து வளர்த்தும் கொடுக்கறேன் என்றாள். இந்த யோசனை துந்துலிக்கு சரியாகப் பட்டது. சாது கொடுத்தப் பழத்தை கழுநீர்த் தொட்டியில் போட்டாள். சில மாதங்களில் அக்காவுக்கு குழந்தை பிறந்தது. அவர்கள் வீட்டிலிருந்த பசுமாடும் அன்றே ஒரு மனிதக் குழந்தையை ஈன்றெடுத்தது. ஆனால் அதன் காதுகள் மாட்டின் காதுகள்போல் இருந்தன. திடீரென்று பசுமாட்டிற்கு மனிதக் குழந்தை பிறந்ததும் திகைத்துப் போனார்கள் சகோதரிகள்.


ஓரிரு நாள்களில் ஆத்மதேவன் திரும்பி வந்துவிட, துந்துலி தன் சகோதரியின் குழந்தையை தன் குழந்தை என்று சொன்னாள். ஆனால் அந்தக் குழந்தை களையின்றி விகாரமாய் இருந்தது. பசுமாட்டிற்குப் பிறந்த குழந்தையோ, பார்த்தவுடனேயே மஹாத்மா என்று சொல்லும்படியான ஸாமுத்ரிகா லக்ஷணங்களுடன் விளங்கியது. பசுமாட்டுற்கு மனிதக் குழந்தை எப்படிப் பிறந்தது என்று அவருக்கு விளங்கவேயில்லை. தன் குழந்தைக்கு #துந்துகாரி என்றும் பசு ஈன்றெடுத்த குழந்தைக்கு #கோகர்ணன் என்றும் பெயரிட்டார்.

ஸாதுவின் ப்ரசாதமான கோகர்ணன் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து தேஜஸ்வியாக இருந்தான். இயல்பாகவே ஞானியாகவும் இருந்தான். துந்துகாரி வளர வளர கெட்ட பழக்கங்களும் வளர்ந்தன. ஒருநாள் ஆத்மதேவனிடம் பணம் கேட்டு தந்தை என்றும் பாராமல் அவரை ஓங்கி ஒரு அறை விட அவர் வாசலில் வந்து விழுந்தார். வலியால் துடித்த அவர் திண்ணையில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த கோகர்ணனிடம் என் பிள்ளை அடித்துவிட்டான் என்றார். அவர், அப்பா இன்னும் உங்களுக்கு அஞ்ஞானம் விடவில்லையா? அடிக்கிறான். அவனை என் பிள்ளை என்கிறீர்கள். இவன் கர்மா செய்தா நீங்கள் நரகவாசத்தில் இருந்து தப்பிக்கப் போகிறீர்கள்? அன்றே சாது சொன்னது போல நீங்கள் சந்நியாசம் வாங்கிக் கொண்டு இந்த சம்சார பந்தத்தில் இருந்து விடுபட்டு இருக்க வேண்டும் என்று கூறினார். ஆத்மதேவன் அந்த ஸாதுவே குருவாக கோகர்ணனின் உருவில் வந்தாரோ என்று நினைத்தான். அக்கணமே வீட்டைத் துறந்து கிளம்பினான். கோகர்ணன் தந்தைக்கு ஸ்ரீமத் பாகவதத்தின் தசமஸ்கந்தம் பாராயணம் செய்யுங்கள் என்றும் கூற, ஆத்மதேவன் ஸ்ரீமத்பாகவத புராணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை நீங்கினார் என்கிறது மாஹாத்மியம்.


தனக்கு ஆதரவாய் இருந்த ஆத்மதேவன் கிளம்பியதும் கோகர்ணனும் தீர்த்தயாத்திரை கிளம்பினார். துந்துகாரி பணத்திற்காக வழிப்பறி, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டான். தட்டிக் கேட்ட தாயான துந்துலியை அடித்தே கொன்றுவிட்டான். பின்னர் சில பெண்களை அழைத்துவந்து உல்லாச வாழ்க்கை நடத்தத் துவங்கினான். அவர்களை சந்தோஷப்படுத்த அவன் ஏராளமான பொருளைக் கொள்ளையடிக்க, அந்தப் பெண்கள் இவனுடன் சேர்ந்ததால் இவன் கொள்ளையடித்தற்காக தங்களுக்கும் அரச தண்டனை வருமோ என்று பயமேற்பட்டு அவர்கள் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஒருநாள் இரவு துந்துகாரியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு ஓடிவிட்டனர். துந்துகாரி தான் செய்த பாவங்களின் விளைவால் துர்மரணம் ஏற்பட்டு, பித்ருலோகத்தை அடையமுடியாமல், ப்ரும்மராக்ஷஸாக மாறி அந்த வீட்டிலேயே இருக்கத்த் துவங்கினான். தீர்த்தயாத்திரை சென்ற கோகர்ணன் கயாவில் இருந்தபோது, தன் ஊர்க்காரர்கள் சிலரைப் பார்த்தார். அவர்களிடம் தாயும் சகோதரனும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்தார். அவர்கள் துந்துலியும், துந்துகாரியும் இறந்துவிட்டார்கள் என்று கூறினர். மிகவும் வருந்திய கோகர்ணன் கயாவிலேயே அவர்களுக்குச் செய்யவேண்டிய அந்திம கிரியைகளையும், பிண்டதானங்களையும் செய்தார். மந்திரபூர்வமான கிரியைகளை ஒருவரின் வாரிசுகளும், தாயாதிகளும் செய்தால் மட்டுமே அது இறந்தவரைச் சென்றடையும். ஆனால், கயா க்ஷேத்திரத்தில் மட்டும் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பிண்டதானங்களைச் செய்யலாம். பயணத்தில் உடன் வந்தவர், அண்டை அயலார், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நம் செல்லப்ராணிகளுக்காகக்கூட கயாவில் ச்ராத்தம் செய்யலாம். அப்படிச் செய்தால் இறந்தவருக்கு ஸ்வாமியான கதாதரன் உயர்ந்த பதத்தைக் கொடுத்துவிடுவார்.


