top of page
  • Writer's pictureAnbezhil

ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரு - சனாதன தர்மத்தை காப்பாற்றிய, மத்வ சம்பிரதாயத்தை உய்வித்த மகான்

12ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ மத்வாச்சாரியர் தொடங்கியது துவைதம் என்னும் சித்தாந்தம். இறைவனாகிய பரமாத்மா வேறு ஜீவாத்மாக்கள் ஆகிய நாம் வேறு என்ற தத்துவத்தை கொண்டது இந்த சம்பிரதாயம். மத்வாச்சாரியார். அவதார புருஷரான விஜயீந்திர தீர்த்தரு (1517 – 1614) அந்தக் குரு பரம்பரையில் வந்தவர். ஒரு துவைத தத்துவ ஞானியும், இயங்கியல் நிபுணருமாவார். ஒரு சிறந்த எழுத்தாளரான இவர் மிகச் சிறந்த வாதத் திறமைக் கொண்டவர். 16 ஆம் நூற்றாண்டில், தென்னிந்தியாவில் அழிந்துபோகும் அச்சுறுத்தலில் இருந்து மத்வ சாம்பிராதாயத்தைக் காப்பாற்றினார். இதற்காகவே மத்வ தத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.


ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரின் அவதார மகிமையை பார்ப்போம். ஒரு வயதான தம்பதியினர் ஸ்ரீ வியாசராஜருவை அணுகியபோது, (ஶ்ரீவியாசராஜர் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவ ராயருக்கு ராஜ குருவாக திகழ்ந்தவர். 'ஸ்ரீவியாசராஜ மட'த்தின் பீடாதிபதியாகவும் விளங்கிய இவர், 700-க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்ரீஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்தார். இறைபக்தியை பரப்பும் நோக்கில் தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டவர்.)​​ அவர் அத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கும் என்று ஆசீர்வதித்தார். அவர்கள், இந்த வயதான காலத்திலா நமக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்று வியாசராஜர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். ஆசீர்வாதத்துக்கு ஏற்ப அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. பிறந்த போது ஸ்ரீ விஜயீந்திரருக்கு இடப்பட்ட திருநாமம் விட்டலாசார்யரு. தெய்வ சங்கல்பத்தினால் தோன்றிய குழந்தைகள் விட்டலாச்சர்யாவும் அவர் சகோதரர் குருபிரசாதாவும். ஸ்ரீ வியாசராஜர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மூத்த மகனை அவர்கள் மடத்துக்கு கொடுத்தனர்.


ஸ்ரீ விஜயீந்திரர், அளவற்ற தெய்வீக சக்தியும், பெருமையும் கொண்ட ஆச்சார்ய மகாபுருஷரான ஸ்ரீவியாஸராஜ தீர்த்தரின் வித்யா சிஷ்யர் ஆனார். உரிய வயதில் ஸ்ரீ வியாசராஜரு விட்டலாச்சார்யருக்கு “சவுலா” மற்றும் “உபநயனம்” நடக்க ஏற்பாடு செய்தார். அவருக்கு “தர்கம், மீமாம்சா, வேதாந்த சாஸ்திரம் ”முதலியவைகளை பயிற்றுவித்தார். விட்டலாச்சாரியாவுக்கு எட்டு வயது ஆகும்போது ஸ்ரீ வியாசராஜரு குழந்தையின் வைராக்கியத்தில் திருப்தி ஏற்பட்டு சன்யாசிரமத்தைக் கொடுத்து அவருக்கு விஷ்ணு தீர்த்தர் என்று பெயரிட்டார்.