கோகர்ணன் ஊருக்குத் திரும்பினார். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கண்களை மூடி, ஜபம் செய்யத் துவங்கினார். சற்று நேரத்தில் ஆடு கனைப்பதுபோலவும், யாரோ அலறுவது போலவும், ஊளையிடுவது போலவும் விதம்விதமான சப்தங்கள் அவர் காதில் விழுந்தன. கண்களைத் திறந்தார். எதிரே புகைபோல் ஒரு உருவம் இருந்தது. சில மந்திரங்களைச் சொல்லி தீர்த்த பாத்திரத்திலிருந்து சிறிது நீரை அதன்மீது தெளித்தார். இப்போது அந்த உருவம் பேச ஆரம்பித்தது. கோகர்ணா என்னைக் காப்பாற்று என்று அலறியது அந்த உருவம். யார் நீ என்று கேட்டார். நான்தான் உன் அண்ணன் துந்துகாரி. நான் பஞ்சமாபாதங்களையும் செய்ததால இறந்த பிறகு ப்ரும்மராக்ஷஸாகிட்டேன். எனக்கு உடம்பெல்லாம் எரிகிறது. அகோரப்பசி. என்னால் இந்த அவஸ்தையைத் தாங்கமுடியல. தயவுசெய்து ஏதாவது செய் கோகர்ணா என்று அழுதது அந்த உருவம். நான் உனக்காகவும் அம்மாவுக்காகவும் கயாவில் ஸ்ராத்தம் செய்தேனே. எப்படி இந்த அவஸ்தை உனக்கு என்று கேட்டார். நூறு கயா ஸ்ராத்தம் செய்தால் கூட என் பாவங்கள் போகாது கோகர்ணா. அவ்வளவு பண்ணியிருக்கிறேன் என்றான் அவன். கோகர்ணன் பல சாஸ்திர நூல்களை ஆராய்ந்தார். வழி ஒன்றும் புலப்படவில்லை. ஊரிலுள்ள அத்தனை சான்றோர்களையும் கூட்டி ஏதாவது வழி உண்டா சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று கேட்டார். ஒரு பழுத்த ஸாது, கோகர்ணா கதியில்லை என்று ஒருவரையும் சாஸ்திரம் தள்ளுவதில்லை. நிச்சயம் ஏதாவது வழி இருக்கும். நமக்குத்தான் தெரியவில்லை. சூரிய பகவான் ப்ரத்யக்ஷ தெய்வமாவார். அத்தனை சாஸ்திரங்களையும் அறிவார். அவரை உபாசித்தால் ஏதாவது வழி புலப்படும் என்றார். இதைகேட்டதும் மகிழ்ந்தார் கோகர்ணன். அவர் காயத்ரியை கோடிக்கணக்கில் ஜபம் செய்து தேஜஸ்வியாக விளங்கியதால் சூர்ய மந்திரங்களைச் சொல்லி சூர்ய ஸ்தம்பனம் செய்தார் அதாவது சூரியன் சுழற்சியை நிறுத்தி விட்டார். சூர்யபகவான் ப்ரத்யக்ஷமாகி கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்? உன் தந்தையான ஆத்மதேவனை ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்யச் சொல்லி நீதானே சொன்னாய், இப்போதும் அதுவே உபாயம். துந்துகாரியை ஏழு கணுக்கள் உள்ள ஒரு மூங்கிலில் ஆவஹனம் செய்து பாராயண விதிப்படி ஸப்தாஹமாக ஏழுநாள்கள் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாராயணம் செய்து அவனைக் கேட்கச் செய்தால், உன் சகோதரனுக்கு நற்கதி கிடைக்கும் என்று அருளிவிட்டு தன் கதியைத் தொடர்ந்தார் ஆதித்யன்.


கோகர்ணன் வெகு விமரிசையாக ஸ்ரீமத்பாகவத பாராயணம் செய்தார். ஊர் முழுதும் கூடியிருந்து கதாம்ருதத்தை அனுபவித்தனர். ஏழு நாட்களில் ஏழு கணுக்களும் வெடித்து, ஒரு சுந்தர புருஷன் அனைவரும் பார்க்கும்படி அதிலிருந்து தோன்றினான். ஒரு திவ்ய விமானமும் வந்தது. துந்துகாரி, நான் ராக்ஷஸ அவஸ்தையிலிருந்துதான் விடுதலை கேட்டேன். எனக்கு பரமபதத்திற்கே வழி செய்துவிட்டாய். உனக்கு என் நமஸ்காரங்கள் என்று கொகர்ணனை வணங்கி நன்றி சொன்னான். கோகர்ணனுக்கு உடனே ஒரு சந்தேகம் எழுந்தது. இங்கு நான் உள்பட இவ்வளவு பேரும் ஸ்ரீமத் பாகவதத்தை ஏழு நாட்களும் அனுபவித்தோமே. ஆனால் இவருக்கு மட்டும் விமானம் வந்திருக்கிறதே. எங்களுக்கு பரமபதம் எப்போது கிட்டும் என்று துந்துகாரியை அழைத்துப் போக வந்த பார்ஷதரிடம் கேட்டார். அதற்கு அவர், துந்துகாரி இதை விட்டால் தனக்கு கதியில்லை என்று அல்லும் பகலும் ஏக்கத்தோடு ஒரு ஸ்லோகம்கூட விடாமல் ஸ்ரத்தையாகக் கேட்டான். அதனால் உடனே மோக்ஷம் கிடைத்துவிட்டது. மற்றவர்கள் அப்படி ஸ்ரத்தையாகக் கேட்கவில்லை. ஆனாலும், மறுபடி மறுபடி ஸ்ரீமத் பாகவத கதையை ஸ்ரவணம் செய்து கொண்டிருக்கலாம். அவரவர்களின் இறுதி காலத்தில் நிச்சயம் வைகுண்டம் உண்டு. நீங்கள் விரும்பினால், மறுபடி ஒரு ஸப்தாஹம் செய்யலாம் என்றார். வாய்ப்பை நழுவவிட மனமில்லாத கோகர்ணன் மறுபடி ஒரு ஸப்தாஹம் செய்தார். இம்முறை பார்ஷதர் கூறியதுபோல் சிந்தனை வேறின்றி பகவத் சரணங்களே கதி என்று கொண்டு ஒரே சிந்தனையோடு ஸப்தாஹம் செய்தார். ஏழாவது நாள் திவ்ய விமானம் வந்தது. இப்போது கோகர்ண‌னை அழைத்துச் செல்ல திவ்ய விமானத்தில் #ஸ்ரீமன்நாராயணனே வந்தார். மகிழ்ந்துபோய் கோகர்ணனை ஆலிங்கனம் செய்துகொண்டார். உடனே கோகர்ணனுக்கும் நித்யசூரிகளைப் போலவே திவ்யரூபம் ஏற்பட்டது. ஸ்ரீ ராமபிரான் பரமபதம் போகும்போது வைகுந்தம் வர விரும்புபவர்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து ஸரயுவில் இறங்குங்கள் என்று சொல்லி தன்னோடு நதியில் இறங்கிய அனைவரையும் பரமபதம் அழைத்துச் சென்றார். கோகர்ணன் பகவான் அல்ல. இருப்பினும், ஸ்ரீ ராமனைப் போலவே, பரமபதம் விழைபவர்கள் அனைவரும் என்னோடு வரலாம் என கூப்பிட்டார். ஊர் மக்கள் அனைவரும் ஏற, விமானம் அனைவர்க்கும் இடமளித்தது. கோகர்ணன் தன்னோடு வந்த அனைவரையும் அழைத்துக்கொண்டு வைகுந்தம் சென்றார்.

#உடலுக்கும்_ஆத்மாவிற்கும்_உள்ள_தொடர்பு: சுரசேனரால் நிர்மாணிக்கப்பட்ட மதுராபுரியை சித்ரசேனன் என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். பல மனைவியரை மணந்தும் அவனுக்குப் புத்திரன் இல்லாததால் ஒருமுறை ஆங்கீரச முனிவர் அவன் நாட்டிற்கு வந்தபோது அவரை வணங்கி உபசரித்த மன்னன் தன் குறையை எடுத்துக் கூறி ஏதாவது செய்யுமாறு வேண்டினான். ஆங்கீரச முனிவர் ஒரு யாகத்தை நடத்தி அதில் கிடைத்த பாயசத்தை மன்னனின் மூத்த மனைவி கிருத்தயுதிக்குக் கொடுத்தார். அவள் ஒரு ஆண் மகவைப் பெற்றாள். குழந்தை பிறந்ததும் சித்ரகேதுவும், அவன் மனைவி கிருத்தயுதியும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். மற்ற அரசிகள் உள்ளுக்குள் புழுங்கினர். குழந்தை மேல் அதுசையும், பொறாமையும் கொண்டனர். சூழ்ச்சி செய்து குழந்தையைக் கொன்று விட்டனர். மன்னனும் அரசியும் அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. இந்நிலையில் ஆங்கீரச முனிவரும் நாரதரும் அரசரைச் சந்தித்தனர். நாரதர், "அரசே! யாரைக் குறித்து எதற்காக நீ வருந்துகிறாய்? இந்தப் பிள்ளை பிறப்பதற்கு முன் உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? இப்பொழுது இறந்து விட்ட பிறகு உங்களிருவருக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பிள்ளையின் ஆன்மா என்றும் அழியாதது. இடையிடையே பிறக்கும் போது எடுக்கின்ற உடல்கள் வெவ்வேறானவை. இந்த உடல்கள்தான் அந்த ஆத்மா என்று நினைப்பது வெறும் மாயையாகும். ஆத்மா அழிவில்லாதது என்றால், அந்த ஆத்மாவிற்கு நீ ஏன் அழவேண்டும்” என்று பலவாறு கூறித் தேற்றினார். மன்னன் ஓரளவு அமைதி அடைந்தாலும், முழுவதும் அமைதி அடையவில்லை. நாரதர், உன் இறந்த மகனை எழுப்புகிறேன். அவன் என்ன சொல்கிறான் பார்! என்று சொல்லி விட்டுத் தன் சக்தியால் அக்குழந்தைக்கு உயிர் உண்டாக்கி, 'குழந்தையே!உன் தாய் தந்தையர் பெரிதும் வருந்துகிறார்கள். இன்னும் சிறிது காலம் இந்த பூமியில் இருந்து இந்த அரசை நீ ஏற்று ஆள வேண்டும் என்று கூறினார். உயிர் பெற்ற குழந்தை “நாரத முனிவரே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஏதோ தாய், தந்தை என்றீர்கள். அவர்கள் யார்? அவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னைப் பொறுத்தவரை தாய் என்றோ, தந்தை என்றோ யாருமில்லை. என் ஆத்மா அழிவற்றது. இதற்கு முன்னர் இருந்த உடல் தோன்றக் காரணமான தாய் தந்தையர் வேறு. அதுபோல எத்தனையோ தாய் தந்தையரைப் பார்த்து விட்டேன். ஏதோ அரசு, செல்வம் என்றெல்லாம் கூறினர்கள். என்னைப் பொறுத்தவரை இந்த மாயைகளுக்கு என் மனத்தில் ஈடுபாடு இல்லை” என்று கூறிவிட்டு, அந்தக் குழந்தையின் ஆன்மா பிரிந்து போய்விட்டது. மன்னன் சித்ரகேது அஞ்ஞானத்திலின்று விடுபட்டு, யமுனை நதியின் கரையில் ஒர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினான். அதே சித்ரகேதுதான் விருத்ராசுரனாகத் தோன்றினான். இதற்குக் காரணம் சித்ரகேது ஒரு காலத்தில் தன் விஷ்ணு பக்தி காரணமாக சிவபெருமானை அவமதித்துப் பேசினான். சிவன் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பார்வதிதேவி, நீ அசுரனாகப் பிறக்கக் கடவாய்! என்று சாபமிட்டார். அந்தச் சாபம் காரணமாகவே சித்ரகேது, விருத்ராசுரனாகத் தோன்றினார்.


விருகா என்ற அசுரன் ஒருமுறை நாரதரிடம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் யார் எளிதாக வரம் கொடுப்பார்கள் என்று கேட்டான். நாரதர் சிவன்தான் என்று கூறிவிட்டுப் போய்விட்டார். உடனே விருகாவும் கேதாரம் என்ற இடத்திற்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான். தன் இடுப்பு வரை நெருப்பில் நின்று ஒரு வாரம் தவம் செய்தும் சிவன் வரவில்லை. உடனே அவன் கோடரியை எடுத்துத் தன் கழுத்தை வெட்டி நெருப்பில் போட வேண்டும் என்ற நினைப்பில் கோடரியை எடுத்தவுடன் சிவன் எதிரே தோன்றினார். 'உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். “நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் உடனே இறந்துவிட வேண்டும். அப்படி ஒரு வரம் வேண்டும்” எனக் கேட்டான். சிவன், "அப்படியே தந்தேன்” என்றார். உடனே அந்த அசுரன் “உம்முடைய தலையிலேயே கை வைத்து வரம் உண்மையா என்று சோதிக்கப் போகிறேன்” என்றான். வேறு வழி இல்லாமல் சிவன் ஒடத் தொடங்கினார். நிலைமையை அறிந்த விஷ்ணு மாறுவேடத்தில் வந்து, 'விருகா, நீ எங்கே ஒடுகிறாய்? என்று கேட்டார். அவன் நடந்தவற்றைக் கூறி, "சிவன் தலையில் கையை வைத்து அவரைக் கொன்று விட்டுப் பார்வதியை மணந்து கொள்ளப் போகிறேன்” என்றான். மாறுவேடத்தில் இருந்த விஷ்ணு, அட பைத்தியக்காரா! போயும் போயும் சிவனையா நம்புகிறாய். அவர் வரம், சாபம் இரண்டும் ஒரு பலனையும் தராது. நான் சொல்லுவதில் உனக்கு சந்தேகம் இருந்தால் உன் தலையிலேயே கையை வைத்துப்பார். ஒன்றுமே நடைபெறாது' என்று கூறினார். அறிவற்ற மூடனாகிய விருகா தன் தலையில் தன் கையை வைத்த உடனே இறந்து போனான்.