அக்காலத்தில் ஸ்ரீ விபுதேந்திர தீர்த்த (தற்போது ராகவேந்திரா மடம்) மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீ சுரீந்திர தீர்த்தரு. ஸ்ரீ சுரீந்திர தீர்த்தர் தனக்குப் பிறகு ஒரு வாரிசை தேடிக் கொண்டிருந்த சமயம். மேலும் அச்சமயத்தில் த்வைத சித்தாந்தத்தின் உயர்வை நிலைநிறுத்தும் விவாதத்தில் ஈடுபட்டு இருந்தார் ஶ்ரீசுரீந்திர தீர்த்தர். தனது த்வைத கொள்கையின் நிலைபாட்டை விவாதத்தில் அவரால் சற்றே வழுவில்லாமல் விளக்க முடியவில்லை. இறைவனிடம் தனது குறையினை முறையிட்டார். அன்றிரவு அவரின் வேண்டுகோளுக்கு, மறுநாள் புதிய சந்யாசி ஒருவர் வருவார் என்றும், புதியவர் விவாதத்தை தொடரட்டும் என்றும் விடைக் கிடைத்தது. மறுநாள் ராமேஸ்வரத்தில் இருந்து திரும்பி கொண்டிருந்த ஶ்ரீவிஷ்ணு தீர்த்தர் கும்பகோணம் வந்தடைந்தார். அவரிடம் ஶ்ரீசுரீந்திர தீர்த்தர் தனக்கு இறைவனால் அளிக்கப்பட்ட ஆணையை கூறினார். அதன்படி அன்று ஶ்ரீவிஷ்ணு தீர்த்தர் விவாதத்தினை தொடர்ந்தார். த்வைத சித்தாத்தின் பெருமையையும் உயர்வையும் தெளிவாக எடுத்துரைத்து, விவாதத்தில் வெற்றி பெற்றார். இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஶ்ரீவிஷ்ணு தீர்த்தர் அவர்களை ’ஶ்ரீவிஜயீந்திரர்’ என்று பட்டத்தினால் ஶ்ரீசுரீந்திர தீர்த்தர் அலங்கரித்தார். (சுமார் 1530ஆம் ஆண்டு) அன்று முதல் அவர் ஶ்ரீவிஜயீந்திரர் என்று அழைக்கப்பட்டார்.


ஶ்ரீசுரீந்திர தீர்த்தருக்கு ஶ்ரீவிஜயீந்திரரின் மீது அன்பும், மதிப்பும் அதிகரிக்கவே, கும்பகோணம் மடத்தை நிர்வகிக்க அவர் தான் தகுதியானவர் என்னும் எண்ணமும் அதிகரித்தது. ஶ்ரீவியாச ராஜரின் சீடரான ஶ்ரீவிஷ்ணு தீர்த்தர் என்னும் ஶ்ரீவிஜயீந்திரரை கும்பகோணம் மடத்திற்கு அனுப்ப ஶ்ரீவியாசராஜரிடம் விண்ணப்பித்தார். அவரது அனுமதியுடன் வியாசராய மடத்துடன் தொடர்புடைய ‘ஸ்ரீராகவேந்திர மடம்’ என்று தற்போது அறியபடும் கும்பகோணம் மத்வ மடத்தின் / மத்வாச்சார்ய மூல மஹா சமஸ்தானத்தின் பரம்பரையில் 15-வது பீடாதிபதியாக அவரை ஸ்ரீ சுரீந்திர தீர்த்தரு அமர்த்தினார். 1530-ஆம் ஆண்டு முதல் 1614 வரை ஶ்ரீவிஜயீந்திரர் மடத்தினை நன்கு நிர்வகித்தார். த்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கு பேருதவியாக இருந்தார்.


இவர் 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். எல்லா துறைகளிலும் தனது எதிரிகளை அவர் வெற்றி கொண்டார். இவர் துவைதத்தின் கொள்கைகளை விளக்கும் 104 கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் 60 தான் இப்பொழுது உள்ளன. 40ற்கும் மேற்பட்ட நூல்கள் காணவில்லை. இருக்கும் ஓலைச்சுவடிகள் நஞ்சன்கூடு, மந்திராலயம் மற்றும் கும்பகோண மடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வேதாந்தத்தின் சமகால மரபுவழி சமயங்களை எதிரி சமயங்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தார். மத்வ சம்பிரதாயத்து மடாதிபதிகள் குறிப்பாக, சைவ-வைணவ வேறுபாடுகளைப் போக்கப் பாடுபட்டனர். அதில் முக்கிய பங்கு வகித்தவர் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர்.