துவாரகை உருவான விதமும் பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கிருஷ்ணனால் கொல்லப்பட்ட கம்சனின் இரு மனைவிகளையும் பெற்றவன் ஜராசந்தன் என்னும் மகதப் பேரரசன். மருமகனைக் கொன்றதற்காக யாதவர்களைப் பழிவாங்க நினைத்து மாபெரும் சேனையுடன் புகுந்து பதினேழு முறை சூழ்ந்து கொண்டும், வெற்றியடைய முடியாமல் தோற்றே ஒடினான். பதினெட்டாவது முறையாகத் தான் மட்டும் படையெடுத்து யாதவர்களை அழிக்க முடியாது என்று அறிந்து கொண்ட ஜராசந்தன், காலயவனன் என்ற அரசனின் துணையை நாடினான். போர்க்களத்தில் யாராலும் தனக்குச் சாவு வரக் கூடாது என்ற பெரு வரத்தை மகாதேவனிடம் பெற்றிருந்தவன் காலயவனன். ஜராசந்தனுக்குத் துணையாகக் காலயவனன் வருகிறான் என்றறிந்த கிருஷ்ணன் மகாதேவனின் வரத்தைதான் வெல்ல முடியாது என்பதை அறிந்து கடலின் நடுவே துவாரகை என்ற அழகிய நகரை, விஸ்வகர்மா உதவியோடு ஸ்தாபித்தான். யாதவர்கள் அனைவரும் அங்கே குடியேற்றப்பட்டனர்.

ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள #நாராயண_கவசம் என்ற அற்புதமான ஸ்லோகத் தொகுப்பு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் கவசமாகும். ஸ்ரீமத் பாகவத்தில் #சுதர்சன_ஸ்துதியும் உள்ளது. இதுவும் நம்மை காக்கும் ஸ்லோகம். இதைத் தவிர கண்ணன் வேணு கானம் செய்யக் கிளம்பிய கோலத்தை வர்ணிக்கும் ஸ்லோகமும் காக்கும் கவசமாக உபதேசம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகம் ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் 21ம் அத்யாயத்தில் சொல்லப்படுகிறது. #பீஷ்ம_ஸ்துதி அன்புப் படுக்கையில் இருந்தபடி பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ண பகவானை துதித்து நமக்கு அருளியது. அதை பாராயணம் செய்வதும் நம் கஷ்டங்களை போக்கும். ஐந்து முக்கியமான கீதங்களில் கண்ணன் குழலூதும் அழகை வர்ணிக்கும் #வேணுகீதத்தின் துவக்கத்தில் வருகிறது. அழகான பெரிய மயில்பீலியை தலையில் வைத்துக்கொண்டு, அன்னை போட்டுவிட்ட தங்க ஆபரணங்களை எல்லாம் மரப்பொந்தில் கழற்றிவைத்துவிட்டு, காதுகளில் கர்ணிகாரப் புஷ்பத்தையும், கழுத்தில் வனமாலையையும் அணிந்துகொண்டு அத்தனை கோபிகளையும் பொறாமை கொள்ளவைக்கும் குழலை பவள வாயில் வைத்துக்கொண்டு, அத்தனை ஜட மற்றும் ஜீவராசிகளின் இதயங்களையும் கொள்ளை கொள்ளும்படி மிக மிக ஒயிலான நடையுடன் பிருந்தாவனத்திற்குள் கண்ணன் ப்ரவேசிக்கும் அழகைச் சொல்லும் ஸ்லோகம் வேணு கீதம்.

பாகவதத்தில் நிறைய கதைகள் உள்ளன. சரணாகதி தத்துவத்தை சொல்லும் #கஜேந்திர_மோக்ஷம், பகவானின் திருநாமத்தை ஒருவன் உச்சரிப்பது என்பது உபவாசம், வழிபாடு ஆகியவைகளைக் காட்டிலும் விரைவாக ஒருவனைத் தூய்மைப் படுத்துகிறது என்பதை சொல்லும் #அஜாமிளன் கதை ஆகியவை நமக்குப் பாடங்கள். பாகவத கதைகள் சிலவற்றை கேட்கும் போதே அவைகளின் உள்கருத்துகள் நமக்கு விளங்கி விடும். ஆனால் சில கதைகளை கேட்கும் போது வேடிக்கையாகவும், நம்ப முடியாமலும் இருக்கலாம். ஆனால் அவ்வாறான புராண கதைகள் கூட உள்ளூர மற்றொன்றை உருவகமாக சொல்ல நினைத்து அமைக்கபட்டு இருக்கும். புராணங்கள் சொல்வது வெறும் கதைகள் மட்டுமே அல்ல. ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைச் சொல்கிறது. உதாரணமாக #காளிங்க_நர்த்தனம். காளிங்கன் எனும் நாகத்தை கண்ணபிரான் அடக்கியருளிய கதை இது. ஆயிரம் தலைக் கொண்ட நாகபடத்தின் மீது நடனம் ஆடிய கண்ணன், காளிங்கனின் எந்தெந்ததலையெல்லாம் கர்வத்துடன் தலைதூக்குகிறதோ அதையெல்லாம் மிதித்து ஆடி அடக்கினான் என்கிறது பாகவதம். இந்தச் சம்பவம் கர்வம் கூடாது என்று விளக்குகிறது. கர்வம் கொண்டவன் அழிவான் என்று உணர்த்துகிறது. கர்வத்தை விட்டொழிக்க அறிவுறுத்துகிறது.

அதே போன்று தான் #வாமன_அவதாரம். அங்கும் #மகாபலியின் கர்வம அடக்கப்பட்டது. வாமன மூர்த்தி மண்ணை அளந்த பிறகு, ஒரு காலைத் தூக்கி விண்ணளந்தார். அப்போதுதான் அந்த திருப்பாதக் கமலத்தைத் தரிசிக்கும் பேறு பிரம்மனுக்கு வாய்த்ததாம். விண்ணளந்த பாதத்தைத் தனது கமண்டல நீரால் அபிஷேகித்தான் பிரம்மன். திருப்பாதம் பட்ட அந்த நீர் ஆகாய கங்கையாகப் பரிணமித்து வீழ்ந்தது. அதை சிவனார் தமது திருமுடியில் தாங்கிக்கொண்டார். இங்கே இமயத்தை ஈசனின் அம்சமாகக் கருதி வழிபடுவதை கருத்தில் கொள்ள வேண்டும். இமயத்தின் பனிமுடியில்தான் கங்கா பிரவாகம் துவங்குகிறது. இயற்கையை இறையின் குறியீடாகப் புராணம் காட்டுகிறது! அதே நேரம் வாமன அவதாரம் முன்னரே நிகழ்ந்தது. ஆனால் பகீரதன் தவத்தால்தான் கங்கா, பூமிக்கு இறங்கினாள். பகீரதன் ஸ்ரீராமனின் மூதாதையர். எனில் பகீரத தவம் நிகழ்ந்தது திரேதா யுகம் ஆயிற்றே என்று வெறும் கதையை மட்டுமே எடுத்துக் கொண்டால் குழப்பமே மிஞ்சும். பாகவத புராணத்தில் #துருவன் கதையும் விரிவாகப் பேசப்படுகிறது.