அவர் பட்டத்துக்கு வந்ததும் ஸ்ரீ கிருஷ்ண சர்மா என்பவருடன் வாதப் போர் செய்து பேத தத்துவத்தை முன் வைத்து வெற்றிப் பெற்றார். ஒரு மலையாள மாந்த்ரீகரை மாந்த்ரிக வித்தையில் வெற்றிக் கொண்டார். அழகான பெண்களை அவரிடம் அனுப்பி அவரை காமத்தில் ஈடுபட வைக்க முயன்றவர்களை வெட்கி குனியும்படி அதற்கு ஆட்படாமல் நாராயண மந்திரத்தை ஜபித்து தன்னைக் காத்துக் கொண்டார். ஒரு புகழ்பெற்ற அத்வைத வித்வான் அப்பைய தீக்ஷதருடன் பலவருடங்கள் வாதப் போர் புரிந்து அவர் எழுதிய கிரந்தங்களுக்கு இவர் அதற்கு இணையாக கிரந்தங்கள் எழுதி துவைத சம்பிரதாயமே உயர்ந்தது என்று நிரூபித்துக் காட்டினார். அவருடன் வாதப் போர் புரிந்தாலும் அப்பைய்ய தீக்ஷதரின் (1520-1593) நெருங்கிய நண்பராக விளங்கினார். வீரசைவ பண்டிதர் எம்மே பசவருடனும் விவாதங்களில் பங்கேற்றார். தஞ்சை நாயக்கர்கள் ஆட்சி நடந்த சமயம் இது. கும்பகோணத்தில் இருந்த இவரை, தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன் (1532-1560) ஆதரித்தார். அந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள், இறையியல் விவாதங்களில் வெற்றி பெற்றதற்காக ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் பெற்ற கிராமங்களின் மானியங்களை பதிவு செய்துள்ளன. கலை, இலக்கியம், வேத விசாரணை அனைத்திலும் கும்பகோணமும் தஞ்சாவூரும் விஜயநகர சாம்ராஜ்ஜியத்துக்கு இணையாக இருந்தன.


ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தரின் சிஷ்யர் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர். சுதீந்திர தீர்த்தர்தான், பிரம்மலோகத்தில் சங்குகர்ண தேவதையாகவும், க்ருதயுகத்தில் ப்ரகலாத ராயராகவும், த்வாபரயுகத்தில் பாஹ்லிய அரசராகவும், கலியுகத்தில் வியாசராயராகவும், பின் ராகவேந்திரராக அவதரித்து அனைத்து ஆன்மீக பக்தர்களின் துன்பத்தை நீக்கி கோடானுகோடி பேருக்கு தினமும் அருள் பாலிக்கும் மந்த்ராலயம் குருராஜரான ஸ்ரீ ராகவேந்திரரின் ஆச்சார்யன் (குரு) ஆவார். அதனால் ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு (குருவின் குரு) என விசேஷமாக ஆராதிக்கப்படுகிறார் ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர்.


அந்த சமயத்தில் சைவர்கள் வைணவர்களை சைவர்களாக அவர்கள் விருப்பத்துக்கு எதிராக மாற்றிக் கொண்டிருந்தனர். அதை நிறுத்த இவர் கும்பகோணம் வந்து லிங்க ராஜேந்திரா என்கிற சிவ பண்டிதரோடு வாதப் போர் புரிய அழைத்தார். வெற்றிப்பெற்றது லிங்க ராஜாவாக இருந்தால் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் தன் மடத்தின் சொத்துகள் அனைத்தையும் அவரிடம் கொடுத்துவிட்டு வைஷ்ணவ சின்னத்தையும் அணிவதை நிறுத்திக் கொள்வதாகவும், அதுவே இவர் வெற்றிப் பெற்றால் சைவர்கள் வைணவர்களை இனி நிர்பந்தப்படுத்தி மாற்றக் கூடாது என்கிற நிபந்தனையை விதித்தார். மேலும் அப்பகுதி அனைத்துக் கோவில் நிர்வாகமும் லிங்க ராஜாவின் கீழ் தான் இருந்தன. அவர் நன்கு நிர்வாகம் செய்தாலும் மிகுந்த ஆணவத்துடன் செயல்பட்டார். இதனால் பக்தர்கள் அவதியுற்றானர். ஒரு விடிவு காலம் வராதா என்று தவித்துக் கொண்டிருந்தனர்.