மேலும் ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை கொன்று பூமியை கடலுக்கு அடியில் இருந்து மீட்ட #வராக_அவதாரம், பிரம்மாவின் மகன் #தட்சன் சிவபெருமானை அழைக்காது செய்த யாகம், #கபில_அவதாரம், கபிலர் தன் தாய்க்கு சாங்கிய யோகத்தை உபதேசித்து அதனால் அவர் தாய் பற்றுகள் நீங்கப் பெற்றது, ஹிரண்ய கசிபு-#நரசிம்ம_அவதாரம், #மச்ச_அவதாரம், அமபரீஷர்-துர்வாசர் கதை, பாற்கடல் கடைந்த நிகழ்வு, யயாதி இருவரை மணந்த கதை, பரீட்சித்து வம்சத்தில் வந்த துஷ்யந்தன்-சகுந்தலை கதை, கண்ணனுடன் சாந்தீப்பனியில் பயின்ற #குசேலர் கதை, #பிருகு_முனிவர் யாகத்தின் பலனை யாருக்குக் கொடுக்க தகுதியானவர் என்று செய்த சோதனை, #குருமார்கள் எங்கும் நிறைந்திருப்பதால் அவ்வவற்றிலிருந்து ஒவ்வொரு பாடத்தை அறிந்து கொள்ள வேண்டும், இவற்றை அறிந்து கொள்வதற்குத் தனியாக ஆசிரியர் என்ற பெயரில் ஒருவர் தேவையில்லை என்பதை விளக்கும் கதைகள், பிராமணன் எனப்படுபவன் யார், பற்றற்ற வாழ்க்கை வாழும் பிராமணனே பரப்பிரம்மத்தை அறிய முடியும்-பிரம்ம ஞானத்தைப் பெற முடியும் என்பதை சொல்லும் கதை என்று ஏராளமனானவை பாகவதத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஸ்வயம்பு மனுவின் மகனாகிய #பிரியவ்ரதன் துறவு மேற்கொள்ள விரும்பி உலக வாழ்க்கையை வெறுத்துப் புறப்பட்ட போது, அவன் தந்தை, குரு பிரம்மா, நாரதர் ஆகிய மூவரும் அரசனாகப் பிறந்தவன் கடமையைச் செய்ய வேண்டியது நியாயம் என்றும், அதனைச் செய்து முடித்த பிறகு துறவு மேற்கொள்வதே உத்தமம் என்றும் கூறி அவன் மனத்தை மாற்றினர். அதன்பிறகு அவன் உலகை ஆள ஒப்புக் கொண்டான். சூரியன் தினமும் மேரு மலையைச் சுற்றிவரப் பயன்படுத்திய தேர் பிரியவ்ரதன் தேரே ஆகும். தினந்தோறும் சூரியன் பூமியின் பின்புறம் செல்லும் போது முன்புறம் இருட்டாவது அனைவரும் அறிந்த ஒன்று. பிரியவ்ரதனுக்கு இது பிடிக்கவில்லை. இரண்டு வேளையும் பகலாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் தன்னுடைய நெருப்பைக் கக்கும் ரதத்தில் ஏறிக்கொண்டு மிக வேகமாக ஏழு முறை சுற்றி வந்தான். அந்த வேகத்தால் தேரின் சக்கரங்கள் ஏழு இடங்களில் மண்ணைத் தோண்டிக் கடலாக்கியது. அதன் பயனாக உலகம் ஏழு பிரிவுகளாகப் பிரிந்தது. பிரியவ்ரதன் தன் அந்திமக் காலத்தில் தன் ஏழு பிள்ளைகளையும் அழைத்து, உலகின் ஏழு பிரிவுகளையும் காட்டி ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவன் அரசனாக இருக்கட்டும் என்று கூறினான். அவர்களுள் #அக்னிதரன் பங்கிற்கு ஜம்பூத்வீபம் (நாவலந்தீவு) கிடைத்தது. இந்த அக்னிதரனுக்கு 4 பிள்ளைகள் பிறந்தனர். தன் பங்கிற்குரிய ஜம்பூத்வீபத்தை ஒன்பது பங்காக்கி அவர்களை ஆளச் செய்தான். அவர்களுள் நபி என்ற மகனுக்குக் கிடைத்த ஒன்பதில் ஒரு பகுதியை அவன் ஆண்டு மகன் ரிஷபனுக்கு அதைக் கொடுத்தான். இந்திரன் மகளாகிய ஜெயந்தியை மணந்த ரிஷபனுக்கு நூறு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுள் மூத்தவன் #பரதன் எனப்பட்டான். அவன் பெயரை வைத்துத்தான் இப்பகுதிக்கு பாரத நாடு என்ற பெயர் வந்தது.


#பத்ம_புராணம், ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ண சொரூபமாகும் என்கிறது. பாகவததத்தின் முதல் மற்றும் இரண்டாவது காண்டம் ஸ்ரீ கிருஷ்ணரின் கால்களாகவும்,

மூன்றாவது, நான்காவது காண்டங்கள் அவரது தொடையாகவும், ஐந்தாவது காண்டம் அவரது தொப்புள், ஆறாவது காண்டம் அவரது மார்பு, ஏழாம், எட்டாம் காண்டங்கள் அவரது கைகள், ஒன்பதாவது காண்டம் அவரது தொண்டை, பத்தாவது காண்டம், தசம ஸ்கந்தம் கிருஷ்ணனுடைய பிறப்பு, வளர்ப்பு, அவருடைய லீலைகள் அனைத்துமே பேசி பாகவதத்தின் சிரசாக விளங்குகிறது.

பதினோராம் காண்டம் யாதவ குலத்தின் அழிவு பற்றி சொல்கிறது, அது அவரது நெற்றி, பன்னிரெண்டாம் காண்டம் கிருஷ்ணன் விஷ்ணு லோகம் செல்லுதல் பற்றிய விவரங்கள், அவரது தலையாகவும் உள்ளன என்கிறது. அதற்கும் அடுத்துள்ள ராஜ வம்சக் கதைகள் பாகவதத்தின் புஜப் பகுதி. அஜாமிளனின் கதை, நாமத்தினுடைய மகிமையைச் சொல்வதால் பாகவதத்தில் இதயமாக ஒளிர்கிறது.


இப்படி பாகவத புருஷனை கற்பனை செய்து கொண்டே வந்தோமானால் ஏகாதச ஸ்கந்தம் என்கிற பதினோராவது அத்தியாயம், ரத்ன கிரீடமாக பாகவதத்தை தகதகக்க வைக்கிறது. ஏனெனில் அத்தனையும் உபதேச ரத்னங்கள். இதுவரை கேட்ட கதைகள் அனைத்தும் ஞானத்தையும், தர்மங்களையும் நேரடியாக கேட்கக் கூடிய தகுதியை அளித்து விடுகிறது. எனவே, இந்த காண்டம் முழுவதும் கதைகளாக விரியாமல் உபதேசங்களையே கொட்டுகிறது. எனவேதான் ஏகாதச ஸ்கந்தம் (11) என்று ஆரம்பிக்கும்போதே சுகப்பிரம்ம ரிஷி நிலையாமை குறித்துப் பேசுகிறார்.

‘பரீட்சித்திடம் கூறுகிறார், பகவான் தன் மக்கள் என்றோ, வேறு தேசத்தவன் என்றோ வேற்றுமை பாராட்டுவதில்லை. தர்மத்தை ஸ்தாபனம் செய்வது மட்டுமே பகவானின் பணியாக இருந்தது. அகங்காரம் தலைவிரித்து ஆடுமிடத்தில் அதை வேரோடு அறுத்து எறிவதையே முதல் கடமையாக கொண்டிருந்தார் அவர். அந்த அகங்கார ஆட்டத்தை அதிகம் போட்ட யாதவர்களை இப்போது என்ன செய்வது என்று யோசித்தபடி இருந்தார். இவர்கள் என்னுடைய ஜனங்கள் என்பதாலேயே தலைகால் புரியாமல் ஆடுகிறார்கள். இவர்களை கண்டால் எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள்! எதிர்க்க யாருமே இல்லை என்று பேயாட்டம் போடுகிறார்கள். கௌரவர்கள் கூட அழிந்து விட்டனர். அசுரர்களை எல்லாம் சம்ஹாரம் செய்தாகி விட்டது. தேவர்களும் ‘அவர்கள் கிருஷ்ணனுடைய ஜனங்கள்’ என்று சொல்லி, யாதவர்கள் பக்கம் வராமல் பயந்து ஒதுங்குகின்றனர். தன்னுடைய இனமாக இருந்தாலும் சரி, அதர்மம் அழியத்தான் வேண்டும் என்று தீர்மானித்தார். செல்வங்களோடு அதிகாரமும் இருந்தால் கர்வமும் அலட்சியமும் தானாக வந்து விடும். அப்போது பெரியோர், சிறியோர் என்று பாராமல் கேலியும் கிண்டலுமாக திரிவார்கள். அதை அழிக்க வேண்டும் என்றும் பகவான் நினைத்தார். இது மட்டுமல்லாது பகவான் கிருஷ்ணர் தன்னுடைய லீலைகளை முடித்துக் கொண்டு வைகுண்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் திருவுள்ளம் கொண்டிருந்தார்.


அந்த சமயம் விஸ்வாமித்திரர், துர்வாசர், பிருகு போன்ற மகத்தான மகரிஷிகள் கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்திற்காக பகவானை காண வந்தார்கள். தெருவெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன. யாதவர்கள் விதம் விதமாக வேஷங்கள் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சாம்பன் என்பவன் கர்ப்பவதியாக வேடம் தரித்திருந்தான். மகரிஷிகள் வரும் நேரம் பார்த்து சாம்பனை அழைத்துக் கொண்டு யாதவக் கூட்டமொன்று ரிஷிகளின் முன் நின்றது. சாம்பனின் கைகளில் வளையல்கள் சிணுங்கின. நளினத்தோடு சாம்பன் மகரிஷிகளை பார்த்தான். கூடியிருந்தோர் வணக்கமாக இல்லாது, மகரிஷிகள் என்று கூட பாராது, ‘‘பெரியோர்களே இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா அல்லது பெண் குழந்தை பிறக்குமா?’’ என்று கேட்டனர். மகரிஷிகள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம் என்று அலட்சியமாகப் பார்த்தனர். ரிஷிகள் கூர்ந்து நோக்கினர். என்ன சொல்லலாம் என்று யோசிக்கிறார்கள் போலிருக்கிறது என்று யாதவர்கள் நினைத்தனர். ‘பகவானே கிருஷ்ணா! ஏன் எங்கள் மூலமாக உன் லீலைகளை நடத்திக் கொள்கிறாய். இதற்காகத்தான் எங்களை இங்கு வரும்படி உந்துதல் கொடுத்தாயா? ரிஷிகளின் சாபத்தினால் யாதவர்கள் அழிந்தார்கள் என்று சொல்லப்படுவதுதான் உன் திருவுள்ளமா? நீ அப்படி நினைப்பதால்தான் இவர்களுக்கு இந்த ஏளன புத்தி வந்திருக்கிறதோ என்னவோ’ என்று மனதுக்குள் வெதும்பியபடி உற்றுப் பார்த்தனர். சரி, இவர்களுக்கு சாபமிட வேண்டாம். ஆனால் அவன் வயிற்றில் என்ன உள்ளதோ அதை அப்படியே சொல்வோம். கண்டதை கண்டபடி சொல்வதில்

தவறில்லையே என்று மனதைத் தேற்றிக் கொண்டார்கள்.


‘யாதவர்களே இந்த சாம்பவப் பெண்ணுக்கு ஆண் குழந்தையும் பிறக்காது, பெண் குழந்தையும் பிறக்காது. யாதவ குலத்தையே நாசம் பண்ணும்படியான இரும்பு உலக்கைதான் பிறக்கும்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்கள். ‘ஆஹாஹா’ என்று யாதவர்கள் கேலியாக சிரித்தார்கள். ‘‘இவன் பெண்ணே அல்ல. இவனுக்கு எப்படி குழந்தை பிறக்கும். அதுவுமல்லாது இரும்பு உலக்கை எப்படி பிறக்கும்!’’ என்ற அவர்கள் சாம்பனின் வேஷத்தை கலைத்து விட்டு, ஒன்றுமில்லையே! நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என்று ரிஷிகளை கேலி செய்தார்கள். பிறகு சாம்பனை அழைத்துச் சென்று, அவனுடைய ஆடைகளை களைந்தபோது, உண்மையாகவே இரும்பு உலக்கை இருந்தது! யாதவர்கள் அரண்டனர். முகம் இருண்டு தரையில் சரிந்தனர். என்ன செய்வதென்று தெரியாது திகைத்தனர். நேராக உக்கிரசேன மகாராஜாவிடம் கொண்டுபோய் உலக்கையைக் காண்பித்தனர். அவரோ, இதென்ன பெரிய விஷயம்! இதை தூள்தூளாக்கி பிரபாஸ க்ஷேத்திரத்திலுள்ள கடலில் எறிந்து விடுங்கள் என்று உத்தரவிட்டார். யாதவர்கள் உலக்கையை தூள்தூளாக்கினர். இந்த துகள்கள் என்ன செய்யப் போகிறது என்று துச்சமாக கடலில் எறிந்தனர். அந்த துகள்கள் கரையவில்லை. அவை சரியான காலத்திற்காக காத்திருந்தன. அதில் ஒரு துண்டு மிகவும் கடினமாக இருந்தது. பரீட்சித், இங்கு இன்னொரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சுகர். பகவான் கிருஷ்ணரே அவர்களுக்கு தலைவராக இருந்தாலும் குரு நிந்தனை, கேலி செய்தல் போன்ற ஒழுங்கீனங்களுக்கு தெய்வத்தால் கூட எந்த நிவர்த்தியும் செய்ய முடியாது என்பதையும் பகவானே உணர்த்துகிறார் பார். ‘சரி, அந்த இரும்புத் துகள்கள் என்ன ஆயின என்று பரீட்சித் கேட்டான். யாதவர் குலம் அழியும்நேரம் சமீபித்தபோது, கடற்கரை யோரத்திலிருக்கும் பிரபாஸா என்ற இடத்திற்குச் செல்லும்படி கிருஷ்ணர் கூறினார். யாதவ இளைஞர்கள் குடித்து விட்டு சண்டைபோட்டனர். அவர்கள் கடற்கரையோரத்திலிருந்த ஏரக்கா என்ற புல்லை பிடுங்கி ஒருவரையொருவர் அடித்தனர். அந்த புல் இரும்பு கம்பிகளைப் போலிருந்ததால் எல்லாரும் இறந்தனர். கடலில் வீசப்பட்ட இரும்பு உலக்கையின் தூள் கடல் மணலில் புதைந்து கூரிய புல்லாக முளைத்தது. உலக்கையின் கடினமான பாகம் கரையோரம் கிடந்தது. ஒரு வேடன் அதை எடுத்து கூர்மையான அம்பு செய்தான். கிருஷ்ணர் தன்னுடைய ரதசாரதி தருக்காவிடம் துவாரகையை எல்லாரும் விட்டு இடம் பெயர வேண்டும். ஏனென்றால் கடல் நீர்மட்டம் அதிகரிப்பதினால் துவாரகை மூழ்கிவிடும் என்று தகவல் கூறினார். கிருஷ்ணர் பூமியை விட்டுச் செல்லும் நேரம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த பலராமன் பராமாத்மாவின்மேல் தியானித்து தன் உயிர் துறந்தார். ஸ்ரீ கிருஷ்ணர் தம்முடைய திவ்ய உருவத்தில் ஒரு அசுவமரத்தின் கீழ் உட்கார்ந்தார். து]ரத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தை மானின் வாய் என்று எண்ணிய வேடன் அம்பு எய்தினான். அந்த அம்பு கடலில் வீசப்பட்ட உலக்கையின் கடினமான பாகத்தில் செய்யப்பட்டது. ஷரா என்ற வேடன் ஒரு தெய்வீக மனிதனை காயப்படுத்தி விட்டதை அறிந்து அதிர்ச்சியுற்றான். இந்த கொடிய தவறை செய்ததற்காக என்னை உடனடியாக கொல்லுங்கள் என்று ஷரா கூறினான். பயப்படாதே, ஷரா தெய்வீக திட்டத்தின்படிதான் நீ கிரியை செய்தாய், நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதால் ஷரா சொர்க்கத்திற்குச் சென்றான்.