அவர் விவாதப் போரில் வேதாந்தத்தில் பெரும் பண்டிதரான போட்டியாளரான லிங்க ராஜேந்திரரிடம் 9 நாட்கள் விவாதம் செய்து வெற்றிபெற்றார். இதனால் ​​வேதங்கள் மற்றும் காவியங்களில் விஜயீந்திர தீர்த்தரின் தேர்ச்சி தெளிவாக நிரூபிக்கப்பட்டது. விவாதத்தில் தோற்ற பின்னர் லிங்க ராஜேந்திரன் அவர் கீழ் இருந்த கோவில்களின் நிர்வாகத்தை விஜயீந்திர தீர்த்தரிடம் ஒப்படைத்தார். ஸ்ரீ விஜயீந்திரர் நன்முறையில் கோவில்களை நிர்வாகம் செய்தார், வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார். அவர் "விஜயீந்திர மட்" என்று பெயரிடப்பட்ட ஒரு மடத்தை நிறுவினார். அதுவே பின்னர் ஸ்ரீ ராகவேந்திர மடம் ஆகியது. மகான் ராகவேந்திர சுவாமி இந்த மடத்தில் “குருகுல வாசம்” இருந்து தங்கி படித்தார்.


புகழ்பெற்ற வட இந்திய இசை மேதை தான் சேனின் சீடருடன் விஜயீந்திரர் இசை போட்டியில் பங்குபெற்றார். அப்போது விஜயீந்திர தீர்த்தர் இந்துஸ்தானி இசையில் தனக்குள்ள புலமையை நிரூபித்தார். தான் சேனின் பிரத்தியேக ராகமான “தீபக்” ராகத்தைப் பாடும் திறன் அவருக்கு இருக்கிறதா என்று அவரது போட்டியாளர் அவருக்கு சவால் விடுத்தார். விஜயீந்திர தீர்த்தர் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு ஒரு ஜோடி ஐந்து முகம் கொண்ட விளக்குகளை முன்னால் வைத்து ‘தீபக்’ ராகத்தைப் பாடத் தொடங்கினார். இந்த போட்டியைக் காண கூடியிருந்த மக்கள், இவரின் ராக அலபனையின் போதே தானாகவே விளக்குகளின் திரி தீப ஒளியுடன் பிரகாசமாக எரிவதை கண்டு மகிழ்ந்தனர். மேலும் இசைத் துறையில் தனது தேர்ச்சியையும் சிறப்பையும் நிரூபிக்க அவர் "அமிர்த வர்ஷினி" ராகத்தில் ஒரு பாடலையும் பாடினார், உடனே இடியுடன் கூடிய மழை பொழிந்தது.


இதேபோல் அவர் பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்தார். ஒருமுறை ஒரு கழைக் கூத்தாடி கேட்டுக் கொண்டதின் பேரில் அவர் தனது சமநிலையை நிரூபிக்க கும்பேஸ்வரர் கோவில் கோபுரத்துக்கும் சாரங்கபணி கோவிலின் கோபுரத்துக்கும் இடையே கட்டப்பட்ட ஒரு வாழை இழை (நார்) மீது நடந்து சென்று அதிசயத்தை நிகழ்த்தினார். எனவே அவர் பின்னர் “அஜாய் விஜயேந்திரர்” (வெற்றியே பெறுபவர்) என்று அழைக்கப்பட்டார். ஆய கலைகள் அறுபத்துநான்கில் ஒன்று- விக்கிரகங்கள் மற்றும் சிலைகளை வடிக்கத் தெரிவது. அதாவது உலோகம், தகடு, மரம் மற்றும் கல் போன்ற எதிலும் சித்திரங்கள் வரைவதிலும், சிலைகள் செதுக்குவதிலும் தேர்ந்திருக்க வேண்டும். விஜயீந்திரர் வடித்த ஏராளமான சிற்பங்கள், இங்கே அவரது பிருந்தாவனத்தில் இருக்கின்றன. உருவில் சிறியவை என்றாலும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், காண்பவர்களைப் பிரமிக்க வைக்கின்றன இந்த சிற்பங்கள்! அவர் சிற்பக் கலையிலும் தனது நிபுணத்துவத்தைக் காட்டியுள்ளார். மெழுகில் அவர் இறைவனின் திருவுருவ சிலைகளை வடித்துள்ளார். பஞ்ச லோகத்தில் அவர் வடித்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, சீதா விக்கிரகங்கள் இன்றும் கும்பகோணத்தில் வழிபாட்டில் உள்ளன.