குருக்ஷேத்திரப் போருக்குப் பின் பாண்டவர்களுள் மூத்தவனாகிய யுதிஷ்ட்ரன், அஸ்தினாபுரத்தில் முடிசூட்டிக் கொண்டான். சில காலம் அவர்களுடன் இருந்து விட்டுக் கிருஷ்ணன் துவாரகைக்குச் செல்ல முற்பட்டான். கிருஷ்ணன் யாதவ நாட்டிற்கு வருகிறான் என்ற செய்தி அறிந்த யாதவர்கள் பெரும் குதுகலமடைந்தனர். துவாரகை முழுவதும் விழாக் கோலம் பூண்டு அலங்கரிக்கப்பட்டது. அங்கிருக்கும் மரம், செடி, கொடிகள் கூடக் கிருஷ்ணன் வருகையை எதிர்பார்த்து மகிழ்ச்சி அடைவதைப் போலப் பூத்துக் குலுங்கின. கிருஷ்ணன் துவாரகைக்கு வந்தபின் சில மாதங்கள் கழித்து, அருச்சுனன் துவாரகைக்கு வந்தான். ஏழு மாதங்களாகியும் அவன் அஸ்தினாபுரம் திரும்பவில்லை. இதனிடையே அஸ்தினாபுரத்தில் பல தீய உற்பாதங்கள் தோன்றின. பருவங்கள் உரிய காலத்தில் வரவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, காழ்ப்புணர்ச்சியோடு போரிட்டுக் கொண்டனர். மனம் நொந்து போன யுதிஷ்டிரன் அருச்சுனன் திரும்பி வராமை கண்டு கவலை கொள்ளத் துவங்கினான். பீமனை துவாரகைக்குச் சென்று வர ஏற்பாடுகள் செய்தான். பீமன் புறப்படுவதற்குள் அருச்சுனனே வந்துவிட்டான். வந்தவன் எல்லையற்ற சோகத்தில் ஆழ்ந்தவனாய் கண்ணிர் வடித்துக் கொண்டே கிருஷ்ணன் இறந்துவிட்டதையும், யாதவ குலம் முழுவதும் அழிந்து விட்டதையும் கூறிக் கதறினான். கிருஷ்ணன் இறந்து விட்டார் என்ற செய்தி காதில் விழுந்த உடனேயே யுதிஷ்டிரனுக்கு அரசாட்சியின் மேல் வெறுப்பு உண்டாயிற்று. பாண்டவர்களும், திரெளபதியும் இமயம் சென்று தவம் புரிய முடிவு செய்தனர். பரிட்சித்துக்கு முடிசூட்டி அரசாட்சியை அவனிடம் ஒப்படைத்து விட்டு, இந்த அறுவரும் இமயம் நோக்கிப் புறப்பட்டனர்.


#சப்தாஹம்_ஏன் சுகப் பிரும்மரிஷி, ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்துக்கு அவன் மோட்சம் பெறுவதற்காக அவன் உயிரோடு இருக்கும் ஏழு நாட்களுக்குக் கூறினார். பாகவதக் கதைகளை கவனமாகக் கேட்ட பரீட்சித்து பரமபதம் அடைந்தான் என்கிறது புராணம். இந்த நிகழ்வின் காரணமாக ஸ்ரீமத் பாகவதம் சப்தாகமாக, அதாவது ஏழு நாட்களுக்கு உபன்யாசமாகக் கூறப்படும் வழக்கம் உண்டானது. இதுவே சப்தாகம்/சப்தாஹம் எனப்பட்டது. இப்படிப்பட்ட சப்தாகத்தில் கலந்துகொண்டு கேட்பது மிகவும் புண்ணியம் என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாகவத ஸ்ரவணத்தாலே ஸ்ரீ மகாவிஷ்ணு நம் மனத்தில் ஆவிர்பவிக்கிறார். ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கும், பாகவதத்திற்கும், வாசுதேவரின் மந்திரத்திற்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது.


#பாகவதத்தை_படிப்பதின்_பலன்: எவன் ஒருவன் இந்த ஸ்ரீ பாகவத சாஸ்திரத்தை அர்த்தத்துடன் வாசிக்கிறானோ, அவன் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்களும் தீரப் பெறுவான். இதில் சந்தேகமில்லை. இதில் பாதி ஸ்லோகத்தையாவது அல்லது கால் ஸ்லோகத்தையாவது வாசிப்பானாயின், ராஜசூய, அஸ்வமேத யாகங்களின் பலனைப் பெறுவான். சரீரத்தை விடும் காலத்தில் இந்தக் கதையைக் கேட்பானாயின், அவனுக்கு ஸ்ரீமன் நாராயணன் தனது வைகுண்ட லோகத்தைக் கொடுப்பான். இந்தக் கதையை ஒரு தடவையாவது கேளாதவனுடைய ஜன்மம் பயனற்றதே. இந்தக் கதையைக் கேட்கும்படியான பாக்கியம் கோடி ஜன்மங்களில் செய்த புண்ணியங்களினால் தான் கிடைக்கும். நாரத முனிவரிடம் ஸனகாதிகள் கூறும் இந்தப் பகுதி #பத்மபுராணத்தில் உத்தர காண்டத்தில் பாகவத மாஹாத்மியத்தில் இடம் பெறுகிறது.