ஒரு முறை ஒரு நகை வியாபாரி அவரை நகை செய்வதில் போட்டிக்கு அழைத்தார். அதிலும் மக்கள் இவர் செய்த நகைகளே சிறப்பானவை என்று தீர்ப்பு வழங்கினர். மந்திர சக்தி, தந்திர சக்தி இவை மூலம் இவரை தோற்க எண்ணியவர் அனைவரும் தோல்வியையே தழுவினர். இதிகாச புராணங்களில் தேர்ந்திருத்தல், நீரில் நடப்பது, அந்தரத்தில் மிதப்பது, இரவைப் பகலாக்குவது, இது போன்ற பல ஞானங்களையும் அறிந்திருந்தார். இவற்றைக் கைக்கொள்வதற்குப் பயிற்சி மட்டும் போதாது. இறைவனின் அனுக்கிரகம்தான் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு பெரும் பேற்றைப் பெற்றவர் ஸ்ரீவிஜயீந்திரர். அவர் தன்னை அணுகிய பக்தர்களின் நோயை, மற்ற துன்பங்களை நீக்கி அவர்களை ஹரி பக்தியில் ஈடுபடுத்தினார். கருணையே வடிவான காருண்ய மூர்த்தியாக விளங்கினார்.


விஜயீந்திரரின் உபாசன தெய்வம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர். கும்பகோணம் நகரத்தில் உள்ள கோயில் செல்வங்களைக் கொள்ளை அடிக்க ஒரு முறை அந்நியப் படைகள் நகரை முற்றுகை இட்டிருந்தன. உடனே காவிரிக் கரையில் நரசிம்ம ஜபத்தைத் தொடங்கினார் ஸ்ரீவிஜயீந்திரர். இவருடைய ஜபத்தின் பலத்தால் அந்நியப் படைகள் தானே அவ்விடத்தை விட்டு அகன்றன.


இவர் கும்பகோணத்தில் உள்ள அனைத்து சைவ வைணவ கோவில்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் துவைத, அத்வைத, விசிஷ்டாத்வைதர்களிடையே மிகுந்த நல்லிலக்கணமும், அமைதியும் நிலவியது. இதைப் பொறுக்காத சிலர் கும்பேஸ்வரர் கோவிலுக்கும் சாரங்கபாணிகோவிலுக்கும் நடுவில் உள்ள பொற்றாமரைக் குளம் கும்பேஸ்வரருக்கு தான் சொந்தம், அதை சாரங்கபாணி கோவிலுக்குப் பயன்படுத்த கூடாது என்று பிரச்சினையை ஆரம்பித்தனர். அப்பொழுது அனைத்துத் தரப்பு மக்களையும் கூட்டி அது சாரங்கபாணி கோவிலுக்கு தான் சொந்தம் ஆனால் கும்பேஸ்வரர் கோவிலை சேர்ந்தவர்களும் பயன்படுத்தலாம் என்று நன்முறையில் சமாதானமாக தீர்ப்பளித்து அனைவரும் திருப்தியுடன் கிளம்பினர். ஆனால் நகரம் கடத்தப்பட்ட லிங்க ராஜேந்திராவுக்கு இப்படி அனைவரும் நல்லிக்கணத்துடன் இருப்பது பிடிக்கவில்லை. அவனின் தூண்டுதலின் பேரில் மறுபடியும் பிரச்சினை பூதாகாரமாக வெடித்தது. அதனால் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் ஒரு நாளை குறிப்பிட்டு அன்று சைவர்களும் வைணவர்களும் குளத்தில் மூழ்கி சிவ சின்னங்களையும் விஷ்ணு சின்னங்களையும் எடுக்கவேண்டும், அதில் எவருடைய சின்னங்கள் அதிகம் கிடைக்கிறதோ அவர்களுக்கே கோவில் குளத்தின் முழு உரிமையும், அதன் பின் மற்றவர்கள் அதில் உரிமை கொண்டாடக் கூடாது என்றும் அறிவித்தார்.


குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் அந்தக் குளத்தில் லிங்கங்களை நந்தி விக்கிரங்களை சில விஷமிகள் அதிக அளவில் போட்டு வைத்தனர். குறிப்பிட்ட நாளில் ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் மந்திராக்ஷதையை குளத்தில் போட்டு ஆசீர்வதித்து இரு தரப்பில் இருந்து 5-6 பேர்களை குளத்தில் மூழ்கி தேடும்படி பணித்தார். ஆச்சரியமாக ஹனுமான் விக்கிரகங்களாகவும் சாளகிராமங்களாகவுமே தான் கிடைத்தன. உள்ளே அதிக அளவில் அவையே கிடைக்கப் பெற்றதால் அக்குளம் சாங்கபாணி கோவிலுக்கே சொந்தமானது என்று அறிவித்து அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


அப்படி பொற்றாமரை குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஶ்ரீஆஞ்சநேயர் சிலை குளத்தின் வடக்கு கரையில் ஶ்ரீவிஜயேந்திரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் பக்தர்கள் அக்காலத்திலிருந்து இவ்வாஞ்சநேயரை கொண்டாடி வருகின்றனர். ஶ்ரீவிஜயேந்திர தீர்த்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குளக்கரை ஶ்ரீஆஞ்சநேயருக்கு தற்பொழுது கோயில் எழுப்பியுள்ளார்கள். இன்று இக்கோயிலில் ஶ்ரீஆஞ்சநேயருடன் ஶ்ரீ இராமர், சீதா, லக்ஷ்மணர் ஆகியோரும் குடி கொண்டுள்ளனர்.


ஒருமுறை வேங்கடநாதன் (ராகவேந்திர சுவாமி), பெற்றோருடன் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ விஜயேந்திர தீர்த்தரிடம் ஆசி பெறுவதற்காக சென்றார். அப்போது ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர் வேங்கடநாதனைப் பார்த்து நகைத்தார். உடனே அவரின் சிஷ்யரான ஸ்ரீ சுதீந்திர் தன் குருவிடம் கேட்க, அதற்கு விஜயேந்திரர் “தான் தன் குருவான வியாசராஜரையும், அவருடைய மற்றொறு அவதாரமான வேங்கடநாதனையும் காண்கிறேன்” என்றார்.


ஶ்ரீமத் மத்வாச்சாரியாரைப் பின்பற்றுகிறவர்கள், மத்வர்கள் எனப்படுகிறார்கள். பொதுவாக கன்னடம் பேசுபவர்கள் தான் மத்வர்கள் போன்ற கருத்துகள் தவறானதாகும். ஏனெனில், ராகவேந்திரர் புவனகிரியில் பிறந்தவர். விஜயீந்திர தீர்த்தர் கும்பகோண மடத்தில் இருந்தவர். மராத்தி, தெலுங்கு, கன்னடம் என்று அந்தந்த மாநிலங்களில் பேசுகிறார்கள். இப்பொழுது தமிழ் பேசுபவர்களும் இருக்கிறார்கள்.


ஸ்ரீமத்வ சித்தாந்த ஆச்சார்ய புருஷர்களில் மகத்தான பெருமையும், சக்தியும் வாய்ந்த அவதார புருஷரான ஸ்ரீஸ்ரீ விஜயேந்திர தீர்த்தர் ஸ்வாமிகள் பாஸ்கர க்ஷேத்திரம் எனப்படும் கும்பகோணத்தில் புண்ணிய காவிரி நதியின் கரையில் 1614ல் பிருந்தாவனஸ்தராக ஆனார். ஜீவ சமாதி (மூல பிருந்தாவனம்) கும்பகோணத்தில் சோலையப்பன் தெருவில் உள்ளது. இன்றும் தன்னைச் சரணடையும் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி, சகல மனோ பீஷ்டங்களையும் நிறைவேற்றி, அனுக்ரஹித்து வருவது, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பரமானந்த அனுபவமாகும்.


விஜயீந்திரர் சமாதி ஆன இடத்தில் பிரமாண்டமான மேடை காணப்படுகிறது. இதன் மூன்று பக்கங்களில் ஸ்ரீலட்சுமிநரசிம்மர், ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய திருமேனிகளை தரிசிக்கிறோம். இங்கே ராகவேந்திர சுவாமியின் மிருத்திக (மூல பிருந்தாவனத்தில் இருந்து புண்ணிய மண் எடுத்து நிறுவப்பட்ட பிருந்தாவனம்) பிருந்தாவனமும் உள்ளது. வியாழன் தோறும் ராகவேந்திர சுவாமிகள் மந்திராலயத்தில் இருந்து இங்கு வந்து தனது பரமகுருவான விஜயீந்திர சுவாமிகளிடம் ஆசி வாங்கிச் செல்வதாக ஐதீகம். அதனால், வியாழன்று இங்கு பக்தர்கள் இரண்டு சுவாமிகளையும் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதால் அதிகமாக வந்து செல்கின்றனர்.


ஆனி மாதம் தேய்பிறை துவாதசி அன்று ஸ்ரீவிஜயீந்திரரின் ஆராதனை உத்சவம் இங்கு நடைபெறும். இந்த வைபவத்தின் போது மந்த்ராலய மடத்தின் பீடாதிபதிகள் கலந்து கொள்வர். அதோடு, காண்பதற்கு அரிய வைபவமான ஸ்ரீமூலராமரின் அபிஷேக- ஆராதனைகள் அன்றைய தினங்களில் இங்கே நடைபெறும். "த்ரயோதசி"அன்று ஸ்ரீவிஜயீந்திரர் பூஜித்த ‘ஷோடஷபாஹு நரசிம்ம விக்ரகத்தை’ வெளியில் எடுத்து சிறப்புப் பூஜை செய்யப்படும்.(ஆண்டில் 1-2 முறைதான் அந்த விக்ரகம் வெளியில் வரும்).இதைக் காண தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் குறைவில்லாமல் வழங்கப்படும். கும்பகோணமே அன்று விழாக்கோலம் பூண்டிருக்கும்.



பூதராஜர் என்றொரு மரம், மடத்தின் பின்பக்கம் உள்ளது. பனை, அத்தி, வேம்பு ஆகிய மூன்று மரங்களும் இணைந்த வடிவம் இது. எதையாவது கண்டு பயத்தினால் அல்லல்படுபவர்கள், இந்த மரத்தை வணங்கினால், தெளிவு பெறுவார்கள். ஸ்ரீமடத்தை இந்த பூதராஜர் காவல் காப்பதாகக் கூறப்படுகிறது. பிருந்தாவனம் காண இந்தக் காணொளியை பாருங்கள்: https://youtu.be/gLOqut3XcNk அங்கு செல்ல ஆசைப்பட்டால் இந்த வரைபடம் உங்களுக்கு உதவும் https://youtu.be/zr1lOj6CYdQ


அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் ஹரி பக்தியினால் அவரை யாரும் வீழ்த்த முடியவில்லை. அதே அளவு ஹரி பக்தியைப் பெற நாமும் அவரை வணங்குவோம், பிராரத்திப்போம் அவர் அருளை பெறுவோம்.


ஹரே ராமா ஹரே கிருஷ்ணா





https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/

https://books.google.co.in/books?id=ZvQOEAAAQBAJ&pg=PT49&lpg=PT49&dq=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D&source=bl&ots=aqGuq4gz11&sig=ACfU3U0OdVjG_Z-g5ayWMAS0ZzKqEITGyQ&hl=ta&sa=X&ved=2ahUKEwj_hOXW6ZnwAhUGxTgGHeWMC9YQ6AEwC3oECAwQAw#v=onepage&q=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D&f=false


448 views0 comments

Recent Posts

See All
bottom of page