பாகவதம் என்கிற அம்ருதத்தை பருகியவர்களுக்கு மோக்ஷம் கிடைத்து விடுகிறது. நம் ஆச்சார்யனை சேவித்து விட்டு தான் எந்த காரியத்தையும் தொடங்க வேண்டும். பாகவத பாராயணமும் அவ்வணமே செய்ய வேண்டும். பாகவதத்தை கேட்ட கணத்தில் பகவான் இதயத்தில் வந்து அமர்ந்து விடுகிறார். பிரியமான சிஷ்யரிடம் ரொம்ப கஷ்டமான ரகசியத்தை புரிய வைத்து அனுக்கிரகித்து விடுவார் குரு. கண்ணனேதான் பாகவதத்துக்கு செய்தி. கண்ணனுடைய அனைத்து அவதாரங்கள், அவனைப் பற்றிய தர்மம், நாம் கடைபிடிக்க வேண்டிய பக்தி, மோக்ஷத்துக்கு வேண்டிய வழிமுறைகள், இவை அனைத்தும் பாகவத புராணத்தில் உள்ளது. ஆதிசங்கரர் எழுதிய கோவிந்தாஷ்டகத்தில் பாகவதம் பற்றிய குறிப்பு வருகிறது. உயிர்களாகிய ஜீவாத்மா பகவானாகிய பரமாத்மாவுடன் இணைய அதுவே வழிவகுக்கும்’ என்று சூரிய பகவான் உபதேசித்ததாக பாகவத மஹாத்மியம் கூறுகிறது.

பாகவதப் பாராயணம் மிகுந்த புண்ணியத்தைத் தரும் என்று தெரிந்தும் தினமும் பாராயணம் செய்ய முடியாதவர்களுக்காக முழு புராணத்தையும் பாராயணம் செய்த பயன் கிடைக்கும் ஒரு ஸ்லோகத்தை தந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

ஏக ஸ்லோக பாகவதம்!

ஆதௌ தேவகி தேவ கர்ப்ப ஜனனம்

கோபி க்ருஹே வர்த்தனம்

மாயா பூதன ஜீவிதாபஹரணம்,

கோவர்தன உத்தாரணம்

கம்சச் சேதன கௌரவாதி ஹரணம்

குந்தீ சுதா பாலனம்

சைதத் பாகவதம் புராண கதிதம்

க்ருஷ்ண லீலாம்ருதம்

பொருள்: ஆதியில் தேவகியின் கர்ப்பத்தில் இறைவன் பிறப்பு - கோபியர் வீட்டில் வளர்ப்பு - மாயா உருவ பூதனையின் அழிவு - கோவர்த்தன மலையின் உயர்வு - கம்ச, கௌரவர்கள் அழிவு - குந்தீ மகன் காப்பு - இதுவே பாகவத புராணக் கதை.


ஏழு நாட்களில் இற்றக்கப் போகிறோம் என்று தெரிந்தவுடன் அவசரமாக அனைத்தையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறான் பரீக்ஷித். ஆனால் நாமோ எழுபது ஆண்டுகள் உள்ளன என்று மெத்தனமாக எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறோம். 7 நாட்கள் விரைவில் ஓடுவது போல தான் 70 ஆண்டுகளும் ஓடிவிடும் என்பதை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு நொடியையும் நன்மையானதாக, நல்ல விஷயங்களில் கழிக்கவேண்டும் எனச் சொல்லித்தருகிறது பரீக்ஷித்தின் கதை. எல்லோருக்குமே முடிவு உண்டு என்ற விதிப்பாடு தெரியும். ஆக, கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

புராணங்களில் சிறந்தது பாகவத புராணம். எல்லா நகரங்களையும்விடக் காசி சிறந்துள்ளது போலவும், எல்லா ஆறுகளையும்விட கங்கை சிறந்துள்ளது போலவும், எல்லா தெய்வங்களையும்விட விஷ்ணு சிறந்துள்ளது போலவும், எல்லாப் புராணங்களையும் விட பாகவத புராணம் சிறந்தது. விஷ்ணு பக்தர்கள் பாகவத புராணத்தைப் படித்தும், கேட்டும் பயனடைய வேண்டும். ஒரு பிரம்மத்தைப் பற்றி தெரிந்து கொண்டால் தெரியாதது அத்தனையும் தெரிந்து கொண்டதாகும். நம் நல வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும், அறிவுரைகளையும் கொண்டது பாகவதம். நாம் இதை முறையாக பயின்று, நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்தும் பாகவதக் கதைகளை கேட்டும் வந்தால் நம் சிந்தனை தெளிந்து, அஞ்ஞானம் ஒழிந்து, நம் செயல்கள் மாறி, பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு இறைவன் திருவடிகளை அடைவது திண்ணம்.


சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

Thank you Keshav Sir @keshav61


பின் குறிப்பு: பாகவதம் தமிழில் இருவரால் எழுதப்பட்டுள்ளது. ஒன்று செவ்வைச்சூடுவார் பாகவதம். இவரது ஊர் வேப்பற்றூர். இவர் அந்தணர். இதில் 4973 பாடல்களில் 12 ஸ்கந்தங்களாக உள்ளன. இதன் காலம் 1500-1525. அடுத்து அருளாளதாசர் பாகவதம். இயற்பெயர் வரதன். வரதராச ஐயங்கார். ‘நெல்லிநகர் வரதராசன்’ என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று தெரிவிக்கிறது. 1-53 அளவில் பெரிய பாரதத்தை தமிழில் மிகப் பெரிய நூலாகச் செய்து அருளியமையாலும், இப்படிச் செய்வதற்கு இறையருளைப் பெற்றிருந்ததாலும் இவர் அருளாளதாசர் என்று பெயர் பெற்றார். பிறந்த ஊர் நெல்லிநகர். வாழ்ந்த ஊர் திருவரங்கம். நூலின் பெயர் மகாபாகவதம், புராண பாகவதம், வாசுதேவ-கதை. இது 130 படலம், 9147 பாடல்கள் கொண்டது. காலம் 1543. அருளாளதாசர் செய்த பாகவதப் புராணத்தில் 130 சருக்கங்களும், 9147 பாடல்களும் உள்ளன. இது வடமொழியிலுள்ள 18,000 சுலோகங்கள் கொண்ட பாகவதத்தில் சொல்லப்பட்ட செய்தி என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று கூறுகிறது.


1,324 views1 comment
bottom of page